Logo

வாழ்க்கைப் போட்டி

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 4082

வாழ்க்கைப் போட்டி
தகழி சிவசங்கரப்பிள்ளை
தமிழில்: சுரா

மூன்று பெண் குழந்தைகளையும் ஒரு ஆண் குழந்தையையும் மனைவியிடம் ஒப்படைத்து விட்டு அவன் இறுதி மூச்சை விட்டான். மூத்த பெண்ணுக்கு திருமண வயது வந்து விட்டது. அவளை ஒருவனுடன் சேர்த்து வைத்திருந்தால், ஒரு ஆணின் துணை கிடைத்திருக்கும். வாழ்வதற்கான வழியும் இல்லை. இருபது செண்ட் கொண்ட ஒரு நிலமும், ஒரு சிறிய வீடும்தான் மொத்த சொத்தே.

குட்டி அம்மா தன் கணவனின் முகத்தைப் பார்த்தவாறு கேட்டாள்:

'நான் என்ன செய்யணும்?'

அந்த உதடுகள் அசையவில்லை. இனி எந்தச் சமயத்திலும் அந்த உதடுகள் அசையாது.

தாயும் மக்களும் சேர்ந்து கயிறு பிரித்தும், தென்னை மட்டையை உரித்தும் நாட்களை ஓட்டினார்கள். சுகுமாரனின் படிப்பை நிறுத்தினார்கள். கட்டணம் இல்லாத வகுப்பில் இருந்ததால், சரோஜினியும் பத்மாக்ஷியும் படித்துக் கொண்டிருந்தார்கள்.

பெரும்பாலும் பட்டினிதான். எப்படியாவது மூத்த மகள் கார்த்தியாயனியை யாராவது ஒருவனுடன் அனுப்பி வைக்க வேண்டுமென்ற ஆசை குட்டி அம்மாவிற்கு இருந்தது. பலரிடமும் அவள் கூறினாள். ஹரிப்பாட்டைச் சேர்ந்த கோவிந்தன் ஆசான் என்ற ஒருவன் அந்த கரையில் பள்ளிக் கூடம் நடத்தி, அங்கேயே தங்கிக் கொண்டிருந்தான். அவன் ஒரு ஆளை அழைத்துக் கொண்டு வந்தான். பெயர் -- பப்பு நாயர். நன்கு வேலை செய்யக் கூடியவன். எந்தவொரு கெட்ட பழக்கமும் இல்லை. எப்படியும் பெண்ணைக் காப்பாற்றுவான். ஆனால், பெண்ணுக்குத் தர வேண்டிய வரதட்சணையைத் தர வேண்டும்.

அப்படி ஆனாலும் பரவாயில்லை என்று குட்டி அம்மா தீர்மானித்தாள். ஆனால், திருமணச் செலவையும் சேர்த்து இருநூறு ரூபாய் வேண்டும். எங்கிருந்து தயார் பண்ணுவது? வடக்குப் பக்கத்திலிருக்கும் வீட்டிலுள்ள அவுஸேப்பு மாப்பிளய்க்கு இரக்கம் தோன்றி, நிலத்தையும் பணயமாக எழுதி வாங்கிக் கொண்டு 200 ரூபாய் கொடுத்தார். அதைத் தொடர்ந்து கார்த்தியாயனியின் திருமணம் நடந்தது.

கோவிந்தன் ஆசான் கூறியது சரிதான். பப்பு நாயர் அந்த பணத்தை வைத்து தனக்கு பாகமாக கிடைத்த ஒரு செண்ட் இடத்தில் ஒரு வீட்டைக் கட்டினான். அங்கு அவன் தன் மனைவியுடன் வசித்தான். குட்டி அம்மா, ஹரிப்பாட்டிலிருக்கும் தன் மகளின் வீட்டிற்குச் சென்றாள். உண்மையிலேயே அவளுக்கு நிம்மதி உண்டானது. பப்பு நாயர் அன்பு நிறைந்தவனாக இருந்தான். பொறுப்புணர்வு கொண்டவனாக இருந்தான். தினமும் வேலைக்குச் செல்வான். ஒரு காசைக் கூட கண்டபடிக்கு செலவு செய்ய மாட்டான். கார்த்தியாயனி சந்தோஷமாக இருந்தாள். குட்டி அம்மா தெய்வத்திற்கு நன்றி சொன்னாள். மூத்த மகளைப் பற்றி கவலைப்பட வேண்டியதேயில்லை. எல்லாவற்றையும் தாண்டி அவர்களுக்கிடையே இருந்த புரிதல் அவளை மகிழ்ச்சியடையச் செய்தது.

மீண்டும் குட்டி அம்மா இருக்கிறது என்றும், இல்லை என்றும் நாட்களைத் தள்ளி நகர்த்திக் கொண்டிருந்தாள். சுகுமாரனுக்கு வயதாகி விட்டாலும், அவன் ஒரு வேலைக்கும் போகாமல் இருந்தான். தாய்க்கும் மகனுக்குமிடையே தினமும் சண்டைதான். அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒருநாள் அவன் காணாமல் போய் விட்டான்.

செய்தி தெரிந்த பப்பு நாயர் கொஞ்சம் விசாரணைகளையெல்லாம் நடத்திப் பார்த்தான். ஒரு தகவலும் கிடைக்கவில்லை.

செலவு போக மீதமிருப்பதை கார்த்தியாயனி தன் தாய்க்குத் தருவாள். சரோஜினிக்கும் பத்மாக்ஷிக்கும் அணிய வேண்டியவற்றை அவள் கொடுத்துக் கொண்டிருந்தாள். அந்த வகையில் குட்டி அம்மா நாட்களை நகர்த்திக் கொண்டிருந்தாள்.

சரோஜினி கட்டணம் செலுத்த வேண்டிய வகுப்பிற்குச் சென்றாள். படிப்பை நிறுத்தி விடக் கூடாது என்று கார்த்தியாயனி கூறினாள். கல்விக் கட்டணத்தை அவள்தான் கொடுத்தாள்.

இப்படியே நான்கைந்து வருடங்கள் கடந்தன. ஒருநாள் ஒரு கடிதமும் ஒரு மணியார்டரும் அந்த வீட்டிற்கு வந்தன. சுகுமாரன் அனுப்பியவைதான். அவன் கல்கத்தாவில் இருக்கிறான். பிள்ளைகளின் படிப்பை நிறுத்திவிடக் கூடாது என்று அவன் குறிப்பாக கூறியிருந்தான். அனுப்பிய பணத்தை வைத்து கடனை மீட்க வேண்டுமென்றும் கூறியிருந்தான்.

பிறகு மாதந்தோறும் பணம் வந்தது.

அந்த வகையில் பட்டினி விலகி, வாழ்க்கை சற்று சீரானது.

கார்த்தியாயனிக்கு இரண்டு பிள்ளைகள் பிறந்தன. அவளுக்கு சிரமங்கள் அதிகரித்துக் கொண்டு வந்தன. சுகுமாரன் அனுப்பிய பணம் குட்டி அம்மாவின் கையில் இருக்கிறது என்ற விஷயம் தெரிந்து, பப்பு நாயர் ஒரு ஐம்பது ரூபாய் கேட்டான். ஒரு பத்து பறை நிலம் வாங்க வேண்டும் என்பதற்காக குட்டி அம்மா பணத்தைப் பத்திரப்படுத்தி வைத்திருந்தாள். அதிலிருந்து எடுப்பதற்கு அவளுக்கு மனம் வரவில்லை. அதைத் தொடர்ந்து மாமியாருக்கும் மருமகனுக்குமிடையே ஒருவரையொருவர் கூறி, விரிசல் உண்டானது.

நல்ல ஒரு வீட்டைக் கட்ட வேண்டுமென்று சுகுமாரன் எழுதி அனுப்பினான். கொஞ்சம் பணத்தையும் அனுப்பி வைத்தான். நல்ல நிலம் விலைக்கு கிடைப்பதாக இருந்தால், அதற்கான ஏற்பாட்டில் இறங்கினால், விலைக்கு வாங்குவதற்கும் சுகுமாரனிடம் பணம் இருந்தது.

அந்த வகையில் நாகரீகமான ஒரு வீடு உண்டானது. செலவிற்கு நெல் கிடைக்கக் கூடிய நிலம் வந்து சேர்ந்தது. அந்த வீடு வளர்ச்சி அடைந்தது.

சரோஜினி கல்லூரியில் சேர்ந்தாள். பத்மாக்ஷி உயர்நிலைப் பள்ளிக் கூடத்தில் சேர்ந்தாள். குட்டி அம்மா அதிர்ஷ்டசாலிதான்!

அந்த வகையில் ஹரிப்பாட்டு கார்த்தியாயனி அவளுடைய வீட்டில் மூன்று குழந்தைகளுடன் முன்பைப் போலவே வாழ்ந்து கொண்டிருந்தாள். பப்பு நாயர் வேலைக்குப் போனால்தான் அவளால் வாழ முடியும். சுகுமாரனுக்கு ஒரு கடிதம் எழுதினாலென்ன என்று பல வேளைகளிலும் அவள் தன் கணவனிடம் கேட்பதுண்டு. ஆனால், அவனுக்கு அதில் விருப்பமில்லை. அவன் கூறுவான்:

'அவன் பெரியவனாக இருந்தால், அவனுடனே வைத்துக் கொள்ளட்டும்.'

அவ்வப்போது கார்த்தியாயனி வீட்டிற்குச் செல்வாள். அவளுடைய குழந்தைகளின் மீது தங்கைகளுக்கு பெரிய அளவில் வெறுப்பு. அவர்கள் நிறைய சோறு சாப்பிடுகிறார்களாம்... அளவற்ற வெறியாம்... அவர்கள் சுத்தமாகவே இல்லையாம்! ஒருநாள் கார்த்தியாயனியின் மூத்த மகன் குட்டப்பன் சரோஜினியின் மெத்தையைத் தொட்டதற்கு அவனை அவள் அடித்து விட்டாள்.

ஒரு கூலி வேலைக்காரனின் மனைவி அங்கு வருவது என்பது சரோஜினிக்கும் பத்மாக்ஷிக்கும் கவுரவக் குறைவான விஷயமாக இருந்தது.

ஒருநாள் சரோஜினி தன் தாயிடம் கூறினாள்:

'ஏன் அம்மா, அக்கா இப்படி அடிக்கடி வர்றாங்க? ஏதாவது அங்கு கொடுத்தால் போதாதா?'

கார்த்தியாயனிக்கு அது புரிந்து விட்டது. எதுவுமே சாப்பிடாமல் வந்த அன்றே, அவள் கண்ணீருடன் வெளியேறிச் சென்றாள். அதைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்த அன்னையின் கண்களும் நிறைந்தன. அப்படியே பாதையில் திரும்பி அவள் மறைந்தபோது, சரோஜினியின் முகமும் வாடியது.


அதற்கு யார் குற்றவாளி? யாரையும்... யாரையும் குற்றம் கூறுவதற்கில்லை. தாய் மூத்த மகள் மீது அன்பு இல்லாமல் இருப்பாளா? முதலில் அவளை அன்னையாக ஆக்கியது அவள்தானே? உடன் பிறந்தவளிடம் சரோஜினிக்கும் பத்மாக்ஷிக்கும் பாசம் இல்லாமல் இருக்குமா? உண்மையிலேயே இருக்கும். பிறகு... தவறு எங்கே இருக்கிறது?

பப்பு நாயர் ஒரு மாட்டைப் போன்றவன் என்று அந்த தாய் கூறுகிறாள். அவன் கார்த்தியாயனியின் மீது அன்வு வைத்திருக்கிறான். அந்த விஷயத்தில் அவளுக்கு சந்தேகமில்லை. ஆனால், ஒரு பிறப்பும் விவரமும் இல்லை. வயிறு புடைக்க சாப்பிட தெரியும். கிடைப்பவை அனைத்தையும் சாப்பிடுவான். இன்று வரை நான்கு காசு சேமித்து வைக்கவில்லை. ஒரு வளர்ச்சியும் இல்லை. அப்படிப்பட்ட ஒரு சிந்தனையும் இல்லை. ஒரு காட்டு மாடு. ஒரு இரண்டு கால்களைக் கொண்ட மிருகம்... அவனுக்குப் பிறந்த மூன்று பிள்ளைகளும்... எப்படி தன் மூத்த மகளைக் காப்பாற்றுவது என்பதுதான் அந்த அன்னையின் சிந்தனையாக இருந்தது. அவள் தன் மற்ற பிள்ளைகளிடம் கூறினாள்:

'ஒரு விஷயத்தை நீங்கள் எல்லோரும் மனசுல வச்சிக்கணும். இங்கே இருக்கும் அனைத்திலும் நான்கில் ஒரு பாகம் என் கார்த்தியாயனிக்கு உள்ளது. என் பெயரில்தான் அனைத்தும் இருக்கு.'

அந்த விஷயத்தில் சரோஜினிக்கும் பத்மாக்ஷிக்கும் கருத்து வேறுபாடு இல்லை. அவர்களும் கூறினார்கள்:

'அது வேண்டாம் என்று நாங்கள் சொன்னோமா? ஆனால், அதை எப்படி அந்த ஆளிடம் ஒப்படைப்பது? கொடுத்தால், அவர் கப்பைக் கிழங்கு தின்று அழித்து விடுவார்.'

அதுதான் அந்த அன்னையையும் கவலைப்பட வைத்தது. சரோஜினி கூறினாள்:

'அக்காவின் அழகு கூட பாழாயிடுச்சு.'

'அது எப்படி நல்லா இருக்க முடியும்? மண்வெட்டியை வைத்து வெட்டுபவனுடன் அல்லவா வாழ்க்கை?'

அதைத் தொடர்ந்து தாயும் பிள்ளைகளும் சேர்ந்து ஆழமாக கலந்தாலோசித்தார்கள். அந்த நரகத்திலிருந்து கார்த்தியாயனியைக் காப்பாற்றுவதற்கு என்ன வழி? அந்த வகையில் ஒரு மண்வெட்டி வேலைக்காரனுடன் சேர்ந்து வாழ்வது என்பது அவர்களுக்கு குறைச்சல் அளிக்கக்கூடிய விஷயமாக இருந்தது. அவர்களின் வளர்ச்சிக்கு அது தடையாக இருந்தது. பத்மாக்ஷி கூறினாள்:

'அக்கா இங்கே வசித்தால், நல்ல அழகா இருப்பாங்க!'

சரோஜினி கூறினாள்:

'அந்த பிள்ளைகளையும் நாம நல்லாக்கிடலாம்.'

தாய் கூறினாள்:

'அப்படின்னா, அவனும் வருவான்.'

அது யாருக்கும் ஏற்றுக் கொள்ளக் கூடிய விஷயமாக இல்லை. அவன் அங்கு என்றில்லை -- எங்கு சென்றாலும், ஒரு காட்டு மாட்டைப் போலத்தான் இருப்பான். அவன் மண்வெட்டியை வைத்து வெட்டுவதற்காக பிறந்தவன்.

என்ன வழி? பத்மாக்ஷியின் மூளையில் ஒரு எண்ணம் தோன்றியது.

'அண்ணனிடம் கூறி கடிதம் எழுதச் சொன்னால் என்ன?'

'அது வேண்டாம்...' - சரோஜினி சொன்னாள்.

'அந்த ஆளை விட்டுட்டு, இங்கே வந்து தங்கும்படி அண்ணனிடம் ஒரு கடிதம் எழுதி வாங்கி வைத்துக் கொள்ளணும். அதற்குப் பிறகு அம்மா போய், அக்காவை அழைச்சிட்டு வரணும். பிறகு... விடக் கூடாது.'

தாய் கேட்டாள்:

'அப்படின்னா, அவன் வந்தால்?'

'அவனைப் போகச் சொல்லணும்.'
அது ஒரு நல்ல வழியாக தோன்றியது.

பல நாட்கள் ஆவதற்கு முன்பு 'அன்புள்ள அக்கா'விற்கு சுகுமாரன் எழுதிய ஒரு கடிதம் குட்டி அம்மாவின் முகவரிக்கு வந்தது. அவர்களின் அன்னை, கார்த்தியாயனியை அழைத்துக் கொண்டு வருவதற்காகச் சென்றாள்.

எதற்காக தன்னை அழைத்துக் கொண்டு செல்வதற்கு தன் அன்னை வந்திருக்கிறாள் என்ற விஷயம் கார்த்தியாயனிக்கு புரியவில்லை. ஏதோ ஒரு நோக்கம் இருக்கிறது என்று அவளுக்கு தோன்றியது. எவ்வளவு சிந்தித்தும், தன் அன்னையிடம் விசாரித்தும் அதைத் தெரிந்து கொள்ள முடியவில்லை. பப்பு நாயரிடம் கேட்காமல், வர முடியாது என்று அவள் சொன்னாள். பப்பு நாயருக்கும் அந்த பாசத்தின் நோக்கம் புரியவில்லை. ஆனால், அவன் ஒரு விஷயத்தைக் கூறினான்:

'நீ உன் அம்மாவுடன் சேர்ந்து போ. நான் தடுக்கவில்லை. ஆனால், திரும்ப அழைத்துக் கொண்டு வருவதற்கு நான் வரமாட்டேன். நீயேதான் வரணும்.'

அதற்கு கார்த்தியாயனி சம்மதித்தாள்.

அப்போது இன்னொரு பிரச்னை: பிள்ளைகளில் ஒருத்தனுக்கும் தங்களின் தந்தையைப் பிரிந்து செல்வதற்கு மனம் வரவில்லை. எல்லோரும் கூறியது 'நான் வரவில்லை' என்றுதான். அம்மா போய் வரட்டும். அவ்வளவு நாட்களும் எங்கள் தந்தையுடன் இருந்து கொள்கிறோம் என்று கூறினார்கள் அவர்கள். குட்டி அம்மா பலவற்றையும் கூறி பார்த்தாள். 'நல்ல ஆடைகள் வாங்கித் தருகிறேன். நெய்யப்பம் செய்து தருகிறேன்' என்றெல்லாம் கூறினாள். ஆனால், அவர்களுக்கு அவை எதுவும் வேண்டாம். இரண்டாவது மகன் கூறினான்:

'ஆடை அணிந்தாலும், அப்பாவைப் பார்க்க முடியாதே!'

இறுதியில் ஒரு வகையாக பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு கார்த்தியாயனி கிளம்பினாள். பாதி வழி வந்ததும் இளையமகன் தன் தந்தையை அழைத்து அழ ஆரம்பித்தான்.

வீட்டை அடைந்த அன்று இரவு எல்லா பிள்ளைகளும் தங்களின் தந்தையை அழைத்து அழுதார்கள். யாருக்கும் ஒரு நிம்மதியையும் தரவில்லை. அவர்கள் தங்களின் தந்தையுடன் படுத்து உறங்கி பழகியவர்கள்.

மறுநாளும் சண்டைதான். அடுத்த நாள் அவர்கள் கார்த்தியாயனிக்கு ஒரு மன அமைதியையும் தரவில்லை. வீட்டு விஷயங்களை நினைத்து அவளுக்கும் ஒரு மன அமைதியும் இல்லாமற் போனது.

அவளுடைய கணவன் காலையில் எதுவும் சாப்பிடாமல்தான் போயிருப்பான். வேலை முடிந்து திரும்பி வந்து ஏதாவது சமைத்து சாப்பிடுவானோ என்னவோ? இப்போது மிகவும் தளர்ந்து போய் இருப்பான். இப்படி அவள் மனதிற்குள் கவலைப்பட்டாள். எதற்காக அழைத்துக் கொண்டு வந்தோம் என்ற விஷயத்தை யாரும் கூறவுமில்லை.

நான்காவது நாள் கிருஷ்ணன் குட்டி தீர்மானமான குரலில் கூறினான்: 'அம்மா, நீங்கள் வராவிட்டால், நாளை நான் என் அப்பாக்கிட்ட போயிடுவேன்.'

அதையே இரண்டாவது மகனும், புரியாத மொழியில் மூன்றாவது மகனும் கூறினார்கள்.

தாயும் இளைய மக்களும் சேர்ந்து ரகசியமாக கலந்தாலோசனை செய்து விட்டு, சுகுமாரனின் அந்த கடிதத்தை கார்த்தியாயனியின் கையில் கொடுத்தார்கள். என்ன காரணத்தாலோ என்னவோ... யாராலும் அதை அவளுடைய முகத்தைப் பார்த்து கூறுவதற்கு முடியவில்லை.

கார்த்தியாயனி அந்த கடிதம் முழுவதையும் மீண்டுமொருமுறை வாசித்தாள். அவளுக்கு கோபம் வரவில்லை. கவலை வரவில்லை. அவள் சிறிது புன்னகைக்க மட்டும் செய்தாள். தொடர்ந்து அவள் தன் தாயின் முகத்தைப் பார்த்து கேட்டாள்:

'அம்மா, நீங்க ஒருத்தனுடன் சேர்ந்து வாழ்ந்து நான்கு குழந்தைகள் பிறந்தன. அல்லவா? நீங்கதானே எங்களை 'அப்பா' என்று அழைக்க சொல்லித் தந்தது?'


குட்டி அம்மாவிற்கு பதில் கூற முடியவில்லை. அவள் என்ன பதில் கூறுவாள்? கார்த்தியாயனி இளைய குழந்தையை இடுப்பில் வைத்தாள். மற்றவர்களை அருகில் அழைத்து நிறுத்தினாள். கார்த்தியாயனிக்கு மேலும் சிறிது உயரம் உண்டானதைப் போல தோன்றியது. அவள் தலையை உயர்த்திக் கொண்டு கூறினாள்:

'மண்வெட்டியை வைத்து வெட்டும் வேலையைப் பார்ப்பவனாக இருந்தாலும், என் பிள்ளைகளின் அப்பா அவர்தான். துண்டின் நுனியில் அரிசியைக் கட்டிக் கொண்டு வந்து தந்துதான் நாங்கள் சாப்பிடுறோம். எங்களுக்கு அது சந்தோஷமாக இருக்கு!'

தொடர்ந்து அவள் நடந்தாள். அவள் குழந்தைகளுடன் படியைக் கடந்ததும், குட்டி அம்மாவின் உதடுகளிலிருந்து ஒரு சத்தம் வெளியே வந்தது.

'மகளே!'

சரோஜினி, பத்மாக்ஷி ஆகியோரின் நாவிலிருந்தும் ஒரே நேரத்தில் இன்னொரு வார்த்தை வெளியே வந்தது.

'அக்கா!'

அதை அவள் கேட்டாளோ என்னவோ? எது எப்படி இருந்தாலும் அவள் திரும்பிப் பார்க்கவில்லை.

பிள்ளைகள் தங்களின் தந்தையைப் பார்க்கும் அவசரத்தில் உற்சாகமாக ஓடிக் கொண்டிருந்தனர்.

வழிச் செலவிற்கு காசு இல்லை. கிருஷ்ணன் குட்டியின் இடுப்பில் கிடந்த அரைஞாணத்தை கடையில் விற்று அவள் பணத்தைத் தயார் பண்ணினாள்.

சரோஜினிக்கு ஒரு திருமண ஆலோசனை வந்தது. மாதமொன்றிற்கு எழுநூற்றைம்பது ரூபாய் சம்பளம் வாங்கக் கூடிய ஒருவன். சுகுமாரனின் நண்பன்தான். அவன் பெண்ணைப் பார்ப்பதற்காக பத்தாம் தேதி வருகிறான். விளக்கமாக எல்லா காரியங்களையும் சுகுமாரன் எழுதியிருக்கிறான்.

அது பெரிய சந்தோஷத்தைத் தரும் செய்தியாக இருந்தது. மகள் நல்ல நிலைக்கு போகிறாளே! ஆனால், குட்டி அம்மாவின் மனதை ஒரு நினைவு ஊமையாக்கி விட்டிருந்தது. மூத்த மகள் கார்த்தியாயனியை அவளால் மறக்க முடியுமா?

வீட்டிலுள்ளவர்கள் கூடியிருந்த இடத்தில் குட்டி அம்மா ஒரு பிரச்னையை முன் வைத்தாள். குடும்பத்தில் ஒரு முக்கியமான சம்பவமல்லவா அது? கார்த்தியாயனிக்கு தெரிவிக்க வேண்டாமா?

சரோஜினியிடம் உடனடியாக பதில் இருந்தது.

'வேண்டாம்... வேண்டாம்... அந்த ஆளையும் பிள்ளைகளையும் அக்காவையும் சேர்த்து பார்த்தால்...'

பத்மாக்ஷி அதை முழுமை செய்தாள்.

'அவர்கள் வந்த கால்களுடன் திரும்பிச் செல்வார்கள்.'

அந்த தாயின் நாக்கு அடங்கியது. எனினும், அவளிடம் கூறுவதற்கு இருந்தது.

'அடியே... அவள் என் மூத்த மகள். உங்களையெல்லாம் தூக்கி வளர்த்தவள்.'

சரோஜினி கோபித்தாள்:

'இல்லை என்று சொன்னோமா? அந்த அன்பு இருக்கிறது. ஆனால், அன்பைக் கேட்டால், வெட்கக் கேடாகும்.'

சிறிது நேரம் நினைவில் மூழ்கி விட்டு, குட்டி அம்மா ஒரு நீண்ட பெருமூச்சுடன் கூறினாள்:

'அது உண்மைதான்.'

சிறிது நேரம் கழித்து அவள் தொடர்ந்து கூறினாள்:

'பாவம்... அதிர்ஷ்டமில்லாத என் குழந்தை!'

அவளுடைய கண்கள் நிறைந்தன.

சரோஜினி கூறினாள்:

'அண்ணனுக்கு எழுதி, கேட்போம்.'

அது அந்த தாய்க்கும் சரியான விஷயமாக பட்டது.

சுகுமாரனின் கடிதம் வந்தது. சரோஜினி கூறியதைப் போலத்தான். கார்த்தியாயனியையும் பப்பு நாயரையும் அழைக்க வேண்டாம். அது குறைச்சல் அளிக்கக் கூடிய காரியம் மட்டுமல்ல. அந்தத் திருமணமே நடக்காமற் போனாலும் போகலாம். காரணம் -- அவனுடைய வார்த்தையில் இப்படி இருந்தது:

'நாம பாரம்பரியம் இல்லாதவர்களாக இருந்தோம் என்று அவர்கள் நினைப்பார்கள்.'

குட்டி அம்மா அந்த வார்த்தைகளின்படி நடந்தாள். ஒரு மகளின் நன்மைக்காக மூத்த மகளை தியாகம் செய்தாள்.

இளைஞனுடன் சேர்ந்து வந்திருந்த ஒரு ஆள் பேச்சுக்கு இடையே ஒரு கேள்வியை குட்டி அம்மாவிடம் கேட்டான்:

'அம்மா, உங்களுக்கு எத்தனை பிள்ளைகள்?'

சிறிதும் எதிர்பார்த்திராத ஒரு சாதாரண கேள்வி அது. அவள் தொண்டை அடைக்க நின்று கொண்டிருந்தாள். ஒரு நிமிடம் அவளுடைய மூளைக்கும் இதயத்திற்குமிடையே மிகப் பெரிய ஒரு போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்தில் மூளை வெற்றி பெற்று, குட்டி அம்மா தட்டுத் தடுமாறி கூறினாள்:

'மூ... மூணு... குழந்தைகள். ஒண்ணு...'

அவன் கேட்டான்:

'ஒண்ணு இறந்திருக்கணும். கவலை மறையவில்லையே!'

குட்டி அம்மா பதில் கூறவில்லை. அவளுடைய கண்கள் நிறைந்தன.

அவன் அதற்குப் பிறகு... தொடர்ந்து எதுவும் கேட்கவில்லை.


சரோஜினியின் திருமணத்தை ஒரு பெரிய திருவிழாவைப் போல கொண்டாடினார்கள். சுகுமாரன் வந்திருந்தான். கார்த்தியாயனியை அழைப்பதா வேண்டாமா என்பது ஒரு பெரிய பிரச்னையாக இருக்கவில்லை. வேண்டாம் என்று சுகுமாரன் தீர்மானித்தான். அவனுடைய அன்னை தகர்ந்து போன இதயத்துடன் ஒரு கருத்தை முன்னால் வைத்தாள்.

'கொஞ்சம் நல்ல புடவையையும், ரவிக்கையையும் கொடுத்து, அந்த பிள்ளைகளை தயார் பண்ணி அவர்களையும் அழைத்துக் கொண்டு வந்தால் என்ன மகனே?'

சுகுமாரன் கூறினான்:

'வேண்டாம். எவ்வளவு தயார் பண்ணினாலும், தனி நிறம் வெளியே வந்து விடும். அவர்களின் பெண்கள் புரிந்து கொள்வார்கள்.'

அவனுடைய அன்னை கண்ணீருடன் கூறினாள்:

'இங்கே நடக்கும் ஒரு விசேஷத்திற்கு... அதுவும், அவளுடைய தங்கையின் திருமணத்திற்கு அவள் இல்லாமலிருந்தால்... எப்படி மகனே?'

அதையும் சுகுமாரன் மறத்து கூறினான்.

'அம்மா, நீங்கள் இப்படி 'சென்டிமென்டல்' ஆகக் கூடாது. அது வாழ்க்கையை தோல்வியடையச் செய்து விடும். நாம் உண்மைகளைக் காண வேண்டும். நீங்கள் போய் அக்காவைப் பார்த்து விஷயத்தை விளக்கிக் கூற வேண்டும். சரோஜினியின் நன்மைக்காக அக்கா அப்படிப்பட்ட ஒரு தியாகத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். எனக்கு இரண்டு பேருமே சமம்தான். சரோஜினியின் வசதியான வாழ்க்கைக்காக என்பதைப் போல அக்காவின் வசதியான வாழ்க்கைக்காகவும் நான் எதை வேண்டுமானாலும் செய்வேன்.'

குட்டி அம்மா அழுது கொண்டிருந்தாள்.

சுகுமாரன் மீண்டும் தொடர்ந்து கூறினான்:

'அம்மா, நீங்க கவலைப்படக் கூடாது. இருப்பதில் நான்கில் ஒரு பாகம் அக்காவிற்கும் இருக்கிறது. ஆனால், அதை அந்த காட்டு மாட்டிடம் ஒப்படைக்க முடியாது என்பதுதான் பிரச்னையே!'

சிறிது நேரம் சிந்தனையில் மூழ்கியவாறு நின்று விட்டு, சுகுமாரன் தொடர்ந்து கூறினான்:

'கஷ்டம்! என் அக்காவின் தலைவிதி இப்படி ஆகி விட்டதே!'

அவனுடைய தாயும் அதை ஒத்துக் கொண்டு கூறினாள்:

'ஆமாம், மகனே.'

'அம்மா, நீங்க ஆயிரம் ரூபாயைக் கொண்டு போங்க. அக்காவிற்கு அதைக் கொடுத்து விட்டு, எல்லா விஷயங்களையும் விளக்கமாக கூறணும். அக்காவிற்கு அது புரியும். கவலை தீரும். தம்பி சுகுமாரன் சொன்னதாக கூறணும்.'

அவனுடைய தாய் அந்த செயலைத் தான் செய்ய முடியாது என்றாள். எனினும், வேறு யார் போக முடியும்? யாரும் சென்று கூறாமலே கூட அந்த திருமணத்தை நடத்தலாம். ஆனால், அது என்னவொரு கடுமையான செயலாக இருக்கும்!

இறுதியில் அவனுடைய தாய்தான் சென்றாள்.

ஆனால், கார்த்தியாயனி அந்த ஆயிரம் ரூபாயையும் தன் அன்னையின் கையிலேயே திருப்பிக் கொடுத்து விட்டாள். தொடர்ந்து அவள் கண்ணீர் நிறைந்த கண்களுடன் கூறினாள்:

'நான் என் தங்கையின் சந்தோஷத்திற்காகவும், வசதியான வாழ்க்கைக்காகவும் இங்கே இருந்து கொண்டே கடவுளிடம் வேண்டிக் கொள்வேன், அம்மா. அதற்கு காசு வேண்டாம்.'
திருமணத்திற்கான ஏற்பாடுகள் சிறிது சிறிதாக நடந்தன. மிகவும் ஆர்ப்பாட்டமான விருந்து....

பப்பு நாயர் அரிசி, கப்பைக் கிழங்கு, உப்பு, மிளகாய் -- இப்படி எல்லாவற்றையும் வாங்கி கணக்கு போட்டு பார்த்தபோது, ஒரு ரூபாய் இரண்டு அணா வந்தது. கையில் ஒரு ரூபாய்தான் இருந்தது. பிறகு இரண்டு அணாவைத் தருவதாக கூறியபோது, அதற்கு கடைக்காரன் சம்மதிக்கவில்லை. இரண்டணாவிற்கான பொருளைத் திருப்பித் தர வேண்டும். எதைக் கொடுப்பது? கப்பைக் கிழங்கைக் கொடுத்தால், மறுநாள் காலை உணவிற்கான விஷயம் பிரச்னைக்குள்ளாகி விடும். அரிசியை எடுத்துக் கொண்டால் -- நாழி அரிசியைத் தர வேண்டும். அதற்கு அர்த்தம் -- மறுநாள் மதியம் பிள்ளைகள் பட்டினி கிடக்க வேண்டியதிருக்கும். மூன்று அணாவிற்கு உப்பையும் மிளகாயையும் வாங்கியிருந்தான். அதைத் திருப்பித் தர முடியாது. ஒரு வழியும் தோன்றாமல் பப்பு நாயர் குழம்பிப் போய் நின்று கொண்டிருந்தான். அப்போது அவனுக்கு ஒரு எண்ணம் தோன்றியது. ஒரு பேனாக்கத்தி கையில் இருந்தது. அதைப் பணயமாக கொடுக்கலாம். ஆனால், வியாபாரி ஏற்றுக் கொள்ள மாட்டான். இறுதியில் நாழி அரிசியைத் திருப்பிக் கொடுத்து விட்டான்.

அதைத் தொடர்ந்து மேற்துண்டின் ஒரு நுனியில் அரிசியையும், இன்னொரு முனையில் உப்பு, மிளகாயையும் கட்டி, தோளில் இட்டவாறு கையில் கப்பைக் கிழங்கை எடுத்துக் கொண்டு பப்பு நாயர் வீட்டிற்குத் திரும்பினான். வீட்டின் வாசலில் அவனுடைய மனைவியும் பிள்ளைகளும் எதிர்பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்கள். தூரத்தில் அவனைப் பார்த்ததும் பிள்ளைகள் 'அப்பா வந்துட்டாரு' என்று உரத்த குரலில் அழைத்தார்கள். தாயின் இடுப்பிலிருந்த இளைய குழந்தை நழுவி குதித்தான்.

வாசற்படியைக் கடந்து உள்ளே வந்த பப்பு நாயரை பிள்ளைகள் கட்டிப் பிடித்தார்கள். அரிசியையும் கப்பைக் கிழங்கையும் கீழே வைத்து விட்டு, அவன் இளைய குழந்தையைத் தூக்கினான். கார்த்தியாயனி கேட்டாள்:

'இன்னைக்கும் மதியம் எதுவும் சாப்பிடலையா?'

'அதற்குப் பிறகும்.... அரிசியும் கப்பைக் கிழங்கும் வாங்கிய பிறகு, இரண்டு அணா பற்றாக் குறை விழுந்தது. பிறகு.... வாங்கியதிலிருந்து நாழி அரிசியைத் திருப்பி அளந்து கொடுத்தேன். சாயங்காலம் சோறு வேண்டாம். இரண்டு நாழி அரிசியைப் போட்டு, கஞ்சி வை. நாழி அரிசியை நாளை மதியத்திற்கு பிள்ளைகளுக்காக வை.'

கார்த்தியாயனி அதை காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை. அவள் அதிகார குரலில் கேட்டாள்:

'இது என்ன பழக்கம்? இப்படி எதுவும் சாப்பிடாமல் இருந்தால், பிள்ளைகளுக்கு யாருமே இல்லாத நிலை உண்டாயிடும்.'

பப்பு நாயர் எதுவும் பேசவில்லை. கார்த்தியாயனி தொடர்ந்து சொன்னாள்:

'ஏதாவது சாப்பிட்டு விட்டு, மீதமிருப்பதை கொண்டு வந்தால் போதும். நாங்கள் அதை வைத்து சாப்பிட்டுக் கொள்வோம்.'

பப்பு நாயர் திட்டினான்:

'போடீ... போ... என் பிள்ளைகளைப் பட்டினி போட விட மாட்டேன்.'

'இப்படி நடந்தால் அவர்கள் பட்டினியில் கிடப்பார்கள்'

பப்பு நாயருக்கு கோபம் வந்து விட்டது.

'பிறகு.... ஏதாவது கருநாக்கை வச்சு பேசினால்....'

'ஓ... நான் எதுவும் பேசல.'

கார்த்தியாயினி சமையலறைக்குள் சென்றாள். தந்தையும் பிள்ளைகளும் ஒன்றாக வாசலில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். தந்தையை யானையாக படுக்க வைத்து விட்டு, பிள்ளைகள் யானையின் மீது ஏறினார்கள். அவர்கள் திருவிழா விளையாட்டு விளையாடினார்கள். அங்கு ஒரே கொண்டாட்டமாக இருந்தது.

அப்படியே பொழுது சாயங்காலமானது. பாதையில் மீன் விற்பவன் உரத்த குரலில் கூவிக் கொண்டு சென்றான். 'என்ன மீன்?' என்று பப்பு நாயர் அழைத்து கேட்டான். கரிநந்தன் மீன்... ஒரு அணாவிற்று வாங்கினால், நன்றாக இருக்கும் என்று தோன்றியது. பப்பு நாயர் தன் மனைவியிடம் 'காசு இருக்குதா?' என்று கேட்டான். மனைவி 'இல்லை' என்று பதில் சொன்னாள்.


'இன்னைக்கு நீ கயிறு பிரிச்சல்லடீ...'

மூத்த மகன் கிருஷ்ணன் குட்டிதான் பதில் சொன்னான்.

'ஆமாம்பா... மூணு முடி கயிறை அம்மா பிரிச்சாங்க. நான்தான் கடையில கொண்டு போய் கொடுத்தேன். ஒண்ணரை அணா கிடைச்சது. அம்மாவோட கையில இருக்கு.'

சமையலறையில் இருந்தவாறு கார்த்தியாயனி கூறினாள்:

'அதை இப்போ தர முடியாது.'

'நீ அதை வச்சு என்ன செய்யப் போறே?'

'அதை ஏன் தெரிஞ்சிக்கணும்? தர முடியாது.'

மீன்காரன் படிக்கு அருகில் நின்றவாறு கேட்டான்:

'வேணுமா?'

சமையலறையிலிருந்து கார்த்தியாயனி வெளியே வந்து மீன்காரனை போகச் சொன்னாள். பிறகு அவள் சொன்னாள்:

'ஒண்ணரை அணா இருக்கு. அதைக் கொடுத்து மீன் வாங்கி சந்தோஷமா எல்லாரும் உட்கார்ந்து சாப்பிட்டால்... காலையில் வெளியே போறப்போ, எதைக் கொடுதது அனுப்புவது? நாளை ஒரு வேலையும் கிடைக்கலைன்னா, ஒரு பாத்திரம் தேநீராவது குடிக்க வேண்டாமா?'

பப்பு நாயரால் பதில் கூற முடியவில்லை. சமையலறைக்குள் இருந்தவாறு கார்த்தியாயனி, பப்பு நாயர் பட்டினி கிடந்து பிள்ளைகளைக் காப்பாற்றுவதைப் பற்றி என்னவோ கூறுகிறாள். அவள் கூறுவது அனைத்தும் சரிதான். இப்படி பகல் முழுவதும் வேலை செய்யும் ஆள் மதிய வேளையில் சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால் அதிக நாட்கள் வேலை செய்ய முடியாது. ஏதாவது ஆகி விட்டால், பிறகு.... பிள்ளைகள் எப்படி பிழைப்பார்கள்? அவள் இறுதியில் கூறினாள்:

'இது பிள்ளைகளிடம் பாசம் வைத்திருக்கும் செயல் இல்ல.'

பப்பு நாயர் எல்லாவற்றையும் கேட்டான். அவன் அதைப் பற்றி நினைத்துப் பார்த்தான்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.