Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes

Switch to desktop Register Login

வீட்டைச் சுற்றிக் காட்டிய வினு சக்ரவர்த்தி - Page 2

Veetai-Suttri-Kattiya-Vinuchakkravarthy

பல வருடங்களுக்கு முன்பு வினு சக்ரவர்த்தி சாலிகிராமத்தில் ஒரு வீட்டைச் சொந்தமாக கட்டினார். ஒரு படத்தில் அவரை ஒப்பந்தம் செய்வதற்காக அப்படத்தின் இயக்குநரையும், தயாரிப்பாளரையும் அவருடைய வீட்டிற்கு நான் அழைத்துச் சென்றேன். அப்போது தேநீர் கொடுத்து எங்களை உபசரித்தார் வினு. பின்னர் என்னை மட்டும் உள்ளே அழைத்து வீட்டிலுள்ள ஒவ்வொரு அறையையும் எனக்கு காட்டினார். ஒரு அறையை காட்டினார் – அதற்குள் படங்களில் கனவு காட்சிகளில் வருவதைப் போல பெரிய அளவில் அறையை முழுமையாக ஆக்கிரமித்து ஒரு மெத்தை போடப்பட்டிருந்தது. அதைச் சுட்டிக் காட்டியவாறு, 'இந்த மெத்தையைப் பார்த்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். இவருக்கு  இது தேவையா என்று நினைப்பீர்கள். எனக்கு தேவையில்லைதான். ஆனால், இதை நான் தயார் பண்ணி இந்த அறையில் போட்டிருப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. என்னை படத்தில் நடிப்பதற்காக பேச வருபவர்களை இந்த அறையில் உட்கார வைத்து பேசினால், அறையின் அழகையும், மெத்தையின் பிரம்மாண்டத்தையும் பார்த்து, எனக்கு தாங்கள் நினைத்திருந்ததை விட அதிக சம்பளத்தைத் தந்து விடுவார்கள். எல்லாம் சும்மா ஒரு ஷோவிற்குத்தான். சினிமாவில் இதெல்லாம் தேவைப்படுகிறது!' என்றார் – சிரித்துக் கொண்டே, நானும் 'உண்மைதான்.....' என்று சிரித்தவாறு கூறினேன்.

வருடங்கள் கடந்தோடின. அதற்குப் பிறகும் நான் பி.ஆர்.ஓ.வாக பணியாற்றிய பல படங்களில் வினு சக்ரவர்த்தி நடித்தார். ‘தொட்டா சிணுங்கி’, ‘சொர்ணமுகி’ ஆகிய படங்களுக்கு நான் மக்கள் தொடர்பாளராக பணியாற்றினேன். அப்படங்ளை இயக்கியவர் கே.எஸ்.அதியமான். அவர் என் நெருங்கிய நண்பர். அப்படங்களில் வினு சக்ரவர்த்தி நடிக்கவில்லை. எனினும், அப்படங்களை வினுசக்ரவர்த்தி பார்த்திருக்கிறார். அவருக்கு அப்படங்கள் பிடித்திருக்கின்றன. அதைத் தொடர்ந்து இரண்டு முறை வினு சக்ரவர்த்தி என்னுடன் தொலைபேசியில் பேசியிருக்கிறார். 'அந்த இரண்டு படங்ளையும் பார்த்தேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தன. இயக்குநர் கே.எஸ்.அதியமான் மிகவும் அருமையாக படங்களை  இயக்கியிருக்கிறார். சமீப காலத்தில் தமிழ்ப் படவுலகில் காலடி எடுத்து வைத்திருக்கும் நல்ல இயக்குநர்களில் அதியமானும் ஒருவர் என்பதை உணர்கிறேன். அவருடன் அதை விவாதம் செய்யக் கூடிய சூழல் இருந்தால், கூறுங்கள்..... நான் மகிழ்ச்சியுடன் கலந்து கொள்கிறேன்' என்றார் வினு ஆர்வத்துடன் – என்னிடம், எனினும், அதற்கான சூழல் வரவில்லை. அதியமானுக்கென்று கதை விவாதத்தில் ஈடுபட ஒரு குழு இருந்தது. அதனால் வினுவை அங்கு வர வைப்பதற்கான நல்ல சூழ்நிலை அமையவில்லை.

கடந்த பல வருடங்களாக வினு சக்ரவர்த்தியை நான் பார்க்கவில்லை. சில மலையாள திரைப்படங்களில் அவர் நடித்திருப்பதைப் பார்த்தேன். தமிழைப் போலவே, மலையாளத்திலும் மிகவும் அருமையாக நடித்திருந்தார். சொல்லப் போனால் – மலையாள படவுலகில் அவருக்கு நல்ல பெயர்.

நான் மதிக்கும் ....... மரியாதை செலுத்தும் ..... அன்பாகப் பழகும் பாசத்திற்குரிய அண்ணனும், நடிகரும், கதை-வசனகர்த்தாவுமான வினுசக்ரவர்த்தி இன்று நம்மிடையே இல்லை. தன் சாதனைகளைச் செய்து முடித்து விட்டு, இம்மண்ணிலிருந்து அவர் விடை பெற்றுக் கொண்டார். எனினும், அவரைச் சந்தித்த தருணங்களும், உரையாடிய நாட்களும் என்றும் என் மனதில் பசுமையாக வலம் வந்து கொண்டேயிருக்கும்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Top Desktop version