Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes

Switch to desktop Register Login

தி கன்ஸ் ஆஃப் நவரோன்

The guns of navarone

என்னை கவர்ந்த திரைப்படங்கள்சுரா (Sura)

தி கன்ஸ் ஆஃப் நவரோன்

(ஆங்கில அமெரிக்க திரைப்படம்)

லக திரைப்பட ரசிகர்களின் மனங்களில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து கொண்டிருக்கும் படம். 1961 இல் இப்படம் திரைக்கு வந்தது. வருடங்கள் எத்தனையோ கடந்து விட்டாலும், கையாளப்பட்ட கதைக் கரு, அது படமாக்கப்பட்ட விதம், தேர்ந்த நடிப்புக் கலைஞர்களின் அபார பங்களிப்பு, மிகச் சிறந்த தொழில் நுட்பங்கள் ஆகியவற்றால் எல்லா காலங்களிலும் நிரந்தர இடத்தைப் பிடித்து வாழ்ந்து கொண்டிருக்கும் அற்புத படைப்பு இது.

1957 இல் Alistair Mac Lean உலகப் போரைப் பற்றி எமுதிய ‘THE GUNS OF NAVARONE’  புதினம் அதே பெயரில் திரைப்படமாக உருவானது.

படத்தின் இயக்குநர் : J.Lee Thompson.

இசை : Dimitri Tiomkin

படத்திற்கு உயிர் கொடுத்த நடிப்பு மன்னர்கள் : Gregory Peck, James Robertson Justice, David Niven, Anthony Quinn, Anthony Quayle, Stanley Baker.

Aegean Sea இல் வரும் கப்பல்களுக்குச் சவாலாகவும், தீவில் மாட்டிக் கொண்டிருக்கும் 2000 பிரிட்டிஷ் போர் வீரர்கள் அங்கிருந்து தப்பிப்பதற்கு தடையாகவும் இருக்கும் கம்பீரமான ஜெர்மன் கோட்டையையும், அதில் பொருத்தப்பட்டிருக்கும்  சக்தி வாய்ந்த துப்பாக்கிகளையும் ஒரு  ‘கமான்டோ’  படை தனது திறமையாலும், சாகசச் செயல்களாலும், ஆச்சரியப்படத்தக்க அபார ஆற்றல்களாலும் எப்படி தவிடு பொடியாக்கி அழிக்கிறது என்பதே இப்படத்தின் கதை.

 ஏஜியன் கடலில் இருக்கும் ‘கெரோஸ்’ என்ற தீவில் 2000 பிரிட்டிஷ் போர் வீரர்கள் மாட்டிக்கொள்கிறார்கள். அவர்களை ‘ராயல் நேவி’ மூலம் காப்பாற்றுவது என்பது நினைத்துப் பார்க்க முடியாத விஷயம். காரணம் - அதில் இருக்கும் ‘நவரோன்’ என்ற தீவில் அமைக்கப்பட்டிருக்கும் பலம் வாய்ந்த துப்பாக்கிகள். இருக்கும் நேரமோ மிகவும் குறைவு. ஜெர்மனியர்கள் எப்போது வேண்டுமானாலும், பிரிட்டிஷ் படைகளைத் தாக்குவதற்கு முயற்சிக்கலாம்.

விண்ணிலிருந்து குண்டு போட்டு, அந்த சக்தி படைத்த துப்பாக்கிகளை அழிக்க முயன்ற சம்பவம், தோல்வியில் முடிகிறது.  அதைத் தொடர்ந்து ஆறு பேர் கொண்ட சாகச வீரர்களின் கமான்டோ படை உருவாக்கப்படுகிறது. நவரோனுக்குப் பயணித்து, அங்குள்ள துப்பாக்கிகளை அழிப்பதற்கான அந்தக் குழுவை ஜென்ஸென் (James Robertson Justice) உருவாக்குகிறார். அதற்கு மேஜர் ராய் ஃப்ராங்க்ளின் (Gergory Peck) தலைமை தாங்குகிறார். கிரேக்க ராணுவத்தைச் சேர்ந்த கர்னல் ஆன்ட்ரியா ஸ்டாவ்ரோ (Anthony Quinn), ஃப்ராங்க்ளினின் நெருங்கிய நண்பரும், முன்பு பல்கலைக் கழகத்தில் வேதியியல் பேராசிரியராக பணியாற்றியவரும், வெடி பொருள் நிபுணருமான கார்ப்போரல் மில்லர்(David Niven), நவரோனைச் சேர்ந்த கிரேக்க அமெரிக்கரான ஸ்பைரோஸ் பாப்பாடிமோஸ் (Jemes Darren), பொறியாளரும் கத்திச் சண்டை போடுவதில் திறமைசாலியுமான ‘கொலைகாரன்’ ப்ரவுன் (Stanley Baker) - இவர்களே அந்த ‘சாகசப் படை’ வீரர்கள்.

கிரேக்க மீனவர்கள் என்ற போர்வையில் அவர்கள் ஏஜியன் கடலில் பயணிக்கிறார்கள். அவர்களை ஒரு ஜெர்மன் படகு வழி மறிக்கிறது. அவர்களைத் தாக்கிய ‘கமான்டோ குழு’ ஜெர்மனியர்களைக் கொன்று, படகை கடலுக்குள் மூழ்கச் செய்கிறது. பயணத்தின்போது, மல்லோரி, ஃப்ராங்க்ளினிடம் போர் முடிவடைந்ததும், ஸ்டாவ்ரோ தன்னை கொன்று விட மனதிற்குள் திட்டமிட்டிருக்கிறார் என்றும், அதற்குக் காரணம் ஸ்டாவ்ரோவின் மனைவி மற்றும் பிள்ளைகளின் மரணத்திற்கு ஏதோ ஒரு வகையில் தான் காரணமாக இருந்ததே என்றும் கூறுகிறார்.

பயங்கர சூறாவளியின் காரணமாக அவர்கள் பயணம் செய்த கப்பல் முற்றிலும் சேதமடைகிறது. கப்பலில் பயணத்தைத் தொடர முடியாத சூழ்நிலை உண்டாக, எப்படியோ போராடி அவர்கள்  ஒரு தீவை அடைகிறார்கள்.  மல்லோரிதான் மலை ஏறுவதில் நிபுணத்துவம் பெற்றவராயிற்றே! அவரின் தலைமையில் அவர்கள் ஏற முடியாத மலையை ஏறுகிறார்கள். அதில் ஃப்ராங்க்ளினுக்கு மிகவும் மோசமான வகையில் காயம் உண்டாகிறது. ஃப்ராங்கிளினை அங்கேயே ‘எதிரிகள் கவனித்துக் கொள்ளும் வகையில்’ விட்டு விட்டுச் செல்வோம் என்கிறார் மில்லர். அந்த குழுவிற்குத் தலைமை தாங்கும் மல்லோரி, எங்கே ஃப்ராங்க்ளினை விட்டு விட்டுச் சென்றால், தவிர்க்க முடியாத வற்புறுத்தல் மூலம் ஃப்ராங்க்ளின் தங்களின் திட்டங்கள் அனைத்தையும் வெளியே கூறி விடுவாரோ என்று நினைக்கிறார். அதனால், ஃப்ராங்க்ளினை ஒரு ‘ஸ்ட்ரெட்ச’ரில் வைத்து துக்கிக் கொண்டு வரும்படி இருவரிடம் அவர் கூறுகிறார்.

ஃப்ராங்க்ளின் தற்கொலை செய்ய முயற்சிக்கிறார். அதை மல்லோரி தடுத்து விடுகிறார். அவர்கள் அந்தப் பகுதியைச் சேர்ந்த போராளிகளுடன் சண்டை போட வேண்டிய சூழ்நிலை உண்டாகிறது. அப்போது அவர்கள் ஸ்பைரோஸின் சகோதரி மரியாவையும் (Irene Papas), அவளுடைய தோழி அன்னாவையும் (Gia Scala), சந்திக்கிறார்கள்.

அந்த ‘சாகசக் குழு’ ஜெர்மன் போர் வீரர்களால் தொடர்ந்து  தாக்கப்படுகிறது. அவர்கள் ஃப்ராங்க்ளினுக்கு சிகிச்சை செய்ய ஒரு மருத்துவரைத் தேடி அலைய, Mandrakos என்ற நகரத்தில் மொத்த குழுவும் பிடித்து வைக்கப்படுகிறது. அந்த குழுவினரிடமிருந்து எந்த தகவல்களையும் அவர்களால் பெற முடியவில்லை. அவர்களை தீவிரமாக விசாரித்துக் கொண்டிருக்கும்போது, ஸ்டாவ்ரோவ் கருணைக்காக கெஞ்சுவதைப் போல் கீழே விழுந்து நடிக்க, ஜெர்மனியர்களின் கவனம் சிதறுகிறது. அப்போது அவர்கள் ஜெர்மனியர்களை திரும்ப தாக்குகிறார்கள். ஜெர்மனியர்களின் சீருடைகளில், ஃப்ராங்க்ளினை மருத்துவ சிகிச்சை செய்வதற்கு விட்டு விட்டு, அங்கிருந்து தப்பிக்கிறார்கள்.

சக்தி படைத்த துப்பாக்கிகள் பொருத்தப்பட்டிருக்கும் நவரோன் நகரத்திற்குள் அந்தக் குழுவினர் நுழைகின்றனர். தன்னுடைய வெடி பொருட்களில் பெரும்பாலானவை பயனற்றவையாக ஆகிவிட்டதை அப்போதுதான் மில்லர் கவனிக்கிறார். அன்னாதான் அதற்கு காரணம் என்பதும் தெரிய வருகிறது. அதைத் தொடந்து மரியா அவளைச் சுட, அன்னா இறக்கிறாள்.

குழு இப்போது தனித் தனியாக பிரிகிறது. மல்லோரி, மில்லர் இருவரும் துப்பாக்கிகள் இருக்கும் இடத்திற்கு செல்கிறார்கள். ஸ்டாவ்ரோ, ஸ்பைரோஸ் இருவரும் நகரத்தில் திசை திருப்பும் வேலைகளைச் செய்கிறார்கள். மரியா, ப்ரவுன் இருவரும் தாங்கள் தப்பித்துச் செல்வதற்கு ஒரு படகைத் திருடுகிறார்கள். மல்லோரியும், மில்லரும் தங்களுக்குப் பின்னாலிருந்த பிரதான வாயிலை அடைக்கிறார்கள். மில்லர்  வெடிபொருட்களை துப்பாக்கியின் மீது வைக்கிறார்.  ஜெர்மனியர்கள் உறுதி படைத்த கதவுகளின் வழியாக நுழைய, மல்லோரியும் மில்லரும் கடலுக்குள் குதித்து நீந்தி தப்பித்து, திருடி வைத்திருந்த  படகிற்கு வருகிறார்கள். ஸ்பைரோஸ், ப்ரவுன் இருவரும் இறந்து கிடக்கிறார்கள். ஸ்டாவ்ரோ காயத்துடன் இருக்கிறார். மல்லோரி அவரைக் காப்பாற்றி, படகிற்குள் கையைப் பிடித்து இழுத்து, வரச் செய்கிறார். அதன் மூலம் அவர்களுக்கிடையே இருந்த ‘உட்பகை’ இல்லாமற் போகிறது.

அந்த சாகசக் குழு உரிய நேரத்தில் தோன்றுகிறது. துப்பாக்கிகளில் வைக்கப்பட்டிருக்கும் வெடிபொருட்களை ஜெர்மனியர்கள் பார்த்து விடுகிறனர். அவர்கள் கடந்து செல்லும் குழுவின் மீது குண்டு மழை பொழிகின்றனர். அதே நேரத்தில், ‘கமான்டோ குழு’ அமைத்திருந்த ‘எலிவேட்டர்’ உரிய நேரத்தில் கீழே இறங்கி, மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களை வெடிக்கச் செய்கிறது. துப்பாக்கிகள், கட்டிடம் அனைத்தும் வெடித்துச் சிதற, அதனால் உண்டாகும் சத்தத்தை மருத்துவமனையில் படுக்கையில் படுத்திருக்கும் ஃப்ராங்க்ளின் கேட்கிறார். அழிக்கப்பட்ட துப்பாக்கிகள் கடலுக்குள் விழுகின்றன. மல்லோரியின் குழுவினர் பத்திரமாக பிரிட்டிஷ் கப்பலுக்கு வருகின்றனர். மரியாவின் காதல் வலையில் விழுந்த ஸ்டாவ்ரோ, அவளுடன் நவரோனுக்கே சென்று விட தீர்மானிக்கிறார். ஒவ்வொன்றும் வெடித்துச் சிதறுவதை தூரத்திலிருக்கும் கப்பலில் இருந்து கொண்டே, சந்தோஷத்துடன் மல்லோரியும், மில்லரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

158 நிமிடங்கள் ஓடக் கூடிய இந்தப் படம் வர்த்தக ரீதியாக மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. இப்போது கூட ஆரம்பத்திலிருந்து இறுதி வரை நாற்காலியின் நுனியில் உட்கார்ந்து கொண்டுதான் நாம் படத்தைப் பார்ப்போம். அந்தஅளவிற்கு படத்தின் ஒவ்வொரு காட்சியும் சீராக செதுக்கி படமாக்கப்பட்டிருப்பதே காரணம். படமாக்கப்பட்ட இடங்கள், நடிகர்களின் நடிப்பு, சுவாரசியமான காட்சிகள், பாராட்டக்கூடிய ஆக்ஷன் காட்சிகள், பின்னணி இசை- ஒவ்வொன்றும் நம்மை படத்துடன் முழுமையாக ஒன்றி இருக்கச் செய்யும்.

சிறந்த படத்திற்கான ஆஸ்கார் விருதைப் பெற்ற ‘THE GUNS OF NAVARONE’ சிறந்த Original Score க்காகவும் விருது பெற்றது.  Special Effects க்கான Acadamy விருதும் இப்படத்திற்கு கிடைத்தது.

நம் வாழ்க்கையில், அனைத்துத் தலைமுறையினரும் கட்டாயம் பார்த்திருக்க வேண்டிய ஒரு படம் இது. பல திறமையான கலைஞர்கள் ஒன்று சேர்ந்து பணி புரிந்தால், ஒரு மிகச் சிறந்த படைப்பு நிச்சயம் உருவாகும் என்பதற்குச் சான்று ‘THE GUNS OF NAVARONE’.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Top Desktop version