Lekha Books

A+ A A-

ஒளிவிளக்கு - Page 2

Olivilakku

பருவமழையின் காரணமாக போர் தள்ளிப்போடப்பட்டது. அஜாதசத்ரு தன்னுடைய தலைமை. அமைச்சர் வர்ஷாகரை அழைத்தான். நகரத்தின் மையப்பகுதியில் ஒரு தனி இடத்தில் ‘பெனுபன்’ என்ற பெயரில் ஒரு தோட்டம் இருந்தது. பிம்பிசாரன் அதை புத்த பகவானுக்கு பரிசாக அளித்திருந்தான். ஒரு வெறித்தனமான இந்துவாக இருந்த அஜாதசத்ரு தனக்காக அதை கைப்பற்றிக் கொண்டான். இளம் மன்னனும் வயதான அமைச்சரும் அங்கு ரகசிய சந்திப்பை நடத்தினார்கள். நம்பிக்கையற்ற போக்கும், துரோகமும் நிறைந்த காலகட்டமாக அது இருந்தது. நகரெங்கும் ஒற்றர்கள் நிறைந்திருந்தார்கள். அவர்கள் துறவிகள், பிச்சைக்காரர்கள், சோதிடர்கள், விலைமாதர்கள், நடனக் கலைஞர்கள்- இப்படி எந்த வேடத்தையும் தரித்துக்கொண்டு நடமாடிக்கொண்டிருந்தார்கள். சமீபத்தில், வைஷாலியிலிருந்து நகரத்திற்கு ஒரு நடனப் பெண் வந்து சேர்ந்திருந்தாள். அவளுடைய பெயர் சாப்பலா. அவள் மிகவும் பேரழகு படைத்தவளாக இருந்தாள். நகரத்தில் உள்ள ஒவ்வொருவரும் அவளால் கவரப்பட்டனர். இளம் மன்னனான அஜாதசத்ருவும் அவளை நோக்கி ஈர்க்கப்பட்டான். அதே நேரத்தில் அவள் ப்ரிஜி அல்லது கோசலை நாட்டைச் சேர்ந்த ஒற்று வேலை பார்க்கும் பெண்ணாக இருப்பாளோ என்ற சந்தேகம் அவன் மனதிற்குள் இருந்தது. அதனால், மன்னன் மிகவும் கவனத்துடனேயே இருக்க வேண்டியதிருந்தது. சில நேரங்களில் அவன் தன்னுடைய தலைமை அமைச்சருடன் உரையாடிக்கொண்டிருக்கும்போது, மற்ற அமைச்சர்களைக் கூட அந்த அளவிற்கு நம்பமுடியாத சூழ்நிலைதான் இருந்தது.

தங்களுடைய ரகசியமான உரையாடல்களுக்குப் பிறகு, தலைமை அமைச்சர் வீட்டிற்குத் திரும்பி வந்தார். அந்த கிழட்டு அமைச்சரின் மங்கலாகிப்போன கண்களில் ஒரு ஒளி பளிச்சிடுவதையும், தன்னுடைய வறண்டுபோன, சுருக்கங்கள் விழுந்த உதடுகளில் புன்னகை தவழ்வதையும்- அந்த தோட்டத்தின் வெளிக்கதவிற்கு அருகில் காவலாளியாக நின்று கொண்டிருந்த மனிதன் கவனித்தான்.

இரவு உணவு முடித்து நான் தூங்குவதற்குத் தயாராகிக் கொண்டிருந்தேன். அப்போது என்னுடைய வேலைக்காரப் பெண், என்னைச் சந்திக்க விரும்பி ஒரு பெண் துறவி வந்திருப்பதாகக் கூறினாள். நான் ஆச்சரியப்பட்டேன். ‘ஒரு பெண் துறவி? அதுவும் இந்த இரவு வேளையிலா?’

அரசனால் மிகப்பெரிதாக மதிக்கப்படும் அந்த உயர்நிலையில் இருக்கும் பெண் என்னைப் போன்ற ஒரு சாதாரண மனிதனின் வீட்டிற்கு இந்த இரவு வேளையில் வருமளவிற்கு அப்படியென்ன வேலை இருக்கிறது? நான் அவளை வரவேற்று, வீட்டிற்குள் மரியாதையுடன் அழைத்துவந்தேன். அவளை வணங்கும் வகையில் தலையை குனிந்துகொண்டே சொன்னேன். “அம்மா, உங்களுக்காக நான் என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?”

அந்த வயதான மிடுக்கான பெண் என் மரியாதையால் மிகவும் ஈர்க்கப்பட்டுவிட்டாள். அவள் ஒரு பட்டாடையை அணிந்திருந்தாள். அவளுடைய நெற்றியில் ஒரு சிவப்பு நிற அடையாளம் இருந்தது. தன் கையில் நீளமான காம்பைகொண்ட தாமரை மொட்டினை வைத்திருந்தாள்.

அவள் சொன்னாள் : “மலர்களைக் கொண்டு நான் அம்மனை பூஜை செய்துகொண்டிருந்தேன். அப்போது இந்த தாமரை மொட்டு என்னுடைய மடிமீது வந்து விழுந்தது.”

அவள் எதற்காக இதைக் கூறுகிறாள் என்று எனக்குப் புரியவில்லை. அதனால் நான் கேட்டேன்: “அதற்குப் பிறகு?”

அவள் சொன்னாள் : “அம்மன் என்னை என்ன செய்யச் சொல்கிறாள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. நான் தியானத்தில் அமர்ந்தேன். அப்போது அம்மன் மெதுவான குரலில் என்னிடம் கூறினாள். ‘கட்டட வேலை செய்பவர்களின் தலைவரான குமார தத்தாவிடம்  இந்த தாமரை மொட்டைக் கொடு. இந்த மொட்டின் உதவியுடன் அவர் எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியும்’ என்று.”

நான் அவளையே ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன்.

அந்தப் பெண் துறவி சுற்றிலும் பரபரப்புடன் பார்த்தபடி தாழ்வான குரலில் சொன்னாள். “இந்த மொட்டினை எடுத்துக்கொள். உள்ளே விவரங்கள் இருக்கின்றன. உன்னுடைய வேலை முடிந்துவிட்டால், தயவு செய்து இதை அழித்துவிடு. ஞாபகத்தில் வைத்துக்கொள். இந்த மொட்டின் உதவியால் நீ அரசனின் அரண்மனைக்குள்கூட நுழையலாம்.”

இதைக்கூறி, அவள் என்னிடம் அந்த மொட்டினைத் தந்துவிட்டு கிளம்பிச் சென்றுவிட்டாள்: நான் முட்டாளைப் போல சிறிது நேரம் அமர்ந்திருந்தேன். முறையாக அவளை வழியனுப்புவதற்குக்கூட நான்- சொல்லப்போனால்- மறந்து விட்டேன்.

நான் ஒரு சாதாரண மனிதன். நான் தொழிலாளர்களுடன் பழகியிருக்கிறேன். அரண்மனைக்காக வேலை செய்யும் கட்டடக் கலைஞர்கள், ஆசாரிகள், மரவேலை செய்பவர்கள் ஆகியோரின் குழுவிற்குத் தலைவனாக இருந்திருக்கிறேன். திடீரென்று முக்கியமான நபர்களால் ஈர்க்கப்படும் மையப் புள்ளியாக எப்படி ஆனேன்? அதன் ரகசியம் என்ன? என்னுடைய சிறிய வீட்டிற்கு அந்த உயர்ந்த நிலையில் இருக்கும் பெண் துறவி வருகைதந்து ஏன் ஆசீர்வதிக்க வேண்டும்? எல்லா இடங்களுக்கும் செல்லலாம் என்ற சுதந்திரம் எனக்கு ஏன் கொடுக்கப்பட வேண்டும்? இந்த தாமரை மொட்டினை வைத்துக்கொண்டு  நான் எப்படிச் செயல்பட முடியும்? வேலை முடிக்கப்பட்டவுடன், நான் இதை ஏன் அழித்துவிட வேண்டும்? எனன் வேலை? இப்படிப்பட்ட மிகப்பெரிய சிக்கலுக்குள் இதற்கு முன்பு நான் எந்தச் சமயத்திலும் மாட்டிக்கொண்டதே இல்லை. அதனால், மிகுந்த ஆர்வத்துடன் நான் அமர்ந்திருந்தேன்.

அப்போது இரவு இரண்டாம் சாமம் கடந்துவிட்டிருந்தது. வேலைக்காரி தகவுக்கு வெளியே காத்திருந்தாள். சீக்கிரமாக வீட்டிற்குச் செல்ல வேண்டுமென்ற அவசரத்தில் அவள் இருப்பதைப்போல தோன்றியது. நான் அவளிடம் சொன்னேன். “வேண்டுமானால், நீ வீட்டிற்குப் புறப்படலாம். இப்போதே நேரம் அதிகமாகிவிட்டது.” மகிழ்ச்சியுடன் அவள் அங்கிருந்து கிளம்பினாள்.

நான் என்னுடைய படுக்கையறைக்குள் தாமரை மொட்டுடன் சென்றேன். விளக்கு வெளிச்சத்தில் அதை ஆராய்ந்து பார்த்தேன்... அதன் இதழ்களில் சில தெளிவற்ற குறிப்புகள் இருப்பதை கவனித்தேன். நான் மிகுந்த கவனத்துடன் இதழ்களைப் பிய்த்தேன். கருப்பு எழுத்தில் உள்ளே ஒரு தகவல் எழுதப்பட்டிருப்பதைப் பார்த்தேன். ‘இன்று நள்ளிரவு நேரத்தில் நீ மட்டும் தனியாக தலைமை அமைச்சரைப் போய்ப் பார்’- குறிப்பு வார்த்தையாக ‘குத்மல்’ என்று எழுதப்பட்டிருந்தது. அந்தத் தகவலுக்குக் கீழே மகத நாட்டின் அரசனின் முத்திரை இடப்பட்டிருந்தது.

இப்போது விஷயங்கள் கொஞ்சம் தெளிவாகப் புரிய ஆரம்பித்தன- அந்தப் பெண் துறவியின் ரகசியம் பொதிந்த வார்த்தைகள், அம்மன் தாமரை மொட்டை அளித்தது... தலைமை அமைச்சருக்கு முன்னால் வந்து நிற்கும்படி நான் மிகவும் ரகசியமாக அழைக்கப்பட்டிருக்கிறேன். ஆனால், இந்த ரகசியங்களெல்லாம் எதற்காக? முழு விஷயத்தையும் பற்றி எனக்கு தலையும் புரியவில்லை. வாலும் புரியவில்லை. நான் மிகவும் சாதாரணமான ஒரு மனிதன். என்னிடம் தலைமை அமைச்சருக்கு அப்படியென்ன வேலை இருக்கப்போகிறது! அந்த வயதான மனிதர் மிகவும் கோப குணம் கொண்டவர் என்று எல்லாரும் கூறுவார்கள். எனக்கே தெரியாமல் நான் ஏதாவது தவறு செய்துவிட்டேனா? என்னை கைது செய்து சிறையில் அடைப்பதற்காக வரவைத்திருப்பாரோ? யாருக்குமே தெரியாத ஒரு ரகசியக் கருவூலத்தைக் கட்டுவதற்காக நான் தேவைப்பட்டிருக்கலாம். அதனால்தான் என்னை இந்த வகையில் அழைத்திருக்கிறார்கள்!

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel