Lekha Books

A+ A A-

அமு

amu

என்னை கவர்ந்த திரைப்படங்கள்சுரா (Sura)

அமு

(இந்திய ஆங்கில திரைப்படம்)

ரு மாறுபட்ட கதைக் கருவை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம். ஆங்கிலப் படமாக இருந்தாலும், டில்லியில் படமாக்கப்பட்டிருப்பதால், நிறைய இந்தி வசனங்களும் இருக்கின்றன. இன்னும் சொல்லப் போனால், இதில் இடம் பெற்றிருப்பவர்கள் எல்லோருமே இந்தியர்களே.

அமு என்ற காஜோரி ராய் என்ற அமெரிக்காவில் வாழும்  21 வயது கொண்ட, இந்திய இளம் பெண்ணைச் சுற்றி பின்னப்பட்டதே கதை. அவள் அமெரிக்காவில் மூன்று வயதிலிருந்து வாழ்ந்து கொண்டிருக்கிறாள். அங்குள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் பட்டம் பெறும் காஜோரி, தன் உறவினர்களைப் பார்ப்பதற்காக இந்தியாவிற்கு வருகிறாள்.

வந்த இடத்தில் அவள் கபீர் என்ற கல்லூரி மாணவனைச் சந்திக்கிறாள். நல்ல வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்தவன் அவன். ‘உண்மையான இந்தியா’ வைப் பார்க்க ஆசைப்படும் காஜோரியின் ஆர்வம் அவனுக்கு மிகவும் பிடிக்கிறது. அவளை அவன் பல இடங்களுக்கு அழைத்துச் சென்று, சுற்றிக் காட்டுகிறான். காஜோரி டில்லியின் குடிசைப் பகுதிகள், மக்கள் கூட்டம் நிறைந்திருக்கும் மார்க்கெட் பகுதிகள், சாலையோர தேநீர் கடைகள் என்று எல்லா இடங்களுக்கும் அவள் செல்கிறாள்...

 ஒரு குடிசைப் பகுதிக்கு அவள் செல்லும்போது ஏதோ ஒரு வித்தியாசமான உணர்வால் அவள் பாதிக்கப்படுகிறாள். இதற்கு முன்பு தனக்கு நன்கு தெரிந்த இடம் அது என்பதைப் போல அவள் உணர்கிறாள். திரும்பி தான் தங்கியிருக்கும் இடத்திற்கு வந்து அவள் படுக்க, அந்த சேரிப் பகுதி அவளுடைய கனவில் திரும்பவும் வருகிறது. அதற்கு காரணம் என்ன என்று அவளுக்கே தெரியவில்லை.

இதற்கிடையில் காஜோரியின் தாய் கேயா ராய் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், அமெரிக்காவிலிருந்து டில்லிக்கு வருகிறாள்.  லாஸ் ஏஞ்சல்ஸில் மனித உரிமைகளுக்காக போராடிக் கொண்டிருக்கும் அவள், காஜோரி  டில்லியின் சேரிப் பகுதிகளுக்குச் சென்றிருக்கிறாள் என்ற உண்மை தெரிந்ததும், மிகவும் அதிர்ச்சியடைகிறாள். அவளின் அதிர்ச்சிக்கும், பயத்திற்கும் காரணங்கள் இருக்கின்றன.

படிப்படியாக தான் இதுவரை பொய்கள் கூறப்பட்டு ஏமாற்றப்பட்டு வந்திருப்பதை காஜோரி தெரிந்து கொள்கிறாள். தான் டில்லியின் சேரிப் பகுதியில் பிறந்தவள் என்பதும், கேயா ராயால் தத்து எடுக்கப்பட்டு அமெரிக்காவில் வளர்க்கப்பட்டவள் என்பதும் அவளுக்கு தெரிய வருகின்றன.  இது ஒரு புறமிருக்க, தங்கள் இருவரின் குடும்பங்களும்  1984 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒரு கலவரத்தின்போது ஒன்றோடொன்று தொடர்பு கொண்டிருப்பதை காஜோரியும் கபீரும் தெரிந்து கொள்கிறார்கள்.

இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திராகாந்தி கொல்லப்பட்டபோது, அவரை மரணமடையச் செய்தவன் ஒரு சீக்கியன் என்பதால், டில்லியில் மிகப் பெரிய கலவரம் உண்டாகிறது. சீக்கியர்கள் தாக்கப் படுகிறார்கள். அவர்கள் கொல்லப்படுகிறார்கள். அவர்களின் குடிசைகளும், வீடுகளும் நெருப்பிற்கு இரையாக்கப்படுகின்றன.

காஜோரியின் உண்மையான பெயர் அம்ரித். எல்லோரும் அவளை ‘அமு’ என்று செல்லமாக அழைப்பார்கள். ஒரு சீக்கிய தந்தைக்கும், தாய்க்கும் பிறந்தவள் அவள். அவளுக்கொரு சிறிய தம்பி. கலவரத்தின் போது, வீட்டிற்கு வெளியே தெருவிற்கு வந்த அவளுடைய தந்தை கலவரக்காரர்களால் அடித்து கொல்லப்படுகிறார். அவர்  தாக்கப்படும்போது, அதை தடுக்காமல் வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தவர் கபீரின் தந்தை.  அதைப் பற்றி கபீர் கேட்க, அதற்கு விளக்கம் கூறி, தன்னை நியாயப்படுத்த முயற்சிக்கிறார் கபீரின் தந்தை.

அந்த கலவரத்தில், பின்னர் அமுவின் தம்பியும்  கொல்லப்பட்டு விடுகிறான். கணவன், மகன் இருவரையும் இழந்த அந்த ஏழை தாய், பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த இடத்தில் தூக்கு போட்டு, அதில் தொங்கி மரணத்தை வரவழைத்துக் கொள்கிறாள். தன் அன்னை பிணமாக வைக்கப்பட்டிருக்க, 3 வயது சிறுமியான அமு வெளியே பரிதாபமாக ஒரு ஓரத்தில் அமர்ந்திருக்கிறாள்.

தன் முழு குடும்பத்தையும் இழந்து விட்ட அந்த ஏழை சிறுமி, தத்து எடுக்கப்பட்டு அமெரிக்காவிற்கு  அழைத்துச் செல்லப்படுகிறாள். அவள்தான் இப்போதைய காஜோரி என்ற காஜு. வருடங்கள் கடந்தோடி விட்டன. அந்த 1984 கலவரத்திற்குக் காரணமானவர்கள் இன்னும் தண்டிக்கப்படாமல் இருக்கிறார்கள். இந்திராகாந்தியின் மரணத்திற்கு காரணமான இரண்டு  சீக்கியர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டு விட்டது. ஆனால், ஆயிரக் கணக்கான எந்த குற்றமும் செய்யாத, அப்பாவி மக்களை ஈவு, இரக்கமே இல்லாமல் கொன்ற கயவர்கள் இப்போதும்  உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதை எங்கு போய் கூறுவது?

 டில்லியின் மின்சார ரயில் மக்களை ஏற்றிக் கொண்டு ‘கட கட’ என்ற சத்தத்துடன் போய்க் கொண்டிருக்கிறது. குப்பைகளுக்கு மத்தியில் காட்சியளிக்கும், காலியாக இருக்கும் தண்டவாளத்திற்கு அருகில் எல்லா உண்மைகளையும் மனதிற்குள் போட்டு, உள்ளுக்குள் குமுறிக் கொண்டே மெதுவாக அமு என்ற காஜோரியும், கபீரும் ரயிலுக்குப் பின்னால் நடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்.

அத்துடன் படம் முடிவடைகிறது.

அமு என்ற காஜோரி என்ற காஜுவாக வாழ்ந்திருப்பவர் - கொங்கொனா சென்சர்மா (அடடா... அவரின் முகத்தில் தான் என்ன ஆழமான உணர்ச்சிகள்!).

அவளின் வளர்ப்புத் தாயாக - பிருந்தா காரட்.

கபீராக -  அங்கூர் கன்னா.

படத்தின் இயக்குநர்  - ஷோனாலி போஸ் (‘அமு’ என்ற பெயரில் அவர் எழுதிய நாவலே திரைப்படமாக எடுக்கப்பட்டது.)

2005 இல் திரைக்கு வந்த இப்படம், சிறந்த ஆங்கிலப் படத்திற்கான விருதை மத்திய அரசாங்கத்திடமிருந்து  பெற்றது. அதே ஆண்டில் நடைபெற்ற பெர்லின், டொரான்டோ திரைப்பட விழாக்களில் ‘Amu’ திரையிடப்பட்டது.

Page Divider

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel