
"உங்க அம்மா வரட்டும். உங்களோட வண்டவாளத்தைத் தண்டவாளத்துல ஏத்தறேன்..."
"நீ என்னை தண்டவாளத்துல ஏத்துனா, நான் ஹெலிகாப்டர்ல பறப்பேன்டி. நீயும், அந்த ப்ரவீன் பயலும் படுக்கையறையில படுத்துக் கிடந்ததை என் கண்ணால பார்த்தேம்மான்னு அம்மா கிட்ட ஒரு ரீல் விட்டு நீலிக்கண்ணீர் வடிப்பேன். உன்னை மருமகளேன்னு முத்தம் கொடுக்க மாட்டாங்க. உன் மூஞ்சியில காறித் துப்புவாங்க. நான் எதுக்கும் துணிஞ்சவன். நான் வீரமான ஆம்பளை. நீ சோரம் போன பொம்பளை..."
"நெஞ்சில ஈரமே இல்லாத நீங்கள்லாம் ஒரு மனுஷன். உங்க பேச்சே காட்டிக் குடுத்துருச்சு. வெட்ட வெளிச்சமாயிடுச்சு. நீங்க ஒரு சைக்கோன்னு. முதல்ல ஒரு சைக்யாட்ரிஸ்ட்டைப் போய் பாருங்க."
"ஓகோ.. என்னை பைத்தியக்காரன்னு முத்திரை குத்திட்டு உனக்குப் பிடிச்சமானவனோட கூடி குலாவப் போறியாக்கும்?"
"உங்க பைத்தியத்துக்கு வைத்தியம் பாருங்கன்னுதான் சொல்றேன்..."
"நீ என்ன சொல்றது? நான் என்ன கேக்கறது, 'நீ, எனக்கு பைத்தியக்காரப் பட்டம் குடுக்கற’ன்னு உங்கப்பாகிட்ட இப்பவே சொல்றேன்..."
அதிர்ச்சி அடைந்தாள் அர்ச்சனா. 'ஐய்யோ இவர் பாட்டுக்கு அப்பாகிட்ட ஏதாவது தப்பா பேசிட்டார்ன்னா அப்பா மனசு துடிச்சுப் போய் அந்த வேதனையிலயே அவரோட உயிரும் துடிக்க துடிக்கப் போயிடுமே’ சட்டென்று தன் கோபமான குரலை மாற்றிக் கொண்டாள்.
'கடவுளே, எங்க அப்பாவுக்காக இந்த ஈவு இரக்கமே இல்லாத பாவி கிட்ட தணிஞ்சு, பணிஞ்சு போக வேண்டி இருக்கே. எனக்கு ஏன் இப்படி சோதனை’ அர்ச்சனாவின் மனக்குரல் ஒலித்தது. அவளது நெஞ்சம் வலித்தது.
குரலின் தொனியை மாற்றிக் கொண்ட அர்ச்சனா கனிவாய் பேசினாள். பேசுவது போல நடித்தாள்.
"என்னங்க... உங்களை பைத்தியம்னு சொல்லி எனக்கு என்ன ஆகப் போகுது? நான் உங்க மனைவி. காலம் முழுசும் உங்க கூடவே கூடி வாழப் போறவ. நீங்க நல்லா இருந்தாத்தான் நான் நல்லா இருப்பேன். உங்க மனசு... ம... மனநிலை சரியில்லையோன்னுதான் டாக்டரைப் பார்க்கலாம்னு அன்னிக்கும் சொன்னேன். இப்பவும் சொல்றேன். நீங்க சரியாத்தான் இருக்கீங்கன்னா ஓ.கே. என்னை நம்புங்க. என் மனசுல எந்தக் களங்கமும் இல்லை. நீங்க என்னைப் புரிஞ்சுக்கணும். நமக்கு இடையில வேற யாரும் குறுக்க வர வேண்டியதில்ல. அது எங்கப்பாவே ஆனாலும் கூட. இன்னொரு விஷயம்... எங்க அப்பா ஹார்ட் பேஷண்ட்ன்னு உங்களுக்குத் தெரியும். அவருக்கு நம்பளோட சண்டை, சச்சரவு, தகராறெல்லாம் தெரிஞ்சதுன்னா மாரடைப்புல மேல போயிடுவாரு. நான் எங்கப்பா மேல உயிரையே வச்சிருக்கேன். அம்மா இல்லாத என்னை அந்தக் குறை தெரியாம வளர்க்கறதுக்கு பாடுபட்டார். இள வயசுலயே மனைவியை இழந்த அவர் மறு கல்யாணம் கூட பண்ணிக்காம எனக்காக தன் வாழ்வையே தியாகம் பண்ணி இருக்கார். இதெல்லாம் எதுக்காக? நான் நல்லபடியா சந்தோஷமா, நிறைவான வாழ்க்கை வாழணும்’ன்னுதான். நான் ரொம்ப சந்தோஷமா இருக்கறதா அவர் கிட்ட சொல்லி இருக்கேன். என்னோட வாழ்க்கை சந்தோஷமா இருக்கறதா அப்பா நினைச்சிக்கிட்டிருக்கார். அந்த பொய் வேஷத்தை தயவு செய்து கலைச்சுடாதீங்க. மறுபடியும் சொல்றேன். நான் சுத்தமானவ. கல்லூரி நாட்கள்ல சக மாணவர்கள் கூட சகஜமா பழகி இருக்கேன். ஆனா அதெல்லாம் ஒரு மரியாதையான நட்பு ரீதியான பழக்கம்தான். ப்ளீஸ் என்னை நம்புங்க. அப்பாகிட்ட நான் ஆடற நாடகம் உண்மையாவே என்னோட வாழ்க்கையா மாறினா அதைப் போல ஒரு சந்தோஷம் வேற எதுவும் இருக்காதுங்க.. அப்பாவுக்காக கூட இல்லாட்டாலும் எனக்காக நீங்க மாறுங்க. என் கிட்ட பத்து மடங்கு பிரியம் காட்டினீங்கன்னா, நான் பதிலுக்கு நூறு மடங்கு பிரியம் வச்சுடுவேன், உங்க மேல. எனக்கு புடவை வேணும் நகை வேணும்னு கேக்கலைங்க. அன்பு. புருஷன்கிட்ட ஒரு பொண்ணு எதிர்பார்க்கற உள்ளன்பைத்தான்ங்க நான் உங்க கிட்ட கேக்கறேன். அன்பை யாருமே யாசகம் கேட்டு பெற மாட்டாங்க. ஆனா ஊரறிய உலகறிய தாலி கட்டின என் புருஷன் உங்ககிட்ட அன்பை யாசகமாக் கேட்டாவது அடையறதுல எனக்கு எந்த கௌரவக் குறைச்சலும் இல்லை. இத்தனை வருஷம் அப்பாவுக்கு பொண்ணா வளர்ந்துட்டேன். இனிமேல உங்க மனைவியா, நீங்கதான் உலகம்னு வாழணும். அதுக்கு ஒரு பாலம் அமையணும். அந்தப் பாலம் உங்க அன்பினால அமையணும். நீங்கதான் எனக்கு எல்லாமே. உங்க வீட்டு மருமகளா அழைச்சுட்டு வந்து இடம் குடுத்திருக்கீங்க. உங்க குடும்பத்துல ஒருத்தியா இந்த வீட்ல இடம் குடுத்திருக்கீங்க. என் கழுத்தில தாலி கட்டி உங்க மனைவிங்கற இடத்தை குடுத்திருக்கீங்க. அதே மாதிரி உங்க மனசுலயும் எனக்குன்னு ஒரு இடம் குடுத்தீங்கன்னா என் வாழ்வு மனம் நிறைஞ்ச வாழ்வா இருக்கும். ப்ளீஸ்..... புரிஞ்சுக்கோங்க......" நடிப்பாக பேச ஆரம்பித்தவள், உண்மையாகவே உள்ளத்திலிருந்து உதிர்த்தாள் தன் எண்ணங்களை.
அவள் பேசுவதையெல்லாம் காது கொடுத்து கேட்பது போல் தோற்றமளித்த தியாகுவின் மனது? 'அப்பா கிட்ட சொன்னா அப்பாவோட உயிருக்கு ஆபத்தா? அதுக்காகத்தான் உச்சாணிக் கொம்புல ஏறி பேசியவ தடார்ன்னு தரை இறங்கி வந்து தணிஞ்சு பேசறாளா? தியாகு, துருப்புச் சீட்டு கிடைச்சுதுடா உனக்கு’ அர்ச்சனாவை மேலும் தன் வயப்படுத்தும், தன் ஆளுமைக்கு உட்படுத்தும் அம்பு ஒன்று, அர்ச்சனா, அவளது அப்பா மீது வைத்திருக்கும் அன்பு ரூபத்தில் கிடைத்ததை எண்ணி இறுமாப்பு கொண்டான்.
அவனது இறுமாப்புக்கு இறுதிச் சடங்கு நடக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை அப்போது தியாகு அறியவில்லை.
பெங்களூரில் உள்ள தனது உயர் அதிகாரியை அவனது மொபைல் போனில் அழைத்தான் ப்ரவீன்.
"ஹலோ மனோ ஸார்... நான் ப்ரவீன். சென்னையில இருந்து பேசறேன். இன்னும் ஒரு வாரத்துக்கு லீவு வேணும் ஸார்..."
"என்ன ப்ரவீன் இது? உங்களோட ஸ்மார்ட்னெஸை பார்த்துத்தான் எடுத்த எடுப்பிலேயே அதிகமான ஸாலரிக்கு உங்களை அப்பாயிண்ட் பண்ணினேன். நீங்க இப்பிடி லீவு போடறீங்க?..."
"ஸாரி ஸார்... என்னோட க்ளோஸ் ஃப்ரெண்டுக்கு ஃபேமிலியில கொஞ்சம் பிரச்னை. கண்டிப்பா நான் இங்கே இருந்தே ஆகணும் ஸார். ப்ளீஸ் ஸார்..."
"ஓ.கே. ப்ரவீன்... முடிஞ்ச அளவுக்கு சீக்கிரமா வரப்பாருங்க. இதுக்கு மேல லீவை எக்ஸ்டென் பண்ணீங்கன்னா உங்க வேலைக்கு நான் உத்தரவாதம் கிடையாது... ஸோ.. சீக்கிரமா வரப்பாருங்க."
"ஓ.கே. ஸார். தாங்க்யூ."
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook