Logo

வாழ்க்கையின் ஒரு பக்கம்

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 4111

வாழ்க்கையின் ஒரு பக்கம்
பாறப்புரத்து
தமிழில்: சுரா

ல வேளைகளில் முயற்சித்தும், ஒரு கதைக்கான இலக்கணத்திற்குள் அடங்காத, வாழ்க்கையின் பழைய ஒரு பக்கம். உண்மையில் நடைபெற்ற இந்த கதையை வெளிப்படுத்தினால் என்னுடைய ஒழுக்கம் பற்றிய எண்ணம் எப்படி விமர்சிக்கப்படும் என்ற கடுமையான குழப்பம் இருக்கத்தான் செய்தது. அதனால் இவ்வளவு காலமும் நான் இதை இதயத்தின் அடித்தளத்தில் மறைத்து வைத்துக் கொண்டு நடந்து திரிந்தேன். ஆனால், இப்போது இந்த இதயச் சுமையை இறக்கி வைப்பது என்பது தவிர்க்க முடியாத விஷயமாக ஆகி விட்டிருக்கிறது....

அந்த நினைவுகளுக்கு முழுமையான வடிவம் கொடுப்பதற்கு எனக்கு சிறிதும் சிரமம் தோன்றவில்லை. இதோ... மலையின் மீது வெள்ளை அடிக்காத அந்தச் சிறிய வீடும் ஒற்றையடிப் பாதையும் மனமென்ற கண்ணாடியில் தெளிவாக தெரிகின்றன. எங்களுடைய கிராமத்திலிருந்து மூன்று மைல் தூரத்தில் அது இருக்கிறது. இரண்டு கிராமங்களையும் ஒன்றையொன்று பிரிப்பது ஒரு புஞ்சை வயல்தான். வறண்ட காலமாக இருந்தால் வயலைக் குறுக்காக கடந்து, ஒன்றரை மைல் தூரம் நடந்தால் போதும். இல்லாவிட்டால் முட்டாற்றில் தேவாலயத்தின் வாசற் படியிலிருந்து கீழே செல்லும் ஒற்றையடிப் பாதையின் வழியாக மூன்று மைல்கள் நடக்க வேண்டும் (அன்றைய ஒற்றையடிப் பாதை இன்று பெரிய சாலையாகவும், சாலையின் வழியாக, பேருந்து சர்வீஸ் தொடங்கி நடக்கவும் செய்திருக்கின்றன). பாதையின் ஓரங்களில் வெளிறிப் போய் நிற்கும் மரவள்ளி தோட்டங்கள்... புற்களும் அவரையும் பயறும் இடையில் இங்குமங்குமாக காணப்படும், மக்கள் வசிப்பதும், நாகரீகமும் குறைவாக இருக்கும் பகுதி. சாதாரணமாக மாதத்தில் ஒரு முறை மட்டுமே குறிப்பிட்டுக் கூறுகிற மாதிரி அந்த பாதையில் போக்குவரத்து இருக்கும். அந்த பாதை சென்று முடியும் இடத்தில் மாதத்திற்கொரு முறை நடக்கக் கூடிய ஒரு காளைச் சந்தை இருக்கிறது. பதினேழு வருடங்களுக்கு முன்பு, சுமார் ஏழெட்டு மாத காலம், மாதத்திற்கு நான்கு தடவைகள் நான் அந்த பாதையின் வழியாக போகவும், வரவும் செய்திருக்கிறேன். பதினேழு வருடங்கள் என்பதைக் கணக்கிட்டு கூறுவது என்பது எளிதான ஒரு விஷயம். என்னுடைய உத்தியோக வாழ்க்கை ஆரம்பமாவதற்குச் சற்று பின்னால், படிப்பு முடிவடைந்த பிறகு இருந்த காலம். என் வாழ்க்கையைப் பொறுத்த வரையில், அந்த காலகட்டத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் இருக்கிறது. நான் இன்று வரை எழுதியிருக்கும் சொந்தக் கதையின் சாயல் உள்ள கலைப் படைப்புகள் எதிலும் அந்த காலகட்டத்தின் முக்கியத்துவத்தை முழுமையாக வெளிப்படுத்த முடியவில்லை. அந்தச் சிறிய வயதில் நான் ஒரு குடும்பத்தின் தலைவனாக ஆகி விட்டிருந்தேன். அவ்வாறு கூறினால், அந்த வார்த்தைக்கான அர்த்தத்தை முழுமையாக புரிந்து கொண்டீர்களா? என் வயதிலிருந்த மற்ற இளைஞர்களுக்கு இருந்த சுதந்திரம் எனக்கு இல்லை என்பதைப் புரிந்து கொண்டிருந்தேன். என்னுடைய தேவைகளை என்னிடம் மட்டுமே கூறிக் கொள்ள முடியும் என்பதையும், வீட்டிலிருந்த மற்ற உறுப்பினர்களின் சுமையை இன்று இல்லாவிட்டாலும் நாளை நான் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும் என்பதையும் நான் உணர்ந்திருந்தேன். அந்த நினைப்பு, என் வயதிலிருக்கும் ஒருவனுக்கு இருக்கக் கூடாத சிந்தனைப் பழக்கத்தையும், கவலை உணர்வையும் எனக்குள் வளர்த்தன. சிந்தனைகள் நிறைந்த சுமையுடன் அலைந்து திரிவது அன்று வழக்கமான ஒன்றாக இருந்தது. குறிப்பிட்டுக் கூறுகிற மாதிரி இலக்கு எதுவுமில்லை. அவ்வாறு நடந்து திரிந்து கொண்டிருந்த காலத்தில்தான், மத விஷயங்களில் ஈடுபாடு கொண்டிருந்த ஒரு நண்பன் சொன்னான்:

'.....ல் ஒரு வேதப்பாட வகுப்பைத் தொடங்க வேண்டுமென்று நினைக்கிறேன். அந்த ஊரில் அதை நடத்துவதற்கு ஆட்கள் இல்லை. நீ அங்கு ஒரு ஆசிரியராக இருக்கலாமே?'

எந்தவொரு தயக்கமும் இல்லாமல் நான் அந்த வேலையை ஏற்றுக் கொண்டேன். ஏதாவதொரு வேலைக்கு என்னை யாரும் அழைப்பதில்லையே என்ற மனக்குறை இருந்தது. ஞாயிற்றுக் கிழமை மதிய நேரம் தாண்டியதும், அந்த நண்பன் வீட்டிற்கு வருவான். பிறகு ஒன்றாகச் சேர்ந்து புறப்படுவோம். அந்த ஒற்றையடிப் பாதையின் வழியாக மூன்று மைல் தூரம் நடப்பது என்ற விஷயம் எனக்குள் உற்சாகத்தை நிறைத்திருந்தது. அந்தச் சமயத்தில் வாழ்க்கையில் எதிர்பார்ப்பதற்கு என்று ஏதாவது இருந்தது என்றால், அது அந்த பயணம்தான் என்று தோன்றுகிறது.

ஒரு தேவாலயத்திற்குள்தான் வகுப்பு நடந்தது. பெரிய தேவாலயத்திற்கு இருக்கக் கூடிய தரைக் கற்கள் அமைத்து கட்டப்பட்ட அந்த தேவாலயத்தின் கல்லின் மீது கரிய நிறத்தில் பாசி பிடித்து கிடந்தது. எவ்வளவு காலமாக அது இருக்கிறது என்பதை கணக்கிட முடியவில்லை. பணமும் நாகரீகமும் குறைவாக இருக்கும் அந்த கிராமப் பகுதியில் விவசாயம் செய்து வாழும் பத்து நூறு கிறிஸ்தவர்கள்தான் வாடிக்கையாக வரக் கூடியவர்கள். நிரந்தரமாக ஒரு பாதிரியாருக்கு சம்பளம் கொடுக்க வழியில்லாத காரணத்தால், மாதத்தில் ஒரு முறையே தேவாலயத்தில் கூட்டம் நடக்கும். பள்ளிக் கூடத்தில் படிக்கும் குழந்தைகளின் சதவிகிதம் மிகவும் குறைவாக இருந்தது. பத்தோ ஐம்பதோ குழந்தைகள் வேதம் படிப்பதற்காக வருவார்கள். அவர்களை வயதை அனுசரித்து நான்கு வகுப்புகளாக பிரித்து பாடம் நடத்துவார்கள். அவர்களில் வயதில் மூத்த பிள்ளைகள் உள்ள உயர்ந்த வகுப்பிற்கான ஆசிரியராக நான் இருந்தேன். படிப்படியாக அவர்களில் ஒவ்வொருவரும் என்னுடைய அன்பிற்குரியவர்களாக ஆனார்கள். இதயத்தில் ஊற்றெடுத்து நிற்கும் அன்பு என்ற நீரோட்டத்திற்கு முதலில் நுழைய இடம் கிடைத்தது, ஒருவேளை.... அந்த பிள்ளைகளின் இளம் மனங்களிலாகத்தான் இருக்க வேண்டும். வாரத்திற்கொருமுறை மட்டுமே பார்ப்பதுண்டு என்றாலும் பால்ய வயதிலிருந்து பழக்கத்திலிருக்கும் உறவினரைப் போல அவர்கள் என் மீது அன்பு செலுத்தினார்கள். அவர்களுக்கு மத்தியில் மிடுக்கும், சுறுசுறுப்பும் அதிகமாக கொண்டிருந்த இளம் பெண்ணாக இருந்தாள் பேபி. அன்று அவளுக்கு பன்னிரெண்டு வயது இருக்கும். அவளைப் பற்றிய நினைவுகளில், முன்னால் வந்து நிற்பது அவளுடைய மணி குலுங்குவதைப் போன்ற சிரிப்புத்தான். 'சிரிப்புப் பெட்டகம்' என்ற செல்லமான கிண்டல் பெயரில்தான் நான் அவளை அழைப்பேன். நகைச்சுவையின் சாயல் கொண்ட எதையாவது கேட்டால், அவள் விழுந்து விழுந்து சிரிப்பாள். வேறு யாராவது சிரிப்பதற்கு தன்னுடன் இருக்கிறார்களா என்பதையெல்லாம் பார்ப்பதில்லை. பிறகு... இன்னொரு முறை சிரிப்பதற்காக ஏதாவது கூறுங்கள் என்பதைப் போல பெரிய கண்களைத் திறந்து, உதடுகளை விரித்து வைத்துக் கொண்டு அமர்ந்திருப்பாள். அவளுக்கு கருப்பு நிறம். கருத்து, வளர்ந்த கூந்தலும் அடர்த்தியான கருப்பு நிறத்திலிருந்த கண்களும் சேர்ந்து அவளுக்கு ஒரு தனிப்பட்ட அழகை தேடிக் கொடுத்தன. நான் போய் சேருவதற்கு நேரமானால், ஒற்றையடிப் பாதையில் அவள் என்னை எதிர்பார்த்து நின்று கொண்டிருப்பாள். பார்த்து விட்டால், சந்தோஷத்துடன் உரத்த குரலில் கூறுவாள்:

'ஓ.... நம்ம சார் வந்து விட்டார்.'

படிக்கக் கூடிய புத்தகத்தைக் கொண்டு வந்து தருவது அவள்தான். கடந்த நாளன்று சொல்லித் தந்த பகுதிகளிலிருந்து ஏதாவது வீட்டுப் பாடங்கள் கொடுத்திருந்தால், அதை ஞாபகப்படுத்துவதும் அவள்தான்.


இப்படியே நாட்கள் கடந்து சென்றன. ஒரு ஞாயிற்றுக் கிழமை வகுப்பு முடிவடைந்து மற்ற பிள்ளைகள் அனைவரும் போய் விட்ட பிறகும், அவள் எனக்கு அருகில் சுற்றிச் சுற்றி நின்றவாறு கேட்டாள்:

'சார்!'

'என்ன 'சிரிப்புப் பெட்டகமே!'?

அவள் சிரித்தாள்.

'சிரிச்சியா?'

'பிறகு... சார், என்னுடன் வீட்டிற்கு வரணும்.'

'என்ன விசேஷம்?'

'பிறகு... என்னுடைய பிறந்த நாள்.'

'ஓ! பாயசம் இருக்குமே!'

அவள் மீண்டும் சிரித்தாள்.

அவள் என்னை வீட்டிற்கு அழைத்துக் கொண்டு சென்றாள். தேவாலயத்திற்கு அருகிலேயே இருந்தது வீடு. கற்களால் ஆன, வெள்ளை பூசாத, பொதுவாகவே நல்ல நிலையிலிருந்த ஒரு ஓலை வேய்ந்த வீடு. வாசலை அடைவதற்கு முன்பே அவள் எனக்கு முன்னால் ஓடி நுழைந்து கொண்டிருந்தாள். சிறிது நேரம் சென்றதும், தாயும் மகளும் ஒன்றாக வாசலில் தோன்றினார்கள். மகளைப் போல தாயும் முகத்தில் புன்னகையை அணிந்திருந்தாள். கறுத்து, நீளமாக வளர்ந்திருந்த கூந்தலும், பெரிய கண்களும் மகளுக்கு இருந்ததைப் போலவேதான் இருந்தன. வயது உண்டாக்கிய வெளி வித்தியாசங்களை நீக்கிப் பார்த்தால், தாயும் மகளும் ஒன்றேதான். நான் உள்ளே நுழைந்ததும், பால்ய வயதிலிருந்து பழக்கமானவனைப் போல சொன்னேன்:

'எங்கே 'சிரிப்பு பெட்டகம்' பாயசம்? கொண்டுவா.'

தாயும் மகளும் சிரித்தார்கள். மகளின் தோளில் கையை வைத்து நெருக்கமாக நிறுத்தி வைத்துக் கொண்டு தாய் சொன்னாள்:

'உண்மைதான். இதைப் போன்ற ஒரு சிரிப்பு பெட்டகத்தைப் பார்க்க முடியாது.'

'அம்மா, உங்களின் மகள் அல்லவா?' என்று நான் கூறவில்லை.

'இந்த பெண் எப்போதும் கூறுவாள். எவ்வளவு நாட்களாக பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன்!'

'பேபி என்னுடைய மிகவும் திறமை வாய்ந்த சிஷ்யை!'

தாய் தன் மகளை பாசத்துடன் தடவினாள். மகள் பதைபதைப்புடன் சொன்னாள்:

'ம்... சார் விளையாட்டுக்காக சொல்றாரு.'

'இதோ நான் வந்துட்டேன்' என்று கூறியவாறு அன்னை உள்ளே சென்று ஒரு சொம்பில் நீருடன் வந்தாள்.

பிறகு வந்த பாத்திரங்களில் நான்கைந்து வகையான பலகாரங்கள் இருந்தன. சாதாரணமாக கிராமப் பகுதிகளில் பார்க்க முடியாத விசேஷமான பலகாரங்கள்! அவற்றை எனக்கு முன்னால் வைத்து விட்டு, விலகி நின்று கொண்டு அவள் சொன்னாள்:

'இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை பிறந்த நாளன்று விருந்து வைத்துக் கொண்டிருந்தோம். லட்டுக்கு இனிப்பு அதிகமாக இருக்கிறதோ?'

'இல்லை... நான் பெரிய இனிப்பு விரும்பி.'

'இவளோட அப்பா நேர் எதிரானவர்.'

'அப்பாவைப் பார்க்கவில்லையே' என்று எனக்கு கூற வேண்டிய நிலை உண்டாகவில்லை. அவள் சொன்னாள்:

'மதியம் தெரு வரை சென்றார். இப்போ இங்கு வருவார். வீடு எங்கே இருக்குன்னு சொல்லலையே!'

நான் இடத்தின் பெயரைக் கூறியதும், வீட்டின் பெயரைக் கேட்டாள். அதைச் சொன்னதும், வீட்டில் உள்ளவர்களைப் பற்றி கேட்டாள். பிறகு அங்கு உரையாடலின் விஷய எல்லைகள் கடந்து... கடந்து சென்றன. நகரத்தில் சந்தைக்கு மிகவும் அருகில்தான் அவளுடைய குடும்பம் இருக்கிறது. அவள் வாங்கிய நிலமும் வீடும்தான் அது. பாம்பேயில் வேலையில் இருக்கும்போதுதான் அவ்வளவையும் சம்பாதித்திருக்கிறாள். நல்ல சம்பளம் வரக் கூடிய வேலை. பேபியைப் பெற்றெடுத்தது பாம்பேயில் வைத்துத்தான். நல்ல நிலையுடனும் வசதியுடனும் அங்கு வாழ்ந்தாள். அந்த அருமையான காலத்தில் எதிர்காலத்தைப் பற்றி கவனத்தில் வைக்கவில்லை. திடீரென்று அந்த மனிதருக்கு ஒரு உடல் நலக்கேடு உண்டானது. கையில் எஞ்சியிருந்த பணம் முழுவதும் சிகிச்சைக்குச் செலவாகி விட்டது. உடல் நலக்கேடு சிறிது குணமான நேரத்தில் வேலை கையை விட்டு போய் விட்டது. பிறகு ஒரு வேலை கிடைக்கவில்லை. சுருக்கமாக கூறுவதாக இருந்தால் -- செழிப்பிற்கு மத்தியிலிருந்து கஷ்டத்திற்கு அந்த குடும்பம் திடீரென்று வீசி எறியப்பட்டது.

இவ்வளவு விஷயங்களையும் எந்த அளவிற்கு திறமையாக அவள் என்னிடம் கூறி புரிய வைத்தாள்! என்னுடைய கவனம் முழுவதையும் பிடித்து வைக்க அவளால் முடிந்தது. உரையாடிக் கொண்டிருக்கும்போதே கையில் ஒரு பொட்டலத்துடன் அந்த குடும்பத்தின் தலைவர் வந்தார். நோய்வாய்ப்பட்ட அந்த மனிதரின் முகத்தில் நிறைந்து நின்றிருந்த கவலையின் ரேகைகள் தெளிவாகத் தெரிந்தன. மிகவும் குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி அவர் குசலம் விசாரித்தார். 'நான் அதிகமாக பேசாதது அன்பு இல்லாததால் அல்ல' என்ற ஒரு மன்னிப்பும் அந்த முகத்தில் தெரிந்தது. சாயங்காலம் ஆன பிறகுதான் நான் அந்த வீட்டை விட்டு வெளியே வந்தேன்.

அது ஒரு பழக்க உறவிற்கான ஆரம்பமாக இருந்தது. பிறகு ஞாயிற்றுக் கிழமைகளுக்காக காத்திருப்பதற்கு எனக்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று -- வேத பாட வகுப்பில் கற்பிப்பது. பிறகு... அந்த பழக்கத்தால் உண்டான உறவைப் புதுப்பிப்பது. அந்த வீட்டுடன் என்னை நெருக்கமாக்கிய உணர்வு என்ன என்பதை விளக்கிக் கூறுவது மிகவும் சிரமமான விஷயம். திறமைசாலியான அந்த இளம் பெண்ணின் உருவம் இதயத்தில் பதிந்திருந்தாலும், அந்த உணர்வை காதல் என்று குறிப்பிட நான் தயாரில்லை. ஆனால், காலம் கடந்தபோது.... அவையெல்லாம் பிறகு வரும் விஷயங்கள்...

நாட்கள் கடந்து செல்ல, நண்பனை எதிர்பார்க்காமலே நான் சீக்கிரமே போக ஆரம்பித்தேன். பேபியின் வீட்டில் போய் இருந்து விட்டு, நேரமாகும்போது, அவளுடன் சேர்ந்து தேவாலயத்திற்கு வருவேன். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் எனக்காக அவர்கள் ஏதாவது தனிப்பட்ட முறையில் செய்து வைத்திருக்காமல் இருக்க மாட்டார்கள். ஒரு வாரத்திற்கான செய்திகளையும் தயார் பண்ணி வைத்திருப்பார்கள். பேபியின் 'அப்பா' பல நேரங்களிலும் அங்கு இருக்க மாட்டார். ஒரு தொழிலைத் தேடி அவர் அலைந்து கொண்டிருந்தார். வீடு இருந்த நிலத்தில் கொஞ்சம் விவசாயம் செய்வதற்காக உள்ள இடம் தரிசாக கிடந்தது. எனினும், அந்த தாய் மற்றும் மகளின் முகத்தில் நான் எந்தச் சமயத்திலும் கவலையின் கரிய நிழலைப் பார்த்ததில்லை.

ஒருநாள் நான் செல்லும்போது, வழக்கம்போல அந்த வீட்டின் தலைவர் அங்கு இல்லை. அவர் தூரத்தில் எங்கோ வேலையைத் தேடி சென்றிருந்தார். ஒரு வாரம் கடந்த பிறகே திரும்பி வருவார். பேச்சு முடிந்து நான் வழக்கம் போல விடை பெற்றபோது பேபியின் தாய் சொன்னாள்:

'இன்று இங்கு தங்க வேண்டும் என்று சொன்னால், கேட்பீர்களா?' நாங்கள் தனியாகத்தான் இருக்கிறோம்.'

'நான் வீட்ல சொல்லிவிட்டு வரலையே! அது மட்டுமல்ல -- இன்று ஒரு நாள் தங்கினால், பயம் போய் விடுமா?'

'ஒரு நாள் அல்ல...'


'என்ன?'

'இந்த வீட்டில் எப்போதும் தங்கி, பார்க்க வேண்டும் என்பதுதான் எங்களுக்கு ஆசை.'
தொடர்ந்து அவள் அந்த இளம் மகளின் முகத்தையும், என் முகத்தையும் மாறி மாறி பார்த்தாள். அப்போது அந்த கண்கள் ஈரமாகி இருந்தனவோ? அவ்வாறு அந்த பழகிய உறவு ஆழமாகி விட்டிருந்த காலத்தில், சிந்திக்காமல் நான் ஊரை விட்டு கிளம்பினேன். அது வாழ்க்கையின் ஒரு திருப்பமாக இருந்தது. வாழ்க்கைக்கு புதிய அர்த்தமும் பார்வையும் உண்டாகின்றன. வயதில் வயது... இல்லாவிட்டால்... அறிவில் தானொரு பெரிய ஆளாக ஆகியிருக்கிறோம் என்ற உணர்வு உண்டாகிறது. பலவிதமான பண்பாடுகளைச் சேர்ந்தவர்களுடன் அன்பு நிறைந்த உறவு ஏற்படுத்துகிறேன். தெரியாமலிருந்த வாழ்க்கையின் நிர்வாணமான பக்கங்களைக் கண்களைத் திறந்து பார்ப்பதற்கு வாய்ப்பு கிடைக்கிறது. இதயத்தில் கற்பனைகள் வடிவம் எடுக்கவும், உணர்ச்சிகளுக்கு வெப்பம் உண்டாகவும் செய்கின்றன.

அப்படித்தான் அந்தச் சிறிய பெண்ணுக்கு ஒரு புதிய வடிவம் கொடுக்க நான் முயன்றேன். அன்று வரை நினைவில் வந்திராத வடிவம். என் கனவுகளின் மூலம் அவள் வளர்ந்து கொண்டிருந்தாள். நண்பர்களில் பலருக்கும் சொந்தமான காதல் கதைகள் உண்டு. அவர்களுக்கு சிலிர்க்கச் செய்யும் அனுபவங்கள் உண்டு.

அந்த அனுபவ கதைகளை விளக்கி கேட்க நேரும்போது, நான் மொத்தத்தில் நினைப்பது சிரிப்புப் பெட்டகமான அந்த சிறிய பெண்ணைத்தான். எப்போதும் அந்த வீட்டில் தங்குவதைப் பார்க்க விரும்புவதாக பேபியின் தாய் கூறியதற்கான அர்த்தம், அந்த சிந்தனைகளுக்கு பலம் சேர்த்தது.

இரண்டு வருடங்களுக்குப் பிறகு நான் முதல் தடவையாக விடுமுறையில் திரும்பி வந்தபோது, ஆள் முற்றிலும் மாறிப் போய் தெரிகிறேன் என்று பார்த்தவர்கள் ஒவ்வொருவரும் கூறினார்கள். மறுநாள் ஞாயிற்றுக் கிழமை. அன்று நான் பேபியின் வீட்டிற்குச் சென்றேன். என்னை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதைப் போல அந்த தாயும் மகளும் வாசலிலேயே இருந்தார்கள். நான் வியப்புடன் கண்களை அகல விரித்து வைத்துக் கொண்டு நின்றேன். என்னுடைய கனவுகளும் கற்பனைகளும் செயல் வடிவம் பெற்றிருக்கின்றன. உணர்ச்சிகள் நிறைந்த கண்களும் சதைப் பிடிப்பான உடலழகும் கனவில் பார்த்ததைப் போலவேதான்.... தாயும் மகளும் புன்னகைத்தார்கள். நான் கேட்டேன்:

'சிரிப்புப் பெட்டகமே, என்ன விசேஷம்?'

அவள் குலுங்கிக் குலுங்கி சிரிக்கவில்லை. நான் ஆச்சரியப்பட்டேன். அந்தப் பெண் வாய் விட்டு சிரிக்க மறந்து விட்டாளோ? முகத்தைக் குனிந்து கொண்டு, வருத்தம் நிறைந்த குரலில் அவள் கூறினாள்:
'எங்களை மறக்கலையே?'

நான் சொன்னேன்:

'மறந்திருந்தால், இப்போ வருவேனா?'

'ஆமாம்...' - அவளுடைய தாய்.

'என் நினைவில் நீ மட்டும்தான் இருந்தாய்' என்று நான் கூறவில்லை. என் முக வெளிப்பாட்டில் ஒருவேளை, அந்த அர்த்தம் தெரிவதை அவள் கண்டு பிடித்திருப்பாளோ? நான் மொத்தத்தில் உணர்ச்சிகளின் போராட்டத்தில் இருந்தேன். அவளைத் தனியாக பார்க்க வேண்டும். உரையாட வேண்டும். நான் ஒரு பெண்ணைக் காதலிக்க தகுதியுள்ளவனாக ஆகியிருக்கிறேன் என்பதைக் கூற வேண்டும்....

குசல விசாரிப்புகளுக்கு மத்தியில் பேபி காபியுடன் வந்தாள். சமையலறையின் வாசலிலிருந்து காப்பி பாத்திரத்துடன் அவள் நடந்து வரும்போது, அவளுடைய உறுப்புகளின் அசைவுகள் எந்த அளவிற்கு ஆர்வத்தைத் தூண்டக் கூடிய வகையில் இருந்தன! அந்த சரீர வடிவமைப்பிற்கு என்ன கலையழகு! அதைத் தொட்டு, அறிந்து...

சாயங்காலம் நெருங்கியபோது நான் திரும்பி வந்தேன். மீண்டும் வர வேண்டுமென்று பேபியின் தாய் திரும்பத் திரும்ப அழைத்தாள். திரும்பும்போது நான் என்னுடைய கட்டுப்பாடற்ற, புனிதத்தன்மையற்ற சிந்தனைகளுக்கு கடிவாளம் போட முயன்றேன். ஆனால், முடியவில்லை. வாழ்க்கையின் இலட்சியமே அந்த இளம் பெண்ணிடம் மையம் கொண்டிருப்பதைப் போல தோன்றியது.

ஒரு வாரத்திற்குப் பிறகு.... நான் காலையில் வெளியேறுவதற்கு முன்பு பேபியின் தந்தை வீட்டிற்கு வந்தார். எனக்கு அவரை உடனடியாக அடையாளம் தெரியவில்லை. அவர் அந்த அளவிற்கு மெலிந்து போய் காணப்பட்டார். ஒரு தொழிலுக்கான தேடல் அப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதை நான் புரிந்து கொண்டேன். அதிகமாக எந்தவொரு முகவுரையும் இல்லாமல் அவர் தாழ்ந்த குரலில் சொன்னார்:

'ஒரு.... ஒரு பத்து ரூபாய் வேணும். அடுத்த வாரம் திருப்பித் தர்றேன்.'

நான் ஒரு நிமிடம் சிந்தித்துக் கொண்டு நின்றிருந்தபோது, மீண்டும் சொன்னார்:

'வீட்டுத் தேவைக்குத்தான். அடுத்த வாரமே தர்றேன்'

'பரவாயில்லை. இதை திருப்பித் தருவதற்காக கஷ்டப்பட வேண்டாம்.'

'ச்சே! அது முடியுமா?'

நான் பணத்தைக் கொடுத்தேன். விடை பெறும்போது அவர் சொன்னார்:

'அங்கே வருவீங்கள்ல?'

'வர்றேன்.'

அந்த கடனும் அழைப்பும் எனக்குள் ஆர்வத்தை வளர்த்தன. வீட்டை விசாரித்து அவர் என்னைத் தேடி வந்ததும்... ஒருவேளை அவர் தெரிந்தே..... அந்த வீட்டிற்கு அழைக்கப்படும் முதல் விருந்தாளி நானாகத்தான் இருக்க வேண்டும் என்று இருக்கிறதா என்ன? என்னை விட முன்பே ஒரு ஆள்....

அடுத்த ஞாயிற்றுக் கிழமை சாயங்கால நேரத்தில் நான் அந்த வீட்டிற்குச் சென்றேன். அழைக்கப்பட்டால், ஒரு இரவு வேளையை அங்கு செலவிட வேண்டும்.

நான் மாலை நேரத்தில் சென்றதால், அவர்களுடைய முகத்தில் மெல்லிய பதைபதைப்பு தெரிந்ததோ? எனினும், குசல விசாரிப்புகளுக்கும் அன்பை வெளிப்படுத்துவதற்கும் குறைவு உண்டாகவில்லை. நான் அறைக்குள் நாற்காலியில் அமர்ந்திருந்தேன். மிகவும் அருகிலிருந்த மேஜையின் மீது விளக்கும் புத்தகங்களும் இருந்தன. பேபி அங்கே வந்தாள். என் இதயம் பலமாக துடித்தது. அவள் தனியாக வந்தாள். அவளுடைய தாய் சமையலறையில் வேலைகளில் ஈடுபட்டிருந்தாள். நான் மெதுவாக, மிகவும் மெதுவாக அழைத்தேன்:
'பேபீ...'

அவள் சற்று பதைபதைப்புடன் அழைப்பைக் கேட்டாள்.

'என்ன?'

'இங்கே வா...' (நான் மேலும் கீழும் மூச்சு விட்டுக் கொண்டிருந்தேனோ?)

அவள் மெதுவாக அருகில் வந்தாள். கையை நீட்டினால் தொடலாம் என்ற அளவிற்கு நெருக்கத்தில். அவளுடைய கண்களில் பயம் இருந்தது. நான் அவளுடைய இடுப்பைக் கையால் சுற்றி....

பின்னாலிருந்து என் கையை யாரோ வேகமாக பிடித்தார்கள். நான் அதிச்சியடைந்து திரும்பிப் பார்த்தேன். பேபியின் தாய்! ஒரு நிமிடம்... எதுவுமே நடக்காததைப் போல அவள் சொன்னாள்:

'பேபி, சமையலறைக்குப் போ.'

அவளுடைய கை என் சட்டையின் மீதுதான் இருந்தது. அந்த விரல்கள் அசைந்து கொண்டிருந்தன அல்லவா?

அவள் என் கண்களைப் பார்த்து புன்னகைக்க முயற்சித்தாள். பிறகு கேட்டாள்:

'வருத்தப்படுறீங்களா?'

நான் பேசவில்லை.

'அவள் பெண். சின்ன பொண்ணு. அவளுக்கு ஆழமான சிந்தனை இருக்கணும்.'


நான் மரத்துப் போய் அமர்ந்திருந்தேன். அந்த கை விரல்கள் என் சட்டையின் மீது இறுக பிடித்துக் கொண்டிருந்தன.

'அந்த அளவிற்கு பொறுமையை இழந்திருக்க வேண்டியதில்லை. ஒரு வாழ்க்கை முழுவதும் அவளை காதலிக்க தயார் என்று கூறுங்கள். பிறகு....'

அவள் எனக்கு அருகில்.... என்னைத் தொட்டவாறு நின்று கொண்டிருக்கிறாள். நான் அந்த கண்களைப் பார்த்தேன். ஓ! கண்ணீர் வழிந்து கொண்டிருக்கிறதே! நான் முழுமையாக குளிர்ந்து போய் விட்டேன். உணர்ச்சிகள் உருகி விட்டன....

மேலும் இருட்டியவுடன், அந்த வீட்டின் தலைவர் வந்தார். என்னைப் பார்த்ததும் சொன்னார்:

'இன்றைக்கு வந்தது நல்லதாப் போச்சு. அந்த பணத்தை தயார் பண்ணி வச்சிருக்கேன். இந்தாங்க... கையிலிருந்தால் செலவாயிடும்.'

ஒரு இயந்திரத்தைப் போல நான் அதை வாங்கி பாக்கெட்டில் வைத்தேன்.

மறுநாள் பொழுது விடிந்தவுடன், நான் அந்த வீட்டிலிருந்து திரும்பிச் சென்றேன். பிறகு எந்தச் சமயத்திலும் நான் அங்கு செல்லவில்லை.

அப்போது என்ன சொல்ல ஆரம்பித்தேன்? ஆமாம்.... இந்த பழைய கதையை இப்போது கூறுவதற்குக் காரணம் என்ன என்று கேட்கிறீர்களா? சில நாட்களுக்கு முன்பு... ஏழெட்டு மைல்களுக்கு அப்பால்... நான் ஒரு மீட்டிங்கில் கலந்து கொள்வதற்காகச் சென்றிருந்தேன். தலைமை தாங்கியவருக்கும் சொற்பொழிவாளர்களுக்கும் காப்பி ஏற்பாடு செய்திருந்தது ஊராட்சி தலைவரின் இல்லத்தில். சுத்தமும் செல்வச் சூழலும் நிறைந்த வீடு. அழகான இரண்டு மூன்று குழந்தைகள் வாசலில் ஓடி விளையாடிக் கொண்டிருந்தன. வரவேற்பு குழுவில் உள்ள ஒரு ஆள் வீட்டுக்காரர்களிடம் கூறினார்:

'எல்லோரும் அறிமுகமில்லாத ஆட்கள்.'

அப்போது வாசல் பக்கத்தில் கேட்டது:

'ஒரு ஆள் தவிர...'

'அது யாரு?'

'அந்த சாய்வு நாற்காலியில் சாய்ந்திருக்கும் ஆள்.'

நான் திடீரென்று நிமிர்ந்து உட்கார்ந்தேன்.

'ஆமாம்... அந்த ஆள்தான்.'

'என்னை முன்பே தெரியுமா?'

'தெரியுமா என்றா கேட்கிறீர்கள்? என்னைச் 'சிரிப்புப் பெட்டகம்' என்று அழைத்து கிண்டல் பண்ணியதெல்லாம் மறந்து போச்சா?'

அங்கு குழுமியிருந்தவர்கள் அனைவரும் குலுங்கிக் குலுங்கி சிரித்தபோது, ஒரு முட்டாளைப் போல நான் பேந்தப் பேந்த விழித்துக் கொண்டு அமர்ந்திருந்தேன்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.