Logo

ஞாபகம்

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 7016

ஞாபகம்

பி.பத்மராஜன்

தமிழில் : சுரா

சில நாட்களுக்கு முன்பு-

சங்கரநாராயணப் பிள்ளையும் அவரது குடும்பமும், தேசிய நெடுஞ் சாலையின் வழியாக வாடகைக் காரில் திருவனந்தபுரத்திலிருந்து கற்றானம் என்ற இடத்திற்குப் பயணித்துக் கொண்டிருந்தார்கள். பிள்ளை முன்னிருக்கையில் கனத்த முகத்துடன் அமர்ந்திருந்தார். பின்னிருக்கைகளில் மனைவி கமலம்மாவும் மகள் ஷைலஜாவும் மகளின் கணவன் சோமன் நாயரும் அவர்களுடைய குழந்தை ப்ரீதியும்... எல்லாருடைய முகங்களிலும் இறுகிய தன்மையும் கண்ணீரால் உண்டான சிறிது ஈரமும்...

குடும்பத்தில் நீண்டகாலத்திற்குப் பிறகு நடக்கும் ஒரு மரணம் என்பதைத் தாண்டி அந்த அளவுக்கு மிகவும் கவலைப்படக்கூடிய எதுவும் நடைபெறவில்லை. சங்கர நாராயண பிள்ளையின் அத்தை, அதாவது அப்பாவின் சகோதரி கெ.எம்.கவுரியம்மா தான் தன்னுடைய எழுபத்து மூன்றாவது வயதில் முதுமையினால் மரணமடைந்து விட்டாள். பிள்ளையும் வந்து சேர்ந்த பிறகுதான் பிண அடக்கம் நடக்குமென்ற தகவல் கிடைத்ததும், இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் சாதாரணமாகவே வெளிப்படுத்தக்கூடிய அவசரம், பரபரப்பு ஆகியவற்றை நிரப்பிக் கொண்டு, வாடகைக்காரைப் பிடித்து புறப்பட்டுவிட்டார்.

பாரிப்புள்ளியை நெருங்கியபோது, பிள்ளையின் மனம் எங்கெங்கோ பறந்து விட்டு, அத்தையின்மீது வந்து விழுந்தது. தந்தை இறக்கும் வரை அவளுடன் கொண்டிருந்த உறவு கிட்டத்தட்ட ஆழமாக இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். அதற்குப் பிறகும் இடையில் அவ்வப்போது விடுமுறைக்குச் செல்லும்போது பார்ப்பார். கடைசி கடைசியாகப் பார்த்தது ஒரு ஓணத்திற்கு துணி எடுத்துக் கொண்டு சென்றபோதுதான். ஜரிகை கரைபோட்ட ‘முண்டை’ (வேட்டி) விரித்துப் பார்த்து விட்டு அத்தை கேட்டாள்: ‘இப்போ எனக்கு எதுக்குடா குழந்தை, ஜரிகையும் மேல்துண்டும்?’

‘அத்தை, நீங்க வெளியே போறப்போ அணிய வேண்டாமா? கறால் கடையில் வாங்கிய முண்டு.’

‘ஓ... இனி போறதுக்கு ஒரே இடம்தான் இருக்கு...’ அத்தை அதைக் கூறியபோது, அவளுடைய கண்கள் நிறைந்தது. அதைப் பார்த்ததும் பிள்ளைக்கும் மனதில் வேதனை உண்டானது.

இளம் வயதில் அத்தைக்கு, அவளுடைய மகன் பிரபாகரைவிட பிள்ளையின் மீதுதான் விருப்பம். எதிர்காலத்தில் தன் பிள்ளைகளின் பாதுகாவலராக, அத்தை அப்போது தீர்மானித்து வைத்திருந்ததும் சங்கர நாராயணனைத்தான். பிரபாகரன் தேவையற்ற செயல்களைச் செய்து ஊரில் சிறிது சிறிதாக கெட்ட பெயர் எடுத்துக் கொண்டிருந்த காலத்தில், ஒரு நாள் அத்தை மனம் வெதும்பிக் கூறினாள்: ‘நீ யாரையாவது குத்திவிட்டு சிறைக்குப் போய்விட்டாலும், என் மகளுக்கு சங்கர நாராயணன் இருக்கிறானே என்ற ஒரு நிம்மதி இருக்கு.’ அதைக் கேட்டபோது தன்னுடைய முகத்தில் ரத்தம் பாய்ந்தோடியதையும், தொடர்ந்து சரீரம் முழுவதும் ஒரு உஷ்ணம் பரவியதையும் சங்கரநாராயணப் பிள்ளை இப்போதும் நினைத்துப் பார்க்கிறார். அத்தையின் மகளுக்கும் அவருக்குமிடையே நினைத்துப் பார்க்க முடியாத ஒருவகை நெருக்கம் தோன்றத் தொடங்கிய நாட்கள் அவை. மாமாவின் மகள் என்பதைப்போல, அத்தையின் மகளும் நாயர்களுக்கு முறைப்பெண்தானே!

அன்னியர் என்ற நினைப்புடன் பெண் ஒருத்தியின் சரீரத்தை முதல்முறையாகத் தொட்டது அவளுடைய சரீரத்தைதான். இறுதியில் கைனிக்கரையைச் சேர்ந்த கோவிந்தக்குறுப்பு என்ற நிலாச்சுவான்தாருக்கு அவளைத் திருமணம் செய்து கொடுத்து அனுப்பிய போது, அவர் தற்கொலை செய்து கொள்ள வேண்டுமென்று சிந்தித்தார்.

முப்பது... முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பிருந்த அந்த வியர்வைத் துளிகளின் ருசி இப்போதும் நாக்கில் வந்து நிறைவதைப்போல சங்கரநாராயணப் பிள்ளைக்குத் தோன்றியது. தங்களுக்குள் ஒருவரையொருவர் பார்த்து அதிக வருடங்கள் ஆகிவிட்டாலும், அவளுடைய முகம் இப்போதும் அப்படியே மனதில் தோன்றிக் கொண்டிருக்கிறது.

இன்று உண்மையாகவே அவளைச் சந்திக்காமலிருக்க வாய்ப்பில்லை. அம்மா இறந்துவிட்டாள் அல்லவா? வருவாள். அழுது கூப்பாடு போட்ட முகத்துடன் தன் தாயின் இறந்த உடலுக்கு அருகில் தலைகுனிந்து அமர்ந்திருக்கும் அவளுடைய உருவத்தை இப்போதே பார்க்க முடியுமென்று தோன்றியது.

திடீரென்று சங்கரநாராயணப் பிள்ளைக்கு முன்னால் இடி மின்னலைப் போல ஒரு கேள்வி வந்து விழுந்தது. அவளுடைய பெயர் என்ன?

அப்போது கார் சின்னக்கடையில் ட்ராஃபிக் ஜாமில் சிக்கி, திணறிக் கொண்டு நின்றிருந்தது. அவளுடைய பெயர் ஞாபகத்திற்கு வருவதில் நேரம் அதிகம் ஆக ஆக பிள்ளையின் மனம் படாதபாடு பட ஆரம்பித்தது. அவளுடைய பெயர் என்ன? எவ்வளவு முயற்சி செய்தும் அந்தப் பெயர் ஞாபகத்திற்கு வரவில்லை. ‘குட்டி மகளே’ என்று அழைத்திருந்தாலும், அதுவொரு செல்லப்பெயர் மட்டும் தானே! அவளுடைய உண்மையான பெயர்...?

கற்றானத்தை அடையும்வரை அவருக்கு பெயர் கிடைக்கவில்லை. தனக்கு தற்காலிகமாக ஏதோ தகராறு உண்டாகியிருக்கிறதென்று பிள்ளைக்குத் தோன்றியது. பொதுவாகவே ஞாபகம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் தான் அபார சக்தி எடைத்தவன் என்ற விஷயம் அவருக்கு நன்றாகத் தெரியும். அவருடன் வேலை செய்யும் பலரும் சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்கு அணுகுவதே பிள்ளையைத்தான். ஞாபகத்திலிருந்து அவர் கூறுவதை, இரண்டாவதாக ஒருமுறை சரியாக இருக்கிறதா என்றுகூட பார்க்காமல் அவர்கள் எல்லாரும் வேதவாக்கியத்தைப்போல எடுத்துக் கொள்வார்கள். ஒரு அகராதி அல்லது என்ஸைக்ளோ பீடியாமீது இருக்கக்கூடிய நம்பிக்கை தன்மீது இருக்கிறது என்ற உண்மையை பல நேரங்களில் பிள்ளையே உணர்ந்திருக்கிறார். அப்படிப்பட்ட தனக்கு இப்போது ஒரு பெயரை நினைவுபடுத்த முடியாத சூழ்நிலை உண்டாகியிருக்கிறதென்பதை அறிந்தபோது அவருக்கு மிகப் பெரிய பதைபதைப்பு உண்டானது. அத்தையின் மரணமும் அதோடு சம்பந்தப்பட்ட மற்ற அனைத்து விஷயங்களும் அத்துடன் பின்வரிசைக்குத் தள்ளப்பட்டுவிட்டன. ஒரு பெயருக்காக- ஒரு சாதாரண சொல்லுக்காக அவருடைய மனம் நிலையற்ற நீரில் தேடிக் கொண்டிருந்தது.

பிண அடக்கம் சம்பந்தப்பட்ட சடங்குகளுக்கு மத்தியில் துணி அணிவிப்பதற்குச் சென்றபோது, உறவினர்களும் முன்பே நன்கு தெரிந்தவர்களும் கேட்ட நலம் விசாரிப்புகளுக்கெல்லாம் இயந்திரத்தனமாக பதில் கூறினார். அவர்களில் பெரும்பாலானவர்களின் பெயர்கள் ஞாபகத்தில் வந்தும் அவளுடைய பெயரை மட்டும் நினைவில் கொண்டுவர முடியவில்லையென்ற விஷயம் அவளுக்குள் கவலையையும் பதைபதைப்பையும் அதிகமாக்கின.

மறுநாள் திரும்பிவிட்டார். திரும்பி வந்தபோது, மனதிற்குள்ளிருந்த கவலை மறையவில்லை. வேறு யாருடைய பெயரை மறந்திருந்தாலும், அவளுடைய பெயர் மறக்கக்கூடியதா? எவ்வளவு முறை திரும்பத் திரும்ப உச்சரித்த பெயரது! எத்தனை கனவுகளில் கூறிய பெயரது! உலகத்திலுள்ள அனைத்து பெண்களின் பெயர்களையும் மறந்துவிட்டாலும், முதன்முதலாக மனதிற்குள் வந்து விழுந்த அவளுடைய பெயரை மறப்பதற்கு அவரால் எப்படி முடிகிறது?

திரும்பி வந்து தலைமைச் செயலகத்தில் வேலையில் மூழ்கியபோதும், மனம் அதே பிரச்சினையைப் பற்றியே சுழன்றுகொண்டிருந்தது அவளுடைய பெயரை மறந்துவிட்ட குற்ற உணர்வோ, மன சாட்சியின் உறுத்தலோ அல்ல- பிள்ளையை பெரிய அளவில் ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தது. தன்னுடைய ஞாபக சக்திக்கு குறிப்பிட்டுக் கூறுகிற வகையில் ஏதோ தகராறு உண்டாகிவிட்டிருக்கிறது என்ற பயம்தான் பாடாய்ப் படுத்திக் கொண்டிருந்தது. வேண்டுமென்றால், கமலம்மாவிடம் கேட்டால், தெரிந்து கொள்ளலாம்.


ஆனால், தன்னுடைய முதல் காதலைப் பற்றி கிட்டத்தட்ட எல்லா விஷயங்களையும் கேட்டுத் தெரிந்து வைத்திருக்கும் அவளிடம், இப்போது முதுமையை அடைந்திருக்கும் வேளையில் அந்தப் பெயரைக் கேட்பதில் இருக்கக்வடிய மோசமான நிலையையும், அதனால் உண்டாகப் போகிற வேறு ஆபத்துகளையும் முன்கூட்டியே யூகிக்க முடிகிற காரணத்தால், பிள்ளை அந்த முயற்சியில் இறங்க வில்லை. அதுமட்டுமல்ல; யாருடைய உதவியும் இல்லாமலே அந்தப் பெயரை நினைவில் கொண்டு வர வேண்டுமென்பது ஒரு பிடிவாதமாக பிள்ளையைத் பின் தொடர ஆரம்பித்தது. மனதை எப்போதும் அந்த ஒரு புள்ளியிலேயே நிறுத்தி வைத்துக் கொண்டு, அவர் அந்தக் கேள்விக்கு பதில் கண்டுபிடிப்பதற்கு முயற்சித்தார்.

ஆனால், அது மேலும் பிரச்சினைகளுக்கு வழி உண்டாக்கிக் கொடுத்தது. பொதுவாகவே கூர்மையான அறிவைக் கொண்ட அவர், தன்னுடைய எல்லா சக்திகளையும் ஒரே முனையில் கொண்டு போய் நிறுத்திக் கொண்டு, நாட்களை தள்ளி நகர்த்துவதற்கு ஆரம்பித்தபோது, உடன் பணியாற்றிக் கொண்டிருப்பவர்களுக்கும் வீட்டிலிருப்பவர்களுக்கும் பதைபதைப்பையும் மனவேதனையையும் உண்டாக்கிய எவ்வளவோ சம்பவங்கள் நடைபெற்றன.

எந்த தொலைபேசி எண்ணையும் நாவின் நுனியில் வைத்திருப்பதைப்போல எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்த ஆள் சங்கரநாராயணப் பிள்ளை. உடன் பணியாற்றுபவர்கள் தொலைபேசி டைரக்டரியை நம்பிக் கொண்டிருக்காமல், பெரும்பாலும் பிள்ளையிடம் கேட்டுத்தான் ஐந்து எண்களை வாங்குவார்கள். பழைய வழக்கத்தை வைத்துக் கொண்டு அவர்கள் கேட்டபோது, பிள்ளை உறக்கத்திலிருந்து எழுவதைப்போல திடுக்கிட்டு கண்விழித்து, தொலைபேசி எண்களுக்காக பதறிக் கொண்டிருப்பார். பல நேரங்களில் அவர் கூறிய எண்கள் தவறாக இருந்தன. பைல்களை அடுக்கி வைப்பதிலும், நோட்டுகள் தயார் செய்வதிலும் அசாதாரணமான கவனத்தையும் திறமையையும் வெளிப்படுத்திக் கொண்டிருந்த அந்த மனிதரிடம் பெரும்பாலான நேரங்களில் சிறுசிறு தவறுகள் உண்டாவதை மேலதிகாரிகள் முதலில் கனிவாகவும், பிறகு... பிறகு... கடுமையாகவும் சுட்டிக்காட்டினார்கள்.

வீட்டிலும் பல அபத்தமான விஷயங்களும் நடைபெற்றன. ஒருநாள் தன்னுடைய டூத் பிரஷ்ஷின் நிறத்தை மறந்து போய்விட்ட அவர், மிகவும் சிரமப்பட்டுப் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தியும்தான் மனைவிக்கு அந்த விஷயத்தையே கூறாமல் காரியத்தை சாதித்தார்.

பின்னர் ஒருமுறை வானொலியின் ‘பேண்ட்’ என்னவென்பதை மறந்துவிட்டு, சிறிது நேரம் திருகிக் கொண்டிருக்க வேண்டிய சூழ்நிலை உண்டானது. வீட்டிலிருக்கும் அறைகளின் சாவிகளுக்கிடையே தவறுகள் உண்டாக ஆரம்பித்தன. அந்த நேரங்களிலெல்லாம் மனம் பிடி கொடுக்காமல் விளையாட்டு காட்டிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணின் பெயரைப் பற்றியே திரம்பத் திரும்ப நினைத்துக் கொண்டிருந்தது.

23 நாட்களின் சிரமங்களுக்கும் கவலைகளுக்கும் அவமானங்களுக்கும் பிறகு, அவருடைய அந்தப் பெயர் ஒரு அருளைப் போல கிடைத்தது வனஜா.

வயது அதிகமான காரணத்தால்தானே தனக்கு இந்த ஞாபகக் குறைபாடே உண்டானது என்ற விஷயம் பிள்ளைக்குத் தெரிந்திருந்தது. வேலையிலிருந்து ஓய்வு பெறுவதற்கு இன்னும் மூன்று நான்கு வருடங்கள் இருக்கின்றன. வாசிப்பதற்கு கண்ணாடி பயன்படுத்த ஆரம்பித்ததே மிகவும் சமீபத்தில்தான். ஆங்காங்கே சிறுசிறு நரைமுடி தெரிகிறதென்று கூற முடியுமே தவிர, முற்றிலும் நரைத்துவிட்டதென்று கூறமுடியாது. பற்களுக்கும் கேடு எதுவும் உண்டாகியிருக்கவில்லை. பிறகு எப்படி இந்த ஞாபக மறதி,

தனக்கு ஏற்பட்டிருக்கும் இந்த மிகப் பெரிய ஆபத்த வேறு யாருக்கும் தெரியக் கூடாதென்று தனிப்பட்ட முறையில் பிள்ளை விரும்பினார். யாருக்கும் தெரியாமல் ஞாபக சக்தியையும், நாடி- நரம்புகளையும், மூளையையும் பற்றிய புத்தகங்களை வாங்கிப் படித்தார். அதிகமாக புகைபிடிப்பவர்கள் மத்தியில் ஒரு சிறிய சதவிகிதத்தினருக்கு இப்படியொரு ஆபத்து ஏற்பட வழியிருக்கிறதென்ற விஷயத்தை எங்கேயோ படித்ததைத் தொடர்ந்து, எப்போதாவது புகை பிடிக்கக்கூடிய பழக்கத்தைக்கூட (நாளொன்றுக்கு அதிகபட்சம் ஐந்து) விட்டுவிட்டார். அதற்குப் பிறகும் தவறு நடக்கவே செய்தது. புகை பிடிப்பதை நிறுத்திவிட்ட விஷயத்தை மறந்துவிட்டு, ஒரு நாள் ஒரு நண்பரின் கையிலிருந்து சிகரெட்டை வாங்கிப் புகைத்துவிட்டார்.

அலுவலகத்தில் அவருக்கென்றிருந்த இமேஜ் திடீரென்று சரிய ஆரம்பித்தது. பிள்ளைக்கு ஏதோ குறிப்பிட்டுக் கூறக் கூடிய அளவுக்கு பிரச்சினை ஏற்பட்டிருக்கிறதென்று உடன் பணியாற்றுபவர்களும் மேலதிகாரிகளும் ரகசியமாக தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள். காரணம்- ஞாபகப் பிசகால் அவர் உண்டாக்கிய அபத்தங்களின் பட்டியல், நாட்கள் ஆக ஆக அதிகரித்துக் கொண்டேயிருந்தது. எலியாம்மா ஃபிலிப்பை, சாராம்மா ஜார்ஜ் என்று பெயரை மாற்றியழைத்த சம்பவம் அலுவலகத்தில் பெரிய ஒரு பேச்சக்கான விஷயமாக ஆனது.

அலுவலகத்திற்குச் செல்வதாகக் கூறி வெளியேறிவிட்டு, அந்த விஷயத்தையே மறந்துவிட்டு மார்க்கெட்டுக்குச் சென்று ஒரு பை நிறைய காய்கறிகளை வாங்கிக் கொண்டு திரும்பி வந்த நாளன்று மனைவி அதிர்ச்சியடைந்து நின்றுவிட்டாள். பின்னர் ஒருமுறை எத்தனையோ வருடங்களாக சிறிதும் தவறாமல் பேருந்தை எதிர்பார்த்து நிற்கும் நிறுத்தத்தை மாற்றிவிட்டு, வேறொரு நிறுத்தத்திற்குச் சென்று நின்றதன் விளைவாக அலுவலகத்திற்குச் செல்வது தாமதமாகிவிட்டது. இன்னொரு முறை, மேலிடத்திற்கு மிகவும் முக்கியமாக அனுப்பி வைக்கப்பட வேண்டிய ஒரு ஃபைல் அங்கு போய் சேராமல், அலுவலகம் முழுவதும் அதை மூலைமுடுக்கெல்லாம் தேட வேண்டிய சூழ்நிலை உண்டானது. இரவில் வீட்டில் வந்து பார்த்தபோது, ப்ரீஃப்கேஸில் அந்த ஃபைல் இருந்தது.

இவ்வாறு... இவ்வாறு... நூறு... நூறு சம்பவங்களின் காரணமாக அலுவலக வாழ்க்கை தாங்கிக் கொள்ள முடியாததாகவும், கேலியும் கிண்டலும் நிறைந்த இடமாகவும் மாற ஆரம்பித்தபோது, யாரிடமும் ஆலோசனை கேட்காமலேயே இறுதியில் சங்கர நாராயணப் பிள்ளை விருப்ப ஓய்வு எடுத்துக் கொண்டார்; வேலையிலிருந்து ஓய்வு பெற்றார். அந்த விஷயத்தையே மறந்து விட்டு மறுநாளும் இயந்திரத்தனமாக அலுவலகத்திற்குப் புறப்பட்டாலும், பேருந்தில் இருந்தபோதே விஷயம் ஞாபகத்திற்கு வந்த காரணத்தால், ஒரு பெரிய கேலிக்குரிய சம்பவத்தைத் தவிர்க்க முடிந்தது.

வெளியே காண்பதற்கு மேலாக, முற்றிலும் வித்தியாசமான- பயங்கரமான ஏதோ தகராறு அவளுக்கு உண்டாகி விட்டிருக்கிறதென்ற விஷயம் இதற்குள் கமலம்மாவிற்கும் ஷைலஜாவிற்கும் ஷைலஜாவின் கணவன் சோமன் நாயருக்கும் புரிந்துவிட்டிருந்தது. முதலில் பதைபதைப்பும் கவலையும் உண்டானாலும், போகப் போக அவர்கள் அந்த யதார்த்த நிலையுடன் ஒன்றுசேர்ந்து பயணிக்கப் பழகிக் கொண்டனர். மாதத்தின் ஆரம்பத்தில் பென்ஷன் வாங்குவதற்குச் செல்ல வேண்டுமென்ற விஷயத்தை பிள்ளை மறந்து போகாமல், மனைவி ஞாபகப்படுத்திக் கொண்டே இருந்தாள். எனினும், கணக்கும் செயலும் தவறுகிறதென்பதைத் தெரிந்து கொண்டு, ஒரு நாட்டுடமையாக்கப்பட்ட வங்கியின் மூலம் அதைப் பெற வழி ஏற்படுத்திக் கொண்டாள்.


இதற்கிடையில் பிள்ளையின் மறதி குணத்திற்கு புதிய வடிவங்கள் வந்து சேர்ந்திருந்தன. உதாரணத்திற்கு, பிள்ளை பென்சிலைப் பார்க்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். எப்போதும் செய்வதைப் போல அவர் பென்சிலை எடுத்து நுனிப்பகுதியைச் செதுக்கி சீவுகிறார். சீவி முடிக்கும்போது, கையில் வைத்திருக்கும் பொருளின் பெயரை மறந்து விடுகிறார். அதற்குப் பிறகு அந்த நாள் முழுவதும், சில நேரங்களில் நாட்கணக்கில் தனக்கு நன்றாகத் தெரிந்திருந்த அந்த பெயரை அறியும் தேடல் ஆரம்பித்துவிடும். ஒரு பென்சிலைக் காட்டிவிட்டு ‘இதன் பெயர் என்ன?’ என்று வேறு யாரிடமாவது கேட்பதில் இருக்கும் தர்மசங்கடமான நிலையைப் பற்றிய புரிதல் இருந்தால், அவர் தன்னுடைய பிரச்சினையை யாரிடமும் வெளிப்படுத்தாமல் நடந்து திரிந்துகொண்டிருக்கிறார். இறுதியில் எப்போதாவது ‘பென்சில்’ என்ற வார்த்தை மனதில் தோன்றும்போது, புதையலே கிடைத்துவிட்டதைப் போல சந்தோஷத்தில் மூழ்கிவிடுகிறார்.

இதுபோல மேஜை, நாற்காலி, கண்ணாடி, சாளரம், குளியலறை, ரோஜா மலர், சுத்தம் செய்ய வேண்டிய கை, ஸ்கூட்டர், கைக்குட்டை போன்ற எல்லா பொருட்களும் பிள்ளையை பாடாய்ப்படுத்த ஆரம்பித்தன. ஒருநாள் மனைவி, மருமகன் ஆகியோருடன் சேர்ந்து ஒரு மனநல நிபுணரைப் போய்ப் பார்த்தாலும், கொஞ்சம் ‘ந்யூரோபயான்’ மாத்திரைகளைச் சாப்பிட்டார் என்பதைத் தவிர, அதனால் எந்தவித பிரயோஜனமும் உண்டாகவில்லை.

ஒருமுறை பம்பாயில் வேலையிலிருக்கும் மகனும் குடும்பமும் விடுமுறையில் வந்திருந்தபோது, பிள்ளைக்கு தன் மகனின் பெயர் ஞாபகத்தில் இல்லாமல் போனது, கமலம்மாவை சிறிது அழச் செய்துவிட்டது. மகனின் மனைவி மற்றும் அவர்களுடைய குழந்தைகளின் பெயர்களை சரியாகக் கூடிய பிள்ளையால், பொறுப்புணர்வின் மூலகர்த்தாவாக இருந்த அந்த தந்தையால், தன் மகனின் பெயரை மட்டும் உடனடியாக ஞாபகத்தில் கொண்டு வர முடியவில்லை.

வருடங்கள் கடக்க... கடக்க... மறதி என்ற கோட்டையின்மீது புதிய பாசிகள் முளைத்தன. நன்கு தெரிந்த முகங்களைப் பார்க்கும்போதுகூட, யாரென்பதை நினைவுபடுத்திப் பார்க்க முடியாத சூழ்நிலை பிள்ளைக்கு உண்டானது. பிறகு... நீண்ட நேர கடுமையான முயற்சிக்குப் பிறகுஆள் யாரென்பது தெரியவரும்போது, அவருக்கு அழுகை வர ஆரம்பிப்பதும் ஒரு சாதாரண விஷயமாகிவிட்டது. விருந்தினர்கள். உறவினர்கள் ஆகியோர் வரும்போது, அவர்களை முன்னால் நிற்க வைத்துக் கொண்டு ‘இது யார்? கூற முடியுமா?’ என்று மனைவியோ மகளோ கேட்பதென்பதும், பதில் தெரியாமல் பிள்ளை குழம்பிப் போய் நிற்பதும் அந்த வீட்டில் தினமும் நடக்கக்கூடிய சம்பவங்களாகிவிட்டன. ஒரு நாள் சோமன் நாயர் அலுவலகத்திலிருந்து திரும்பி வந்து வீட்டுக்குள் நுழையத் தொடங்கியபோது, பிள்ளை வழியைத் தடுத்து நிறுத்தியவாறு ‘யாரு? தெரியலையே?’ என்று கூறிய சம்பவம், அந்த வீட்டில் நீண்ட காலமாக எல்லாரும் சேர்ந்து சிரித்துக் கொண்டிருப்பதற்கான வழியை ஏற்படுத்திக் கொடுத்தது. ஆனால், அந்த சிரிப்புகூட பிள்ளை மனதை வேதனை கொள்ளச் செய்யவில்லை. காரணம்- அப்போதே அவர் அதை மறந்து விடுவதுதான்.

மறந்து... மறந்து... பிள்ளை முழுமையாக மறதியின் உலகத்திலேயே இருந்துவிட்டார். தனக்கு இப்படிப்பட்ட ஒரு குறைபாடு இருக்கிறதென்று யாரிடமும் கூறுவதிலும் அவருக்கு வெட்கமோ குற்ற உணர்வோ இல்லாமல் போய்விட்டது. வாசலின் பக்கவாட்டில் இருந்த தன்னுடைய பழைய அலுவல் அலுவல் அறையில் தனியாகப் படுத்துக் கொண்டு, மறந்துபோன நூறுநூறாயிரம் விஷயங்களை நினைவில் கொண்டு வருவதற்கு அவர் தேவையில்லாமல் முயற்சித்தார். உணவு சாப்பிடும் நேரங்களில் மனைவி வந்து ஞாபகப்படுத்தும் காரணத்தால், அதுமட்டும் சரியாகவும் நிற்காமலும் நடந்து கொண்டிருந்தது. சில நேரங்களில் தான் யெரென்பதையும் தன்னுடைய பெயர் என்னவென்பதையும் ஞாபகத்தில் கொண்டு வருவதற்கு அவருக்கு பல வாரங்கள் ஆனது. கண்களை மூடிப் படுத்துக் கொண்டு அந்த அவிழ்க்க முடியாத முடிச்சுகளைக் கொண்ட கட்டுகளில் மாட்டிக் கொண்டு அவர் திணறிக் கொண்டிருந்தார். தன்னுடைய தாய், தந்தை, தங்கை, இளமைக்காலம், அலுவலகத்தின் நண்பர்கள், தன் வீட்டிலிருக்கும் அறைகள், நிறங்கள் என்று இப்படி அனைத்து விஷயங்களும் படிப்படியாக மறதி என்ற திரைச்சீலைக்கு அப்பால் இருந்தன. ஒருநாள் பச்சைக்கும் கருப்புக்கும் இடையே வேறுபாடு கூற முடியாமல், அவர் பேத்தி ப்ரீதிக்கு முன்னால் கேலிக்குரிய கதாபாத்திரமாக ஆனார். எப்போதாவது மட்டுமே கார்மேகங்களும் இடியும் இல்லாத தெளிவான பகல் வேளையில், வெட்டிக் கொண்டிருக்கும் மின்னலைப் போல, ஏதாவது ஒரு சம்பவமோ முகமோ பெயரோ மனதில் வந்து விழும்போது, அவர் அதிக சந்தோஷத்தால் சிரித்தார்.

ஆனால், அந்தச் சமயத்தில் அந்த வீட்டில் பிள்ளையின் சிரிப்புக்கோ அழுகைக்கோ அர்த்தமே இல்லாமலிருந்தது. உபயோகம் இல்லாமல்போன ஒரு பழைய வளர்ப்புப் பூனையைப் போல அவர் எப்போதும் தன்னுடைய அறையில் போடப்பட்டிருக்கும் சாய்வு நாற்காலியில் சாய்ந்தவாறு படுத்திருந்தார். இனி எந்தச் சமயத்திலும், தன்னால் எதையும் ஞாபகப்படுத்திப் பார்க்க முடியாது என்ற உண்மையைக்கூட பிள்ளையால் நினைக்க முடியவில்லை.

பிள்ளைக்கு எழுபத்திரண்டு வயது கடந்துவிட்டது. ஷைலஜாவின் மகள் ப்ரீதியின் திருமணம் முடிந்து ஒரு வாடகைக் காரில் வரும்போது, தேசிய நெடுஞ்சாலையின் இரு பக்கங்களிலும் சவுக்கு மரங்கள் பூப்பதை சுட்டிக்காட்டி, உடன் பயணித்தவர்கள் அதைப் பற்றி விளக்கிப் பேசிக் கொண்டிருந்தது பிள்ளைக்கு சிறிதும் புரியவில்லை.

அந்த நாட்களில் ஒருநாள் ஒரு ஆச்சரியமான சம்பவம் நடைபெற்றது. கற்றானத்திலிருந்து வந்திருந்த பழைய உறவினரை ஒரு பார்வையில் பிள்ளை அடையாளம் கண்டுபிடித்தார். இருபது வருடங்களுக்குப் பிறகு சந்தித்த அந்த மனிதனின் பெயரும் மற்ற தகவல்களும் உடனடியாக பிள்ளையின் மனதிற்குள் வந்து சேர்ந்தன.

“நாம் என்னைக்கு கடைசியாப் பார்த்தோம்னு ஞாபகம் இருக்கா?” பிள்ளையின் ஞாபகக் குறைவு எல்லாருக்கும் தெரிந்த விஷயமாகிவிட்டிருந்த காரணத்தால், எல்லாருக்கும் முன்னால், உறவினர் இரக்கம் கலந்த குரலில் கேட்டார்.

பிள்ளைக்கு அது ஞாபகத்தில் வந்தது. தன்னுடைய அத்தை கெ.எம்.கவுரியம்மா என்ற வனஜாவுடைய தாயின் மரணத்தையொட்டி சென்றிருந்தபோது, அந்த மனிதரை இறுதியாகப் பார்த்தார். பரமேஸ்வரன் நாயர் என்ற பெயரைக் கொண்ட அந்த மனிதர், அந்தச் சமயத்தில் குழந்தைகள் பிறக்காமல் போனதைப் பற்றி கூறி கவலைப்பட்டுக் கொண்டிருந்தார். அன்றைய உரையாடலுக்கு மத்தியில், மண்ணாரசாலையில் நடைபெறும் திருவிழாவைப் பற்றி பேச்சு வந்தது. எல்லா விஷயங்களும் பகலைப்போல தெளிவாகத் தெரிந்தன.

“ஞாபகத்தில் இல்லை. அப்படித்தானே?” பரமேஸ்வரன் நாயர் காது கேட்காத மனிதர்களிடம் கேட்பதைப்போல குரலை உயர்த்திக் கேட்டார்.


“இல்லை...” பிள்ளைக்கு அப்போதுதான் சொல்லவே தோன்றியது.

அப்படி சொல்வதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. அந்த உரையாடலை நீக்கிச் செய்வதில் பிள்ளைக்கு சிறிதும் விருப்பமில்லை. அதற்கு பதிலாக ஞாபகத்தின் கதவுகள் எந்த அளவிற்கு திறந்துவிடப்பட்டிருக்கின்றன என்பதை சோதித்துப் பார்ப்பதில்தான் அவர் அவசரத்தைக் காட்டினார்.

இப்போது கடந்துசென்ற வருடங்களில் நடைபெற்ற சிறிய சிறிய சம்பவங்களைக்கூட தெளிவாக நினைத்துப் பார்க்க முடிந்தது. வேலையிலிருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து நடைபெற்ற வழியனுப்பு விழாவில், பணியாற்றிய இரண்டு நண்பர்களின் பெயர்களை மாற்றிமாற்றிப் பேசியபோது, கூட்டத்தில் நிலவிய அமைதியும் முணுமுணுப்பும் தெளிவாக நினைவில் வந்தன. பம்பாயில் வேலை பார்த்துக் கொண்டிருந்த மகன் சதீஷ்பாபு அங்கேயே நிரந்தரமாகத் தங்க ஆரம்பித்தவுடன், அங்கே வரும்படி கூறி எழுதிய கடிதத்திலிருந்த வார்த்தைகள் மனதில் வலம் வந்து கொண்டிருந்தன. கைனக்கரியைச் சேர்ந்த கோவிந்தக் குறுப்புடன் திருமண நிச்சயம் முடிவாகிவிட்டிதென்பதைத் தெரிந்து கொண்டு, தனக்கு முன்னால் வந்து நின்று தேம்பித்தேம்பி அழுத வனஜாவின் கண்ணீரினுடைய உவர்ப்பை உதட்டில் உணர்ந்தார். அதற்குப் பிறகும் பின்னோக்கிச் சென்றபோது, இளம் பருவத்தில் வயல்களுக்கு மத்தியில் பள்ளிக் கூடத்திற்குச் சென்றதையும், ஒரு நாள் திரும்பி வரும்போது ஒரு பெரிய நீர்ப்பாம்பு, உரத்த குரலில் கூப்பாடு போடும் பருமனான தவளையை பாதி வரை விழுங்கிவிட்டிருப்பதைப் பார்த்து பயந்து ஓடியதையும் தெளிவாக நினைத்துப் பார்த்தார். ஞாபகம் சம்பந்தமான மறக்க முடியாத அந்த பின்னோக்கிய பயணத்தில் நீந்தி நீந்திச் சென்ற போது, இரண்டு வயதில் குடித்த தாய்ப்பால் வயிற்றுக்குள் கிடந்து வாந்தியாக வெளியேறி வந்ததையும், அம்மா அதைதான் அணிந்திருந்த துணியின் நுனியைக் கொண்டு துடைத்து சுத்தப்படுத்தியதையும் மீண்டும் பார்த்தார்.

ஆனால், பிள்ளை யாரிடமும் இந்த சம்பவங்களின் அணிவகுப்பைப் பற்றி சொல்லவில்லை. சொற்களால் விவரிக்க முடியாத சந்தோஷத்துடன், ஞாபகம் என்ற கல்லறைகளை ஒவ்வொன்றாகத் திறந்து சோதித்துப் பார்த்து, முன்பு எப்போதோ படித்த ஏதோ குழந்தைப் பாடலை முணுமுணுத்தவாறு அவர் அதே இடத்தில் படுத்திருந்தார். உணவுக்கான நேரம் வந்தபோது, உணவு சாப்பிடுவதற்கான நேரம் வந்துவிட்டதென்பதை அவர் நினைத்துப் பார்த்தார். எனினும், எப்போதும் நடப்பதை மாற்றுவதற்கு அவர் முயலவில்லை. மனைவி வந்து அழைத்தபிறகுதான் உண்ணச் சென்றார்.

சாப்பிட்டு முடித்து, எப்போதும் இருக்கக்கூடிய மதிய தூக்கத்திற்காகப் படுத்தபோது, இன்னொரு ஆச்சரியமான சம்பவமும் நடைபெற்றது. அந்த சமயத்தில் குழந்தைப் பருவத்திலிருந்து சுவாரசியமான சம்பவங்கள் முழுவதும் மனதில் வந்து நின்று கொண்டிருந்தன. எதை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமென்றாலும் எடுத்துக் கொள்ளலாம் என்ற சூழ்நிலை. அதைத் தொடர்ந்து மனம் எதிர்காலத்தை நோக்கியும் அடியெடுத்து வைப்பதை பிள்ளை தெரிந்து கொண்டார்.

இன்று பொழுது சாய்வதற்கு முன்பு, கையிலும் காலிலும் பேன்டேஜ் இட்ட ஒரு மனிதன் வீட்டிற்கு வருவான் என்பதாக அவர் பார்த்தார். அப்போது உயர்ந்தொலித்த கூப்பாடுகளையும், அழுகைச் சத்தத்தையும் பேச்சுக்களையும் அவர் தெளிவாகக் கேட்டார். அவையனைத்தையும் கவனமாகக் கேட்டுக் கொண்டு படுத்திருந்தபோது, ஆபத்தில் சிக்கி வந்திருப்பது மருமகன் சோமன் நாயர் அல்லாமல் வேறு யாருமல்ல என்ற விஷயமும் அவருக்குத் தெரிந்தது.

யாரிடமாவது இதைக் கூறினால், முட்டாள்தனமான விஷயமென்று நினைப்பார்கள் என்பது தெரிந்திருந்ததால், பிள்ளை யாரிடமும் எதுவும் கூறுவதற்கு முயற்சிக்கவில்லை. ஆனால், அன்று மாலை ஸ்கூட்டரிலிருந்து விழுந்து கையிலும் காலிலும் சிறு சிறு காயங்களுடன் பேன்டேஜுடனும் சோமன் நாயரை வீட்டிற்குச் கொண்டு வந்தார்கள். முன்பு பிள்ளை கேட்ட அழுகைச் சத்தமும் பேச்சும் சிறிது கூட மாறாமல் மீண்டும் செவியில் வந்து மோதின.

அதைத் தொடர்ந்து பிள்ளையின் மனம் சுறுசுறுப்பாகிவிட்டது. எதிர்காலத்தை நோக்கி கண்களைத் திறந்து கொண்டு அமர்ந்திருந்தபோது, இரவு ஒன்பது மணிக்கு வீட்டில் மின்சாரம் இல்லாமல் போவதையும், அரை மணி நேரம் கழித்து திரும்பவும் விளக்குகள் எரிவதையும், பத்தரை மணிக்கு பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஆஷா என்ற இளம்பெண் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த நற்செய்தியுடன் ஆஷாவின் தந்தை ஆர்.பி.பி. மேனன் வீட்டிற்கு வந்ததையும், பன்னிரண்டு மணிக்கு சற்று முன்பு சாலையில் ஒரு ஃபயர் எஞ்ஜின் மணியடித்துக்கொண்டு அலறிப் பாய்ந்து போய்க் கொண்டிருந்ததையும் அவர் முன்கூட்டியே பார்த்தார். மூன்றும் அதேமாதிரி நடந்தன.

அன்றிரவு பிள்ளையைப் பொறுத்தவரையில், மகிழ்ச்சியானது அதன் எல்லா அர்த்தங்களிலும் தோன்றி கிளைபரப்பிக் கொண்டிருந்தது. அந்த அபூர்வ சக்தியை நீடித்திருக்கச் செய்யவும் அதை வளர்த்தெடுக்கவும் செய்தால், தான் இவ்வளவு காலமும் சந்தித்த அவமானமும் வேதனையும் முற்றிலும் விலகிவிடும் என்பதையும், அதன் இடத்தில் பாராட்டும் வழிபாடும் நிறைந்து நிற்குமென்பதையும் தெரிந்து கொள்வதற்கு பிள்ளை அதிகம் சிரமப்படவில்லை. தூக்கம் வராமல் படுத்திருந்தபோது, பல வருடங்களுக்குப் பின் தான் மறுநாள் அதிகாலையில் நடப்பதற்காக வெளியேறிச் செல்வதை பிள்ளை பார்த்தார்.

வீட்டில் யாருக்காவது தெரிந்தால் சம்மதிக்க மாட்டார்களென்பது நிச்சயம். அதனால் எல்லாரும் விழிப்பதற்கு முன்பே வெளியேறிவிட்டார். பல நாட்களுக்குப் பிறகு வாசலுக்கு வெளியே அவர் வருகிறார். சரியாகக் கூறுவதாக இருந்தால், பதினேழு வருடங்களும் ஒன்பது மாதங்களும் ஆகின்றன. இந்தக் காலகட்டத்தில் சாலையில் பெரிய மாறுதல்கள் உண்டாகிவிட்டிருக்கின்றன. இடது பக்கமாகத் திரும்பி நடந்தபோது, பல மாடிகளைக் கொண்ட பெரிய கட்டடம் இருப்பதைப் பார்க்க முடிந்தது. அதற்கப்பால் முன்பு தரிசாகக் கிடந்த மலையடிவாரத்தில் ஒரு மாதிரியான அமைப்பில் கட்டப்பட்டிருந்த ஏராளமான க்வார்ட்டர்ஸ்... அதையும் தாண்டிச் சென்றால், சாலை இரண்டாகப் பிரிந்தது. வலது பக்கமாக சென்ற பாதையில் நடந்து சென்று மீண்டும் புதிய காட்சிகளைக் கண்டார். ட்ராக் ஷூட் அணிந்து ஓடிக் கொண்டிருந்த இளைஞர்களும், அதிகாலை நடைக்காக வந்த நடுத்தர வயதைக் கொண்டவர்களும் பிள்ளையைப் பொருட்படுத்தவில்லை. சாலையின் இரு பக்கங்களிலும் பெரிய மரங்கள் இலைகளை உதிர்த்து நின்றிருந்தன. அவற்றில் அமர்ந்து காகங்கள் கரைந்து கொண்டிருந்தன. எச்சங்களை இட்டன. ஒரு எச்சம் சரியாக பிள்ளை அணிந்திருந்த சட்டையின் காலரின்மீது வந்துவிழுந்தது. அதைத் துடைத்துவிட்டு மீண்டும் நடந்தபோது ஸ்டேடியம் வந்தது. பிள்ளை ஸ்டேடியத்திற்குள் நுழைந்தார். ஸ்டேடியத்தில் நல்ல உடல்நலத்தைக் கொண்டவர்கள் வந்துசேர ஆரம்பித்திருந்தார்கள். தூரத்தில்... தூரத்தில் சிலர் ‘புஷ் அப்’ எடுத்துக் கொண்டோ, ஓடிக் கொண்டோ இருப்பதைப் பார்த்தார். அவர்களுனைவரும் அவரவர்களுடைய உலகங்களில் இருந்தால், யாரும் பிள்ளையை கவனிக்கவில்லை.


எவ்வளவோ தூரம் நடந்துவந்துவிட்டோம் என்ற உணர்வு உண்டானபோது அவர் நின்றார். சிறிய அளவில் மேல்மூச்சு கீழ்மூச்சு விட்டுக் கொண்டிருந்தாலும், அந்த நேரத்தில் அதைப் பொருட்படுத்தவில்லை. அங்கு நின்று கொண்டிருந்த போது, சிறுவயதிலிருந்து இதுவரை நடைபெற்ற சம்பவங்களில் விருப்பமானவற்றை ஞாபகப்படுத்திக் கொண்டு வந்தார். அந்த நேரத்தில் சூரியன் உயர ஆரம்பித்திருந்தது. மைதானத்திலிருந்த புற்களின் நுனிகளில் கோடி சூரியன்கள் மின்னிப் பிரகாசித்துக் கொண்டிருந்தன. அந்த பிரகாசத்தைப் பார்த்தபடி நின்றிருந்தபோது, பிள்ளையின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்த் துளிகள் நிறைந்தன.

அந்த ஆனந்தக் கண்ணீர்த் துளிகளுடன் அவர் தூங்கிவிட்டார்.

மறுநாள் அதிகாலையில் வீட்டிலிருப்பவர்கள் கண் விழிப்பதற்கு முன்பே அவர் ஓசை உண்டாக்காமல் வாசற் கதவைத் திறந்து சாலைக்கு வந்தார். அப்போது பனிபொழிந்து கொண்டிருந்தது. முந்தைய நாள் பார்த்த பல மாடிகளைக் கொண்ட கட்டடத்தையும், ஒரே மாதிரி அமைந்த க்வார்ட்டர்ஸ்களையும், இலைகள் இல்லாத மரக்கிளைகளையும் பார்த்துவிட்டு, ஸ்டேடியத்திற்குள் நுழைந்தபோது அவருக்கு- உண்மையிலேயே கூறுவதாக இருந்தால்- ஒரு சிறு குழந்தையின் சுறுசுறுப்பு இருந்தது.

ஸ்டேடியத்தில் நல்ல உடல்நலத்தைக் கொண்டவர்கள் வந்து சேர ஆரம்பித்திருந்தார்கள். தூரத்தில்... தூரத்தில் சிலர் ‘புஷ் அப்’ எடுத்துக் கொண்டோ, ஓடிக் கொண்டோ இருப்பதைப் பார்த்தார். அவர்கள் அனைவரும் அவரவர்களுடைய உலகங்களில் இருந்ததால், யாரும் பிள்ளையை கவனிக்கவில்லை.

மேலும் கீழும் மூச்சுவிட்டவாறு நின்றுகொண்டு, பிள்ளை நினைவுகளின் அறைகளைத் திறந்தார். ஏழரை வயது நடந்துகொண்டிருந்தபோது, முற்றத்திலிருந்த மாமரத்தின் கிளைகளுக்கு மேலே வானத்தில் நீல நிறத்திலிருந்த மேகங்கள் வரைந்திருந்த ஸ்ரீகிருஷ்ணனைப் பார்த்ததையும், காற்று வீசி ஸ்ரீகிருஷ்ணன் சிதறத் தொடங்கியபோது கவலைப்பட்டு அழுததையும், அதற்கு முன்பு ஒருமுறை, வீட்டின் தெற்குப் பகுதியிலிருந்த  பனை மரத்தின் மீது படர்ந்துகிடந்த கொடியின் அமர்ந்திருந்த- கருப்பு, சிவப்பு நிறத்திலிருந்த பட்டாம்பூச்சியைப் பிடிப்பதற்காக பதுங்கிச் சென்றதையும், கிட்டத்தட்ட பிடித்துவிட்டோமென்ற சூழ்நிலை உண்டானபோது புற்களின் படர்ப்பிற்குள்ளிருந்து ஒரு முள் கையிலும், கீழே புதருக்குள்ளிருந்து ஒரு கார முள் பாதத்திலும் ஒரே நேரத்தில் குத்தி நுழைந்ததும், பட்டாம்பூச்சி சென்றதும், தான் கவலைப்பட்டு அழுததும் மனதில் வலம் வந்தன. பிள்ளைக்கு சிரிப்பு வந்தது.

அப்போது சூரியன் உயர ஆரம்பித்தது. மைதானத்திலிருந்த புற்களின் நுனிகளில் கோடி சூரியன்கள் மின்னிப் பிரகாசித்தன.

பிள்ளையின் கண்களில் அந்த பிரகாசம் வந்து நிறைந்தது. சூரியன் இன்னும் உயர்ந்து செல்லச் செல்ல, அந்தத் துளிகள் மறைந்து விடுமென்பதையும், பிரகாசம் இல்லாமல் போய்விடும் என்பதையும் பிள்ளை மனக்கண்ணால் பார்த்தார்.

பிரகாசத்தை இழக்கும் அந்த புல்மேட்டின் வழியாக பிள்ளையின் மனம் எதிர்காலத்தை நோக்கி நடந்து செல்ல ஆரம்பித்தது. பிரகாசித்துக் கொண்டிருக்கும் பச்சையிலிருந்து இருண்ட பச்சைக்கும், இருண்ட பச்சையின் மீது வெயில் விழுந்தபோது உண்டான வெளுத்த பச்சைக்கும், வெளுத்த பச்சையின் வெப்பத்தில் உருமாறிய வாடிய பச்சைக்கும், வாடிய பச்சையின் மீது வெயில் விழுந்தபோது உண்டான இளஞ்சிவப்பு கலந்த பச்சைக்கும், சிவப்பு பின் வாங்கிய போது உண்டான கருத்த பச்சைக்கும் அவருடைய மனம் கடந்து சென்றுகொண்டிருந்தது. அந்த கருப்பிற்கு அப்பால் எவ்வளவு முயற்சி செய்தும் பிள்ளையால் கடந்து செல்ல முடியவில்லை. சிரமமென்பது தெரிந்தும் அந்த கருப்புநிறத் திரையை அகற்றுவதற்கு அவர் தேவையில்லாமல் முயற்சித்தார். அப்போது கருப்பு நிறத்தின் எண்ணற்ற பரிமாணங்கள் மனதை மூட ஆரம்பித்தன.

குழந்தை பருவக்காலத்தில் ஒருநாள் ஜாதிப்பிரச்சினைகளும் களைகளும் வளர்ந்துகிடந்த இரவு வேளையில், வயலில் குளிர்ந்து விரைந்துப் போய் பறந்துவந்த மூன்று மின்மினிப் பூச்சிகளை உள்ளங்கையில் வைத்துக் கொண்டு, நான்காவதாக ஒரு மின்மினிப் பூச்சியை எதிர்பார்த்து நின்றிருந்ததும், இறுகப் பிடித்திருந்த உள்ளங்கைக்குள்ளிருந்த அவை மூன்றும் இறந்துபோனதும், இறந்தவுடன் இளம் கையில் இருட்டு பரவியதும், தன் தாய் தன் தங்கையைப் பெற்றெடுப்பதற்காக பிரசவ வேதனை எடுத்த இரவு வேளையில், தாதிப் பெண்ணை அழைப்பதற்காக லாந்தர் விளக்குடன் நடந்து சென்றதும், குராட்டு மோனிகி என்ற கெட்ட ஆவி வசித்துக் கொண்டிருந்த குராட்டு காவிற்கு அருகில் சென்றபோது கால் தட்டி விழுந்ததும், கையிலிருந்த லாந்தர் விளக்கு உடைந்து பயங்கரமான இருட்டு பரவியதும் அவருடைய ஞாபகத்தில் வந்தன. பிறகு ஒவ்வொரு இருட்டுகளும் வரிசை வரிசையாக வந்து அவருடைய கண்களில் இருட்டை நிறைத்தன.

மைதானத்திலிருந்து சங்கரநாராயணப் பிள்ளையின் நனைந்திருந்த இறந்த உடல் வீட்டிற்கு வந்தபோது, வீட்டிலிருந்தவர்களுக்கு கவலையைவிட திகைப்புதான் அதிகமாக உண்டானது. அவர் எப்போது வெளியேறிச் சென்றார்? எதற்காக வெளியே சென்றார்? அதுவும் யாருடைய உதவியும் இல்லாமல்... இவ்வளவு தூரத்திற்கு?

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.