Logo

பர்ர்ர்!!!

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 7347
Burrrr

ரு “பர்ர்ர்!!!” சம்பவத்தைப் பற்றித்தான் நான் இப்போது உங்களுக்குச் சொல்லப் போகிறேன். இந்தச் சம்பவத்தில் சிறிது காதலும் இருக்கிறது. காதல் என்றால் என்ன?

ஒரு பெண்ணை நாம் பார்க்கிறோம். அவள் மிகவும் அழகாக இருக்கிறாள். நல்ல உடல் நலத்துடன் இருக்கிறாள். நம்மால் அவளை வெறுமனே பார்த்துக்கொண்டு மட்டும் இருக்க முடியவில்லை. இந்தா பிடித்துக் கொள் என்பது மாதிரி அவள்மீது மையல் கொள்ள ஆரம்பிக்கிறோம். அவளிடம் எந்தக் குறையும் இல்லை. அவள் ஒரு தேவகன்னி. தேவதை. ஹுரி!

அவள்தான் நம் ஐடியல் கேள்!

கற்பனையில் அவளுக்காக ஒரு சிம்மாசனம் உண்டாக்கி, அதன்மேல் அழகு தேவதையென அவளை உட்கார வைக்கிறோம். அதற்குப் பிறகு...? நாம் அவளை ஆராதனை செய்ய ஆரம்பிக்கிறோம்... கைகளால் தொழுதவாறு பயபக்தியுடன் நின்றுகொண்டு.

இந்த அளவுக்கு நான் ஒரு ரசிகனாக மாறியதற்குப் பிறகு, என்ன நடந்தது என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? சொல்கிறேன். தெரிந்துகொள்ளுங்கள்.

அப்போது எனக்கு பதின்மூன்று, பதினான்கு வயது இருக்கும். என் கால்களில் செருப்புகூட கிடையாது. வெளுத்த ஒரு வேஷ்டி கட்டி இருப்பேன். சிவப்பு கோடும் காலரும் உள்ள ஒரு வெள்ளை சட்டை. தலைமுடியை ஒட்ட வெட்டியிருப்பேன். எனக்கு முன்னால் என் தந்தை நடந்து போய்க் கொண்டிருக்கிறார். நான் என்ன ஆடைகள் அணிந்திருக்கிறேனோ, அதே ஆடைகளைத்தான் என் தந்தையும் அணிந்திருக்கிறார். அதற்கு மேல் கூடுதலாக அவரின் தலையில் ஒரு தொப்பியும், கையில் ஒரு குடையும் இருந்தன. நாங்கள் ஒன்றரை, இரண்டு மைல் தூரத்தில் இருக்கும் ஒரு வீட்டைத்தேடி போய்க் கொண்டிருக்கிறோம். அங்கே ஏதோ பணம் சம்பந்தமான விஷயத்திற்காக என் தந்தை போகிறார். அவர் மர வியாபாரம் பண்ணிக் கொண்டிருக்கும் ஒரு மனிதர்.

நாங்கள் நடந்து செல்லும் சாலை பிரதான சாலைதான். இருந்தாலும் அந்தச் சாலையில் தார் போடப்பட்டிருக்கவில்லை. பாதையின் இரு பக்கங்களிலும் மரங்கள் இருந்தன. இடையில் ஆங்காங்கே வீடுகள். சாலையில் வாகனங்களே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆட்கள் எல்லாரும் பொதுவாக நடக்கத்தான் செய்தார்கள்.

“அப்பாவும் பையனும் எங்கே கிளம்பியாச்சு?” சாலையில் நடந்து போய்க் கொண்டிருந்த சிலர் கேட்டார்கள். அவர்கள் கேட்டதற்கு என் தந்தை பதில் சொன்னார். நாங்கள் நடந்து நடந்து பிரதான சாலையை விட்டுக் கீழே இறங்கி ஒரு ஒற்றையடிப் பாதை வழியே நடந்தோம். சிறிது தூரம் சென்ற பிறகு கண்ணைக் கவரும் ஒரு காட்சி. நெல் வயல்கள்... நெல் வயல்கள் கண்கள் முன்னே பரவிக் கிடந்தன. சற்று மேடான இடத்தில் ஒரு தோட்டம். அதற்குப் பக்கத்தில் ஓடு வேய்ந்த ஒரு வீடு.

நாங்கள் நிலத்தில் ஏறி மரங்களுக்கு மத்தியில் நடந்து சென்று வீட்டின் முற்றத்தில் போய் நின்றோம். அங்கு- வெண்மையான ஆடைகள் அணிந்த ஒரு தேவகன்னி!

சிவந்த மலர்கள் பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கும் ஒரு பன்னீர் செண்பக மரத்திற்குப் பக்கத்தில் அவள் நின்றிருந்தாள். முடியை வாரி சுதந்திரமாகத் தொங்கவிட்டிருந்தாள். அதிக நீளமில்லாத வெளுத்த முகம். சற்று உருண்டு திரண்ட- முன்பக்கம் தள்ளிய மார்பகங்கள். அளவான கச்சிதமான உடலமைப்பு.

அழகாகப் புன்னகை சிந்தியவாறு அவள் என்னைப் பார்த்தாள்.

“மூத்த மகன்தானே?” இனிமையான குரலில் அவள் கேட்டாள்.

“ஆமா...” என்றார் என் தந்தை. அப்போது வீட்டுக்குள்ளிருந்து ஒரு கனமான குரல்.

“வாங்க... வாங்க...”

அழைத்தது அவளின் தந்தை. என் தந்தை உள்ளே போனார்.

நானும், அந்தப் பெண்ணும் மட்டும் வெளியே-

பெரிய ஒரு பன்னீர் செண்பக மலரை அவள் பறித்தெடுத்தாள். சிறிது நேரம் கையில் வைத்து அதன் அழகை அனுபவித்த அவள் அந்த மலரை என்னிடம் தந்தாள். அடடா! உலகமே இனிமையான மணத்திலும், அழகிலும் மூழ்கிக் கிடப்பதுபோல் நான் உணர்ந்தேன். நான்

அவளையே வைத்த கண் எடுக்காது பார்த்தவாறு நின்றிருந்தேன்.

அவளுக்கு பத்தொன்பது, இருபது வயது இருக்கும்.

கண்கள் குளிர அவளையே பார்த்தவாறு நான் நின்றிருந்தேன்.

அந்த ஹுரி புன்னகைத்தாள்!

அவள் என் பெயரைக் கேட்டாள். படிக்கும் வகுப்பைக் கேட்டாள்.

வீட்டில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பதை விசாரித்தாள்.

எல்லா விவரத்தையும் விக்கி விக்கி நிறுத்தி நான் சொல்ல முயன்றேன்.

அவள் கேட்டாள்:

“எதுக்கு இவ்வளவு வெட்கப்படுறே?”

கடவுளே! நான் வெட்கப்படுகிறேனா? அவளுடன் எவ்வளவோ பேச வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் என்னால் ஒன்றுமே பேச முடியவில்லை. நாக்கு பேசவே வர மாட்டேன் என்கிறது. தொண்டை ஒரேடியாக வற்றிப் போயிருக்கிறது. மொத்தத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் வியர்வை வழிய, அந்த தேவதை முன் அமைதியாக நான் நின்றிருந்தேன்.

ஈர்ப்பு-காதல்!

நறுமணம் கமழும் தங்கக் கனவு!

நான் அந்தக் கனவில் ஆழமாக மூழ்கிப் போனேன். நினைக்க நினைக்க சுகமாக இருந்தது. உடல் முழுக்க சுகமான ஒரு வலி.

நானும் என் தந்தையும் தேநீர் குடித்தோம். அவளின் தந்தையிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு நாங்கள் திரும்பினோம்.

வாரத்தில் இரண்டு மூன்று முறைகள் நான் அங்கு போவேன். சில நேரங்களில் பணம் வாங்க. சில நேரங்களில் கொடுக்க.

மனதில் உண்டான ஈர்ப்பையும் காதலையும் ஒளித்து வைக்க முடியுமா? இந்த விஷயம் காட்டுத் தீ போல் பரவியது. நான் அவள் மீது தீவிர காதல் கொண்டிருக்கிறேன் என்ற விஷயத்தை அவளின் சகோதரி அறிந்தாள். அவளின் தாய் அறிந்தாள். அவளின் தந்தை அறிந்தார்.

எல்லாருக்குமே அது படு தமாஷான ஒரு சமாச்சாரமாக இருந்தது.

அவளைவிட இரண்டு வயது குறைந்தவள் அவளின் சகோதரி.

என்னை தூரத்தில் பார்த்தால், அவளின் தங்கை அவளிடம் கூறுவாள்:

“ஆள் வருது!”

அடுத்த நிமிடம் அவள் ஒரு மகாராணியைப்போல என்று சொல்வதைவிட, ஒரு சக்கரவர்த்தினியைப்போல மிகவும் கம்பீரமாக உட்கார ஆரம்பிப்பாள். என்னைக் கண்டால், புன்னகைப்பதில்லை. எதுவுமே வாய் திறந்து மரியாதைக்காகக்கூட பேசுவதில்லை. புருவத்தை இலேசாக வளைத்து ஒரு சிறு பூச்சியைப் பார்ப்பதைப் போன்று பார்ப்பாள். ஒரே ஒரு பார்வைதான். ஃப்பூ என்று என்னை அந்தப் பார்வையாலேயே ஊதி விடுவாள்.

அவள் இப்படி இந்த உலகத்தை ஆண்டு கொண்டிருந்தாள்.

நான் அவளுக்கு அருகில் நின்று அவளை ஆராதனை செய்து கொண்டிருந்தேன்.


சில நேரங்களில் அவளின் தங்கை ஜன்னல் வழியே எங்களை எட்டிப் பார்ப்பாள். எனக்கு அவளின் தங்கையிடமோ, தாயிடமோ, தந்தையிடமோ பேசுவதில் எந்தவித தயக்கமும் இல்லை. வார்த்தைகள் சர்வசாதாரணமாக என் வாயிலிருந்து வரும். ஆனால், அவள்... அவளுடன் என்னால் அப்படி சாதாரணமாக உரையாட முடியவில்லை. அவளுடன் பேசுவது என்றாலே என்னுடைய நாக்கு உள்ளே வயிற்றுக்குள் போய் ஒளிந்து கொள்கிறது. அதைப் பார்த்தாவது என்மீது அவளுக்கு இரக்க உண்டாக வேண்டாமா?

அவளின் தங்கை ஒரு பெரிய கிண்ணத்தில் தேநீருடன் வருவாள். பயங்கர சூடாக அது இருக்கும். நான் அதை இரண்டு கைகளாலும் வாங்கி, வியர்வை உடம்பில் அருவியென வழிய, கண்ணீர் சிந்தியவாறு நின்றிருப்பேன்.

“சூடா இருந்துச்சுன்னா, கீழே வைக்க வேண்டியதுதானே!” அவள் அதிகார தொனியில் சொல்வாள். அடுத்த நிமிடம் நான் அந்த தேநீர் கிண்ணத்தைக் கீழே வைப்பேன். தொடர்ந்து துணியின் நுனியால் கண்களைத் துடைப்பேன்.

“வெப்பமா இருந்துச்சுன்னா, வெளியே போய் காத்து வாங்க வேண்டியதுதானே?” ஹுரியின் கட்டளை. நான் எழுந்து சென்று வராந்தாவில் போய் நிற்பேன். காற்று வரும் அறிகுறியே இருக்காது. காற்று எங்கே போய் மறைந்து கொண்டது?

நான் அப்படி நின்று கொண்டிருக்கும் பொழுது, அவளின் தங்கை வந்து தேநீர் ஆறிப்போகும் என்று கனிவுடன் கூறுவாள். எல்லாருக்கும் என்மீது கருணை உண்டு. அவளுக்கு மட்டும்... நான் மீண்டும் சந்நிதியில் போய் நிற்பேன். அவளைப் பார்த்த வாறு தேநீரைக் குடிப்பேன். பார்த்தவாறு என்றால் அவளின் முகத்தைப் பார்த்தவாறு என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். அவளின் முகத்தைப் பார்ப்பதற்கு எனக்கு எங்கே தைரியம் இருக்கிறது? கறுத்த மணிகளைக் கொண்ட பெரிய கண்களைக் கொண்டவள் அவள். அவளின் கழுத்து மிகமிக அழகாக இருக்கும். மொத்தத்தில்- அவளின் எல்லா உறுப்புகளுமே அழகானவைதாம். மூக்குக்குக் கீழே- மேலுதட்டுக்கு சற்று மேலே வியர்வை பொடிப்பொடியாக அரும்பி நின்றிருக்கும். அது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். அழகான- சிவந்த உதடுகள். இவை எல்லாம் நான் அவளை நேரடியாகப் பார்த்து ரசித்தவை அல்ல. பக்கத்தில் நின்றவாறு கடைக் கண்ணால் பார்த்தவாறு என்னையே நான் மறந்து போய்விட்டிருக்கும் நிமிஷங்கள் அவை என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். எது எப்படியோ... என்னைப் பார்த்து நல்லதாக நான்கு வார்த்தைகள் அவள் பேசக் கூடாதா?

அவள் தந்த ரோஜாப் பூவை நான் ஒரு புத்தகத்தில் வைத்திருக்கிறன். அது காய்ந்து கருகிப் போய்விட்டது. இருந்தாலும், அதை ஒரு பொக்கிஷம் என கருதி பாதுகாத்து வைத்திருக்கிறேன். இரவு நேரங்களில் அந்த மலரை நான் எடுத்துப் பார்ப்பேன். அப்போது என்னையும் மீறி அழுவேன்.

இந்தக் காலகட்டத்தில் என் முகத்தில் சிரிப்பையே பார்க்க முடியாது. என்னால் சிரிக்க முடியவில்லை. மனம் முழுக்க கவலை ஆக்கிரமித்துவிட்டிருந்தது. காதலுக்காக உயிரையே விடுவது என்று தீர்மானித்தேன். அது ஒரு நல்ல இலட்சியமாக என் மனதிற்குப் பட்டது. அப்படியே உயிரைத் துறப்பது என்றால், நான் காதலிக்கும் அந்தப் பெண்ணுக்கு முன்புதான் அந்தச் சம்பவம் நடக்க வேண்டும். அவளின் வீட்டுக்குச் சென்று அங்கிருக்கும் மா மரத்திலோ பலாமரத்திலோ தூக்குப் போட்டு தொங்கி... நல்ல முடிவுதான்! காதலுக்காக மரணத்தைத் தானே வலிய போய் தேடிக்கொண்டவர்கள் எல்லாருமே உண்மையிலேயே மகான்கள்தான்!

அப்போதெல்லாம் எனக்கு கவிதை எழுதத் தெரியாது. அதுமட்டும் எனக்கு அப்போது தெரிந்திருந்தால், அவளைப் பற்றி ஒரு மிகப்பெரிய காவியமே நான் தீட்டியிருப்பேன். அதற்குப் பிறகு அந்தக் கனவு தேவதைக்கு முன்னால் தூக்குப் போட்டு மரணத்தைத் தழுவிக் கொள்ள வேண்டியதுதான்.

அவள் அப்போதாவது வாய்விட்டு அழட்டும்!

ஆனால், தூக்கில் தொங்கி சாவதற்கான மன தைரியம்தான் எனக்குக் கிடையாது. எவ்வளவு பெரிய மரமாக இருந்தாலும் கொஞ்சம்கூட பயமில்லாமல் நான் ஏறிவிடுவேன். ஒரு கிளையிலிருந்து இன்னொரு கிளைக்கு மிகவும் சர்வ சாதாரணமாக நான் தாவவும் செய்வேன். ஒரு சிறு கயிறு கையில் இருந்தால் போதும். விஷயம் மிகவும் சுலபமாக முடிந்துவிடும். ஆனால், அதற்கான தைரியம்...? விளைவு- காதல் வயப்பட்டு, வருத்தம் தோய்ந்த முகத்துடன் நான் அலைந்து திரிந்தேன். இப்படியே வாரங்கள், மாதங்கள் ஒன்றன்பின் ஒன்றாகக் கடந்து போய்க் கொண்டிருந்தன.

அப்போது வருகிறது என் வாழ்க்கையில் பிரகாசமான ஒளியை வீசியவாறு அந்தக் காலை நேரம்!

அன்று நான் விழுந்து விழுந்து சிரித்தேன். மேலும் கீழும் குதித்தேன். எந்தவித தயக்கமும் இல்லாமல் அவளின் முகத்தை தைரியமாக நான் பார்த்தேன். நடந்து சம்பவம் என்னவென்றால்-

அதுதான் காலை நேரம் என்று நான் சொன்னேனே! சொல்லப்போனால் காலை நேரம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. நல்ல உஷ்ணம் தகித்துக் கொண்டிருந்த பகல் நேரம். சுமார் பத்து மணி இருக்கும். உடம்பில் வியர்வை வழிய அவளின் அருகில் நான் நாற்காலியில் உட்கார்ந்திருந்தேன். அவள் மேஜை மேல் கைகளை ஊன்றியவாறு, தலையை உள்ளங் கையால் தாங்கியவாறு மிகவும் களைப்படைந்தது போல் உட்கார்ந்திருந்தாள்.

நானும் பிரபஞ்சமும் அசையாமல் இருந்தோம். அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதைப் பற்றி என்னால் ஒரு முடிவுக்குமே வர முடியவில்லை. அப்படி என்னதான் நடக்கும்? ஒரு இளம் காற்று அவளின் மேனியை இலேசாக வருடிச் சென்றது. அவள் தன் தலைமுடியை சுதந்திரமாக காற்றில் பறக்கும்படி விட்டிருந்தாள். அது ஒரு மார்பகத்தை இலேசாக மறைத்தவாறு எங்கோ பறந்து கொண்டிருந்தது. ஹுரியின் வலது பக்கத்தில் நெற்றிக்கு மேலே கூந்தலில் ஒரு ரோஜாப்பூ இருந்து அழகு காட்டிக் கொண்டிருந்தது. அந்த மலர் எப்படி அங்கே நிற்கிறது?

நானும் பிரபஞ்சமும் கொஞ்சமும் அசையாமல் அந்த மலரைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தபோது, திடீரென்று ஒரு இடி இடிப்பதைப்போல-

புதிதாக வாங்கிய துணியை வேண்டுமென்றே இழுத்துக் கிழிப்பதைப்போல-

அழகு தேவதையிடமிருந்து,

“பர்ர்ர்!!!” என்றொரு சத்தம்... தொடர்ந்து ஒரு நாற்றம்.

“அய்யோ!” நான் மூக்கைப் பொத்திக் கொண்டு வேகமாக எழுந்தேன். இதற்கு முன்பு சிரித்திராத அளவுக்கு நான் சிரித்தேன். சிரித்துச் சிரித்து என் கண்களில் நீர் வந்துவிட்டது. கண்ணீர் வழிய நான் ஓடினேன். அவளின் தங்கையைப் பார்த்து சொன்னேன். அவளின் தாயைப் பார்த்துச் சொன்னேன். எல்லாரிடமும் அவள் என்ன செய்தாள் என்பதைச் சொன்னேன். உலகமே கேட்கிற மாதிரி

“புஹோயி” என்று உரத்த குரலில் எனக்குக் கூவ வேண்டும்போல் இருந்தது. அவளின் தாய் சென்றாள். அவளின் சகோதரி சென்றாள். நானும் சென்றேன்.


என் தேவ கன்னி பிணம் மாதிரி அசைவே இல்லாமல் உட்கார்ந்திருந்தாள். அவளின் முகம் பயங்கரமாக வெளிறிப் போயிருக்கிறது.

அவளின் தாய் கேட்டாள்:

“அடியே... இந்தச் சின்ன பையன் முன்னாடி வச்சு... உனக்கு வெட்கமா இல்லை?”

அவளின் தங்கை இனிய குரலில் சொன்னாள்:

“அய்யோ கஷ்டம்! இந்தப் பையன் முகத்துல முழுவதும் பூசி விட்டுட்டியே!” அவளின் தங்கை என்னிடம் கிளியின் மொழியில் கேட்டாள்:

“குளிக்கிறியா?”

நான் உரத்த குரலில், மிகவும் உரத்த குரலில் சொன்னேன்:

“குளிக்கணும்... கட்டாயம் நான் குளிக்கணும்!”

உள்ளே இருந்தவாறு தேவ கன்னியின் தந்தை அழைத்துக் கேட்டார்.

“அங்கே என்ன ஆர்ப்பாட்டம்?”

அவளின் தாய் உள்ளே ஓடினாள். எல்லா விஷயத்தையும் விவரமாகச் சொல்லி இருப்பாள். உள்ளே இருந்து வீட்டின் கூரையே பிய்ந்து போகிற மாதிரி அவளின் தந்தை உரத்த குரலில் சிரித்தார்:

“ஹ ஹஹ் ஹஹ்ஹா!”

அப்போதும் தேவதை அசையவில்லை. உட்கார்ந்திருந்த இடத்திலேயே அசையாமல் அமர்ந்திருந்தாள். ஆனால், ஒரே ஒரு வித்தியாசம்... சிம்மாசனத்தில் இருந்து கீழே விழுந்து விட்டாள் என்பது மட்டும் உண்மை. அவளும் ஒரு சாதாரண பெண். அவ்வளவுதான். நாட்கள் வேகமாகக் கடந்தன. இப்போது அவள் என்னைப் பார்க்கும்போது புன்னகைப்பாள். சிரித்து விளையாட்டாகப் பேசவும் செய்வாள். ஒரு நாள் அவள் என்னிடம் மிகவும் வருத்தம் தோய்ந்த குரலில் சொன்னாள்:

“அன்னைக்கு ஏன் நீ எல்லார்கிட்டயும் போய் அப்படி என்னைப் பற்றி சத்தம் போட்டுச் சொன்னே?”

அவள் கேட்டதற்கு உடனே பதில் சொல்லாமல் நான் பயங்கர தைரியத்துடன் அவளின் முகத்தை என் கண்களால் உற்றுப் பார்த்தவாறு மனதிற்குள் இலேசாக சிரித்தேன். சம்பவம் என்னவென்றால் காதலன், பக்தன் என்ற பலூன் வெடித்து “புஸ்க்” என்றாகிவிட்டது. அவளிடம் எனக்கு காதலும் இல்லை. பக்தியும் இல்லை... ஈர்ப்பும் இல்லை. உலகத்தில் உள்ள எல்லா உயிர்களிடமும் என்ன காதலைக் கொண்டிருக்கிறேனோ, அதே தான் அவளிடமும். உண்மையிலேயே நான் தைரியசாலியாகி விட்டேன்.

அவள் என்னை கெஞ்சி கேட்டுக் கொண்டாள்.

“இனிமேல் இதை யார்கிட்டயும் சொல்லாதே தெரியுமா?”

சரி என்றேன். ஆனால் நான் எல்லாரிடமும் சொன்னேன். நான் போய் என்னுடைய அம்மா என்ற உம்மாவிடம் சொன்னேன்.

உம்மா சொன்னாள்:

“சே... பேசாமப் போடா.. இத யார்கிட்டயும் சொல்லாதே. உனக்குத்தானே அவமானம்?”

அப்போதும் எனக்கு அவள் சொன்னதன் அர்த்தம் புரியவில்லை. நான் சொன்னேன்:

“உம்மா... என்னைப் போலவா அவள்?”

உம்மா சொன்னாள்:

“உன்னைப்போலத்தான் எல்லா ஆம்பளைகளும். அவளைப் போலத்தான் எல்லாம் பொம்பளைகளும். நீ ஓடி ஓடி இதை யார்கிட்டயும் சொல்லாதே. இது எல்லார்கிட்டயும் நடக்குறதுதான்...”

அதற்குப் பிறகு நான் இதுவரை அதை யாரிடமும் கூறவில்லை. வருடங்கள் எத்தனையோ கடந்தோடிவிட்டன. எனக்கு எல்லாமே மறந்துபோய்விட்டது. வாழ்க்கையில் நடந்த சில குறிப்பிடத்தக்க சம்பவங்கள் அவ்வப்போது ஞாபகத்தில் வருவதுண்டு. இதை இப்போது நினைத்துப் பார்த்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது.

நான்தான் சொன்னேனே- வருடங்கள் எத்தனையோ கடந்தோடிவிட்டன. எவ்வளவு மாற்றங்கள் உலகில் நடந்திருக்கின்றன! அவள் தன் கணவனுடன் இப்போது மிகப் பெரிய அரண்மனை போன்ற வீட்டில் சகல வசதிகளுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறாள். கார் இருக்கிறது. பிள்ளைகள், பிள்ளைகளின் பிள்ளைகள் எல்லாருமே இருக்கிறார்கள்.

கொஞ்சமும் எதிர்பாராமல் நான் அங்கு போக வேண்டி வந்தது. நாங்கள் பல விஷயங்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தோம். அவளின் தந்தையின் மரணம், என் தந்தையின் மரணம், அவளின் சகோதரியின் திருமணம், அவளின் திருமணம், என் திருமணம், என் மனைவியின் பெயர், மகளின் பெயர், மகனின் பெயர்...

நான் சொன்னேன்:

“மனைவியோட பேரு ஃபாபி. மகளோட பேரு ஷாஹினா. மகனோட பேரு அனீஸ் பஷீர். எல்லாரும் என்னை டாட்டான்னு கூப்பிடுவாங்க!”

“டாட்டா...?”

“ஆமா...”

ஏன் அவர்கள் “டாட்டா” என்று அழைக்கிறார்கள் என்ற ரகசியத்தை அவளிடம் சொன்னேன். நாங்கள் விழுந்து விழுந்து சிரித்தோம். சிரித்தவாறே அவள் சொன்னாள்:

“ஒரு விஷயம் தெரியுமா? முதல்ல எனக்கு ஆள் யார்னே தெரியல. தலையில வழுக்கை வந்தபிறகு, ஆளே அடையாளம் தெரியல. ஆள் எவ்வளவு மாறிப் போயாச்சு! அப்போ பார்க்குறப்போ ஒரு அழகான பையன்!”

நான் சொன்னேன்:

“எல்லாருமே மாறிப் போயிடுறாங்க. சிலர் தேவகன்னியா இருந்தாங்க!”

அவள் கேட்டாள்:

“ஞாபகத்துல இருக்கா? சின்னப் பையனா இருக்குறப்போ- எங்க வீட்டுக்கு வந்த நாட்கள்...”

நான் சொன்னேன்:

“ஞாபகத்துல இருக்கு...”

அவள் சொன்னாள்:

“பொய்! என்ன இருந்தாலும் ஆம்பளைகளாச்சே! எல்லாம் மறந்து போயிருக்கும்!”

சரிதான். நான் நினைத்துப் பார்த்தேன். சிரித்தேன். நினைத்துப் பார்த்து அவளும் சிரித்தாள்.

நினைத்து நினைத்து நாங்கள் இரண்டு பேரும் விழுந்து விழுந்து சிரித்தோம். குலுங்க குலுங்க சிரித்தவாறு நான் சொன்னேன்:

“பர்ர்ர்!!!”

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.