
அவள் கண்ணீர் விட்டவாறு அதையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள். கோழிகள் கூடைக்குள்ளிருந்து தலையை முட்டிக்கொண்டு அவளையே பார்த்துக்கொண்டிருந்தன. மத்தாயி மாப்பிள்ளை சிறிது சிறிதாக நடந்து, அவளுடைய பார்வையிலிருந்து மறைந்தார். அவளுடைய ஆசைகளின் ஊற்றுக் கண்கள் வற்றிப் போய்விட்டன.
"என் ஓச்சிற கடவுளே!'' அவளுடைய தலை சுற்றியது. அவள் அதே இடத்தில் உட்கார்ந்து விட்டாள்.
கோபாலனின் நோய் குணமாகி, கொஞ்சம் கொஞ்சமாக திண்ணையிலும்... பிறகு... வாசலிலும் இறங்கி நடக்கலாம் என்ற நிலை அவனுக்கு உண்டானது.
கல்யாணி கூறினாள்: "செத்து உயிருடன் வந்தவராச்சே! என்னிடம் இருக்கும் அனைத்தும் முடிஞ்சாலும், எனக்கு இவர் கிடைச்சிட்டாரே!''
மிதுன மாதம் முதல் தேதி. அன்று ஓச்சிற திருவிழா ஆரம்பமாகும் நாள். பொழுது விடிவதற்கு முன்பே ஆட்கள் ஓச்சிறக்குச் செல்ல ஆரம்பித்தார்கள்.
கல்யாணி காலையிலேயே எழுந்து வாசலுக்கு வந்தாள். நங்ஙேலி கிழவியும் அவளுடைய மகளும் மகளின் பிள்ளைகளும் சேர்ந்து ஓச்சிறக்குப் போய்க் கொண்டிருந்தார்கள். நங்ஙேலி கிழவி கேட்டாள்: "கல்யாணி, நீ வரலையாடீ?''
கல்யாணியின் கண்கள் நிறைந்து விட்டன. துக்கம் அவளை ஊமையாக்கியது. அவள் எதுவும் கூறவில்லை.
தெற்குப் பக்க வீட்டு மாதவியும் அவளுடைய அம்மாவும் அக்காவின் கணவரும் பிள்ளைகளும் ஓச்சிறக்குச் செல்வதற்காக வந்து கொண்டிருந்தார்கள். "நாங்க போயிட்டு வரட்டுமா?'' மாதவி உரத்த குரலில் கேட்டாள்.
"ம்...'' கல்யாணி மெதுவாக முனகினாள். உதயமாகிக் கொண்டிருந்த சூரியனின் ஒளிக் கதிர்கள் பட்டு, அவளுடைய கண்ணீர்த் துளிகள் மின்னிப் பிரகாசித்துக் கொண்டிருந்தன.
நாணி வந்து கொண்டிருந்தாள். அவள் கல்யாணியைப் பார்த்ததும் சற்று நெளிந்து கொண்டே, கேவலமான ஒரு பார்வையைப் பார்த்தாள். கல்யாணியால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவள் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள்.
நாணி சிறிது தூரம் நடந்துவிட்டு, மீண்டும் திரும்பிப் பார்த்தாள்.
"பார்த்தேன்டீ... பார்த்தேன்...'' கல்யாணி பற்களைக் கடித்துக் கொண்டே முணுமுணுத்தாள்.
நாணி மீண்டும் திரும்பிப் பார்த்தாள். வெறுப்பு கலந்த ஒரு சிரிப்பு!
கல்யாணி காறித் துப்பினாள்: "ஓச்சிற கடவுள்னு ஒருத்தர் இருந்தால், அடுத்த வருடம் நானும் வருவேன்டீ...''
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook