Logo

மாமரத்திற்குக் கீழே

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 6944
mamarathirku kilae

“ஒரு காற்றும் காற்றல்ல

பெரும் காற்றும் காற்றல்ல

மாவேலிக் குன்னத்தின் காற்றே வா! கடலே வா!

கடல் மோதி, ஒரு மாங்காயைத் தா!''

அப்போது ஒரு காற்று அடித்தது. வானத்தை முட்டிக்கொண்டிருக்கும் அந்த மாமரத்தின் பெரிய கிளையில் இருந்த சிறிய கிளைகள் இப்படியும் அப்படியுமாக ஆடின.

அவர்களின் உற்சாகம் அதிகமானது. அவர்கள் எல்லாரும் ஒரே குரலில் கூறினார்கள்: “காற்றே வா! கடலே வா!''

காற்றின் பலம் அதிகரித்தது. இலைகளில் அது மோத, என்னவோ கீழே விழுந்தது. பாட்டு அந்தக் கணமே நின்றது. மாமரத்திற்குக் கீழே  ஒரு நிமிடம் ஒரே ஆரவாரமானது. விழுந்த அந்த பொருள் ஒரு சிறுமிக்குக் கிடைத்தது. ஒரு சிரிப்பு! அது ஒரு அழுகிய மாம்பழமாக இருந்தது. முகத்தை ஒரு மாதிரி வைத்துக் கொண்டு அந்தச் சிறுமி அதை தூரத்தில் விட்டெறிந்தாள். தலையைக் கையில் பிடித்துக் கொண்டு ஒரு சிறுவன் அங்கு வந்தான். எல்லாரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். அந்தச் சிறுமி அழுதுவிட்டாள்.

குறும்புத்தனம் செய்த அந்தச் சிறுவனின் பெயர் பாலகிருஷ்ணன். சிறிது தூரத்திலிருந்த ஒரு கொய்யா மரத்தில் தாவி ஏறி, அதன் கிளையில் தொங்க விடப்பட்டிருந்த ஓலைக் கூடையிலிருந்து ஒரு மாம்பழத்தை எடுத்து அவளுக்கு முன்னால் அவன் எறிந்தான்.

ஒரு நிமிடம் அவள் அதை எடுக்கத் தயங்கினாள். அவள் குனிந்தபோது அதை மற்றொரு சிறுவன் எடுத்துவிட்டான். அப்போதும் அங்கிருந்த எல்லாரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

கவுரியும் நாராயணனும் கற்களைப் பொறுக்கி ஒற்றையா இரட்டையா விளையா டிக் கொண்டிருந்தார்கள். நாணியும் கோவிந்த னும் கஞ்சியும் குழம்பும் வைத்துக்கொண்டிருந்தார்கள். நீலகண்டனும் ராமனும் "மாங்கொட்டை அய்யா'விற்கு சடங்குகள் நடத்திக் கொண்டிருந்தார்கள். காய்ந்த சுள்ளிகளைக் கொண்டு தயார் செய்யப்பட்ட பல்லக்கில் ஒரு மாங்கொட்டையை எடுத்து வைத்து, அதைச் சுற்றி அவர்கள் வலம் வந்தார்கள். “மாங்கொட்டை அய்யா செத்துப் போயிட்டாரு. ஆத்துல குளிச்சாச்சு. பதினாறாம் நாள் விசேஷம் நடத்த ஒரு மாங்காயைத் தா!'' அவர்கள் சொன்னார்கள்.

மேலே ஒரு காகம் கரைந்தது. சிறார்கள் விளையாட்டை நிறுத்தினார்கள். கொய்யா மரத்தில் இருந்தவன் கீழே குதித்தான்.

“அது காக்கா குஞ்சு...''

“இல்ல... தாய் காக்காதான்!''

“மாங்காயைக் கொத்துறதைப் பார்க்கலையா?''

“பேசாதே... காக்கா... பறந்து போயிடப் போகுது...''

எல்லாரும் மேலே பார்த்தவாறு நின்றிருந்தார்கள்.

அவர்களின் கிண்டலுக்கு ஆளான சிறுமி- அவளுடைய பெயர் பாப்பி- சற்று தூரத்தில் நின்றிருந்தாள். அவளுடைய முகத்தில் இருந்த தோற்று விட்டோம் என்ற எண்ணம் இப்போதும் போகாமல் அப்படியே இருந்தது.

ஒரு மாம்பழம் விழுந்தது. அது பாலகிருஷ்ணனுக்குக் கிடைத்தது. மாம்பழத்தின் காம்பை ஒடித்து மேலே எறிந்தவாறு சொன்னான்:

“இதை எடுத்துக்கிட்டு இன்னொரு பழுத்த மாம்பழத்தை பாப்பிக்கு தா...''

இந்த வார்த்தைகள் பொதுவாகச் சிறார்கள் சொல்லக் கூடியவைதான். “பழுத்த மாம்பழத்தை எனக்கு தா'' என்று அவர்கள் கூறுவார்கள். அவனுடைய குறும்புத்தனத்திற்கு அவனே பிராயச்சித்தமும் செய்தான். இன்னொரு பழுத்த மாம்பழம் பாப்பிக்குக் கிடைத்தது.

மாலை மயங்கிக் கொண்டிருந்த நேரத்தில் சிறார்கள் மரத்தடியை விட்டுக் கிளம்பினார்கள். பாலனும் பாப்பியும் ஒருவரோடொருவர் கைகளைப் பிணைத்தவாறு வீடுகளுக்குத் திரும்பினார்கள். அவனுடைய கையில் மாம்பழங்கள் நிறைந்த கூடை தொங்கிக் கொண்டிருந்தது. அவளுக்கு ஒரு மாம்பழத்திற்கு மேல் அன்று கிடைக்கவில்லை.

பாலனும் பாப்பியும் பக்கத்து பக்கத்து வீட்டுக்காரர்கள். அவனுடைய வீட்டுக்கு மேற்குப் பக்கத்தில் அவளுடைய வீடு இருக்கிறது.

அடுத்த பூஜையன்று அவர்கள் இருவரையும் பள்ளிக் கூடத்தில் சேர்த்தார்கள். அவர்கள் ஒன்றாக கிட்டு ஆசிரியரின் பள்ளிக் கூடத்திற்குச் செல்வார்கள். ஒன்றாகவே திரும்பி வருவார்கள். வீட்டில் தொங்கவிடும் பச்சிலையை அவர்கள் ஒருவருக்கொருவர் கொடுத்துக் கொள்வார்கள். கோவில் குளத்திலிருந்து பாலன் தாமரை மலரைப் பறித்துக்கொண்டு வந்து பாப்பிக்குத் தருவான்.

அவள் படிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டாள். ஆசிரியரின் அடிகளை வாங்குவதற்கே அவளுக்கு நேரம் சரியாக இருந்தது. அவளுக்கு எதுவுமே தெரியவில்லை. ஆனால், அவள் பாலனை ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் தோற்கடித்தாள்.

“அக்கரையில் இருக்கும்

இக்கரையில் இருக்கும்

ஒன்றோடொன்று சந்திக்கும்

அது என்னன்னு சொல்லு?''

பாலனுக்கு அந்த விடுகதை தெரியாது. அவன் கூறுவான்: “தென்னை மரம்...''

“இல்ல...'' அவள் வெற்றிப் பெருமிதத்துடன் கைதட்டிச் சிரிப்பாள்.

“அப்போ என்னன்னு சொல்லு!''

“கண் இமைகள்...''

அவர்கள் ஒருவரையொருவர் அடித்துக் கொள்வார்கள். அவன் அவளை அடிப்பான். அவள் அழுதுகொண்டே அவனைப் பார்த்து வக்கனை காட்டுவாள்.

“பாலா, இனிமேல் நான் உன்கூட பேச மாட்டேன்.''

அவளுடைய குடும்பம் மிகவும் ஆச்சாரமானது. அவள் கூறுவாள்:

“உங்க சோற்றை நாங்க சாப்பிட மாட்டோமே!''

அவனும் தன் பங்குக்கு பெருமையாகக் கூறுவான்:

“நான் ஆங்கிலத்தில் படிப்பேனே!''

ஆறு மாத படிப்பிற்குப் பிறகு பாப்பி பள்ளிக்கூடத்திற்குப் போவதை நிறுத்தனாள். அவளுடைய மாமா சொன்னார்:

“அவள் போக வேண்டாம். பொண்ணுக படிச்சா கணக்கு கேட்பாங்க!''

பாலன் அடுத்த வருடம் ஒரு ஆரம்பப் பள்ளியில் சேர்ந்தான். சிலேட்டையும் புத்தகங்களையும் எடுத்துக்கொண்டு சிறிய ஒரு வேட்டியையும் கட்டிக்கொண்டு அவன் பள்ளிக்கூடத்திற்குச் செல்வதை பாப்பி பார்த்தவாறு நின்றிருப்பாள். அவள் ஒருநாள் கேட்டாள்:

“பாலா! பள்ளிக்கூடத்துல சார் அடிப்பாரா?''

“படிக்கலைன்னா அடிப்பாரு.''

மாங்காய் இருக்கும் காலத்தில் பாப்பி பாலனுக்காக மாங்காய்களைப் பொறுக்கி பத்திரப்படுத்தி வைத்திருப்பாள். சாயங்காலம் வரும்போது அவள் அவற்றை அவனிடம் தருவாள்.

அவளுக்கு வீட்டில் செய்வதற்கு எவ்வளவோ வேலைகள் இருக்கும். நெருப்பு எரிய வேண்டும். தொழுவத்தில் சாணத்தை அள்ள வேண்டும். பாத்திரங்களைச் சுத்தம் செய்ய வேண்டும். மொத்தத்தில் அவளுக்கு விளையாடுவதற்கு நேரமே இல்லாமல் இருந்தது.

ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் படிப்பு முடிந்தது. பாலன் நான்கு மைல்கள் தூரத்திலிருந்த ஆங்கிலப் பள்ளிக்கூடத்தில் சேர்ந்தான். அவன் நல்ல ஆடைகள் அணிந்துகொண்டு தன் தந்தையுடன் அம்பலப்புழைக்குப் போவதை அவள் சிலையைப்போல பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.

“பாலா! இனி நீ வர மாட்டியா?'' அவள் கேட்டாள்.

“நான் வெள்ளிக்கிழமை வருவேன்.''

அதைக் கேட்டு பாப்பி அழுதுவிட்டாள். அவன் அம்பலப் புழையில் போய் தங்கப் போகிறான். அது தெரிந்து அந்தச் சிறு பெண் சோர்வடைந்துவிட்டாள். அந்த வெள்ளிக்கிழமை சாயங்காலம் பாலன் வந்தான். ஒரு கூடை நிறைய மாம்பழங்களை அவள் அவனுக்குத் தந்தாள்.


அந்த வருடத்தின் மழைக்காலம் மிகவும் பயங்கரமானதாக இருந்தது. ஒரு பெரிய வெள்ளப் பெருக்கு உண்டானது. ஒன்றரை மாத காலம் அவன் வரவேயில்லை. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பாப்பி பாலகிருஷ்ணனை எதிர்பார்த்தாள். ஆனால், அவன் வரவில்லை.

வெள்ளம் முழுமையாக வற்றிய பிறகு, பாலன் வீட்டுக்கு வந்தான். அவனுடன் இன்னொரு பையனும் இருந்தான். சனிக்கிழமை முடிந்த பிறகும் அவன் பாப்பியின் வீட்டுக்குச் செல்லவில்லை. அவளுக்கோ அவன் வீட்டுக்குச் செல்வதற்கு நேரமில்லை. ஞாயிற்றுக்கிழமை அவள் அவனுடைய வீட்டுக்குச் சென்றாள். பாலனும் அவனுடைய நண்பனும் அப்போது ஆங்கிலம் படித்துக் கொண்டிருந்தார்கள்.

நடுநிலைப் பள்ளிக்கூடத்தில் நான்கு வருட படிப்பு முடிந்தது. பாலன் உயர்நிலைப் பள்ளிக்கூடத்தில் சேர்ந்தான். அடுத்த ஓண விடுமுறையில்தான் அவன் திரும்பவும் வந்தான். ஒரு சுமை தூக்கும் தொழிலாளி பெட்டியைத் தூக்கிக் கொண்டு வர, ஒரு நாகரிக தோற்றத்தைக் கொண்ட இளைஞன் கிழக்கு வீட்டுக்குச் செல்வதை பாப்பி பார்த்தாள். சிறிது சீரகம் வாங்க வந்திருப்பதைப்போல் காட்டிக் கொண்டு அவள் அங்கு சென்றாள். அங்கு வந்திருந்தது பாலன்தான். ஆனால், பாப்பியால் ஒரு நிமிடத்திற்கு அவனை அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை.

பாலன் அவனுடைய தலை முடியை முழுவதுமாக வெட்டியிருந்தான். க்ராப் வெட்டி தலை வாரியிருந்தான். அவனுடைய முகம் வெளுத்து சிவந்து காணப்பட்டது. இரண்டு மூன்று முகப் பருக்களும் கண்ணில் பட்டன. குரல்கூட முழுமையாக மாறிவிட்டிருந்தது. அவனிடம் செருப்புகள் இருந்தன. துணியாலான குடை இருந்தது. ட்ரங்க் பெட்டிக்குள் புதுமையான பல பொருட்களும் இருந்தன. பாலனுடைய சிரிப்பே அலாதியாக இருந்தது.

“அம்மா எனக்குப் பசிக்குது'' என்று சொல்லியவாறு பாலன் சமையலறைக்குள் நுழைந்தான். அங்கு பாப்பி நின்றிருந்தாள்.

அவள் முழங்கால் வரை இருக்கும் ஒரு கரி பிடித்த துண்டைக் கட்டியிருந்தாள்.

“என்ன பாப்பி?'' பாலன் கேட்டான்.

அவள் பதிலெதுவும் கூறாமல், மவுனமாக இருந்தாள்.

அந்த விடுமுறைக் காலம் முடிந்தது. பாலன் ஆலப்புழைக்குத் திரும்பச் செல்லும் நேரம் வந்தது. பெட்டியை எடுத்துக்கொண்டு அவன் புறப்பட்டான். அந்த மாமரத்திற்குக் கீழே நின்று கொண்டு தன்னை யாரோ அழைப்பதைப்போல் அவன் உணர்ந்தான். அவன் திரும்பி நின்றான். கந்தர்வன் கோவிலுக்கு முன்னாலிருந்த முல்லைப் பந்தலுக்குக் கீழே பாப்பி நின்றிருந்தாள். அவள் கேட்டாள்:

“பாலன், கிளம்பியாச்சா.''

“ஆமா...''

அவன் நடந்தான். பாலனின் மனதிற்குள் சில மென்மையான சலனங்கள் உண்டாயின. அந்த அழைப்பில் வார்த்தைகளால் கூற முடியாத ஏதோவொன்று ஒளிந்திருப்பதை அவனால் உணர முடிந்தது. அந்தக் குரல் அசரீரியைப்போல் அவனுக்குத் தோன்றியது.

அடுத்த நடு கோடை விடுமுறைக்கு பாலன் திரும்பவும் வந்தான். ஆனால், இரண்டு மூன்று நாட்கள் மட்டுமே அவன் வீட்டில் இருந்தான். அதற்குப் பிறகு, வடக்கன் பறவூரில் இருக்கும் தன் சகோதரியைப் பார்ப்பதற்காக அவன் சென்று விட்டான்.

பாலன் பள்ளி இறுதி வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான். ஐந்தாவது ஃபாரத்தில் அந்த வருடம் தேர்ச்சி பெற்றான். ஒரு வருடத்திற்குப் பிறகு அவன் அந்த வருடத்தின் நடு கோடை விடுமுறையில் வீட்டுக்கு வந்தான். பாலனுக்கு அப்போது பதினேழு வயது நடந்து கொண்டிருந்தது.

முன்பைப் போல சமீபவருடங்களில் மாங்காய்கள் காய்க்க வில்லை. நகரத்திலிருந்து வந்த பாலன் ஒரு பனியனை அணிந்துகொண்டு மாலை நேரத்தில் பழைய மாமரத்திற்குக் கீழே காற்று வாங்குவதற்காகப் போய் நிற்பான்.

அங்கு அந்தப் பழைய பாடலை சிறார்கள் பாடிக்கொண்டி ருப்பார்கள்.

“காற்றே வா கடலே வா...''

"மாங்கொட்டை அய்யா” விற்கு புதிய நண்பர்கள் கிடைத்திருந்தார்கள். அந்தச் சிறார்களுடன் இப்போதும் பாப்பி மாம்பழம் விழும்போது ஓடுவது உண்டு. மாமரத்திற்குக் கீழே சற்று தூரத்தில் நின்றவாறு பாலன் மகிழ்ச்சியான அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருப்பான். பாப்பி இப்போதும் ஒரு குழந்தைதான். மாங்காய் கிடைத்தால் அவள் காம்பைக் கிள்ளி மேலே எறிந்தவாறு கூறுவாள்:

“இதை நீ எடுத்துக்கிட்டு இன்னொரு பழுத்த மாம்பழத்தை எனக்குத் தா!''

ஒருநாள் மாலை நேரத்தில் பாலன் மாமரத்திற்குக் கீழே நடந்து கொண்டிருந்தான். சிறார்கள் எல்லாரும் போய் விட்டிருந்தார்கள். ஒரு காற்று வீசியது. எங்கிருந்து என்று தெரியவில்லை. பாப்பி அப்போது அங்கு தோன்றினாள். ஒரு மாம்பழம் விழுந்தது. அதை அவள் எடுத்தாள்.

“பாப்பி! அந்த மாம்பழத்தை இங்கே தா. பார்க்கணும்...''

பாப்பி மாம்பழத்தை அவனிடம் தந்தாள்.

“பாப்பி, உனக்கு நிறைய மாம்பழங்கள் கிடைக்கும்ல?''

“நான் கிடைக்கிற எல்லா மாம்பழங்களையும் கிழக்கு வீட்டுல கொடுத்திடுவேனே!''

“அப்படியா? இன்னைக்குக்கூட நான் மாம்பழப் பச்சடி சாப்பிட்டேன். அது நீ கொடுத்து விட்ட மாம்பழமா?''

“பாலா, நீ வந்த அன்னைக்கு நான் 150 மாம்பழங்கள் கொடுத்தேன். நீ 10-ஆம் தேதி வருவேன்னு அம்மா சொன்னாங்க.''

ஒரு பாட்டை முணுமுணுத்தவாறு அவன் அங்கிருந்து புறப்பட்டான். ஒரு நறுமணம் பாலனிடமிருந்து வந்தது. பாலனின் கையிலிருந்து கைக்குட்டையின் ஓரங்களில் சித்திர வேலைப் பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

பாப்பி, பாலனைப் பார்த்தவாறு நின்றிருந்தாள்.

அந்த விடுமுறைக் காலமும் முடிவுக்கு வந்தது. பாலன் பள்ளி இறுதி வகுப்பில் படிக்கும் மாணவன். அரசாங்கத்தின் உதவிப் பணம் கிடைக்குமென்ற எதிர்பார்ப்புடன் பாலன் படித்துக் கொண்டிருந்தான். ஓணத்திற்கும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கும் அவன் வீட்டுக்கு வரவில்லை. பொதுத் தேர்வு முடிந்தவுடன் பாலன் வீட்டுக்கு வந்தான்.

மாமரத்திற்குக் கீழே மாலை நேரத்தில் முன்பு பார்த்ததைப்போல அவர்கள் சந்தித்தார்கள். அவள் குளித்து முடித்து தலைமுடியை விரித்து பின்னால் போட்டிருந்தாள். அழகான ஒரு புள்ளிகள் போட்ட புடவையை அணிந்திருந்தாள். பாலன் அவளையே உற்றுப் பார்த்தான். பாப்பி அன்று முதன் முறையாக பாலனுக்கு முன்னால் நின்றிருந்தபோது லேசாக நடுங்கினாள். கந்தர்வன் கோவிலின் மூச்சுக் காற்றைப்போல ஒரு மெல்லிய காற்று வீசியது. கோவிலைச் சுற்றி உள்ள இடத்தில் அந்தக் காற்று ஒரு சிறு ஓசையை உண்டாக்கியது. பாப்பியின் முகம் பிரகாசமாக இருந்தது. பெண்களின் முகத்தை அழகாக ஆக்கக் கூடிய வெட்கத்தின் அடையாளம்- ஒரு பிரகாச மான புன்னகை- அவளுடைய முகத்தில் தெரிந்தது. பாலன் இரண்டு அடிகள் முன்னோக்கி வைத்தான். பாப்பியின் இளமை அவளுடைய மார்பில்  ஒரு மாறுபாட்டை உண்டாக்கியிருந்தது. அவளுக்கு பதினெட்டு வயது நடந்து கொண்டிருந்தது.

பாலன் அவளுடைய கையைப் பிடித்து மெதுவாக அழுத்தினான். அவள் தன் முகத்தை உயர்த்தினாள்.


அவர்களின் பார்வைகள் சந்தித்தன. அடுத்த நிமிடம் பாலனின் பிடி விலகியது. அவள் அங்கிருந்து ஓடினாள்.

அடுத்த நாள் முதல் அவள் மாமரத்தடிக்கு வரவில்லை. ஒரு ரவிக்கை வேண்டுமென்று தன் தாயிடம் அவள் வற்புறுத்திக் கேட்டாள். பாலனைக் காணும்போது பாப்பி ஓடி ஒளிந்து கொண்டிருந்தாள்.

பாலன் பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி பெற்றான். திருவனந்தபுரத்தில் இன்டர்மீடியட்டில் அவன் சேர்ந்தான். அதன் மூலம் அவனுடைய உலகம் மேலும் பெரிதானது. படித்த, நாகரீகமான நண்பர்கள், நாகரீக இளம்பெண்கள்- இப்படிப்பட்ட குதூகலமான அந்த வாழ்க்கையில் கடந்தகால நினைவுகள் குழி தோண்டி மூடப்பட்டன என்பதுதான் உண்மை. அந்த வருடத்தின் விடுமுறையின் போது பாலன் சென்னையைச் சேர்ந்த சில நண்பர்களுடன் சேர்ந்து தென்னிந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் சென்றான். அடுத்த வருடம் ஓண விடுமுறையில் பாலன் வந்திருந்த போது அவனுடன் நான்கைந்து நண்பர்களும் இருந்தார்கள். வயல் பக்கம் காற்று வாங்குவதற்காக அவர்கள் சென்றிருந்தபோது மாமரத்திற்குக் கீழே புள்ளி போட்ட ரவிக்கை அணிந்து பாப்பி நின்று கொண்டிருப்பதை பாலன் பார்த்தான்.

நான்கு வருடங்கள் கழித்து பாலன் பி.ஏ.வில் தேர்ச்சி பெற்றான். திருவனந்தபுரத்திலிருந்த ஒரு பெரிய பென்ஷன் வாங்கிக் கொண்டிருந்த அதிகாரியின் மகளை அவன் திருமணம் செய்தான். திருமணத்திற்குப் போய் வந்த ஊர்க்காரர்கள் மணப் பெண்ணின் அழகைப் பல வகைகளிலும் புகழ்ந்து கொண்டிருந்தார்கள்.

ஒருநாள் பாலனும் அவனுடைய மனைவியும் வீட்டுக்கு வந்தார்கள். மனைவியை வீட்டில் விட்டு விட்டு, அவன் இங்கிலாந்துக்குப் புறப்பட்டான்.

ஒரு நகரத்தைச் சேர்ந்த இளம் பெண் மாலை நேரங்களில் மாமரத்திற்குக் கீழே வந்து நின்று காற்று வாங்கிக் கொண்டிருப்பாள். குங்கும நிறத்தில் இருக்கும் மனிதர்கள் வாழும் மேற்குத் திசையில் இருக்கும் அந்த நாட்டுக்கு அவளுடைய கணவன் போயிருக்கிறான். பிரியும் நேரத்தில் அவன் பல உறுதிமொழிகûயும் அவளுக்குக் கொடுத்தான். ஆனால், அவளுடைய உள்மனது எப்போதும் படு குழப்பத்திலேயே இருந்தது. வெள்ளைக்காரப் பெண்களின் புன்னகை இருப்பதிலேயே மிகவும் வசீகரமாக இருக்கும் என்பதையும் அது அவர்களை அழகு மிக்கவர்களாகத் தோன்றச் செய்யும் என்றும் அவன் அவளிடம் கூறுவதுண்டு. ஆனந்தம் நிறைந்து ஓடிக் கொண்டிருக்கும் லண்டன் வாழ்க்கைக் கிடையில்  திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஒரு அப்பாவிப் பெண்ணி டம் செய்த சபதம் ஞாபகத்தில் இருக்குமா என்ன? கல்வி இல்லை, சொல்லிக் கொள்கிற மாதிரி ரசிப்புத் தன்மை இல்லை, கணவனை ஒருமுறைகூட சந்தோஷப்படுத்தவும் முடியவில்லை. அவள் கடவுளைத் தொழுதாள். எவ்வளவு பெரிய உயர்வுகளை அங்கு அடைந்தாலும், சாதாரணப் பெண்ணான தன்னை மறக்காமல் அவன் இருக்க வேண்டும் என்று அவள் கடவுளிடம் கேட்டுக்கொண்டாள்.

அவள் அனுப்பிய கடிதங்கள் ஒவ்வொன்றும் கண்ணீரில் எழுதப்பட்டவையாக இருந்தன. "என்கிட்ட செய்த சபதங்களை மறந்துடாதீங்க.'' அவள் எழுதுவாள்: "நான் இப்படியெல்லாம் நினைக்கிறேன்னு நீங்க வருத்தப்படக் கூடாது. நான் உலகம்னா என்னன்னு தெரியாத ஒரு பொண்ணு. உங்களுக்கு அறிவுரை கூறக்கூடிய அதிகாரம் எனக்கு இல்ல. நான் நீங்க நல்லா இருக்கணும்னு எப்பவும் கடவுள்கிட்ட வேண்டிக்கிட்டே இருக்கேன்!' இப்படி திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அந்த நாகரீகப் பெண் கடிதம் எழுதுவாள். தன் கணவன் எப்படியெல்லாம் அன்பாக நடந்தான் என்பதை அவள் நினைத்துப் பார்ப்பாள். அவனுடைய கறுமையான, அடர்த்தியான புருவங்கள்... அவனுடைய தோற்றம்... ஒவ்வொன்றும் அவளுடைய மனதிற்குள் தோன்றும். அவை தனக்கு மட்டுமே சொந்தம்- அதாவது தன்னுடைய சொத்து என்று அப்போது அவள் நினைப்பாள்.

இப்படி பலவிதப்பட்ட சிந்தனைகள் ஓட நின்றிருந்த அவளுடைய  கண்களில் கண்ணீர் நிறைந்திருந்தது. சற்று தூரத்தில் நின்றவாறு பாப்பி  அவளையே ஆச்சரியம் தொனிக்க பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய அணிகலன்களையும் பாதம் வரை தொங்கிக் கொண்டிருந்த புடவையையும் அவள் கூர்மையாகப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள். உண்மையிலேயே அந்தப் பெண் ஒரு தேவதைதான்!

பாப்பி மெதுவாக அருகில் சென்று அவளிடம் கேட்டாள்:

“என்ன, அழுறியா?''

அந்த திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பெண் பாப்பியை அலட்சியமாகப் பார்த்தாள்.

நான்கு வருடங்கள் ஓடி முடிந்தன. பாலன் திரும்பி வந்தான். அவனை உயர்நீதிமன்றத்தில் ஒரு நீதிபதியாக நியமித்தார்கள்.

அந்த கிராமம் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தது. அதற்கு ஒரு மிகப் பெரிய நீதிபதியின் பிறந்த மண்ணாக ஆகக் கூடிய அதிர்ஷ்டம் கிடைத்திருக்கிறது. அந்த வழியேதான் ஆலப்புழையிலிருந்து திருவல்லா செல்லும் சாலை போகின்றது. ஒரு ஆங்கில நடுத்தரப் பள்ளி, ஒன்றிரண்டு கயிறு தொழிற்சாலைகள். இவை எல்லாமே இப்போது அங்கு இருக்கின்றன.

அந்த மாமரத்திற்குக் கீழே இப்போதும் சிறார்கள் கூடுவதுண்டு. அந்தப் பாட்டுகளைப் பாடுவதுண்டு.

“காற்றே வா! கடலே வா...!'' அதை இயற்றிய கவிஞன் யாரென்று யாருக்குமே தெரியாது. தாத்தாக்களும் பாட்டிகளும் காலப் போக்கில்- வாழ்க்கையில் முக்கிய சம்பவங்கள் நடைபெற்ற இளம் பருவத்தில் கேட்ட அந்தப் பாடல் வரிகளை மறந்தே போய் விட்டார்கள். ஆனால், அவர்கள் இப்போது அந்த வரிகளை நினைத்துப் பார்க்கிறார்கள். அந்தப் பாடலை இயற்றிய கவிஞன் யாரென்று அவர்களுக்கும் சொல்லத் தெரியவில்லை.

அந்த கந்தர்வன் கோவில் இடிந்து விழுந்து கிடக்கிறது. மாமரத்தில் காய்க்கும் மாங்காய் கடுக்காயைப்போல மிகவும் சிறியதாகிவிட்டது. சிறார்கள் ஒரே நேரத்தில் இரண்டு மாங்காய்களை வாய்க்குள் போடுகிறார்கள்.

அன்றொரு நாள் மாலை நேரத்தில் சாலையில் ஒரு கார் வந்து நின்றது. அதற்குள்ளிருந்து ஐம்பது வயது மதிக்கக் கூடிய ஒரு மனிதர் கீழே இறங்கினார். அவருடைய தலைமுடி முழுமையாக நரைத்திருந்தது.

அது வேறு யாருமல்ல- பாலகிருஷ்ணன்தான். நீதிபதியான அவருக்குப் பின்னால் அந்த ஊரின் முக்கியமான மனிதர்கள் பவ்யமாக நின்றிருந்தார்கள். அவர்களிடம் குசலம் விசாரித்தவாறு அவர் மாமரத்தடியை நோக்கி நடந்தார்.

அந்தப் பழைய மாமரம் ஒரு மாம்பழத்தைத் தந்து அவரை வரவேற்றது. அவர் நடந்து செல்லும்போது, அவருக்கு முன்னால் ஒரு மாம்பழம் விழுந்தது.

சிறார்களில் சிலர் அந்த மாம்பழத்தை நோக்கி ஓடினார்கள். ஆனால், அதற்குள் நீதிபதி அதைத் தன் கையில் எடுத்துக்கொண்டு விட்டார். மாம்பழத்தைக் கையில் வைத்துக்கொண்டு அவர் மேலே பார்த்தார். காற்று பட்டு கிளைகள் ஆடிக்கொண்டிருந்தன.


“பாலா!''

இயந்திரங்களின் ஆர்ப்பரிப்பு நிறைந்த லண்டன், காதல் வயப்பட்ட மனைவியின் இனிமையான சிரிப்பால் மகிழ்ச்சி நிறைந்திருக்கும் வீடு, மதிப்பு நிறைந்த நீதிபதி பதவி- இப்படி பலவிதப்பட்ட விஷயங்கள் அடங்கிய வாழ்க்கைக்கு மத்தியில் ஆனந்தம் நிறைந்த இளம்பருவத்து நினைவுகள் அவருடைய மனதில் வந்து மோதிய வண்ணம் இருந்தன. நீதிபதி திரும்பிப் பார்த்தார்.

உடல் மெலிந்து- சொல்லப்போனால் எலும்புக் கூடாகிப் போன ஒரு உருவம் அவரைப் பார்த்து மனம் குளிர சிரிக்கிறது. அந்த வாயில் பல் ஒன்றுகூட இல்லை. நீதிபதி உற்றுப் பார்த்தார்.

“ஒரு காற்றும் காற்றல்ல- பெரும் காற்றும் காற்றல்ல- மாவேலிக் குன்னத்தின் காற்றே வா! கடலே வா! கடல் மோதி, ஒரு மாங்காயைத் தா!: சிறுவர்கள் பாடிக்கொண்டிருந்தார்கள்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.