Lekha Books

A+ A A-

பழம் - Page 2

Pazham

ஏற்கனவே ஒரு சம்பவத்தை நான் சொல்லல. எனக்கு நாலோ அஞ்சோ வயது நடக்குறப்போ, என் அப்பா வீட்டை விட்டு போயிட்டார். அவரைப் பற்றி எந்தவிதமான தகவலும் இல்ல. என்னோட அப்பா ஒரு மெக்கானிக்காக இருந்தார். அப்பா வீட்டை விட்டுப் போன பிறகு, நாங்க ரொம்பவும் கஷ்டப்பட ஆரம்பிச்சோம். எங்களுக்குச் சொந்தமா இருபது சென்ட் இடமும், சின்னதா ஒரு வீடும் இருந்துச்சு. நிலத்துல இருந்து சொல்லிக் கொள்கிற மாதிரி எந்தவித வருமானமும் இல்ல. அம்மா பக்கத்துல இருந்த ஒரு பணக்கார இந்து வீட்டுக்கு வேலைக்குப் போனாங்க. வீட்டு வேலைதான். அங்கே கிடைக்கிற சாதத்தை ஒரு பொட்டலமாக கட்டி அம்மா கொண்டு வருவாங்க. அதெல்லாம் எனக்கு இப்பவும் சரியா ஞாபத்துல இருக்கு. நல்ல விஷயம்னு சொல்றதா இருந்தா அம்மா என்னைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பினதைத்தான் சொல்லணும். மலையாளப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பினதைத்தான் சொல்லணும். மலையாளப் பள்ளிக்கூடத்துல நாலாம் வகுப்புவரை படிச்சேன். பாஸானேன். அம்மா என்னை ஆங்கில பள்ளிக் கூடத்துல சேர்த்தாங்க. பட்டினி ஆரம்பிச்சது. போடுறதுக்கு சட்டை இல்ல. வேஷ்டி இல்ல. புத்தகங்கள் இல்ல. பாட புத்தகங்களை நோட்டு புத்தகங்கள்ல காப்பி எடுப்பேன். வீட்ல இருந்து பள்ளிக்கூடத்துக்குப் போறதுன்னா அஞ்சு மைல் தூரம் நடக்கணும். காலையில பழைய கஞ்சி தண்ணியில உப்பைப் போட்டு குடிச்சிட்டு பள்ளிக்கூடத்துக்குப் புறப்படுவேன். பசி எடுக்குறப்போ பச்சை தண்ணியைக் குடிப்பேன். சில நேரங்கள்ல கோயில்ல இருந்து படையல் சாதம் கிடைக்கும். சில நேரங்கள்ல கிடைக்காது. பட்டினி கிடக்க வேண்டியதுதான். பசின்னா அப்படியொரு பசி இருக்கு. கூட படிக்கிற பெரும்பாலான பசங்க மதிய நேரம் வந்துட்டா ஹோட்டல்கள்ல இருந்து தோசையும், தேநீரும் வாங்கிச் சாப்பிடுவாங்க. நான் மத்த பசங்களுக்குத் தெரியாம பச்சைத் தண்ணியைக் குடிச்சு வயிறை நிறைப்பேன். அஞ்சு மைல் தூரம் நான் நடந்து களைச்சுப் போய் வீட்டுக்குத் திரும்புவேன். ஆறிப் போன சாதத்தை அம்மா கொண்டு வந்து வைப்பாங்க. அதை நான் சாப்பிடுவேன். மறுநாள் காலையில திரும்பவும் பட்டினி... இப்படித்தான் வாழ்க்கை ஓடிக்கிட்டு இருந்துச்சு. மனசுல கவலை குடிகொள்ள ஆரம்பிச்சது. உதவி செய்ய, ஒரு நல்ல வார்த்தை சொல்ல எனக்குன்னு இந்த உலகத்துல யாருமே இல்ல. அதைப் பார்த்து எனக்கு வெறுப்புத்தான் வந்துச்சு. கோபம் கூட வந்துச்சு. சொல்லப் போனா கடவுள் மேலதான் எனக்கு கோபமே வந்தது. கோவில்கள்ல இருந்த எல்லா கடவுள்களையும் நான் வெறுத்தேன். ஏழைகளுக்காக தெய்வம் என்ன பண்ணியிருக்கு ? ஒண்ணுமே பண்ணல. நான் தெய்வத்தை வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்டுவேன். அதைக் கேட்டு அம்மா ரொம்பவும் கவலைப்படுவாங்க. அம்மா சொல்வாங்க - ‘‘மகனே, அப்படியெல்லாம் சொல்லக்கூடாது. தெய்வம் கருணை வடிவமானது’ன்னு.

எனக்கு அம்மா மேல கோபம் கோபமா வந்துச்சு. நான் இருக்குறது அம்மாவுக்கு உண்மையாகவே ஒரு சுமைதான். நான் செத்துப் போயிட்டா என்ன? தற்கொலை செய்ய வேண்டியதுதான். இங்கே பக்கத்துலயே ஒரு கோவில் இருக்கு. அதற்குப் பின்னாடி கிளை பரப்பி நிக்கிற பலாமரம் இருக்கு. அதோட கிளையில சாயங்காலம் தொங்கிட வேண்டியதுதான்!

பள்ளிக்கூட கிணத்துல தண்ணி எடுக்க பயன்படுற வாளியில கட்டியிருந்த கயிறை யாருக்கும் தெரியாம நான் அவிழ்த்து எடுத்து சுருட்டி மடியில வச்சிக்கிட்டேன். பிறகு.... பள்ளிக்கூடத்தை விட்டு புறப்பட்டேன். வழியில இருந்த ஒரு மேட்டுல கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தேன். ஒரு சிந்தனையும் ஒடல. மரணத்தோட முகத்தை நோக்கி உட்கார்ந்திருந்தேன்.

இன்னும் பொழுது இருட்டல. நான் உட்கார்ந்திருந்தேன். வழியில பலரும் போய்க் கொண்டிருந்தாங்க. யாரும் என்னை ஒரு பொருட்டாவே நினைக்கல. நான் என் அப்பாவைப் பற்றி நினைச்சுப் பார்த்தேன். அம்மாவை நினைச்சேன். அப்பா மட்டும் இருந்திருந்தா...!

கொஞ்ச நேரம் கழிச்சு நான் எழுந்து நடந்தேன். கடைசி நடை. நாளைக்கு நான் இருக்கப் போறது இல்ல. நான் இல்லைன்னா யாருக்கு நஷ்டம்? என்னோட அம்மா அழுவாங்க. அம்மாவுக்கு இதைத் தவிர வேறு எந்த மாதிரி நான் உதவ முடியும்? உண்மையாகச் சொல்லப் போனா, நான் ஒரு பிடிவாதக்காரன். பட்டினி கிடந்து கிடந்து எனக்கே வெறுப்பாயிடுச்சு. நேத்து பட்டினி, இன்னைக்கு பட்டினி. நாளைக்கும் பட்டினி. நான்தான் சொன்னேனே.... எங்களுக்கு உதவி செய்ய உலகத்துல யாருமே இல்ல. ஒரு நல்ல வார்த்தை சொல்ல யாருமே இல்ல. முடிஞ்சது. எல்லாமே முடிஞ்சது. கயிற்றில் தொங்கி சாக வேண்டியதுதான்!

அந்த முடிவுடன் நான் வர்றப்போ எனக்காகக் காத்திருப்பதைப் போல ஒரு மனிதர் மலைச்சரிவின் சாலை ஓரத்துல நின்னுக்கிட்டு இருக்கார். வழுக்கைத் தலையில தொப்பி அணிஞ்சிருக்கார். இலேசா நரைத்த தாடியை கத்தரிச்சு விட்டிருக்கார். சட்டையும், வேஷ்டியும் அணிஞ்சிருக்கார். வேஷ்டியை மடிச்சுக் கட்டியிருக்கார். கையில ஒரு குடை இருக்கு. கால்கள்ல செருப்பு இருக்கு. பாக்கெட்ல ஒரு பேனா இருக்கு. கண்கள்ல மை தடவியிருக்கிறாரேன்னு ஒரு சந்தேகம். அவர் எந்த ஜாதின்னு உடனே புரிஞ்சு போச்சு. என்னைப் பார்த்த உடனே ஒரு கேள்வி கேட்டாரு - சிரிச்சிக்கிட்டே!

‘‘குழந்தை... எங்கேடா போற?’’

‘நான் பதில் சொல்லவில்லை. அவர் கேட்டார்.

‘‘குழந்தை... நீ எங்கேயிருந்து வர்ற?’’

நான் பதில் சொல்லவில்லை.

‘‘குழந்தை... ஏன்டா என்னவோ போல இருக்கே?’’

கண்களில் நீர் வழிய நான் சொன்னேன்.

‘‘பசி...’’

ஒரு மனிதர் என்னை கவனிச்சிருக்கார்! நான் என்னோட கஷ்டங்களை மெதுவான அவர்கிட்ட சொன்னேன். காலையில பழைய கஞ்சி தண்ணியில உப்பு போட்டு குடிச்சது... நான் ரொம்பவும் தளர்ந்து போயிருந்தேன். நேரம் இருட்ட ஆரம்பிச்சது. நாங்கள் மலையோட இந்தப் பக்கம் வந்தோம். அவர் அந்தக் கடையில இருந்து ரெண்டு சக்கரத்திற்கு பாளேங்கோடன் பழங்களை ஒரு தேக்கு இலையில வாங்கினார். சக்கரம்ன்றது பழைய திருவிதாம்கூர் ராஜ்யத்தின் ஒரு நாணயம்ன்றது தெரியும்ல? நீங்க மறந்திருக்க மாட்டீங்க... இருபத்தெட்டரை சக்கரம் ஒரு பிரிட்டிஷ் ரூபா.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel