Logo

ஆற்றைக் கடந்து மரங்களுக்கு மத்தியில்...

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 5473

ஆற்றைக் கடந்து மரங்களுக்கு மத்தியில்...

டி.பத்மநாபன்

தமிழில் : சுரா

ற்றைக் கடந்து மரங்களுக்கு மத்தியில்- ஒரு சிறப்பும் இல்லாத சாதாரண வார்த்தைகள். வார்த்தைகளுக்குப் பின்னால் இருக்கும் காட்சிகளும் முற்றிலும் சாதாரணமானவையே. ஏதாவது சிறப்பான விசேஷமான ஒரு அர்த்தம் அவற்றுக்கு இருக்கிறதென்று யாருக்கும் தோன்றுவதற்கும் வழியில்லை. ஆனால், அதற்குப் பிறகும் என்ன காரணத்திற்காக கடந்த எவ்வளவோ வருடங்களாக இந்த புத்தகத்தின் பெயர் மனதை வேட்டையாடிக் கொண்டே இருக்கிறது? வேட்டையாடல் என்று கூறினால் முற்றிலும் சரியாக இருக்குமா என்ற சந்தேகம் இருக்கிறது. இங்கு வேதனை உண்டாக்குவது மட்டுமல்ல- சந்தோஷப்படுத்துவதும் ஆச்சரியப்படுத்துவதும்கூட இருக்கின்றனவே!

சானிட்டோரியத்தில் இறுதி நாள். அவர் மேனேஜரின் அறையில் பலவற்றையும் ஆலோசனை செய்தவாறு அமர்ந்திருந்தார். அப்போது அடர்த்தியான இருட்டில், பிரகாசத்தின் மிகச் சிறிய ஒரு பகுதி கடந்து வருவதைப்போல அந்த வார்த்தைகளும், அந்த புத்தகமும், புத்தகத்தின் அட்டைப்படமும் மனதில் தோன்றின. காலம் எவ்வளவாகிவிட்டது! நாற்பது- அல்ல... அப்படி இல்லையென்றாலும், எவ்வளவு வேண்டுமானாலும் ஆகட்டும். வருடங்களில் என்ன இருக்கிறது? நினைத்துப் பார்க்க முடிகிறதா என்பதல்லவா முக்கியம்?

அவர் இப்போதும் எல்லாவற்றையும் தெளிவாக நினைத்துப் பார்க்கிறார்- புத்தகத்தின் பெயரை மட்டுமல்ல; அதன் கதையை மட்டுமல்ல; அதன் அட்டைப் படத்தைக்கூட!

சில நேரங்களில் தோன்றியிருக்கிறது... அட்டைப் படம்தானே அதிகமான பலத்துடன் மனதிற்குள் வேகமாக நுழைந்தது? கதை நன்றாக இல்லை என்றால்; நன்றாகவே இருந்தது. அப்படிக் கூறினாலும் போதாது- மிகவும் அதிகமாக மனதைத் தொட்டது. சென்னையில் படிப்பதற்காகச் சென்ற ஆரம்ப நாட்களில்தான் புத்தகம் வாங்கியதும் வாசித்ததும். அதற்கு முன்பே நிறைய கேள்விப்பட்டிருக்கிறார். புகழ்பெற்ற விமர்சகர்கள் பெரிய பத்திரிகைகளில் எழுதிய கருத்துக்கள் அனைத்தும் எழுத்தாளருக்கு எதிராக இருந்தன. ‘முடிந்தது; ஹெமிங்வேயின் கதை முடிந்தது. வயதும் நோயும் அவரை முழுமையாகக் கீழ்ப்படியச் செய்துவிட்டன. இனி அவர், எழுதி வாசகர்களை சிரமத்திற்குள்ளாக்க வேண்டாம்....’

வேறு சிலர் எழுதினார்கள்.

‘இது என்ன நாவல்? இதில் ஒரு கதை எங்கே இருக்கிறது? இவர் முன்பு எழுதியவற்றுக்கு அருகில் வைக்கும் அளவுக்கு ஏதாவது இந்த இறுதியாக வெளிவந்த புத்தகத்தில்...’

சானிட்டோரியத்தின் மேனேஜரின் அறையில் அவர் அப்போதும் தனியாகத்தான் இருந்தார். அவர் தனக்குத்தானே மெதுவாகக் கூறிக் கொண்டார். ‘இல்லை... அது எதுவும் சரியாக இல்லை....’

புத்தகம் வந்துவிட்டதா என்பதை விசாரிப்பதற்காக தினமும் மாலை வேளைகளில் ‘ஹிக்கின்பாதம்ஸுக்கு வேகவேகமான, வெறிபிடித்ததைப் போன்ற நடை! இறுதியில் கிடைத்தபோது, வாசித்த முடித்தபோது, மீண்டும் மீண்டும்... அட்டையில்... வயதாலும், போரில் பெற்ற காயங்களாலும் தளர்ந்துபோன அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்தவர். கர்னல். ஒவ்வொரு நிமிடமும் மரணத்தை நோக்கி..’

தெரிந்து கொண்டே நீந்திச் சென்ற மனிதர், எல்லாவற்றையும் அறிந்து கொண்டே தன்னுடைய தந்தையின் வயதிருக்கக்கூடிய, இறக்கப்போகும் அந்த மனிதரை ஆழமாகக் காதலித்த இத்தாலிய பிரபு வம்சத்தைச் சேர்ந்த இளவரசி...

புத்தகத்தைப் பற்றி எல்லாரிடமும் கூறினார்- வாசிப்பு என்பதை பழக்கமாகக் கொண்டிருக்கும் நன்கு தெரிந்தவர்களிடமும், நண்பர்களிடமும், ‘இதோ ஒரு புத்தகம். ஹெமிங்வேயின் மிகச் சிறந்த புத்தகம். சற்று வாசித்துப் பாருங்கள்- அதற்குப் பிறகு கூறுங்கள்- அவருடைய திறமைகள் அனைத்தும் தீர்ந்து போய்விட்டனவா என்று.’

ஆனால், அவர்கள் எல்லாரும் கூறியது:

‘இது என்ன புத்தகமா? இது புதினமா? இதில் என்ன இருக்கிறது? இதிலிருக்கும் கதையின் அர்த்தமென்ன? இறக்கப்போகும் ஒரு கிழவனின், அவனைக் காதலிப்பதாகக் கூறும் ஒரு இளம்பெண்ணின்...’

அப்போது அவர்களிடம் சொன்னார்: ‘வேண்டாம். வேண்டாம். அப்படி கதையைச் சுருக்கமாகக் கூறவே வேண்டாம். உங்களுக்கு விருப்பமில்லையென்றால், அதை கூறினால் போதும். அப்படியில்லாமல்... பிறகு.... அர்த்தத்தைப் பற்றி நீங்கள் கவலைப்பட்டீர்களே? ஒன்று கேட்கட்டும்மா? நம்முடைய இந்த வாழ்க்கைக்கு ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? பிறகு... காண்பதற்கும் கேட்பதற்கும் எல்லாம் அர்த்தம் உண்டாக்கி புரிந்து கொண்டேயாக வேண்டுமென்றும் இருக்கிறதா என்ன? பிறகு... இந்த உலகத்தில் காண்பதற்கும் கேட்பதற்கும் அப்பால் சில... அப்படியும் இருக்கலாம் அல்லவா? அப்படி இருக்கும்போது இந்தப் புத்தகத்தின் அர்த்தத்தைப் பற்றி நாம்...’

ஆனால், அவர்கள் அவற்றையெல்லாம் சிரித்துக் கொண்டே ஒதுக்கிவிட்டார்கள். இன்று அதைப் பற்றியெல்லாம் நினைத்துப் பார்த்தபோது, அவரும் புன்னகைத்தார். மொத்தத்தில் அந்தப் புத்தகத்தை தான் எத்தனை முறை வாசித்திருப்போம் என்பதையும் அவர் நினைத்துப் பார்த்தார். பலமுறை என்று கூறமுடியுமே தவிர, எத்தனை முறை என்பதைக் கூற முடியாதே! பலமுறை... பலமுறை.... வாழ்க்கையின் வினோதமான ஒவ்வொரு கட்டங்களில், சந்தேகத்துடன் நின்றிருந்த விழிகளின் திருப்பங்களில்....

அப்போதெல்லாம் இந்தப் புத்தகம் ஒரு வெளிச்சமாக இருந்ததே! படத்தில் கர்னல், பிரபு வம்சத்தைச் சேர்ந்த இளவரசி இருவரையும் தவிர மரங்களும் இருந்தன. இளவரசி கர்னலின் தளர்ந்துபோன மார்பின்மீது தலையை வைத்துப் படுத்திருந்தாள். தூரத்தில் மரங்கள் இருந்தன. ஆனால், அங்கு எந்த இடத்திலும் ஆறு இல்லை. அதனால் முதலில் அவருக்கு ஒரு குறை தோன்றியது. ‘ஆற்றைக் கடந்து மரங்களுக்கு மத்தியில்... என்றுதானே வருகிறது? அப்படியென்றால், அங்கு ஆறு எங்கே? ஆறு இல்லையே!’

பிறகு அவர் மனதைத் தேற்றிக் கொண்டார். ஆறு இருக்கிறது. கண்களுக்குத் தெரியவில்லை என்பதுதான் விஷயம். பிறகு... உள்ளவை எல்லாவற்றையும் பார்த்தேயாக வேண்டுமென்று இல்லையே! கங்கையும் யமுனையும் சரஸ்வதியும்... ஆனால், சரஸ்வதியை யார் பார்த்திருக்கிறார்கள்? அதனால் சரஸ்வதியே இல்லையென்று கூறுவிட முடியுமா?

சரஸ்வதி காலத்தில் ஓட்டத்தில் மறைந்துவிட்டது.... கண்ணுக்குத் தெரியாமல் ஓடிக் கொண்டேயிருக்கிறது...

மேனேஜர் அறைக்குள் வந்தபோது, அவருடன் இளைஞரான டாக்டரும் இருந்தார். டாக்டர் புன்னகைத்துக் கொண்டே சொன்னார்.

“அப்படியென்றால்... இன்னைக்கு திரும்பிப் போறீங்க. அப்படித்தானே?”

அவரும் புன்னகைத்தார். ஆனால், எதுவும் கூறவில்லை.

டாக்டர் மீண்டும் கூறினார்:

“வீட்டில் எல்லாரும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். இல்லையா?”

அவர் அதிர்ச்சியடைந்தார். எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்களா யார்? யாரை?‘

அவர் எதுவுமே கூறாமல் உட்கார்ந்திருந்தார். மனதில் அப்போது ஒரு குழப்பம் இருந்தது. குழப்பம் தெளிவானபோது- அதற்கு சிறிது நேரமானது- அவர் நினைத்துப் பார்த்தார்:

இங்கு வருவது இது இரண்டாவது முறையா? அல்லது மூன்றாவது முறையா?

இதற்கு முன்பும் வந்திருக்கிறோம். உண்மை.... அப்படித்தானே டாக்டருடனும் மேனேஜருடனும் மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஒரு நோயாளியின் அன்பும் பழக்கமும் உண்டாயின?

இந்த முறை பார்த்தபோது டாக்டர் முதலில் கேட்டார்:


“என்ன நடந்தது? ஆரம்பத்தில் எப்படி இருந்தது?’

அவர் டாக்டரைப் பார்த்தவாறு யோசித்துக் கொண்டிருந்தார்...

ஆரம்பம் எப்படியிருந்தது?

டாக்டர் அவரையே ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார். ஆமாம்... அதேதான்... சொல்லுங்க... என்னிடம்தானே... கொஞ்சமும் தயங்க வேண்டாம். நான்தானே? சொல்லுங்க... என்ன....

அவர் டாக்டரையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தார்.

அவருக்கு டாக்டரின்மீது நம்பிக்கை இருந்தது.

ஆனால், அதற்குப் பிறகும்... எதையும் நினைத்துப் பார்க்கவோ, கூறுவதற்கோ முடியவில்லை.

“எறும்பு... ஒரு எறும்பு...”

டாக்டர் ஆச்சரியத்துடன் கேட்டார்:

“எறும்பா?”

அவர் வேதனையுடனும் பதைபதைப்புடனும் கூறினார்:

“ஆமாம்... எறும்பு...”

டாக்டர் எதவும் கூறாமல், அவருடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்.

பிறகு... ஒன்றும் அதிகமான முடிச்சுகளைக் கொண்ட பழைய ஒரு மூட்டையை அவிழ்த்தெடுப்பதைப்போல அவர் சொல்ல ஆரம்பித்தார்.

“இந்த முறை இடது கையில்தானே வேதனை உண்டாக ஆரம்பித்திருக்கிறது? சில நேரங்களில் ஒரு எறும்பு இடது பக்கத் தோளிலிருந்து மெதுவாக நகர்ந்து ஏற ஆரம்பிக்கும். தோளின் வழியாக காதுக்குப் பின்னால் மேல்நோக்கி ஏறி... அது போகக்கூடிய வழியை என்னால் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியும். அப்போது கடுமையான வேதனை இருக்கும்.  கழுத்திற்கு உள்ளேயும் தலையில் கூர்மையான ஆயுதம் குத்துவதைப்போல... ஆனால், எதுவுமே செய்ய முடியவில்லை. அவ்வாறு எறும்பு ஊர்ந்து ஊர்ந்து, இறுதியில் தலைக்குள்ளே சென்று....” அவருடைய வார்த்தைகள் அங்கு நின்றன.

டாக்டர் அமைதியான குரலில் கேட்டார்:

“இப்போது அந்த வேதனை இருக்கிறதா?”

அவர் சொன்னார்: “இல்லை... எப்போதாவதுதான் இருக்கும்.”

மீண்டும் அவர்களுக்கிடையே அமைதி நிலவியது.

டாக்டர் எதுவும் சொல்லாமல் இருப்பதைப் பார்த்ததும் அவர் கேட்டார்:

“நான் கூறியது எதிலும் நம்பிக்கை வரவில்லையா?”

நம்பிக்கை இருக்கிறதென்பதைப்போல டாக்டர் தலையை ஆட்டினார். பிறகு அவர் கேட்டார்:

“அதற்குப் பிறகு என்ன நடந்தது?”

அவர் சொன்னார்:

“மாலை வேளையில் நான் முன்னாலிருந்த அறையில் தனியாக அமர்ந்திருந்தேன். ஒவ்வொன்றையும் நினைத்துக் கொண்டே... எனினும், மனதில் குறிப்பிட்டுக் கூறுகிற மாதிரி எதுவும் இருக்கவில்லை. ஒரு வகையான வெறுமையான சூழ்நிலை நிலவிக் கொண்டிருந்தது. மாலை நேரமென்று சொன்னேன் அல்லவா? ஆனால், இருட்டு பரவ ஆரம்பித்திருக்கவில்லை. மிகவும் சிறிய அளவில் ஒரு சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. அவ்வாறு அமர்ந்திருப்பதற்கு மத்தியில் நான் சென்று அறைக்குள்ளிருந்த டி.வி. பெட்டியை ‘ஆன்’ செய்தேன். என்ன நிகழ்ச்சி என்பதைப் பற்றியோ, யாருடைய நிகழ்ச்சி என்பதைப் பற்றியோ எந்தவொரு தீர்மானமும் இல்லை. தெரிந்து கொள்ள வேண்டுமென்ற எண்ணமும் இல்லை. திரையில் வருவது எதையும் நான் உண்மையிலேயே பார்ப்பதும் இல்லை...

யாரோ சிரமப்பட்டு நடந்துவந்து வராந்தாவில் நின்று கொண்டிருப்பதைப் போல எனக்குத் தோன்றியது. எழுந்து வெளியே சென்று பார்த்தபோது... சிரித்தவாறு ஒரு இளைஞன் நின்றிருந்தான். அவன் வீட்டுக்குள் வருவதற்காக ஷூக்களை கழற்றிக் கொண்டிருந்தான். அவன் எனக்கு முற்றிலும் அறிமுகமில்லாதவனாக இருந்தான். எனினும், நன்கு அறிமுகமானவனைப் போலிருந்த அவனுடைய சிரிப்பைப் பார்த்ததும்... நான் குழப்பதற்க்கு ஆளாகிவிட்டேன். நான் கேட்டேன்: ‘யாரு? என்ன விஷயம்?’

இளைஞன் எதுவும் பேசாமல் சிறிது ஆச்சரியத்துடன் என்னையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான். அவனிடம் பதைபதைப்பு இருப்பதைப் போலவும் தோன்றியது. எனினும், அந்த சமயத்திலும் அவனுடைய முகத்தில் சிரிப்பு தவழ்ந்து கொண்டிருந்தது.

நான் மீண்டும் கேட்டேன்: ‘யாரு? புரியலையே!’ அப்போதும் அவன் எதுவும் கூறவில்லை. ஆனால், முகத்திலிருந்து சிரிப்பு முழுமையாக மறைந்துவிட்டிருந்தது.

அவன் எந்தவித அசைவுமில்லாமல் என்னையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான். நானும் அவனையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன். எனக்கு எதுவுமே புரியவில்லை. அந்த இளைஞன்... மிகவும் சுதந்திரமாக மாலை வேளையில் என் வீட்டிற்குள் நுழைந்து வந்த அந்த இளைஞன்... யார் அவன்? எனக்குப் புரியவே இல்லையே!

ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக கண்ணாடியிலிருந்து பனிப்படலம் மறைந்துபோவதைப்போல எல்லா விஷயங்களும் தெளிவாகத் தெரிந்தன.

நான் ஆச்சரியத்துடன் கூறினேன்:

‘அஷ்ரஃப்!’

அஷ்ரஃப்- இரண்டு நாட்களுக்கு முன்புகூட என்னுடைய வீட்டிற்கு வந்திருந்த- எவ்வளவோ காலமாக நெருக்கமாக அறிந்திருந்த- பார்க்கமுடியாத நாட்களில் தொலைபேசி மூலம் பேசக்கூடிய...

அஷ்ரஃப் கேட்டான்:

‘என்ன நடந்தது?’

நான் அஷ்ரஃப்பிடம் சொன்னேன்.

‘எனக்கு எதுவுமே புரியவில்லை.... எதுவுமே...’

சிறிது நேரம் என்னவோ சிந்தனையில் மூழ்கிவிட்டு, டாக்டர் மீண்டும் கேட்டார்:

“அதற்கு பிறகு என்ன நடந்தது?”

அவர் சொன்னார்:

“பிறகு... பிறகு...”

இருட்டில் பார்க்க முடியாத எதையோ தேடிக் கொண்டிருப்பதைப்போல இருந்தது.

அவரால் வார்த்தைகளை முழுமை செய்ய முடியவில்லை.

ஆனால், பிறகு... திடீரென்று அவர் டாக்டரிடம் கேட்டார்:

“ரமேஷனை தெரியுமல்லவா? ரமேஷன்... கவிதைகள் எழுதக்கூடிய...”

ஆனால், டாக்டருக்கு ரமேஷனைத் தெரியவில்லை. எனினும், தெரியுமென்றோ தெரியாதென்றோ எதுவுமே டாக்டர் கூறவில்லை. ஆனால், டாக்டரின் வார்த்தைகளுக்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்காமல் அவர் தொடர்ந்து கூறினார்:

“ரமேஷனின் கவிதைகள் முதல்தரம் கொண்ட அருமையான கவிதைகள். எனக்கு மிகவும் பிடிக்கும். எனக்கு நண்பனாக இருக்கிறான் என்பதற்காகக் கூறவில்லை... அவனுடைய ஊருக்கு நான் சென்றதே அவனுடைய கவிதைகளைப் பற்றி உரையாற்றுவதற்குதான். நீண்ட நாட்களாகவே அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பிற்காகக் காத்திருந்தேன். நான் செல்லும் தகவலை ரமேஷனுக்கு தெரியப்படுத்தவே இல்லை. முன்கூட்டியே கூறியிருந்தால், ஒருவேளை ‘வேண்டாம்’ என்று கூறி தடுத்துவிடுவானோ என்ற பயம் எனக்கிருந்தது. ஆனால் அங்கு சென்றவுடன், நான் ஹோட்டலில் இருந்தவாறு அவனுக்கு ஃபோன் செய்தேன். ‘இப்போது இங்கே வர வேண்டாம். மாலை கட்டாயம் வர வேண்டும். நான் என்ன பேசுகிறேன் என்பதை...’

ரமேஷன் எதுவும் பேசாமலிருக்க, நான் கேட்டேன்:

‘நீ மாலையில் வருவாயல்லவா?’

ரமேஷன் சொன்னான்: ‘வராமலிருக்க முடியுமா? ஆனால்...?’

நான் சொன்னேன். ‘ஒரு ஆனாலும் இல்லை. வா... பிறகு என்னுடைய சொற்பொழிவு எப்படியிருந்தது என்பதை...’

நிகழ்ச்சி ஆரம்பித்தபோது ரமேஷன் முன்வரிசையில் உட்கார்ந்திருந்தான். நான் நல்ல ‘ஃபார்மில்’ இருந்தேன்.


நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்து கிடைத்த சந்தர்ப்பமாயிற்றே! நண்பனின் கவிதையைப் பற்றி உரையாற்றுவதற்கு... நான் ஒரு முக்கால் மணி நேரமாவது உரையாற்றியிருப்பேன். ஆனால், எல்லாம் முடிந்து, நேரம் அதிகமானபோதுதான் எனக்கே புரிந்தது... ரமேஷனைப் பற்றியோ ரமேஷனின் கவிதையைப் பற்றியோ நான் எதுவுமே என்னுடைய உரையில் கூறவேயில்லை. நான் கூறியது முழுவதும் கவிதையைப் பற்றியும், இலக்கியத்தைப் பற்றியும்தான். ஆனால், ரமேஷனின் கவிதையைப் பற்றி...

அதைப் புரிந்து கொண்டபோது எனக்கு உண்டான வருத்தம்... எனக்கு என்ன நடந்ததென்பதைப் பற்றியல்ல... ரமேஷன் என்ன நினைப்பான் என்பதைப் பற்றித்தான். ஆனால், ரமேஷன் எதுவுமே கூறவில்லை. எந்தவொரு வகையிலும் வெறுப்பை வெளிப்படுத்தவில்லை. எனினும், என்னுடைய கவலை, என்னுடைய வருத்தம்...”

அவர் நிறுத்தியவுடன், டாக்டர் கூறினார்:

“எனக்குப் புரிகிறது.”

அவ்வாறு கூறிய டாக்டர் சிந்தனையில் மூழ்கியவாறு அமர்ந்திருந்தார்.  அவருடைய முகம் முழுவதும் அன்பும் இரக்கமும் நிறைந்திருந்தன.

அப்போது திடீரென்று டாக்டரிடம் அவர் கேட்டார்:

“டாக்டர், நீங்கள் ‘ஆரோக்கிய நிகேதனம்’ என்ற நூலை வாசித்திருக்கிறீர்களா? மிகவும் புகழ்பெற்ற ஒரு...”

டாக்டர் சொன்னார்:

“வாசிக்கவில்லை. ஆனால், கேள்விப்பட்டிருக்கிறேன். நாடியைப் பிடித்து மரணத்தைப் பற்றிக் கூறும் ஒரு டாக்டரின் கதைதானே?”

அவர் அப்போது கோபத்துடன் கூறினார்:

“டாக்டரல்ல... வைத்தியர்... வைத்தியத்தில் கைதேர்ந்த மனிதர்... ஜீவன் மஸாய்... சரியாகக் கூறுவதாக இருந்தால், தன் வந்திரியின்...”

டாக்டர் எதுவுமே பேசாமலிருக்க, அவர் தொடர்ந்து கூறினார்:

“ஜீவன் மஸாய் கூறியிருக்கிறார்- நோய்கள் எதிர்ப்பு சக்தி கொண்டவை. அவை எப்போதும் நம்முடையே இருந்து கொண்டிருக்கின்றன. நம்முடைய ஒவ்வொரு அசைவையும் கவனித்தவாறு... நம்முடைய முடிவை எதிர்பார்த்துக் கொண்டு... ஒருமுறை கால் தவறிவிட்டால், இந்த எதிர்ப்பு சக்திகள் தனியாகவோ அனைத்தும் சேர்ந்ததோ தாவி விழும். சில நேரங்களில் நம்மை முழுமையாகவே அடிமைப்படுத்திவிடும். இல்லாவிட்டால்... அவை மீண்டும் சந்தர்ப்பத்திற்காகக் காத்திருக்கும்...”

அவர் நிறுத்தினார்.

டாக்டருக்குப் பின்னாலிருந்த சாளரத்தின் வழியாக வானத்தில் பரவியிருந்த மேகங்கள் தெரிந்தன. மேகங்கள் நகர்ந்து கொண்டிருந்தன. மேகங்களைப் பார்த்துக் கொண்டே அவர் தனக்குத்தானே சொல்லிக் கொள்வதைப்போல கூறினார்.

“நோய்களிலிருந்து சில நேரங்களில் தப்பித்துவிடலாம். ஆனால், இறுதியாக வரக்கூடிய அந்த ஆக்கிரமிப்பு இருக்கிறதே! மரணம்... அதிலிருந்து?”

டாக்டர் சிந்தனையில் மூழ்கியிருந்தார். அவர் மெதுவான குரலில் சொன்னார்.

“இப்போது அப்படியெதுவும் நினைத்துப் பார்க்க வேண்டிய அவசியமில்லையே!”

அவர் எதுவும் கூறாமல், எதையோ நினைத்துக் கொண்டு புன்னகைக்க முயற்சித்தார்.

இது... இந்த முறை வந்தபோது முதலில் நிகழ்ந்த உரையாடல்...

அறையில் இப்போது அவரும் மேனேஜரும் மட்டுமே இருந்தார்கள்.

அவர் அங்குள்ள கணக்குகள் முழுவதையும் சரிசெய்து விட்டிருந்தார். உடல் நலத்தையும் திரும்பப் பெற்றிருந்தார்.

இனி திரும்பிச் செல்லும் பயணம்...

அவரைப் பின்பற்றி காரை நோக்கிச் செல்லும்போது மேனேஜர் கூறினார்:

“கொஞ்ச நாட்களாகவே ஒரு கேள்வி கேட்க வேண்டுமென்று தோன்றிக் கொண்டே இருக்கிறது. முற்றிலும் தனிப்பட்டது. கேட்டால், கோபப்பட கூடாது.”

அவர் சொன்னார்:

“சொல்லுங்க...”

மேனேஜர் தயங்கிக் கொண்டே சொன்னார்:

“நீங்கள் பல நேரங்களிலும் சொல்லக்கூடிய அந்த புத்தகம் இருக்கிறதே! ஹேமிங்வே எழுதியது... அதில் அந்த காயம்பட்ட கர்னல்...”

மேனேஜர் முழுமை செய்வதற்கு முன்பே, சிரித்துக் கொண்டே அவர் சொன்னார்:

“புரிகிறது... அந்த கர்னல் நான்தானா என்று கேட்கிறீர்களா? இல்லை... நான் இல்லை...”

அப்போது மானேஜர் மீண்டும் கேட்டார்:

“அந்த இளவரசி...?”

அவர் மேனேஜரை வெறுமனே பார்த்தாரே தவிர, எதுவும் கூறவில்லை. இந்த முறை அவருடைய முகத்தில் சிரிப்பில்லை.

இதற்கு முன்பு தெரிந்திராத பாதைகளின் வழியாக கார் நகர்ந்துகொண்டிருந்தது. அந்த அளவிற்கு ஓட்டுநர் வேகமாக ஓட்டவில்லை. எனினும் அவர் சொன்னார்: “அவசரமில்லை... மெதுவாகப் போனால் போதும்...”

பின்னிருக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்த அவருக்கு அருகில், அவருடைய ப்ரீஃப்கேஸும் இருந்தது. அவருடைய பெரிய பெட்டி காரின் டிக்கியில் இருந்தது. பிறகு... அவர் ப்ரீஃப்கேஸை மடியில் எடுத்து வைத்துத் திறந்தார். ஏதாவது தனிப்பட்ட ஒரு நோக்கத்துடன் அவர் அந்த செயலைச் செய்யவில்லை. வெறுமனே... ஒரு நிமிடம்... ஏதோ சிந்தனையில் மூழ்கியவாறு...

ப்ரீஃப்கேஸில் குறிப்பாகக் கூறுமளவிற்கு எதுவுமில்லை. ஆனாலும், எதுவுமே இல்லையென்றும் கூறமுடியாது. அவருடைய சில பழைய தாள்கள், சில பழைய கடிதங்கள், முன்பு எப்போதோ எழுதி முழுமை செய்ய முடியாமல் அப்படியே வைத்துவிட்ட ஒரு கதை, இப்படி...

அவருக்கு நேரத்தைப் பற்றி எந்தவொரு உணர்வுமில்லை.

எப்போதோ ஓட்டுநர் கூறினார்.

“கோழிக்கோடு வந்துவிட்டது. ஏதாவது சாப்பிட்டுவிட்டு கொஞ்சம் ஓய்வெடுத்துவிட்டு...”

அவர் சொன்னார்:

“வேண்டாம். எனக்கு எதுவும் வேண்டாம். கொஞ்சம்கூட பசியில்லை. ஆனால், களைப்பு இருக்கிறது. ஆனால்... பரவாயில்லை. நீங்கள் எங்காவது ஒரு நல்ல ஹோட்டலுக்கு முன்னால் நிறுத்தி சாப்பிட்டுவிட்டு வாருங்கள். நான் இங்கேயே இருக்கிறேன்.”

ஓட்டுநர் சென்ற வேகத்திலேயே திரும்பி வந்தார். “என்ன... எதுவும் சாப்பிடவில்லையா?” என்று கேட்டதற்கு, “நான் ஒரு தேநீர் பருகினேன். அது போதும்” என்று அவர் சொன்னார்.

பயணம் மீண்டும் ஆரம்பித்தவுடன் அவர் ஓட்டுநரிடம் கூறினார்: “நாம் ‘திருநெல்லி’ வழியே போகலாம். இன்று அங்கு தங்கிவிட்டு, பிறகு...”

ஓட்டுநர் கேட்டார்:

“திருநெல்லி...?”

ஓட்டநர் அப்படியொரு ஊரைப் பற்றி கேள்விப்பட்டதேயில்லை. பிறகு... புறப்படும்போதோ பயணத்தின்போதோ அப்படியொரு இடத்திற்குப் போவதைப்பற்றி அவர் எதுவுமே கூறவில்லை. மேனேஜரும் கூறவில்லை. அதனால் ஓட்டுநரின் குரலில் ஆச்சரியம் நிறைந்திருந்தது.

அவர் ஓட்டுநரிடம் கூறினார்:

“திருநெல்லி புகழ்பெற்ற ஒரு கோவில் இருக்கும் இடம். இறந்து போனவர்களின் ஆன்மாக்களுக்கு சாந்தி கிடைக்க பிண்டம் வைக்கும் இடம். அங்கு காடும் நதியும் இருக்கின்றன. பிறகு வழி... யாரிடமாவது கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். நானும் இதுவரை அங்கு சென்றதில்லை...”

ஓட்டுநர் வழியைத் தெரிந்து கொள்வதற்காகச் சென்றபோது, அவர் தனக்குத்தானே கூறிக் கொண்டார்:

‘இறந்தவர்களின் ஆன்மாக்களுக்கு மட்டும் சாந்தி கிடைத்தால் போதுமா? உயிருடன் இருப்பவர்களுக்கும் வேண்டாமா? உயிருடன் இருப்பவர்களுக்காகவும் பிண்டம் வைக்கக் கூடாதா?’

பிறகு... நீண்ட நேரத்திற்குப் பிறகு, இருட்டைக் கிழித்துக் கொண்டு வண்டி உயரத்தை நோக்கி ஏற ஆரம்பித்தபோது, அவர் பின்னிருக்கையில் கண்களை மூடிக் கொண்டு படுத்திருந்தார். ஆனால், அவர் அப்போதும் உறங்கவில்லை. அவர் கனவு கண்டு கொண்டிருந்தார். அவருடைய கனவில் அவர் எந்தச் சமயத்திலும் பார்த்திராத திருநெல்லியில், இடைவெளியின்றி இருக்கும் காடுகளையும் நதியையும் தவிர, ஒரு காலத்தில் அவரை ஆழமாகக் காதலித்த ஒரு இளம் பெண்ணும் இருந்தாள்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.