Logo

மாட்டுச் சந்தை

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 9364
Mattu Santhai

மாலை நேரத்தில் அறிமுகமில்லாத ஒரு மனிதன் படிகளைக் கடந்து வருவதைப் பார்த்ததும், கமலாட்சி கையில் இருந்த துடைப்பத்தை தரையில் போட்டுவிட்டு, வாசலுக்கு ஓடி வந்து, ஒரு தூணில் சாய்ந்து கொண்டு நின்றாள். சிறிது நேரம் அவள் அவனுடைய பட்டு ஆடைகளையும் செருப்பையும் கையில் இருந்த தோல் பையையும் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள். அவன் அருகில் வந்தபோதுதான் அவள் தன்னுடைய அழுக்கு ஆடைகளைப் பற்றி நினைத்தாள்.

அவள் வெட்கப்பட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டாள். ஆனால், உள்ளே போவதற்கு முன்னால் வந்த மனிதன் கேட்டான்:

“இங்கே யாரும் இல்லையா?''

“இல்லை... மாமா குருவாயூருக்குப் போயிருக்கிறார். நாளைக் குத்தான் வருவார்.''

கமலாட்சி உள்ளே ஓடினாள். அவளுடைய பாட்டி காலின் பெருவிரலை ஊன்றி நின்று கொண்டு உத்திரத்தில் தொங்கிக் கொண்டிருந்த விபூதிப் பாத்திரத்தைத் தடவித் தேடிக் கொண்டிருந்தாள்.

“யாரோ வந்திருக்காங்க...'' கமலாட்சி சொன்னாள். அவளுடைய முகத்தில் தெரிந்த பிரகாசத்தையும் குரலில் உண்டான தடுமாற்றத் தையும் பாட்டி கவனிக்காமல் இல்லை. அவள் கொடியில் இருந்து ஒரு மேல் துண்டை எடுத்து மூடிக்கொண்டு வாசலுக்கு வந்தாள்.

“யார்? தெரியலையே!'' பாட்டி சொன்னாள். வந்திருந்த மனிதன் அழகான தோற்றத்தைக் கொண்டவன் என்பதும், அவனுடைய பொருளாதார நிலை மோசம் அல்ல என்பதும் அவளுக்கு ஒரே பார்வையில் தெரிந்துவிட்டது.

“நான் இங்கே இருக்கும் சந்தைக்கு வந்தேன்- இரண்டு கன்றுக் குட்டிகளை வாங்குவதற்காக...'' அவன் சொன்னான். “பார்த்தேன். ஆனால், திருப்தி உண்டாகவில்லை. இனி வடக்காஞ்சேரிக்கு நாளைக்குக் காலையில்தான் பேருந்து இருக்குன்னு சொன்னாங்க. அதனால் ஏதாவது ஒரு இடத்தில் தங்கலாம்னு நினைச்சேன்... நான் நாயர்தான்.''

“அது புரிந்தது.''

பாட்டி சிரித்தாள். வந்திருந்த மனிதன் புதிதாக உண்டான தைரியத்துடன் தன்னுடைய செருப்புகளைப் படியின்மீது கழற்றி வைத்துவிட்டு, வாசலுக்கு வந்தான்.

“இங்கே தங்குவதைப் பற்றி பிரச்சினை இல்லை. ஆனால், இங்கே இருக்கிற ஆளு குருவாயூருக்குப் போயிருக்கார். என்னோட மூத்த மகன்.'' பாட்டி சொன்னாள்.

“அப்படியென்றால் நான் வேறு ஏதாவது இடத்துக்குப் போறேன்.'' அவன் சொன்னான்.

உள்ளே செல்லும் வாசல் கதவிற்குப் பின்னால் தன்னுடைய முகத்தை மட்டும் வெளியே தெரியுமாறு காட்டிக் கொண்டு நின்றிருந்த கமலாட்சி திடீரென்று வேகமாக நடந்து சமையலறையை நோக்கிச் சென்றாள்.

“வேண்டாம்.'' பாட்டி சொன்னாள்: “எங்கும் போக வேண்டாம். இங்கேயே தங்கலாம். இந்த வாசலில் படுக்கை விரிச்சித் தர்றேன்.''

அவன் ஒரு திண்ணையில் உட்கார்ந்தான்.

“கொஞ்சம் தண்ணீர் குடிக்கணும்.'' அவன் சொன்னான்: “மிகவும் தாகமா இருக்கு.''

அவனுடைய கண்கள் உள்ளே இருந்த இருட்டில் எதையோ தேடிக் கொண்டிருந்தன.

“கமலாட்சி...'' பாட்டி உரத்த குரலில் அழைத்துச் சொன்னாள்: “கமலாட்சி... ஒரு சொம்பு நீர் கொண்டு வா... கொஞ்சம் தேநீர் போடட்டுமா?''

அவன் தலையை ஆட்டினான். அவனுடைய சட்டை வியர்வையில் நனைந்து விட்டிருந்தது. அவன் தன்னுடைய தோல் பையைத் திறந்து ஒரு "மாத்ருபூமி' வார இதழை எடுத்து அதை வைத்து வீச ஆரம்பித்தான்.

“ஊர் எது? வடக்காஞ்சேரியா?'' பாட்டி கேட்டாள்.

“ம்...''

“ராமன் குட்டி இடையில் அவ்வப்போது அங்கே போவது உண்டு. அவன் போகாத ஊர்கள் இல்லை. எப்போதும் பயணம்தான்.''

“யாருக்கு?''

“ராமன்குட்டி... என்னுடைய மூத்த மகன். அவனுக்கு கேஸ் அது இதுன்னு வீட்டில் இருக்க நேரமில்லை.''

“ம்...''

“நான் அவ்வப்போது சொல்லுவேன்... திட்டுவேன் -ராமன் குட்டி, நீ இப்படி நடந்து திரிஞ்சா போதுமா? அப்பாவும் இல்லாத ஒரு பிள்ளை இங்கே இருக்காள்ல! வயசுக்கு வந்து நிற்கிறாள். அவளுக்கு ஒரு ஆள் கிடைக்க வேண்டாமா? இந்தக் காலத்துல யாராவது இங்கே கேட்டு வருவாங்களா? இல்லை... நீ கொஞ்சம் விசாரிச்சுப் பாருன்னு. அவன் அப்போ சொல்லுவான்- அம்மா, பேசாம இருங்க. கமலாட்சிக்கு அதற்கான காலம் வர்றப்போ ஒரு ஆள் இங்கே வந்து கேட்பான் என்று. நான் என்ன பதில் சொல்றது?''


திண்ணையின்மீது உட்கார்ந்திருந்த இளைஞன் ஒரு சிகெரட்டை எடுத்துப் பற்ற வைத்தான்.

“அவளுக்கு யாரும் இல்லை. இருக்கறதே ஒரு மாமாவும் இந்த பாட்டியும் மட்டும்தான். ஆனால், நான் அவளுக்கு என்னவெல்லாம் வேணுமோ, அவை எல்லாவற்றையும் கொடுத்துத்தான் வளர்த்திருக்கேன். அதற்கான பணத்தை அவளுடைய அப்பா இறப்பதற்கு முன்பே வங்கியில் போட்டிருந்தாரு. ஐயாயிரம் ரூபாய்... சர்க்கிள் இன்ஸ்பெக்டராக இருந்தாரு. கொரட்டில் மாதவன் நாயர் என்று சொல்லுவாங்க. வெளுத்து மெலிஞ்ச ஒரு ஆள்.'' பாட்டி தன்னுடைய மேல் துண்டை எடுத்துக் கண்களில் ஒற்றிக் கொண்டாள். மீண்டும் தொடர்ந்து சொன்னாள்:

“அவளை நான் வெளியே விட்டதே இல்லை. இப்போ பார்க்குற பெண்பிள்ளைகளைப் போல எல்லாத்தையும் காட்டிக் கொண்டு கடை வீதிகளிலும் திரை அரங்கிலும் அலைந்து திரிவதற்கு நான் அவளை அனுப்பியதில்லை. அவள் அதனால எங்கேயும் போறது இல்லை. அவள் இங்கே இருக்கிற சமையலறையிலேயே இருப்பாள். சமையல் செய்வது, அதைப் பரிமாறுவது இப்படி... ஒரு பாவம்.''

“பெண்பிள்ளைகளை வீட்டிற்குள் அடைத்து வைப்பது தவறான ஒரு விஷயம். கொஞ்சமாவது உலக அனுபவம்...''

“உலக அனுபவம்? இதுக்கு மேலே அதுவும் இருக்கே! நான் சொல்ல வேண்டாம்னு நினைச்சேன். கமலாட்சி இடையில் அவ்வப் போது அவளுடைய அத்தை வீட்டுல போய் தங்கிட்டு வருவா. அது திருச்சூர்ல இருக்கு. அங்கே தங்கிட்டு திரும்பி வர்றப்போ முகம் முழுக்க வெள்ளைப் பொடியும், கையின் நகத்தில் சாந்தும்... எல்லாம் இருக்கும். அவளுக்கு நாகரீகம் என்றால் பெரிய மோகம்... ஆங்கிலப் புத்தகம் வாசிப்பதிலும் ஆங்கிலத்தில் சுலோகங்கள் சொல்வதிலும் ரொம்பவும் விருப்பம்...''

கமலாட்சி ஒரு கோப குணத்துடன் வாசலுக்கு வந்து தன்னுடைய கையில் இருந்த தண்ணீரையும் தேநீரையும் திண்ணையின்மீது வைத்தாள்.

“எதுக்கு தேநீர்லாம்?'' வந்திருந்த ஆள் சிரித்துக் கொண்டே கேட்டான்.

கமலாட்சி முகத்தைக் குனிந்து கொண்டாள். அவள் மாநிறத்தில் உயரம் குறைவான ஒரு பெண்ணாக இருந்தாள். பார்ப்பதற்கு அழகு என்று கூற முடியாத ஒருத்தி. ஆனால், பாட்டி கூற ஆரம்பித்தாள்: “கமலாட்சி பிறந்தப்போ எல்லாரும் சொன்னாங்க- பாட்டி, குழந்தை உங்க சாயல்... குழந்தைக்கு என்ன நிறம்! தங்கம்தான்! பிறகு... வெயில்ல ஓடித் திரிந்து அந்த நிறமெல்லாம் போயிடுச்சு. ஆனால், பெண்களின் நிறம் பிரசவம் ஆனால்தான் தெரியும்னு சொல்வதென்னவோ உண்மைதான். நான் கறுப்பாத்தான் இருந்தேன். ஒன்றிரண்டு பெற்றெடுத்த பிறகு என்னுடைய நிறம் வெள்ளையா ஆயிடுச்சு...''

“பாட்டிக்கு பைத்தியம் பிடிச்சிருக்கு.'' கமலாட்சி முணுமுணுத்தாள். ஆனால், அவள் உள்ளே செல்லாமல் ஒரு தூணைப் பிடித்துக் கொண்டு அங்கேயே நின்றிருந்தாள். இடையில் அவ்வப்போது அந்த இளைஞன் தன்னைப் பார்க்கிறான் என்பது அவளுக்குப் புரிந்தது.

“ஒரு... அப்பிராணி!'' பாட்டி தொடர்ந்து சொன்னாள்: “ எதுவும் வேண்டாம், எதையும் பார்க்க வேண்டாம்... இப்படியொரு குணம். சமீபத்துல இங்கே ஓட்டு போடுறதுக்காக பெண்கள் எல்லாரும் சேர்ந்து புறப்பட்டுப் போனப்போ நான் கேட்டேன்- என்ன கமலாட்சி, நீயும் ஓட்டு போட வேண்டாமான்னு. அவள் சொன்னாள்- எனக்கு இப்போ ஓட்டும் வேண்டாம்; காங்கிரஸும் வேண்டாம்னு.“அது நல்லது இல்லை.'' இளைஞன் சொன்னான்: “நாட்டு விஷயங்களிலும் பெண்களுக்கு ஈடுபாடு இருக்கணும்.''

கமலாட்சியின் கண்கள் திடீரென்று ஈரமாயின.

“நான் அதை எப்படியோ சொல்லாமல் விட்டுட்டேன். கமலாட்சி ஓட்டு போடுறதுக்குப் போகவில்லை. உண்மைதான். ஆனால், ஓட்டு எண்ணுவது தொடங்கினப்போ கமலாட்சிதான் முன்னால போய் நின்றாள். எல்லா ஓட்டுக்களையும் இங்கே தாங்கன்னு அவள் சொல்கிறாள்- நான் எண்ணித் தர்றேன்னு சொல்கிறாள். அன்னைக்கு ஆரம்பத்திலிருந்து கடைசி வரை இருந்தவள் அவள்தான்.''

அந்த இளைஞன் காரணமே இல்லாமல் விழுந்து விழுந்து சிரித்தான். பாட்டி சிறிது நேரத்திற்கு அமைதியாக இருந்தாள். பிறகு ஒரு கோப குணத்துடன் கமலாட்சியிடம் சொன்னாள்:

“உள்ளே போ. சாப்பாடு தயார் பண்ண வேண்டாமா? இங்கே நின்னு பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தால் போதுமா?''

கமலாட்சி முகத்தை ஒரு மாதிரி வைத்துக் கொண்டு சமையலறையை நோக்கிச் சென்றாள்.


“நாகரீகம், படிப்பு எல்லாம் எனக்குப் பிடிக்கும். ஆனால், பெண் பிள்ளைகள் வாசலில் நின்று கொண்டு நேரத்தைக் கடத்துவது எனக் குப் பிடிக்காத விஷயம்.'' பாட்டி சொன்னாள்: “நான் கேட்பது உண்டு- கமலாட்சி, இப்போத்தானே உனக்கு விளையாட்டும் சிரிப்பும் இருக்கு! கல்யாணமாகி ஒரு வீட்டுக்குப் போய்விட்டால், பிறகு மாமியார் சொல்றதைக் கேட்க வேண்டாமா? அம்மாவும் அப்பாவும் இருப்பார்களா? என்று!''

“ம்...''

“வீட்டில் யாரெல்லாம் இருக்காங்க?''

“எல்லாரும் இருக்காங்க. நாங்க மொத்தம் பதினேழு பேர்...''

“ஆஹா! அதுதான் நல்லது. பாகத்தைப் பிரித்து ஒவ்வொரு வீட்டையும் கட்டி வாழ்றது, ஒண்ணா வாழ்றதுக்கு இணையா ஆகவே ஆகாது.''

பாட்டி தன்னுடைய கால்களை நீட்டி வைத்துக் கொண்டு, அந்த இளைஞனைப் பார்த்து சிரித்தாள். அவன் "மாத்ருபூமி'யைப் பிரித்து வாசிக்கத் தொடங்கினான்.

“முன்கூட்டியே சாப்பிடும் பழக்கம் இருக்கும். அப்படித்தானே?'' பாட்டி கேட்டாள்: “அவள் இப்போ சமைச்சிடுவா. அவளுக்கு சமையல் மிகவும் பழகிப் போன ஒண்ணு.''

“ம்...''

“நான் கொஞ்சம் போயி குளிச்சிட்டு வர்றேன். நாமம் சொல்லணும்ல! வயதாகிவிட்டால்... பிறகு... அந்த மாதிரியான விஷயங்கள்தானே மிகவும் முக்கியமான வேலையாக இருக்கும்?''

அவன் சிரித்தான்.

பாட்டி சமையலறைக்குள் சென்று கமலாட்சியை அருகில் அழைத்தாள்.

“உனக்கு இந்த முண்டுதான் அணியிறதுக்கு கிடைச்சதா? இந்த கரி வேஷம் போட்டுக் கொண்டு வாசலுக்கு வர தோணுச்சுல்ல! போயி முண்டை மாற்று. அந்த சிகப்பு ரவிக்கையை எடுத்து அணிஞ்சிக்கோ. வெளி ஆளுங்க வர்றப்போ கொஞ்சம் பார்க்கிறதுக்கு லட்சணமா இருக்கணும். உனக்கு ஒண்ணுமே தெரியல...''

சாப்பிட்டு முடித்து, தனக்கு விரிக்கப்பட்டிருந்த படுக்கையில் தூங்குவதற்காகப் படுத்தபோது, அவன் உள்ளே செல்லும் பாட்டியிடம் சொன்னான்:

“நான் இப்போதே விடை பெற்றுக் கொள்கிறேன். நாளைக்கு அதிகாலையில் பேருந்தைப் பிடிப்பதற்கு எழுந்து போகணும்.''

“அதெல்லாம் வேண்டாம். பத்து மணிக்குக்கூட ஒரு பேருந்து இருக்கு. அதில் போனா போதும். அதற்குள் ராமன்குட்டியும் வந்திடுவான்!''

அவன் எதுவும் கூறவில்லை. பாட்டிக்குப் பின்னால் விளக்கைப் பிடித்துக் கொண்டு நின்று கொண்டிருந்த கமலாட்சி அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள். அவன் அதைப் பார்க்காததைப் போல காட்டிக் கொண்டான்.

“காலையில் காப்பி, பலகாரம் ஆகியவற்றைச் சாப்பிட்டு முடித்து மெதுவாகப் போகலாம்.'' பாட்டி சொன்னாள்.

“நாளைக்கு சாப்பாட்டு நேரத்துல வீட்டுக்குப் போயிடணும்.'' அவன் சொன்னான்: “மூத்த மகனின் பிறந்த நாள்.''

“யாருடைய மூத்த மகன்?''

“என்னோட...''

பாட்டி தலையை ஆட்டினாள். பிறகு எதையும் பேசுவதற்காக நிற்காமல் அவள் உள்ளே சென்று கதவை அடைத்துத் தாழ்ப்பாளைப் போட்டள். கமலாட்சி விளக்கை தரையில் வைத்துவிட்டு, வேகமாகத் தன்னுடைய படுக்கையறையை நோக்கிச் சென்றாள். அங்கு வெறும் பாயில் படுத்துக் கொண்டு தன்னுடைய வாழ்க்கையில் சந்திக்கும் ஏமாற்றங்களைப் பற்றி சிந்தித்து அவள் சிறிது நேரம் தேம்பித் தேம்பி அழுதாள்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.