Logo

அவன் - அவள்

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 6500
Avan - Aval

ந்த வீட்டைப் பார்த்தால் இப்போது விழுந்து விடும், இப்போது விழுந்துவிடும் என்று தோன்றும். உள்ளே ஒரு அறை இருக்கிறது. மேலே இருந்து நீர் விழுந்து, உள்ளே முழுவதும் பள்ளங்களாக இருக் கும். முன்பு எப்போதோ மஞ்சள் நிறத்தில் பூசிய சிதிலமடைந்த பழைய சாயத்தில் புகை, ஈரம், அழுக்கு அனைத்தும் இருக்கும். அறை நிறைய பொருட்கள்.

கால்கள் இழக்கப்பட்ட நாற்காலிகள், கயிறு அறுந்த கட்டில்கள், உடைந்த சமையலறைப் பொருட்கள், கிழிந்து நாசமான பாய்கள், பழைய துணிகள் - இப்படி நீண்டு போய்க் கொண்டிருக்கும். மூலையில் உள்ள இரண்டு அடுப்புகளில் புகைந்து கொண்டிருக்கும் நெருப்புக் குச்சிகள் மட்டும் இருக்கும். நடப்பதற்கு இடமில்லை. சாமான்களும் ஒரு சகிக்க முடியாத நாற்றமும் மட்டும் அல்ல. - தவறு நேர்ந்துவிட்டது. சாமான்கள் மட்டுமல்ல அங்கு, அவற்றுக்கு மத்தியில் அவனும், அவனுடைய மனைவியும் இருக்கிறார்கள். குழந்தையும்.

அவன் நீண்டு, மெலிந்த ஒரு மனிதனாக இருந்தான். சாயம்போன சுவரைப் போல கறுத்த நிறத்திற்கு அடியில் அவன் வெளிறிப்போய் இருப்பது நன்றாகவே தெரியும். சிறுசிறு உரோமங்கள் நிறைந்த முகம். உடலெங்கும் நரம்புகள் எழுந்து நின்றுகொண்டிருக்கின்றன. ஒரு பக்கம் இருந்த கட்டிலில் உட்கார்ந்து உற்சாகத்துடன் புராண பாராயணம் நடத்திக் கொண்டிருக்கிறான். உடல் அமைதியாக இருக்கவில்லை. கைகள் நடுங்குகின்றன. சிவந்த கண்கள் அசைந்து கொண்டிருக்கின்றன. இடையே புத்தகத்தை மடியில் வைத்துக் கொண்டு, கால்களை அசைத்துக் கொண்டு, கைகளை பின்னால் வைத்துக் கொண்டு சாய்ந்து அமர்ந்தவாறு வாசிக்கிறான். உடனே கால்மீது வைத்திருந்த புத்தகத்தைக் கையில் எடுத்து வைத்துக் கொண்டு வாசிக்க ஆரம்பிக்கிறான். இடையே பக்கங்கள் மாறி உட்காருகிறான். சிரமமாக இருக்கும் சமஸ்கிருதச் சொற்கள் வரும்போது, ஆர்வத்துடன் மனைவியின் முகத்தைப் பார்த்தவாறு சொல்லின் மூலத்தையும் அதற்கான அர்த்தத்தையும் விளக்கிக் கூறுவான். அதுதான் அவன்.

அருகில் கொம்புகளில் இருந்து பக்கவாடுகள் ஒடிந்த ஒரு மரத்தொட்டில் தொங்கவிடப்பட்டிருக்கிறது. அதில் ஒரு குழந்தை. மஞ்சள் நிறத்தில், மெலிந்துபோய், பெரிய தலையும் வயிறும் கொண்ட ஒரு குழந்தை. கைகளையும் கால்களையும் அசைத்து என்னவோ சத்தங்களை உண்டாக்கிக் கொண்டிருந்தது.

கீழே தரையில் ஒரு இடத்தில் சுவரில் சாய்ந்து கொண்டு ஒரு பெண் உட்கார்ந்திருக்கிறாள். மிகவும் அதிகமாக மெலிந்திருப்பது அவள்தான். கிழிந்த ஏதோ ஒன்றை அவள் தைத்துக் கொண்டிருக்கிறாள். இடையில் அவ்வப்போது தொட்டில் ஆடுகிறது. இப்போது தையலை நிறுத்திவிட்டு, தன் கணவனின் முகத்தில் கண்களைப் பதித்தவாறு அவள் அமர்ந்திருக்கிறாள்.

பாராயணத்தில் மூழ்கி முகத்தில் ஒருவகை ஆனந்தம் பரவியிருக்கிறது. சமஸ்கிருதச் சொற்களை விளக்கிக் கூறும்போது, ஆச்சரியத்துடன் தலையை ஆட்டுகிறாள். கால்களை நீட்டி வைத்துக் கொண்டு, கைகளை மடியில் வைத்துக் கொண்டு அப்படியே அமர்ந்திருக்கிறாள். திடீரென்று அந்த முகம் வேறு மாதிரி மாறுகிறது. சந்தோஷம் மறைந்து கோபமும் கவலையும் வெறுப்பும் நிழலாடுகின்றன. நாளை விஷு. இந்த ஆண் என்ன செய்கிறான்? புராணக்கதை வாசித்துக் கொண்டிருக்கிறான்! புராணம்... விஷுவிற்காவது ஒரு மடக்கு கஞ்சி குடிக்க முடியாதா? ஓ.... இந்த ஆண் எதற்காக இப்படி நடக்கிறான்?

பாராயணத்தை அவள் கேட்கவில்லை. வார்த்தைகள் கடந்து போய்க் கொண்டிருக்க, அவளுடைய முகத்தில் வெறுப்பின் நிழலுக்கு கனம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்தக் குழந்தைக்கு என்ன கொடுப்பது? மார்பில் சிறிதுகூட பால் இல்லை. அவன் வாசிக்கிறான்.... வாசிக்கிறான்!

அவன் வாசிப்பில் மூழ்கி இருக்கிறான். கைகளை எடுத்து, சைகைகளுடன் சொற்களைக் காற்றில் எறிந்து கொண்டிருக்கிறான். இடையில் வந்த சமஸ்கிருதச் சொற்களை ரசித்து, மீண்டும் திரும்பக் கூறிவிட்டு, அவற்றுக்கு அர்த்தத்தை விளக்க ஆரம்பிக்கிறான்.

“அப்படி காதல் வயப்படு...'' - அங்கு கயிறு அறுந்தது.

பெண் வேகமாக எழுந்தாள். நடக்க முடியாத அளவிற்குக் கவலையும் கோபமும் முகத்தில் நிறைந்திருந்தன. அவள் வெடித்துச் சிதறிக் கத்தினாள். “காதல் வயப்பட்டு... அப்படித்தானேடா? காதல் வயப்பட்டு....! நீ எதுக்குடா இங்கே உட்கார்ந்து கொண்டு இருக்கிறே? வாசிக்கிறானாம்! நாளை விஷு என்று உனக்குத் தெரியும்ல?'' அவளுடைய கழுத்தில் இருந்த நரம்புகள் எழுந்து நின்றன. செம்பட்டை விழுந்த தலைமுடிகள் சுற்றிலும் சிதறின.


அவன் அதிர்ச்சியடைந்து எழுந்து கட்டிலில் இருந்து பின்னால் நகர்ந்து நின்றான். தன் மனைவியைப் பார்த்தவாறு அவன் கதவுக்கு அருகில் போய் நின்றான்.

“நீ போய் பிச்சை எடுடா. கஞ்சிக்கு சம்பாதிக்கத் தெரியாதவன் பாராயணம் பண்றதுக்கு குடும்பத்தில் வந்து இருக்கிறானாம்!''

கட்டுப்பாட்டை இழந்து கத்தியவாறு, கைகளை முன்னோக்கி வீசிக் கொண்டு பெண் அவனை நோக்கி ஓடிச் சென்றாள். அவன் பயத்துடன் கதவுக்கு வெளியே போய் நின்றான். பெண்ணின் நெஞ்சு உயர்ந்து தாழ்ந்தது. கண்கள் மின்னின.

அவன் மூச்சை அடக்கிக் கொண்டு, சற்று நடுக்கத்துடன் மெதுவான குரலில் சொன்னான்:

“முட்டாளே! நரகம் என்ன என்று உனக்குத் தெரியுமா? இந்தப் பறவைகளுக்கும் மிருகங்களுக்கும் இரை தருவது யார்? பகவான்! அவர் நமக்கும் தருவார்.'' குரலை உயர்த்திக் கொண்டு சொன்னான்: “ஹ! பகவானிடம் நம்பிக்கை இல்லாமல் ஆகியிருக்கிறாய்! உணவைப் போன்ற சாதாரண விஷயங்களுக்காக கணவனை புராணத்தை வாசிக்க விடமாட்டேன் என்கிறாய். முட்டாளே!''

பெண் சிறிது நேரம் எதுவும் பேசாமல் நின்றாள். மேலும் அதிகமான தைரியத்துடன் கைகளைக் கதவின் இரண்டு பக்கங்களிலும் வைத்துக் கொண்டு அவன் தொடர்ந்து சொன்னான்: “ஹ! பகவானை மதிக்காமல் இருக்கிறாய்! உனக்கு நரகம்தான். கொழுந்து விட்டு எரியும் நெருப்பில் நீ பற்றி எரிவாய். பாம்புகளையும் பிசாசுகளையும் உனக்குத் தெரியுமா? ச்சே... புராணத்தை வாசிக்க விடவில்லை!''

பெண் மீண்டும் பேசாமல் நின்றிருந்தாள். மின்னிக் கொண்டிருந்த கண்கள் மட்டும் அசைவே இல்லாமல் அவனைத் துளைத்து எடுத்துக் கொண்டிருந்தன. அவன் வீட்டிற்குள் வந்தான். கிழிந்து போன ஒரு சட்டையையும் ஒரு பழைய வேட்டியையும் எடுத்து அணிவதற்கு அவனிடம் தைரியம் இருந்தது. நரகத்தைப் பற்றிய விளக்கம் உரத்த குரலில் தொடர்ந்து கொண்டிருந்தது.

திடீரென்று மனைவி ஒரு பாம்பைப் போல சீறியவாறு இரண்டு கைகளையும் சுருட்டி அவனை நோக்கிப் பாய்ந்து சென்றாள். அவளுடைய கண்கள் வெறித்து நின்றன. கோபத்தால் மெலிந்துபோன கால்கள் நடுங்கின. அவன் அதிர்ச்சியடைந்தான். அடுத்த நிமிடம் வாசலுக்குச் சென்றான். அவனைத் தொடர்ந்து திண்ணைக்குப் பாய்ந்து வந்த பெண் கூறத் தொடங்கினாள்:

“இதுதான்டா நரகம். நீதான் பிசாசு. என்னைக் கொல்லாமல் கொல்கிறாய் அல்லவா? உன்னுடைய பகவானும் நரகமும்! நீதான்டா நரகம்.... சைத்தான்!''

பழைய ஒரு கத்தியைக் கையில் எடுத்துக்கொண்டு அவள் வாசலை நோக்கி ஓடினாள். அவள் வியர்வையில் குளித்திருந்தாள். ஆடை அவிழ்ந்து விட்டிருந்தது. உடலெங்கும் எலும்புகள் துருத்திக் கொண்டிருந்தன.

அவன் சாலைக்குச் சென்று பயத்துடன் ஓடியே போய்விட்டான். நரகத்தைப் பற்றிய சிந்தனை நின்று போயிருந்தது.

அந்தப் பெண் மீண்டும் திண்ணைக்கு வந்தாள். இருமல் அவளை பாடாய்ப் படுத்தியது. இருமலுக்கு மத்தியில் உரத்த குரலில் கத்தியவாறு அவள் திண்ணையில் ஓடினாள்.

வழிப்போக்கர்கள் ஆச்சரியத்துடன் வெறித்துப் பார்த்தார்கள்.

நரகம்! அவனுடைய நரகம்! நான் நரகத்திற்குத்தான் செல்ல வேண்டும்! இங்கு ஒரு கயிறு இல்லையா? ஒரு கயிறு...

அறை முழுக்க ஒரு கயிறுக்காகத் தேடினாள். கயிறு இல்லை. கோபம் அதிகமானது. கெட்ட வார்த்தைகள் வெளியே வந்தன. கத்தியை எடுத்துக் கொண்டு கட்டில்மீது ஏறி, தொட்டில் கயிற்றின் மேலே இருந்த பகுதியை அறுத்தாள். தொட்டில் ஒரு அசைவுடன் தரையில் விழுந்தது. குழந்தை சுய உணர்வில்லாமல் இருந்தது. பெண் கயிற்றைப் பிடித்து அவிழ்த்து, ஒரு ஒடிந்த நாற்காலியில் ஏறி, மேலே இருந்த கொம்பில் இறுகக் கட்டினாள். முடிச்சு போட்டாள். தலையை முடிச்சுக்குள் நுழைத்தாள்.

குழந்தை சத்தம் போட்டு அழ ஆரம்பித்தது. அது கைகளையும் கால்களையும் அசைத்து ஒரு புழுவைப்போல நெளிந்தது. சிறிது நேரம் பெண் ஆழமான வெறுப்புடன் அதையே வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றாள். தலையை முடிச்சுக்குள் இருந்து எடுத்துவிட்டு, அவள் கீழே இறங்கினாள். மோசமான வார்த்தைகளால் திட்டியவாறு அதைத் தொட்டிலில் இருந்து வெளியே எடுத்து, சுருங்கிப்போன ஒரு மார்பகத்தை அதன் வாய்க்குள் திணித்துவிட்டுக் கத்தினாள்: “குடி... பிசாசே... குடி....'' சற்று நேரம் கடந்ததும், கீழே உட்கார்ந்து இன்னொரு மார்பகத்தைத் தேடி குழந்தையின் வாய்க்குள் வைத்தாள்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.