Lekha Books

A+ A A-

குளிர்காலத்திற்கு ஏங்கிய குதிரை - Page 9

kulir kalathuku engiya kuthirai

ஒருவேளை, தன் தாயிடம் அவள் இருக்கலாம். இப்போது பதினெட்டு அல்லது பத்தொன்பது வயது அவளுக்கு இருக்க வேண்டும்.

காலையில் போதை தெளிந்ததும், கிழவன் ஓடிவந்து கால்களைப் பிடித்தான். முந்தின நாள் இரவு நேரத்தில் தான் கூறியவை அனைத்தும் போதையால் வந்தவை என்றும், தான் அப்படி உளறிய விஷயத்தை எந்தக் காரணத்தைக் கொண்டும்  ஸாப் தெரிந்து கொள்ளக்கூடாது என்றும் அவன் கண்ணீருடன் கெஞ்சிக் கேட்டுக் கொண்டான்.

“சொல்ல மாட்டேன்”, என்று கிழவனை நம்பச் செய்வதற்காக தன் தாய், குருவாயூரப்பன் எவ்லோர் மீதும் சத்தியம் பண்ணிக் கூறும்படியான சூழ்நிலை பிரசாந்திற்கு உண்டானது.

6

வெளியே கல்லும் சிமெண்டும் இறக்கிக் கொண்டிருக்கும் லாரிகள் சத்தம் கேட்க ஆரம்பித்திருந்த நாட்களொன்றில், வீட்டைப் பற்றிய ஒட்டுமொத்தமான வரைபடத்திலிருந்து ஒரு அறையை மட்டும் தனியாகக் சுட்டிக்காட்டியவாறு ஷாநவாஸ்கான் சொன்னார்:

“இந்த அறையை மிகவும் அவசரமாக சுத்தம் பண்ணி வைக்கணும். ஒருவேளை ஒரு விருந்தினர் வர வாய்ப்பு இருக்கு.”

பிரசாந்த் அந்த அறையை மனதில் நினைத்துக் கண்டுபிடித்தான். முன்பக்கம் இருந்த கட்டிடத்தின் வலது பக்க வராந்தாவின் மூலையில் தனியாக இருந்த அறை. அது மற்ற அறைகளிலிருந்து அந்த அறைக்கு நேரடியாகப் போக முடியாது. முன் பகுதியில் அழகான சிறிய சிட்டவுட்டும், பாரப்பெட்டும் இருப்பதை அவன் ஏற்கெனவே பார்த்திருக்கிறான்.

எந்த அளவுக்கு அழகுபடுத்த முடியுமோ, அந்த அளவுக்கு அதை அழகுபடுத்துங்க. மிகவும் உயர்வான அழகுணர்வைக் கொண்ட ஒரு நபர் அங்கு விருந்தாளியாக வரப்போகும் விஷயத்தை மட்டும் ஞாபகத்தில் வைத்துக் கொண்டால் போதும்.

“வரும் நபருக்கு மிகவும் விருப்பமான நிறங்கள் என்னென்ன என்பதைத் தெரிந்து கொண்டால் மேலும் நன்றாக இருக்கும்.

கான் சிறிது நேரம் சிந்தித்தார். அவருடைய கண்களுக்குக் கீழே தெரிந்த திருட்டுத்தனமான சிரிப்பைக் காட்டும் மின்னல் கடந்து போனதை அவன் உணர்ந்தான்.

“காஃபி ப்ரவுன்... க்ரீம்.... மெஜன்டா...” ஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு அவர் தொடர்ந்து சொன்னார்: “எல்லா நிறங்களையும் வரப்போகிற நபருக்கு பிடிக்கும்ன்றதுதான் என்னோட எண்ணம்.”

“வரப்போறது ஆணா பெண்ணா?” 

மிகுந்த தயக்கத்துடன்தான் அந்தக் கேள்வி வெளியிலேயே வந்தது.

கானின் பார்வை ஒரு நிமிடம் பிரசாந்தின் கண்களை நோக்கியே இருந்தது.

“பெண்...” - அவர் ஒரு சிறிய புன்சிரிப்பை வெளிப்படுத்தியவாறு சொன்னார்: “வர்றதா இருந்தா வரப்போவது என் மனைவியாக இருக்கும்.”

அதற்குமேல் எதையும் கேட்பதற்கான தைரியம் பிரசாந்த்திற்கு இல்லை.

குளிரும் குளிர்ச்சியும் நிறைந்திருந்த ஒரு இரவு வேளையில் பம்பாயிலிருந்து சுகன்யாவின் அழைப்பு வந்தது,

“என்ன சார், மறந்துட்டீடங்களா?” சுகன்யா விளையாடினாள். “இல்லாவிட்டால் அங்கே ஆள் யாராச்சும் கிடைச்சிட்டாங்களா?”

இரண்டு பெக் உள்ளே போயும் பிரசாந்த் சிறிய அளவில் சலித்துக் கொண்டான்.

“ஆள் யாரும் கிடைக்கல.”

“பத்து பன்னிரண்டு நாட்களாயிடுச்சே!”

“கேட்டையும் தோட்டத்தையும் உனக்காக தொடாமலே வச்சிருக்கேன்” - பிரசாந்த் சொன்னான்.

“வாழ்க்கை எப்படி போய்க்கிட்டு இருக்கு?”

“அப்படி யொண்ணும் மோசம் இல்ல”

“அழைத்திருக்கும் மனிதர்...?”

“மிகவும் ஸ்டைலான மனிதர்”

“ராம்...?”

“வந்து சேர்ந்தாச்சு!”

“பக்கத்துல ஆள் இருக்கா?”

“இல்ல அவனுடைய அறையில் இருக்கிறான் கூப்படவா?”

“வேண்டாம் பக்கத்துல இருந்தா ரொமான்டிக்கா ரெண்டு வார்த்தைகள் பேசி பையனை ஒரு வழி பண்ணலாம்னு பார்த்தேன். வேறு அறையில் இருப்பதாக இருந்தால் கூப்பிடவே வேண்டாம். சரி... அங்கு கால நிலைமை எப்படி இருக்கு?”

“நீ பிரார்த்திப்பதைப்போல..”

“அப்படின்னா, நான் வரவேண்டாமா?”

அவன் தன்னுடைய குரலில் முடிந்த வரைக்கும் மென்மையும் கம்பீரத்தையும் வரவழைத்துக்கொண்டு சொன்னான்: “கட்டாயம் வேணும். இங்கே பாரு, நான் இப்பவே பாஸுக்கு எழுதப்போறேன்.”

அதைக் கேட்டு கிண்டல் செய்வதைப் போல சுகன்யா விழுந்து விழுந்து சிரித்தாள்.

எப்போதும்போல முகத்தில் அடிப்பது மாதிரி ஒரு வார்த்தையைக் கூறி விட்டுத்தான் சுகன்யா தொலைபேசியைக் கீழே வைத்தாள்.

“கேட்டையும் தோட்டத்தையும் மட்டும் யாரும் தொடாமல் பத்திரமா பார்த்துக்கணும். நான் வந்து அந்த இடம் முழுவதும் மலர்களை மலரச் செய்கிறேன்.”

அவளை இவ்வளவு நட்களாக ஒருநாள் கூட அழைக்காமல் இருந்ததற்காக அவன் வருத்தப்பட்டான். அவளும் வந்து சேர்ந்தால், அந்த வீடும், அதைச் சுற்றியிருக்கும் இடங்களும் புத்துணர்ச்சியுடன் இருக்கும் என்பது மட்டும் உண்மை. எக்ஸ்டீரியர் - லேண்ட்ஸ்கேப் டிசைனிங்கில் அவளை வெல்வதற்கு இப்போது இந்தியாவில் அப்படியொன்றும் அதிகமான ஆட்கள் இல்லை. ‘கொலம்ப’ஸில் அவள் இவ்வளவு காலம் நீடித்து நிற்பதே, பலரும் ஆச்சரியப்படக்கூடிய ஒரு விஷயமாகத்தான் இருக்கிறது. உலகத்தின் மிகப்பெரிய நகரங்கள் பலவற்றிலும் பணி செய்திருக்கும் அவள் ஒரு இடத்தில்கூட ஆறு மாதகாலம் நிரந்தரமாக இருந்ததில்லை என்பதுதான் அவன் கேள்விப்பட்ட விஷயம். அவளை இங்கே நிரந்தரமாக இருக்கும் படி செய்திருப்பதே பிரசாந்த்தான் என்கிறார் அவர்களின் பாஸ்.

அது உண்மைதானா என்பதை பற்றி பிரசாந்த் இதுவரையில் நினைத்துப் பார்த்ததில்லை. அவளும் அப்படி சிந்தித்துப் பார்த்திருக்க மாட்டாள். ஆழமான காதல் எதுவும் தங்களுக்கிடையே இல்லை இருவருக்குமே தெரியும். இடையில் சில நேரங்களில் அதை ஒருவரோடோருவர் கூறி உறுதிப்படுத்திக் கொள்வதும் உண்டு. கடை வீதியில் இருக்கும் சுர்ஜித் என்ற  முரட்டுத்தனம் கொண்ட இளைஞனுடன் தான் ஒரு நாளை ‘சன் அண்ட் வேவ்’ஸில் செலவழித்த விஷயத்தை அவள்தான் பிரசாந்திடம் சொன்னாள். இப்படிப்பட்ட விஷயங்களைக் கூறும்போது, ‘நான் அப்படிப்பட்டவள்தான். முடியும்னா என்னை சகித்துக் கொண்டு போங்க’ என்றொரு போக்கு அவளுடைய வார்த்தைகளில் மறைந்து இருப்பதை அவன் நினைத்துப் பார்த்தான்.

போவதற்கு முன்னால் சுகன்யாவை கட்டாயம் வரும்படி செய்ய வேண்டும் என்று அவன் முடிவெடுத்தான். பழைய மகாராஜா, தேவதாசிக்குப் பரிசாகத்  தந்த அரண்மனையில் இருக்கும் பாரில் அழைத்துக்கொண்டு போய் உட்கார வைத்து அவளை போதையில் மிதக்கச் செய்ய வேண்டும் என்று அவன் நினைத்தான்.

 

திருமதி கானின் அறைக்கு அப்படியொன்றும் தனிப்பட்ட முறையில் எதுவும் செய்ய வேண்டிய அவசியம் உண்டாகவில்லை. அழுக்கையும் சிலந்தி வலைகளையும் அடித்து சுத்தமாக்கி, இரண்டு முறை தூசியைப் பெருக்கி, ஒருமுறை வெப்பக் காற்றை உள்ளே செலுத்தியவுடன் அறை சுத்தமாகிவிட்டது. சுவருக்கும் குளியலறையின் தரைக்கும் சிட் அவுட்டிற்கும் கொஞ்சம் சிமெண்ட் பூச வேன்டிய அவசியம் இருந்தது. புதிய பெயிண்டும் சாளரத் திரைச்சீலைகளும் தரை விரிப்பும் வந்து சேர்ந்தவுடன்  அந்த அறை வேறு ஏதோ ஒரு வீட்டில் இருக்கும் அறையைப்போலத் தோன்றியது.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel