Logo

ஓர் இரவு

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 4154

ஓர் இரவு
தகழி சிவசங்கரப்பிள்ளை
தமிழில்: சுரா

ரு சரியான வழியைக் கண்டு பிடிக்க வேண்டும். கண்டு பிடித்தே ஆக வேண்டும். அன்றே மருந்து வாங்கியாக வேண்டும். அதற்கும் மேலாக, மறுநாள் குழந்தைக்கான கல்விக் கட்டணத்தையும் கொடுக்க வேண்டும். அபராதத்தையும் சேர்த்து கட்ட வேண்டிய இறுதி நாள் அது. அந்த நகரத்திற்கு நான் இடம் மாற்றி வந்து, பதினைந்து நாட்களே ஆகியிருந்தன. தெரிந்தவர்கள் யாருமில்லை. மாதத்தின் மத்திய பகுதி. அதிகமாக எதுவும் வேண்டாம். இருபது ரூபாய் போதும்.

எதையாவது அடகு வைக்கலாம் என்று பார்த்தால், இருந்த நகையை முன்பு இருந்த இடத்தில் அடகு வைத்தாகி விட்டது. நான் அதைத் தேடி அலைந்து கொண்டிருந்தேன். எங்கு சென்று, யாரிடம், எப்படி வாங்கலாம் என்பது தெரியாமல் நான் நடந்து திரிந்தேன். எனினும், எனக்கு ஒரு தன்னம்பிக்கை இருந்தது. எங்கிருந்தாவது அடைந்து விடலாம் என்பதுதான். அதற்கு காரணமெதுவுமில்லை. ஒரு நம்பிக்கை! பணத்தைக் கொண்டு வருகிறேன் என்று மனைவியிடம் உறுதியான குரலில் கூறி விட்டுத்தான் வெளியே வந்தேன்.

நான் அப்படி நடந்து திரிந்தபோது, ஒரு பெரிய கார் எனக்கு முன்னால் வந்து திடீரென்று நின்றது. உடனடியாக நான் திகைப்படைந்து விட்டேன். ஒரு ஆள் காரிலிருந்து வெளியே வந்து என் கையைப் பிடித்து நெறித்தவாறு என் முகத்தையே பார்த்தான். அவன் கேட்டான்:

‘உனக்கு என்னை அடையாளம் தெரியலையா?’

உண்மையிலேயே எனக்கு புரியவில்லை. அந்த அளவிற்கு சுதந்திரமாக ‘உனக்கு’ என்று கூறிய ஆளை உண்மையிலேயே நான் தெரிந்திருக்க வேண்டும். மிகவும் நெருக்கமான மனிதனாக இருக்க வேண்டும். ஒரு நிமிடம் நான் தயங்கிக் கொண்டே நின்றிருந்தேன். திடீரென்று என்னையே அறியாமல் என் நாக்கிலிருந்து ஒரு சத்தம் வெளியே வந்தது.

‘ஜோணிக்குட்டி...’
‘அப்படியென்றால்... நீ என்னை மறக்கல.’

‘ஜோணிக்குட்டி, நான் உன்னை மறப்பேனா? ஆனால், சந்தித்தது சிறிதும் எதிர்பார்க்காததுதான்...’

நான் எல்லாவற்றையும் மறந்து விட்டேன். இருபது வருடங்களுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் ஒரே அறைக்குள் மூன்று வருடங்கள் இருந்தவர்கள் நாங்கள். நினைவுகள் அடுத்தடுத்து வந்தன. என் ஜோணிக்குட்டியைப் பற்றி சில வேளைகளில் நான் நினைத்திருக்கிறேன். ஒருவேளை... அவன் என்னைப் பற்றியும் நினைத்திருக்கலாம். அதனால்தானே என்னைப் பார்த்தவுடனே அடையாளம் கண்டு பிடித்து வண்டியை நிறுத்தினான்! உடனடியாக அடையாளம் கண்டு பிடிக்க என்னால் முடியாமற் போனது.... அது ஒரு தவறாக எனக்கு தோன்றியது. ஆனால், அன்றைய நாள் என் மனதிற்குள் ஏராளமான குழப்பங்கள் இருந்தன. அந்த குழப்பங்களின் திரைச்சீலை நீங்கினால்தானே, ஆனந்தம் நிறைந்த கடந்து சென்ற சம்பவங்களைப் பார்க்க முடியும்! அந்த ஒரு நிமிடம் அப்படி கடந்து விட்டது.

நான் எதற்காக வெளியே வந்தேன் என்பதை மறந்து விட்டேன். காருக்குள் ஏறும்படி ஜோணிக்குட்டி என்னிடம் கூறினான். நான் ஏறினேன். அந்த காருக்குள் மேலும் இரண்டு பேர் இருந்தார்கள். கார் நகர்ந்ததும், ஜோணிக்குட்டி நண்பர்களிடம் கூறினான்:

‘கோபி என்னுடைய குருநாதன். ஒரு அப்பாவியான பேசத் தெரியாத பிராணியாக நான் கல்லூரிக்குச் சென்றேன். அன்று கோபியுடன் சேர்ந்தேன். கல்லூரியை விட்டு வெளியே வந்தபோது....’

காரிலிருந்த ஒரு நண்பன் அந்த வாக்கியத்தை முழுமை செய்தான்.

‘கல்லூரியை விட்டு வெளியே வந்த ஆளை எங்களுக்கு தெரியும்.’

அது உண்மைதான். ஜோணிக்குட்டி ஒரு அப்பாவியாக இருந்தான். நான் சேட்டைகள் செய்து கல்லூரியில் பிரபலமானவனாக இருந்தேன். அவன் கல்லூரியை விட்டு வெளியே வந்த போது, குறும்புத் தனங்களில் என்னைப் போலவே ஆகி விட்டிருந்தான்.
ஜோணிக்குட்டி கூறினான்:

‘என்னை மது அருந்த கற்றுக் கொடுத்தவன் கோபிதான்.’

திடீரென்று அந்தச் சம்பவம் என் ஞாபத்தில் வந்தது. அன்று பிரபலமாக இருந்த சேவியர்ஸ் ரெஸ்ட்டாரெண்டிற்கு ஜோணிக்குட்டியை அழைத்துச் சென்ற கதை!

நண்பர்களில் இன்னொருவன் தமாஷாக கூறினான்:

‘எது எப்படி இருந்தாலும் குருநாதர் நல்ல நேரத்தில்தான் ஆரம்பித்து வைத்திருக்கிறார். இன்று வரை தடையெதுவும் உண்டாகவேயில்லை.’

அவன் தொடர்ந்து கேட்டான்:

‘குருநாதன் ஆரம்பித்து வைத்தது அது மட்டும்தானா?’

அதற்கும் ஜோணிக்குட்டி பதில் கூறினான்:

‘இல்லை... தொடர்ந்து உள்ளவற்றையும் ஆரம்பித்து வைத்தவன் கோபிதான்.’

அதற்குப் பிறகு ஜோணிக்குட்டி என்னிடம் கேட்டான்:

‘நம்முடைய லாட்ஜுக்குப் பின்னாலிருந்த அந்த பெண்ணை அதற்குப் பிறகு நீ பார்த்தாயா?’

என் ஞாபக மண்டலத்தில் கடந்த கால வாழ்க்கையுடன் தொடர்பு உள்ள ஒவ்வொரு மனிதர்களும், சம்பவங்களும் தோன்றிக் கொண்டிருந்தன. ஏதோ ஒரு அலுவலகத்தில் ப்யூனாக பணியாற்றிக் கொண்டிருந்த ஒரு மனிதனின் மகளான அவள் ஒரு ஏழை இளம் பெண்! நாங்கள் அவளைப் பார்த்தோம். அவளும் பார்த்தாள். நாங்கள் சிரித்தோம். அவளும் சிரித்தாள். அப்படிச் சென்ற அந்த ஏமாற்றுதல் நிறைந்த கதையின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் நான் நினைத்துப் பார்த்தேன். உண்மையிலேயே அந்த ஏழை பெண்ணை நாங்கள் நாசமாக்கினோம்.

ஜோணிக்குட்டி கேட்டான்:

‘நாம் அங்கிருந்து வெளியே வந்தபோது, அவள் கர்ப்பிணியாக இருந்தாள். இல்லையா?’

எந்தவொரு உணர்ச்சியும் இல்லாமல், ஒரு சாதாரண விஷயத்தைக் கூறுவதைப் போல ஜோணிக்குட்டி கேட்டான். உண்மையிலேயே கூறுவதாக இருந்தால் —— அதற்குப் பிறகு நான் அந்தக் கதையை நினைத்து மனதில் வேதனைப்பட்டிருக்கிறேன்.

ஜோணிக்குட்டி தொடர்ந்து கூறினான்:

‘வாசலைப் பெருக்குவதற்கும், நீர் பிடித்து தருவதற்கும் வந்திருந்த அந்த கிழவி பார்க்க நன்றாக இருந்தாள்.’

வெறுப்பை உண்டாக்கும் இன்னொரு நினைவை ஜோணிக்குட்டி வெளியிட்டான். காரில் இருந்த நண்பர்களில் ஒருவன் கேட்டான்:

‘நண்பர்கள் அனைவரும் சேர்ந்து என்னென்னவோ பண்ணியிருக்கிறீர்கள்!’

ஜோணிக்குட்டி உரத்த குரலில் தொடர்ந்து கூறினான்:

‘சரிதான்... நாங்கள் ஒன்றாகச் சேர்ந்து திருடியிருக்கிறோம்.’

தொடர்ந்து அவன் ஒவ்வொன்றாக அந்த வாழ்க்கையின் ஒவ்வொரு கருத்த பக்கங்களையும் புரட்ட ஆரம்பித்தான்.

நான் மறந்து போனவை. நினைத்துப் பார்ப்பதற்கு எந்தச் சமயத்திலும் விரும்பாத விஷயங்கள். நான் வருத்தப்படவும் செய்திருக்கிறேன். அந்த பெரிய ஓவியத்தை இருபது வருடங்களுக்குப் பிறகு எனக்கு முன்னால் ஒவ்வொன்றாக புரட்டி பார்க்கிறேன். உண்மையிலேயே நான் அதிர்ச்சியடைந்து விட்டேன். செய்யக் கூடாத எதையெதையெல்லாம் நான் செய்திருக்கிறேன்!


அந்த கெட்ட செயல்களிலிருந்து நான் தப்பித்தது —— என்னுடைய அப்பிராணி மனைவியை நான் திருமணம் செய்து கொண்ட பிறகுதான். நீண்ட நான்கைந்து வருட காலம் பழகிப் போய் விட்டிருந்த ஒரு செயலிலிருந்து நான் எப்படி தப்பித்தேன் என்று கேட்டால், எப்படி என்று என்னால் உறுதியாக கூற முடியாது. உண்மையிலேயே கூறுவதாக இருந்தால் —— அவளுக்கு அழகு இல்லை. கணவனை தன்னுடன் சேர்த்து நிறுத்தி வைக்கக் கூடிய புத்திசாலித்தனம் இல்லை. அவள் அப்பிராணி. சாதுர்யம் இல்லாதவள். கணவனை வசீகரிப்பதற்கான ஆற்றல் அவளுக்கு இல்லை. அதிகாரம் செய்யவும் தெரியாது. என்னுடைய கெட்ட பழக்க வழக்கங்களைப் பற்றி எந்தவொரு அறிவும் அவளுக்கு கிடையாது. எனினும், நான் தப்பித்துக் கொண்டேன். அவள் என் குழந்தையை வயிற்றில் வைத்துக் கொண்டு நடந்தபோது, அந்த வயிற்றில் நான் ஓராயிரம் முத்தங்களைக் கொடுத்திருப்பேன். அந்த வகையில் அந்த பழைய காலத்திலிருந்து நான் முழுமையாக விலகி விட்டேன். இன்று அவர்களுக்காக இருபது ரூபாய் வேண்டுமென்று தேடி வெளியே வந்திருக்கிறேன். ஜோணிக்குட்டி பழைய காலத்தின் அழுக்குகளை, சேற்றில் கிடந்து விளையாடி துள்ளிக் கொண்டிருக்கும் ஒரு குழந்தையின் உற்சாகத்துடன் அள்ளி நான்கு பக்கங்களிலும் எறிந்து கொண்டிருக்கிறான்.

ஜோணிக்குட்டிக்கு திருப்தி உண்டாகவில்லை. எனக்கு வெட்கமாக இருந்தது. அந்த வகையில் நகரத்தைத் தாண்டினோம். சில கிராம பகுதிகளையும் தாண்டி கார் காட்டுப் பகுதியிலிருந்த சாலையின் வழியாக ஓடிக் கொண்டிருந்தது. நான் திடீரென்று சுய உணர்விற்கு வந்தேன். நான் வீட்டை விட்டு என்ன காரணத்திற்கு வெளியே வந்தேனோ, அதைப் பற்றிய ஞாபகங்கள் உயர்ந்து வந்தன. சற்று பதைபதைப்புடன் நான் கேட்டேன்.

‘நாம் எங்கே போகிறோம்?’

ஜோணிக்குட்டி இளைஞனுக்குரிய உற்சாகத்துடன் கூறினான்:

‘உன்னைக் கொண்டு போய் கொல்வதற்கு...’

எல்லோரும் குலுங்கிக் குலுங்கி சிரித்தார்கள்.

நகரத்திலிருந்து நீண்ட தூரம் தாண்டிச் சென்றிருந்தோம்.

‘நான் வீட்டிற்குத் திரும்பிச் செல்லணும்.’

ஜோணிக்குட்டி கிண்டல் பண்ண ஆரம்பித்தான்.

‘நான் என் அப்பாவைப் பார்க்கணும்... அம்மாவைப் பார்க்கணும்...’

அதற்கும் குலுங்கல் சிரிப்பு.

நான் உறுதியான குரலில் கூறினேன்:

‘இல்லை... நான் வீட்டிற்குப் போகணும். நான் சொல்லிட்டு வரல.’

காரில் இருந்த நண்பர்களில் ஒருவன் கேட்டான்:

‘அப்படியென்றால் கேட்டு, அனுமதி கிடைச்ச பிறகுதான் வெளியேறி வருவீங்களா?’

‘இல்ல.... அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள்.’

ஜோணிக்குட்டிக்கு எப்போதும் இருக்கக் கூடிய ஒரு வகையான மிடுக்கு உண்டு. அதை வைத்துக் கொண்டு அவன் கூறினான்:

‘ஓ... உன் மனைவி மட்டும்தான் காத்திருப்பாளா? எல்லா பெண்களும் அப்படித்தான்.’

இருபது வருடங்களுக்குப் பிறகு நான் ஜோணிக்குட்டியின் அந்த மிடுக்கான போக்கைப் பார்த்தேன். அதைப் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் எனக்கு ஆர்வம் இருந்தது. தொடர்ந்து ஜோணிக்குட்டி கூறினான்:

‘நாம பார்த்து எவ்வளவு நாட்களாச்சு! இப்படி பிடிவாதம் பிடித்தால் எப்படி...?’

காட்டுப் பகுதியின் வழியாக அந்த கார் வேகமாக போய்க் கொண்டிருந்தது. அந்த நண்பர்கள் ஒரு பாட்டைப் பாட ஆரம்பித்தார்கள். அது அந்த அளவிற்கு இனிமையான பாடலாக இல்லாமலிருந்தது. எனினும், ஜோணிக்குட்டி முன்பு பாடி, கேட்ட பாடல்தான் அது. நான் மனமே அறியாமல் அந்த பழைய காலத்திற்குள் கரைந்து போனேன். என் இதயம் பாட்டுடன் கலந்து தாளம் போட்டுக் கொண்டிருந்தது.

கார் பெரிய மலைகளின் பள்ளத்தாக்குகளின் வழியாக வளைந்தும் திரும்பியும் நேராக ஏறியும் இறங்கியும் பாய்ந்து போய்க் கொண்டிருந்தது. இந்த பயணம் எங்கு நோக்கி செல்கிறது? நேரமும் மாலை மயங்கி விட்டிருந்தது. என் மனம் மீண்டும் என் வீட்டை நோக்கி பயணித்தது. நல்ல உடல் நலமில்லாத என் மனைவி என்னை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறாள். நான் மருந்திற்கான பணத்தைத் தேடிப் பிடித்து கொண்டு வருவேன் என்று நினைத்துக் கொண்டு.... நாங்கள் ஒரு தேயிலை தோட்டத்தை அடைந்தோம். தோட்டத்தின் மத்தியில் ஒரு அருமையான பங்களா இருந்தது. அதன் வாசலில் கார் சென்று நின்றது. ஒரு பணியாள் பங்களாவிலிருந்து வெளியே வந்தான். நாங்களும் காரிலிருந்து இறங்கினோம்.

வெளிநாட்டு பாணியில் உருவாக்கப்பட்டிருந்த ஒரு பங்களா அது. அங்கு பெண்களும், குழந்தைகளும் இருப்பதாக தோன்றவில்லை. நாங்கள் வரவேற்பறையில் போய் அமர்ந்தோம். ஜோணிக்குட்டி மிகவும் மிடுக்கு நிறைந்த குரலில் கேட்டான்:

‘உனக்கு என்ன வேணும், கோபி? விஸ்கி வேணுமா? இல்லாவிட்டால் ப்ராண்டியா?’

நான் சொன்னேன்:

‘எனக்கு எதுவும் வேண்டாம். நான் அவற்றையெல்லாம் எவ்வளவோ நாட்களுக்கு முன்பே நிறுத்தி விட்டேன்.’

ஒரு நண்பன் கூறினான்:

‘மிகவும் நல்ல பையன்.’

நான் தொடர்ந்து கூறினேன்:

‘எவ்வளவோ நாட்களுக்கு முன்பே நான் நிறுத்தி விட்டேன்.’
ஜோணிக்குட்டி அசாதாராணமான ஒரு மிடுக்குத்தனத்தை வெளிப்படுத்தியவாறு சொன்னான்:

‘நீ இன்று குடிக்கிறாய். அதை நான் முடிவு செய்கிறேன்.’

நான் தர்ம சங்கடமான ஒரு நிலைக்கு ஆளாகி விட்டேன். எந்த வகையில் தப்பிப்பது? சண்டை போடுவதா? சண்டை போடுவதால், பயனில்லை. கீழே விழுந்து கெஞ்சி கேட்டுக் கொள்ள வேண்டுமா? அதுவும் பிரயோஜனமாக இருக்காது. அங்கிருந்து தப்பிப்பதற்கும் எந்தவொரு வழியுமில்லை. பொழுது இருட்டிக் கொண்டிருந்தது. என்னுடைய மனைவியும் குழந்தைகளும் என்னை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். இன்னும் கொஞ்சம் இருட்டி விட்டால், அவர்கள் கவலைப்பட ஆரம்பித்து விடுவார்கள். என் மகள் தன் தந்தையை நினைத்து அழுவாள். இந்த இரவு வேளை எப்படிப்பட்ட இரவாக இருக்கும் அவர்களுக்கு! அவர்கள் என்னவெல்லாம் நினைப்பார்கள்!

நான் ஜோணியிடம் கெஞ்சி கேட்டுக் கொண்டேன்:

‘என் மனைவி உடல் நலமில்லாமல் இருக்கிறாள். நான் போகணும்.’

அது உண்மையிலேயே பதைபதைப்பு நிறைந்த கெஞ்சலாக இருந்தது. நகரத்தில் எங்களுக்கு வேண்டிய அளவிற்கு அறிமுகமானவர்கள் கூட இல்லை.

ஜோணிக்குட்டி குலுங்கிக் குலுங்கி சிரித்தான். அந்த குலுங்கள் சிரிப்பை நான் இப்போது கூட கேட்கிறேன்.

அந்த குலுங்கல் சிரிப்பு பேய்த்தனமாக இருந்தது. அது நிற்கவில்லை. அதற்கு முன்பு ஒரு பெரிய கார் வாசலில் வந்து நின்றது. ஜோணிக்குட்டியும் நண்பர்களும் வாசலை நோக்கி ஓடினார்கள். ஏதோ புதிய விருந்தாளிகள், முக்கிய நபர்கள் வந்திருக்கலாம். நானும் அந்தப் பக்கம் பார்த்தேன். காரின் கதவைத் திறந்து, மூன்று பெண்கள் இறங்கினார்கள்.

உண்மையிலேயே அந்த பெண்களில் யாருமே ஜோணிக்குட்டியின், நண்பர்களின் மனைவிமார்கள் இல்லை. அது மட்டுமல்ல – அவர்கள் யாருடைய மனைவியுமல்ல. குடும்பப் பெண்களுமல்ல.


அவர்கள் அழகாக ஆடைகள் அணிந்திருந்தார்கள். அலங்கரித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், மனைவிக்கான அழகில்லை. எனினும், என்னுடைய நண்பர்கள், தங்களுடைய மனைவிமார்கள் வரும்போது இந்த அளவிற்கு ஆர்வத்தை வெளிப்படுத்த மாட்டார்கள். அவர்களுக்கு என்ன ஒரு ஆவேசம் என்கிறீர்கள்!

அந்த பெண்கள் எந்தவித கூச்சமும் இல்லாமல் அறைக்குள் நுழைந்து வந்தார்கள்.

ஒருத்தி கேட்டாள்:

‘என்ன ஜோணிக்குட்டி அண்ணா, இந்த புட்டி திறக்கப்படாமல் இருக்கிறது?’

வேறொருத்தி சொன்னாள்:

‘நாம வந்த பிறகு, பருகலாம் என்று வைத்திருக்கலாம்.’

அவர்களுடைய குரலும் மொழியும் தெரு பெண்களுக்குச் சொந்தமானவை போல எனக்கு தோன்றியது. இங்கு என்ன நடக்கப் போகிறது? என் பழைய பாவங்கள், புதிய சூழலில் செயல்படப் போகின்றனவோ?

ஜோணிக்குட்டி, அவர்களில் ஒருத்தியிடம் கூறினான்:

‘நீ அந்த புட்டியைத் திறந்து, கொஞ்சம் ஊற்றி அங்கு அமர்ந்திருக்கும் ஆளுக்குக் கொடு.’

அவள் என்னையே சற்று கூர்ந்து பார்த்தாள். அவள் மட்டுமல்ல – எல்லோரும்தான். நான் என்ன செய்ய வேண்டுமென்று தெரியாமல், திகைத்துப் போய் நடுங்கியவாறு அமர்ந்திருந்தேன்.

அந்த பெண் புட்டியைத் திறந்து ஒரு குவளையில் கொஞ்சம் ஊற்றினாள். பிறகு அந்த குவளைக்குள் சோடாவையும் ஊற்றினாள். அவள் அந்த குவளையை எடுத்து என் உதட்டுடன் சேர்த்து வைத்தாள். நான் சொன்னேன்:

‘எனக்கு வேண்டாம்... நான் குடிக்க மாட்டேன்.’
ஜோணிக்குட்டி குலுங்கிக் குலுங்கி சிரித்தவாறு அந்த பெண்ணிடம் கூறினான்:

‘உங்களுடைய திறமையைப் பார்க்கிறேன். அவனை குடிக்க வையுங்கள்.’

இன்னொருத்தி வேகமாக அருகில் வந்து என்னுடைய தாடையைப் பிடித்து உயர்த்தியவாறு கேட்டாள்:

‘இந்த கூச்சம் எதுக்கு?’

**********

நான் கண் விழித்தபோது, என் கட்டிலுக்குக் கீழே அந்த தெரு பெண்களில் ஒருத்தி தரையில் கிடந்தாள். அவள் தூங்கிக் கொண்டிருந்தாள். அவளுடைய சரீரத்தில் சில கீறல்களோ அடையாளமோ இருந்தன. நேற்று என்னவெல்லாம் நடந்தன? எனக்கு ஞாபகத்தில் இல்லை. நிச்சயமாக நான் என் மனைவிக்கு துரோகம் செய்திருக்க மாட்டேன். அவள் இப்போது என்னை எதிர்பார்த்து... எதிர்பார்த்து கலக்கத்தில் இருப்பாள்.

நான் வேகமாக எழுந்தேன். மணி பதினொன்று கடந்து விட்டிருந்தது. அலுவலகத்திற்குச் செல்ல வேண்டிய நேரம் கடந்து விட்டது. என்னை நகரமெங்கும் தேடி, விசாரித்திருப்பார்கள். நான் பைத்தியம் பிடித்தவனைப்போல அந்த பங்களாவின் ஒவ்வொரு அறைக்குள்ளும் ஓடினேன். ஜோணிக்குட்டி தூங்கிக் கொண்டிருந்தான். அந்த அறையிலும் ஒரு பெண் இருந்தாள். கதவிற்கு அருகில் சென்று நான் திகைப்படைந்து நின்று விட்டேன். எனினும், நான் உள்ளே சென்று ஜோணிக்குட்டியைத் தட்டி அழைத்தேன். அவன் கண்களைத் திறந்தான். நான் கூறினேன்:

‘நான் அலுவலகத்திற்குப் போகணும்.’

‘அனுப்புகிறேன்.’

ஜோணிக்குட்டி ஓட்டுநரை அழைத்தான்.

அப்பாடா! எனக்கு என்ன நிம்மதி தெரியுமா? எப்படியாவது இரண்டு மணிக்கு முன்பு நகரத்தை அடைந்து விடலாம்.

ஓட்டுநர் கதவிற்கு அருகில் வந்தான். அப்போது அந்த பெண் அவள் படுத்திருந்த இடத்திலேயே படுத்து தூங்கிக் கொண்டிருந்தாள். ஜோணிக்குட்டியும் அப்படித்தான் இருந்தான்.

ஜோணிக்குட்டி ஓட்டுநரிடம் கூறினான்:

‘இவரை கோட்டயத்தில் கொண்டு போய் விடு.’

என் வாழ்க்கை பிரச்னைகள் எனக்கு முன்னால் தோன்றின. பதினைந்து ரூபாய்! அதை இங்கிருந்து கொண்டு போகவில்லையென்றால், மனைவிக்கு எப்படி மருந்து வாங்குவேன்? குழந்தைக்கு எப்படி கட்டணம் கட்டுவேன்?

நான் கேட்டேன்:

‘எனக்கு பதினைந்து ரூபாய் வேண்டும். மனைவிக்கு உடல் நலமில்லை. மருந்து வாங்குவதற்கு....’

நான் கூறி முடிப்பதற்கு முன்பே ஜோணிக்குட்டி கூறினான்:

‘இங்கு என் கையில் காசு இல்லை.’

தொடர்ந்து அவன் கட்டிலில் விழுந்தான். ஜோணிக்குட்டியின் கை அந்த பெண்ணை வளைத்துக் கொண்டிருந்தது.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.