Logo

என் பம்பாய் நண்பர்கள்

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 6541
En Bombai Nanpargal

ன் வாழ்க்கையில் ஞாபகத்தில் நிற்கும் சில வருடங்களை நான் பம்பாய் நகரத்தில் செலவிட்டேன். வாழ்க்கையில் சுவாரசியங்களும் விஷத் தன்மைகளும் நிறைந்த பல பக்கங்களைப் பார்க்கவும் புரிந்துகொள்ளவும் அனுபவிக்கவும் என்னைத் தூண்டிய அந்தப் பெரிய நகரத்தில் எனக்கு நிறைய நண்பர்களும் உண்டு. பல நேரங்களில் தூரத்தில் இருக்கும் அந்த தனித்துவ குணம் கொண்ட நண்பர்களைப் பற்றி நான் நினைத்துப் பார்ப்பதுண்டு.

பம்பாய்க்குப் போகும்போதெல்லாம் அவர்கள் அனைவரையும் போய் பார்ப்பதை நான் ஒரு வழக்கமாகவே வைத்திருக்கிறேன். அவர்களுக்கு என்னைப் பார்க்க முடியாத ஒரு கவலை இருக்கவே செய்கிறது.

கடந்த முறை நான் பம்பாய்க்குச் சென்றிருந்த போது அவர்களில் பலரையும் பார்க்க முடியாமல் ஏமாற்றமடைய வேண்டியதிருந்தது. அவர்கள் எங்கு போனார்கள்? பம்பாயை விட்டுப் போய் விட்டார்களா? அல்லது வாழ்க்கை என்ற நதி இறுதியில் பாய்ந்து விழும் கண்ணுக்குத் தெரியாத அந்தப் பள்ளத்திற்குள் அவர்களும் மறைந்து போய் விட்டார்களா? என்னவோ? எதுவாக இருந்தாலும், அந்த நண்பர்கள் இப்போதும் என்னுடைய மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மாலை நேரத்தின் மர நிழல்களைப்போல, என்னுடைய இலக்கிய படைப்புக்களில் அவர்கள் அமைதியாக நடந்து வந்து கொண்டிருப்பதை விலக் கவோ அழிக்கவோ என்னால் முடியவில்லை. அவர்களில் ஒவ்வொரு ஆளின் தோற்றமும் நடத்தையும் ஆடைகள் அணிவதும் சிறப்பு குணமும் குறும்பத்தனங்களும் சேர்ந்த வினோத உருவங்கள் என்னுடைய இதயச் சுவரில் தொங்கிக் கொண்டிருப்பதை அகற்றி வைக்க என்னால் முடியவில்லை. அவர்களுக்கு மட்டுமே சொந்தமான பாட்டுகளும் முழக்கங்களும் கூப்பாடுகளும் என் இதயமெனும் தட்டெழுத்து இயந்திரத்தில் இப்போதும் கேட்டுக் கொண்டிருக்கின்றன. அந்த நண்பர்களில் பலரின் பெயர்கள் எனக்குத் தெரியாது. நான் அவர்களுக்கு என் மனதில் தோன்றியபடி ஒவ்வொரு புதிய பெயரையும் கற்பனை பண்ணி வைத்திருக்கிறேன். அது மட்டுமல்ல- நான் அவர்களுடைய அமைதியான ரசிகன் என்று அவர்களுக்கு இதுவரை தெரியாது. அதுதான் எங்களுக்கிடையே இருக்கும் உறவின் இன்னொரு விசேஷம்.

அவர்களில் நான்கைந்து பேரைப் பற்றி நான் இங்கு கூறப் போகிறேன்.

ரோமியோவும் ஜுலியட்டும்

காதலின்- ஆணுக்குப் பெண்ணிடமோ பெண்ணுக்கு ஆணிடமோ இரண்டும் சேர்ந்தோ உண்டாகிறது என்று கூறப்படும் அந்த மனரீதியான நிலைமையின் சிறப்பையும் பாதிப்புகளையும் பற்றி நான் எவ்வளவோ படித்திருக்கிறேன். காதலைப் பற்றி எவ்வளவோ சிறுகதைகளையும் நான் எழுதியிருக்கிறேன். ஆனால், அந்த ஆண்- பெண் காதல் என்பது, உணர்ச்சியின் ரசாயன செயல்பாட்டால் விஷக்கறை அழிந்த சுயநலம் மட்டுமே என்று தனிப்பட்ட முறையில் நம்பிக் கொண்டிருந்தவன் நான். என் நம்பிக்கையை முதலில் கேலி செய்தது "ரோமியோ- ஜூலியட்” ஆகியோரின் காதல் உறவுதான். எட்டு வருடங்களுக்கு முன்பு நடந்த கதை அது.

பம்பாயில், க்வின்ஸ் சாலைக்கு அருகில் உள்ள, அரண்மனை யைப் போன்ற ஒரு அலுவலகத்தில் நான் வேலை பார்த்தேன். மதிய நேர உணவு முடிந்து, நான் ஓய்வு அறையில் இருக்கும் சோஃபாவில் சாய்ந்து படுத்திருப்பேன். அலுவலகக் கட்டிடத் திற்குப் பின்னால் திறந்து கிடக்கும் ஒரு சிறிய மைதானம் இருந்தது. அதன் எல்லையில் இரண்டு மூன்று பூ மரங்கள் நின்றிருந்தன. சோஃபாவில் சாய்ந்து, சிகரெட் புகைத்தவாறு நான் முன்னால் இருந்த பெரிய சாளரத்தின் வழியாக மைதானத்தைப் பார்த்தவாறு படுத்திருப்பேன். காலப்போக்கில் அந்தப் பூ மரங்களில் ஒன்றிற்குக் கீழே எப்போதும் இருக்கும் இரண்டு உருவங்கள் என்னுடைய கவனத்தை ஈர்க்க ஆரம்பித்தன.

ஒன்று மிகவும் உயரமாக இருக்கும் ஆண்- மிகவும் அழுக்கடைந்து போயிருக்கும் ஒரு அவலட்சணமான உருவம். பம்பாய் தெருக்களில் குப்பைத் தொட்டிகளில் இருந்து பொறுக்கி எடுத்த எல்லாவிதமான துணித் துண்டுகளும் அவனுடைய உடலில் தொங்கிக் கொண்டிருந்தன. தாடி ரோமங்கள் வளர்ந்து மூடிய நீளமான முகம். ஏதோ மாலுமி வீசி எறிந்துவிட்டுப் போன பெரிய ஒரு நீலநிறத் தொப்பியை அவன் தலையில் வைத்திருந்தான். கப்பல் விபத்தில் சிக்கி, ஆள் அரவமற்ற ஏதோ ஒரு தீவில் ஆறு வருடங்கள் அலைந்து திரிந்து வரும் ஒரு கறுப்பு இன கப்பல் ஊழியனோ என்று திடீரென்று அவனைப் பார்த்தால் தோன்றும்.

இன்னொரு உருவம்- பெண். அழகியாக இல்லையென் றாலும், அவலட்சணமானவள் அல்ல. கறுத்து மெலிந்த குள்ள சரீரம். கொழுத்து, திரண்டு, அசாதாரணமாகத் தோற்றமளிக்கும் மார்பகங்கள். மணிக்கட்டிலிருந்து முழங்கை வரை ஒரே மாதிரி பச்சை குத்திய கைகளில் ஐந்தாறு கண்ணாடி வளையல்களும், கழுத்தில் கறுப்பு நிறத்தில் கல் மாலையும் அணிந்து, சிறிய ரவிக்கையும் சிவப்பு நிறத்தில் கிழிந்த புடவையும் அணிந்து, அழகாகப் புன்னகைக்கும் ஒரு இளம் வயதுப் பிச்சைக்காரி.

அந்த உயரமான மனிதன் ஒரு கண் பார்வை இல்லாதவன். சில நேரங்களில் அவன் சில மிருகங்களின் குரல்களை எழுப்புவான். அவனுடைய செயல்களைப் பார்க்கும்போது ஒரு பைத்தியக்காரனாக இருப்பானோ என்று தோன்றும். ஆனால், அந்த இளம் பெண் கைகளால் இடும் கட்டளையைக் கேட்டவுடன் அந்த அரக்கன் ஒடுங்கிப் போய் விடுவதை நாம் பார்க்கலாம்.

பெரும்பாலும் அவர்களுடைய நடத்தை காதலன்- காதலி நடந்து கொள்வதைப் போலவே இருக்கும்.

நான் அவர்களுக்கு "ரோமியோவும் ஜுலியட்டும்” என்று பெயர் வைத்தேன். ஜுலியட் வெளியிலிருந்து உணவைப் பிச்சை எடுத்துக் கொண்டு வருவாள். அவர்களுடைய மதிய உணவும் ஒரு மணிக்குத்தான். பூ மரத்தின் கிளையில் ஒரு பெரிய மூட்டை தொங்கிக் கொண்டிருந்தது. அவர்களுடைய விரிப்பும் பாத்திரங்களும் சில கருவிகளும் அந்தத் துணி மூட்டையில் இருந்தன. அவள் மரத்தில் ஏறி, துணி மூட்டையில் இருந்து ஒரு பழைய தட்டையும் குவளையையும் வெளியே எடுத்து, கீழே இறங்குவாள். கொண்டு வந்த எச்சில் சாப்பாட்டை அதில் கொட்டி, பிறகு இருவரும் சாப்பிட உட்காருவார்கள்.

அந்தப் பார்வை தெரியாத மனிதன் அவசர அவசரமாக வாரி விழுங்குவான். உணவு கையில் கிடைத்தவுடன், அவனுக்குத் தன் சினேகிதியைப் பற்றிய நினைவே முழுமையாக இல்லாமல் போய்விடும். எனினும், அவனுக்குப் போதும் என்று தோன்றும் அளவிற்கு சாப்பிடுவதற்கு அவள் கொண்டு வந்திருப்பாள். அந்த எச்சில் சாப்பாட்டின் எச்சிலை அவளும் சாப்பிடுவாள்.

சாப்பிட்டு முடித்து இருவரும் ஓய்வெடுப்பதைப் பார்ப்பதற்கு மிகவும் சுவாரசியமாக இருக்கும். ரோமியோ ஜுலியட்டின் மடியில் தலையை வைத்துப் படுத்திருப்பான். அவள் அவனுடைய அழுக்கடைந்த தலையில் பேன் எடுத்து அவற்றைக் கொன்று கொண்டிருப்பாள்.


ரோமியோ காதல் உணர்வு பொங்க ஜுலியட்டின் கன்னங்களைத் தடவி, அவளுடைய கல் மாலையைத் திருகி, சுட்டு விரலால் அவளுடைய நிர்வாணமான வயிறை வெறுமனே குத்துவான். சில நேரங்களில் அவனுடைய பருமனான கைகள் மெதுவாக அவளுடைய பருத்த மார்பகங்களிலோ, கீழே மடிக்கு அருகிலேயோ எல்லையைக் கடக்கும்போது, அவள் அவனுடைய கையில் ஓங்கி ஒரு அடி அடிப்பாள். அவன் ஒரு உரத்த சிரிப்புடன் குறும்புத்தனமான குரலை வெளிப்படுத்துவான். காதலை வெளிப்படுத்தும் இடிச் சத்தத்தைப் போன்ற அந்த உரத்த சிரிப்பைக் கட்டாயம் கேட்க வேண்டும்.

அவன் சிகரெட் பெட்டியின் ஈயத் தாளைச் சுருட்டி எடுத்து, அவளுக்கு ஒரு புதிய காதணி செய்து, அவளுடைய காதுகளில் அணிவித்து, அதன் அழகைப் பார்த்து ஆச்சரியப்பட்டு வாயைத் திறந்து படுத்திருப்பான்.

அவன் அவளுடைய நிர்வாணமான வயிறைத் தன்னுடைய நாக்கை நீட்டித் தொட்டு, அவளுடைய கைகளின் விரல்களைக் கடித்து, அவளுடைய தலைமுடியைத் தன் கழுத்தில் சுற்றி, பிறகு எந்தவிதமான அசைவும் இல்லாமல் அவளுடைய நீல நிறக் கண்களைப் பெருமூச்சு விட்டவாறு பார்த்துக்கொண்டே ஷேக்ஸ்பியரின் நாயகனான சாட்சாத் ரோமியோவைப் போல,

“Alack, there lies more peril in thine eye

Than twenty of their Swords''

என்றோ, அவளுடைய காதல் உணர்வு வெளிப்படும் எதிர்வினையைப் பார்த்துக் கவலையுடன்,

“O wilt thou leave me so unsatisfied''

என்றோ, கூறுவதற்கு அவனுக்கு வார்த்தைகள் இல்லை- நாக்கு இல்லை.

ஆனால், சில வேளைகளில் காட்சி சற்று மாறும். அவர்கள் நாய்களைப் போல ஒருவர்மீது ஒருவர் விழுந்து விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். ரோமியோவின் காதல் நடவடிக்கைகள் அதிகமாகும்போது, ஜுலியட் அவனை கட்டுப்படுத்த வேண்டும் என்ற விஷயத்தை மனதில் வைத்துக்கொண்டு, அவனுடைய இடுப்பு எலும்பை அழுத்தி கிச்சுக்கிச்சு மூட்டுவாள். கண் பார்வை தெரியாத அவன் அடுத்த நிமிடம் நெளிந்து பரபரப்பு அடைந்து பின்னோக்கி குதிப்பான். அதைப் பார்த்து அவள் சுட்டுவிரலை அசைத்து குலுங்கிக் குலுங்கிச் சிரிப்பாள்.

அவன் அந்த மரத்தடியை விட்டு வேறு எங்கும் போவதில்லை. உணவைத் தேடி அவள் வெளியே போய்விட்டு, திரும்பி அவள் வருவது வரை அவன் அந்த மரத்தில் சாய்ந்து கவலையுடன் பேந்தப் பேந்த விழித்தவாறு நேரத்தைச் செலவிடுவான்.

அவர்கள் எப்படி வாழ்க்கையில் சந்தித்தார்கள்? பிச்சை எடுத்தாவது சொந்தத்தில் ஒரு வாழ்க்கை நடத்தக்கூடிய உடல் நலமும், சிறிது விருப்பமும் கொண்டிருக்கும் அந்த இளம் பெண், அந்தப் பார்வை தெரியாத மனிதனை எதற்காகத் தன் வாழ்க்கையின் நண்பனாக ஏற்றுக்கொண்டாள்? நான் அதைத் தெரிந்துகொள்ள விரும்பினேன். ஒரு நாள் நான் எங்களுடைய அலுவலகத்தின் காவலாளியாக இருந்த பட்டாணியை அருகில் அழைத்து மெதுவான குரலில் கேட்டேன். “லாலா, மரத்தடியில் இருக்கும் பிச்சைக்காரனும் பிச்சைக்காரியும் அங்கே வந்து எவ்வளவு காலம் ஆச்சு?''

“ஏன் ஸாப்? அந்தப் பன்றிகள் இங்கே வந்து தொந்தரவு தர்றாங்களா?'' -பட்டாணி தன் முறுக்கு மீசையை நீவியவாறு கேட்டான்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லை. நான் சும்மா கேட்டேன். கொஞ்ச நாட்களாகவே அவர்களை நான் அங்கே பார்க்கிறேன்.''

“அவர்களை அங்கேயிருந்து விரட்டிவிடணுமா?''

“வேண்டாம்... வேண்டாம். அந்த அப்பிராணிகள் அங்கே சந்தோஷத்துடன் இருக்கட்டும். அவர்களைப் பற்றி ஏதாவது தெரியுமா லாலா?''

பட்டாணி என்னுடைய கேள்வியைப் புரிந்துகொள்ளாமல் இளித்தான்.

“அந்தப் பெண் அந்த குருடனின் மனைவியா?'' -நான் கேட்டேன்.

“மனைவி!'' -பட்டாணி குலுங்கிக் குலுங்கிச் சிரித்தான். “போன வருடம் ஒரு குதிரை வண்டிக்கு முன்னால் விழுந்து, சாகும் நிலையில் இருந்த அந்தக் குருடனை அந்தப் பெண் பார்த்து, இரக்கம் கொண்டு அவனை அழைத்துக்கொண்டு வந்து அக்கறையுடன் கவனித்தாள். பிறகு அவர்கள் ஒருவரை யொருவர் விட்டுப் பிரியவில்லை''- பட்டாணி அந்த “ரொமான்ஸ்'' விஷயத்தை சுருக்கமாகச் சொன்னான்.

ஒரு நாள் நான் அலுவலகத்திற்குச் செல்லும்போது, அந்த ஜுலியட்டை வழியில் பார்த்தேன்.

“தாயே... அம்டீ பாத்'' என்று உரக்க கெஞ்சுகிற குரலில் நீட்டி முழக்கியவாறு, கட்டிடங்களின் மாடியில் இருந்து முந்தின நாள் இரவில் மீதமிருந்த உணவை வைத்துக்கொண்டு தன்னை யாராவது அழைக்கிறார்களா என்று கவனித்தவாறு, கையில் ஒரு பழைய பாத்திரத்துடன் அவள் நடந்து கொண்டிருந்தாள்.

ஆறு மாதங்கள் நான் அவர்களை அதே நிலையில் பார்த்துக் கொண்டிருந்தேன்.

நான் அந்த அலுவலகத்தின் வேலையை விட்டு விட்டேன். பிறகு, அவ்வப்போது அந்த வழியில் போகும்போது அவர்களை நான் அதே இடத்தில் பார்ப்பேன்.

நான்கு வருடங்கள் கடந்து, நான் மீண்டும் பம்பாய்க்குச் சென்றேன். நான் என்னுடைய பழைய அலுவலகத்திற்குச் சற்று போய்விட்டு வரலாம் என்று தீர்மானித்தேன்.

நான் அந்த ஓய்வு அறையில் இருந்து கொண்டு சாளரத்தின் வழியாக வெளியே பார்த்தேன்.

அந்தப் பூ மரங்கள் வெட்டப்பட்டிருந்தன. அந்தச் சிறிய மைதானம் இல்லாமல் போய் விட்டிருந்தது. அங்கு புதிய பிரம்மாண்டமான வெள்ளை மாளிகைகள் எழுந்திருந்தன.

ஆனால், அங்கு இமயமலையே உயர்ந்து நின்றிருந்தாலும், அந்த மைதானத்தையும் பூ மரத்தையும் காதல் சாகசத்தில் மூழ்கிவிட்டிருக்கும் ரோமியோவும் ஜுலியட்டும் சேர்ந்திருக்கும் அந்தப் பழைய காட்சியையும் என் மனதை விட்டு அகற்றவே முடியாது.

தச்சோளி சுவாமி

நான் வேலை தேடி சமூக சேவையுடனும் பகல் தூக்கத்துடனும் ஒரு நிச்சயமற்ற நிலையில் வாழ்ந்து கொண்டிருந்த காலம். மலபார் ஹில்லுக்கு அருகில் இருக்கும் பாணம் கங்கா கோவில் பகுதியில் இருந்த ஒரு வீட்டில் நான் வசித்துக் கொண்டிருந்தேன். கோவிலுக்கு அருகில் இருக்கும் சத்திரங்களில் சாப்பாடு, குளத்தின் கரையில் தூக்கம் என்று வாழ்ந்து கொண்டிருந்த ஏராளமான மலையாள சுவாமிகள் பாண கங்காவைச் சுற்றி இருந்தார்கள். அவர்களில் ஒரு நண்பர் அவ்வப்போது தன் ஊருக்கு மணி ஆர்டர் எழுதிக் கொடுக்கும்படி கேட்டு என்னைத் தேடி வருவார்- முழங்கால் வரை இருக்கும் ஒரு வேட்டியைக் கட்டி, போர்வையைப் போர்த்தி, நெற்றியில் திருநீறும், கழுத்தில் ருத்ராட்ச மாலையும் அணிந்திருக்கும் ஒரு நடுத்தர வயது மனிதர்.

அந்த வகையில் சுவாமி என்னுடைய குறிப்பிடத்தக்க நண்பராக ஆனார். சுவாமிக்கு ஊரில் மனைவியும் ஆறு பிள்ளைகளும் இருந்தார்கள். மாதத்தில் குறைந்த பட்சம் அறுபது ரூபாய்களையாவது அவர் ஊருக்கு அனுப்பி வைப்பார்.


1940-ஆம் ஆண்டில் பம்பாயில் பெரிய அளவில் பொருளாதார வீழ்ச்சி உண்டானது. ஆனால், சுவாமியை அது எந்த வகையிலும் பாதித்ததாகத் தெரியவில்லை.

அந்த சுவாமியின் பெயரை நான் இங்கு கூறப்போவது இல்லை. நாம் அவரை "தச்சோளி சுவாமி” என்று அழைப்போம்.

அங்கு ஒரு குஜராத்தி, ஒரு புதிய இடத்தில் பெரிய ஒரு கட்டிடத்தைக் கட்டியிருந்தார். அந்த நிலத்தின் ஒரு மூலையில், தெருவுடன் ஒட்டியவாறு ஒரு பழைய சிதிலமடைந்த சிறிய கோவில் இருந்தது. சேட் அந்தக் கோவிலையும் புதுப்பித்து அமைத்தார். கற்சுவருக்குக் கீழே உள்பக்கமாகத் தள்ளி அரை நிலா வடிவத்தில், கிட்டத்தட்ட கால்நடைகள் நீர் பருகும் தொட்டியைப் போல இருந்த ஒரு சிறிய கோவில். கடவுளும் பூசாரியும் மட்டும் சிரமப்பட்டு இருப்பதற்கு இடமிருந்தது.

சேட் நம்முடைய சுவாமியை அந்த கோவிலின் முழு அதிகாரம் படைத்தவராகவும் பூசாரியாகவும் நியமித்தார்.

நிலைமை அப்படி இருக்கும்போது, எனக்கு ஒரு குஜராத்தியின் நிறுவனத்தில் ஒரு தட்டெழுத்து வேலைக்கு நேர்முகத் தேர்விற்கான தகவல் வந்தது. நான் குறிப்பிட்ட நாளன்று காலையில், புதிய சூட் அணிந்து, புதிய பூட்ஸின் கடியைத் தாங்க முடியாமல் நொண்டி நொண்டி, துறைமுகத் திற்குச் செல்லும் "எச்' ரூட் பேருந்தைப் பிடிப்பதற்காக வேகமாக நடந்து போய்க் கொண்டிருந்தேன். நான் நம்முடைய சுவாமி இருந்த கோவிலை நெருங்கினேன்.

சுவாமி உரத்த குரலில் கீர்த்தனம் பாடிக்கொண்டிருந்தார். நீளமான வெள்ளி நிறக் கோட்டும் காந்தி தொப்பியும் அணிந்தி ருந்த குஜராத்திகள் சிலர் கோவிலுக்கு முன்னால் தெருவில் கைகளைக் கூப்பியவாறு தியானத்தில் இருப்பதைப் போல நின்றிருந்தனர். பக்கத்தில் நெருங்க நெருங்க சுவாமியின் கீர்த்தனம் உரத்த குரலில் தெளிவாகக் கேட்க ஆரம்பித்தவுடன், நான் ஆச்சரியப்பட்டு அங்கேயே நின்றுவிட்டேன். சுவாமி கீர்த்தனம் பாடுகிறார்.

"தச்சோளி நல்ல செல்லக் குழந்தை உதயணன்

தச்சோளி நல்ல செல்லக் குழந்தை உதயணன்.”

ஒரு பழைய வடக்கன் பாட்டுப் புத்தகத்தை கடவுளுக்கு முன்பாக விரித்து வைத்துக்கொண்டு, உண்டியல் பெட்டிக்குள் வந்து விழும் நாணயங்களைக் கடைக்கண்களால் பார்த்தவாறு நம்முடைய சுவாமி பக்திப் பரவசத்துடன் உதயணன் பொன்னியத் தங்கக் களரியை நோக்கி போன கதையை நீட்டிப் பாடிக்கொண்டிருந்தார். நீங்கள் அந்தக் காட்சியைச் சற்று சிந்தித்துப் பாருங்கள். அந்த “மதராஸி கீர்த்தனம்'' புரியவில்லை யென்றாலும், பக்தி உணர்வு வெளிப்படும் அந்தப் பாடலின் இனிமையில் தங்களை மறந்து, லட்சாதிபதிகளான அந்த குஜராத்தி வியாபாரிகள் கண்களை மூடிக்கொண்டு, தொழுத வாறு தலைகுனிந்து நின்றிருந்தார்கள். அந்தக் காட்சியைப் பார்த்து சிரிப்பை அடக்க முடியாமல் நான் அங்கேயே நின்றுவிட்டேன். தட்டெழுத்து வேலையும், "எச்” ரூட் பேருந்தும் கிடைக்காமல் போனால் போகட்டும் என்று மனதில் நினைத்து அங்கேயே நின்றுவிட்டேன்.

பக்தர்களைப் பார்ப்பதற்கு மத்தியில் அந்த தச்சோளி சுவாமி என்னுடைய முகத்தைப் பார்த்துவிட்டார். தொண்டையில் தவிடு சிக்கி விட்டதைப் போல சுவாமி சில ஜாலங்கள் செய்து கீர்த்தனத்தை நிறுத்திவிட்டு, தீபத்தை எரியவிட்டு, அடுத்த நிமிடம் பூஜைக்கான ஆடையை அணிந்து கொண்டு மிகவும் உரக்க ஒரு நீண்ட சங்கொலியை முழக்கினார்.

பிறகு நான் அங்கு நிற்கவில்லை.

அந்த தச்சோளி சுவாமி இப்போதும் உயிருடன் இருப்பார் என்றே நினைக்கிறேன்.

சிவாஜி பார்க்கில், இரவு நேரத்தில், நாங்கள் வழக்கமாக சந்திக்கக் கூடிய ஒரு பைத்தியம்தான் "டாக்டர் ஃபாஸ்ட்”.

இரவு வேளையில் சாப்பிட்டு முடித்து, சிவாஜி பார்க் கடற்கரைக்கு நாங்கள் நடக்கச் செல்லும்போது, மைதானத்தில் இருக்கும் ஒரு மரத்திற்குக் கீழே, ஒரு வினோதமான மொழியில் உரத்த குரலில் தனக்குத் தானே பேசிக் கொண்டும், அவ்வப் போது குலுங்கிக் குலுங்கி அழுது கொண்டும் இருக்கும் அந்த வயதான நிர்வாண மனிதனை என்னால் மறக்க முடியவில்லை. ஒவ்வொரு பைத்தியத்திற்கும் ஒவ்வொரு தனிகுணம்... தனித்துவம் என்றுதான் கூற வேண்டும்- இருக்கும். என்னைக் கவர்ந்தது அவனுடைய தனக்குத் தானே பேசிக்கொள்ளும் பழக்கமும், தேம்பி அழுவதும், நிர்வாணக் கோலமும் அல்ல. தனக்கு முன்னால் படுக்க வைத்து அவன் வணங்கிக் கொண்டிருந்த உருவம்தான் என் இதயத்தைத் தொட்டது.

ஈர்க்குச்சி, கிழிந்த துணி ஆகியவற்றைக் கொண்டு உண்டாக்கப்பட்ட ஒரு குழந்தையின் உருவத்தை முன்னால் படுக்க வைத்து, அதைப் பார்த்து அவன் சத்தம் போட்டு அழுவான். கலைத் தன்மையுடன் உண்டாக்கப்பட்ட அந்த உருவ பொம்மை ஒரு பைத்தியக்காரனால் செய்யப்பட்டது என்று யாராலும் நம்ப முடியாது.

அந்த "சிம்ப”லின் ரகசியம் என்ன? அவன் என்ன கூறுகிறான்? அவனைப் பைத்தியக்காரனாக மாற்றிய வாழ்க்கைச் சம்பவம் எது? யாருக்குத் தெரியும்? மனித வாழ்க்கையில் மறைந்து கிடக்கும் ரகசியங்கள் அப்படி எவ்வளவு இருக்கும்?

தன்னுடைய பயங்கரமான வாழ்க்கைக் கதையை நம்மிடம் கூறிக் கேட்கச் செய்ய அவனுடைய மூளை இனி எந்தச் சமயத்திலும் தயாராகப் போவதில்லை. மரணம், அவனுடைய வாழ்க்கைக்கும், வாழ்க்கையின் ரகசியத்திற்கும் இப்போது முழு ஓய்வை அளித்திருக்க வேண்டும்.

மேடம் ப்ளவாட்ஸ்கி

நான்கு வருடங்களுக்கு முன்புதான் நான் மேடம் ப்ளவாட்ஸ் கியை முதல் தடவையாகப் பார்த்தேன்.

நான் சார்னி சாலை சந்திப்பில் கிர்காமிற்குச் செல்வதற்காக ட்ராம் வண்டியை எதிர்பார்த்து நின்றிருந்தேன். அப்போது வயதான ஒரு ஆங்கிலோ இந்தியப் பெண், மெதுவாக என் அருகில் நடந்து வந்து ஒரு குழந்தையின் கள்ளங்கபடமற்ற ஆங்கிலத்தில் சொன்னாள்: “Give me two pice. I want to go to Bori Bunder, I have not only two pice with me'' (எனக்கு இரண்டு பைசாக்கள் தா. நான் போரிபந்தருக்குப் போக வேண்டும். இரண்டு பைசாக்கள்தான் என்னிடம் இருக்கின்றன.)

போரிபந்தருக்குச் செல்வதற்கான ட்ராம் டிக்கெட்டிற்கு ஒரு அணா இல்லாமல் கஷ்டப்படும் அந்தக் கிழவியை நான் கூர்ந்து பார்த்தேன். கணுக்கால் பகுதி வரை இருக்கும் தலையணை உறையைப் போன்ற தடிமனான நீல நிறக் கோடுகள் போட்ட ஆடையும், காலில் பழைய ஹைஹீல் ஷூக்களும் அணிந்து, வெள்ளை நிறத்தில் இருந்த ஒரு கிழவி. வெள்ளை நிறத் துணியால் கட்டப்பட்டிருந்த ஒரு பெரிய மூட்டையை அவள் தன் கையிடுக்குள் இறுகப் பிடித்திருந்தாள். வாயில் பற்கள் எதுவும் இல்லை. ஒரு கிழிந்த ரப்பர் பந்து நசுங்குவதைப் போல, பேசும்போது அந்தக் கிழவியின் கன்னங்களும் வாயும் அசைந்து கொண்டிருந்தன.


எங்கோ பயணம் புறப்பட்டு ஏதோ ஏமாற்றத்தை அடைந்து நிற்பதைப்போல இருந்தது.

நான் பாக்கெட்டிற்குள் தேடிப் பார்த்தேன். அந்த ஆங்கிலோ இந்தியப் பெண்ணின் துரதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். பாக்கெட்டில் சில்லறைக் காசு எதுவும் இல்லை. “கரகர'' என்ற ஆரவார இரைச்சலுடன் என்னுடைய ட்ராமும் வந்து சேர்ந்தது. நான் எதுவும் கூறாமல் வேகமாக ட்ராமில் தாவி ஏறினேன்.

ட்ராம் ஓடிக்கொண்டிருக்கும்போது, அந்த வயதான கிழவியின் உருவம் என் மனதில் தோன்றிக் கொண்டே இருந்தது. அவளுடைய கையிடுக்கில் இருந்த பெரிய மூட்டையையும், பிய்ந்த ரப்பர் பந்தைப் போல இருந்த முகத்தையும் நினைத்துப் பார்த்தேன். கிளி பேசுவதைப் போன்ற அந்த மெல்லிய குரல் மிகவும் அருகில் கேட்பதைப் போல இருந்தது.

சென்ற முறை நான் பம்பாய்க்குப் போயிருந்த சமயத்தில், ஒரு மாலை நேரத்தில் ஒரு மலையாளி நண்பனும் நானும் கிர்காமிற்குச் செல்வதற்காக ட்ராமை எதிர்பார்த்து சார்னி சாலை சந்திப்பில் நின்றிருந்தோம். ட்ராம் வராமல் இருக்கவே, பொழுது போவதற்காக வேறு வழி எதுவும் தெரியாமல், வெறுப்படைந்து நாங்கள் ஒரு ஓரத்தில் நின்றிருந்தபோது, அதோ வந்து கொண்டிருக்கிறாள் நம்முடைய மேடம் ப்ளவாட்ஸ்கி.

“Give me two Pice. I want to go to Bori Bunder. I have got only two pice with me.''

நான் அவளை வியப்புடன் பாதத்திலிருந்து தலை வரை பார்த்தேன். மேடத்திடம் எந்தவொரு மாற்றமும் உண்டாகி யிருக்கவில்லை. அந்த தலையணை உறை சட்டை இருந்தது. ஹை ஹீல் ஷூக்களும் இருந்தன. அவருடைய தனித்துவத்தைக் காட்டும் முக்கிய அடையாளமான அந்த பெரிய மூட்டையும் இருந்தது.

என்னவொரு சோக வரலாறு! போரிபந்தருக்குச் செல்லும் ஒரு ட்ராம் டிக்கெட்டிற்கு ஒரு அணா தயார் பண்ண முடியாமல் நீண்ட நான்கு வருடங்கள் ஆகிவிட்டன. அவள் அந்த சார்னி சாலை சந்திப்பில் சுற்றிக்கொண்டு திரிகிறாள். இதுவரை அவளுக்கு போரிபந்தரை அடைய முடியவில்லை. பம்பாயில் இருக்கும் இருபத்து நான்கு லட்சம் மக்களில் ஒருவனுக்குக்கூட அவளுக்கு ஒரு அரை அணா தரக்கூடிய நல்ல மனம் இல்லை.

நான் சிரித்துவிட்டேன். நான்கு வருடங்களுக்கு முன்னால் அவளை அதே நிலையில், அதே இடத்தில் வைத்துப் பார்த்த கதையை நான் என் நண்பனிடம் சொன்னேன்.

“போரிபந்தருக்குப் போக வேண்டிய அவசியம் என்ன?'' -என் நண்பன் நாணு அவளிடம் திடீரென்று கேட்டான்.

அந்தக் கிழவி பேந்தப் பேந்த விழித்துக்கொண்டு நின்றிருந்தாள். அவளுக்குத் தெரியாது. அவள் அதைப் பற்றி சிறிதும் நினைக்கவில்லை. இதுவரை ஒரு ஆளும் அவளிடம் போரிபந்தருக்குப் போக வேண்டிய அவசியம் என்ன என்பதைப் பற்றி விசாரிக்க முயன்றிருக்க மாட்டார்கள்.

இப்போது இதோ குறும்புத்தனம் கொண்ட ஒருவன் அதையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறான்.

அவளுடைய தர்மசங்கடமான நிலையைப் பார்த்து, பரிதாபப்படுவதைப் போல காட்டிக் கொண்டு நான் சொன்னேன். “மேடம், என் கையில் ஒரு கால் ரூபாய் நாணயம் இருக்கு. மூன்று அணாக்கள் தாங்க...''

“என் கையில் இரண்டு அணாக்கள்தான் இருக்கு'' -அவள் பாக்கெட்டிற்குள் கையை விட்டு ஞாபகம் இல்லாமல் கூறிவிட்டாள்.

“ங்ஹா... ங்ஹா... இரண்டு அணாக்கள் கையில் இருக்குல்ல? அப்படியென்றால் முன்பு சொன்னது பச்சைப் பொய்தானே?''

நாணு வாய்க்கு வந்தபடி அவளைத் திட்டினான்.

பாவம்! நிரந்தரமான உண்மையால், தன்னுடைய பிரியமான பல்லவியின் பற்கள் காணாமல் போனதை அவள் அறியவில்லை.

அடுத்த நிமிடம் அவளுடைய இயல்பு மாறியது. அவளுடைய மூட்டையைத் தட்டிப் பறிப்பதற்காக நேரம் பார்த்துக் கொண்டு நிற்கும் இரண்டு திருடர்கள் என்பதைப் போல எங்களையே வெறித்துப் பார்த்தாள். பிறகு மூட்டையை இறுகப் பிடித்துக்கொண்டு, கழுத்தைச் சாய்த்து, முகத்தை ஒரு மாதிரி வைத்துக்கொண்டு என்னவோ முணுமுணுத்தவாறு அவள் தெருவில் மறுபக்கத்திற்கு நண்டைப்போல நடந்து போனாள்.

“அந்தக் கிழவி நம்மை திட்டிக்கொண்டே போகிறாள்'' -நாணு சிரித்துக்கொண்டே சொன்னான். “எது எப்படியோ, இனி அவளுக்கு போரிபந்தருக்குப் போவதற்கான ஆசை இருக்காது.''

“அது வெறும் நினைப்பு!'' -நான் சொன்னேன். “அவள் அந்தப் பல்லவியைத்தான் இனிமேலும் திரும்பத் திரும்ப சொல்லுவாள். அதன் அர்த்தத்தைப் பற்றி அவள் மறந்துவிடுவாள்.''


“அய்யோ... வயிறு பசிக்குதே! அய்யோ... வயிறு பசிக்குதே!'' -என்ற பல்லவியைத் தொடர்ந்து திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டு கோழிக்கோடு கடைத் தெருவில் இருக்கும் ஒரு குருட்டு பிச்சைக்காரனின் உதவியாளனாக இருக்கும் சிறுவன், ஒரு நாள் பாத்திரத்திற்குள்ளிருந்து சாதத்தை வாரித் தின்று கொண்டிருந்தபோதே, "அய்யோ... வயிறு பசிக்குதே!' என்று, ஞாபகமே இல்லாமல் உரத்த குரலில் கூப்பாடு போட்டுக் கொண்டிருந்த காட்சி என்னுடைய நினைவில் வந்தது.

எங்களுடைய ட்ராம் இன்னும் வந்து சேரவில்லை. ட்ராம் விஷயம் பெரும்பாலான நேரங்களில் இப்படித்தான். வயதான கன்னிப் பெண்களுக்கு வரும் திருமண ஆலோசனையைப் போலத்தான் எப்போதும் அதன் வரவு இருக்கும். காத்திருந்து காத்திருந்து வெறுப்படையும்போது ஒரு பழைய பெரியவர் அப்படியே ஊர்ந்து ஊர்ந்து வருவார். அதைத் தொடர்ந்து பின்னால் ஒரு பதினைந்து ட்ராம்கள் அடுத்தடுத்து ஓசை எழுப்பியவாறு வருவதையும் பார்க்கலாம்.

நான் பொறுமையை இழந்து நான்கு பக்கங்களிலும் கண்களை ஓட்டினேன். ப்ளாட்ஃபாரத்தின் எதிர்பக்கத்தில், ஒரு விளக்குத் தூணின் மீது சாய்ந்து கொண்டு நின்றிருந்த மேடம் ப்ளவாட்ஸ்கியின் உருவம் என் கண்களில் பட்டது. அவள் தனக்கு உண்டான அவமானத்தை நினைத்து கவலையுடன் அசையாமல் முகத்தைக் குனிந்து கொண்டு நின்றிருந்தாள்.

பொழுது போக வேண்டும் என்பதற்காக, மீண்டும் அவளைத் தேடிப் போக நாங்கள் தீர்மானித்தோம்.

நான் நாணுவின் தொப்பியை வாங்கி தலையின் நெற்றிப் பகுதியில் சாய்த்து வைத்து, சட்டைக் காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டு, மேடத்தை நோக்கி புதிய ஒரு நடை நடந்தேன்.

ஒரு "ஜென்டில்மேன்' வருவதைப் பார்த்து அவள் விளக்குத் தூனை விட்டு நகர்ந்து முன்னோக்கி வந்தாள்.

“Give me two pice. I want to go to...''

அந்தப் பல்லவி முழுமையடைவதற்கு முன்பே விளக்கொளி யில் அவள் என்னுடைய முகத்தை அடையாளம் கண்டு கொண்டாள்.

"Ah! you again!''

-அவள் முகத்தைச் சுளித்துக் கொண்டு முதுகை நிமிர்த்தி, சாம்பல் நிற விழிகளைப் பிரகாசமாக்கி, நாயை எதிர்த்து அருகில் வரும் காட்டுப் பூனையைப் போல சீறினாள். தொடர்ந்து அந்த மூட்டையை இறுகப் பிடித்துக் கொண்டு திரும்பி ஓட ஆரம்பித்தாள்.

நானும் ஓடினேன். அவளுக்குப் பின்னால் அல்ல- வந்து நின்று கொண்டிருந்த ட்ராமை நோக்கி.

ட்ராமில் ஏறி நிம்மதியுடன் உட்கார்ந்தபோது, அந்தக் கிழட்டு பிச்சைக்காரியின் உருவம் மனதில் வலம் வந்தது. அந்தக் கிழவியிடம் நான் காட்டிய குறும்புத்தனங்களை நினைத்து எனக்கு வெட்கமாக இருந்தது. அவள்மீது பரிதாபமும் தோன்றியது.

அவள் தன் வாழ்க்கையின் ஒரே எதிரியாக என்னை நினைத்துவிட்டிருப்பாள். அவள் ஒரு குழந்தையை விட அப்பிராணி. “அரை அணா- ட்ராம்- போரிபந்தர்'' என்று வார்த்தைகளைக் கொண்ட கோஷத்தைத் தவிர, புதிய ஒரு பல்லவியை உருவாக்க அவளால் முடியவில்லை. அதற்கான தேவையும் உண்டாகவில்லை. அந்த அரையணா விண்ணப்பத் தைப் பற்றி இதுவரை யாரும் எந்தக் கேள்வியும் கேட்டிருக்க வாய்ப்பில்லை. அவளுடைய அமைதிக் கோட்டையை உடைத்தவர்கள் நாங்கள்தான்.

அவளிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென்று எனக்குத் தோன்றியது.

மறுநாள் சாயங்காலம் நான் சார்னி சாலை சந்திப்பில் ட்ராமை விட்டு இறங்கினேன். மேடம் ப்ளவாட்ஸ்கி அங்கேதான் இருந்தாள்.

“மன்னிக்கணும்...'' -நான் அவளின் அருகில் சென்று ஒரு கால் ரூபாய் நாணயத்தை நீட்டினேன்- “போரிபந்தருக்குப் போ...''

அவள் என்னை அடையாளம் கண்டுகொண்டாள்.

“உன் கால் ரூபாயைச் சாக்கடையில் வீசி எறி. நான் போரிபந்தருக்கு டாக்ஸியில் போக வேண்டும் என்று நினைத்தாலும், அதற்கான பணம் என்னுடைய இந்த மூட்டையில் இருக்கு.''

அவள் பகை உணர்வுடனும் வெறுப்புடனும் என்னைப் பார்த்துக் கொண்டே திரும்பி நடந்து மறைந்தாள்.

அந்தப் பிச்சைக்காரியின் தன்மான உணர்வு என்னை சிந்திக்க வைத்துக்கொண்டே இருக்கிறது.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.