Lekha Books

A+ A A-

கள்ள நோட்டு - Page 2

kalla nottu

அரசாங்கத்தின் முக்கிய வேலையே சட்டம் உண்டாக்குவது என்பதாக இருந்தது. நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடியபோது, அரசாங்கம் புதிய அறிவிப்புகளுடன் முன்னால் வந்து கொண்டிருந்தது.

உங்களின் வீடுகளின் முன்னால் இருக்கும் பூந்தோட்டங்களை விவசாயம் செய்யக் கூடிய இடங்களாக மாற்றுங்கள்!

அதுவும் முடிந்தது. அப்படியும் பஞ்சம் தீர்ந்தபாடில்லை. பட்டினியால் தினமும் மக்கள் செத்துக் கொண்டிருந்தனர். சவங்களிடமும் ரூபாய் நோட்டுகள் இருந்தன. பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது? இப்போது அரசாங்கம் ஒரு புதிய சட்டத்தை உண்டாக்கியது. குறிப்பிட்ட அளவுக்கு மேல் தானியத்தை கையில் வைத்திருப்பவர்கள் அதை அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிட்டு, அதற்கு ஒரு விலை போட்டு வாங்கிக் கொள்ளலாம். அது ஒரு நல்ல அறிவிப்புதான் என்றாலும், அதனால் அரசாங்கத்திற்கு பெரிதாக ஒன்றும் கிடைக்கவில்லை. அரசாங்கம் கொடுக்கும் விலையைவிட மூன்று நான்கு மடங்கு அதிகப் பணம் கொடுத்து வாங்கி, அதை ஐந்திலிருந்து பத்து மடங்கு அதிகம் வைத்து மக்களிடம் விற்பதற்கு பெரிய வியாபாரிகள் தயாராக இருந்தார்கள். அவர்கள் பக்கம் நிற்பதைத்தான் அதிகாரிகளும் விரும்பினார்கள்.

காரணம்- வியாபாரிகளிடமிருந்து அவர்களுக்குக் கிடைக்கக் கூடிய லஞ்சப் பணம். அவர்களிடம் இருப்பது கள்ள நோட்டா என்று கேட்க யாருக்கும் தைரியம் கிடையாது. அப்படி யானால், கள்ள நோட்டு எங்கிருந்துதான் வந்தது? மக்களை இப்படியொரு கேள்வியைக் கேட்க வைத்த ஒரு சம்பவம் அரசாங்கத்தின் டிப்போவில் நடந்தது. ரேஷன் கார்டுகளுடன் அங்கு மக்கள் ஈயைப்போல மொய்த்துக் கொண்டிருந்தனர். ஐந்து பேர்களுக்கான ரேஷன் கார்டுடன் எலும்பும் தோலுமாய் இருக்கும் ஒரு சிறு பெண் கூட்டத்தை நெருக்கிக் கொண்டு டிப்போ ஊழியர் முன் போய் நின்றாள். அவள் கையில் ஒரு புதிய பத்து ரூபாய் நோட்டு இருந்தது. "இந்தக் கள்ளநோட்டு உனக்கு எங்கே இருந்து கிடைச்சது?” என்று அந்த மனிதன் கேட்டபோது, அவள் வெலவெலத்துப் போனாள். அழுதவாறே தன் தாய் கொடுத்தனுப்பியதாக அந்தச் சிறு பெண் சொன்னாள்.

இந்தச் சம்பவத்தைச் சொன்ன போலீஸ்காரன் அந்தச் சிறு பெண்ணையும் அழைத்துக் கொண்டு அவளின் தாயிடம் சென்றான். அவர்கள் பட்டாளக் கேம்ப்பிற்குப் பக்கத்திலிருந்த ஒரு மரத்தின்கீழே இருந்த ஒரு குடிசையில் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தார்கள். குடிசைக்குப் பக்கத்தில் நின்று அந்தப் பெண்ணின் தாயை அவன் அழைத்தான்.

“அம்மா எந்திரிக்க முடியாமப் படுத்துக் கிடக்கிறாங்க'' என்று அழுதவாறே அந்தப் பெண் சொன்னாள். அந்தப் போலீஸ்காரன் முரட்டுத்தனத்துடன் வாசல் கதவு அருகே போனான்.

மூத்த மகள் வீட்டில் இல்லை. அவளைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் இருந்தான் அவன். ஆனால், அவள்தான் வீட்டில் இல்லையே!

அந்தப் பெண்ணின் தாய் இறந்துபோன சவத்தைப்போல எந்தவித அசைவும் இல்லாமல் படுத்துக் கிடந்தாள். அவளுக்குப் பக்கத்தில் செத்துப்போன மாதிரி மூன்று குழந்தைகள்! போலீஸ் காரனைப் பார்த்ததும் அவர்கள் எல்லாரும் பயந்துபோய் விட்டனர். “கள்ள நோட்டு உங்களுக்கு எங்கே இருந்து கிடைச்சிச்சு?' என்று அவன் கேட்டபோது, அந்தத் தாய் சலனமே இல்லாமல் கிடந்தாள். அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

சில நிமிடங்கள் கழித்து அந்தத் தாய் பேசினாள்: “எங்களை நீங்கதான் காப்பாத்த ணும். கடவுள், எஜமான் உங்களைக் காப்பாற்றுவார். நாங்க சரியா சாப்பிட்டு ரெண்டு வருஷமாச்சு. எங்களுக்கு ரேஷன் கார்டு இருக்கு. ஆனா, அதை வாங்கப் பணம் இல்ல. ஏதாவது விஷத்தைக் குடிச்சு செத்துடலாமான்னு பார்த்தோம். அப்போதான் கடவுள் காப்பாத்தினாரு. எஜமான், நீங்கதான் எங்களைக் காப்பாத்தணும். கள்ள நோட்டு அதுன்னு எங்களுக்குத் தெரியாது!''

சொல்லி முடித்த அந்தத் தாய் தன் குடும்பத்தைப் பற்றித் தெளிவாக விவரித்தாள். அவளின் கணவன் ஒரு தொழிலாளியாக இருந்தான். போர் ஆரம்பித்தவுடன் அவனுக்கு வேலை இல்லாமற் போனது. பஞ்சம் வந்ததும், கணவன் செத்துப்போனான். நான்கு பெண் குழந்தைகளும் தாயும் கஷ்டப்பட்டு வாழ வேண்டிய நிலை. மூத்த மகள் மட்டும்தான் வேலை செய்கிற அளவிற்கு உடல் தெம்பு உள்ளவள். ஆனால், அவளுக்கு வேலை கிடைத்தால்தானே! அவள் கொண்டு வரும் தேங்காய் மட்டையை வைத்து, கயிறு பிரிப்பார்கள். அதற்குக் கூலியாக அப்படியொன்றும் அதிகமாகக் கிடைக்காது. அரை ரூபாய் கிடைக்கும். அதை வைத்துக் கொண்டு அவர்கள் என்ன செய்வார்கள்? தாங்க முடியாத கஷ்டம்தான். இருந்த வீட்டை கணவன் வாங்கிய கடனுக்காக, பணம் கொடுத்தவர்கள் எடுத்துக் கொண்டார்கள். இவ்வளவு சொன்ன அந்தத் தாய் கள்ள நோட்டு எங்கே இருந்து கிடைத்தது என்பதை மட்டும் கூறவே இல்லை.

போலீஸ்காரன் அவளை மிரட்டினான். “அடிச்சு எலும்பை உடைச்சிடுவேன்'' என்று உறுமினான். அப்போது அந்தப் பெண் சொன்னாள்: “ஒரு ஆள் கொடுத்தாரு...''

“யார்?''

யார் என்று அவளால் பெயர் சொல்ல முடியவில்லை.

“இன்னும் எத்தன ரூபா இருக்கு?''

“அவ்வளவுதான். ஒரே நோட்டுதான். வேற இல்ல...''

அதோடு போலீஸ்காரன் விடவில்லை. மேலும் மிரட்டினான். விளைவு- இன்னும் நோட்டுகள் இருப்பதாக அந்தப் பெண் ஒப்புக் கொண்டாள். ஒரு பானைக்குள் கைவிட்டு ஒரு பழைய துணியால் கட்டப்பட்ட பொட்டலத்தை எடுத்தாள். அதை அவிழ்த்தபோது பத்து ரூபாய் நோட்டுகளும், நூறு ரூபாய் நோட்டுகளும் வெளியே வந்தன. மொத்தம் ஆயிரத்து ஐநூறு ரூபாய் இருந்தது. எல்லாமே புத்தம் புதிய நோட்டுகள்! பணத்தைக் கொடுத்த ஆள் யாரென்று சொல்லத் தெரியவில்லை. “நல்ல இருட்டா இருந்துச்சு. யாரோ பெரிய ஆள் மாதிரிதான் இருந்தாரு. மூத்த மகளை அவர் கூட அனுப்பி வச்சா, தானே காப்பாத்துறதா சொன்னாரு!''

மூத்த மகளுக்குப் போக விருப்பமில்லை. இருந்தாலும் அவள் போனாள்.

நடந்தது அவ்வளவுதான்.

அந்தக் கள்ள நோட்டு வழக்கு நடந்து கொண்டிருந்தபோது, கள்ள நோட்டை வாங்கிக் கொண்டு விற்பனை செய்யப்பட்ட மகளைப் பற்றித் தெரிய வந்தது. அந்தப் போலீஸ்காரன் அந்தத் தாயை அழைத்துக் கொண்டு சென்று மகளைக் கண்டுபிடித்தான்.

பட்டாளக் கேம்ப்பை அடுத்து இருக்கும் வயலில் கூட்டமாக மக்கள் நின்றிருந்தனர். என்னவென்று சென்று பார்த்தபோது, ரத்தம் புரண்ட ஒரு கட்டு கள்ள நோட்டை நெஞ்சோடு சேர்த்துப் பிடித்தவாறு அந்தப் பெண்ணின் மூத்த மகள் இறந்து கிடந்தாள். அவளின் மார்புப் பகுதி திறந்து கிடந்தது. உடுத்தியிருந்த ஆடையின் முன்பக்கம் முழுவதும் ரத்தம்.

Page Divider

 

+Novels

சபதம்

சபதம்

March 10, 2012

வேதகிரி

வேதகிரி

March 13, 2012

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel