Lekha Books

A+ A A-

பார் - Page 2

Bar

ஆறு வருடங்களுக்கு முன்னாடி நான் ஒரு குற்றம் செஞ்சிட்டேன். நடந்தது என்னன்னா...  நான் என் வகுப்பு மாணவர்களை அழைச் சுக்கிட்டு ஒரு பெரிய பாலைவனத்திற்கு கல்விச் சுற்றுலா போனேன். ஒரு பெரிய மணல் கொடுங்காத்துல, பாதையைத் தவறவிட்டுட்டோம்.  இயந்திரத்துல கோளாறு உண்டாகி, நாங்கள் போன வண்டி பாலைவனத்துல மாட்டிக்கிச்சு. கையில இருந்த உணவும், தண்ணியும் தீர்ந்திடுச்சு. வழிதேடிப் போன டிரைவரும் அந்த ஆளோட உதவியாளரும் திரும்பியே வரல. அவர்களோட செத்துப்போன உடல்களைப் பின்னொரு நாள் நாங்க பார்த்தோம். வந்த மாணவர்கள்ல கொஞ்சம் வயசு கூடின மாணவர்கள் தப்பிக்க வழி தேடிப் போனாங்க. அவங்களும் திரும்பி வரல. அவங்களோட எலுமபுக் கூடுகளை சில  மாதங்களுக்குப் பிறகு நாங்க பார்த்தோம். ஒவ்வொரு நாளும் நாங்க வண்டி நிழல்ல இருக்குறப்பவே, அங்கே இருந்த உஷ்ணத்தைத் தாங்க முடியாம மாணவர்கள் ஒவ்வொருத்தரா செத்துக்கிட்டு இருந்தாங்க. கடைசியில் உயிரோட இருந்தது நானும் எட்டு மாணவர்களும்தான். அவர்களும் நானும் கிட்டத்தட்ட மரணத்தின் நுழைவாயிலை நெருங்கிக்கிட்டு இருந்தோம். ஆனா, எங்களோட உடம்புலயோ மனசுலயோ இருந்த ஏதோ ஒண்ணு எங்களை என்னவோ பண்ணத் தூண்டிச்சு. நான் மாணவர்களைப் பார்த்துச் சொன்னேன்: “நம்மளைக் காப்பாத்துறதுக்கு யார் எப்போ  வருவாங்கன்னு யாருக்குத் தெரியும்? மத்தவங்களே தப்பிக்க முடியலைன்னும்போது, நாம மட்டும் எப்படி தப்பிக்க முடியும்? ஆனா, எவ்வளவு நாள் முடியுமோ, அவ்வளவு நான் நாம உயிரோட வாழ்ந்துதான் ஆகணும். இதற்கு ஒரே வழிதான் இருக்கு. நமக்குள்ளே இருக்குற ஒருத்தரோட ரத்தத்தை நாம குடிக்க வேண்டி இருக்கும். மாமிசத்தைச் சாப்பிட வேண்டியிருக்கும். செத்துப் போனவங்களோட உடல் ஏற்கெனவே விஷமாயிடுச்சு. இப்ப நமக்கு இருக்குற வழி ஒண்ணே ஒண்ணுதான். நம்மள்ல யார் முதல்ல சாகுறது மாதிரி தெரியுதோ, அவனோட உயிர் இருக்குறப்பவே, நல்ல ரத்தம் உடல்ல ஓடிக்கிட்டு இருக்குறப்பவே, நாம அவனை அடிச்சுக் கொன்னுடணும். அவனோட சூடான ரத்தத்தையும் இளம் மாமிசத்தையும் சாப்பிட்டுட்டு இன்னும் கொஞ்ச நாள் மத்தவங்க தாக்குப் பிடிக்கலாம். மீண்டும் மரணம் யாரைத் தழுவ வருதோ அவனை அடுத்து அடிச்சு சாப்பிட வேண்டியதுதான். இப்படி மரணத்தை உயிரோட  இருக்குறவங்களோட தன்மைக்கு வேண்டி பயன்படுத்த வேண்டியதுதான்.”

ஜோஸும் தாமோதரனும் அந்த மனிதர் சொன்ன விஷயங்களை மிகவும் ஆர்வம் மேலோங்க, கையை நாடியில் வைத்துக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவர், அவர்கள் இருவரையும் பார்த்துப் புன்னகைத்தார். அவர்களும் பதிலுக்குப் புன்னகைக்க முயன்றார்கள். ஆனால், அதைப் புன்னகை என்று சொல்வதைவிட உதடுகளின் இலேசான அசைவு என்று கூறுவதே பொருத்தமாக இருக்கும். அவர்கள் டம்ளர்களில் இருந்த மதுவைக் குடித்து முடித்து, அந்த மனிதரை மீண்டும் பார்த்தார்கள். அவர் தொடர்ந்தார். “மரணம் தேடி வந்து கூப்பிட்ட முதல் மாணவன், மூடிய கண்களுடன் வண்டியோட ஒரு இருக்கையில அசைய முடியாமல் கிடந்தான். நான் மற்ற மாணவர்களைப் பார்த்துச் சொன்னேன்: “நம்மோட நண்பனை வழியனுப்பி வைக்கிறதுக்கான நேரம் வந்திடுச்சு. நீங்க எல்லாரும் அவனுக்காகப் பிரார்த்தனை செய்யுங்க. நான் செய்யப் போறதைப் பார்க்கிறதோ பார்க்காம இருக்குறதோ உங்க இஷ்டம்.” நான் இப்படிச் சொன்னதும், சில மாணவர்கள் தங்களோட கண்களை மூடிக்கிட்டாங்க. சில பேர் அழுதாங்க. சிலர் முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கிட்டாங்க. எந்திரிச்சுப் போவதற்கான சக்தி ஒருத்தருக்குக்கூட இல்லை. நான் என்னோட ஸ்கவுட் பேக்கிலிருந்து வேட்டைக் கத்தியை எடுத்துக்கிட்டு மரணமடையப்போகிற மாணவனை நெருங்கினேன். அவன் நடக்கப்போறது என்னன்னு தெரிஞ்சுக்கிட்டே கொஞ்சம் கொஞ்சமா மயங்கிக்கிட்டு வர்ற கண்களைத் திறந்து என்னைப் பார்த்தான். ஒரு கண்ணோட ஒரத்துல கண்ணீர் அரும்பி வழிஞ்சுக்கிட்டு இருந்துச்சு. நான் அவனோட கண்களை மெதுவாக மூடிவிட்டேன். என் கையில இருந்த கத்தியை உறையை விட்டு எடுத்தேன்.  கத்தியை மெல்ல இறக்கினேன். “என் தெய்வமே...” நான் சொன்னேன்: “என் தெய்வமே... இதோ உன்னோட மகன் எங்களுக்காக ரத்தமாகவும் மாமிசமாக வும் ஆகப் போறான். நீ இதைத் தெரிஞ்சிக்கணும்.”

நான் சாப்பிடத் தந்த ரத்தத்தையும் மாமிசத்தையும் வேண்டாம்னு சொல்ற சக்திகூட எந்த மாணவனுக்கும் இல்ல. அவங்களோட தாகமும் பசியும் அந்த அளவுக்கு எல்லையை மீறிப் போயிருந்துச்சு. பையனோட மாமிசத்தின் ருசி மற்ற மாமிசத்தைப் போலத்தான் இருந்துச்சு. ரத்தம் புளி ரசம்போல இருந்துச்சு. எங்களோட உடல் உறுப்புக்கள் மீண்டும் செயல்படத் தொடங் கிச்சு. எங்களுக்கு அப்பத்தான் மூத்திரம் வந்துச்சு. ஒவ்வொரு துளி மூத்திரத்தையும் பிடிச்சு அதை நாங்களே குடிச்சோம். இப்படியே மூணு நாட்கள் கடந்துச்சு. அப்போதான் எங்களைக் காப்பாற்ற வந்த வண்டி தூரத்துல தூசியைப் பறக்கவிட்டுக்கிட்டு வர்றது தெரிஞ்சது.

எங்களுக்கு ரத்தத்தையும் மாமிசத்தையும் தந்த மாணவனோட மீதி இருந்த உடல், மற்ற செத்துப்போன உடல்களுடன் நகரத்துக்கு வந்து சேர்ந்துச்சு. உயிர் பிழைச்ச சிறுவர்கள் நடந்ததையெல்லாம் சொன்னாங்க. அவ்வளவுதான்- என்னைக் கைது பண்ணி சிறையில அடைச்சிட்டாங்க. விசாரணை நடத்தினாங்க. நான் செய்த குற்றத்தை ஒத்துக்கிட்டேன். நீதிமன்றம் எனக்கு மரண தண்டனை விதிச்சது. எனக்கு ஆதரவு தர்றதுக்கோ, எனக்காக வேண்டிக்கவோ இந்த உலகத்துல யாருமே இல்ல. காரணம்- என்னோட செயலை என்னோட நெருங்கிய நண்பர்களாலும் என்னுடன் வேலை பார்க்கும் சக ஆசிரியர்களாலும்கூட ஏத்துக்கவே முடியல. அவர்கள் நடந்த சம்பவங்களைக் கேட்டு உறைஞ்சுபோய் நின்னாங்க. நான் சிறையில இருந்தப்போ என்னோட ஏழு வயசு மகனோட ஒரு கடிதம் என்னைத் தேடி வந்துச்சு. அந்தக் கடிதத்தில்  “அப்பா...”ன்ற ஒரு வார்த்தையை மட்டும்தான் படிக்க முடிஞ்சிச்சு. அடுத்த வார்த்தையும் அவனோட பேரும் அழிஞ்சு போயிருந்துச்சு. அவன் எனக்காக சிந்திய கண்ணீர் துளிகள் அந்த எழுத்துகளை அழிச்சிருக்கனும்ன்றதைப் புரிஞ்சிக்கிட்ட நான் சிறையோட தரையில உட்கார்ந்து அந்தக் கடிதத்தையே வச்சு கண் எடுக்காம பார்த்துக்கிட்டு இருந்தேன்.

ஒருநாள், நான் எந்த சிறுவனைக் கொன்னேனோ, அவனோட அப்பா- அம்மாவும், சகோதரி, சகோதரர்களும் என்னைப் பார்க்க வந்தாங்க. அப்பாவும் அம்மாவும் கண்ணீரோட என் கண்களையே பார்த்துக்கிட்டு ரொம்ப நேரம் நின்னுக்கிட்டு இருந்தாங்க. அவங்களுக்குப் பின்னாடி நின்ன சிறுவர்கள்ல ஒருத்தன் என்னைப் பார்த்து ஒரு தடவை சிரிச்சான். மற்றொரு நாள் என்கூட உயிர் பிழைத்த சிறுவர்கள் என்னை வந்து பார்த்தார்கள். நான் அவங்களைப் பார்த்து புன்னகை செஞ்சாலும், என்னை அவங்க பார்த்ததாகவே காட்டிக்கல. அவங்களோட பார்வைகள் என்னைத் தாண்டி வேறெங்கோ இருந்தன.”

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel