
இளைஞர்களான மூத்தவ்யவும் முச்சுன்காவும் அவளுக்காக நடனம் ஆடிக்கொண்டே இப்படிப் பாடினார்கள். அதைத் தொடர்ந்து இளைஞர்கள் தங்களுடைய அடைக்கலமாகவும் நீரூற்றாகவும் தேடி வரும் கனவு நகரமாக இல்மார்க் வளர்ந்தது.
பழமையான கதைகளையும் நடனப் பாடல்களையும் நீக்கி விட்டுப் பார்த்தால், இல்மார்க் லிமிருவிடமிருந்து சிறிதும் வேறுபட்டதாக இல்லை என்று பியாட்ரீஸ் மெதுவாகத் தெரிந்து கொண்டாள். ஒரே மாதிரியான கதைகளே திரும்பத் திரும்ப நடந்து அவளைச் சூழ்ந்தன.
அவள் பல உத்திகளையும் பின்பற்றிப் பார்த்தாள். ஆடைகள்... பிரகாசிக்கக் கூடிய ஆடைகளை அணிவதற்கான சூழ்நிலையை உண்டாக்க அவளால் அங்கும் முடியவில்லை. சம்பளம் வாங்கக் கூடிய காதலனோ, வீட்டு அலவன்ஸோ இல்லாமல், எழுபத்தைந்து ஷில்லிங் அவளுக்கு எப்படி போதுமானதாக இருக்கும்? அந்த நேரத்தில்தான் இல்மார்க்கிற்கு "அம்பி" வந்தது. இதுதான் தான் தேடிக் கொண்டிருந்த பதில்- பியாட்ரீஸ் நினைத்தாள். தன்னைவிட கறுத்த இளம் பெண்கள் கேவலமான பாவங்கள் முழுவதையும் அம்பியைத் தேய்த்து அழகான நட்சத்திரங்களாக மாற்றுவதையும் அவள் பார்த்தாள். ஆண்கள் அவர்களைப் பார்த்து தங்களுடைய "அப்போது பிறந்த" காதலிகளைப் பற்றி பெருமையாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். ஆண்கள் பயங்கரமான பிறவிகள். எடை போட்டுப் பார்க்கும் நிமிடங்களில் அவள் சிந்தித்தாள். அவர்கள் எப்போதும் அழகை அதிகரித்துக் காட்டக்கூடிய பொருட்களுக்கு எதிராக மிகுந்த கோபத்துடன் பேசுவார்கள். அம்பிக்கு எதிராக... விக்குகளுக்கு எதிராக... சவுரி முடிக்கு எதிராக. ஆனால், அம்பியைத் தேய்த்து வெளுப்பாக ஆக்கிய தோலைக் கொண்ட- வெளிநாட்டினரின் கூந்தலை நகலெடுத்து, அதே மாதிரியான விக் வைத்திருக்கும் பெண்களுக்குப் பின்னால் பாய்ந்தோடிக் கொண்டிருப்பார்கள். கறுத்தவர்கள் வெறுக்கப்படுவதற்கு மூல காரணம் என்ன என்பதை ஆராய்ந்து கண்டு பிறப்பதற்கு அவள் முயற்சி செய்யவில்லை. ஒரு பழிவாங்கும் எண்ணத்துடன் அவள் அம்பியைத் தேய்த்துக் கொண்டிருந்தாள். தன்னுடைய கறுத்த வெட்கக் கேடுகளை அவள் தேய்த்து மறைத்தாள். ஆனால், நிறைய அம்பி வாங்குவதற்கு அவளால் முடியவில்லை. முகத்திலும் கைகளிலும் மட்டும் தேய்த்தாள். அதனால் அப்போதும் அவளுடைய கால்களும் கழுத்தும் கறுப்பு நிறத்தில்தான் இருந்தன. அது மட்டுமல்ல; எளிதில் எட்டாத முகத்தின் சில பகுதிகள்- செவிகளின் பின்பகுதியும் கண் இமைகளுக்கு மேல் பகுதியும் வெட்கக்கேடு, குழப்பமான நிலை ஆகியவற்றின் நிரந்தர உறைவிடங்களாக இருந்தன.
பிறகு எப்போதோ வந்து சேர்ந்த செழிப்பான நிமிடங்களுக்கு முந்தைய கொடூரமான மானக்கேட்டின் நேரமாக அதை அவள் எண்ணினாள். பியாட்ரீஸ், இல்மார்க்கில் இருந்த ஸ்டார் லைட் பாரில் வேலை செய்து கொண்டிருந்தாள். வளையல்கள் அணிந்த கைகளுடனும் காதில் வளையங்களுடனும் கவுன்டருக்குப் பின்னால் நின்று கொண்டு ந்யாகுத்தி வேலை செய்தாள்.
தவறாமல் தேவாலயத்திற்கு செல்லக்கூடிய- கடன்கள் அனைத்தையும் தவறாமல் மீட்டக்கூடிய ஒரு உண்மையான கிறிஸ்துவராக பாரின் உரிமையாளர் இருந்தார். தொப்பை விழுந்த வயிறு, நரைத்த தலைமுடி, மென்மையான பேச்சு. இல்மார்க்கில் புகழ்பெற்ற குடும்பத்தைச் சேர்ந்தவர், கடுமையான உழைப்பாளி... கடை மூடப்படும் வரை அவர் பாரிலேயே தங்கினார். சரியாகக் கூறுவதாக இருந்தால், ந்யாகுத்தி போகும் வரை. வேறு எந்தவொரு பெண்ணின்மீதும் அவருடைய பார்வை பதிவதில்லை. அவர் எப்போதும் ந்யாகுத்தியைச் சுற்றிச் சுற்றி நின்று கொண்டிருந்தார். எந்தவொரு கனிவும் கிடைக்காமலே அவர் அவளுக்கு ரகசியமாக பரிசுப் பொருட்களை அளித்தார்- ஆசையுடன் நாளையைப் பற்றிய கனவுகளுடன். அங்கு ந்யாகுத்திக்கென்று தனியாக ஒரு அறை இருந்தது. வேலை செய்ய வேண்டும் என்று தனக்கு தோன்றும் போது மட்டும் அவள் கண் விழிப்பாள். ஆனால், பியாட்ரீஸும் மற்ற இளம் பெண்களும் அதிகாலை ஐந்து மணிக்கு கண்விழித்து லாட்ஜில் இருப்பவர்களுக்கு காப்பி தயார் பண்ணுவார்கள். பாரையும் பாத்திரங்களையும் சுத்தம் செய்வார்கள். இரண்டு மணிக்கு சிறிய ஒரு ஓய்வுக்காகச் செல்லும் வரை பாரில் வேலை செய்தார்கள். நுரைத்துக் கொண்டிருக்கும் பீரையும் புன்சிரிப்பையும் நள்ளிரவு நேரம் வரை, இன்னும் சொல்லப்போனால்- அதிகமான டஸ்க்கேர்ஸுக்கும் பில்ஸ்டேர்ஸுக்கும் தாகம் தணியும் வரை பரிமாறுவதற்காக அவர்கள் ஐந்து மணிக்கு மீண்டும் வந்தார்கள். அவளுக்கு வெறுப்பு உண்டாகக் கூடிய அளவுக்கு எதுவும் உண்டாகவில்லையென்றாலும், இளம் பெண்கள் லாட்ஜிலேயே உறங்க வேண்டும் என்ற கட்டுப்பாடு அவளை அவ்வப்போது அமைதியற்றவளாக ஆக்கியது. சில வேளைகளில் அவர்கள் வேலைக்கு தாமதமாகச் செல்வார்கள். அதை உரிமையாளர் பேசும்போது சுட்டிக் காட்டுவார். ஆனால், உண்மையிலேயே கூறுவதாக இருந்தால். அவர்களுடைய உடல்களைக் காட்டி லாட்ஜுக்கு அதிகமான ஆட்களைக் கவர்ந்து இழுப்பது என்பது தான் அவருடைய நோக்கமாக இருந்தது. ஆனால், பெரும்பாலான இளம் பெண்கள் காவலாளிக்கு லஞ்சம் கொடுத்துவிட்டு, பரிமாறும் பெண்ணாகக் காட்டிக் கொள்ளாமல், சுதந்திர உணர்வுடன் தங்களுடைய வழக்கமான காதலர்களையோ, தற்காலிகமான காதலர்களையோ சந்திப்பதற்காக ந்யாகுத்தியின் தலைமையில் வெளியே சென்றார்கள். ஆனால், பியாட்ரீஸ் மட்டும் எப்போதும் லாட்ஜிலேயே தூங்கிக் கொண்டிருப்பாள். எப்போதாவது வரக்கூடிய இரவுக் காதலர்கள் அவளுடன் சில நிமிடங்களை மட்டுமே செலவழிப்பார்கள். ந்யாகுத்தி நிராகரித்தபோது ஒரு இரவு நேரத்தில் பாரின் உரிமையாளர் பியாட்ரீஸைத் தேடி வந்தார். அவர் அவளுடைய வேலையில் தவறுகளைச் சுட்டிக்காட்ட ஆரம்பித்தார். தொடர்ந்து அதே பழைய வெறுப்புடன் அவளைப் புகழ்ந்தார். அவர் அவளை கட்டிப் பிடித்தார். தொப்பை விழுந்த வயிறையும் நரை விழுந்த தலை முடியையும் கொண்டிருந்த அவர் அவளுடன் போராட்டம் நடத்தினார். அவளுக்கு அவர்மீது கடுமையான வெறுப்பு உண்டானது. ந்யாகுத்தி நிராகரித்த ஒரு மனிதரை அவளால் ஏற்றுக்கொள்ள முடியாது; அவளால் அது முடியாது. "என் கர்த்தாவே, என்னிடம் இல்லாதது எது ந்யாகுத்தியிடம் இருக்கிறது?" அவள் தனக்குள் அழுதாள். அவர் அவளுக்கு முன்னால் அவமானப்பட்டு நின்று கொண்டிருந்தார். அவளிடம் அவர் கெஞ்சினார். பரிசுப் பொருட்கள் தருவதாக வாக்குறுதி அளித்தார். ஆனால், அவளை எதுவும் ஈர்க்கவில்லை. அந்த இரவு நேரத்தில் முதன்முறையாக அவள் சட்டத்தை மீறி நடந்தாள். சாளரத்தின் வழியாக அவள் வெளியே குதித்து இன்னொரு லாட்ஜுக்குள் அடைக்கலம் தேடிக் கொண்டாள். அவள் ஆறு மணிக்குத் தான் திரும்பி வந்தாள். எல்லாருக்கும் முன்னால் வைத்து லாட்ஜின் உரிமையாளர் அவளை வேலையை விட்டு வெளியே அனுப்பிய போது, பியாட்ரீஸ் தன்னைப் பார்த்து ஆச்சரியப்பட்டாள்.
ஒரு மாத காலம் அவள் வேலை இல்லாமல், மற்ற இளம் பெண்களின் நிறங்கள் மாறிக் கொண்டிருக்கும் ஆச்சரியத்துடன் அவர்களுடைய அறைகளில் மாறி மாறி இருந்து கொண்டிருந்தாள்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook