
"என்னால் இதை மட்டும் நம்ப முடியவில்லை. என்னுடைய தந்தையும் தாயும் எந்த அளவிற்கு இனிமையாக வாழ்ந்தார்கள்! என் தந்தை என் தாயை ஏமாற்றினார் என்பதை நான் எப்படி நம்புவேன்?"- நான் கேட்டேன்.
"நான் அந்தக் கடிதத்தை பத்திரமாக வைத்திருக்கிறேன். வேண்டுமென்றால் நீ வாசிப்பதற்காக நான் அதனுடைய பிரதியை எடுத்து அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கிறேன். நீ என்னுடைய சகோதரி என்ற விஷயத்தைத் தெரிந்து கொண்ட பிறகும் என்னால் என்னையே கட்டுப்படுத்த முடியவில்லை. நான் உன்னை அந்த அளவிற்கு விரும்பினேன் ஷீலா! உன்னிடம் தோன்றிய அன்பு எனக்கு வேறு யாரிடமும் தோன்றவில்லை. என்னுடைய இரண்டாவது கணவர் ஒரு நல்ல மனம் கொண்டவராக இருந்தார். என்னை மனைவியாக அடைந்தபோது தனக்கு கோஹினூர் வைரமே கிடைத்து விட்டது என்ற எண்ணம் அவருக்கு உண்டானது. வசதியான வாழ்க்கை வாழ அவர் எனக்குக் கற்றுத் தந்தார். எல்லா வகைப்பட்ட சுகங்களும் எனக்குக் கிடைத்தன. ஆனால், எந்தச் சமயத்திலும் பசியென்ற ஒன்றுக்கான வாய்ப்பே தரப்படாமல் வாழ நேர்ந்தது குறித்து நான் கவலைப்பட்டேன். பசி இல்லையென்றால் ருசி எப்படி நீடித்திருக்கும்? இறுதியில் அவர் இறந்தபோது, மீண்டும் நான் சுதந்திரமானவளாக ஆனேன். என்னுடைய கவலைகளை நோக்கி நீண்ட பயணங்களை மேற்கொள்ள எனக்கு சுதந்திரம் கிடைத்தது. எனக்கு அழுவதற்கு விருப்பம் உண்டானது. முன்பு செய்ததைப் போல தலையில் அடித்துக் கொண்டு அழ வேண்டும் போல இருந்தது. பக்குவத்தை வீசி எறிந்து விட்டு, மீண்டும் நீ அறிந்திருந்த கல்யாணிக்குட்டியாக ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். நீ என்னை 'போ பெண்ணே' என்று கூறி மீண்டும் திட்டுவாய் என்று ஆசைப்பட்டேன். இளம் வயது காலத்தின் கள்ளங்கபடமற்ற தன்மையை நோக்கித் திரும்பச் செல்ல வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன்."
கல்யாணிக்குட்டி தன்னுடைய கன்னங்களை உள்ளங்கைகளில் வைத்துக் கொண்டு என்னைப் பார்த்தாள். அவளுடைய கண்களுக்கு ஆழம் அதிகரித்து விட்டிருப்பதைப் போல் நான் உணர்ந்தேன்.
"நீ அம்மிணியை உன்னுடன் அழைத்துக் கொண்டு போகப் போவதாகச் சொன்னாயே!"- நான் கேட்டேன்.
"அம்மிணியை அழைத்துக் கொண்டு போக நினைத்தேன். ஆனால், அவளுடைய பயணத்தை உறுதி செய்தபோது, அவளுடைய தாய் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தாள். சுதாகரன் அந்த விஷயத்தைச் சொன்னபோது, நானே அம்மிணியின் பயணத்தை நிறுத்தி விட்டேன்"- கல்யாணிக்குட்டி சொன்னாள்.
"எனக்கு எதுவும் தெரியாது."
"உனக்கு எதுவும் தெரியாது. உன்னுடைய கணவர் உன்னை ஏமாற்றுவதும் உனக்குத் தெரியாது. நீ நடந்து கொண்டிருக்கும் பிணம் மட்டுமே ஷீலா..."
"சரிதான்... நான் உயிருடன் இருப்பதாக எல்லோரும் சொல்றாங்க. காரணம்- என்னுடைய பெயர் இதுவரை செய்தித்தாள்களில் மரண அறிவிப்பில் வந்தது இல்லை. விருந்தாளிகள் வர்றப்போ இப்போதும் நான் என்னுடைய முன் கதவைத் திறக்கிறேன். அதனால், நான் இதுவரையில் இறக்கவில்லை என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும்"- நான் சொன்னேன்.
கல்யாணிக்குட்டி எழுந்து நின்றாள். அவள் மீண்டும் முன்பு செய்ததைப் போல என்னை முத்தமிடுவாள் என்று நான் எதிர்பார்த்தேன். ஆனால், அவள் புன்னகைக்க மட்டுமே செய்தாள்.
"சுவாரசியமான ஒரு ஓய்வுக்காலம் முடிந்து நான் செல்கிறேன். எல்லாவற்றிற்கும் நன்றி. மீண்டும் எப்போதாவது பார்ப்போம்."
அவள் தன்னுடைய நீளமில்லாத தலை முடியை அசைத்தவாறு நடந்து போவதைப் பார்த்தவாறு நான் ஒரு சிலையைப் போல எந்தவித அசைவும் இல்லாமல் நின்றிருந்தேன். இறுதியில் அவள் இல்லாமல் போனபோது இழப்பு உணர்வுடன் நான் விமான நிலையத்திற்கு வெளியே நடந்தேன். என்னுடைய கால்கள் சோர்வு காரணமாக தளர்வதைப் போல் உணர்ந்தேன். என்னுடைய வீடும் அதில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அழகான பொருட்களும் என்னுடைய கிழட்டுக் கணவரும் என்னுடைய நோயாளிகளும்- எல்லாம் அடங்கியிருக்கும் அந்தப் பழக்கமான உலகத்தை நோக்கி மீண்டும் செல்வதற்கு எனக்கு மனமில்லாமல் இருந்தது. ஆனால், எனக்கு வாழ்வதற்கு வேறு ஒரு இடம் இல்லையே! நான் எனக்குள் கூறிக் கொண்டேன். என் மீது அன்பு செலுத்த இனி யாரும் இல்லையே...
நான் என்னுடைய கணவருடன் சேர்ந்து சுதாகரனின் வீட்டை அடைந்தபோது, அங்கு அம்மிணி மட்டுமே இருந்தாள்.
"அம்மாவை நாளைக்கு வீட்டுக்குக் கொண்டு வருவாங்க"- அவள் சொன்னாள்.
"மயக்கம் தெளிஞ்சிருச்சா?"
"ம்..."
மருத்துவமனைக்குத் திரும்பிச் செல்வதற்கு முன்னால் ஐந்தோ பத்தோ நிமிடங்கள் அங்கு ஓய்வெடுகக நான் விரும்பினேன். என்னுடைய தோள்கள் வலிப்பதைப் போல் எனக்குத் தோன்றியது.
"அம்மிணி, நீ ஏன் இப்போதும் அழுது கொண்டிருக்கிறாய்? உன்னுடைய தாய் மரணத்திலிருந்து தப்பித்து விட்டாளே!"- நான் அவளிடம் கேட்டேன்.
அவள் தன்னுடைய கையால் கண்ணீரைத் துடைத்தாள்.
"நான் என் தாயை வெறுக்கிறேன். என்னுடைய வாழ்க்கையையும் என் தந்தையின் வாழ்க்கையையும் அவங்க நாசமாக்கிட்டாங்க"- அம்மிணி சொன்னாள்.
அதைக் கேட்டு நான் பதைபதைத்துப் போய்விட்டேன். அவளுக்கு சுய உணர்வு இல்லாமல் போய்விட்டதோ என்று நான் சந்தேகப்பட்டேன். எப்போதும் அமைதியாகக் காட்சியளிக்கும் அந்த இளம் பெண்ணுக்கு என்ன ஆனது? நான் அவளை வாரி அணைத்துக் கொண்டேன்.
"என்ன காரணத்தால் நீ உன்னுடைய சொந்தத் தாயை இப்போ இந்த அளவிற்கு வெறுக்கிறாய்? பாவம்... அவள் உங்க இரண்டு பேரையும்... கல்வி எதுவும் இல்லை என்றாலும்... உங்களை உயிருக்குயிரா நேசிக்கிறாள்... அவளை நீ எந்தச் சமயத்திலும் வெறுக்கக்கூடாது. சுதாகரனுக்காக மட்டுமே அவள் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்."
"அவள் உயிருடன் இருக்கும் வரை நானும் என் அப்பாவும் சுதந்திரமானவர்களாக இருக்க முடியாது. எனக்கு ஆஸ்திரேலியாவிற்குச் செல்வதற்கும் அங்கு நல்ல வசதிகள் கொண்ட ஒரு வாழ்க்கையை வாழ்வதற்கும் வாய்ப்பு கிடைத்தபோது, அவள் அதைத் தடுக்க எவ்வளவோ முயற்சித்தாள். அவளுடைய முக்கிய ஆயுதமே கண்ணீர் தான். கண்ணீர் வழிந்து கொண்டிருக்கும் அந்த முகத்தை நான் எத்தனை தடவை கண்டு கொண்டிருக்கிறேன்! கண் விழித்திருக்கும்போதுகூட வந்து சேரும் ஒரு கெட்ட கனவைப் போல அநத் முகம் இருக்கிறது. அது என்னுடைய ஆசைகளைக் கெடுக்கிறது. அதைப் பார்த்துக் கொண்டுதான் நான் வளர்ந்தேன். என்னுடைய தந்தைக்கும் வாழ்க்கையில் எந்தச் சமயத்திலும் சந்தோஷம் கிடைத்தது இல்லை. அவர் வாய்விட்டு சிரிப்பதைக்கூட நான் பார்த்தது இல்லை. காரணம்- அவருடைய சிரிப்பு என் தாய்க்குப் பிடிக்காது. 'இன்னைக்கு சந்தோஷத்தின் அடையாளம் முகத்தில் தெரிகிறதே!' என்று என் தாய் என் தந்தையிடம் மிடுக்கான குரலில் கேட்பதை நான் கேட்டிருக்கிறேன்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook