
பைஜாமாவின் மேல் விழுந்த சிகரெட் சாம்பலைத் தட்டிவிட்ட அவர் கேட்டார்: "பிறகு... டாக்டர் சொன்னது என்னன்னு கேட்டீல்ல?"
அவள் எந்த வித உணர்ச்சியும் இல்லாமல் அவரின் முகத்தைப் பார்த்தாள்.
"உன்னால இனிமேல் வேலை செய்ய முடியு£துன்னு அவர் சொல்லிட்டாரு. அவர் சொன்னதை நீயும் கேட்டேல்ல?"
"ம்..."
அவள் குரல் மிகவும் கனமாக இருந்தது.
"கம்பெனி இப்போ ரொம்பவும் சிரமத்துல இருக்கு. மிருகங்கள் ரொம்பவும் மோசமான நிலைமையில இருக்கு. சிங்கங்கள்ல ஒண்ணு சாகுற நிலைமையில இருக்கு. பணப்பிரச்சினையைப் பற்றி சொல்லவே வேண்டாம். எல்லாத்தையும் கூட்டிக்கழிச்சிப் பாக்குறப்போ, சில பேரை கம்பெனியை விட்டு விலக்கறதா இருக்கோம்."
அவர் தொடர்ந்து என்னென்னவோ சொன்னார். அவள் எதையும் கேட்கவில்லை.
"கம்பெனியில நீ இருக்குறதைப் பத்தி ஆட்சேபனை இல்ல. ஆனா, முன்னாடி இருந்ததைப் போல..."
அதன் அர்த்தம் என்னவென்பது ஜானம்மாவிற்குத் தெரியும். லட்சுமியைப் போல அங்கிருந்த மற்றவர்களுக்கு எடுபிடி வேலைகள் செய்து என்ன கிடைக்கிறதோ அதில் திருப்தியடைந்து வாழ வேண்டும்.
"என்ன சொல்ற ஜானம்மா?"
"நான் போறேன்."
அது தன்னுடைய குரல்தானா என்று அவளுக்கே சந்தேகமாக இருந்தது-.
அப்போது அவளுக்குள்ளிருந்து இன்னொரு குரல் எழுந்து மேலே வருவதைப் போல் இருந்தது. 'எங்கே?'
ஜானம்மா அதிர்ச்சியடைந்து நின்றாள்.
சர்க்கஸ் கூடாரத்திற்கு வெளியில் இருக்கும் பரந்துகிடக்கும் பிரபஞ்சம் பலமில்லாத கையுடன் வரும் சர்க்கஸ்காரியை வரவேற்கத் தயாராக இருக்கிறதா? அவள் ஒரு நிமிடம் சிந்தித்தாள்.
மேனேஜர் வெற்றி பெற்ற எண்ணத்துடன் சிரித்தார். வாய்திறந்து சொல்லாமலே விஷயம் முடிந்துவிட்டது என்ற திருப்தி அவருக்கு. அவர் மேஜையைத் திறந்து பர்ஸிலிருந்து ஐந்து பத்து ரூபாய் நோட்டுக்களை எண்ணி எடுத்தார்.
மேனேஜர் கருணை மனம் கொண்டு நீட்டிய அந்த பேப்பர் துண்டுகளையே வெறித்துப் பார்த்தவாறு ஜானம்மா ஒரு அசையாத சிற்பத்தைப் போல நின்றிருந்தாள்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook