Lekha Books

A+ A A-

கமலத்திற்கு ஒரு கதை - Page 2

மறுநாளும் நான் தனியாகத்தான் சென்றேன்.  அவள் எதிர்பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.  என்னுடன் சேர்ந்து வந்தாள்.  மற்றவர்களுக்காக அவள் நின்றிருக்கவில்லை.

நாங்கள் பேசிக் கொண்டோம்.  என்ன பேசினோம் என்பது ஞாபகத்தில் இல்லை.  பள்ளிக்கூடத்தைப் பற்றி இருக்கலாம்.  ஆசிரியர்களைப் பற்றி இருக்கலாம், சில மாணவ - மாணவிகளைப் பற்றி இருக்கலாம்.  அந்த சார் நல்லவர், இந்த சார் மோசமானவர் என்றெல்லாம்.  பிறகு சொந்த விஷயங்களையும் பேசியிருக்கலாம்.

அவள் கேட்டிருக்கலாம்:

'அவர்களுடன் சண்டையா?'

என்ன பதில் கூறுவது என்று எனக்கு உறுதியாக தெரியவில்லை.

எதிரில் இரண்டு பேர் வந்து கொண்டிருந்தார்கள்.

நாங்கள் பேச்சை நிறுத்தினோம்.

நாங்கள் எந்தவொரு அறிமுகமும் இல்லாதவர்களைப் போல நடந்தோம்.  மற்ற சிறுமிகளில் ஒருத்தி என்னிடம் கேட்டாள்:

'என்ன, எங்களுடன் சண்டையா?'

இருவரில் அவளுக்குத்தான் என் மீது சற்று மதிப்பு இருந்தது.  அவள் என்னைச் சிறிய அளவில் ஏற்றுக் கொண்டிருந்தாள்.  நான் சற்று பதறியிருக்க வேண்டும்.

'எனக்கு யாருடனும் சண்டையில்லை.'

'பிறகு... எங்களைத் தாண்டி முன்னால் ஏன் போக வேண்டும்?  திரும்பி வருவது கூட நாங்கள் போன பிறகுதான்....'

'நான் பந்து விளையாடுவதைப் பார்த்துக் கொண்டு நின்றிருப்பேன்.'

அவள் அதை நம்பவில்லை.  அவள் சொன்னாள்:

'அது எதுவுமில்லை.  எங்களுக்குத் தெரியும்' - தொடர்ந்து அவள் சொன்னாள்:

'கமலம் இப்போது எங்களை எதிர்பார்த்து நிற்பதில்லை.'

அந்தச் சிறுமியின் பெயர் கமலம் அல்ல.  இந்த கதைக்காக அப்படி பெயர் இடுகிறேன்.

தொடர்ந்து அவள் சற்று முணுமுணுத்து உறுதி செய்தாள்.

எனக்கு பயம் உண்டானது.  'ஏன் பயம் என்கிறீர்களா?  நான் ஒரு பெண் மீது காதல் கொண்டிருக்கிறேன் என்று அக்காவிடம் கூறினால்....' -- பயத்திற்கான காரணம் அதுதான்.

அது ஒரு பெரிய பயமாக இருந்தது.

நான் விஷயத்தைக் கமலத்திடம் கூறினேன்.  அவளுக்குச் சிறிது கூட கூச்சமே இல்லை.

'நான் அவர்களை எதிர்பார்த்து நிற்கவில்லை.  நான் புரிந்தே செய்தேன்.  இனியும் நான் அவர்களுடன் பேச மாட்டேன்.'

தொடர்ந்து கமலம் என்னிடம் கேட்டாள்:

'பயம் இருக்கிறதா?  ஏன் பயப்படணும்?  நான் என்னுடைய அம்மாவிடம் கூறியிருக்கிறேன்.  வகுப்பில் இப்படியொரு மாணவன் படிக்கிறான் என்றெல்லாம்.  அழைத்துக் கொண்டு வரும்படி அம்மா சொன்னாங்க.  அதில் என்ன தவறு இருக்கிறது?  ஒரு நாள் வீட்டிற்கு வரலாம்.'

கமலத்தின் தாய் ஒரு ஆசிரியை.  என் அக்கா அப்படியல்ல.  கிராமப் பகுதியில் பிறந்து வளர்ந்தவள்.  அதுதான் வித்தியாசம்.

எனக்கு பயமில்லை என்று நான் கூறினேன்.  கமலம் அவர்களுடன் சண்டை போடுவாளோ என்பதுதான் பயமாக இருந்தது.  அவள் சற்று கோப குணம் கொண்டவள்.  சண்டை என்றால் அவர்கள் பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்து விடுவார்கள்.  பிடிவாதம் உண்டானால், சற்று விஷயத்தை அக்காவிடம் கூறி விடுவார்கள்.

கமலத்திடம் கூறியிருக்க வேண்டியதில்லை.

எதுவும் நடக்கவில்லை.  கமலம் எதிர்பார்த்துக் கொண்டு நின்றிருப்பாள்.  நாங்கள் ஒன்றாகச் சேர்ந்து பள்ளிக் கூடத்திற்குச் செல்வோம்.  அவளுக்கு பென்சில், தாள், மை ஆகியவற்றை வாங்கித் தருவேன்.  ஏதாவது விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டிருப்பேன்.

இதற்கிடையில் பள்ளிக் கூடத்தில் இறுதி வகுப்பில் படித்துக் கொண்டிருந்த இரண்டு பேர் திருமணம் செய்து கொண்டார்கள்.  வளர்ச்சியடைந்தவர்கள்.  திருமண வயதை அடைந்தவர்கள்.

கமலம் கூறினாள்:

'அவர்கள் காதல் வயப்பட்டிருந்தார்கள்.'

ஒருநாள் எப்போதும் பார்க்கக் கூடிய இடத்தில் கமலத்தைக் காணவில்லை.

அவள் ஏன் வரவில்லை?

அப்படி நடந்ததில்லை.  இல்லை... ஒருநாள் அவள் வரவில்லை.  முந்தைய நாள் அவள் சொன்னாள்:

'நான் நாளைக்கு பள்ளிக் கூடத்திற்கு வர மாட்டேன்.'

அவளும் அவளுடைய அம்மாவும் சேர்ந்து ஏதோ கோவிலுக்கு வழிபடுவதற்காக சென்றிருந்தார்கள்.

முந்தைய நாள் கமலம் எதுவும் கூறவில்லை.  அவளுக்கு ஏதாவது உடல் நலக் கேடு உண்டாகியிருக்குமோ?  நான் அவளுடைய வீட்டிற்குச் சென்றதில்லை.  வீடு எங்கு இருக்கிறது என்பதும் தெரியாது.  யாரிடம் கேட்பது?  அந்த வழியே செல்ல வேண்டும்.  அவ்வளவுதான் தெரியும்.

அடுத்த நாளும் அவள் இல்லை.

கமலத்திற்கு என்ன ஆனது?

அன்று வீட்டை அடைந்தபோது மேற்கு திசையிலிருக்கும் வீட்டில் விரிந்த நெஞ்சுப் பகுதியையும் அகலமாக முன்னோக்கி வளர்ந்திருக்கும் மார்பகங்களையும் கொண்ட, நெளிந்துகொண்டே நடக்கும் அந்த பழைய சினேகிதி என்னிடம் கூறினாள்:

'தெரியுமா?  கமலத்தை நாய் கடிச்சிடுச்சு.'

'நாயா?  எந்த நாய்?  தெரு நாயா?'

அவள் குலுங்கிக் குலுங்கி சிரித்தாள்.

'நாளைக்கு நான்காவது நாள்.  குளிப்பாள்.  நாளை மறுநாள் பள்ளிக் கூடத்திற்கு வருவாள்.'

எதுவும் புரியாமல் குழம்பிப் போய் நின்றேன்.  நாய் கடித்து நான்காவது நாள் குளிக்கிறாள்.  பிறகு பள்ளிக் கூடத்திற்கு வருகிறாள்.  நான் பாதி வாயைத் திறந்தவாறு நின்றேன்.  நாய் கடித்தால் அப்படித்தான் என்று எனக்கு தெரியாது.  என்னை நாய் கடித்திருக்கிறது.  இப்போதும் காலில் அடையாளம் இருக்கிறது.  நான் நான்காவது நாள் குளிக்கவில்லை.

அவள் கூறினாள்:

'பலகாரம் வாங்கி, பொட்டலமாக கட்டிக் கொண்டு போய் கொடு.'

நாய் கடித்தால், பலகாரம் வாங்கிக் கொண்டு போய் கொடுக்க வேண்டுமா?  என்னதான் கூறுகிறாள்?  எனக்கு எதுவுமே புரியவில்லை.

மறுநாளுக்கு மறுநாள் காலையில் நான் அவள் எதிர்பார்த்து நின்றிருக்கக் கூடிய இடத்தை அடைந்தேன்.  அவள் அப்போது நடந்து அங்கு வந்தாள்.

கமலம் தன் நெற்றியில் கறுத்த ஒரு பெரிய பொட்டு வைத்திருந்தாள்.  அவள் சாதாரண குங்குமப் பொட்டைத்தான் வைப்பாள்.  அவளுடைய முகம் சிவந்து காணப்பட்டது.  பிரகாசம் படர்ந்திருந்த கன்னத்தில் இரண்டு முக பருக்கள் அரும்பியிருந்தன.  ஒரு புதிய ஒளி வந்து சேர்ந்து விட்டிருந்தது.  கண்களுக்கு ஒரு எண்ணெய்யின் வெளிப்பாடு!  அல்ல.... அடர்த்தியான நீல நிறம்!  அவை அப்படியே அசைந்து கொண்டிருந்தன.  உதடு இரத்தத்தைப் போல அல்ல...  என்ன ஒரு நல்ல நிறம்!  புன்னகையில் உண்மையிலேயே வெட்கம் கலந்திருந்தது.  நான்கு நாட்களுக்கு முன்பு அவளுடைய புன்னகை அப்படி இருக்கவில்லை.  பார்வை அந்த மாதிரி இல்லை.  அவள் மொத்தத்தில் மாறிப் போயிருந்தாள்.  நுனியைக் கட்டி பின்னால் தொங்க விடப்பட்டிருந்த கூந்தலுக்குக் கூட ஒரு தனி அழகு இருந்தது!

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel