
"அவனா? எதுக்கு?"
"அவனோட ஃப்ரெண்டுக்கு ஆப்ரேஷனாம்."
"இதை அவனே உன்கிட்ட சொன்னானா?"
"ம்கூம். அத்தைக்கிட்டயும், மீனா மாமிகிட்டயும் சொல்லிக்கிட்டிருந்தான். என்னை அவன் பார்த்திருப்பானோன்னு சந்தேகமா இருக்கு வருண்."
"சேச்சே, அந்த நர்சிங் ஹோம் எவ்வளவு பெரிசு? அவன் பாட்டுக்கு வந்துட்டுப் போயிருப்பான். வீணா நீ பயப்படாதே."
"இல்லை வருண். சக்திவேல் மச்சான் மாதிரி பிரகாஷ் நல்லவன் கிடையாது. அவனைப் பத்தி எங்க வீட்டில யாருக்குமே தெரியாது. வீட்ல ரொம்ப நல்லவன் மாதிரி நடந்துக்குவான். ஆனா அவன் போடறதெல்லாம் வேஷம். என் ஃப்ரெண்ட்ஸ் என்கிட்ட அவனைப்பத்தி கம்ப்ளெயின்ட் பண்ணி இருக்காங்க. நான் அப்பாகிட்டயோ, அத்தைகிட்டயோ அவனைப்பத்தி சொல்லிக்கலை."
"நர்சிங் ஹோமுக்கு அவன் வந்தது தற்செயலானது. நீ பயப்படாதே. இன்னும் நாலே மாசம் பொறுத்துக்கோ. நாம கணவன், மனைவியானப்புறம் யாரும் எதுவும் தப்பா பேச மாட்டாங்க. நாலு மாசந்தான். அப்புறம் நான் எங்கேயோ பறக்கப் போறேன். இந்த அழகுராணி எனக்கு சொந்தமாயிடுமே."
"நான் உங்களை நம்பறேன். எங்க வீட்டில என்னை நல்ல பொண்ணுன்னு நம்பறாங்க. அவங்க நம்பிக்கையை நான் காப்பாத்தணும். சக்திவேல் மச்சானுக்கு என்னைக் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு பேச்சு ஆரம்பிச்சிருக்காங்க. இதை சீரியஸா ஆக விடாம என்ன பண்றதுன்னு எனக்குப் புரியலை. இதுக்கு நடுவுல இந்த பிரகாஷ் வேற... வருண், ப்ளீஸ் ரொம்ப லேட் பண்ணிடாம நம்ம கல்யாணத்தை சீக்கிரமா நடத்தப் பாருங்க. ப்ளீஸ்."
மேகலாவின் மாம்பழக் கன்னங்களில் கண்ணீர்த் துளிகள் வழிவதை சகிக்க முடியாத வருண் அவளை அணைத்துக் கொண்டான்.
"அழாதே மேகலா. கண்ணைத் துடைச்சுக்கோ. ரொம்ப இருட்டிடுச்சு. வா போகலாம்."
இருவரும் கடற்கரை மணலில் கால்கள் புதையப் புதைய வேகமாக நடக்க ஆரம்பித்தார்கள். இவர்களைப் படகுக்குப் பின்னால் இருந்து இதுவரை ஒளிந்திருந்து பார்த்துக் கொண்டிருந்த ஒரு உருவமும் இவர்களைத் தொடர்ந்து நடக்க ஆரம்பித்தது.
மேகலா பணிபுரியும் விளம்பர நிறுவனத்தின் விளம்பரப் படத் தயாரிப்புக் குழுவில் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிபவள் சௌம்யா உதயகுமார்.
ஒளிப்பதிவுத் துறைக்கு பெண்கள் வருவது மிக அரிது. சிறு வயதிலேயே கேமிரா, புகைப்படம், வீடியோ இவற்றில் சௌம்யாவிற்கு அதிக ஈடுபாடு இருந்தது. மிகச்சிறிய வயதிலேயே அவள் எடுத்த புகைப்படங்களைப் பார்த்து பிரமித்துப் போனார்கள், அவற்றைப் பார்த்தவர்கள். அத்துறை பற்றி புரிந்தவர்கள், 'இந்தப் பொண்ணு பின்னாளில் சிறந்த புகைப்பட நிபுணராக பிரகாசிப்பாள்' என்று ஆருடம் சொன்னார்கள்.
அவர்கள் கூறியதை விட ஒரு படி அதிகமாக சிறந்த ஒளிப்பதிவாளராக உருவாகினாள் சௌம்யா. தனது ஆரம்ப அரிச்சுவடியை விளம்பரப் படங்களில் துவங்கிய சௌம்யா, விளம்பரப் படங்களின் ஒளிப்பதிவுத் துறையில் வேகமாக முன்னேறினாள். அவளது திறமையைக் கண்ட 'ஃபைவ் எஸ்' விளம்பர நிறுவனத்தின் உரிமையாளர் அஜய் படுகோன் தனது நிறுவனத்தில் படத் தயாரிப்புக் குழுவில் சௌம்யாவை முதன்மை ஒளிப்பதிவாளராக நியமித்து, பெருந்தொகையையும் சம்பளமாக வழங்கியிருந்தார். இத்துறையில் அவளது திறமை மேலும் மெருகேறுவதற்காக அஜய் படுகோன் அவளை வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்கத் திட்டமிட்டிருந்தார்.
திருமணம் என்ற கோட்பாட்டில் சௌம்யா, சௌம்யா உதயகுமாராக பெயர் மாறினாள். உதயகுமாரின் நல்லாதரவால் மேலும் அத்துறையில் சிறந்து விளங்கினாள் சௌம்யா உதயகுமார்.
மேகலாவும், சௌம்யா உதயகுமாரும் நெருங்கிய தோழிகள் ஆனார்கள். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் அலுவலகத்திற்கு வந்து மேகலாவுடன் அரட்டை அடிப்பாள் சௌம்யா உதயகுமார்.
இடைவிடாத படப்பிடிப்பினால் இரண்டு வாரங்கள் மேகலாவைப் பார்க்காவிட்டால் மேகலாவைத் தன் வீட்டிற்கு அழைத்து, அங்கே உட்கார்ந்து அரட்டை அடிப்பார்கள்.
மேகலாவின் குடும்ப நிலவரங்கள் அனைத்தும் சௌம்யா உதயகுமாருக்குத் தெரியும். அவ்வப்போது தனக்கு ஏற்படும் பிரச்சனைகளை சௌம்யா உதயகுமாரிடம் பகிர்ந்து கொள்வாள் மேகலா.
மேகலா, வருண் காதல் விபரம் அறிந்து, முதன் முதலில் வாழ்த்தியது சௌம்யா உதயகுமார்தான்.
ஒரு ஞாயிற்றுக்கிழமை, மேகலாவின் வீட்டுத் தொலைபேசியில் சௌம்யா உதயகுமார் அழைத்தாள்.
"என்ன மேகி, ஸண்டே மூடா? ரெண்டு வாரமா ஷுட்டிங் பிஸியில நாம சந்திக்கவே முடியலை. இன்னிக்கு நாம மீட் பண்ணுவோமா? நடிகை ரேவதியோட ஹஸ்பண்ட் மிஸ்டர் சுரேஷ் மேனன் புதுசா ஒரு ரெஸ்ட்டாரண்ட் ஆரம்பிச்சிருக்காராம். அங்கே போகலாமா? உதயகுமாரையும் நம்ம கூட வரச்சொல்லி கூப்பிட்டேன். அவருக்கு ஒரு வேலை இருக்காம். நீ வந்தா நாம ரெண்டு பேரும் போகலாம்..."
"எனக்கும் உன்னைப் பார்க்கணும் போல இருக்கு. எத்தனை மணிக்கு, எங்கே வரணும்னு சொல்லு. அப்பாகிட்ட கேட்டுட்டு நான் வந்துடறேன்."
"தேங்க்யூ மேகி. அஞ்சு மணிக்கு வந்துடு. அந்த ரெஸ்ட்டாரண்ட்டோட பேர் 'க்ரிம்ஸன் சக்ரா'. அடையார்ல இருக்கு. கரேக்ட்டா அஞ்சு மணிக்கு வந்துடு. சரியா?"
"ஓ.கே. சௌமி."
தொலைபேசி ரிசீவரை வைத்து விட்டு, மூர்த்தியிடம் அனுமதி கேட்டாள் மேகலா.
"அப்பா... என்னோட ஃப்ரெண்ட் சௌம்யா உதயகுமார் போன் பண்ணினா. இன்னிக்கு சாயங்காலம் ரெஸ்ட்டாரண்ட்டுக்கு வரச் சொன்னா. போயிட்டு வரட்டுமாப்பா?"
"தாராளமா போயிட்டு வாம்மா. சௌம்யா நம்ப வீட்டுப் பொண்ணு மாதிரி. செல்போனும் கையுமா, சதா பேசிக்கிட்டே திரியற பொண்ணுங்க மத்தியில செல்போனே வேண்டாம்னு சொல்லி நல்ல பழக்க வழக்கங்களோட இருக்கறீங்க நீயும், உன் தங்கச்சியும். வேற எங்கேயும் வெளியே போறதில்லை... என்னிக்கோ ஒரு நாள் ஆபூர்வமா... ஆசையா... ஹோட்டலுக்குக் கூப்பிடறா சௌம்யா. சந்தோஷமா போயிட்டு வாம்மா."
"தேங்க்ஸ்ப்பா..." என்றவள், கமலத்திடம் "அத்தை, துணி எல்லாம் எடுத்து மடிச்சு வச்சுட்டேன். நேத்து நீங்க மடிச்சு வச்சதையெல்லாம் பீரோவுல அடுக்கிட்டேன். வேற ஏதாவது செய்யணுமா அத்தை?"
"இனி என்னம்மா... சமையல் வேலை மட்டும்தான். நீயும், சுபிட்சாவும் கூட மாட செஞ்சு குடுத்தா வெஜிட்டேபிள் பிரியாணி போட்டு தயிர் பச்சடி பண்ணிடலாம். வேற எந்த வேலையும் இல்லை."
"சரி அத்தை. நான் போய் பட்டாணியை உரிச்சுட்டு, தேங்காய் துறுவி வைக்கறேன். சுபி வந்து காய்கறி நறுக்கட்டும்?" மேகலா சமையலறைக்குச் சென்றாள்.
ஆட்டோவிலிருந்து 'க்ரிம்ஸன் சக்ரா' ரெஸ்ட்டாரண்ட் அருகே இறங்கிய மேகலா, உள்ளே சென்றாள். ஒரு பெரிய பங்களாவின் கீழ்ப்பகுதி உணவகமாக மாற்றப்பட்டிருந்தது. உள்ளே போகும் வழியில் பச்சை பசேல் என்ற செடிகள், கண்களுக்குக் குளிர்ச்சியாக இருந்தன. மழை பொழிவது போன்ற செயற்கைத் தண்ணீர் வழியும் ஒலி, மனதிற்கு ரம்யமாக இருந்தது. கேரளப் பகுதியை நினைவூட்டும் உள் அலங்காரங்கள்! தேக்கு மர நாற்காலிகள்!
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook