
கிராமத்து மனிதர்கள் தலையைக் குனிந்து நின்றிருந்தார்கள். போலீஸ்காரன் திரும்ப திரும்ப கேட்டும் அவர்கள் எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாகவே இருந்தனர். அவர்கள் தங்கள் தலையைத் தூக்கவேயில்லை. உதடுகளைப் பிரிக்கவில்லை. அவ்வப்போது சிலரின் மூச்சு விடும் சத்தம் மட்டும் கேட்டது.
‘‘இதோட அர்த்தம் என்ன தெரியுமா ? உனக்கும் இந்த வழக்குல பங்கு இருக்கு. அப்படித்தானே ?’’
போலீஸ்காரன் நாராயணனைப் பார்த்து சொன்னான்.
‘‘சாமி...’’ - வெங்கய்யா தாழ்வான குரலில் தொழுதவாறு கெஞ்சினான் :
‘‘என் பொண்டாட்டியை ஒரு தடவை பார்க்க எனக்கு உதவ முடியுமா ?’’
அவனின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.
‘‘உன் பொண்டாட்டி காணாமல் போனதுல, உனக்கு எஜமான் மேல சந்தேகம் இருக்கா ?’’
வெங்கய்யா ஒரு நிமிடம் என்னவோ சிந்தித்து விட்டு சொன்னான் :
‘‘நான் சந்தேகப்பட்டு என்ன ஆகப் போகுது ? சந்தேகப்படாம இருந்துட்டு என்ன ஆகப் போகுது ?
‘‘உனக்கு சந்தேகம் இல்லைன்னா இந்த தாள்ல எழுதி கையெழுத்துப் போடு...’’
‘‘கையெழுத்துப் போட எனக்குத் தெரியாது சாமி...’’
போலீஸ்காரன் சுட்டிக் காட்டிய இடத்தில் வெங்கய்யா கையொப்பமிட்டான். எஜமானின் உதடுகளின் ஒரத்தில் ஒரு புன்சிரிப்பு மலர்ந்தது.
மக்கள் அந்த இடத்தை விட்டு நீங்கிய போது நாராயணன் வெங்கய்யாவைப் பார்த்து கோபப்பட்டான்.
‘‘நாராயணன்... உன் பொண்டாட்டி விதவையா நிக்கிறதை நான் விரும்பல. நமக்கு சக்தி இல்ல நாராயணன். என் பொண்டாட்டியைக் காப்பாற்ற உன்னைத் தவிர இந்த ஊர்ல ஒருத்தனாவது முன்னாடி வந்து நின்னானா? நம்மால எதுவுமே செய்ய முடியாது. நாம அப்பிராணிங்க...’’
வீட்டிற்கு வந்த வெங்கய்யா தன் பிள்ளைகளை மடியில் உட்கார வைத்து, அவர்களை முத்தமிட்டான். ‘‘அம்மா எங்கே நயினா?’’ என்று கேட்ட அவர்களைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அவன் தேம்பித் தேம்பி அழுதான்.
கிராமத்தில் யாருக்காவது கஷ்டம் என்று வந்தால் வெங்கம்மா அவர்களுக்கு உதவுவதற்காக போய் நிற்பாள். அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வாள். யாரும் கஷ்டப்படுவதை அவளால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. ஆனால், துன்பம் அவளை வந்து அணைத்தபோது, உதவுவதற்கு யாருமே இல்லை. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு விட்டார்கள்.
அன்று இரவு அவன் பிள்ளைகளுக்கு சோறு உண்டாக்கிக் கொடுத்தான். ‘‘அம்மா இப்போ வருவா’’ என்று கூறி அவர்களைச் சமாதானப்படுத்தினான். அவர்களை இறுக அணைத்து, நெற்றியில் முத்தமிட்டு தூங்க வைத்தான். அப்போது அவன் மனம் எங்கோ அலைந்து கொண்டிருந்தது.
நடு ராத்திரி நேரத்தில் அவன் உறக்கம் வராமல் படுத்திருந்த போது வெளியே இருந்து ஒரு இனிய குரல் கேட்டது. அந்தக் குரல் தன் வெங்கம்மாவிற்குச் சொந்தமானது என்பதை அவன் புரிந்து கொண்டான். அவள் அவனை அழைக்கிறாள். காதல் மேலோங்க அழைக்கிறாள்.
‘‘வாங்க... நாம காடுகளை நோக்கி போவோம். அங்கேயிருக்குற மிருகங்கள் கூட நம்மைத் தொந்தரவு செய்யாது...’’
வெங்கய்யா மெதுவாக கதவைத் திறந்து சுற்றிலும் பார்த்தான்.
யாருமில்லை. ஆனால், அந்த வார்த்தைகள் அடுத்தடுத்து அவன் காதில் கேட்டுக் கொண்டேயிருந்தன. எந்தவித சலனமும் இல்லாமல் இருக்கும் கிராமம்... மூடிக் கிடக்கும் இருட்டு... நட்சத்திரங்களே இல்லாத வானம்....
அடுத்த நாள் காலையில் ஊர் மக்கள் பார்த்தது வெங்கய்யாவின் திறந்து கிடக்கும் வீட்டைத்தான். அந்த வீட்டில் வெங்கய்யா இல்லை. வெங்கய்யாவின் குழந்தைகளும் இல்லை.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook