Category: சினிமா Published Date Written by சுரா Hits: 6117
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
Par-Dela Les Nuages - பார் டெலா டெஸ் நுவாஜெஸ்
(ஃப்ரெஞ்ச் திரைப்படம்)
உலக புகழ் பெற்ற இயக்குனரான Michelangelo Antonioni இயக்கிய படம். 1995ஆம் ஆண்டில் திரைக்கு வந்த இப்படம் இத்தாலியன், ஃப்ரெஞ்ச், ஆங்கிலம் ஆகிய மொழிகள் கொண்டது. ரொமான்டிக் பாணியில் எடுக்கப்பட்ட இப்படம் நான்கு தனித் தனி கதைகளைக் கொண்டது.
ஒரு திரைப்பட இயக்குனரின் பார்வையில் இந்த நான்கு கதைகளும் கூறப்பட்டிருக்கின்றன.
Michelangelo Antonioni யின் திரைப்படம் என்றாலே, யாரும் நினைத்துப் பார்க்காத கதைக்கருவை வைத்து அவர் படத்தை இயக்கியிருப்பார் என்ற விஷயம் எல்லோருக்கும் தெரியும். இந்தப் படமும் அப்படிப்பட்டதுதான்.
112 நிமிடங்கள் ஓடக் கூடிய இந்தப் படத்தை இயக்கும்போது Michelangelo Antonioni க்கு 83 வயது. இந்தப் படம் தயாரிப்பில் இருந்தபோது, அவருக்கு பெரிய அளவில் மாரடைப்பு உண்டாகி, செயல்பட முடியாத அளவிற்கு ஒரு சூழ்நிலை உண்டாகி விட்டது. அதைத் தொடர்ந்து Wim Wanders ஐ வைத்து படத்தை முடித்தார்கள். படத்தின் திரைக்கதை அமைப்பில் பணியாற்றியவர் இவர்.
இத்தனை வருடங்கள் கடந்தோடிய பிறகும், இந்தப் படம் நம் மனங்களில் பசுமையாக நின்று கொண்டிருப்பதற்குக் காரணம் - இப்படத்தில் இடம் பெற்றிருக்கும் உயிரோட்டமான காட்சிகளும், அவை படமாக்கப்பட்ட விதமும்தான்.
இதோ படத்தின் கதை :
John Malkovich என்ற திரைப்பட இயக்குனர் தன்னுடைய சமீபத்திய திரைப்படத்தை முடித்து விட்டு, இத்தாலிக்கு விமானத்தில் சென்று கொண்டிருக்கிறார். விமானத்தில் பயணம் செய்யும்போது, அவர் சுற்றியிருக்கும் மேகங்களைப் பார்க்கிறார். அப்போது அவர் மனம் தன்னுடைய அடுத்த திரைப்படத்தை எப்படி உருவாக்குவது என்பதைப் பற்றி சிந்திக்கிறது. விமானம் தரையில் இறங்கியதும், அவர் தன்னுடைய காரில் அந்த இரவு நேரத்தில் பனிப் போர்வைக்கு மத்தியில் பயணிக்கிறார். சுற்றிலும் பனி மூடியிருக்க, மனிதர்கள் தோன்றுவதும் மறைவதுமாக இருக்கிறார்கள்.
முதல் கதை : நிறைவேறாத ஒரு காதல் கதை
இத்தாலியிலிருக்கும் Ferrara என்ற நகரம். சில்வனோ என்ற இளைஞன் வழியில் தான் சந்திக்கும் Carmen என்ற பெண்ணிடம் அன்றிரவு தங்குவதற்கு எங்காவது அறை கிடைக்குமா என்று கேட்கிறான். அவள் ஒரு ஹோட்டலின் பெயரைக் கூறுகிறாள். அந்த ஹோட்டலில் அறை எடுத்த பிறகுதான் அவனுக்கே தெரிய வருகிறது- கார்மெனும் அங்குதான் தங்கியிருக்கிறாள் என்ற விஷயம். அவளிடம் அவன் ரெஸ்ட்டாரெண்டில் அமர்ந்து பேசுகிறான். கார்மென் ஒரு ஆசிரியை என்பது தெரிய வருகிறது. அவர்கள் ஒருவர் மீது ஒருவர் ஈர்க்கப்படுகிறார்கள். ஆனால், அறைக்குச் செல்லும்போது அவரவர்களுடைய அறைக்குள்தான் செல்கிறார்கள். அவள் தன் அறையில் ஆடைகளைக் களைந்து விட்டு, அவனை எதிர் பார்த்து காத்திருக்கிறாள். ஆனால், அவன் வரவே இல்லை. மறுநாள் காலையில் அவன் கீழே போய் விசாரிக்கும்போது, அவள் ஏற்கெனவே அறையை காலி பண்ணி விட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்ற தகவல் அவனுக்குக் கிடைக்கிறது.
இரண்டு வருடங்களுக்குப் பிறகு, ஃபெராரா நகரத்திலிருக்கும் ஒரு திரையரங்கில் சிறிதும் எதிர்பாராமல் சில்வனோ, கார்மெனைச் சந்திக்கிறான். அவர்கள் இருவரும் வெளியே வந்து பேசிக் கொண்டே நடக்கின்றனர். என்ன பேச வேண்டுமோ, அதை அவள் பேசுகிறாள். ஆனால், அவன் எதையோ மனதிற்குள் மறைத்து வைத்துக் கொண்டு பேசுகிறான். சில்வனோ கார்மெனுடன் சேர்ந்து அவளுடைய வீட்டிற்கு வருகிறான். மாடியிலிருக்கும் வீடு அது. ஒரு வருட காலம் வேறொரு மனிதனுடன் தான் வாழ்க்கை நடத்தியதாக அவள் கூறுகிறாள். ஆனால், சமீபத்தில் அவன் அவளுடைய வாழ்க்கையிலிருந்து விலகிச் சென்று விட்டான். ‘சொற்கள் நமக்கு நல்லது செய்கின்றன... எழுத்து வடிவத்தில் கூட. ஒரு பெண் அவற்றை எதிர்பார்க்கிறாள். எல்லா காலங்களிலும்...’ என்கிறாள் கார்மென். சில்வனோவின் மீது ஈர்க்கப்பட்டாலும், அவன் முத்தம் தர முயற்சிக்கும்போது, அவள் தன் முகத்தை விலக்கிக் கொள்கிறாள். அதைத் தொடர்ந்து அவன் அங்கிருந்து கிளம்புகிறான்.
கீழே சென்ற அவன் பின்னர் என்ன நினைத்தானோ-மீண்டும் மேலே வருகிறான். அவளுடைய அறைக்குள் அவன் செல்கிறான். அவர்கள் இருவரும் நிர்வாணமாகிறார்கள். அவன் தன்னுடைய கையை அவளுடைய சரீரத்தின் மீது பரவ விடுகிறான். அவளை இறுக அணைக்க நினைக்கிறான். ஆனால், அணைக்கவில்லை. அவர்கள் ஒருவரையொருவர் முத்தமிட முயற்சிக்கின்றனர். ஆனால், முத்தமிடவில்லை. இறுதியில், உடல் ரீதியான உறவு உண்டாகாமலே, அவன் அங்கிருந்து கிளம்புகிறான்.
கீழே - தெருவில் நின்று கொண்டிருக்கும் அவன் ஏக்கத்துடன் தலையை உயர்த்தி பார்க்கிறான். மேலே… மாடியிலிருக்கும் தன் அறைக்குள்ளிருந்த கண்ணாடி சாளரத்தின் வழியாக அவனையே பார்த்துக் கொண்டு நின்றிருக்கிறாள் கார்மென்.
இரண்டாவது கதை : அந்த இளம் பெண்... அந்த கொலை
திரைப்பட இயக்குனர் அமைதியாக இருக்கும் ஒரு கடற்கரைக்கு வருகிறார். காற்று மணலைப் புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது. அவர் ஒரு பழைய புகைப்படத்தைப் பார்க்கிறார். ஒரு மலைப் பகுதியில் கடலையொட்டி இருக்கும் ஒரு நகரத்தின் புகைப்படம் அது. அந்த நகரத்தின் பெயர் Portofino. இத்தாலியில் இருக்கும் அந்த நகரத்தின் மேடான ஒரு தெருவில் நடந்து வரும்போது, அந்த இயக்குனர் ஒரு அழகான இளம் பெண்ணை சிறிதும் எதிர்பாராமல் பார்க்கிறார்.
நடந்து செல்லும் அவளை, அவர் பின்பற்றி நடந்து செல்கிறார். ஆடைகள் விற்பனை செய்யப்படுகிற ஒரு கடைக்குள் அவள் நுழைகிறாள். அங்குதான் அவள் வேலை செய்கிறாள். திரைப்பட இயக்குனரும் உள்ளே நுழைகிறார். ஆடைகளைப் பார்ப்பதற்கு பதிலாக, அவர் அவளையே தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறார். வேறு பக்கம் பார்த்துக் கொண்டிருந்த அவளும் அவரைப் பார்க்கிறாள். அவர்கள் இருவதும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. ஆனால், ஒருவரோடொருவர் ஈர்க்கப்பட்டிருக்கிறோம் என்பதை மட்டும் உணர்கிறார்கள். இயக்குனர் அங்கிருந்து வெளியேறுகிறார். அப்போது அவள் அவரைப் பார்த்து ஏதோ சைகை செய்கிறாள். ஆனால், அவர் அதை கவனிக்கவில்லை.
சிறிது நேரத்திற்குப் பிறகு அந்தப் பெண் வெளியே இருக்கும் காஃபி ஷாப்பிற்குச் செல்கிறாள். அங்கு அந்த இயக்குனர் அமர்ந்திருக்கிறார். அவருக்கு அருகில் சென்ற அவள் ‘நான் என் தந்தையைக் கொலை செய்து விட்டேன். நான் அவரை பன்னிரண்டு தடவைகள் குத்தினேன்’ என்கிறாள். அதை கூறி விட்டு, அங்கிருந்து நகர்கிறாள். இயக்குனர் அவளைப் பின்பற்றுகிறார்.
நடந்து செல்லும்போது, ஒரு வருடத்திற்கு முன்பு நடைபெற்ற அந்த கொலைச் சம்பவத்தைப் பற்றி இருவரும் பேசிக் கொண்டு வருகிறார்கள். அதற்காக அவள் மூன்று மாத காலம் சிறைக்குள் இருந்திருக்கிறாள். நீருக்கு அருகில் கொலை நடந்த இடத்தை அவருக்கு அவள் காட்டுகிறாள். ‘உங்களைப் பார்க்கும்போது எனக்கு யாருடைய ஞாபகமோ வருகிறது’ என்கிறாள் அவள் இயக்குனரிடம்.