Logo

அந்த பூ மொட்டு மலரவில்லை

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 5177
andha poo mottu malaravillai

அந்த பூ மொட்டு மலரவில்லை

பாறப்புரத்து

தமிழில் : சுரா

ச்சுலியின் முதல் நினைவு நாளன்றுதான் என்னுடைய முற்றத்திலிருந்த சிறிய பூந்தோட்டத்தில் 'டேலியா' பூத்தது. வெள்ளையும் சிவப்பும் கலந்த இதழ்களைக் கொண்ட ஒரே ஒரு பூ மட்டும்! லில்லியும் ஸினியாவும் பாப்பியும் மலர் மொட்டுகளை நீட்டிக் கொண்டிருந்தன. அவ்வளவுதான்...

வசந்த லட்சுமிக்கு ஆடை அணிவிக்க இயற்கை வெண் மேகங்களால் ஆன பட்டுப் புடவையை நெய்து முடிக்கவில்லை. எனினும், அவளுடைய இனிய நினைவுக்கு முன்னால் எளிமையான ஒரு பரிசை சமர்ப்பணம் செய்ய வேண்டும் என்பதைப் போல 'டேலியா'வில் மட்டும் ஒரு பூ மலர்ந்திருக்கிறது! பச்சுலிதான் அந்த டேலியாவை நட்டு வளர்த்ததே. ஒரு சாயங்கால வேளையில் முளைக்க ஆரம்பித்திருந்த அந்தச் செடியின் கிழங்கை அவள் கொண்டு வந்து தந்ததை நேற்று நடந்ததைப் போல நினைத்துப் பார்க்கிறேன். மூச்சு வாங்க அவள் கதவைத் தட்டி அழைத்தாள்:

'பாபு ஷாப்... !'

நான் கதவைத் திறந்தபோது, பெரிய ஒரு காரியத்தைச் செய்து விட்ட பெருமையுடன் சொன்னாள்:

'ஏ லே' (இதை வாங்கிகோங்க)

'என்ன?'

'டேலியா.'

'எங்கே கிடைச்சது?'

'பிதாஜி நட்டிருந்ததை, நான் யாருக்கும் தெரியாமல் தோண்டி எடுத்துக் கொண்டு வந்துட்டேன்.'

'திருடிட்டே! பச்சுலி, நீ திருடி... அப்படித்தானே?'

'சரிதான்... பிறகு... பாபு ஷாப்... நீங்க சொல்லித்தானே?'

அவளுக்கு அழுகை வந்தது. நான் சொன்னேன்:

'சரி...பரவாயில்லை... இனிமேல் திருடக் கூடாது. தெரியுதா?'

பூந்தோட்டத்தின் மத்தியில் நான் தோண்டி உண்டாக்கிய குழியில் அவளே அந்தச் செடியை நட்டாள். பிறகு வாளியில் நீர் கொண்டு வந்து அதற்கு ஊற்றினாள்.

அவள் கூறியது பொய்யல்ல. நான் சொல்லித்தான் அவள் திருடினாள். இந்த இமயமலைப் பகுதிக்கு நான் வந்து, இரண்டு மாதங்களே ஆகியிருக்கின்றன. வந்தபோது மழைக் காலமாக இருந்தது. இரவு, பகல் வேறுபாடு இல்லாமல் வானம் இருண்டு மூடி கிடந்தது. பத்து அடி தூரத்திலிருக்கும் ஆளைப் பார்க்க முடியாத அளவிற்கு பனி மூடி கிடந்தது. மழை ஆரம்பித்தால், பல நாட்கள் சிறிது கூட நிற்காமல் பெய்து கொண்டே இருக்கும். இப்படியே இரண்டு மாத காலம் கடந்த பிறகு, மழை மேகங்கள் இல்லாமல் வானம் தெளிவானது. அடர்த்தியான நீல நிறத்திலிருந்த வானப் பரப்பிற்குக் கீழே வெண் மேகங்கள் செம்மறியாட்டுக் கூட்டத்தைப் போல மேய்ந்து நகர்ந்து போய்க் கொண்டிருந்தன. தேவதாரும், பைனும் தளிர்களை நீட்டின. காட்டுச் செடிகள் கூட பூக்களை மலரச் செய்து நின்று கொண்டிருந்தன. அதை பார்த்துத்தான் நான் சிறிய பூந்தோட்டத்திற்கு நிலத்தைத் தயார் செய்தேன். அதற்கு முன்பே பச்சுலி எனக்கு அறிமுகமாகி விட்டிருந்தாள். ஸினியாவும், பாப்பியும், ரோஜாவும் தோட்டத்தில் நடப்பட்டிருப்பதைப் பார்த்து அவள் கேட்டாள்:

'பாபு ஷாப்... உங்களுக்கு 'டேலியா' கிடைக்கலையா?'

'இல்லையே, மகளே!'

'எங்களுடைய வீட்டில் பிதாஜி நட்டு வைத்திருக்கிறார்.'

'உங்களுடைய வீட்டில் இருந்து, எனக்கு என்னடீ பிரயோஜனம்?'

'நான் கொண்டு வந்து தர்றேன்.'

'சரி... பார்ப்போம்.'

ஆனால், அவள் அதைக் கொண்டு வந்து தந்தபோது, 'திருடி' என்று அழைத்து நான் அவளை அழ வைக்க முயற்சித்தேன். அதற்கு முன்பும் நான் அவளை அழ வைத்திருக்கிறேன். அலுவலகத்தில் 'சவுக்கிதா'ராக பணியாற்றும் தேவ்சிங்கின் இளைய மகள்தான் பச்சுலி. அலுவலக வளாகத்தில் தோட்டக்காரனின் பணியைப் பார்த்துக் கொண்டிருந்ததும் அவன்தான். தேவ்சிங்கிடம் தினமும் சாயங்காலம் இரண்டு ஆழாக்கு பால் வீதம் நான் வாங்கிக் கொண்டிருந்தேன். அவனிடம் இரண்டு கறவை எருமை மாடுகள் இருந்தன. அலுவலகம் முடிந்து வந்து, ஆடைகளை மாற்றி, கடைவீதி வரை நடந்து போய் திரும்பி வரும் நேரத்தில் பச்சுலி, சொம்பில் பால் கொண்டு வந்து மேஜையின் மீது வைத்திருப்பாள். கொஞ்ச நாட்களாக அவளைப் பார்க்க முடியவில்லை. நான் வெளியே போகும் நேரம் பார்த்து, வருவது... தாமதமாக அலுவலகத்திலிருந்து வந்த ஒரு நாள் பார்த்தேன். ஓசை உண்டாக்காமல் அவள் மெதுவாக நுழைந்து வந்தபோது, பார்த்தது என்னுடைய முகத்தைத்தான். வேகமாக சொம்பை மேஜையின் மீது வைத்து விட்டு, ஓடிச் செல்வதற்கு முயற்சித்தபோது, நான் அழைத்தேன்.

'இங்கே வா.'

அவள் அதிர்ச்சியடைந்து திரும்பி வந்தாள். ஓடிச் சென்றால் பாய்ந்து பிடிக்கக் கூடிய ஒரு மோசமான மிருகத்திற்கு முன்னால் நின்று கொண்டிருக்கிறோம் என்பதைப் போல, பயந்து பார்க்கும் கண்களுடன் மெதுவான குரலில் கேட்டாள்:

'க்யாசு பாபு ஷாப்...?' (என்ன பாபு ஸாப்?)

'பெயர் என்ன?'

'பச்சுலி....'

'அப்படின்னா என்ன அர்த்தம்?'

'மாலும் நெ பாபுஷாப்...' (தெரியாது பாபு ஸாப்....)

'என்ன வயசு?'

'மாலும் நெ....'

'குளித்து எத்தனை நாளாச்சு?'

'என்ன?'

'கையை நீட்டு...'

அவள் கூறியபடி செய்தாள்.

'பாரு... உள்ளங்கையில் எவ்வளவு அழுக்கு இருக்கு! முகத்தில், கழுத்தில்... எல்லா இடங்கள்லயும் அழுக்கு. இந்த அழுக்கு கையால்தானே நீ எனக்கு பால் கொண்டு வந்தாய்?'

'....'

'அப்படின்னா, இந்த பாலும் அழுக்காத்தானே இருக்கும்?'

அதை மறுப்பதைப் போல தலையை ஆட்டியவாறு, அவள் மெதுவான குரலில் சொன்னாள்:

'நெ பாபுஷாப்....'

'சரி... அழ வேண்டாம். நாளைக்கு இந்த பாவாடையையும் உடுப்பையும் சுத்தம் செய்து, குளித்து, அழகான பொண்ணா வரணும். என்ன?'

அவள் பதில் கூறவில்லை.

'ம்... சரி... போ... அழக் கூடாது. தெரியுதா?'

மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்து அவள் திரும்பி நடந்து சென்றாள். வெளியே சென்றவுடன், தேம்பித் தேம்பி அழுவது காதில் விழுந்தது...

குளித்து, கண்ணில் மை இட்டு, தலை முடியில் பூ சூடி அவள் மறுநாள் வந்தாள். சலவை செய்த ஒரு பாவாடையையும், உடுப்பையும் அணிந்திருந்தாள்.

எனினும், என்னைப் பார்த்ததும் பயத்துடன்தான் பார்த்தாள். நான் அழைத்தேன்.

'பச்சுலி, பக்கத்துல வா.'

பயந்து... பயந்து அவள் வந்தாள். நான் சொன்னேன்:

'பஞ்சுலியா இது? ஓ... பூ கூட வச்சிருக்கியே!'

மெல்லிய ஒரு புன்னகை அவளுடைய அதரங்களில் அரும்பி மறைந்தது. பாபு ஷாப் இனி திட்டுவேனா?

'என்ன பூ, பச்சுலி?'

'குலாப்' (ரோஜா)

'வாசனை இருக்குதா?'

அவள் கூந்தலில் சொருகியிருந்த பூவை எடுத்து, என்னை நோக்கி நீட்டினாள்.

'நல்ல வாசனை இருக்கே!'

'உடுப்பும், பாவாடையும் புதியதா?'


'கடந்த வசந்த பஞ்சமிக்கு 'படா பய்யா' வாங்கிக் கொடுத்தது.'

'குளிக்க வைத்து, கண்ணுக்கு மை இட்டது யாரு?'

'தீதி...' (அக்கா).

'அப்படின்னா, இனிமேல் தினமும் இப்படி சுத்தமா வருவாயா?'

அவள் கூந்தலில் சொருகியிருந்த பூவை எடுத்து என்னை நோக்கி நீட்டினாள்.

'ம்...'

'குளித்து, கண்ணுக்கு மை இட்டு, முகத்தில் பவுடர் பூசணும். பவுடர் இருக்குதா?'

'இல்ல...'

கொஞ்சம் பவுடர் மீதமிருந்த ஒரு டப்பாவை நான் அவளுக்குக் கொடுத்தேன். ஆச்சரியத்துடன் அவள் என்னையே கண்களை அகல திறந்து வைத்துக் கொண்டு பார்த்தாள். பாபு ஷாப் இந்த அளவிற்கு நல்ல ஆளா?

நானும் பச்சுலியும் இப்படித்தான் அறிமுகமானோம். அதிக பட்சம் போனால், அவளுக்கு ஒன்பது வயது இருக்கும். நன்கு வெளுத்த, எடை குறைவான உடலமைப்பு. சிறிய முகத்தில் சந்தோஷமும் கவலையும் நிமிடத்திற்குள் தோன்றிக் கொண்டும் மறைந்து கொண்டும் இருந்தன. பாதம் வரை நீண்டிருக்கும் முரட்டுத்தனமான பாவாடையையும், ஆண் பிள்ளைகள் அணியக் கூடிய சட்டையையும் அவள் அணிந்திருந்தாள். அறிமுகமான பிறகு அவள் பாலுடன் வந்தால், என்னைப் பார்க்காமல் திரும்பிப் போவதில்லை. எப்போதும் ஏதாவது ஒரு புதிய செய்தி கூறுவதற்கு இருக்கும். வாசனை நிறைந்த ஒரு ரோஜா மலரை எனக்கு பரிசாக தருவதற்காக கொண்டு வருவாள். பச்சுலி பள்ளிக் கூடத்திற்குச் செல்லவில்லை. காலையிலும் மாலையிலும் பால் வினியோகிக்கக் கூடிய பணி பச்சுலிக்கு இருந்ததால், பள்ளிக் கூடத்திற்குச் செல்ல நேரமில்லாமல் போய் விட்டது. வேறு குறிப்பிட்டுக் கூறக் கூடிய அளவிற்கு வேலை எதுவுமில்லாத இரண்டு 'சோட்டா பய்யா'க்கள் பள்ளிக் கூடத்திற்குச் செல்கிறார்கள். எனினும், நைனிதேவியைக் கொல்வதற்கு எருமையின் வடிவத்தில் வந்த அசுரனின் கதை அவளுக்கு நன்றாக தெரியும். அதை அவள் என்னிடம் கூறியிருக்கிறாள். கதையின் இறுதியில் தேவியின் திவ்ய சக்தியால் அசுரனைக் கொல்லும் பகுதியை விளக்கிக் கூறி விட்டு அவள் சொன்னாள்:

'பாபு ஷாப்... நீங்க நல்லா கவனிக்கணும். தேவி கோபித்தால்,,, அதற்குப் பிறகு தப்பிக்கவே முடியாது.'

நைனி தேவி இருக்கக் கூடிய இடம் - மலைகளுக்கு நடுவில் இருக்கும் நீர் நிலை. பாதாளம் வரை அதற்கு ஆழம் இருக்கும் என்று பச்சுலி என்னிடம் கூறினாள். ஒவ்வொரு வருடமும் நான்கோ ஐந்தோ ஆட்கள் தேவிக்கு பலியாகிக் கொண்டே இருப்பார்கள். படகு மூழ்கியோ, கால் வழுக்கியோ நீர் நிலைக்குள் விழுந்தவர்கள் யாரும் தப்பித்ததில்லை...

குமயோன் மலைச் சரிவுகள் என்று அழைக்கப்படும் இந்த நிலப் பகுதியில் வசிக்கக் கூடிய மனிதர்கள் எல்லோரும் நைனிதேவியின் மக்கள். அவர்களுக்கு எல்லா வரங்களையும், ஆசீர்வாதங்களையும் தந்து கொண்டிருப்பது தேவிதான். இளவேனிற்காலத்தின் ஆரம்பத்தில், தேவின் ஞாபகத்திற்காக, அவர்கள் ஆர்ப்பாட்டமாக திருவிழாவைக் கொண்டாடுகிறார்கள்...

பெண்கள் புதிதாக ஆடைகள் அணிந்து கூட்டமாக நடனம் ஆடுவது வசந்த பஞ்சமியன்றுதான். எல்லா செல்வங்களைக் கொண்டும் ஊருக்கு நல்லது செய்த நைனிதேவியைப் போற்றிப் புகழக் கூடிய பாடல்களைப் பாடி, நடனம் ஆடியவாறு அவர்கள் வசந்த காலத்தை வரவேற்பார்கள். சிறப்பு உணவு பதார்த்தங்கள் அடங்கிய விருந்துகளை ஏற்பாடு செய்வார்கள். அன்று தயார் செய்த பலகாரங்களில் ஒரு பகுதியை பச்சுலி எனக்கு கொண்டு வந்து தந்தாள். புதிய மஞ்சள் நிற பாவாடையையும் சட்டையையும் அவள் அணிந்திருந்தாள். 'சிலியாநவ்லி மந்திர'த்திற்கு முன்னால் நடனத்தைக் காண்பதற்காக அவள் என்னை அழைக்கவும் செய்தாள். நான் கேட்டேன்:

'பச்சுலி, உனக்கு நடனம் ஆடத் தெரியுமா?'

'அது எல்லோருக்கும் தெரியுமே!'

'பாட்டு இருக்குமா?'

'ம்....'

'ஒரு பாட்டைக் கேட்கட்டுமா?'

'தனியா பாடுறது இல்ல. வட்டமாக கைகளைக் கோர்த்து நின்று கொண்டுதான்.'

'பச்சுலி, நீ தனியா ஒரு பாட்டு பாடுறதைக் கேட்கிறேனே!'

சிறிது நேரம் அவள் வெட்கப்பட்டுக் கொண்டு நின்றிருந்தாள். வற்புறுத்தியவுடன், மெதுவான குரலில் பாடினாள்:

'பேட் பாகோ பாராமாஷோ

காஃபில் பாகோ சைத்தமேரீச்சைல

ஆல்மணாகீ மந்தாதேவி

ஃபுல்ச்சடோ பாதி மேரீச்சவ்லா'

'சபாஷ்! நல்லா இருக்குதே!'

அவள் வெட்கத்துடன் சிரித்தாள். கிளம்ப தயாரானபோது, நான் கேட்டேன்:

'பச்சுலி, இன்னைக்கு உனக்கு என்ன பரிசு வேணும்?'

'எதுவுமே வேண்டாம், பாபு ஷாப்.'

'விருப்பமானதைக் கேளு...'

'.....'

'பச்சுலீ...'

'ஜீ பாபு ஷாப்.'

'என்ன வேணும்?'

'பாபு ஷாப், உங்கக்கிட்ட எதையும் கேட்கக் கூடாதுன்னு தீதி சொல்லியிருக்காங்க.'

'ஓ... தீதிக்கு என் மேல கோபமா?'

'கோபமில்ல...'

'பிறகு?'

'பாபு ஷாப், 'தேஸி'லிருந்து (மலைப் பகுதிக்குக் கீழே இருக்கும் ஹிந்துஸ்தான் சமவெளியையும், இநதியாவின் மற்ற பகுதிகளையும் 'தேஸ்' (தேசம்) என்றுதான் குமயோனில் இருப்பவர்கள் குறிப்பிடுவார்கள். மலைப் பகுதியை 'பஹாட்' என்று கூறுவார்கள்.) வந்திருக்கும் உங்களிடமிருந்து ஏதாவது வாங்குவது குறைச்சலான விஷயம் என்று தீதி சொன்னாங்க.'

'ஓ!'

ஒரு வெள்ளி ரூபாயை எடுத்து நான் அவளிடம் கொடுத்து விட்டு சொன்னேன்:

'இதை அந்தஸ்து பார்க்கக் கூடிய நீதியிடம் காட்ட வேண்டாம். தெரியுதா?'

படிப்படியாக அவள் அதிக ஓய்வு நேரத்தை உண்டாக்கி, என்னைத் தேடி வந்து பேசிக் கொண்டிருப்பது என்பது வழக்கமான ஒரு விஷயமாகி விட்டது. காலையில் கடை வீதியில் இருக்கக் கூடிய ஆறு பலகாரக் கடைகளுக்கு அவள் பால் கொடுக்க வேண்டும். பிறகு, தீதியுடன் சேர்ந்து 'காகஸ்' நதியின் கரையில் புல் அறுப்பதற்காகச் செல்வாள். சாயங்காலம் நான்கு அலுவலகர்களின் வீடுகளுக்கு பால் கொண்டு போய் கொடுக்க வேண்டும். அது முடிந்த பிறகுதான் என்னைத் தேடி வருவாள். அவ்வளவு வேலைகளையும் செய்வதில் அவளுக்கு புகார் இல்லை. அவற்றைச் செய்வது என்பது தன்னுடைய கடமை என்று அவள் நினைத்துக் கொள்வாள். இந்த மலைப் பகுதியிலுள்ள ஆட்களைப் பொறுத்த வரையில், ஒரு தனித்துவம் அது. தங்களால் செய்யக் கூடியவற்றையும் தாண்டி, வேலை செய்யாத ஒரு குமயோனைச் சேர்ந்த ஆளைப் பார்ப்பதே அரிதான விஷயம். கஷ்டப்பட்டு உழைக்காமல் அவர்களால் வாழ முடியாது. மலைச் சரிவுகளை வெட்டி, சீர் செய்து, பாத்தி அமைத்து அவர்கள் விவசாயம் செய்தார்கள். ஒவ்வொரு வருடமும் பெய்ய கூடிய அதிகமான மழையில் விவசாய நிலங்கள் முழுவதும் அரித்துக் கொண்டு போய் விடுவதும் உண்டு. சிறிதும் அணையாத, நல்லவற்றை எதிர்பார்க்கக் கூடிய அந்த கடின உழைப்பாளிகள் மலையின் வயிற்றில் மீண்டும் விவசாய நிலங்களை உண்டாக்குவார்கள்.


கோதுமையையும் பஜராவையும் விதைப்பதற்காக, நிலத்தை உழும் வேலைதான் ஆண்களுக்கு. பிறகு, அறுவடை செய்வது வரை எல்லா வேலைகளையும் செய்வது பெண்கள்தாம். பெண்கள் வயலுக்கு வேலைக்குச் செல்லும்போது, ஆண்கள் உணவு சமையல் செய்வது, குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது ஆகியவற்றில் ஈடுபடுவார்கள். விவசாய நிலத்தில் வேலை இல்லாதபோது, அடிவாரங்களிலிருந்து புல் அறுத்துக் கொண்டு வரும் வேலை கூட பெண்களுக்குத்தான்...

மற்ற வேலைகளுடன், என்னுடைய சிறிய பூந்தோட்டத்திற்கு நீர் ஊற்றி, வளர்க்கக் கூடிய வேலையும் பச்சுலிக்கு இருந்தது. சாயங்காலம் பாலுடன் வந்தால், வாளியில் நீர் நிறைத்துக் கொண்டு வந்து செடிகளுக்கு ஊற்றி விட்டுத்தான் அவள் திரும்பியே செல்வாள். இதற்கிடையில் அன்றைய சிறப்பு செய்திகள் எல்லாவற்றையும் கூறுவாள். ஒருநாள் எப்போதையும் விட முன் கூட்டியே அவள் ஓடி வந்து சந்தோஷத்துடன் சொன்னாள்:

'பாபு ஷாப், உங்களுக்கு தெரியுமா?'

'என்ன?'

'தீதியின் திருமணம் முடிவு செய்யப்பட்டிருக்கு.'

'ஓ...'

'அடுத்த மாதம்...'

'திருமணத்திற்கு நான் வர வேண்டாமா?'

'உங்களை அழைக்கணும்னு பிதாஜி சொன்னாரு.'

'அப்படின்னா, நான் வருவேன்.'

'பிறகு... கல்யாணத்தைப் பற்றி எதுவும் உங்கக்கிட்ட சொல்லக் கூடாதுன்னு நீதி என்கிட்ட சொன்னாங்க.'

'எதற்கு?'

'தீதிக்கு அதிக வெட்கம்.'

'ஓ...'

'உங்களை தீதி பார்த்திருக்காங்க.'

'எங்கே வச்சு?'

'பாபு ஷாப், நீங்க நடை போறப்போ தீதி ஒளிந்து கொண்டு பார்ப்பாங்க.'

'ம்...'

'தொராஹட்டிதான் தீதியைக் கல்யாணம் பண்ணி அழைத்துக் கொண்டு போகப் போறாரு. நிறைய நிலமும், கால்நடைகளும் இருக்கு. தீதி நல்லா... சந்தோஷமா வாழ்வாங்கன்னு மாதாஜி சொன்னாங்க. தீதி வெட்கப்பட்டு... வெட்கப்பட்டு குனிஞ்சுக்கிட்டே உட்கார்ந்திருந்தாங்க. பக்கத்து வீட்டுல இருக்குற கிம்முலி தீதி கிண்டல் பண்றதுதான் காரணம். திருமணம் முடிந்த  பிறகு, அந்த பையனோட ஆளுங்க நீதியை பல்லக்கில் உட்கார வைத்து கொண்டு போவாங்க. அதற்குப் பிறகு புல் அறுப்பதற்கு நான் தனியாகத்தான் போகணும்...'

'இனி... காலம் அதிகம் கடக்காமல், பச்சுலி... உன் கல்யாணமும் நடக்குமே!'

அந்த ஒன்பது வயது நடக்கும் சிறுமி ஒரு நிமிடம் வெட்கப்பட்டுக் கொண்டு, முகத்தைக் குனிய வைத்தவாறு நின்று கொண்டிருந்தாள். பிறகு சொன்னாள்:

'நான் தீதி அளவிற்கு பெரியவளா ஆகுறப்போ...'

'அன்று... பச்சுலி, உன்னையும் தூரத்திலிருந்து கூட்டமாக ஆட்கள் வந்து பல்லக்கில் உட்கார வைத்து கொண்டு போவாங்க. அப்படித்தானே?'

'ம்...'

'அந்த இளைஞன் நல்ல அன்பு வைத்திருக்கும் ஆளாக இருப்பான். அப்படித்தானே?'

'இருக்கலாம்.'

அதற்குப் பிறகு எல்லா நாட்களிலும் திருமணத்தைப் பற்றி மட்டுமே அவள் பேசிக் கொண்டிருப்பாள். இளைஞனை குதிரையின் மீது உட்கார வைத்து, பராத் வந்து சேர்வது இரவு வேளையில்தான். கிராமத்திலிருக்கும் முக்கிய மனிதர்களும், பெரியவர்களும் அங்கு குமுமியிருப்பார்கள்.  வீட்டின் வாசலில் வைத்து பிதாஜி இளைஞனின் கால்களைக் கழுவுவார். பிறகு... இளைஞன் ஏறி நடப்பதற்காக புதிய பலகையைக் கொண்டு வந்து கொடுப்பார். வெள்ளி ரூபாய், பாத்திரங்கள் அடங்கிய வரதட்சணைப் பொருட்களை முன்னால் கொண்டு வந்து வைப்பார்கள். அப்போது பெண்கள் ஒன்றாகச் சேர்ந்து நின்று, நைனிதேவியைப் பற்றிய மங்கள பாடல்களைப் பாடி, அரிசியை வாரி இறைப்பார்கள். வீட்டிற்குள் உண்டாக்கப்பட்ட அக்னி குண்டத்திற்கு முன்னால் அமர்ந்து, மணமகன் தீதியின் கழுத்தில் மாலை அணிவிப்பான். பிறகு... ஆடைகளின் நுனிகளை ஒன்றோடொன்று இணைத்து, அக்னி குண்டத்தைச் சுற்றி வருவார்கள்....

தீதியின் திருமணம் முடிவு செய்யப்பட்ட பிறகு, பச்சுலி தனியாகத்தான் புல் அறுப்பதற்காகச் சென்றாள். ஒரு வாரத்திற்குப் பிறகு, ஒரு நாள் சாயங்காலம் அவள் பாலுடன் வரவில்லை. நன்கு இருட்டும்வரை, நான் அவளுக்காகக் காத்திருந்தேன். அவளும் திருமணம் சம்பந்தப்பட வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டிருப்பாள் என்று இறுதியில் முடிவு செய்தேன். மறுநாள், பொழுது புலரும் வேளையில், நான் கண் விழிப்பதற்கு முன்பே யாரோ கதவைத் தட்டி அழைத்தார்கள்:

'பாபுஜீ!'

கதவைத் திறந்தவுடன், பார்த்தது தேவ்சிங்கைத்தான். வழக்கத்திற்கு மாறாக ஏதோவொன்று அவனுடைய கண்களில் பளிச்சென தெரிந்தது. பதைபதைப்புடன் நான் கேட்டேன்:

'என்ன விசேஷம் தேவ்சிங்?'

அவன் ஒரு சிறு குழந்தையைப் போல எனக்கு முன்னால் நின்று கொண்டு அழுதான். அப்போது பார்வையில் பட்டது- ஒரு சிறிய சவ மஞ்சமும், அதைத் தூக்கிக் கொண்டு சாலையில் செல்லும் ஒரு கூட்டம் ஆட்களும்தாம். அவர்கள் உரத்த குரலில் கூறினார்கள்:

'ராம் நாம் சத்ய ஹை

ராம் நாம் சத்ய ஹை.'

அந்த சவ மஞ்சத்தை நோக்கி விரலால் சுட்டிக் காட்டியவாறு தேவ்சிங் மெதுவான குரலில் சொன்னான்:

'பச்சுலி...'

'என்ன?'

தேவ்சிங்குடன் சேர்ந்து நான் அந்த சவ மஞ்சத்திற்குப் பின்னால் ஓடினேன். தேம்பி அழுதவாறு அவன் என்னிடம் நடந்த சம்பவத்தை விளக்கிக் கூறினான்-

'காலையில் பால் கொடுத்து விட்டு வந்து, அவள் புல் அறுப்பதற்காகச் சென்றாள். சின்ன பொண்ணை தனியாக அனுப்பக் கூடாதுன்னு நான் அவளோட அம்மாக்கிட்ட பல தடவைகள் திரும்பத் திரும்ப கூறியிருக்கேன்... உயரத்திலிருந்த ஒரு பாறையில் இருந்து கால் வழுகி, கீழே விழுந்துட்டா, பாபுஜி. தகவல் தெரிந்து ஓடிச் சென்றப்போ, சுய உணர்வு போகல. வீட்டிற்கு எடுத்துக் கொண்டு வர்றப்போ... அவள்... பாபு ஷாப், உங்களைப் பார்க்கணும்னு சொன்னாள்.'

காகஸ் நதியின் கரையிலிருந்த இடுகாட்டில் சவ மஞ்சத்தை இறக்கியபோது, நான் அவளை இறுதியாக பார்த்தேன். ஒரு வெள்ளைத் துணியைக் கொண்டு போர்த்தியிருந்தார்கள். அந்த முகத்தின் பிரகாசமும், கள்ளங்கபடமற்ற தன்மையும் சிறிது கூட மறைந்திருக்கவில்லை.....

பச்சுலியின் முதல் நினைவு நாளன்று முற்றத்திலிருக்கும் சிறிய பூந்தோட்டத்தில் 'டேலியா' பூத்திருக்கிறது. இந்த பூவைப் போல கள்ளங்கபடமற்ற அந்தச் சிறுமியைப் பற்றி இன்று யாரும் நினைப்பதில்லை. ஞாபகத்தில் வைத்திருக்கும் அளவிற்கு அவள் எதுவும் செய்யவில்லையே! கடுமையான வேலைகளுக்கு மத்தியில், இன்று பச்சுலியின் நினைவு நாள் என்ற விஷயத்தை தேவ்சிங்கே கூட நினைத்துப் பார்க்காமல் இருக்கலாம். எனினும், பச்சுலி, பாபு ஷாப் உன்னை மறக்கவில்லை. நீ கொண்டு வந்து நட்ட டேலியா, இதோ... பூத்திருக்கிறது.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.