
குளக்கரையில் தலைமுடியை அவிழ்த்து விட்டுட்டு ஈர உடையுடன் நின்று கொண்டிருக்கிற இளம் பெண்களும், முழுக்க முழுக்க கேரளத்தின் மணம் கமழ்கிற உருவங்களும் ஓவியங்களும் என்ன காரணத்தால் உன் மனதில் வலம் வரவில்லை கோவிந்தா?”
கோவிந்தன்: எதற்கு அப்படி என் மனதில் தோன்றணும்ன்ற இன்னொரு கேள்வியைத்தான் நான் உங்களைப் பார்த்துக் கேட்கிறேன்.
இளைஞனான கோவிந்தனின் வாழ்க்கை முறைகளுடன் ஒத்துப்போவதென்பது பாலகிருஷ்ணன் உட்பட்ட அவரின் சில நண்பர்களுக்கு இயலாத ஒரு காரியமாக இருந்தது. அவரின் சமவயது கொண்ட அந்த இளைஞர்கள் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களிலும் அதைப்போலுள்ள பிற நிறுவனங்களிலும் டைப்பிஸ்டுகளாகவோ க்ளார்க்குகளாகவோ வேலை செய்து தங்களின் உழைப்பையும் அறிவையும் பயன்படுத்தி தங்களுக்கு மேல் உள்ள அதிகாரிகள் திருப்தியடையும்படி செய்து தங்கள் பணிகளில் பதவி உயர்வு பெற்றார்கள். உணவு விடுதிகளில் உணவு சாப்பிட்டால் செலவு அதிகமாகுமென்பதால் அலுவலகங்களிலிருந்து திரும்பி வந்தவுடன் சமையலறைக்குள் நுழைந்து அவர்களே சமையல் செய்ய ஆரம்பித்து விடுவார்கள். தினந்தோறும் அதிகாலையில் எழுந்து காலை உணவையும் சமையல் பண்ண ஆரம்பிப்பார்கள். அதற்குப் பிறகு அழகாகத் தேய்த்த டெர்லின் சட்டையும் மிகவும் இறுக்கமாக இருக்கும் பேன்ட்டையும் பாலிஷ் போட்டு பளபளப்பாக்கிய முனை கூர்மையாக இருக்கும் காலணிகளையும் அணிந்து அலுவலகத்திற்குப் போவார்கள். இப்படியே சில வருடங்கள் வாழ்ந்த பிறகு அவர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குப் போய் தலை முழுவதும் தேங்காய் எண்ணெயைத் தேய்த்துக் கொண்டு நடக்கும் ஒரு இளம் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு திரும்பி வருவார்கள். முதல் குழந்தை பிறக்கும்போது ஓவர் டைம் வேலை செய்து பணம் சம்பாதித்து அவர்கள் டில்லி டெவலப்மெண்ட் அத்தாரிட்டியின் ஒரு ஃப்ளாட்டை புக் செய்வார்கள். முதல் குழந்தைக்கு பத்து வயது ஆகும்போது அவர்கள் நகரத்தின் எல்லையில் கொசுக்களும் ஈக்களும் நிறைந்திருக்கும் இடத்தில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் கான்க்ரீட்டால் ஆன வீடுகளில் ஒரு ஃப்ளாட்டுக்குச் சொந்தக்காரர்களாக ஆவார்கள். டில்லியில் வசிக்கும் மத்தியதர வாழ்க்கை நடத்தும் மக்களின் லட்சியமே ஒரு டி.டி.ஏ. ஃப்ளாட்தான். அதோடு அவர்களின் மீசையும் காதுகளுக்கு மேலே தலைமுடியும் நரைக்கத் தொடங்கி விடும். அவர்கள் குறிப்பிட்ட வயது வருவதற்கு முன்பே கிழவர்களாக மாறி விட்டிருப்பார்கள்.
கோவிந்தனின் நண்பனான பாலகிருஷ்ணனுக்கும் அதுதான் நடந்தது.
கோவிந்தன் அவருடைய பஞ்சாபி தோழியைத் திருமணம் செய்யவில்லையென்பதை நாம் சொல்ல வேண்டிய அவசியமில்லையே! அவருக்கு டில்லியில் சொந்தமாக ஃப்ளாட் எதுவும் இல்லை. சொந்த ஊருக்குத் திரும்பிப் போகலாமென்று தீர்மானித்தபோது அவர் நகரத்தில் முழுக்க முழுக்க ஒரு தனிமையான மனிதனாகவும் ஆதரவு என்று யாருமில்லாத மனிதனாகவும் மாறிவிட்டிருந்தார். அதே நாட்களில் மீசைக்கு சாயம் பூசி அதைக் கறுப்பாகத் தோன்ற வைத்த பாலகிருஷ்ணன் தன்னுடைய மனைவியையும் பெரிதாக வளர்த்த குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு தமாஷாகப் பேசிக் கொண்டும் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டும் நகரத்தின் தெரு வழியாக ஸ்கூட்டரில் பயணம் செய்து கொண்டிருப்பதை கோவிந்தன் பார்த்தார். மத்திய தர வர்க்கங்களின் வாழ்க்கை முறைகளிலிருந்தும் விருப்பங்களிலிருந்தும் இலட்சியங்களிலிருந்தும் விலகி நடந்ததற்காக தனக்குக் கிடைத்த தண்டனைதான் இந்தத் தனிமையான வாழ்க்கையோ என்று அந்த நாட்களில் மத்திய வயதில் இருக்கும் கோவிந்தன் தன்னைத்தானே கேட்டுக் கொள்வார்.
நாம் இனி தன்னுடைய பெரிய ரெக்ஸின் பெட்டியைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு புகைவண்டி நிலையத்தில் தன்னந்தனி மனிதனாக நின்று கொண்டிருக்கும் வயதான கோவிந்தனின் அருகில் செல்வோம்.
இளைஞனான கோவிந்தனுக்கும் ருஸ்ஸி என்ற வினோதமான பெயரைக் கொண்ட இளம்பெண்ணுக்குமிடையே இருந்த உறவு நாளுக்கு நாள் மெருகேறிக் கொண்டேயிருந்தது. விடுமுறை நாட்களில் பதினெட்டு மணி நேரம் அவர்கள் ஒன்றாக இருந்து பொழுதைக் கழிப்பார்கள். உறங்கப்போகும் நேரத்தில் மட்டுமே அவர்கள் ஒருவரையொருவர் பிரிந்திருப்பார்கள். ஒன்றாகச் சேர்ந்து அவர்கள் பயணம் செய்த நாட்களில் தூக்கத்தில்கூட அவர்கள் பிரிந்ததில்லை. இருந்தாலும் அவர்களைக் காதலன்- காதலி என்றழைக்க நம்மால் முடியாது. அப்படி அழைத்தால் நாம் அவர்களைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம். காதல் என்ற வார்த்தை கொண்டு நாம் அவர்கள் இருவருக்குமிடையே இருக்கும் உறவைக் கணக்கிட்டால், அவர்களின் ஆழமானதும், முழுமையானதுமான மன ரீதியான உறவை மிகவும் சாதாரணமாக எடைபோட்டு விட்டோம் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அவர்கள் இருவரும் நிலவையும் மலர்களையும் விரும்பவில்லை. இரவு நேரங்களில் தன்னுடைய ஜோடியைத் தேடிப்போகும் காதலர்களுக்கு வெளிச்சம் தருகிற ஒரு விளக்காகத்தான் அவர் நிலவைப் பார்த்தார். நிலவின் முகத்தில் தழும்புகளும் புள்ளிகளும் இருப்பதைப் பார்த்து அவள் மனதில் மிகவும் கவலை கொண்டாள். எந்தக் காரணத்தால் நிலவு தன்னுடைய முகத்தை இன்னும் ‘ப்ளிச்’ செய்யாமல் இருக்கிறது என்று அவள் தன்னைப் பார்த்துக் கேட்டுக் கொள்வாள். ஆகாயத்தில் ப்யூட்டி பார்லர்கள் இல்லாமலிருப்பதன் காரணமாக இருக்கலாம் என்று அவர் கூறுவார். எது எப்படியோ, நிலவிற்கு ஒரு விலை மாதுவின் முகம் இருப்பதென்னவோ உண்மை.
ஆக்ரா மிகவும் அருகில்தான் இருக்கிறது என்றாலும் அவர்கள் இதுவரை தாஜ்மஹாலைப் பார்த்ததில்லை. ஏராளமான பூந்தோட்டங்கள் இருந்தாலும் அவர்கள் அங்கு போய் உட்காரவில்லை. சுருக்கமாகச் சொல்லப்போனால் காதலர்களின் உணர்ச்சிகளின் வெளிப்பாட்டையோ குறும்புத்தனங்களையோ அவர்கள் எந்தச் சமயத்திலும் வெளிப்படுத்திக் கொண்டதில்லை.
அவர்: விபச்சாரம் நடக்கும் தெருவில்தான் நாம சந்திச்சோம் சிதிலமடைந்து போன வீடுகளின் மேற்பகுதியில் விபச்சாரிகள் அழகா ஆடைகள் அணிந்து நின்னுக்கிட்டு இருக்கிறதை நான் கீழே நடைபாதையில் ஒரு சிகரெட்டைப் பிடிச்சிக்கிட்டு பார்த்துக்கிட்டிருந்தேன். கிராமத்திலிருந்து வந்த ஒரு பணக்கார விவசாயி சைக்கிள் ரிக்ஷாவுல வந்து இறங்கினப்போ விபச்சாரிகள் கிளிகளைப் போல சலசலத்தார்கள். விபச்சாரிகள் தங்களின் நடவடிக்கைகள் மூலமும், எந்தச் சமயமும் நிறைவேறவே முடியாத தங்களின் கனவுகள் மூலமும், பரிதாபமான மரணங்கள் மூலமும் நம்ம வாழ்க்கையில் அர்த்தமுள்ள ஒரு சலனத்தை உண்டாக்குறாங்கன்றது என்னவோ உண்மை.
அவள்: நான் எதற்காக விலை மாதர்கள் இருக்கும் அந்தத் தெருவிற்குப் போனேன்றதைப் பற்றி நீங்க ஒருநாள் கூட என்னைப் பார்த்துக் கேட்டது இல்ல. நல்ல பெண்கள் அந்தத் தெரு இருக்கிற பக்கமே போக மாட்டாங்க. இருந்தாலும் ஒரு பிராமண குடும்பத்துல பிறந்த நான் எதற்காக ஜி.பி.ரோட்டுக்குப் போனேன் என்பதைத் தெரிஞ்சுக்கணும்ன்ற ஆர்வம்கூட உங்களுக்கு எப்பவும் இருந்தது இல்ல.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook