Logo

யானைக்கும் அடி சறுக்கும்

Category: சிறுகதைகள்
Published Date
Written by சித்ரலேகா
Hits: 9890

"மேனகா! அடுத்த வாரத்து பத்திரிகை வெளியாகற நாள் நெருங்கிடுச்சு. பிரபல சினிமா நடிகர்கள் கலந்துரையாடல் எழுதலாம்னு இருந்தோம். நீங்க இன்னும் அதைத் தயார் பண்ணவே இல்லையே?" பிரபல 'ரோஜா வார இதழ் பத்திரிகையின் உதவி ஆசிரியரான நளினி, ரிப்போர்ட்டர் மேனகாவிடம் கேட்டாள்.

"ஸாரி மேடம். ஒரு நடிகர் கிடைச்சார்னா இன்னொரு நடிகரோட அப்பாயிண்ட்மென்ட் கிடைக்க மாட்டேங்குது. மூணு பேரையும் ஒண்ணா சந்திக்க வச்சு கட்டுரை எழுதறதுதான் நம்ம ஐடியா. ஆனா, அந்த மூணு பேரும் சேர்ந்தாப்ல கிடைக்க மாட்டேங்கறாங்க. அதனாலதான் லேட்டாகுது..." மெதுவாக தயங்கியபடி பேசினாள் மேனகா. கல்லூரி படிப்பை முடித்துவிட்டு பத்திரிகையில் பணிபுரிய வேண்டும் என்ற ஆர்வத்துடன் 'ரோஜா பத்திரிகையில் சமீபத்தில் சேர்ந்திருந்தாள்.

பத்திரிகையின் அலுவல்களில் நேர்மையும், நேரம் தவறாமையும் கடைப்பிடிப்பதில் மிகவும் கண்டிப்பானவள் நளினி என்பதை புரிந்துக் கொண்டு செயல் படுபவள்.

"அப்படின்னா, இந்த வாரத்துக்கு வேற ஏதாவது இன்ட்ரஸ்டிங்கான ஆர்ட்டிகல் ரெடி பண்ணுங்க. அடுத்த வாரத்துக்குள்ள நடிகர்கள் கலந்துரையாடல் கட்டுரை ரெடி பண்ணிக்கலாம்."

"ஓ.கே. மேடம். மேடம், நான் வேலைக்கு சேர்ந்து ரெண்டு வாரமாச்சு. உங்க கணவரை நான் பார்க்கவே இல்லை. தினமும் உங்களை அழைச்சிட்டுப் போறதுக்கு வருவார்ன்னு சொன்னாங்க..."

"அவர் வர்றப்ப நீ வெளியில இன்ட்டர்வியூவுக்கு போயிடற. நீ ஆபீஸ் திரும்ப லேட்டாயிடுது. என்னிக்கு சந்தர்ப்பம் வாய்க்குதோ அன்னிக்கு பார்க்கலாம்."

"ஓ.கே. மேடம்."

நளினியின் அறையை விட்டு வெளியேறினாள் மேனகா.

நளினியின் கைதொலைபேசி ஒலித்தது. நம்பரை பார்த்த நளினி, புன்னகையுடன் பேச ஆரம்பித்தாள்.

"என்னங்க, என்ன விஷயம்?" மறுமுனையில் அவளது கணவன் ஸ்ரீராம் தொடர்ந்தான்.

"ரொம்ப நாளா, தியேட்டருக்கு போய் படம் பார்க்கணும்னு சொல்லிக்கிட்டு இருந்தேனே, இன்னிக்கு உனக்கு சீக்கிரம் வேலை முடிஞ்சுட்டா நாம போகலாம்."

"ஸாரிங்க. இந்த வாரத்துக்கே மேட்டர் இன்னும் முடிஞ்ச பாடில்லை. அடுத்த வாரம் கண்டிப்பா போலாம். உங்க ஆபீஸில என்ன வேலையே இல்லையா? ரெண்டாவது தடவை ஃபோன் போட்டுட்டீங்க?"

"அ... அ... அது வந்து... அது வந்தும்மா, இன்னிக்கு வேலையெல்லாம் நேத்தே முடிச்சுட்டேன். அதனால கொஞ்சம் இன்னிக்கு ஃப்ரீயா இருக்கேன். சரி நீ வேலையா இருப்ப. வீட்டுக்கு வந்து பேசிக்கலாம்."

"சரிங்க." தன் வேலைகளில் மூழ்கிப் போனாள் நளினி.

நளினியும், ஸ்ரீராமும் வீட்டிற்குள் நுழைந்தனர். வக்கீல் மூர்த்தி மாமாவின் குரல் கேட்டது.

"வாங்க.. வாங்க ரெண்டு பேரும் ஆபீஸ் வேலையை முடிச்சுட்டு இப்பதான் வர்றீங்களா? உங்களுக்காகத்தான் காத்திக்கிட்டிருக்கேன்."

மூர்த்தி, நளினியின் அப்பாவுடைய ஆத்மார்த்த நண்பர். நளினியின் குடும்பத்தில் ஒருவரைப் போல் உரிமையுடன் பழகுபவர். இவர்களது நலனில் மிக்க அக்கறை கொண்டவர். நளினியின் தந்தை இறந்தபிறகு, நளினியின் படிப்பில் இருந்து அவளது திருமணம் வரை, உற்ற துணையாய் உதவி செய்தவர். நளினியின் அம்மாவிற்கு உடன்பிறந்த சகோதரன் போல் ஆறுதல் கூறி ஆலோசனைகளையும் வழங்குவார்.

"என்ன மாமா வீட்ல விசேஷமா?" நளினி கேட்டு முடிப்பதற்குள் சமையலறைக்குள் இருந்து, அவளது அம்மா கௌரி, மணக்க மணக்க காபி டபராவுடன் வந்தாள்.

"இரும்மா, உனக்கும் மாப்பிள்ளைக்கும் காபி கலந்து எடுத்துட்டு வரேன்" மறுபடியும் உள்ளே போனாள்.

"சொல்லுங்க மாமா. நம்ப மாலுவுக்கு வரன் பார்த்தீங்களா?"

"அதைத்தாம்மா சொல்ல வந்தேன். வீட்ல விசேஷமான்னு நீயே கேட்டுட்ட. மாலுவுக்கு ஒரு நல்ல இடத்துல வரன் அமைஞ்சுருக்கு. பையன், பேங்க்ல வேலை பார்க்கிறான். ரொம்ப நல்ல பையன்."

"அப்பாடா, மாலுவோட கல்யாணம் ஒண்ணுதான் உங்களுக்கு கவலையா இருந்துச்சு. இப்ப அந்தக் கவலையும் இல்லை. ரொம்ப சந்தோஷமா இருக்கு மாமா."

அனைவரும் மகிழ்ச்சியுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

"நளினி, மூர்த்தி மாமாவுக்கு இருக்கற திறமைக்கு அவர் இந்நேரம் பெரிய பணக்காரர் ஆகியிருக்கணும். விவாகரத்து வழக்குல மிகத் திறமையா வாதாடக் கூடியவர். ஆனா, கணவன் பக்கமும், மனைவி பக்கமும் தீர விசாரிச்ச பிறகுதான் விவாகரத்து வாங்கிக் கொடுப்பார். சின்ன சின்ன காரணங்களுக்கெல்லாம் விவாகரத்துன்னு வர்றவங்கள சமாதானமா பேசி அவங்களுக்குள்ள பிரச்சனையை தெளிவாக்கி அவங்களை சேர்த்து வைச்சுடுவார். அந்தக் குடும்ப நேயத்தையெல்லாம் பார்க்காம, பணமே குறியா இருந்திருந்தார்னா, ஏகப்பட்ட தம்பதிகளுக்கு விவாகரத்து வாங்கிக் கொடுத்திருப்பாரு. நிறைய பணம் சம்பாதிச்சிருப்பாரு. அவரோட நல்ல மனசுக்கு அவர் பொண்ணுக்கு நல்ல மாப்பிள்ளையா கிடைச்சிருச்சு."

"இந்த சந்தோஷமான சமாச்சாரத்தை சொல்லிட்டுப் போலாம்னுதான் வந்தேன். நான் கிளம்பறேன்." மூர்த்தி கிளம்பினார்.

"சரிம்மா... நான் போய் முகம் கழுவிக்கிட்டு வரேன்." நளினி எழுந்தாள்.

"அத்தை, இனிமேல் நீங்க போய் ரெஸ்ட் எடுங்க. ராத்திரி டிபன் வேலையை நானும், நளினியும் சேர்ந்து செஞ்சுடறோம்."

"சரி மாப்பிள்ளை. பூரிக்கிழங்கு பண்றதுக்கு கிழங்கை வேக வச்சிருக்கேன். மத்ததை நீங்க பார்த்துக்கங்க." சொல்லிவிட்டு கௌரி தன்னறைக்குள் சென்றாள். பதினொரு மணி சீரியல் முடியும் வரை அவளுக்கு உலகம் தொலைக்காட்சிதான்.

சமையலறையில் சந்தோஷமாக சிரித்துப் பேசியபடி ஸ்ரீராமும், நளினியும் ஆளுக்கொரு வேலையாக பகிர்ந்துக் கொண்டு இரவு டிபன் வேலையை முடித்தனர்.

ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு அதன் பயனாய் 'நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் என்பது போல ஓருயிராய் வாழ்ந்து வந்தனர் நளினியும், ஸ்ரீராமும்.

நளினியின் அடக்கமான அழகும், அபாரமான அறிவுத் திறனும், பிரபல பத்திரிகையின் உதவி ஆசிரியராக உயர்ந்த நிலையில் தன் திறமைகளை வெளிப்படுத்தும் ஆற்றலையும் கண்டு அவள் மீது அளவற்ற ஈடுபாடு கொண்டான் ஸ்ரீராம். நளினியைப் பார்த்த நிமிடத்திலிருந்து அவளைத்தான் தன் மனைவியாக அடைய வேண்டும் என்று துடித்தான் ஸ்ரீராம்.

தீவிரமான ஆசை கொண்டான். அதன் பலன்? நளினியிடம் பொய் சொல்ல நேர்ந்தது. தனக்குக் கணவனாக வருபவன் பெரிய வேலையில் இல்லாவிட்டாலும் ஏதாவது ஒரு உத்யோகத்தில் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த நளினியிடம், 'தான் வேலையில் இல்லை; வேலையைத் தேடிக் கொண்டிருப்பவன் என்ற உண்மையை மறைத்து உத்யோகத்திலிருப்பதாக பொய் சொன்னான்.

அரசு பணியில் இருந்து ரிட்டயர் ஆன தன் தாயின் சேமிப்பும், பனிக்காலத் தொகையின் வட்டி மற்றும், தாயின் சொந்த வீடுகள் இரண்டை வாடகைக்கு விடுவதால் வரும் பணம் என்று தாராளமாய் பணம் இருப்பதைக் கூறியிருந்தான்.


அம்மா இறந்துவிட்டபடியால் அத்தனை பணமும், சொத்துக்களும் ஸ்ரீராமிற்கே சொந்தமானது என்றாலும் வேலையில்லாத வெட்டி ஆள் என்றால் நளினி தன்னை ஏற்றுக் கொள்ள மாட்டாள் என்று நன்றாகப் புரிந்துவிட்டபடியால் பொய் சொல்லி அவளை திருமணமும் செய்துக் கொண்டான். காலையில் வெளியே சென்று விட்டு மாலை ஆனதும் நளினியின் பத்திரிகை அலுவலகம் சென்று அவளை அழைத்து வருவதுமாக சந்தோஷ சாரலாக அவர்களது இல்லறம் நல்லறமாக இனித்துக் கொண்டிருந்தது.

'வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். வாசல் தோறும் வேதனை இருக்கும் கவிஞர் கண்ணதாசனின் தத்துவம் அவர்களது வாழ்விலும் தலையெடுத்தது.

கையில் ஒரு சில காகிதங்கள் அடங்கிய கவருடன் நளினியின் முன் வந்து நின்றாள் மேனகா.

"மேடம், நடிகர்கள் கலந்துரையாடலை அடுத்த வாரத்துக்கு மாத்திடச் சொன்னதுனால இந்த வாரத்துக்கு வேற ஒரு இன்ட்டர்வியூ தயார் பண்ணிட்டேன். ஆனா சினிமா சம்பந்தப்படாத பொதுச் சேவை செய்ற ஒரு நபரோட இன்ட்டர்வியூ மேடம்."

"பொது சேவைன்னா நல்ல விஷயம்தானே? அதையே போட்டுடலாம்."

"ஆனா மேடம், இந்த மனுஷனை பேட்டி எடுக்க சம்மதிக்க வைக்கறதுக்குள்ள பெரிய பாடாயிருச்சு மேடம்...."

"ஏன்?"

"அதென்னவோ தெரியலை. பத்திரிகை பேட்டின்னு சொன்னதும் 'வேண்டாம்ன்னு ஓடினாரு. ஸார், இது மலேஷியாவுல பிரபலமான 'சினி ஃபேஷன்' பத்திரிகையில வரப்போகுதுன்னு ஒரு ரீல் விட்டேன். உடனே சரின்னுட்டார். மலேஷியாவுல மட்டும்தானே வெளிவரும்னு தெளிவா தெரிஞ்சுக்கிட்டுதான் பேட்டிக்கு சம்மதிச்சார்."

"அப்பிடியா? ஏன் நம்ம தமிழ்நாட்டு பத்திரிகைகள்ல்லாம் போட்டா அவருக்குப் பிடிக்காதாமா?"

"அது என்னவோ தெரியலை மேடம்... ஆனா இவர் ரொம்ப நல்லவர். காலையில இருந்து சாயங்காலம் ஏழு மணி வரைக்கும் பொது நல சேவை மையங்களுக்கு போய் சேவை செய்யறார். தன்னார்வமாய் பணி புரியும் இவரைப் போன்றவங்களுக்கு அந்த சேவை மையங்கள் வழங்கும் சிறு தொகையை கூட வாங்கிக்க மாட்டாராம். ரொம்ப உண்மையானவர்."

"அது சரி... முழு நேரமும் சேவை செய்யறார்ன்னு சொன்னியே அவருக்கு வேலை ஏதும் இல்லையா?"

"இல்லை மேடம். ரெண்டு வருஷம் வேலைக்கு முயற்சி பண்ணினாராம். வேலை கிடைக்கலியாம். ஆனா இன்னும் வேலை தேடிக்கிட்டேதான் இருக்காராம். சொத்து பத்தோட வசதியா இருக்கறதுனால சிரமம் இல்லாத வாழ்க்கை..."

"சச்ச... ஒரு ஆண்மகன் உத்யோகத்துக்குப் போகாம இருக்கறது கொஞ்சம் கூட சரியில்லை. என்னதான் நாள் முழுக்க சேவை செஞ்சாலும் தனக்குன்னு ஒரு உத்யோகம், வருமானம் இதெல்லாம்தான் கௌரவம்..."

"ஒரு நிமிஷம் மேடம்.. நான் ஒண்ணு சொல்ல விரும்பறேன். ஊர்ல இருக்கற பிரம்மாண்டமான வளாகங்கள்ல்ல போய் பார்த்தீங்கன்னா வேலை இல்லாத ஆண்கள், கும்பல் கும்பலா உட்கார்ந்து வெட்டிக்கதை பேசி பொழுது போக்கிக்கிட்டிருக்காங்க. அவங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இவர் எவ்வளவோ மேலானவர்..."

"என்னமோ சொல்ற. இந்த வாரத்துக்கு நமக்கும் மேட்டர் வேணும். போட்டுடு. ஆனா... இந்த மலேஷிய பத்திரிகை அது இதுன்னு பொய் சொல்லியெல்லாம் பேட்டி வாங்கக் கூடாது. கவனம். இந்த விஷயத்துல நான் ரொம்ப கண்டிப்பு. இனி இந்த மாதிரி செய்யாத. பொய் சொல்லாத. இப்பவே அவருக்கு ஃபோன் பண்ணி உண்மையை சொல்லிட்டு மேட்டரை ரெடி பண்ணு. அது சரி... அவரோட பேரு என்ன?..."

"இவர் பேர் ஸ்ரீராம். இதோ... ஃபோட்டோ கூட எடுத்திருக்கேன் மேடம். பாருங்க..."

சொல்லியபடியே மேனகா, கவருக்குள்ளிருந்து ஃபோட்டோவை எடுத்தாள். நளினியின் மேஜை மீது வைத்தாள்.

தன் கணவன் ஸ்ரீராமின் புகைப்படத்தைப் பார்த்த நளினி திகைத்தாள். தடுமாறினாள்.

"மேனகா... இவர்... இவர்... இவரையா நீ பேட்டி எடுத்த...?"

"ஆமா மேடம். இவரேதான்." ஆணித்தரமாக மேனகா கூறியதும் மேலும் அதிர்ந்தாள் நளினி.

"மேனகா, நீ போயிட்டு ஒரு அரைமணி நேரம் கழிச்சு வா ப்ளீஸ்..."

நளினியின் முகத்தில் முத்து முத்தாய் வியர்வைத் துளிகள் தோன்ற, நெஞ்சத்தில் வேதனைத்தீ பற்றியது. எரிந்தது.

"என்னம்மா நளினி, ஒரு சின்ன விஷயத்துக்காக இவ்ளவு பெரிய முடிவு எடுக்கறது சரி இல்லம்மா. ஸ்ரீராம் நல்லவன். பேருக்கேத்தபடி ராமனா வாழறவன். வேலையில இல்லைங்கற  உண்மையை மறைச்சுட்டான்ங்கற ஒரு அற்ப காரணத்துக்காக விவாகரத்து வரைக்கும் போலாமாம்மா? தப்பும்மா...."

"நல்லா சொல்லுங்க மூர்த்தி அண்ணா..." சோகமும், கோபமும் கலந்து பேசினாள் கௌரி.

"மூர்த்தி மாமா, உங்களுக்கே தெரியும் என்னைப் பத்தி. பொய் சொன்னா எனக்குப் பிடிக்காது. வேலை செய்றதா சொன்னது தப்பு... இப்பிடி பொய் சொல்றது எந்த விதத்துல நியாயம்?"

"எந்த விதத்திலயும் நியாயமே இல்லதான். ஆனா நடந்தது நடந்துடுச்சு. மன்னிக்கறது தெய்வ குணம். மன்னிச்சுடேன்..."

"மன்னிக்கறதுக்கு நான் தெய்வம் இல்ல மாமா. சாதாரண மனுஷி. இந்த விஷயத்தை என்னால மன்னிக்கவும் முடியாது. மறக்கவும் முடியாது. நான் இனிமே அவரோட சேர்ந்து வாழ முடியாது. அவர் என்னை ஏமாத்திட்டாரு. எப்பிடி அவரால இப்பிடி ஒரு பொய்யான வாழ்க்கை வாழ முடியுது? ச்ச... நல்லா ஏமாந்திருக்கேன். நிச்சயமா இனி அவரோட என்னால வாழ முடியாது மாமா...."

ஸ்ரீராம் அங்கே வந்தான்.

"மூர்த்தி மாமா... நளினியே என்னைப் பிரிஞ்சு வாழ நினைச்சுட்டா. முடிவு பண்ணிட்டா. அவ இஷ்டப்படியே செஞ்சுடுங்க." தலை குனிந்தபடி கூறிவிட்டு வெளியேறினான்.

"பாவம்மா ஸ்ரீராம். அவனோட முகம் இவ்ளவு வாடிப்போய் நான் பார்த்ததே இல்லை. கொஞ்சம் யோசிம்மா. முன்ன பின்ன தெரியாத எத்தனையோ பெண்களுக்கு புத்திமதி சொல்லி, அவங்க மனசை மாத்தி அவங்க புருஷனோட சேர்த்து வச்சிருக்கேன். நீ.. என் ஆத்ம நண்பனோட பொண்ணு. உனக்குப் போய் நான் விவாகரத்து வாங்கறதா?... இதே ஸ்ரீராம் வேற விதத்துல தப்பு பண்றவனாவோ உன்னைக் கஷ்டப்படுத்தறவனாவோ இருந்தா நானே தட்டிக் கேட்பேன்மா. ஆனா அவன் வேலையில இல்லைங்கறது பெரிய தப்பு இல்லியேம்மா?"

"அதை ஏன் என் கிட்ட மறைக்கணும்?"

"வேலையில் இல்லைன்னு தெரிஞ்சா... நீ அவனை கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்க மாட்டியோன்னு உண்மையை மறைச்சிருப்பான்."

"உண்மையை மறைச்சுட்டார், உண்மையை மறைச்சுட்டார்னு கௌரவமா சொல்லிக்காதீங்க மாமா. அவர் சொன்னது பச்சைப் பொய். புளுகு மூட்டை. உத்யோகம் புருஷ லட்சணம். உங்களுக்குத் தெரியாததா?..."


"பொய் சொல்றது மனுஷ லட்சணம். பொய் சொல்லாத மனுஷங்களே கிடையாது. ஏன், நீ கூட எப்பவாவது ஏதாவது ஒரு காரணத்துக்கு பொய் சொல்லி இருப்ப. யாராவது ஃபோன் பண்ணினா 'எங்க அப்பா ஊர்ல இல்லைன்னு சொல்லுன்னு பொய் சொல்லச் சொல்லி, நாமளும் பொய் சொல்லி, மத்தவங்களையும் பொய் சொல்ல வைக்கிறோம். நல்ல விஷயம் நடக்கணும்னா அதுக்கு பொய் சொல்லலாம்னு புராணக் கதைகள் கூட இருக்கு. பொய்யே சொல்லாத அரிச்சந்திரனைத்தான் இன்னிக்கு வரைக்கும் உதாரணமா காட்டறோமே தவிர, 'என் அக்காவை மாதிரி உண்மை பேசறவ, எங்க அப்பாவைப் போல உண்மை மட்டுமே பேசறவர்ன்னு நம்பள்ல்ல யாரையுமே பொய் சொல்லாம இருக்கறதுக்கு உதாரணம் காட்டறதில்லை. ஏன்னா எல்லாருமே ஏதாவது ஒரு காரணத்துக்கு பொய் சொல்லிக்கிட்டுதான் இருக்கோம். இது பொய் கலப்பில்லாத உண்மை. நீ படிச்சவ. பத்திரிகை நிறுவனத்துல பொறுப்பான வேலை பார்க்கறவ. உன் கிட்ட கடைசியா கேக்கறேன். ஸ்ரீராம் வேலையில இல்லைங்கற விஷயத்தை பொய்யாக்கி அவனுக்கு ஒரு உத்யோகத்துக்கு நான் ஏற்பாடு பண்றேன்... நீ சம்மதம் சொல்லு..."

"இல்லை மாமா. அவர் என்னை ஏமாத்தினது தப்பு. அந்த நெருடல் என் மனசுக்குள்ள இருந்துக்கிட்டேதான் இருக்கும். என்னால அவர் கூட வாழ முடியாது."

நளினியின் பதிலைக் கேட்டு சோர்ந்து போனார் மூர்த்தி. கோபத்தின் உச்சக்கட்டத்திற்குப் போனாள் கௌரி.

"விடுங்க அண்ணா. அவளுக்கு புத்தி தெளியறப்ப தெளியட்டும்." கோபமாக பேசி விட்டுத் தன் அறைக்குச் சென்று விட்டாள் கௌரி.

பதிலேதும் கூறாமல் மௌனமாக வெளியேறினார் மூர்த்தி.

இயற்கை, இயல்பாக தன் கடமைகளை செய்து வந்தது. ஏழு நாட்கள் ஏழு வருடங்கள் போல் நகர்ந்தது நளினிக்கு. அலுவலகத்தில் வேலை முடிந்து ஆட்டோவில் ஏறுவதிலிருந்து வீட்டிற்குள் வந்து அன்றாடப் பணிகளைக் கவனிப்பது வரை அவளது எண்ணங்கள் அனைத்தையும் ஸ்ரீராமே ஆக்கிரமித்துக் கொண்டிருந்தான்.

வீட்டிற்கு வந்ததும் அவளுக்குக் காபி போட்டுக் கொடுப்பது, இரவு சமையலுக்கு அவளுடன் ஒரு உடன் பிறந்த தங்கையைப் போல, தாயைப் போல உதவி செய்வது, அவளது துணிமணிகளை அயர்ன் செய்துக் கொடுப்பது, லேஸாக தலை வலித்தால் கூட பதறிப் போய் இதமாக தைலம் தேய்த்து விடுவது போன்ற அன்பான கவனிப்புகளை நினைத்துப் பார்த்தாள்.

கௌரிக்கு வயதிற்கு மீறிய தளர்ச்சி ஏற்பட்டுவிட்டபடியால் காபி போடுவது, குக்கரில் சாதம் வைப்பது போன்ற எளிமையான வேலைகளை மட்டுமே பார்க்க முடியும். இதைப் புரிந்துக் கொண்டு கௌரியையும் தொல்லைப்படுத்தாமல், நளினிக்கும் அதிக வேலை பளு கொடுக்காமல் குடும்பப்பணிகள் அனைத்தையுமே பகிர்ந்து கொண்டான் ஸ்ரீராம். எல்லாம் புரிந்தும் கூட 'தான் ஒரு பத்திரிகையின் உதவி ஆசிரியர், அந்த நிறுவனத்தின் மேம்பாடுகள் தன் கையில்தான் ஒப்படைக்கப்பட்டுள்ளன. தன் நிர்வாகத் திறமை உயர்ந்தது என்ற சுய பிரதாப இயல்பு ஏற்படுத்திய ஆணவம், நளினிக்குள் தலை விரித்தாடியது. எனவே ஸ்ரீராம் பொய் சொல்லி ஏமாற்றியதைப் பற்றி நினைத்து கோபம் மாறாமலிருந்தாள்.

படுக்கையில் புரண்டபடி இருந்த நளினியின் கவனத்தைக் கலைத்தது காற்றில் காகிதம் படபடத்துப் பறக்கும் ஒலி. எழுந்தாள். தரையில், படபடத்துக் கொண்டிருந்த பேப்பரைப் பார்த்தாள். எடுத்துப் படித்தாள்.

"ஐயோ... " அலறினாள்.

அவளது அலறலைக் கேட்டு ஓடி வந்தாள் கௌரி.

"என்னம்மா... என்ன?"

"அம்மா, ஸ்ரீராம் தற்கொலை பண்ணிக்கப் போறதா எழுதி வச்சிருக்கார்ம்மா. என்னோட ரூம்ல வச்சிருக்காரு. காத்துல பறந்து கீழே விழுந்திருக்கு போல... ஐயோ நான் என்ன பண்ணுவேன்...."

"சரி வா, மூர்த்தி அண்ணா வீட்டுக்கு போய் அவர்கிட்ட விஷயத்தைச் சொல்லலாம்."

ஹேண்ட் பேக் ஐ எடுத்துக் கொண்டு வாசலுக்கு ஓடி ஆட்டோ பிடித்தாள் நளினி. கௌரியும் உடன் கிளம்பினாள்.

"வேகமா போப்பா."

ஆட்டோ விரைந்து பறந்தது.

"என்னமோ, ஸ்ரீராமை பிரிஞ்சு வாழத் தயாரா இருக்கேன். விவாகரத்து வாங்கிக் குடுத்தே ஆகணும். அவரோட என்னால சேர்ந்து வாழ முடியாதுன்னு சொன்ன. இப்ப தற்கொலை பண்ணிக்க போறார்ன்னதும் பதறிக்கிட்டு ஓடற? பிரிஞ்சு வாழத் தயாரா இருக்கற உன்னால அவனோட உயிர் பிரியறதை ஏன் தாங்கிக்க முடியலை...?"

"அம்மா... என்னை மன்னிச்சிடுங்க. எனக்கு புரிஞ்சுடுச்சு. அவர் இல்லாம நான் இல்லை. என் ஆணவமும், அகம்பாவமும் என் அறிவுக் கண்ணை மறைச்சுடுச்சு. எனக்கு அவர் வேணும். எனக்கு அவர் வேணும்." கதறி அழுத நளினியை மடியில் போட்டுத் தட்டிக் கொடுத்தாள் கௌரி.

மூர்த்தி மாமா வீட்டிற்குள் சென்றனர். அங்கே ஸ்ரீராம், சோகம் கப்பிய முகத்துடன் தளர்ந்து போய் உட்கார்ந்திருந்தான். ஸ்ரீராமை பார்த்ததும் நிம்மதிப் பெருமூச்சு விட்டாள் நளினி. மூர்த்தி மாமா சோகம் மாறாத முகத்துடன் காணப்பட்டார்.

இவர்களைப் பார்த்ததும் திடுக்கிட்டனர் இருவரும்.

"என்னம்மா.. என்ன ஆச்சு? மணி பத்தாகுது. இந்நேரம் ரெண்டு பேரும் வந்திருக்கீங்க?" கேட்ட மூர்த்தியிடம் தன் கையில் இருந்த கடிதத்தைக் கொடுத்தாள் நளினி. படித்துப் பார்த்த மூர்த்தி சிரித்தார்.

"இந்த லெட்டரை நீ நல்லா பார்த்தியா? இது ஸ்ரீராமோட கையெழுத்து இல்லைன்னு கூட உனக்குத் தெரியலை. ஏன்னா... நீ அந்த அளவுக்கு மன சஞ்சலத்துல இருந்திருக்க. உன் மனசெல்லாம் ஸ்ரீராம்ங்கற மந்திரம்தான் ஒலிச்சிக்கிட்டிருக்கு. இப்பவாவது மனசு மாறி வந்திருக்கியே. ரொம்ப சந்தோஷம்மா..."

"மூர்த்தி மாமா, நான் நளினி மேல என் உயிரையே வச்சிருக்கேன். இந்த உயிர் அவளோடது. அதைப் போக்கிக்க எனக்கு உரிமை இல்லை. இன்னொரு விஷயம், நளினியைப் பிரிஞ்சு வாழறது எனக்கு மிகவும் கொடுமையான விஷயம்தான். ஆனா, அதுக்காக தற்கொலைக்கெல்லாம் போக மாட்டேன். ஏன்னா, என் அன்பைத் தேடி, என் பாசத்தையும், நேசத்தையும் தேடி நளினி வருவாள்னு எனக்குத் தெரியும். நான் நம்பினேன். என் நம்பிக்கை வீண் போகலை. இதோ என் நளினி வந்துட்டா..."

இருவரும் கைகோர்த்துக் கொண்டனர்.

"அப்படின்னா இந்த தற்கொலை கடிதம்?" கௌரி நிதானமாய் தன் சந்தேகத்தைக் கேட்டாள்.

"இந்தக் கடிதம் நளினியோட ஃபைல்ல இருந்திருக்கணும். அவதான் நிறைய எழுத்தாளர்கள் எழுதி அனுப்பற கதைகளை படிக்கறவளாச்சே.


படிச்சுதானே பத்திரிகைக்குத் தேர்ந்தெடுக்கிறா? அப்படி யாரோ எழுதி அனுப்பின கதையில இப்பிடி ஒரு தற்கொலை பத்தின கடிதம் வந்திருக்கு. கதையோட  கடிதப் பக்கம் மட்டும் ஃபைல்ல இருந்து கீழே விழுந்திருக்கணும். அதை எடுத்து நளினி படிச்சிருக்கணும். ஸ்ரீராமைப் பிரிஞ்சு தவிச்சிக்கிட்டிருந்ததுனாலயும், சூழ்நிலை அதுக்கேத்த மாதிரி இருந்ததுனாலயும் நளினி, இந்த லெட்டரை எழுதினது ஸ்ரீராம்னு நினைச்சுட்டா. இதுதான் நடந்திருக்கணும்." மூர்த்தி விளக்கியதும் அனைவருக்கும் உண்மை புரிந்தது.

"மெத்தப் படிச்ச மேதாவியா இருந்தாலும், பாசம், அன்பு, குடும்ப நேயம்னு வர்றப்ப அந்தக் கடிதத்துல இருக்கற கையெழுத்து கூட தன் புருஷனோடது இல்லைன்னு தெரியாம மனசு பதறிப் போனா பாருங்க. அதுதான் பெண்மையோட இயல்பு. அங்க பாருங்க மூர்த்தி அண்ணா, சேர்ந்து வாழவே மாட்டேன்னு அடம் பிடிச்சவ, இப்ப மாப்பிள்ளையோட கையை இறுகப் பிடிச்சிக்கிட்டா." கௌரி சொன்னதைக் கேட்டு அனைவரும் சந்தோஷமாக சிரித்தனர்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.