Logo

காளை வண்டிகள்

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 4051

காளை வண்டிகள்
மாதவிக்குட்டி
தமிழில்: சுரா

'என்னை இங்கு அழைத்துக் கொண்டு வந்திருக்க வேண்டிய அவசியமில்லை' - அவள் அதைக் கூறவில்லை. ஆனால், அவளுடைய கண்களிலும் விரல் நுனிகளிலும் நடையிலும் அந்த வார்த்தைகள் தங்கி நின்றிருந்தன. அவன் அதைப் பார்க்காமல் இருப்பதற்கு முயற்சித்தான். நாளிதழுக்குப் பின்னால் மறைந்து கொண்டு அவன் சாந்தம் நிறைந்த ஒரு குரலில் கூறினான்: 'சென்னையில் நேற்று நல்ல மழை பெய்ததாம்.'

'ம்...'

அவன் நாளிதழை ஒதுக்கி வைத்து விட்டு, அவளைப் பார்த்தான். தூணின் மீது சாய்ந்து நின்று கொண்டு, தூரத்தில் தெரிந்த தெருவை அவள் பார்த்துக் கொண்டிருந்தாள். உச்சி வெயிலில் பிரகாசித்துக் கொண்டிருக்கும் ஏரிகளைப் போல அவளுடைய கண்கள் இருந்தன. அவள் மீண்டும் அழ ஆரம்பிக்கிறாளோ என்று அவன் சந்தேகப்பட்டான்.

'மாதவிக்குட்டி, நீ தேநீர் அருந்துவாய் அல்லவா?'

'ம்...'

அவள் அவிழ ஆரம்பித்திருந்த கூந்தலை இடது கையின் மீது சுற்றி கட்டியவாறு, மெதுவாக நடந்து உள்ளே சென்றாள். அவளுடைய தலையிலிருந்து நரைத்த தலைமுடி பறந்து அவனுடைய சாய்வு நாற்காலியில் போய் விழுந்தது. அவன் அதை எடுத்து நீக்கவில்லை. முந்தைய நாள் அலமாரிகளைத் திறந்து, பொருட்களை ஒதுக்கி வைக்கும்போது அவள் பல புட்டிகளையும் எடுத்து வெளியே வைத்தாள். கூந்தலை மீண்டும் கறுப்பாக ஆக்குவதற்காக அவள் பயன்படுத்தியிருந்த சாயம். முகத்தில் குளிர் காலத்தில் தேய்த்திருந்த களிம்புகள், வாசனைப் பொருட்கள்...

'இவற்றையெல்லாம் ஏன் வீசி எறியப் போறே?' - அவன் கேட்டான்.

அவள் துடைப்பத்தால் தூசியை நீக்குவதற்கு மத்தியில் தலையை உயர்த்தாமல் கூறினாள்: 'இனி எனக்கு இவையெதுவும் தேவையில்லை. இப்போது இவை எதையும் தேய்க்கக் கூடிய வயது இல்லை...'

அவன் சிரிப்பதற்கு முயற்சித்தான். ஆனால், அவளுடைய கண்களைப் பார்த்தபோது, அவனுக்கு சிரிக்க இயலவில்லை. இடையிலாவது அவள் வாய் விட்டு அழுதிருந்தால், எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று அவன் சிந்தித்தான். அப்படியென்றால், அவன் அவளிடம் கேட்டிருக்கலாம்:

'மாதவிக்குட்டி, உனக்கு ஏன் இந்த அளவிற்கு கவலை?' அவள் பதிலே கூறாமல் இருந்தால் கூட, அவனால் அதை புரிந்து கொள்ள முடியும். ஆனால், அவளை சந்தோஷப்படுத்துவதற்கு இரண்டே இரண்டு வழிகள்தாம் இருந்தன. இந்த அளவிற்கு மகிழ்ச்சியுடன் வேலை செய்ய வைத்து கட்டிய இந்த வீட்டை விட்டு விட்டு மீண்டும் சென்னைக்கு திரும்பிச் செல்வது, இல்லாவிட்டால் - குழந்தைகளை இங்கு வர வைப்பது... இரண்டுமே சாத்தியமில்லாதவை. இரண்டு வருடங்களுக்குப் பிறகு அவனால் எல்லோரிடமும் தன்னுடைய தோல்வியை ஒப்புக் கொள்ள முடியும்? 'எனக்கு தவறு நேர்ந்து விட்டது. என்னால் கிராமத்தில் வாழ முடியவில்லை' - இப்படி கூற முடியுமா? மூத்த மகனான மனோகர் என்ன நினைப்பான்? வங்கியில் பணியாற்றிய அவனுடைய பழைய நண்பர்கள் என்ன நினைப்பார்கள்?

'நீங்கள் அதிர்ஷ்டசாலி என்று மிஸ்டர். மேனன் கூறினார். இந்த கேடு கெட்ட காலத்தில் இவை எதுவுமே தெரியாமல் நீங்கள் கிராமத்தில் சந்தோஷமாக வாழலாமே!'

'ராமசந்திரன் திரும்பி வந்து உங்களுடைய புதிய வீட்டைப் பற்றி நிறைய வர்ணித்தார்...' - ரெட்டி எழுதியிருந்தான். பல வருடங்கள் அவன் பயன்படுத்திய அந்த அறையில், சக்கரங்களைக் கொண்ட அந்த கறுப்பு நிற நாற்காலியின் மீது இப்போது அவனுக்குப் பதிலாக, ரெட்டி அமர்ந்திருப்பான். பங்கு முதலீட்டாளர்களின் கூட்டங்களில், ரெட்டி எழுந்து தன்னுடைய இயல்பான ஆட்டத்துடன் பேசிக் கொண்டிருப்பான். ரெட்டியை இயக்குநர்களின் சம்மதத்துடன் வட இந்தியாவிலிருந்த ஒரு வங்கியிலிருந்து இறக்குமதி செய்தார்கள். அவன் இந்த வங்கியைப் பற்றி படித்து வந்திருக்கிறான். அவ்வளவுதான். அதனால் அவனுடைய தவறுகள் ஏற்றுக் கொள்ளப்படும். புருவங்களை உயர்த்தி, இளமை தவழும் அந்த சிரிப்பை வெளிப்படுத்தி, கைகளை விரித்தவாறு அவன் கூறலாம்.... 'விஷயங்கள் இப்படித்தான்.... நான் என்ன செய்வது? சொல்லுங்க....' என்று.

இயக்குநர்கள் புருவத்தை உயர்த்தவில்லை. கோபம் வரும்போது கண்ணாடியைக் கழற்றி மேஜையின் மீது வைக்கக் கூடிய சஞ்சீவராவ் கூட ஒருவேளை தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொள்ளலாம். காரணம் -- ரெட்டி புதிய ஆள். அமெரிக்காவில் இரண்டு வருட பயிற்சி முடிந்து திரும்பி வந்திருக்கும் மனிதன்....

அஞ்சல் ஊழியர் கடிதங்களைக் கொண்டு வந்து மேஜையின் மீது வைத்தான். நீல நிற ஓரங்களைக் கொண்ட உறை மனோகருடையது. பொதுவாக அவனுடைய பிள்ளைகள் தங்களின் தாயின் முகவரிக்கு மட்டுமே கடிதங்களை அனுப்புவார்கள். ஆனால், மனோகர் தன்னுடைய முகவரியை எழுதியிருப்பதைப் பார்த்ததும், அவன் அதைத் திறந்தான்.

உடல் நலத்தைப் பற்றியும் கால சூழ்நிலையைப் பற்றியும் உள்ள ஆரம்ப வார்த்தைகளுக்குப் பிறகு மனோகர் எழுதியிருந்தான்:

'லில்லிக்கு சிறிது ஓய்வு வேண்டுமென்று எனக்கு தோன்றுகிறது. அவளுடைய சரீரம் கொஞ்சம் கொஞ்சமாக மெலிந்து வந்து கொண்டிருக்கிறது. அது மட்டுமல்ல - எப்போதும் அழுது கொண்டே இருக்கிறாள். நான் பணி முடிந்து திரும்பி வரும்போது அவள் ஏதாவது குறைகளைக் கூறுவாள். நான் எப்போதும் அவளுடைய கண்களில் தவறு செய்பவனாகவே இருக்கிறேன். அவள் மீது அன்பு செலுத்துவதில்லை. குழந்தைகளின் மீது பாசம் கிடையாது என்றெல்லாம் கூறி அழ ஆரம்பிப்பாள். என்னுடைய பொறுமை முடிவுக்கு வர ஆரம்பித்து விட்டது. இவற்றையெல்லாம்.... அப்பா, உங்களுக்கு எழுதுவதற்குக் காரணம், என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியாததால்தான். லில்லியின் இந்த நிலை இதே மாதிரி நீடித்துக் கொண்டிருந்தால், வேலை செய்யக் கூட முடியாத சூழ்நிலை எனக்கு உண்டாகி விடும் என்று நினைக்கிறேன். இரவில் தூக்கமில்லாமல் இருக்கக் கூடிய சூழ்நிலையைச் சற்று சிந்தித்துப் பாருங்கள். சில நாட்களுக்கு அவளை, அவளுடைய தாயிடம் அனுப்பி வைத்தால் என்ன என்று நான் சிந்திக்கிறேன். பிரசவத்திற்குப் பிறகு அவளுடைய நரம்புகள் முழுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன.'
அலுவலகத்தில் நான் ஒரு ரகசியத்தைக் கேள்விப்பட்டேன். எண்ணெய் நிறுவனத்தைச் சேர்ந்தவர்களுக்கு தென்னிந்தியாவில் ஒரு கிளை திறக்க வேண்டும் என்ற நோக்கம் இருக்கிறதாம். அரசாங்கம்....’

அவன் கடிதத்தை மடித்து சட்டையின் பைக்குள் வைத்தான். அதன் உறையை எடுத்து சுருட்டி வாசலில் எறிந்தான். எஞ்சியிருந்த மூன்று கடிதங்களும் மாதவிக்குட்டிக்கானவை. அவன் அவற்றை எடுத்துக்கொண்டு உள்ளே நடந்தான்.


உள்ளே - மேஜைக்கு அருகில் நின்று கொண்டு அவள் கரண்டியின் மூலம் கோப்பையில் தேநீரை ஊற்றிக் கொண்டிருந்தாள். அந்த அறையின் மங்கலான வெளிச்சத்தில் அவளுடைய காதுகளிலிருந்த வைரக் கம்மல்கள் நீர் துளிகளாக மாறி விட்டிருந்தன. அவன் அவளுடைய உருண்டு போய் காணப்பட்ட கைகளையும் நரைக்க ஆரம்பித்திருந்த தலை முடி சுருள்களையும் தலையைக் குனிந்தவாறு இருந்த அந்த நிற்கும் நிலையையும் சிறிது நேரம் பார்த்துக் கொண்டே நின்றிருந்தான். அவள் தலையை உயர்த்தினாள்: 'கடிதங்கள் இருக்குதா?'

அவள் தேநீர் கோப்பையை அவனுக்கு நகர்த்தி வைத்தாள். தொடர்ந்து போர்த்தியிருந்த துணியின் நுனியால் விரல்களைத் துடைத்து விட்டு, கடிதங்களை எடுத்தாள். அவற்றிலொன்று லில்லியினுடையதாக இருந்ததால், கடிதங்களை வாசிக்கும்போது இருக்கக் கூடிய அவளுடைய முக வெளிப்பாடுகளை அவன் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான். அவள் புருவங்களை உயர்த்தி, மீண்டும் எந்தவொரு உணர்ச்சி வேறுபாடும் இல்லாமல் வாசிப்பதைத் தொடர்ந்தாள்.

'யாருடையது? லில்லியுடையதா?'

'ம்...'

'என்ன விசேஷங்கள்? குழந்தையைப் பற்றிய செய்தியை எழுதியிருக்கிறாள் அல்லவா?'

'ம்... பற்கள் முளைக்கக் கூடிய நிலையில் இருக்கிறதாம். நல்ல முறையில் பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்திருக்கிறதாம். என்ன கொடுக்க வேண்டும் என்ற பெரிய கவலை லில்லிக்கு. சிலர் கோதுமை கொடுக்குமாறு கூறுகிறார்கள். க்ளாக்ஸோவை மாற்ற வேண்டுமா என்பதைப் போன்ற ஏராளமான கேள்விகள்...'
அவள் அந்த கடிதத்தை மடித்து மேஜை விரிப்பிற்கு அடியில் மறைத்து வைத்தாள். பொதுவாக அவள் எல்லா கடிதங்களையும் அவனுக்கு வாசிப்பதற்கு நீட்டுவதுண்டு. ஆனால், அவன் எதுவும் கேட்கவில்லை. அவள் மற்ற கடிதங்களைப் பிரிக்கவேயில்லை.

'கடிதங்களை ஏன் பிரிக்கவில்லை?'

'அது 'மகிளா சமாஜ'த்தைச் சேர்ந்தவர்களின் கடிதங்களாக இருக்கும். அவற்றை வாசிப்பதற்கு அப்படியொன்றும் அவசரமில்லை.'

தொடர்ந்து அவள் சிரித்தாள். அவளுடைய கண்களிலிருந்த கவலையின் அடையாளங்கள் நீங்கின. ஆனால், அந்தச் சிரிப்பும், வேகமான பேச்சும் எதையோ அவனிடமிருந்து மறைப்பதற்கு அவள் முயற்சிக்கிறாள் என்பதை வெளிப்படுத்தின.

அவன் தேநீரை பருகி விட்டு, எழுந்து தன்னுடைய வாசிக்கும் அறைக்குச் சென்றான்.

அங்கு வாசலுக்கு மேலே இருந்த பித்தளையால் ஆன கூண்டில் அவனுடைய தாயின் ஒரு ஓவியம் தொங்க விடப்பட்டிருந்தது. முன்பொரு முறை கேமராவுடன் அலையக் கூடிய ஒரு புகைப்படமெடுக்கும் மனிதன் அந்த கிராமத்திற்கு வந்திருந்தபோது, ஒன்றரை ரூபாய்க்கு எடுத்துக் கொடுத்த ஒரு படத்தின் பெரிதாக்கப்பட்ட படமே அது. துப்பாக்கிக்கு முன்னால் ஒடுங்கும் ஒரு காட்டு மிருகத்தின் பார்வையுடன் ஒரு நடுத்தர வயதைக் கொண்ட பெண் நாற்காலியில் அமர்ந்திருந்தாள். தலைமுடியை உச்சியில் கட்டி வைத்திருந்தாள். நரம்புகள் எழுந்து நிற்கும் பெரிய கைகள் பதைபதைப்புடன் மடியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தன. காற்பாதங்கள் புழுதி மண்ணில் அழுந்தியிருக்கின்றன. துணிகள் கஞ்சிப் பசையால் விறைத்துக் கொண்டிருந்தன. அவன் நீண்ட நேரம் அந்த ஓவியத்தையே பார்த்தவாறு, சாய்வு நாற்காலியில் படுத்திருந்தான். இதற்கு மட்டுமா அவனுடைய தாய். வாழ்ந்தாள்? அவன் சிந்தித்தான். தன் மகனின் நவ நாகரீக முறையில் கட்டப்பட்ட வீட்டின் வாசிக்கும் அறையிலிருக்கும் ஒரு பித்தளைக் கூண்டிற்குள் எந்தவித அசைவுமில்லாமல் ஓய்வெடுப்பதற்கு.... எவ்வளவு மறக்க முயற்சித்தாலும், மீண்டும் நினைவிற்கு வரும் பல நிமிடங்களும் அவனுக்கு முன்னால் வந்து நின்றன. அந்த சாளரங்களின் கதவுகளில் பொன் நிற புள்ளிகளைக் கொண்ட திரைச் சீலைகள் தொங்கிக் கொண்டிருந்தன. சுவர்கள் இளம் பச்சை நிறத்தில் இருந்தன. அதன் சாளரங்களில் சிறிய மர வேலைகள் இருந்தன. அதன் தரைப் பகுதிக்கு சாணத்தின் வாசனை இருந்தது. தலை முடியை உச்சியில் கட்டிய ஒரு பெண் கூறுகிறாள்: 'இனி நீ வரும்போது, நான் இறந்திருப்பேன்.'

சிவந்த நரம்புகளைக் கொண்ட இரு கண்களிலிருந்து நீர் துளிகள் உதிர்ந்து விழுந்து கொண்டிருந்தன. வெற்றிலைக் கறை பிடித்த உதடுகள் நடுங்கின.

இறக்காமலிருந்தால் என்ன நடந்திருக்கும்? இந்த புதிய வீட்டில், திரைச் சீலைகளும் வெள்ளிப் பாத்திரங்களும் தடிமனான ஸோஃபாக்களும் அமெரிக்க பத்திரிகைகளும் நிறைந்து காணப்படும் ஒரு சூழலில், எந்தவொரு ஒத்துப் போகும் மனநிலையும் இல்லாமல் ஒரு மூலையில் ஒரு பாயை விரித்துக் கொண்டு அவனுடைய தாய் படுத்திருப்பாள். அதுதான் அவனுடைய அன்னை எதிர்பார்த்த நல்ல காலமாக இருக்குமோ?

'எனக்கு நல்ல காலம் வராமல் இருக்காது. நீ பெரியவனாக வளர்ந்து, அதிகமாக சம்பாதித்து....' - அந்த வார்த்தைகள் என்ன ஆயின? அவன் நினைவுகளைக் கிளர்ந்து பார்த்தான். அனைத்தும் மறைகின்றனவா? அனைத்தும் எல்லையைப் பார்க்க முடியாத அந்த மூடலுக்குள் மறைகின்றனவோ? திருவிழா நாளன்று தரையில் ஊர்ந்து கொண்டிருக்கும் எட்டுக் கால் பூச்சிகள், கோவில் குளத்தைச் சுற்றி வளர்ந்து நின்றிருக்கும் தெச்சி மலர்கள், சாயங்கால நேரத்தில் சுலோகங்களைக் கூறிக் கொண்டிருக்கும் ஒரு வயதான பெண், உண்மைகளை மறைத்து ஒரு குழந்தையின் ஆகாயக் கோட்டைகளுக்கு சிறிது பின்புலத்தை உருவாக்கிக் கொடுத்த இருண்ட இரவுகள் - அனைத்தும் குறைந்து இல்லாமற் போகின்றனவோ?

அவன் சாளரத்தின் வழியாக வெளியே பார்த்தான். இளம் மஞ்சள் நிற மலர்கள் வளர்ந்து நின்றிருக்கும் அந்த இடத்தில் முன்பு ஒரு தொழுவம் இருந்தது. பாசம் செலுத்தப்பட்ட ஒரு பசு இறந்து விட்டது. நேசிக்கப்பட்ட ஒரு வீடு இடிந்து விழுந்தது. அன்பு செலுத்தப்பட்ட ஒரு தாயும் மறைந்து போய் விட்டாள். அதற்குப் பிறகும் மனிதர்கள் ஒவ்வொரு பொருட்களுக்காகவும் ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவன் சிந்தித்தான். நல்ல விளைவைத் தரக் கூடிய சக்தியைக் கொண்ட ஒரு நிலத்தைப் பார்த்ததும், அதை வாங்கி சொந்தமாக ஆக்கினான். 'அது எனக்கு வேண்டும். அது எனக்கு வேண்டும்' - அவனுக்கு எப்போதும் அந்த சிந்தனையே இருந்தது. 'பளிங்கு குண்டு என்னுடையது. இந்த கருப்பு நிற கரி பிடித்த வேட்டி என்னுடையது. இந்த அழகான மனைவி என்னுடையவள். இந்த பெரிய பதவி என்னுடையது. வீடு என்னுடையது....' - அந்த வகையில் சொத்துக்கள் அதிகரித்து வருகின்றன. ஆனால், ஏதாவதொன்றை எடுத்து முழுமையான நம்பிக்கையுடன் அவனால் கூற முடியுமா 'இது எனக்குச் சொந்தமானது' என்று? காதலியும் காதலர்களும் மரணத்தைத் தழுவுகிறார்கள். அவர்கள் எவ்வளவு தடவைகள் ஒருவரோடொருவர் கூறியிருப்பார்கள்: 'நான் உனக்குச் சொந்தம்' என்று! தனக்குச் சொந்தமாக ஆனால் மட்டுமே மனிதனால் ஒன்றின் மீது அன்பு செலுத்த முடியும் என்பதுதான் உண்மையாக இருக்குமோ? மனோகர் தன்னுடைய மகனாக இல்லாமற் போயிருந்தால், அவன் மீது தன்னால் அன்பு செலுத்த முடிந்திருக்குமா? உயரம் குறைவான... கனமான தோள்களைக் கொண்ட ஒரு இளைஞன்... இடது பக்க கன்னத்தில் ஒரு கருப்பு நிற புள்ளி.... தடிமனான கண்ணாடிகளின் உலகத்தை சிறிய ஒரு வெறுப்புடன் பார்க்கும் சிறிய கண்கள், அழுத்தி வைக்கும் கால் எட்டுகள், ஒரு பெரிய அளவிலிருக்கும் தன்னம்பிக்கை, குடித்து முடித்த பிறகு வெளிப்படும் அந்த பெரிய குரல்.... அந்த இளைஞன் தன்னுடைய மகனாக இல்லாமலிருந்தால், அவன் அந்த இளைனை விரும்புவானா? மிகவும் மென்மையான குணத்தைக் கொண்ட ஒரு மனைவியிடமிருந்து ஏதோ தவறான புரிதல்களால் விலகிச் செல்லும் அந்த தைரியமற்ற இளைஞனிடம் அவன் கூறுவான்:


'மனோகர், நீங்கள் ஒரு முட்டாள். நீங்கள் பார்க்கும் வேலையை மட்டும் மனதில் நினைத்துக் கொண்டு, உங்களுடைய வாழ்க்கையை தாறுமாறாக ஆக்கிக் கொள்கிறீர்கள். நீங்கள் வீட்டிற்கு சாயங்கால வேளையில் சரியான நேரத்திற்கு திரும்பி வந்து எவ்வளவு காலம் ஆகி விட்டது! உங்களுடைய மனைவியை ஒரு திரைப்படத்திற்கு அழைத்துச் சென்று எவ்வளவு காலம் ஆகி விட்டது! அன்பின் ஒரு சிறிய பங்கினைக் கூட அவளுக்குக் கொடுக்காமல் அவளை நீங்கள் ஏன் இந்த அளவிற்கு கவலைக்குள்ளாக்குகிறீர்கள்....?'

ஆனால், மனோகர் அவனுடைய மகன். அறிவுரைகளையும், தத்துவ சிந்தனைகளையும் தன்னுடைய சொந்த பிள்ளைகளுக்கு முன்னால் வெளிப்படுத்த அவனால் சிறிதும் முடியாது. மிகவும் பிரகாசமான ஒரு இளைஞன் அவனுடைய மகளை திருமணம் செய்து கொள்வதற்கு தயாராக இருந்தான். படிப்பு, வசதி, ஈர்க்கும் சக்தி, மிகவும் நல்ல எதிர்காலத்தைக் கொண்ட பதவி - அனைத்தையும் கொண்ட ஒருவன். எனினும், அதை செயல் வடிவத்திற்குக் கொண்டு வர அவனால் முடியவில்லை. மகள் அழுதாள். தன் மகளைக் காதலிக்கிறான் என்ற ஒரேயொரு தகுதியை மட்டுமே கொண்டிருந்த ஒரு அழகான முட்டாளுக்கு அவளைத் திருமணம் செய்து கொடுக்க வேண்டிய சூழ்நிலை உண்டானது. காதலை மாதவிக்குட்டியும் நம்பவில்லை. எனினும், மகள் தான் கூறுவதைப் போல தற்கொலை செய்து விடுவாளோ என்று பயந்து அவளும் ஒத்துக் கொண்டாள். தன்னுடைய மகளின் கணவனை வேண்டிய இடங்களுக்கெல்லாம் அனுப்பி, பிரகாசமாக ஆக்கி வளர்த்துக் கொண்டு வருவதற்கு சிறிது காலம் ஆனது. எனினும், மகள் அவனைத் தேடி வந்து பல நேரங்களிலும் கூறினாள்:

'அப்பா, நான் இனி திரும்பிப் போகப் போவதில்லை. என்னுடைய விருப்பத்திற்கு எதிராக மோகனின் செயல்கள் அனைத்தும் விபரீதம் நிறைந்தவையாக இருக்கின்றன. நான் எவ்வளவு தடவைகள் கூறினாலும்....'

அந்த மாதிரி நேரங்களிலெல்லாம் அவளுக்கு ஆறுதல் கூறலாம். இரண்டு, மூன்று மாதங்களுக்குப் பிறகு அவள் தன்னுடைய குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு தன் கணவனிடம் திரும்பிச் செல்வாள். பிறகு அவன் அவளுடைய தடிமனான குரலில் உள்ள புகார்களையும், தன் பேரப் பிள்ளைகளின் சிரிப்புகளையும் பல நாட்கள் கேட்டுக் கொண்டேயிருப்பான். பிறகு... பிறகு... அவளுடைய புகார்கள் நின்றன. மோகன் பதவியில் உயர்ந்தான். அவர்களுடைய கார் புதியதாக ஆனது. அவர்களுடைய பிள்ளைகள் நகரத்திலேயே சிறப்பான ஆங்கில பள்ளிக்கூடங்களுக்குப் போக ஆரம்பித்தார்கள். லிப்ஸ்டிக் தேய்க்கப்பட்டிருந்த உதடுகளின் வழியாக அவனுடைய மகள் கூறினாள்:

'அப்பா, இப்போது எங்களுக்கு நல்ல காலம்.' அவளும் அவளுடைய கணவனும் மிகவும் நெருக்கமாக அமர்ந்து கொண்டு முழுமையான சந்தோஷத்துடன் அவனைப் பார்த்து சிரித்தார்கள். அந்தச் சிரிப்பு அவர்களுக்கும் அவனுக்குமிடையே ஒரு திரைச்சீலையைப் போல வந்து விழுந்தது. அதற்குப் பிறகு பல வேளைகளில், இரவு நேரத்தில் பக்கத்து கட்டிலில் படுத்து மாதவிக்குட்டி தூங்கிக் கொண்டிருக்கும்போது, அவன் அந்தச் சிரிப்பைப் பற்றி நினைத்துப் பார்ப்பான். அந்தச் சிரிப்பு அவனுடைய மகளின் வளர்ச்சியைக் காட்டும் முதல் இலக்காக இருந்தது. அது பலவற்றின் ஒரு மரணமாக இருந்தது. அந்தக் கண்களில் எப்போதும் மின்னி ஒளிர்ந்து கொண்டிருந்த சந்தோஷமற்ற தன்மை மறைந்து போய் விட்டது. அவளுடைய குரல் மிகவும் மென்மையானதாக ஆனது. எப்போதும் வேலைக்காரர்களிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்த அவள், அவர்களின் பிரியத்திற்குரியவளாக ஆனாள். அவளுடைய அழகு மேலும் அதிகரித்துக் கொண்டு வந்தது. அதற்குப் பிறகும் அவன் தன்னைத் தானே கேட்டுக் கொண்டான்:

'அவள் ஏன் மாறினாள்?' ஒரு முறையாவது கடந்த காலத்தைப் பற்றி தன்னைத் தேடி வந்து புகார் கூறியிருந்தால், ஒரு முறையாவது அழுகை கலந்த குரலில் அவள் தன்னிடம் 'அப்பா, நான் இங்கிருந்து போக மாட்டேன்' என்று கூறியிருந்தால், அவளுக்கு தன் மீது இருக்கக் கூடிய பாசத்தின் மீது அவன் நம்பிக்கை கொண்டிருக்க முடியும். ஒரு முறை தான் அவளைத் திட்டியது அவனுக்கு திடீரென்று ஞாபகத்தில் வந்தது. அவள் தன்னுடைய ஒரு பழைய ஆடையை எடுத்து கத்திரியால் வெட்டி, துண்டுகளாக ஆக்கிக் கொண்டிருந்தாள்.

'நீ என்ன செய்றே? இனி நான் ஒரு ஆடை கூட தைத்துத் தர மாட்டேன். வெறுமனே நாசம் பண்றியா?'

அவள் முகத்தை உயர்த்தினாள். இளம் சிவப்பு நிறத்திலிருந்த பட்டு துண்டுகள் அவளைச் சுற்றி சிதறிக் கிடந்தன.

'அப்பா, இது எனக்கு பொருத்தமாக இல்லாமற் போய் விட்டது. இது மிகவும் சின்னதாயிடுச்சு. இனி இதை வச்சு என்ன பிரயோஜனம்?'

அவள் எந்தச் சமயத்திலும் அவனைப் போல இல்லை. புதிய ஆடைகள் கிடைக்கும்போது, நீண்ட காலம் தான் விரும்பிய பழையவற்றை கிழித்து விட்டெறிய அவள் தயங்கியதேயில்லை. அவள் வளர்த்த நாய்க்குட்டி அவளுடைய கையை ஏதோ காரணத்தால் கடித்து விட்டபோது, அவள் அதை வேண்டாம் என்று ஒதுக்கி விட்டாள். பொருட்களுக்கு காலம் தரும் முக்கியத்துவத்தின் மீது அவளுக்கு நம்பிக்கையில்லை. அவன் நம்பினான். ஆனால், 'இல்லை' என்று நடித்தான். அவளுடைய அந்த இதயமற்ற தன்மை, அந்த விரல்களில் தெரிந்த கடினத்தன்மை ஒரு போலித்தனமாக இல்லை.

'அப்பா, இந்த கிழவியைப் போகச் சொல்லுங்க. நான் என்ன சொன்னாலும் கேட்க மாட்டேன்குறாங்க. இன்னைக்கு என்னிடம் வாக்குவாதம் பண்ணினாங்க.'

அவளை பல வருடங்களாக குளிக்க வைத்து, ஆடைகள் அணிவித்த அந்த வயதான வேலைக்காரியை அவள் பிடிவாதம் பிடித்து, போகச் செய்தாள். அவள் அதற்காக சிறிது கூட வருத்தப்படவில்லை. எல்லா மாதமும் அவன் அந்த வயதான பெண்ணிற்கு சிறிது பணம் அனுப்பிக் கொண்டிருந்தான். அவள்தான் அனுப்பிக் கொண்டிருக்கிறாள் என்று மனதில் நினைத்துக் கொண்டே அந்த வேலைக்காரி மரணத்தைத் தழுவினாள். அவள் நோய் வாய்ப்பட்டு படுத்திருந்தபோது, அவனும் மாதவிக்குட்டியும் சேர்ந்து பார்ப்பதற்காக சென்றிருந்தார்கள்.

'என்னை பேபிக்குட்டி என்றைக்கும் மறக்கவில்லை. ஒவ்வொரு மாதமும் எனக்கு பத்து ரூபாய் வீதம் அனுப்பி வைப்பாங்க.'

மாதவிக்குட்டி என் முகத்தையே பார்த்தாள். என் மகளின் குணம் அவளுக்கும் தெரியுமே!


அப்படித்தான் இருந்தாள் மகள். மனோகரும் கிட்டத்தட்ட அதேபோலத்தான் இருந்தான். பிறகு.... என்னுடைய இளைய மகன். அவன் தலை முடியில் வாசனைத் தைலங்களைத் தேய்த்து, பின்னோக்கி வாரினான். வில்லீஸைப் போன்ற குரலில் இந்திப் பாடல்களைப் பாடினான். கிரிக்கெட்டைப் பற்றி பேசினான். ஒவ்வொரு வகுப்பிலும் ஒவ்வொரு தடவையாவது தோற்று, இறுதியில் பொறியியலில் தேர்ச்சி பெற்று ஒரு அமெரிக்கன் எண்ணெய் நிறுவனத்தில் போய்ச் சேர்ந்தான். அவன் எந்தச் சமயத்திலும் தன் தந்தையுடன் நெருக்கமாக இருந்ததில்லை. பல நேரங்களிலும், அவனுடைய தந்தை வங்கியிலிருந்து திரும்பி வரும்போது, அவன் தன் தாயின் அருகில் அமர்ந்து கொண்டு படவுலகில் இருப்பவர்களைப் பற்றி பேசிக் கொண்டிருப்பான். தன் தந்தையைப் பார்த்தவுடன், அவன் புன்சிரிப்புடன் எழுந்து நிற்பான். நீண்ட இமைகளைக் கொண்ட அவனுடைய கண்களையும், சிவந்த உதடுகளையும், மினுமினுப்பான கைகளையும் பார்க்கும்போது அவன் ஒரு பெண் குழந்தையாக இருந்திருக்க வேண்டியவன் என்று அவன் நினைப்பான். மலர்கள் இருக்கும் பட்டுத் துணிகள் மீது அவனுக்கு இருக்கும் அளவற்ற ஆசையும்...

'இங்கே பாருங்க, அப்பு மேனன் வந்திருக்கிறார்.'

மாதவிக்குட்டியின் குரலைக் கேட்டதும், அவன் தலையை உயர்த்தினான். அவளுடைய விரலின் நுனியில் மையின் அடையாளம் இருந்தது.

'எழுதிக் கொண்டிருந்தாயா?'
'ம்... கடைக் கணக்கைப் பார்த்து சரி பண்ண வேண்டியதிருந்தது.'

'ஓ...'

அவன் முன்பக்க வாசலுக்குச் சென்றபோது, அப்பு மேனன் இங்குமங்குமாக நடந்து கொண்டிருந்தார்.

'நாராயணன்குட்டி, நீ தூங்கிக் கொண்டிருந்தாயா?'

'ஏய்... இந்த நேரத்தில் தூங்குவதா?'

அப்பு மேனன் குலுங்கிக் குலுங்கி சிரித்தார்.

'இங்கே இருந்தால், தூக்கம் வராமலிருப்பது மிகவும் சிரமம். எந்தவொரு சத்தமும் இல்லை. ஒரு மனித நடமாட்டமும் இல்லாததைப் போல...'

'அது சரிதான்...' - அப்பு மேனன் தன் வீட்டைப் பற்றி எதிர்ப்பாக பேசுகிறாரோ? அவன் சிந்தித்தான். எதிர்ப்புகளைத் தவிர வேறெதையும் அந்த ஊரில் அவன் கேட்டதேயில்லை. முதலில் அந்த வீட்டை உருவாக்கி முடித்ததும் ஆட்கள் கூறினார்கள்: 'இவ்வளவு பெரிய வீட்டை வைத்துக் கொண்டு என்ன செய்வது? இதில் வசிப்பதற்கு குறைந்த பட்சம் ஒரு டஜன் ஆட்களும் ஏராளமான குழந்தைகளும் வேணும்.'

'இந்த புதிய பாணியில் அமைந்த வேலைப்பாடுகள் நம்முடைய வடகிழக்கு பருவமழையிலும், தென்மேற்கு பருவமழையிலும் நிற்குமோ என்னவோ? ஓடு வேய்வதுதான் பலமானது...'

'திரைப்படத்தில் வரும் கோட்டையைப் போல இருக்கிறது. வளைந்த படிகளும்...'

இப்படி குறைகள் பலவும் இருந்தன. எனினும், அதை கட்டி முடித்தான். இளம் வயதில் இருந்த தன்னுடைய ஒரு கனவைச் செயல் வடிவத்திற்குக் கொண்டு வரும் முயற்சியாக அது இருந்தது. கனவுகளுக்கு காலத்தால் மாற்றங்கள் வரும். அவற்றின் பொன் நிறம் சாயங்கால வேளையின் மங்கலான நிறத்தில், வெறும் மஞ்சள் நிறமாக ஆகி விடும் என்று அவன் அறிந்திருக்கவில்லை. இந்த ஊரில், தன்னுடைய பழைய ஓலை வேய்ந்த வீடு நின்று கொண்டிருக்கும் இடத்திலேயே தான் குறிப்பிட்டுக் கூறுகிற வகையில் ஒரு வீட்டைக் கட்டுவோம்.... தான் முழங்காலை மறைக்காத ஒரு வேட்டியைக் கட்டிக் கொண்டு, கையில் சிலேட்டுடன் பள்ளிக் கூடத்திற்கு நடந்து சென்ற அந்த ஒற்றையடிப் பாதையில் ஒருநாள் இந்த ஊரில் பணக்காரனாக நடப்போம்... இப்படி அந்தச் சிறுவன், இரவு வேளைகளில் தூக்கம் அண்டியிராத கண்களை இருட்டுக்குள் விழிக்க வைத்தவாறு, மல்லார்ந்து படுத்து கனவுகளை நெய்து கொண்டிருந்தான். அவை அனைத்தும் உண்மைகளாக ஆயின. ஆனால், அந்த கனவுகள் ஒன்றில் கூட ஏன் ஓடி விளையாடும் குழந்தைகள் வரவில்லை? இன்று பெரிய ஒரு வீட்டில் அவன் புத்தக அலமாரிக்கு மத்தியில் அமர்ந்து சிகரெட் புகைத்துக் கொண்டிருக்கிறான். அவனுடைய மனைவி ஒரு கனவில் நடக்கும் பெண்ணைப் போல எந்தவொரு சத்தத்தையும் உண்டாக்காத கால் வைப்புகளுடன் காலியாகக் கிடக்கும் அறைகளின் வழியாக இங்குமங்குமாக நடந்து கொண்டிருக்கிறாள். இடையில் நீண்ட நாட்கள் ஆகும்போது, பிள்ளைகள் எழுதிய கடிதங்கள் அங்கு வருகின்றன. அந்த கடிதங்கள் சில நிமிடங்களுக்கு மட்டுமே என்றாலும், பார்க்க ஆசைப்படும் சில சிறிய காட்சிகளை அவனுடைய கண்களுக்கு முன்னால் கொண்டு வந்து நிறுத்துகின்றன. பதவி உயர்வு அடிக்கடி கிடைத்துக் கொண்டிருக்கும் ஒரு மகன், பற்கள் இல்லாத ஒரு புன்னகையுடன் மல்லார்ந்து படுத்து கால்களை அசைக்கும் ஒரு சிறிய குழந்தை, ஓடி விளையாடும் பிஞ்சு கால்கள்...

'ஏய்... இனி என்னால் சிறிது கூட சாப்பிட முடியாது. நான் வரும்போதே இரண்டு கோப்பை தேநீர் அருந்தி முடித்து விட்டேன். எனினும், மாதவிக்குட்டி... நீ வற்புறுத்தும்போது...'

அப்பு மேனன் காலியான தேநீர் கோப்பையை முன்னால் நகர்த்தி வைத்தார்.

'நாராயணன் குட்டி, என்ன எதுவுமே பேசல?'

'ஏய்... ஒண்ணுமில்ல. நேரம் அஞ்சரை ஆன பிறகும், வெயிலுக்கு என்ன ஒரு வெப்பம்?'

அவன் விருந்தாளிக்கு முன்னால் வெளிக்காட்டக் கூடிய அந்த உற்சாகம் நிறைந்த குரலையும் புன்சிரிப்பையும் தவழ விட்டான். மனதில் இருக்கும் கவலைகளை ஒரே ஒரு நிமிடத்தில் திரைச்சீலை போட்டு மறைப்பதற்கு அவனுக்கு கஷ்டமாக இல்லை. அவற்றை ஆட்களுக்கு முன்னால், குறிப்பாக - தன் ஊரைச் சேர்ந்தவர்களுக்கு முன்னால், வெளிப்படுத்துவது என்பது தன்னுடைய தோல்வியைக் காட்டியதைப் போல ஆகிவிடும் என்ற உண்மை அவனுக்கு தெரியும். அவன் பல வகையான சிந்தனைகளுடன் உறக்கமில்லாத பாதி இரவில் மல்லார்ந்து படுத்திருக்கலாம். அவனுடைய மனைவி அழுவதைப் போன்ற முக வெளிப்பாட்டுடன் மவுனமாக பல மணி நேரங்கள் தெருவைப் பார்த்தவாறு எந்தவித அசைவுமில்லாமல் அமர்ந்திருக்கலாம். அவனுடைய பிள்ளைகள் கடிதம் எழுதுவதற்கு இரண்டோ மூன்றோ வாரங்களை முழுமையாக மறக்கலாம். எனினும், அவன் அவற்றையெல்லாம் ரகசியங்களாக ஆக்கினான். காரணம் - தன்னுடைய கவலைகளை வெளிக்காட்டுவதற்கு அவனுக்கு தைரியமில்லை.

'இப்போது நான் மாதவிக்குட்டியிடம் ஒரு விஷயத்தைக் கூறினேன். நாராயணன் குட்டி, உன்னை என் மகனைப் போலவோ தம்பியைப் போலவோதான் நான் எப்போதும் நினைக்கிறேன். அதனால் நான் சுற்றி வளைத்து கூறாமல், விஷயத்தை வெளிப்படையாக கூறுகிறேன்...'

'சொல்லுங்க...' - அவன் தன் மனைவியின் முகத்தைப் பார்த்தான். அவள் எந்தவொரு உணர்ச்சியையும் வெளிக் காட்டாமல் தலையைத் தாழ்த்தி வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். செய்தித் தாளில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தாள். ஒரு வேளை, அந்த இருத்தல் ஒரு எதிர்ப்பை வெளிப்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும் என்று அவன் நினைத்தான். அப்பு மேனன் தொடர்ந்து கூறினார்: 'நாராயணன்குட்டி, உன்னிடம் கூறுவதற்கு எனக்கு உரிமை இருக்கு. அதனால் நான் கூறுகிறேன். என் மகளின் மகள் ராதா பி.ஏ. படித்துக் கொண்டிருக்கிறாள். சப் கலெக்டர் எதையும் சாதித்துத்தான் அவளை வளர்த்தார். படிப்பதற்காக சென்னைக்கு அனுப்பினார். ராதாவின் ஒரேயொரு பிடிவாதத்தால்தான் அப்படியொரு சம்மதம் கிடைத்தது. மற்ற மாணவிகள் அனைவரும் திருசூரில் படித்துக் கொண்டிருந்தார்கள்...'


அப்பு மேனன் தன்னுடைய சிறிய கண்களால் அவர்கள் இருவரையும் கூர்ந்து பார்த்தார். மனைவி தலையைத் தாழ்த்திக் கொண்டு அமர்ந்திருந்தாள். கணவன் எங்கோ பார்த்துக் கொண்டு சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தான். பிறகு, தைரியத்துடன் தொடர்ந்து கூறினார்:

'நாராயணன் குட்டி, நான் உன்னை எந்தச் சமயத்திலும் ஒரு வேற்று ஆளாக நினைத்ததில்லை. உன்னிடம் நான் இந்த காரியத்தைச் செய்ய வேண்டும் என்று நான் எந்தக் காலத்திலும் கூற மாட்டேன். ஆனால், வேணுவிற்கும் உங்களுக்கும் - இரண்டு பேர்க்கும் சம்மதமென்றால், எனக்கும்.... வீட்டில் எஞ்சியிருக்கும் எல்லோருக்கும் எந்த அளவிற்கு சந்தோஷம் கிடைக்கும் என்பதைக் கூற முடியாது.'

'வேணுவிற்கு இருபத்து நான்கு வயதுதான் நடக்கிறது, அப்பு அண்ணே! பிறகு.... இப்போது அவனுக்கு ஒரு மனைவியைப் பார்த்துக் கொள்ளக் கூடிய சக்தி இல்லை. இப்போது அவன் ஒரு அப்ரன்டீஸ் மட்டுமே. சம்பளம் கிடைக்க ஆரம்பிக்கவில்லை....'

'இப்போது வேண்டும் என்று நான் கூறவில்லை. நாராயணன் குட்டி, தவறாக நினைக்கக் கூடாது. இல்லை... வேணுவிற்கு திருமண வயது நெருங்குறப்போ, பல ஆலோசனைகளும் வரும். சந்தேகமில்லை. ஆனால், அவற்றுடன் இதையும் ஒரு விண்ணப்பமாக எடுத்துக் கொண்டால் போதும்...'

'நிச்சயமா... ஆனால், இந்தக் காலத்தில் ஆண் பிள்ளைகளுக்கு தங்களின் தாய், தந்தை நிச்சயம் செய்யும் பெண்கள் தேவையில்லை. அவனவனே தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறக் கூடிய காலமாயிற்றே!'

'ஆமாம்... உண்மைதான். இனி... வேண்டுமென்றால், வேணு ராதாவைப் பார்க்கலாமே! பார்க்கவோ, பேசவோ... எது வேண்டுமென்றாலும், சரிதான். வேணு வெளியிலிருக்கும் ஆளொன்றுமில்லையே! எங்களுடைய வீட்டிற்கு எப்போதும் வருவதற்கு வேணுவிற்கு உரிமை இருக்கு.'

மாதவிக்குட்டி தலையை உயர்த்தினாள். திடீரென்று அவள் எதையோ நினைத்ததைப் போல கூறினாள்: 'நான் ஒரு விஷயத்தை மறந்து விட்டேன். டாக்டரின் வீட்டிற்குப் போக வேண்டும் என்று தீர்மானித்திருந்தேன். டாக்டரின் அப்பாவுக்குச் சிறிது உடல் நலக்கேடு என்று சொன்னார்கள்.'

'எப்படி தெரியும்? ஆள் வந்திருந்ததா?'

'ம்...'

அப்பு மேனன் மெதுவாக எழுந்து நின்றார்.

'அப்படியென்றால் நான் கிளம்பட்டுமா? நீங்கள் இரண்டு பேரும் டாக்டரின் வீட்டிற்குச் செல்கிறீர்கள் அல்லவா? நாளை காலையில் வருகிறேன்.'

'அப்பு அண்ணே, வராமல் இருக்கக் கூடாது. காலை வேளை தேநீர் இங்கே இருக்கட்டும்.'

அப்பு மேனன் வெளியேறினார். பஞ்சைப் போல வெளுத்து, மென்மையாக இருந்த அவருடைய தலை முடியில் வெயில் விழுந்து சிதறிக் கொண்டிருந்தது. சற்று முன்னோக்கி குனிந்த அந்த உருவம் நிலத்தைக் கடந்து தெருவிற்குச் சென்றதும், அவன் தன் மனைவியின் பக்கம் திரும்பினான்:

'இந்த விஷயத்தில் உனக்கு ஏன் இந்த அளவிற்கு எதிர்ப்பு?'

'எதிர்ப்பா?'

'ம்...'

அவள் தலையைத் தாழ்த்தி வைத்துக் கொண்டு, கை விரல்களைப் பிசைந்தாள்.

'இந்த ஊரிலிருந்து வேணுமோ என்று எனக்கொரு தயக்கம். ஏனென்றால், வேணுவிற்கு சிரமமாக இருக்காதா? தன்னுடைய வீட்டில் உள்ளவர்களும், மனைவியின் வீட்டில் உள்ளவர்களும் உறவினர்களும் - எல்லாம் ஒன்றாக இருக்கும்போது, அவனுக்கு இந்த ஊருக்கு வருவதற்கே பயம் உண்டாகி விட்டால்...?'

அவள் சிரித்தாள். வெளிப்படையான அந்த சிரிப்பைப் பார்த்த போதும், அவன் அவளை நம்பவில்லை.

'அது எதுவும் இல்லை. உனக்கு வேறு ஏதோ காரணங்கள் இருக்கின்றன.'

'ஏய்.... எதுவுமில்லை. ஆனால், இப்போதே எதையும் முடிவு செய்ய வேண்டாம். அவனுக்கு அந்த அளவிற்கு வயதாகி விடவில்லையே!'
அவள் தூணில் சாய்ந்து நின்றவாறு தெருவைப் பார்த்தாள்.

பலசரக்கு கடைக்காரனின் காளை வண்டி மெதுவாக குலுங்கிக் குலுங்கி போய்க் கொண்டிருந்தது.

'மாதவிக்குட்டி, மனோகருக்கும் லில்லிக்குமிடையே ஏதோ கருத்து வேறுபாடுகள்....'

'ம்... எனக்கு தெரியும்.'

அவன் எழுந்து அவளுக்கு அருகில் வந்து நின்றான்: 'நாம என்ன செய்யணும்? பரவாயில்லை என்று நடிக்கணுமா?'

'அதனால் பிரயோஜனமில்லை.'

அதனால் பிரயோஜனமில்லையா? முன்பு எவ்வளவு தடவைகள் அவனுக்கும் மனைவிக்குமிடையே சாதாரண விஷயங்களுக்காக கருத்து வேறுபாடுகள் வளர்ந்திருக்கின்றன! சில நேரங்களில் காரணங்கள் இருக்கும். சில வேளைகளில் எந்தவொரு காரணமும் இல்லாமலே ஒரு எதிர்ப்புக் காட்சி உண்டாக்கப்படும்.

'நான் வீட்டிற்குப் போகணும்.'

'சரி.... இன்றைக்கே அனுப்புறேன்.'

இறுதியில் அவள் அழுவாள். அவன் மன்னிப்பு கேட்பான். காயங்கள் உண்டாகியும் அந்த இல்லற வாழ்க்கை வளர்ந்து வந்தது. பல வருடங்களைக் கடந்து வந்த இந்த பயணம் வளர்ச்சி என்றால், தான் அவளை நவநாகரீகமானவளாக ஆக்க வேண்டியதிருந்தது. அந்த ஆசைக்கு அவள் அடி பணிந்தாள். அவள் குழந்தைகளிடம் சாதாரணமாக ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தாள். எப்படிப்பட்ட விருந்து நிகழ்ச்சியிலும் மிகவும் அருமையாக செயல்பட ஆரம்பித்தாள். தன்னுடைய அழகைக் காப்பாற்றிக் கொள்வதில் மிகுந்த கவனம் செலுத்தினாள். எல்லா வகையிலும் அவனுடைய விருப்பதிற்குரிய மனைவியாக இருந்தாள். ஆனால், அவள் உள்ளுக்குள் மாறினாளா? பல நேரங்களிலும் அவன் அவளுடைய அந்த அழகு நிறைந்த முகத்தைப் பார்த்துக் கொண்டே நினைத்திருக்கிறான் - அவள் பழைய மாதவிக்குட்டியாக இல்லாமற் போனாளோ? தன்னுடைய தாயின் காலில் விழுந்து வணங்கி விடை பெற்ற அந்த கிராமத்தில் பிறந்த புது மணப் பெண் எங்கு போய் மறைந்து கொண்டாள்? ஒரு முறையாவது அந்த கண்களின் பதைபதைப்பு நிறைந்த பார்வையை இப்போது தான் பார்க்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று அவன் நினைத்தான். ஆனால், அது நடக்காத விஷயமாயிற்றே! ஒவ்வொரு நாளும் பலவற்றின் மரணத்துடன்தான் முடிவடைகிறது. செயல் முடியும்போது, ஆசைகள் இறந்து விடுகின்றன. பொறாமை, அன்பு, கோபம் எல்லாவற்றிற்குமே மரணம் நடைபெறுகிறது. பணம் சம்பாதிப்பதற்கு மட்டுமே ஆசைப்பட்ட அவன் இப்போதும் பணத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஒவ்வொரு நிமிடத்திலும் எல்லோருக்குள்ளும் பல பகுதிகளும் மரணமடைகின்றன. இறந்த காலத்திலிருந்து எஞ்சி நின்றிருக்கும் ஏராளமான சிறிய உணர்ச்சிகளை அவனைப் போலவே சிலர் சுமந்து கொண்டு நடக்கிறார்கள். அவை இறந்த சரீரங்கள் என்பதைப் புரிந்து கொள்ள இயலாமல்....

'இங்கே பாருங்க... நான் சில நாட்களுக்கு சென்னைக்குப் போக வேண்டுமென்று தீர்மானித்திருக்கிறேன்.'

'ம்...'

'இவற்றையெல்லாம் சற்று சரி பண்ணுவோம். லில்லிக்கு நான் அங்கு வர வேண்டுமென்று மிகவும் ஆசை. மனோகரிடம் நான் கூறி புரிய வைக்கிறேன்.'

'அது நல்லதுதான். நானும் வரணுமா?'

'வேண்டியதில்லை, திரும்பி வருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னால் வந்தால் போதும். அப்படியென்றால் வழியில் நாம் கோயம்புத்தூருக்குச் சென்று வேணுவையும் பார்க்கலாம்.'

'ம்...'
அவள் சாவிக் கொத்தை எடுத்து, கட்டியிருந்த துணியின் நுனியில் கட்டி விட்டு, உள்ளே சென்றாள். அவளும் போய் விட்டால், இந்த வீட்டில் தனியாக வாழ வேண்டிய சூழ்நிலை வந்து விடுமே என்பதை நினைத்தபோது, அவனுடைய உள்ளங்கைகள் வியர்த்தன. எனினும், தனக்குள் எலியைப் போல கடித்துத் தின்று வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த தனிமை உணர்ச்சியை அவளுக்கு முன்னால் வெளியே எடுத்துக் காட்டுவதற்கு அவனுக்கு தைரியம் வரவில்லை.

நிலத்திற்கு அப்பாலிருக்கும் தெருவின் வழியாக அப்போதும் ஒரு காளை வண்டி ஓசை எழுப்பியவாறு, குலுங்கிக் கொண்டே போய்க் கொண்டிருந்தது.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.