Lekha Books

A+ A A-

காய்கறிக்காரி நாராயணி - Page 4

Kaikarikari Narayani

“அங்கே வாசல்ல என்ன தொங்கிக்கிட்டு இருக்கு பார்த்தியா? எல்லாம் தன்கிட்ட இருக்குன்னு காண்பிக்கிறதுக்குத்தானே எல்லாத்தையும் எடுத்து தொங்க விட்டிருக்கு?”

“பிறகு எதுக்கு சின்னம்மா பெட்டிக்குள்ள இருக்கிற துணிகளை யெல்லாம் எடுத்து வாசல்ல தொங்க விடணும்? பெரிய உத்தி யோகத்துல இருக்குறதையும் பணக்காரங்கன்றதையும் காண்பிக்குற துக்குத்தான் எல்லாம்...”

“அவளைப் பார்க்குறப்போ தோணும்- உயர்நீதிமன்ற நீதிபதி யோட பொண்டாட்டியோன்னு. இதுவரை வாசல்ல நின்னுக்கிட்டு இருந்தா, நாராயணி- மாலைகளையும் வளையல்களையும் நான் பார்க்கணும்னு. எந்த காட்டுல இருந்து வந்தவளோ இவ?”

“நான் போயி தெரிஞ்சிட்டு வரட்டுமா, சின்னம்மா?”

“ம்... போயி எல்லாத்தையும் தெரிஞ்சிட்டு வா நாராயணி. இந்த வீட்டைப் பற்றி ஏதாவது கேட்டால், எதுவுமே தெரியாதுன்னு சொல்லிடு.”

“நான் அப்படிச் சொல்லாம வேற என்னத்தைச் சொல்லுவேன்?”

நாராôயணி கிழக்குப் பக்கமிருந்த வீட்டின் கேட்டில் நின்று அழைத்தாள்.

“காய்கறி வேணுமா.”

“இங்கே வா” அந்தப் பெண் அழைத்தாள்.

நாராயணி வாசலை நோக்கி நடந்தாள். அந்தப் பெண் மிடுக்கான குரலில் கேட்டாள்:

“என்ன காய்கறி இருக்கு?”

“வெண்டைக்காய், பூசணிக்காய், வெள்ளரிக்காய், புடலங்காய், முருங்கைக்காய்...” நாராயணி மூச்சு விடாமல் சொன்னாள்.

“இது எதுவும் எனக்கு வேண்டாம். நாங்க இது எதையும் சாப்பிடுறது இல்ல...” -அந்தப் பெண் உரத்த குரலில் சொன்னாள். தான் சொன்னது வக்கீல் வீட்டிலிருப்போரின் காதில் விழுமா என்று பார்த்தாள்.

“பிறகு என்ன வேணும் சின்னம்மா? இங்கிலீஷ் காய்கறி கொண்டு வரட்டுமா?” நாராயணி வாசலோடு சேர்ந்து  நின்றவாறு கேட்டாள்.

“நாங்க இங்கிலீஷ் காய்கறிகளைத்தான் சாப்பிடுவோம். கேபேஜ், பீன்ஸ், பொட்டட்டோஸ், டொமாட்டோஸ்... இந்த காய்கறிகளை தினமும் கொண்டு வந்தா நான் வாங்கிக்கிறேன்.”

“கொண்டு வந்து தர்றேன், சின்னம்மா. ஜட்ஜ் எஜமானோட வீட்டுக்கும் நான்தான் இங்கிலீஷ் காய்கறி கொடுக்குறேன்.” அவள் தன்னுடைய கூடையை வாசற்படியில் இறக்கி வைத்தவாறு சொன்னாள்.

“வேற எந்த வீட்டுலயும் இங்கிலீஷ் காய்கறிகளை வாங்குறது இல்ல சின்னம்மா. பெரிய உத்தியோகத்துல இருக்குறவங்களோட வீட்டுல மட்டும்தான் இதை வாங்குவாங்க.”

“என் கணவர் கவர்மெண்ட் செக்ரட்டரியா இருக்காரு.”

நாராயணி மரியாதை மேலோங்க சற்று ஒதுங்கி நின்றாள். சின்னம்மா முன்பிருந்ததைவிட அதிகமான மிடுக்கை வரவழைத்துக்கொண்டு கேட்டாள்:

“அந்த வீட்டுல யாரு இருக்காங்க?”

“ஒரு வக்கீல்...”

“கேஸ் எதுவும் இல்லாத வக்கீலா இருக்கும்னு நினைக்கிறேன்.”

“பாவம் அவங்க... எப்போதாவது கீரையோ, பூசணிக்காயோ, வெள்ளரிக்காயோ வாங்குவாங்க. அதைக் கொடுக்குறதுக்குத்தான் நான் அங்கே போவேன்.”

“பாவம்னு சொல்ற... பார்க்குறப்போ அப்படி தெரியலியே! என்ன பந்தான்ற! நான் புடவையை எடுத்து கொடியில போட்டா, அந்தப் பொம்பளையும் கிழிஞ்சுபோன துணிகளைக் கொண்டு வந்து கொடியில போடுது. நான் வானொலியை வச்சா, அந்தப் பொம்பளையும் வானொலியை வைக்குது.”

“ஒண்ணும் இல்லாதவங்கதான் எல்லாம் இருக்குறது மாதிரி காட்டிக்குவாங்க.”

“சரி... உன் பேரு என்ன?”

“நாராயணி.”

“எப்போ இங்கிலீஷ் காய்கறிகளைக் கொண்டு வருவே?”

“மதியத்துக்குப் பின்னாடி கொண்டு வர்றேன் சின்னம்மா.” கூடையிலிருந்து கொஞ்சம் கீரையை எடுத்து வாசலில் வைத்துவிட்டு அவள் சொன்னாள்:

“இது நானே நட்டு வளர்ந்த கீரை. சின்னம்மா, இது இங்கே இருக்கட்டும். நான் மதியத்துக்குப் பிறகு இங்கிலீஷ் காய்கறிகளைக் கொண்டு வர்றேன்.” அவள் கூடையை எடுத்து தன் தலையில் வைத்தாள் விடை பெற்றுக்கொண்டு புறப்பட்டான்.

அவள் மீண்டும் வக்கீலின் வீட்டுக்குச் சென்றாள். வக்கீலின் மனைவி ஆர்வத்துடன் கேட்டாள்:

“அவங்க யாரு நாராயணி?”

“கவர்மெண்டு செக்ரட்டரியாம். அந்த பொம்பளை என்ன திமிரா நடக்குறாங்க தெரியுமா சின்னம்மா? இங்கிலீஷ் காய்கறிகள் மட்டும்தான் சாப்பிடுவாங்களாம். அவங்க பேசறப்போ நமக்கு தோணும்- அவங்க ஏதோ அரண்மனையில இருந்து வந்திருக்கவங்க போலன்னு. மதியத்துக்குப் பின்னாடி இங்கிலீஷ் காய்கறிகளைக் கொண்டு வர்றதா சொல்லிட்டு நான் இங்கே வந்துட்டேன். நான் கொஞ்சம் கீரையைத் தந்தேன். அவங்க வாங்கிக்கிட்டாங்க.”

“புடவைகளைப் பார்த்தியா?”

“பார்த்தேன் சின்னம்மா. நெறம் மட்டும்தான் இருக்கு. இங்கே தெருவுல வச்சிக்கிட்டு விற்பாங்கள்ல? அந்த மாதிரி புடவைகள்தான். நாலு ரூபாயோ அஞ்சு ரூபாயோ கொடுத்தா கிடைக்கக்கூடிய புடவைங்கதான் அது.”

“நகைகள் என்னென்ன இருக்கு?”

“மாலையும் வளையல்களும் இருக்கு. ஆனா, அது எதுவும் தங்கம் இல்ல சின்னம்மா. வெறும் கவரிங் நகைங்க எல்லாம்.”

அன்று வக்கீலின் மனைவி நாராயணிக்கு கஞ்சியும் கொடுத்தாள். ஒரு ரூபாயும் கொடுத்தாள். புறப்படும் நேரத்தில் நாராயணி சொன்னாள்:

“இனிமேல் நான் காய்கறிகள் கொண்டு போறப்போ இங்குள்ள விசேஷங்களை அவங்க கட்டாயம் கேட்பாங்க.”

“இப்ப போனப்பவும் கேட்டிருப்பாளே?”

“என்கிட்ட கேட்டாங்க நகைகள் எவ்வளவு இருக்குன்னு. ஒரு கண்ணாடி அலமாரி நிறைய நகைகள் இருக்குன்னு நான் சொன்னேன். காதுல போட்டிக்குற கல்லு வச்ச கம்மலோட விலை ஆயிரத்தைந்நூறு ரூபாய்னு நான் சொன்னேன். நான் புறப்படட்டுமா சின்னம்மா? மீதி உள்ளதை நான் வந்த பிறகு சொல்றேன்.”

“நாராயணி, நீ கட்டாயம் வரணும். உனக்கு நான் சாதம் எடுத்து வைக்கிறேன்.”

மாலை நேரம் நாராயணி இங்கிலீஷ் காய்கறிகள் கொண்டு வந்தாள். வக்கீலின் மனைவி காலையில் நிறைய காய்கறிகள் வாங்கினாலும், செக்ரட்டரியின் மனைவியுடன் போட்டி போட வேண்டும் என்பதற்காக கொஞ்சம் இங்கிலீஷ் காய்கறிகளும் வாங்கினாள். பிறகு வேலைக்காரியைப் பார்த்து நாராயணிக்கு சாதம் கொண்டு வந்து தரும்படி சொன்னாள். வேலைக்காரி மெதுவான குரலில் முணுமுணுத்தாள்:

“நாராயணி பாடு இனிமேல் கொண்டாட்டம்தான் - பக்கத்து வீட்டுல புதுசா வந்திருக்குற அம்மாவை வச்சு...”

நாராயணியின் காதில் வேலைக்காரி சொன்னது விழுந்தது. வக்கீலின் மனைவியின் காதில் அது விழவில்லை. அவள் கேட்டாள்:

“என்னடி, முணுமுணுக்குற?”

“நான் எதுவுமே சொல்லலையே சின்னம்மா...”

நாராயணி சொன்னாள்:

“சின்னம்மா, உங்க சமையல்காரிக்கு நான் இங்க வர்றதும், எனக்கு நீங்க ஏதாவது தர்றதும் பிடிக்கல.”

“அவளோட விருப்பத்தை அவ வீட்டுல வச்சிக்கட்டும். இங்கே நான் என்ன விரும்புறேனோ, அதுதான் நடக்கும்.”

வேலைக்காரி சாதத்தை எடுத்துக்கொண்டு வந்தாள். நாராயணி சொன்னாள்:

“வீட்டுல பிள்ளைங்க பட்டினி கிடக்குது சின்னம்மா. நான் இதை வீட்டுக்கு எடுத்துட்டுப் போறேன்.”

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel