Logo

பகவத் கீதை

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 6848
Bhagavath Geethai

டவுளின் ஆசியுடன் ஆரம்பிப்போம். சங்ஙம்புழ கிருஷ்ணபிள்ளை, ஜோசப் முண்டசேரி, வைக்கம் முஹம்மது பஷீர்- இந்த மூன்று பேரில் உத்தமமான ஆள் யார்? உண்மையிலேயே பெரிய ஒரு விஷயம்தான். தலையைப் பிய்த்துக்கொண்டு சிந்திக்க வேண்டிய சமாச்சாரம்தான். இப்படியொரு பிரச்சினையைக் கிளப்பிவிட்டது யார் தெரியுமா?

ப்ரம்மஸ்ரீ ஏ.கெ.டி.கெ.எம். வாசுதேவன் நம்பூதிரிப்பாடு அவர்கள் தான். மங்களோதயம் புத்தக நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அவர். நல்ல மினுமினுப்புடன், சதைப்பிடிப்பான உடம்புடன், வெளுத்துப் போய் பூவன் பழத்தைப் போல இருக்கும் நல்ல மனிதர் அவர். "அஞ்சாம்ப்ரான்” என்று பயபக்தியுடன் எல்லாரும் அவரை அழைப்பார்கள். கொச்சி மகாராஜாவின் சகோதரியைத்தான் அவர் திருமணம் செய்துகொண்டி ருக்கிறார். திருமணம் என்று கூட அதைக் கூறுவதற்கில்லை. அரண்மனையில் இருந்த தம்புராட்டியை அழைத்துக் கொண்டு வந்து தன்னுடைய தேசமங்கலம் இல்லத்தில் தங்க வைத்துக்கொண்டார். அதற்கு முன்பு அப்படியொரு சம்பவம் நடைபெற்றதே இல்லை. நம்பூதிரியைக் கொண்டு போய் மகாராஜாவின் அரண்மனையில் தங்க வைப்பது வேண்டுமானால் நடந்திருக்கிறது. ஆனால், தம்புராட்டி அரண்மனையில்தான் இருப்பாள். தனக்கு வசதிப்படுகிற மாதிரி நம்பூதிரி அங்கு போய்க் கொள்ளலாம். ஏதாவது பிரச்சினை என்று வந்தால்... அவ்வளவுதான். என்ன நடக்குமென்றே சொல்ல முடியாது. இப்படி அடிபிடியும் கொலையும் நிலவிக்கொண்டிருந்த காலத்தில்தான் தம்புராட்டியை தேசமங்கலம் வீட்டிற்குக் கொண்டு போகிறார் நம்பூதிரி. மனிதர் பயங்கர தைரியசாலி என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

அவர் ராஜகம்பீரத்துடன் திருச்சிவப்பேரூர் மங்களோதயம் நிறுவனத்தின் மேல் மாடியில் பச்சை நிற விரிப்பு விரிக்கப்பட்ட பெரிய மேஜைக்கு முன்னால் அமர்ந்திருக்கிறார். இரண்டு கண்ணாடிகள் இருக்கின்றன. ஒன்று- மேஜை மேல், இன்னொன்று- அவர் முகத்தில். படிப்பதற்கும் அழகிற்காகவும் உள்ளவை அவை. மேஜையைச் சுற்றி வெறுமனே இருக்கும் நாற்காலிகள். நாற்காலிகளுக்குப் பின்னால் பணிவுடன் நின்றுகொண்டிருக்கும் ஆட்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் கவிஞர்கள், இலக்கியவாதிகள். "அடியேன்... அடியேன்... நான்...” -இப்படி வசனங்கள்.

யாரும் அவருக்கு முன்னால் உட்கார மாட்டார்கள்.

இந்த விஷயங்கள் எதுவுமே தெரியாமல் நான் முதல் முறையாக அவருக்கு முன்னால் போய் நின்றேன். கதர் ஜிப்பா, கதர் வேஷ்டி. கையில் ஒரு குடை. வேஷ்டியை மடித்துக் கட்டியிருக்கிறேன். நான் போனபோது சில ஆட்கள் நாற்காலிகளுக்குப் பின்னால் பயபக்தியுடன் நின்று கொண்டிருந்தார்கள். போன வேகத்தில் அவரை வணங்கிவிட்டு அவருக்கு முன்னால் இருந்த நாற்காலியில் உட்கார்ந்தேன். குடையை அவரின் மேஜை மேல் வைத்தேன். பிறகு ஜிப்பா பாக்கெட்டில் இருந்து தீப்பெட்டியையும் பீடியையும் எடுத்தேன். பீடியைப் பற்ற வைத்துப் புகைக்க ஆரம்பித்தேன். தீக்குச்சியை எங்கே போடுவது என்று தெரியவில்லை. உடனே அவர் எங்கோ இருந்து ஒரு ஆஷ்ட்ரேயை எடுத்துக்கொண்டு வந்து எனக்கு முன்னால் வைத்தார். நான் கரிந்து போயிருந்த தீக்குச்சியை அதில் போட்டேன்.

நாங்கள் ஒரு வியாபார விஷயமாகப் பேசப் போகிறோம். என்னுடைய ஒரு புத்தகம் இன்னொரு நிறுவனத்திற்காக மங்களோதயம் பிரஸ்ஸில் அச்சடிக்கப்படுகிறது. அதன் புரூஃப்பைப் பார்ப்பதற்காக நான் எர்ணாகுளத்திலிருந்து வந்திருக்கிறேன். அப்போதுதான் அவர் என்னை அழைக்கிறார். என்னுடைய எல்லா புத்தகங்களையும் மங்களோதயம் நிறுவனம் பதிப்பிக்க தயாராக இருப்பதாகவும், இது விஷயமாகப் பேசுவதற்காகவும்தான் என்னை அவர் அழைத்திருந்தார்.

நான் சொன்னேன்:

“நாம சேர்றது கஷ்டம்!''

ஏன் அப்படிச் சொன்னேன் என்றால் எழுத்தாளர்களுக்கு சரியாகப் பணம் தருவதில்லை. ஐந்து ரூபாய், பத்து ரூபாய், நூறு ரூபாய்க்கு பதிப்புரிமையை வாங்கிக் கொள்வார்கள். பொதுவாக பதிப்பாளர்கள் இப்படித்தான் நடந்து கொள்வார்கள். எழுத்தாளராக ஆக வேண்டும் என்றால், முதலில் அவன் கையில் ஒரு துண்டு இருக்க வேண்டும். கை இடுக்கில் அதை வைத்து பயபக்தியுடன் நிற்க வேண்டும். வசதிப்பட்டால், முதுகெலும்பை மூன்று மடங்கு ஒடித்து நின்றாலும் நல்லதுதான். அப்படி ஒரு நிலை வந்தால், எவ்வளவு வேண்டுமானாலும் குனிந்து பணிவைக் காட்ட முடியுமே!

அவர் கேட்டார்.

“அதென்ன இப்படிச் சொல்றீங்க- நாம ரெண்டு பேரும் சேர முடியாதுன்னு?''

நான் சொன்னேன்:

“நான் அப்படிச் சொல்றதுக்காக மன்னிக்கணும். எனக்கு வாழ்க்கையில எவ்வளவோ அனுபவங்கள் இருக்கு. நான் பல வருடங்கள் எத்தனையோ மாநிலங்கள்ல எத்தனையோ நாட்கள் அலைஞ்சு திரிஞ்சிருக்கேன். எனக்கு எத்தனையோ வேலைகளைச் செய்யத் தெரியும். அந்த வேலைகள்ல எழுதுறதும் ஒண்ணு. எழுதவும் தெரியும். எழுதினதை அச்சடிச்சு புத்தகமாக்கி விற்பனை செய்யவும் தெரியும்!''

தொடர்ந்து புத்தகங்கள் அச்சடிப்பதைப் பற்றிச் சொன்னேன். விற்பனை செய்வதைப் பற்றிச் சொன்னேன். ஹோட்டல்களில் சாப்பாடு ஒன்றுக்கு ஒன்றேகால் அனா விலை. பெரிய ஹோட்டல்கள் என்றால் இரண்டு அணா. ஒன்றே கால் அணாவுக்கு உள்ள சாப்பாடு சாப்பிட்டாலே போதும்தான். அதனால் புத்தகங்களின் விலை ஒன்றே கால் அணா. ஒரு புத்தகம் விற்றால் ஒரு சாப்பாடு கிடைக்க வேண்டும். இப்படி புத்தகங்களை ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி, வீடு வீடாக எடுத்துக்கொண்டு நான் நடந்து சென்று விற்றேன். அந்தப் புத்தகத்தை ஐந்து அல்லது ஆறு நிமிடங்களில் அவர்கள் படித்து முடித்துவிடுவார்கள். புத்தகத்தை விற்று, காசு வாங்கிய பிறகும் நான் அங்கேயே நின்றிருப்பேன். அவர்கள் படித்து முடித்ததும் நான் கேட்பேன்! "இந்தப் புத்தகத்தை நான் கொண்டு போகட்டுமா?” பெரும்பாலானவர்கள் "சரி” என்று சம்மதித்து, கையில் புத்தகத்தைத் தந்துவிடுவார்கள். இப்படி ஒரே புத்தகத்தை எட்டு அல்லது பத்து முறைகள் விற்பேன். சில மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்கள் சொல்வார்கள்: "சே... நான் தர மாட்டேன். என் பொண்டாட்டி படிக்கணும்.” அவனுக்கு ஒரு பொண்டாட்டி! அவள் இதைப் படித்து என்ன செய்யப்போகிறாள்?

நான் சொன்னேன்:

“இப்படித்தான் நான் புத்தகம் விற்பேன்!''

“பரவாயில்லையே!'' நான் சொன்னது அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர் மணியை அடித்தார். ப்யூன் வந்தான்.

“சாயா வேணுமா, காபி வேணுமா? உங்க ஜாதிக்காரங்க என்ன குடிப்பாங்க?''

“ஜாதிக்காரங்களா?''

“ஹே... ஹே... எழுத்தாளர்கள்... இலக்கியவாதிகள். இப்படி ஒரு எழுத்தாளரை நான் இப்பத்தான் முதல் தடவையா பார்க்குறேன்.''

“மனிதர்கள் என்ன குடிப்பாங்களோ, அதைத்தான் நானும் குடிக்கிறேன்!''

“அப்ப காபி சாப்பிடுங்க. நல்ல காபி இங்கே கிடைக்கும். மசால் தோசை வாங்கிட்டு வரச்சொல்றேன். சரியா?''

“சரிதான். அப்படியே எனக்கு ஒரு டம்ளர் தண்ணியும் வேணும்.''

ப்யூன் போனான். அவர் சொன்னார்:


“ஒரு புத்தகத்தைப் பல தடவை விற்க வேண்டாம். கடைகளைத் தேடியும் வீடுகளைத் தேடியும் போகவும் வேண்டாம். அந்த விஷயத்தை நாங்க பாத்துக்குறோம். நீங்க உட்கார்ந்து எழுதினா போதும். வீட்டை உடனே திருச்சூருக்கு மாத்துங்க. வீடு ஒண்ணு உடனே நான் ஏற்பாடு பண்ணுறேன். இங்கே முண்டசேரி மாஸ்டர் இருக்காரு. அவரை உங்களுக்கு அறிமுகம் உண்டா?''

“ஒண்ணு ரெண்டு தடவை பார்த்திருக்கேன்!''

“அது போதாது. ஆள் ரொம்ப ரொம்ப நல்லவர். நல்லா அவர்கூட பழகிக்கணும். இங்கே வந்து தங்குங்க. கேசவதேவ்வையும் தகழி சிவசங்கரப் பிள்ளையையும் உங்களுக்குப் பழக்கம் உண்டா? அவங்க ஆளுக்கு ஒரு புத்தகத்தை இங்கே தந்திருக்காங்க. "தோழர்கள்”, "அன்றைய நாடகம்' -இந்தப் புத்தகங்கள்தான் அவங்க தந்தது!''

அந்தக் கதை எனக்கு நன்றாகத் தெரியும். தேவுக்கும் தகழிக்கும் என்ன கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதும் எனக்குத் தெரியும். அதை மனதில் வைத்துக்கொண்டுதான் லேசான கோபத்துடன், ஆணவத்துடன் நான் அவருடன் பேசிக்கொண்டிருந்தேன்.

நான் சொன்னேன்.

“எழுத்தாளர்களும் வாழணும். புத்தக வியாபாரிகள் வச்சிருக்கிற மாதிரி கார்களோ, மாளிகைகளோ அவங்களுக்கு வேண்டாம்னுகூட வச்சுக்கோங்க.. இருந்தாலும்... நான் எவ்வளவு பணத்தைச் செலவழிச்சு வாழ்ந்திருக்கிற ஒரு மனிதன்! தேவையான அளவுக்கு கெட்ட பழக்கங்களும் என்கிட்ட இருக்கு. எழுத்தை மட்டும் வச்சு வாழணும்ன்ற தியாக புத்தி எல்லாம் என்கிட்ட கிடையாது. வேற தொழிலைப் பார்க்கவும் எப்பவும் தயாரா இருக்கேன்.''

“என்ன தொழில்?''

“மீன் பிடிக்கிறது...''

“சே... நாத்தம் புடிச்ச தொழிலாச்சே அது!''

“எதுலதான் நாத்தம் இல்ல? ஒரு காசுக்கு சோப்பு வாங்கி தேச்சா, நாத்தமெல்லாம் இருந்த இடம் தெரியாமல் போயிடும். அரையணா கையில இருந்தா போதும், ஒரு அருமையான தூண்டில் தயார் பண்ணிடலாம். மீன் பிடிச்சு எட்டணாவுக்கு விற்கலாம். அதை வச்சு வாழவும் எனக்குத் தெரியும்.''

“எழுத்தாளரா இருந்துக்கிட்டு, மீன் பிடிக்கப் போறது அவ்வளவு நல்ல விஷயமா?''

“அது மட்டுமல்ல... இன்னும் எத்தனையோ தொழில்களை எனக்குத் தெரியும். நல்லா சோறு ஆக்குவேன். நல்லா சமையல் பண்ணுவேன். பெங்காலி, பஞ்சாபி, மராத்தி, குஜராத்தி, காஷ்மீரி, பெர்ஷியன்- எல்லா வகை சமையல்களையும் நான் மிக அருமையா பண்ணுவேன். நல்லா சமையல் பண்ணி ஏதாவது ஹோட்டல்ல கொண்டு போய் விற்க வேண்டியதுதான்!''

“ஹோட்டல்ல சமையல்காரன் வேலை பார்த்திருக்கீங்களா?''

“ஹோட்டல்ல பாத்திரம் கழுவுற வேலை பார்த்திருக்கேன்.''

“அப்படியா? பிரியாணி பண்ண தெரியுமா? வெஜிட்டபிள் பிரியாணி!''

மூன்று விதங்களில் வெஜிட்டபிள் பிரியாணியை எப்படி எப்படி பண்ணலாம் என்பதை நான் சொல்லிக் கொடுத்தேன்.

“சமையல்ல பயங்கர ஆர்வமுள்ள ஆளா இருப்பீங்க போலிருக்கே! நமக்கு ஒருநாள் சமையல் பண்ணணும். ஒரு சமையல் புத்தகம் எழுதலாமே? சமையல் திட்டம்.''

(இதே கேள்வியை பிற்காலத்தில் ஸ்ரீமான் டி.ஸி. கிழக்கேமுரி கேட்டிருக்கிறார்)

நான் சொன்னேன்:

“எழுதலாம்!''

அப்போது மசால் தோசை, காபி, தண்ணீர் எல்லாம் வந்து சேர்ந்தன. அதைச் சாப்பிட்டு முடித்ததும் நாங்கள் ஒரு தீர்மானத்திற்கு வந்தோம். எல்லா புத்தகங்களையும் மங்களோதயம் பதிப்பிக்கும். மொத்த விலையில் முப்பத்து மூன்று சதவிகிதத்தை எனக்கு அவர்கள் தருவார்கள். இதை யாரிடமும் நான் சொல்லக்கூடாது. இந்த மாதிரி இதற்கு முன்பு புத்தகத்தின் விலையில் எந்த ஒரு எழுத்தாளருக்கும் சதவிகித அடிப்படையில் காசு கொடுத்ததில்லை. ஒப்பந்தம் போட்டுவிடலாம். சம்மதம்தானே? முன் பணம் தரத் தயார். சரி என்று சம்மதித்தேன். (பின்னர் நான் அதை நாற்பது சதவிகிதமாக்கி விட்டேன்). திருச்சூருக்கு வீட்டை மாற்றினேன். புத்தகங்கள் விற்பனை ஆன பிறகல்ல எனக்குப் பணம். புத்தகம் பதிப்பித்த அன்றே மங்களோதயம் மேனேஜர் நாராயணய்யர் பி.ஏ. என் கையில் காசோலையைத் தருவார். முண்டசேரியும் நானும் மிகவும் நெருங்கிய நட்புடன் இருந்தோம். நாங்கள் பகல் நான்கு மணியில் இருந்து இரவு இரண்டு மணி வரை சுற்றித் திரிவோம். அப்போது ஹோட்டல்கள் எல்லாம் மூடப்பட்டு விடும். ஏதாவது சாப்பிட வேண்டாமா?

“வாடா...'' முண்டசேரி கூறுவார்: “வீட்ல ஏதாவது இருக்கான்னு பார்ப்போம்!''

எல்லாரும் உறங்கிக் கொண்டிருப்பார்கள். நானும் முண்டசேரியும் அவரின் வீட்டிற்குள் நுழைந்து சமையலறையில் ஏதாவது இருக்கிறதா என்று தேடுவோம். “ம்... சரி... மேஜையில் என்னவோ இருக்கு!'' இருக்கிற எதையாவது சாப்பிட்டுவிட்டு நான் புறப்படுவேன்.

 

அப்படி இருக்கின்ற சூழ்நிலையில் சங்ஙம்புழ கிருஷ்ண பிள்ளைக்கு உடல் நலம் சரியில்லை என்ற செய்தி வந்தது. ஏ.கெ.டி.கெ.எம். முண்டசேரியையும் என்னையும் காரில் அழைத்துக் கொண்டு போனார். இடப்பள்ளியில் இருந்த சங்ஙம்புழயைப் பார்த்தோம். ஏ.கெ.டி.கெ.எம்.மின் வற்புறுத்தல் காரணமாக சங்ஙம்புழ திருச்சூருக்கு தன் வீட்டை மாற்ற சம்மதித்தார். சங்ஙம்புழ இலேசாக இருமிக்கொண்டிருந்தார். மஃப்ளரைக் கழுத்தில் சுற்றியிருந்தார். வழியில் நாங்கள் குற்றிப்புழ கிருஷ்ணபிள்ளையைப் பார்த்தோம். அப்போது அவர் திருமணம் எதுவும் செய்து கொள்ளாமல் ஒரு சன்னியாசியைப் போல, ஆலுவாவில் பெரியாறுக்குப் பக்கத்தில் வசித்துக் கொண்டிருந்தார். சமையலுக்கு ஒரு ஆளை வைத்திருந்தார். எங்களைப் பார்த்ததும் அவர் உலகத்தையே நடுங்க வைத்துக்கொண்டிருக்கும் ஒரு பிரச்சினையைச் சொல்லத் தொடங்கினார்.

“விறகு இல்ல... மனிதன் எப்படி வாழ்வது?''

இருந்தாலும் குடிக்க பால் தந்தார். குற்றிப்புழயையும் காரில் ஏற்றிக்கொண்டு நாங்கள் பறவூருக்கு வந்தோம். மிகவும் கஷ்டப்பட்டு ஏ. பாலகிருஷ்ணபிள்ளையின் வீட்டிற்குப் போனோம். இலேசாக முடி வெட்டப்பட்ட தலை, நரைத்துப் போன தாடி- மீசை, பிரகாசமான கண்ணாடி- இவற்றுடன் சட்டையும் வேஷ்டியும் அணிந்து செடிகளுக்கு நடுவில் நின்றிருந்தார் பாலகிருஷ்ணபிள்ளை.

முண்டசேரியும் குற்றிப்புழவும் ஏ.கெ.டி.கெ. எம்மும் எவ்வளவோ விஷயங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். நான் அவர்கள் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்தேன். இடையில் கண்ணாடியைத் துடைத்தவாறு பாலகிருஷ்ணபிள்ளை என்னைப் பார்த்தார்:

“பஷீர், உங்களுக்கு என்ன வேணும்?''

“ஒண்ணும் வேண்டாம் சார்!''

“நிறைய எழுதணும். எதுக்கு இந்த அமைதி?''

முண்டசேரி சொன்னார். கனமான- அதேசமயம் தாழ்ந்த குரலில்:

“அந்த ஆளைப்பற்றி ஒண்ணுமே சொல்ல வேண்டாம்.''

கடைசியில் நாங்கள் அங்கிருந்து புறப்பட்டோம். எல்லாரும்

ஏ. பாலகிருஷ்ணபிள்ளையை வணங்கினோம். எல்லாரையும்

ஏ. பாலகிருஷ்ணபிள்ளை வணங்கினார்.

குற்றிப்புழயை ஆலுவாவில் இறக்கி விட்டோம். நாங்கள் திருச்சூருக்கு வந்தோம். வாய்ப்பு கிடைக்கிறபோது எழுத்தாளர் களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கக் கூடிய ஒரு மனிதர் முண்டசேரி. அவர் சொன்னதைக் கேட்டு ஏ.கெ.டி. கெ.எம். யாருக்கும் தெரியாமல் ஏ. பாலகிருஷ்ண பிள்ளைக்கு என்னவோ உதவி செய்தார்.


அப்போது பசுக்களையும் மனைவி யையும் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு வந்து சங்ஙம்புழ திருச்சூரில் குடியேறினார். மங்களோதயம் அன்று கேரளத்திலேயே மிகப்பெரிய பதிப்பகமாகத் திகழ்ந்து கொண்டிருந்தது.

ஜி. சங்கரக்குருப்பு, பொன்குன்னம் வர்க்கி, எஸ்.கெ. பொற்றெக்காட், பி.ஸி. குட்டிகிருஷ்ணன், குட்டி கிருஷ்ணமாரார், தகழி சிவசங்கரப் பிள்ளை, வெட்டூர் ராமன்நாயர், வைலோப்பிள்ளி ஸ்ரீதரமேனன், பி. கேசவதேவ், ஈ.எம். கோவூர், என்.வி. கிருஷ்ணவாரியர், போஞ்ஞிக்கரை ராஃபி, குற்றிப்புழ கிருஷ்ணபிள்ளை, வைக்கம் அப்துல்காதர்- இப்படிப் பலரும் மங்களோதயத்திற்கு வருவார்கள்.

முண்டசேரி, சங்ஙம்புழ, நான்- ஒரு விதத்தில் நாங்கள் நண்பர்களைப்போல் ஆகிவிட்டோம். இரவு ஒன்று, இரண்டு மணி வரை என்னுடைய அறையில் அவர்கள் இருப்பார்கள். சில நேரங்களில் மங்களோதயம் புக் ஸ்டாலின் மேனேஜர் கிருஷ்ணன் நாயரும் எங்களுடன் இருப்பார். சில சமயங்களில் தகழி, பொன்குன்னம் வர்க்கி ஆகியோர்கூட இருப்பதுண்டு. உரையாடல், தின்பண்டம், மது, வெற்றிலை- பாக்கு, இசை- இவ்வளவும் அங்கு இருக்கும். என்னிடம் ஒரு க்ராமஃபோனும் சில அருமையான இசைத்தட்டுகளும் இருந்தன.

அந்த க்ராமஃபோனை எனக்குத் தந்தது ஏ.கெ.டி.கெ.எம்.தான். நான் ஒரு க்ராமஃபோனை வாங்கப் போகிறேன் என்பதைக் கேள்விப்பட்டதும், “எதற்காக தேவையில்லாம பணத்தைச் செலவழிக்கிறீங்க? இதைக் கொண்டு போங்க'' என்றார் அவர்.

ஏ.கெ.டி.கெ.எம்மிற்கு பொதுவாக எழுத்தாளர்கள் என்றால் ரொம்பவும் பிரியம். குறிப்பாக முண்டசேரியையும், சங்ஙம்புழயையும், என்னையும். ஒருமுறை அவர் எனக்கு திருச்சூரில் ஒரு வீடும் நிலமும் வாங்கித் தருவதாக இருந்தது. இடத்தையும் வீட்டையும் என்னை அழைத்துக்கொண்டு போய் காண்பித்தார். என்னுடைய பெயரில் அவற்றை அவர் வாங்கித் தருவார். எனக்கு வரும் ராயல்டி பணத்தில்  இருந்து கொஞ்சம் கொஞ்சமாகக் கழித்துக்கொள்வதாக ஏற்பாடு. சனி தசை என்றுதான் சொல்ல வேண்டும். நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.

முண்டசேரியும் சங்ஙம்புழயும் நானும் அஞ்சாம்ப்ரானின் முன்னால் சர்வ சாதாரணமாக உட்காருவோம். (பின்னர் எல்லாருமே உட்கார ஆரம்பித்தார்கள். அதற்காக அவர் மனம் வருத்தப்படவில்லை). எங்களை அரண்மனைக்கு அழைத்துச் சென்று உள்ளே உட்கார வைத்து சாப்பிட வைப்பார். கேட்டில் காவலாளிகள் இருப்பார்கள். அரண்மனைக்குள் வைத்து பொதுவாக கிறிஸ்துவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சாப்பாடு தருவது வழக்கமில்லை. நாயர்களுக்குத் தருவார்களோ என்னவோ? ஒரு நாள் நாங்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். முண்டசேரி, சங்ஙம்புழ, நான் மூவரும்தான். இரண்டு பட்டர் பிராமணர்கள் சாப்பாடு பரிமாறுகிறார்கள்.

 

ஏ.கெ.டி.கெ.எம். பக்கத்தில் நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறார். சில பெண்களும் அங்கு இருக்கிறார்கள். சில நம்பூதிரிமார்களும் இருந்தார்கள். சாப்பிட்டுக் கொண்டிருக்கும்பொழுது சாம்பாரில் இருந்த ஒரு முருங்கைக்காய் என் வாயில் சிக்கிக்கொண்டது. அவனை நான் என்ன செய்வது? மென்று தின்னுவதென்பது முடியாத காரியம். வெளியே துப்பவும் முடியவில்லை. நான் அவனை மேல் உதட்டுக்கு இடையில் நீளவாக்கில் இருக்கச் செய்துவிட்டு, சாப்பிட்டு முடித்தேன். கடைசியில் ஏ.கெ.டி.கெ.எம்.மிடம் விஷயத்தைச் சொன்னேன். பிறகு அவரிடம் கேட்டேன். “இவனை நான் என்ன செய்வது? சாப்பாட்டு விதி இங்கே எப்படி?''

“சுத்த முட்டாள்தனமா இருக்கே!''

எல்லாரும் சிரித்தார்கள். அஞ்சாம்ப்ரான் சொன்னார்:

“பஷீர்... அதை எடுத்து இலையோட ஒரு மூலையில் வைக்க வேண்டியதுதானே? எதற்கு இந்த தேவையில்லாத தியாகம்?''

“நான் என்ன ரொம்ப படிச்சவனா?''

அந்தக் காலத்தில் மங்களோதயத்தில் அச்சாகும் எந்த புத்தகமாக இருந்தாலும், ஒரு பிரதியை எனக்குத் தருவார்கள். அது அங்கு போடப்பட்டிருக்கும் உத்தரவு என்றுகூட சொல்லலாம். முண்டசேரி, சங்ஙம்புழ- இருவருக்கும்கூட இப்படி தருவார்கள் என்று நினைக்கிறேன். அப்படி புத்தகங்கள் கொடுத்து வரும் காலத்தில், மங்களோதயம் அனந்தநாராயண சாஸ்திரியின் முன்னுரையுடன் ஸ்ரீமத் பகவத் கீதையைப் பிரசுரிக்கிறது. பைன்ட் செய்யப்பட்ட தடிமனான புத்தகம். ஏழரை ரூபாய் அதன் விலை.

 

புத்தகம் மிகப் பெரியது. பகவத் கீதை பிரசுரமாகி ஒரு வாரம் கழிந்த பிறகும், எனக்கு வழக்கமாகத் தருவது மாதிரி அதன் ஒரு பிரதியை அவர்கள் தரவில்லை.

என்ன காரணம்?

நான் புக் ஸ்டால் மேனேஜர் கிருஷ்ணன் நாயரைப் பார்த்து கேட்டேன்.

சற்று உருண்டு, தடித்த நல்ல ரசிகர் அவர். அவர் கிண்டலாக என்னைப் பார்த்து ஒரு சிரிப்பு சிரித்தவாறு கேட்டார்:

“முஸ்லிம்களுக்கு எதற்கு பகவத் கீதை?''

நான் அவரின் கையைப் பிடித்து இலேசாக முறுக்கினேன். அவர் சொன்னார்:

“என்னைக் கொன்னுடாதீங்க. நாராயணய்யர் கிட்ட இது விஷயமா பேசிக்கோங்க!''

நான் சென்று நாராயணய்யரிடம் கேட்டேன். அவரும் ஒரு கிண்டல் சிரிப்புடன் என்னைப் பார்த்துச் சொன்னார்:

“தம்புரானையே போய் கேளுங்க.''

சரிதான்!

“தம்புரான் சொல்லித்தான் மற்ற புத்தகங்களை எல்லாம் தந்தீங்களா?''

“முஸ்லிம்களுக்கு பகவத்கீதை எதற்கு?''

கேட்க நன்றாகத்தான் இருக்கிறது- இந்துக்களின் நியாயம்! நாராயணய்யர் அமைதியான ஒரு மனிதர். அதனால் அவர் கையைப் பிடித்து நான் முறுக்கவில்லை.

 

நான் கேட்டேன்:

“முஸ்லிம்களுக்கு நாராயணீயத்தை எதற்காகத் தந்தீங்க?''

நாராயணய்யர் வாயே திறக்கவில்லை.

நான் கேட்டேன்:

“முஸ்லிம்களுக்கு தேவிமாஹாத்மியத்தை எதற்காகத் தந்தீங்க? ஸ்ரீமத்பகவத் கீதையை எனக்குத் தரலைன்னா...?''

“வைக்கம் முஹம்மது பஷீர் மிரட்டுறார்னு தம்புரான்கிட்ட சொல்லிடுவேன்...''

அவர் சொன்னாரா இல்லையா? எனக்குத் தெரியாது. எனக்கு பகவத் கீதையை அவர்கள் தரவில்லை. சங்ஙம்புழயும் முண்டசேரி யும் பகவத்கீதை விஷயத்தில் என்னை மாதிரி பிடிவாதமாக இருந்தார்களா என்பது பற்றி எனக்குத் தெரியாது. இது விஷயமாக எங்களுக்குள் எதுவும் நாங்கள் பேசிக்கொள்ளவில்லை. இருந்தாலும் என் பிடிவாதத்தை நான் விட்டுத் தருவதாக இல்லை. எனக்கு கட்டாயம் பகவத் கீதை தந்தாக வேண்டும். அதை வாங்கினால் மட்டுமே நான் அமைதியாக இருப்பேன். ஆனால், அதை எப்படி வாங்குவது?

ஒரு நாள் நான் மேலே ஏறிச் செல்லும்போது, எல்லாராலும் மதிக்கப்படும் பிராமணரான அனந்தநாராயண சாஸ்திரி அங்கே அமர்ந்திருந்தார். ஏ.கெ.டி.கெ.எம்மிற்கு முன்னால் கறுத்து மெலிந்துபோய், தலையின் உச்சியில் கொஞ்சம் முடியை வைத்துக்கொண்டு கூர்மையான கண்களைக் கொண்ட ஒரு மனிதர். மிகவும் வேகமாக அவர் பேசுவார். “வாங்க... வாங்க பஷீர்... உட்காருங்க'' என்றார். நான் அவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்தேன்.

“பகவத்கீதையைப் பார்த்தீங்களா?''

“தூரத்துல பார்த்தேன்!''

“அதென்ன?'' கேட்க வந்ததை இழுத்தார்.

நான் சொன்னேன்:

“நான் முஸ்லிமாச்சே! பகவத்கீதையை நான் தொடலாமா? அசுத்தமாயிடுமே!''

நான் ஏ.கெ.டி.கெ.எம்மை உற்றுப் பார்த்தேன். அவர் நான் சொன்னதைக் காதிலேயே வாங்காதது மாதிரி இருந்தார்.

“நீங்க எழுதின முன்னுரை நல்லா இருக்குன்னு சொன்னாங்க. நான் படிச்சுப் பார்க்கல...''


“சும்மா விளையாடாம படிச்சுப் பார்க்கணும். இப்போ என்ன பொய்க் கதையை எழுதிக்கிட்டு இருக்கீங்க பஷீர்?''

“பொய்க் கதை இல்ல... உண்மையான வரலாறு. அதைக் கதை மாதிரி எழுதுறேன்...''

“உண்மையான வரலாறா? ஹா... ஹா... ஹா... தாராளமா எழுதுங்க!''

“உங்களைப்போல உள்ளவர்களோட ஆசீர்வாதம் வேணும்!''

“பஷீர்... உங்களுக்கு எல்லாரோட ஆசீர்வாதமும் இருக்கு!''

நான் ஏ.கெ.டி.கெ.எம்.மின் முகத்தைப் பார்த்தேன். பகவத் கீதை சம்பந்தமாக அவர் முகத்தில் எந்தவித மாற்றமும் தெரியவில்லை.

அந்த நாட்களில் என்னிடம் ஒரு பழக்கம் இருந்தது. எழுதப் போகிற கதையின் பிரதான கதாபாத்திரத்தை எப்போதும் மனதில் நினைத்துக்கொண்டே இருப்பேன். கதாபாத்திரம் பேசுவது, நடப்பது- இப்படிப்பட்ட சிந்தனையிலேயே பல நாட்கள் இருப்பேன். சில நேரங்களில் எழுதவும் செய்வேன். ஏ.கெ.டி.கெ.எம் மின் முன்னால் ஒரு புதிய கைக்குட்டையுடன் போய் அமர்ந்தேன். முண்டசேரியும் சங்ஙம்புழயும் அப்போது அங்கு இருந்தார்கள். கைக்குட்டையின் நுனியைப் பிடித்து, தலையைச் சுற்றி அதை தூரத்தில் எறிந்தேன். இரண்டு மூன்று முறை நான் இப்படிச் செய்வதைப் பார்த்த அஞ்சாம்ப்ரான் கேட்டார்:

“என்ன இது?''

நான் சொன்னேன்:

“என்கிட்ட இருக்குற ஒரு கெட்ட பழக்கம். சின்ன வயசுல இருந்தே இது பழகிப்போச்சு. யானையைப் பார்த்தால், வாலைப் பிடிச்சு, தலையைச் சுற்றி தூரத்துல தூக்கி ஏறிவோம்!''

“அப்படியா?''

“ஆமா... என்ன செய்றது? இப்போ எங்ககிட்ட யானை இல்லையே! அதற்காக பழக்கத்தைவிட முடியுமா?''

சங்ஙம்புழ சொன்னார்:

“இந்த ஆளுக்கு ஒரு யானையைக் கொடுத்துப் பார்க்கணும். அப்ப உண்மை தெரியும்ல!''

“எங்ககிட்ட சில ஆண் யானைகளும், பெண் யானைகளும் இருக்கு.'' ஏ.கெ.டி.கெ.எம். சொன்னார்:

"தேசமங்கலத்துல இருக்கு!''

உரத்த குரலில் முண்டசேரி சொன்னார்:

“அப்படின்னா பஷீர் ஒரு கை பார்க்கட்டும். வடக்கும்நாத கோவிலைச் சேர்ந்த யானைகள்தானே?''

“கோவில் திருவிழாவுக்குக் கொண்டு வந்ததை வாலைப் பிடிச்சு, தலையைச்சுற்றி தூக்கி எறியிறது நல்லதா? கடவுளுக்குக் கோபம் வந்திடாதா?''

அப்போதுதான் மார்பகங்கள் என்னைத் தேடி வருகின்றன. நான் எத்தனையோ மார்பகங்களைப் பார்த்திருக்கிறேன். நெல்லிக்காய் மார்பகம், ஊசி மார்பகம், அடைக்காய் மார்பகம், மரோட்டிக்காய் மார்பகம், கத்திரிக்காய் மார்பகம், பம்பர மார்பகம், பப்பாளி மார்பகம், பலாப்பழ மார்பகம்- இப்படிப் பல மார்பகங்கள். எல்லாவற்றையும் முகத்தை மூடிய கோலத்தில்- ஸாரி- மார்பகத்தை மூடிய கோலத்தில்தான் பார்த்திருக்கிறேன். தாயின் மார்பகத்தைப் பற்றி சரியாக ஞாபகத்தில் இல்லை. மார்பகத்தைப் பார்க்கிபோது, ஆச்சரியத்துடன் பார்ப்பேன். உயிரின் ஆதாரம்! ஆத்மாவிற்கு? ஆத்மாவின் பசியையும் தாகத்தையும் தணிப்பதற்காக இருப்பது தானே புனிதமான வேத நூல்கள்- பகவத்கீதை, குர்-ஆன், பைபிள் போன்றவை! உலகில் எத்தனையோ மதங்கள். வேத நூல்களும் ஏராளமாகவே இருக்கின்றன. அவை ஆத்மாவிற்கு அமைதி தருகின்றன. வேத நூல்களையும் மதங்களையும் நம்பாதவர்கள் இருக்கவே செய்கிறார்கள். அவர்களும் ஒரு காலகட்டம் வரை உடலின் பசியையும் தாகத்தையும் தணிக்க மார்பகம் குடித்து வளர்ந்தவர்களே. இந்த மண்ணை விட்டு மறைந்து போனவர்களும், வாழ்ந்து கொண்டிருக்கின்றவர்களும் மார்பகத்தைக் குடித்திருப்போர்களே. இனி வரப்போகிறவர்களும் குடிப்பார்கள். மார்பகத்தை எங்கு பார்த்தாலும் நான் ஆச்சரியத்துடன் பார்ப்பேன். பசு, எருமை, குதிரை, கழுதை, ஆடு, சிங்கம், யானை, பன்றி, நாய், பூனை, எலி- இவை எல்லாமே நிர்வாண மார்பகங்கள்! மனிதப் பெண்களுக்கு மட்டும் முகமூடி இட்ட மார்பகங்கள்! நிர்வாண மார்பகங்களைப் பார்த்த ஞாபகம் இல்லை. அப்போது வருகிறது நிர்வாண மார்பகங்களின் ஒரு அழகான ஊர்வலம்!

 

பார்க்கப் போயிருந்த திருவிழாவைப் பற்றி எந்தவித தயக்கமும் இல்லாமல் நான் எம்.பி. போளிடம் பேசியவாறு, முண்டசேரியின் வீட்டுக்குப் பக்கத்தில் வந்து கொண்டிருந்தேன். ஏதோ ஒரு முக்கிய விஷயமாக திருச்சூருக்கு வந்திருந்த எம்.பி. போளும் அவரின் மனைவியும் முண்டசேரியின் வீட்டுக்குப் போய்விட்டு திரும்பி வருகிறார்கள். எம்.பி. போளின் மனைவி பின்னால் வந்து கொண்டிருக்கிறார். நானும் எம்.பி. போளும் பல விஷயங்களையும் பேசியவாறு நடந்து கொண்டிருக்கிறோம். நாங்கள் இருவரும் மிகவும் நெருக்கமான நண்பர்கள். எம்.பி. போளைப் பற்றி எவ்வளவோ விஷயங்கள் சொல்லலாம். அமைதியான- ஆர்ப்பாட்ட மில்லாத மனிதர். நல்ல பண்டிதர். ஒரு மனிதாபிமானி. நல்ல சிந்தனையாளர். நாங்கள் எர்ணாகுளத்தில் பொழுது விடிகிறவரை கூட எவ்வளவோ விஷயங்களைப் பேசிக்கொண்டிருந்திருக்கிறோம். புத்தன் காவு மாத்தன் தரகன்தான் எங்களை ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்தி வைத்தது. என்னுடைய கதைகளை அவர் படித்ததில்லை. பிரசுரமான எல்லா கதைகளையும் கொடுக்கும்படி சொன்னார். நான் கொடுத்தேன். அவர் படித்தார். பிறகு சொன்னார்: “பரவாயில்ல. கதைகள் நல்லா இருக்கு! இனிமேல் கதைகள் பிரசுரமாகுறதுக்கு முன்னாடியே என்கிட்ட நீங்க காட்டணும்.'' நான் அதே மாதிரி காட்டினேன். அவர் அதைக் குறைக்கவோ, திருத்தவோ செய்ததில்லை. எம்.பி. போளின் கருத்தை நான் மதிக்கிறேன்.

"பெண்”  என்றொரு சிறிய புதினத்தை நான் எழுதினேன். உணர்ச்சிகளின் கொடுங்காற்று அது. அவர் அந்தப் புதினத்தைப் படிப்பதை நான் பார்த்துக்கொண்டிருந்தேன். வெளுத்த வசீகரமான முகம். அது சிவப்பாவதை என்னால் பார்க்க முடிந்தது. சிறிது நேரத்தில் அதே முகம் வெளிறிப்போய் நீலமாக மாறியது. பின்னர் அது கறுத்துப்போய் காணப்பட்டது. இன்னும் சில நிமிடங்களில் அது வெளிறிப்போய் தெரிந்தது. மீண்டும் பழைய வெளுத்த வசீகரமான முகம்! அவர் அந்தப் புதினத்தைப் படித்து முடித்தார். இரண்டு நிமிட நேரத்திற்கு அவர் எதுவுமே பேசவில்லை. கடைசியில் சொன்னார். “இந்தப் புதினத்தைப் பிரசுரிக்க வேண்டாம்னோ, பிரசுரிக்கணும்னோ நான் சொல்லப்போறதில்ல. உணர்ச்சிகள் ஒரு வரையறையைத் தாண்டி இதுல போயிருக்கு. பஷீர், உங்க விருப்பப்படி செய்யுங்க.''

நான் அந்த "பெண்' என்ற புதினத்தைப் பத்து, பன்னிரண்டு துண்டுகளாகக் கிழித்து வேம்பநாடு காயலில் விட்டெறிந்தேன். நான் சங்ஙனாசேரியில் இருந்து படகில் எர்ணாகுளத்திற்குத் திரும்பினேன்.

எம்.பி. போள் கேட்டார்:

“மங்களோதயம் ஒழுங்கா பணம் தர்றாங்களா?''

“தர்றாங்க ஸார்... உங்களுக்கு ஏ.கெ.டி.கெ.எம். வாசுதேவன் நம்பூதிரிப்பாடைத் தெரியுமா?''

“தெரியும். திருச்சூர் வாழ்க்கை எப்படி இருக்கு?''

“பரவாயில்லை....''

“நான் இங்கே இருக்கேன். பஷீர்... நீங்க எர்ணாகுளத்திற்கு வந்திரலாமே! நீங்க இங்க வர்றது நல்லதுன்னு நினைக்கிறேன். இங்கே இருந்து எதுவுமே எழுதல இல்லியா?''

“நான் எர்ணாகுளத்துக்கு வரத் தயாரா இருக்கேன்!''

“வந்து நிறைய எழுதப் பாருங்க!''

அவரும் அவரின் மனைவியும் வண்டியில் ஏறினார்கள். அவரின் மனைவி சொன்னார்: “பஷீர், நீங்க எர்ணாகுளத்துக்கு வாங்க...''

“வர்றேன்...''


நான் கை கூப்பினேன். அவர்கள் போனார்கள். நடந்து வருகிறபோது, மங்களோதயத்தில் இருந்து ஒரு ஆள் ஓடி வந்து சொன்னான்:

“உங்களை எங்கெல்லாம் தேடுறது? தம்புரான் உங்களைக் கூட்டிட்டு வரச்சொன்னார். உடனே நீங்க வரணும்!''

ஒரு ரிக்ஷா வண்டியில் ஏறி நான் உடனே சென்றேன். அஞ்சாம்ப்ரானின் முன்னால் ஒரு கறுத்த நம்பூதிரி பணிவுடன் நின்றிருந்தார். ஏ.கெ.டி.கெ.எம். கம்பீரமான குரலில் சொன்னார்:

“நாம தேசமங்கலம் வரை போயிட்டு வரலாம். கார் இருக்கு. எங்களுக்குச் சொந்தமான யானை ஒண்ணு மூணு நாலு நாட்களா மதம் பிடிச்சு ஏகப்பட்ட நஷ்டங்களை உண்டாக்கிக்கிட்டு இருக்கு. ஊர்ல இருக்குற ஒருத்தருக்குக்கூட தூக்கம் வரல. அவன் உண்மையிலேயே ஒரு பயங்கரமானவன். மூணு நாலு ஆளுங்க ஏற்கெனவே அவன்கிட்ட மாட்டி செத்திருக்காங்க. அவனைச் சுட்டு காலி பண்ணணும்னு இன்ஸ்பெக்டரோட தலைமையில் ஒரு ரிசர்வ் போலீஸ் கூட்டமே வேன்ல போயிருக்காங்க. அவங்க அவனைச் சுட்டு கொன்னுடுறதுக்கு முன்னாடி நாம் அங்கே போகணும். இங்க உட்கார்ந்திருக்குற இந்த நம்பூதிரி யானைக்காரர். ரெண்டு மூணு ராத்தல் அபின் வாங்கணும்னு வந்தாரு. தேவையான அளவு கிடைக்கல. கஞ்சா தாராளமா கடைகள்ல கிடைக்குது. ரெண்டு மூணு குலை பழம் வாங்கி அதை நல்லா குழைச்சு, சின்ன சின்ன உருண்டையா ஆக்கி, அதற்குள்ள கொஞ்சம் அபினை உருட்டி வைக்கணும். அதை அவன் சாப்பிட்டான்னா, அவனுக்கு மயக்கம் வர ஆரம்பிச்சிடும். அதற்குத் தேவையான அபின் நமக்குக் கிடைக்கலியே! பிறகு பலகையில் ஆணிகளை அடிச்சு வைக்கணும். கூர்மையான பாகம் வெளியே தெரியிற மாதிரி இருக்கணும். அதை மிதிச்சிச்சுன்னு வச்சுக்கோங்க. யானை அப்படியே நின்னுடும். ஆனா, அப்படிச் செய்றது துரோகம்ன்றது மாதிரி என் மனசுல படுது. பஷீர்... நீங்க வந்து அதோட வாலைப் பிடிச்சு, தலையைச் சுற்றி, தூரத்துல தூக்கி எறியாம இருக்கணும்... வாங்க- போவோம்.''

அவர் சொன்னதைக் கேட்டு நான் வெலவெலத்துப் போனேன். வியர்வை அருவியாய் கொட்ட நான் நின்றிருந்தேன். சொல்லப் போனால் நான் மிகவும் பயந்துவிட்டேன். இருந்தாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நான் மெதுவான குரலில் சொன்னேன்:

“கொஞ்ச நாளா வலது கையில ஒரு பிரச்சினை...''

“ஏன்... இடது கையால முடியாதா?''

“முடியாது...''

“பரவாயில்ல... இந்த நம்பூதிரி ஒரு வர்மக்கலை தெரிஞ்ச ஆளு. அவர் உங்க கையைப் பிடிச்சு சரி பண்ணிடுவாரு...''

நாங்கள் மூன்று பேரும் காரில் ஏறி உட்கார்ந்தோம். சங்ஙம்புழ, முண்டசேரி ஆகியோரையும் தேடிப் பார்த்தோம். ஆனால், அவர்கள் கிடைக்கவில்லை. நாங்கள் புறப்பட்டோம்.

தேசமங்கலம் வீட்டை நெருங்கினோம். அப்போது அங்கே ரிசர்வ் போலீஸ் வந்த வேன் நின்று கொண்டிருந்தது- நெளிந்து போன கோலத்தில். அதற்குள் துப்பாக்கிகளைக் கைகளில் வைத்துக்கொண்டு போலீஸ்காரர்களும், துப்பாக்கியும் ரிவால்வரும் வைத்தவாறு ஒரு இன்ஸ்பெக்டரும் அமர்ந்திருந்தார்கள். அவர்களைப் பார்த்ததும் ஆண் யானை இறங்கி வந்தது. மதம் பிடித்திருக்கும் யானையைப் பார்த்ததும், வேனில் இருந்த போலீஸ்காரர்கள் துப்பாக்கியை நீட்டி குறி பார்த்தார்கள். யானை வேகமாகப் பாய்ந்து வந்து வேனை முட்டத் தொடங்கியது. அவ்வளவுதான். போலீஸ்காரர்களும் பயந்து நடுங்கிவிட்டார்கள். பின்பக்கத் கதவு வழியாக போலீஸ்காரர்களும் இன்ஸ்பெக்டரும் விழுந்தடித்துக்கொண்டு ஓடினார்கள். அப்போது போனவர்கள் தான். அவர்களைப் பற்றி இப்போது வரை எந்தவித தகவலையும் காணோம். இரண்டு மைல் தூரத்தில் இன்ஸ்பெக்டரின் தொப்பி கிடந்தது. யானை வேனின் முன் பாகத்தைக் குத்தியது. எங்கோ இருந்து கொஞ்சம் வென்னீர் அவன் முகத்தில் வந்து விழுந்தது. அவன் வேகமாக ஓடி ஒரு தென்னந்தோப்பையும், ஒரு வீட்டையும் துவம்சம் பண்ணினான். அவற்றை ஒன்றுமே இல்லாமல் ஆக்கினான். எல்லாம் முடிந்து குன்றின் பக்கத்தில் வந்து நின்றிருக்கிறான்!

இவ்வளவு விஷயங்களும் வேறு சில யானைக்காரர்கள் மூலம் எங்களுக்குத் தெரிய வந்தன. நாங்கள் தைரியமாக காரை விட்டு வெளியே இறங்கி நின்றோம். நாங்கள் பார்த்தோம். நான் பார்த்தேன்.... ஈஸ்வரா! இப்படியே பூமிக்குக் கீழே நீராக மாறிப் போய் மறைய முடிந்தால் நன்றாக இருக்குமே! விஷயம் என்னவென்றால், யானை எங்களுக்கு நேராக குன்றின் மேல் நின்றிருக்கிறது. சிவந்த நிறத்தில் இருந்தான். காதுகளை அசைக்காமல் இலேசாக தலையைச் சாய்த்து கொம்புகளை உயர்த்தி எங்களைப் பார்த்தான்.

"மகானான கஜேந்திரா! ஏதாவது மனம் போனபடி நடந்திடாதே. என்னை நீதான் காப்பாத்தணும். நான் ஒரு அப்பாவி மனிதன். உன்னைப் பற்றி ஏதாவது அது இதுன்னு சொல்லியிருந்தா, அதையெல்லாம் பெரிசா நினைக்காம என்னை நீ மன்னிக்கணும். நீதான் எவ்வளவு பெரிய கடவுள்!' என்று சொல்லியவாறு அமைதியாக மனதிற்குள் பிரார்த்தித்தேன்.

“என்ன... ஒரு கை பாக்குறீங்களா? நம்பூதிரி... பஷீரோட கையைப் பிடிச்சு தடவி சரி பண்ணுங்க...''

நான் சொன்னேன்:

“மன்னிக்கணும். நான் அந்த இன்ஸ்பெக்டரோட தொப்பியை எடுத்துக்கொண்டு போய் கொடுக்கட்டுமா? தொப்பி இல்லாம அந்த ஆளு வெறுமனே அலைஞ்சு திரிஞ்சா அது அவ்வளவு நல்லா இருக்காது. நான் ஓடுறேன். வேற எங்கேயாவது வச்சு பார்ப்போம்!''

“அப்படின்னா கார்ல ஏறுங்க வீட்டுக்குப் போவோம்!''

காரில் ஏறி கஜேந்திரனை மீண்டும் ஒருமுறை பார்த்தேன். அவன் மண்ணைக் கிளறி சிவப்பு நிறத்தில் நின்று கொண்டிருக்கிறான். எந்த நிமிடத்திலும் கீழ்நோக்கி அவன் ஓடி வர வாய்ப்பு இருக்கிறது. இருந்தாலும் அவன் நிறத்தைப் பார்த்தபோது, ஸ்ரீமத் பகவத் கீதை கிடைக்கக்கூடிய ஒரு அருமையான ஐடியா என் மனதில் உதித்து மறைந்தது. கம்யூனிஸ்ட் பார்ட்டி! குட்! உயிருடன் திருச்சூர் செல்வோம்!

நாங்கள் வீட்டின் கேட்டை நெருங்கியதும், காரை விட்டு இறங்கி நடந்தோம். சிறிது தூரம் சென்றதும், பாதையில் அதிர்ச்சியடைய வைத்த ஒரு காட்சி!

சுமார் இருபது நாயர் இளம் பெண்கள்- அவர்கள் பதினேழு, பதினெட்டு, பத்தொன்பது, இருபது வயதுகளில் உள்ளவர்கள். எல்லாரும் நல்ல வெண்மை நிறத்தில் இருந்தார்கள். அழகான தோற்றத்தைக் கொண்டவர்கள். வெள்ளை முண்டு கட்டியிருந்தார் கள். தார்ப் பாய்ச்சி இருந்தார்கள். மேலே மருந்துக்குக்கூட எந்த ஆடையும் இல்லை. எல்லாருடைய தலையிலும் விறகு கட்டுகள். அதை இரண்டு கைகளாலும் பிடித்துக் கொண்டு, நெஞ்சை முன்பக்கமாகத் தள்ளிக்கொண்டு அவர்கள் நடந்து வந்தார்கள். மார்பகங்கள்! மார்பகங்கள்! நிர்வாண மார்பகங்கள்! எத்தனை மார்பகங்கள்! எதற்கு எண்ண வேண்டும்? எல்லாம் உயிரின் ஆதாரம்!


நான் தலை குனிந்து வணங்கவில்லை. போய் காப்பி குடித்தோம். வீட்டைச் சுற்றி நடந்து பார்த்தோம். இந்த விறகு எதற்குத் தெரியுமா? யானை வருகின்ற வழியில் வீட்டிற்கு முன்னால் மூன்று, நான்கு வரிசையாகப் போட்டு நெருப்பு மூட்டி எரியச் செய்வதற்கு. ஏ.கெ.டி.கெ.எம்மின் அண்ணன் நம்பூதிரிப்பாடின் கையில் இருந்து அந்த ஆண் யானை பழம் வாங்கிச் சாப்பிடுவது அவ்வப்போது நடக்கக்கூடிய ஒரு விஷயம். அந்த ஞாபகத்தில் அவன் தேசமங்கலம் வீட்டைத் தேடி வரலாம். அதற்காகத்தான் அந்த தீயால் ஆன சுவர்கள்!

நம்பூதிரிகளின் வீடுகளில் நுழைகிறபோது, நாயர் பெண்கள் ப்ளவுஸோ ரவிக்கையோ பாடீஸோ அணிந்திருக்கக்கூடாது. நம்பூதிரியின் முன்னாலும் தேவன் முன்னாலும் ராஜாவுக்கு முன்னாலும் அவர்கள் மார்பகங்களைக் காட்ட வேண்டும். நம்பூதிரிகளும் தேவனும் ராஜாக்களும் சேர்ந்து கிட்டத்தட்ட எண்ணூறு வருடங்கள் கேரளத்தை ஆட்சி செய்திருக்கிறார்கள். நம்பூதிரியும் தேவனும் ராஜாக்களும் இப்படிப்பட்ட சம்பவங்களை எல்லாம் அரங்கேற்றி இருக்கிறார்கள் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், பழைய அந்த நல்ல காலத்தின் சுகமான ஞாபகச் சின்னங்கள் அல்லவா இந்த அழகான மார்பகங்கள்!

எல்லா பெண்களையும் கடவுள் ஆசீர்வதிக்கட்டும்! ஆண்களை யும்தான். நாங்கள் எல்லாவற்றையும் பார்த்தோம். கையிலிருக்கும் அபினைக் கொடுத்து கஜேந்திரனை மயக்கமடையச் செய்வதுதான் நல்லது என்று அறிவுரை சொல்லி விட்டு, உயிரைப் பிடித்துக் கொண்டு நாங்கள் திருச்சூருக்கு வந்துவிட்டோம். மறுநாள் முதல் பகவத் கீதை போராட்டத்தை ஆரம்பித்தேன்.

“டேய், நீ நம்ம தோழர் அனந்தநாராயண சாஸ்திரியைப் பார்த்தியா? பார்த்தா, கம்யூனிஸ்ட் பார்ட்டி அலுவலகத்துக்கு உடனே போகச் சொல்லு'' என்று கிருஷ்ணன் நாயரிடம் நான் சொன்னேன். கிருஷ்ணன் நாயர் பேந்தப் பேந்த விழித்தவாறு என்னைப் பார்த்தார். நான் சொன்னேன்.

“ஸ்ரீமத் பகவத் கீதையில் அந்தப் பார்ட்டியோட கொள்கை விளக்கங்கள் இருக்காம். அதைச் சொல்றதுக்குத்தான் அவங்க அவரைக் கூப்பிடுறாங்க. தோழருக்கு வாழ்த்துகள்!''

கிருஷ்ணன் நாயர் அழும் நிலையில் இருந்தார். நான் சொன்னேன்:

“மங்களோதயம் வெளியிட்டிருக்கிறது ஒரு சிவப்பு பகவத் கீதை. எல்லாரும் இதைப் படிச்சு கம்யூனிஸ்ட்டா மாறுங்க...''

இதைவிட பரவலான அளவில் நான் எல்லாரிடமும் பகவத் கீதை விஷயத்தைப் பரப்பினேன். சிவப்பு பகவத் கீதையைப் பற்றி நாராயணய்யர் கேட்டார். அஞ்சாம்ப்ரானின் டிரைவர் கேட்டான். பட்டரோ நம்பூதிரியோ ஏ.கெ.டி.கெ.எம்மும் கேட்டார். நல்லவேளை- அனந்த நாராயண சாஸ்திரிகள் கேட்கவில்லை.

இப்படி பல விதத்திலும் பகவத் கீதையைப் பற்றிய பிரச்சாரம் பரவிக்கொண்டிருந்த வேளையில் ஒரு நல்ல செய்தி வருகிறது. ஜோஸஃப் முண்டசேரியும் சங்ஙம்புழ கிருஷ்ணபிள்ளையும் நானும் மங்கனோதயத்தின் மேல்மாடியில் அஞ்சாம்ப்ரானுக்கு முன்னால் உட்கார்ந்திருக்கிறோம். நாங்கள் காபி குடித்தோம். முண்டசேரி வெற்றிலை போட்டார். சங்ஙம்புழ சிகரெட் பிடித்தார். நான் ஒரு பீடியைப் பிடித்தேன்.

அப்போது ஏ.கெ.டி.கெ.எம். மணியை அடித்து ப்யூனை அங்கு வரவழைத்துச் சொன்னார்:

“கீழே போயி பகவத் கீதையைக் கொண்டு வா- ஒண்ணே ஒண்ணு!''

ஒன்றே ஒன்றா? எனக்காகத்தான் இருக்கும். இந்துக்கள் கடைசியில் தோற்றுவிட்டார்கள். பிரச்சாரம் பண்ணுவதால் நிச்சயம் மதிப்பு இருக்கத்தான் செய்கிறது. அது பச்சைப் பொய்யாகவே இருந்தால்கூட, அதற்கு ஒரு நல்ல முடிவு கிடைக்கத்தான் செய்கிறது.

ப்யூன் ஒரு பகவத் கீதையைக் கொண்டு வந்தான். நான் என் மனதிற்குள் கூறிக்கொண்டேன். “கிருஷ்ணா, மன்னிக்கணும். பகவத் கீதையோட நிறம் சிவப்புன்னு சும்மா சொன்னேன். தெரியுதா?''

"வித்தி பெஸ்ட் காம்ப்ளிமெண்ட்ஸ் ஆஃப் ஏ.கெ.டி.கெ.எம். வாசுதேவன் நம்பூதிரிப்பாடு” என்று எழுதி, கையெழுத்துப் போட்டு ஏ.கெ.டி.கெ.எம். பகவத் கீதையை எங்கள் முன்னால் மேஜைமேல் வைத்தார். யாரும் அதை எடுக்கவில்லை. அது யாருக்கு?

அஞ்சாம்ப்ரான் சொன்னார்:

“ஒரு பகவத்கீதை இருக்கு. நீங்க இருக்குறது மூணு பேர். முண்டசேரி, சங்ஙம்புழ, பஷீர்... உங்கள்ல உத்தமமான மனிதர் யாரோ, அவங்க இந்தப் புத்தகத்தை எடுத்துக்கலாம்!''

மூன்று பேரில் உத்தமமான மனிதர் யார்? உண்மையிலேயே பெரிய விஷயம்தான்.

அந்த பகவத் கீதையை யார் எடுத்தது? என் பிரியமான சரித்திர மாணவர்களே, எனக்கு இதில் ஏதாவது சந்தேகம் இருக்கிறதா என்ன? முண்டசேரிக்கும் சங்ஙம்புழய்க்கும் சிந்தித்துப் பார்ப்பதற்குக்கூட நேரம் தராமல், நான் அதை அவ்வளவு வேகமாக பாய்ந்து எடுத்தேன்.

“தேங்க்ஸ்...''

ஆனால், இன்று... இப்போது நான் அந்தச் சம்பவத்தை மனதில் மிகவும் வருத்தத்துடன் நினைத்துப் பார்க்கிறேன். பலரும் இந்த உலகை விட்டுப் போய்விட்டார்கள். காலத்தின் ஒரு மிகப் பெரிய இடைவெளி எனக்கு முன்னால் கிடக்கிறது. அன்று நான் அப்படி நடந்து கொண்டிருக்கக்கூடாது. நான் அந்த பகவத் கீதையை எடுக்காமல் இருந்திருந்தால்... முண்டசேரி எடுத்திருக்க மாட்டார். சங்ஙம்புழ எடுத்திருக்க மாட்டார்.

அந்த பகவத் கீதை அங்கேயே இருந்திருக்கும். இன்று-

சங்ஙம்புழ மரணமடைந்து விட்டார்.

ஏ.கெ.டி.கெ.எம். மரணமடைந்து விட்டார்.

அனந்தநாராயண சாஸ்திரிகள் மரணமடைந்து விட்டார்.

கிருஷ்ணன் நாயர் மரணமடைந்து விட்டார்.

எம்.பி. போள் மரணமடைந்து விட்டார்.

ஏ. பாலகிருஷ்ண பிள்ளை மரணமடைந்து விட்டார்.

முண்டசேரி மரணமடைந்து விட்டார்.

நாராயணய்யர் மரணமடைந்து விட்டார்.

மரணமடைந்த ஆத்மாக்களுக்கு நிரந்தர சாந்தி கிடைக்கட்டும்!

அந்தக் கூட்டத்தில் மரணமடையாமல் இருப்பவன் நான் மட்டும்தான். என் மரணம் எப்போது வரப் போகிறதோ எனக்குத் தெரியாது. அது எந்த நிமிடத்திலும் நடக்கலாம். கருணை வடிவமான கடவுளே, அமைதியான மரணத்தைத் தந்து எனக்கு அருள் செய்ய வேண்டும். ஆத்மாவிற்கு நிரந்தர சாந்தியும்.

மங்களம். சுபம்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.