Lekha Books

A+ A A-

காணாமல் போன கேசவன் - Page 2

     ‘உனக்கு யார்டா காசு தந்தது?’ ­ கேளப்பன் கேட்பதை நான் கேட்டேன். ‘எங்கிருந்துடா நீ காசைத் திருடினாய்?’

     உருவம் அப்போதும் வினோதமான சத்தங்களை உண்டாக்கிக் கொண்டிருந்தது. அவன் தேநீரையும் புட்டையும் வேண்டும் என நினைத்திருப்பான் என்று நான் மனதிற்குள் நினைத்தேன். அவனுக்கு பசியெடுக்கிறது என்பது தெளிவாக தெரிந்தது. காரணம்-ஒரு கையால் அவன் தன்னுடைய ஒட்டிப் போய் காணப்பட்ட வயிறை அவ்வப்போது தடவிக் கொண்டிருந்தான்.

     கேளப்பன் அவனுக்கு புட்டையோ, தேநீரையோ தரவில்லை. அதற்கு பதிலாக அவள் அவனை மோசமான வார்த்தைகளால் திட்டிக் கொண்டிருந்தான். அப்போது எங்கிருந்து என்று தெரியவில்லை... உக்குவம்மா அங்கு வந்து நின்றாள்.

     மாரிக்குறுப்பு.... என் காசை இங்கு தா....

     அவள் கேசவனின் கையிலிருந்து காசைத் தட்டிப் பறிப்பதற்கு முயற்சி செய்தாள். அவன் வினோதமான சத்தங்களை எழுப்பியவாறு எதிர்ப்பை வெளிப்படுத்தினான். உக்குவம்மா அவனை அடிக்கவும் குத்தவும் செய்தாள்.

     ‘பகவதீ... நீ இந்த குறுப்பின் தலையில் இடி நெருப்பை விழ வைக்காமல் இருக்கிறாயே!’

     இறுதியில் தளர்ந்து போன உக்குவம்மா தெருவில் குத்த வைத்து அமர்ந்து புலம்பிக் கொண்டிருந்தாள்.

     ‘டேய் கேசவா.... மரியாதையா பைசாவை இங்கு தா....’

     கேளப்பன் தெருவிற்கு வந்து கேசவனின் அருகில் சென்றான். அவனுடைய கையிலிருந்த வெங்கல பாத்திரத்தில் அடுப்பிலிருந்து எடுத்த கொதிக்கும் நீர் இருந்தது.

     ‘காசைக் கொடுடா!’

     ‘இரவு கஞ்சிக்கு அரிசி வாங்குவதற்காக வச்சிருந்த காசு...’

     உக்குவம்மா தரையில் குத்த வைத்து அமர்ந்து புலம்பினாள்.

     கேளப்பன் ஆவி எழுந்து வந்து கொண்டிருந்த வெங்கல பாத்திரத்தை கேசவனின் முகத்திற்கு நேராக உயர்த்தினான். காயம் பட்ட மிருகத்தைப் போல உருவம் என்னென்னவோ சத்தங்களை எழுப்பியது. உக்குவம்மா எழுந்து நின்றாள்.

     ‘கேளப்பா.... அவனுடைய முகத்துல நீரை ஊற்று... அவன் சாகட்டும்.’

     உடனடியாக கேளப்பன் வெங்கல பாத்திரத்திலிருந்து சுடு நீரை உருவத்திற்கு நேராக வீசி எறிந்தான். காசைக் கீழே போட்டு விட்டு மூக்கின் இடத்திலிருந்த துவாரத்தின் வழியாக பெரிய ஒரு சீழ்க்கையை அடித்தவாறு உருவம் கிழக்கு நோக்கி ஓடியது. அவனுடைய உள்ளங்கையிலிருந்து சிதறி விழுந்த நாணயத்தை நான் அடையாளம் தெரிந்து கொண்டேன். நான் முன்பு கொடுத்த கால் ரூபாய்தான்.

     உக்குவம்மா அந்த நாணயத்தைக் குனிந்து எடுத்து, புடவையின் நுனியில் பத்திரப்படுத்தியவாறு, சுருங்கிய மார்பகங்களைக் குலுக்கிக் கொண்டே மேற்கு நோக்கி நடந்து சொன்றாள்.

     அன்று கேசவனைப் பற்றி நான் மேலும் சற்று கேட்டு தெரிந்து கொண்டேன். உக்குவம்மாவின் ஒரே மகன் கேசவன். அவன் பிறந்ததிலிருந்தே இவ்வாறு அவலட்சணமான தோற்றத்தைக் கொண்டவனாகவே இருக்கிறான். பெற்று விழுந்த குழந்தையைப் பார்த்தவுடன், கேசவனின் தந்தை வெட்டுக் கத்தியை எடுத்து கழுத்தை அறுப்பதற்காகச் சென்றான். பிள்ளையைப் பெற்றவள் அவனை மார்போடு சேர்த்துப் பிடித்து, வெட்டுக் கத்தியிலிருந்து  காப்பாற்றியதால் அவன் உயிருடன் இருக்கிறான்.

     கல்லுகுளக்கரையில் வந்து தங்கியதன்  மூன்றாவது நாள் நான் மீண்டும் கேசவனைப் பார்த்தேன். பகல் உறக்கத்தின் சுகத்தில் படுக்கையில் சுருண்டு படுத்திருந்தபோது, காகங்கள் கூட்டமாக கரையும் சத்தம் கேட்டது. நான் எழுந்து சாளரத்தின் அருகில் சென்று நின்று வெளியே பார்த்தேன். மேற்கு திசையிலிருந்து ஒற்றையடிப் பாதையின் வழியாக தாழ்ந்து பறந்து வரும் காகங்களைத்தான் நான் முதலில் பார்த்தேன். தொடர்ந்து தன்னுடைய நீளமான கால்களால் ஓடிக் கொண்டிருக்கும் கேசவனையும்... காகங்கள் அவனுடைய பெரிய தலையைச் சுற்றி, சிறகடித்து பறந்து கொண்டிருந்தன. அவற்றின் அலகுகள் கேசவனின் முகத்தைக் கொத்திக் கொண்டிருந்தன. தாக்கிக் கொண்டிருக்கும் காகங்களிடமிருந்து தப்பிப்பதற்காக கேசவன் மரண ஓட்டம் ஓடிக் கொண்டிருந்தான். திடீரென்று தன்னுடைய நீளமான கால்கள் மடிய, அவன் நிலத்தில் விழுந்தான்.

     கேளப்பனும், சுமை தூக்கும் கணாரியும் தெருவிற்கு வந்து அந்த காட்சியைப் பார்த்து கைகளைத் தட்டி சிரித்தார்கள். அவர்களுடைய சிரிப்பிற்கு நிகரான ஒரு வகையான சத்தத்தை உண்டாக்கியாவாறு, சிறகுகளைக் குடைந்து, காகங்கள் பிரிந்து சென்றன. பறந்து செல்லும் காகங்களைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தபோது, அவை வெறும் பறவைகள் அல்ல என்றும், அவை கேளப்பனையும் கணாரியையும் போல உள்ள ஏதோ உயிரினம் என்றும் எனக்கு தோன்றியது.

     கல்லுகுளக்கரையைச் சேர்ந்த குழந்தைகள் அனைவரும் கேசவனைப் பார்த்து பயந்தார்கள். அவனுடைய நிழலைப் பார்த்தவுடன், அவர்கள் ஓடி ஒளிவார்கள். கல்லுகுளக்கரையின் ஒரே பணக்காரரான சாத்து முதலாளியின் இளைய மகள் ஒரு நாள் ஒரு ஒற்றையடிப் பாதையில், கண்களுக்கு முன்னால் கேசவனைப் பார்க்க நேர்ந்தது. அதைத் தொடர்ந்து குழந்தைக்கு ஏழு நாட்கள் காய்ச்சல்....... அப்போது சாத்து முதலாளி வெறி கொண்டவராக ஆனார். அவர் வாளை எடுத்து, கேசவனின் கதையை முடிப்பதற்காக வெறியேறினார். ஏதோ அதிர்ஷ்டத்தால் அன்றும் கேசவன் தப்பித்துக் கொண்டான்.

     ‘அந்த பாழாய் போன உக்குவம்மாவை நினைச்சுத்தான்...’ கேளப்பன் என்னிடம் கூறினான்.’ ‘இல்லாவிட்டால்... சாத்து முதலாளி அன்னைக்கே அவனுடைய கதையை முடிச்சிருப்பார்.’

     கேசவனை மிகவும் அருகில் பார்க்கவும், அவனைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளவும் முடிந்த பிறகு, அவன் எனக்குள் ஒரு காயமாக ஆகி விட்டிருந்தான். அவனுடைய பிரச்னைக்கு எந்தவொரு பரிகாரமும் இல்லை என்று எனக்கு தோன்றியது கல்லுகுளக்கரையிலிருந்த குழந்தைகள் அவனைப் பார்த்து பயந்து நடுங்கும்போதும், பறவைகள் அவனை ஆக்கிரமிக்கும் போதும், அவனுடைய மரணம் மட்டுமே ஒரே பரிகாரம் என்று எனக்கு தோன்றியது. ஆனால், அவனுடைய மரணத்தை நான் விரும்பவில்லை. அதற்கு எனக்கு என்ன உரிமை இருக்கிறது?

     ‘அப்படின்னா...போவோமா, மாஸ்டர்?’-கேளப்பனும் அஸ்ஸனாரும் வேறு சிலரும் தயாராகி விட்டார்கள்.

     பீடிக்கட்டையும் தீப்பெட்டியையும் எடுத்தவாறு நானும் அவர்களுடன் சேர்ந்து வெளியேறினேன்.

     கல்லுகுளக்கரையின் ஒவ்வொரு மூலையையும் முடுக்கையும் நாங்கள் தேடி நடந்தோம். யாரும் கேசவனைப் பார்க்கவில்லை. எங்களுக்கு மேலே உச்சிப் பொழுது சூரியன் கடுமையான வெயிலை விழ வைத்துக் கொண்டிருந்தது. இறுதியில் நாங்கள் கற்பாலத்தின் மீது தளர்ந்து போய் அமர்ந்தோம். பாலத்திற்குக் கீழே கிழக்கு திசை நோக்கி பயணிக்கும் வாய்க்காலில் வெயில் நிறைந்து கிடந்தது.

     அப்போது சாத்து முதலாளியின் சப்பரம் சத்தம் உண்டாக்கியவாறு அந்த வழியே வந்தது. சப்பரத்தில் படுத்திருந்த முதலாளி தலையை வெளியே நீட்டி எங்களைப் பார்த்தார். நாங்கள் கேசவனைத் தேடி வெளியே வந்திருக்கிறோம். என்ற விஷயத்தைக் கூறியபோது, முதலாளி கூறினார் :

     ‘உங்களுக்கு பைத்தியம் பிடிச்சிருக்கு, மனிதர்களே! அவன் செத்தால், இந்த ஊருக்கும் ஊரில் உள்ளவர்களுக்கும் நல்லது. எங்காவது போய் சாகட்டும்!’

     அவர் தலையை சப்பரத்திற்குள் இழுத்துக் கொண்டார். சப்பரத்தைச் சுமந்து கொண்டு வந்தவர்கள் ஓசை உண்டாக்கியவாறு பயணத்தைத் தொடர்ந்தார்கள்.

     ‘இனி நாம போகலாம்...’ ­ கேளப்பன் எழுந்து, பின் பகுதியில் படிந்திருந்த மண்ணைத் தட்டி விட்டான். ‘நம்மால முடியக் கூடியதை நாம செய்து விட்டோம்ல? பகவதி நினைச்சபடி நடக்கட்டும்.’

     கணாரியும் அஸ்ஸனாரும் சேர்ந்து எழுந்தார்கள்.

     ‘மாஸ்டர், நீங்கள் வரலையா?’

     ‘இல்ல...’

     ‘நீங்கள் என்ன செய்ய நினைக்கிறீங்க?

     ‘கேசவனைக் கண்டு பிடித்து விட்டுத்தான் நான் இனி கல்லுகுளக்கரைக்கே வருவேன்.’

     ‘இனி அவனை நாம எங்கு தேடுவது, மாஸ்டர்?’

     ‘நீங்கள் செல்லுங்கள், மனிதர்களே!’

     சற்று தயங்கி விட்டு கேளப்பனும் நண்பர்களும் திரும்பி நடந்தார்கள். என்னுடைய உறுதியான குரல் அவர்களை ஆச்சரியப்படச் செய்திருக்க வேண்டும். எனக்கு என்ன ஆனது என்று அவர்கள் தங்ககளுக்குள் கேட்டுக் பார்த்திருக்க வேண்டும்.

     கற்பாலத்தின் அந்தப் பக்கத்தில் கண்களைப் பதித்தவாறு நான் அதே இடத்தில் அமர்ந்திருந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக வெயில் குறைந்து கொண்டு வந்தது. ஆகாயம் சிவப்பாக ஆரம்பித்தபோது, பாலத்தின் எதிர் பக்கத்தில் கேசவன் தோன்றினான். அவன் தலையில் பிரகாசித்துக் கொண்டிருந்த ஒரு கிரீடத்தை அணிந்திருந்தான், தரையைத் தொடக் கூடிய வெண்ணிற பட்டால் ஆன ஒரு அங்கியை அணிந்திருந்தான். மேகக் கூட்டங்களுக்கு மத்தியில் என்பதைப் போல, பாலத்திற்கு மேலே அவன் மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தான். அவன் அருகில் வந்தபோது, முகத்தில் அழகான மூக்கையும், புன்னகை ததும்பும் உதடுகளுக்கு நடுவில் அரிசிப் பற்களையும் நான் பார்த்தேன். அவனுடைய சரீரத்திலிருந்து தொங்கிக் கொண்டிருந்த வெண்ணிற பட்டுத் துணி, சாயங்கால பொழுதின் பிரகாசத்தில் நனைந்து, சிவப்பாக தோன்றியது. அவன் எனக்கு அருகில் வரவும், அவனைக் கட்டிப் பிடிப்பதற்காக நான் கைகளை நீட்டவும் செய்தபோது, அவனுடைய கண்கள் இரண்டு பெரிய கண்ணீர் துளிகளாக மாறின.

Page Divider

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel