Lekha Books

A+ A A-

ஆர்ட்டிமிஸியா

என்னை கவர்ந்த திரைப்படங்கள்சுரா (Sura)

ஆர்ட்டிமிஸியா - Artemisia

(ஃப்ரெஞ்ச் மொழி திரைப்படம்)

1997ஆம் ஆண்டில் திரைக்கு வந்த ஃப்ரெஞ்ச் மொழியில் எடுக்கப்பட்ட மாறுபட்ட திரைப்படம் - Artemisia.

17ஆம் நூற்றாண்டில் இத்தாலியில் வாழ்ந்த இளம்பெண்ணும், வரலாற்றில் இடம் பெற்ற இளம் ஓவியருமான ஆர்ட்டிமிஸியாவின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டது. 1593ஆம் ஆண்டிலிருந்து 1653ஆம் ஆண்டு வரை வாழ்ந்து சாதனை புரிந்த அந்த இளம் பெண்ணைப் பற்றிய தகவல்கள் இப்போதும் இத்தாலியில் இருக்கும் ஆவணக் காப்பகங்களில் பத்திரமாக வைக்கப்பட்டிருக்கின்றன.

மிகுந்த கட்டுப்பாடுகள் நிறைந்த அந்தக் காலகட்டத்தில் ஒரு இளம்பெண் எல்லாவற்றையும் தகர்த்தெறிந்து விட்டு, எப்படி ஓவியராக ஒளி வீசினாள் என்ற விஷயத்தால் ஈர்க்கப்பட்ட பெண் இயக்குநரான Agnes Merlet இப்படத்தை இயக்கினார். இதற்கு திரைக்கதை அமைத்தவர்கள் Agnes Merlet, Christine Miller. படத்திற்கு இசையமைத்த Krishna Levyயும் ஒளிப்பதிவு செய்த Benoit Delhommeம் பாராட்டுக்குரியவர்கள்.

98 நிமிடங்கள் ஓடக் கூடிய இப்படத்தில் Artemisiaவின் கதாபாத்திரத்தில் நடித்து, அதற்கு உயிர் தந்தவர் Valentina Cervi.

இப்படம் திரைக்கு வந்தபோது, திரைப்பட ரசிகர்களாலும், பத்திரிகைகளாலும், திரைப்பட விமர்சகர்களாலும் பரபரப்பாக பேசப்பட்டது. படத்தை வினியோகம் செய்த அமெரிக்காவைச் சேர்ந்த 'Miramax Zoe' என்ற நிறுவனம் 'The untold true story of an extraordinary woman' என்று விளம்பரம் செய்ததே அதற்குக் காரணம். படம் மிகப் பெரிய வெற்றியை வர்த்தக ரீதியாக அடைந்தது என்பது ஒரு பக்கம் இருந்தாலும், வரலாற்றுச் சம்பவங்களை படத்திற்காக நிறைய மாற்றி விட்டார்கள் என்ற பலமான குற்றச்சாட்டும் அந்தச் சமயத்தில் எழுந்தது. இயக்குநர் Agnes Merletஐ அதற்காக பலரும் குறை கூறி பத்திரிககைகளில் எழுதவும் செய்தார்கள்.

அந்த அளவிற்கு ஆதரவாகவும், எதிராகவும் உரத்த குரலில் பேசப்பட்ட, பக்கம் பக்கமாக எழுதப்பட்ட 'Artemisia' படத்தின் கதை என்ன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் இப்போது உங்களுக்கு உண்டாகியிருக்குமே! உங்களுக்காக இதோ கதை:

Artemisia பதினேழு வயது கொண்ட ஒரு பேரழகு படைத்த இளம் பெண். அவளுடைய தந்தை Orazio Gentileschi இத்தாலியின் ஒரு புகழ் பெற்ற ஓவியர். அவருடைய பெயரைச் சொன்னாலே இத்தாலியில் மிகப் பெரிய மதிப்பு. அவருக்குச் சொந்தமான ஓவியக் கூடத்தில் இரவு, பகல் எந்நேரமும் பல ஓவியர்கள் தொடர்ந்து ஓவியங்களை வரைந்து கொண்டே இருப்பார்கள். வரையப்பட்ட அந்த ஓவியங்களைப் பார்ப்பதற்காகவும், பெரிய விலை கொடுத்து வாங்குவதற்காகவும் பல்வேறு இடங்களிலிருந்தும் நல்ல வசதி படைத்தவர்களும், கலை ஆர்வம் கொண்ட பிரபு வம்சத்தைச் சேர்ந்தவர்களும் அவ்வப்போது வருவார்கள். தன் ஓவியக் கூடத்தில் இருக்கும் அழகான ஓவியங்களை மிகவும் பெருமையுடன், அங்கு வருபவர்களுக்குக் காட்டுவார் அந்த வயதான ஓவியர்.

அவருடைய செல்ல மகள் Artemisia. அவருக்கு ஆண் பிள்ளைகள் கிடையாது. ஆர்ட்டிமிஸியாவின் மீது உயிரையே வைத்திருந்தார் அவர். ஒரு ஓவியரின் மகளாக பிறந்ததாலோ என்னவோ, ஓவியத்தின் மீது ஆர்ட்டிமிஸியாவிற்கும் அளவற்ற ஆர்வமும், ஈடுபாடும் இருந்தன. தான் ஒரு மிகச் சிறந்த ஓவியராக வர வேண்டும் என்று ஆசைப்பட்டாள் அவள். தன்னைப் போலவே, தன் அன்பு மகளுக்கும் ஓவியத்தின் மீது தீவிர ஈடுபாடு இருப்பதைப் பார்த்த Orazio Gentileschi மிகவும் சந்தோஷப்பட்டார். அவளுடைய அந்தத் திறமையை வளர்ப்பதற்கு அவரும் ஒரு உந்து சக்தியாகவும், தூண்டுகோலாகவும் இருந்தார். தனக்கு ஆண் பிள்ளைகள் இல்லாமற் போய் விட்டார்களே என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்த அவர், தன் மகளின் மூலமாக தங்கள் குடும்பத்திற்கென்று இருக்கக் கூடிய ஓவியப் பாரம்பரியம் தொடரட்டும் என்று நினைத்தார்.

ஆனால், தன் தந்தையைப் போல மரபு முறையில் உள்ள ஓவியங்களை வரையக் கூடிய ரசனை கொண்டவளாக ஆர்ட்டிமிஸியா இல்லை. அவளுடைய விருப்பமும், கலா ரசனையும் வேறு மாதிரி இருந்தன. ஆண், பெண் ஆகியோரின் நிர்வாண நிலையை ஓவியமாக வரைவதில் அக்கறை கொண்டவளாக அவள் இருந்தாள். 17ஆம் நூற்றாண்டில் இத்தாலியில் ஒரு பெண் இப்படிப்பட்ட ஒரு ரசனையுடன் இருப்பது என்பது சாதாரண விஷயமல்ல. இன்னும் சொல்லப் போனால்- அந்தக் காலகட்டத்தில் ஓவியர்கள் என்று ஆண்கள் மட்டுமே தங்களுடைய திறமைகளைக் காட்டிக் கொண்டிருந்தார்கள். பெண்கள் தங்களுடைய திறமையை வெளிப்படுத்துவதற்கு, ஆண்கள் உற்சாகப்படுத்தினால்தானே! அப்படிப்பட்ட சூழ்நிலையில் நிர்வாணமாக ஓவியங்களை ஒரு பெண் வரைகிறாள் என்றால்... அதற்கு எந்த அளவிற்கு எதிர்ப்பு இருக்கும்?

படத்தின் ஆரம்பக் காட்சியிலேயே ஒரு முக்கியமான விஷயம் காட்டப்பட்டிருக்கும். தேவாலயமொன்றில் பல பெண்கள் நின்றிருப்பார்கள். அங்கு எரிந்து கொண்டிருக்கும் ஒரு மெழுகு வர்த்தியை யாருக்கும் தெரியாமல் அணைத்து, தன் ஆடைக்குள் வைத்துக் கொள்வாள் ஆர்ட்டிமிஸியா. வீட்டிற்கு வந்த பிறகு, அந்த மெழுகு வர்த்தியை எரிய வைத்தவாறு, தன் சரீரத்தை அவள் கண்ணாடியில் பார்ப்பாள். தன் ஆடையை மேல் நோக்கி தூக்கி, கால்களையும், தொடையையும் கண்ணாடியில் எந்த அளவிற்கு அழகாக இருக்கின்றன என்று பார்ப்பாள். பிறகு மேலாடையை நழுவ விட்டு, இரண்டு மார்பகங்களின் அழகையும் கண்ணாடியில் பார்த்து சந்தோஷப்படுவாள். மொத்தத்தில்- தன் முழு உடலின் வனப்பையும் அவள் கண்ணாடியில் பார்ப்பாள்.

தான் பார்த்த தன் உடலை, உடலின் பாகங்களை மனக்கண்களின் மூலம் அவள் ஓவியமாக தீட்டுவாள். இப்படியே பல ஓவியங்கள். இதற்கு முன்பு இந்த அளவிற்கு உடலின் பாகங்களை எந்தவொரு பெண் ஓவியரும் வரைந்ததில்லை என்பதே உண்மை. அந்த ஓவியங்களை அவள் தன் தந்தையிடம் காட்ட, அவர் ஆரம்பத்தில் அதிர்ச்சியடைந்து விடுவார். தன் மகள் இப்படிப்பட்ட ஓவியங்களையா வரைந்து கொண்டிருக்கிறாள் என்று அவர் நினைப்பார். எனினும், அவற்றையும் உயர்ந்த திறமையின் வெளிப்பாடு என்று கருதுவதால், அவர் அதை ஏற்றுக் கொள்ளவே செய்வார். தன்னுடைய ஓவியக் கூடத்தில் தன் மகள் ஆர்ட்டிமிஸியா வரைந்த அந்த நிர்வாண ஓவியங்களைக் காட்சிக்காக வைத்திருப்பார். அதை பார்ப்பவர்கள், ஆச்சரியத்தின் உச்சிக்குச் சென்று அதை வரைந்த இளம் பெண்ணையே அதிர்ச்சியுடன் பார்ப்பார்கள்.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel