Lekha Books

A+ A A-

ஒரு இளம் பெண்ணும் இருபத்தாறு ஆண்களும் - Page 2

oru ilam pennum irupattharu aangalum

பாட்டு பாடுபவர்கள் நீண்ட பெருமூச்சு விட்டுக் கொண்டிருப்பார்கள். திடீரென்று எங்களின் ஒரு ஆள் பாடுவதை நிறுத்திவிட்டு மற்றவர்கள் பாடுவதைக் கேட்டுக் கொண்டிருப்பான். பிறகு, அவனுடைய குரல் மீண்டும் அந்தக் குழுப்பாடலில் இணைந்து ஒலிக்க ஆரம்பிக்கும். "ஹா" என்று இன்னொரு தொழிலாளி துக்கத்துடன் அழுவான். அந்த இசை அருவி தூரத்தை நோக்கி நீண்டு போகிற ஒளியில் குளித்திருக்கும் ஒரு பாதையே எனவும், தான் அதில் நடந்து போய்க் கொண்டிருக்கும் மனிதன் என்றும் அவன் மனதில் நினைத்துக் கொள்வான்.

அப்போது அடுப்பில் தீ ஜுவாலைகள் ஜொலித்துக் கொண்டிருக்கும். பேக்கரின் கரண்டி சுடுகல்லில்தட்டும் சத்தம் பலமாகக் கேட்கும். பெரிய அண்டாவில் நீர் ஓசை உண்டாக்கியவாறு கொதித்துக் கொண்டிருக்கும். அமைதியான சிரிப்புடன் அந்த நெருப்பின் சாயல் சுவரில் துள்ளி விளையாடிக் கொண்டிருக்கும். எங்களுக்குள் இருக்கும் வேதனைகளைப் பற்றி, சூரிய ஒளி மறுக்கப்பட்ட பாதிக்கப்பட்ட மனிதர்களை அரித்துத் தின்று கொண்டிருக்கும் துன்பங்களைப் பற்றி, அடிமைகளின் மனவருத்தத்துடன், எங்களிடம் மட்டும் இருக்கும் வேதனைகள் என்றில்லாமல் நாங்கள் பாடிக் கொண்டிருப்போம். நாங்கள் இருபத்தாறு பேர் அந்தக் கல்லால் ஆன கூட்டிற்குள் வாழ்ந்தோம். அந்தக் கட்டிடத்தின் மேலே இருக்கும் மூன்று மாடிகளும் கட்டப்பட்டிருப்பது எங்களின் தோள்கள் மீதுதான் என்பதைப் போல் இருந்தது எங்களுடைய வாழ்க்கைச் சுமை.

அந்தப் பாட்டைத் தவிர, நாங்கள் விருப்பப்படும், நாங்கள் ரசிக்கும் வேறொன்றும் அங்கு இருந்தது. ஒரு வேளை எங்களுடைய மனங்களில் பிரகாசம் பரப்பிக் கொண்டிருந்த சூரிய வெளிச்சத்தைப் போல இருந்த ஒன்று அது என்று கூட கூறலாம். நாங்கள் இருந்த கட்டிடத்தின் முதல் மாடியில் ஒரு தையல் சாலை இருந்தது. அந்தத் தொழிற்சாலையில் வேலைக்காரியாகப் பணியாற்றிக் கொண்டிருந்தாள் பதினாறு வயது இளம் பெண்ணான டானியா. எங்களுடைய பேக்கரியின் வாசலில் இருக்கும் கண்ணாடியால் ஆன சாளரத்தின் மீது நீலநிறக் கண்களைக் கொண்ட அந்த இளம் சிவப்பு முகம் ஒட்டிக் கொண்டிருப்பதை நாங்கள் எல்லா நாட்களிலும் காலை நேரத்தில் பார்ப்போம். இனிமையாக அவள் எங்களை அழைப்பாள்.

"ஹலோ சிறைப் பறவைகளே! எங்களுக்குக் கொஞ்சம் பிஸ்கட் தருவீங்களா?" அந்த இயல்பான குரலைக் கேட்டு எங்களின் தலைகள் திரும்பும். மிகவும் இனிமை நயத்துடன் எங்களைப் பார்த்துச் சிரிக்கக் கூடிய அந்தக் கள்ளங்கபடமற்ற இளம் பெண்ணின் முகத்தையே நாங்கள் சந்தோஷத்துடன் பார்த்துப் புன்னகை செய்வோம். அவள் சாளரத்துடன் சேர்ந்து நிற்கும்போது பதிந்து போயிருக்கும் மூக்கின் நுனியையும் ஒரு சிறு சிரிப்பிற்காக மலரும்போது அந்த உதடுகளுக்கிடையே தெரியும் வெண்மையான பற்களையும் பார்ப்பது என்பது எங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய ஒரு விஷயமாக இருந்தது. அவளுக்காகக் கதவைத் திறப்பதற்காகப் போட்டி போட்டுக் கொண்டு ஒருவரையொருவர் இடித்துக்கொண்டு நாங்கள் ஓடி கதவுக்கு அருகில் போய் நிற்போம். மிகவும் வசீகரமான தோற்றத்துடன், உற்சாகமாகத் தன்னுடைய துணியை நீட்டியவாறு, தலையை ஒரு பக்கம் சாய்த்துக் கொண்டு, பிரகாசித்துக் கொண்டிருக்கும் முகத்துடன் அவள் அங்கு நின்றிருப்பாள். "செஸ்ட்நட்"டின் நிறத்தைக் கொண்ட நீளமான கூந்தல் தோள் வழியாக அவளுடைய மார்பின் மீது விழுந்து கிடக்கும்.

காட்டு வாழ் மனிதர்களைப் போல சுத்தமற்ற நாங்கள் அவளைப் பார்த்துக் கொண்டிருப்போம். நாங்கள் நின்று கொண்டிருக்கும் இடத்திலிருந்து நான்கு படிகளுக்கு மேலே அவள் நின்றிருப்பாள். நாங்கள் அவளுக்கு 'குட்மார்னிங்' கூறுவோம். நாங்கள் அப்படி கூறுவதற்கு ஒரு முக்கியத்துவம் இருந்தது. அவளுக்காக மட்டுமே நாங்கள் கண்டுபிடித்த  ஒன்று அது. அவளுடன் பேசும்போதெல்லாம் எங்களுடைய குரல் மிகவும் மென்மையாக மாறிவிடும். எங்களுடைய தமாஷான செயல்களை மிகவும் எளிதில் யாராலும் புரிந்து கொள்ள முடியும். அவளுக்காக நாங்கள் செய்த ஒவ்வொன்றும் குறிப்பிட்டுக் கூறும்படியாக இருக்கும். பேக்கர் தன்னுடைய கரண்டியின் உதவியால் ஒரு குவியலாக பிஸ்கட்டுகளை வாரி எடுத்து சிறிதும் இலக்கு தவறிவிடாமல் டானியாவின் துணியில் விழும்படி மிகவும் திறமையாகப் போடுவார்.

"உன்னோட இந்த ரகசிய வேலை முதலாளிக்குத் தெரியாதபடி பார்த்துக்கோ"- நாங்கள் பல நேரங்களில் அவருக்கு முன்கூட்டியே எச்சரிக்கைக் கொடுத்திருக்கிறோம். அப்போது குறும்புடன் புன்னகைத்தவாறு மகிழ்ச்சியுடன் "பை பை சிறைப் பறவைகளே!" என்று கூறியவாறு ஒரு மின்னலைப் போல அவள் மறைந்துவிடுவாள்.

அத்துடன் அந்த விஷயம் முடிந்துவிடும். ஆனால், அவள் போய் சிறிது நேரம் ஆன பிறகும் நாங்கள் அவளைப் பற்றியே பேசிக் கொண்டிருப்போம். நேற்றும் நேற்றைக்கு முந்திய நாளும் பேசிக் கொண்டிருந்த அதே விஷயங்களைத்தான் அன்றும் நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். நேற்றும் அதற்கு முந்தின நாளும் எங்களைச் சுற்றி நடைபெற்ற சம்பவங்கள்தான் அன்றும் நடந்து கொண்டிருந்தது. தன்னைச் சுற்றியுள்ள பொருட்களுக்கும் மற்ற விஷயங்களுக்கும் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் வாழ்க்கை தொடர்ந்து கொண்டிருப்பது என்பது ஒரு மனிதனைப் பொறுத்தவரையில் மிகவும் வேதனை தரக்கூடிய கடுமையான ஒரு விஷயம் என்பதே உண்மை. அது அந்த மனிதனின் ஆத்மாவை ஒரேயடியாக அழித்துவிடும். தன்னைச் சுற்றியிருக்கும் உலகத்தின் சலனமற்ற தன்மை அவனுக்குள் மேலும் அதிக வேதனையைத் தரும்.

பெண்களைப் பற்றி நாங்கள் மிகவும் மெதுவாகவும் வெட்கப்படும்படியாகவும் பேசிக் கொண்டிருந்தோம். எங்களுக்கு அறிமுகமாகியிருந்த பெண்கள் வேறு எந்த வகையிலும் கற்பனை பண்ணிப் பார்க்கத் தகுதியில்லாதவர்களாக இருந்தார்கள். ஆனால், டானியாவைப் பற்றி அசிங்கமாக ஒரு வார்த்தை கூட நாங்கள் பேசவில்லை. அவளை ஒருமுறை தொட எங்களில் யாருக்கும் தைரியம் வரவில்லை. எங்களிடமிருந்து ஒரு ஆபாசமான தமாஷைக் கூட கேட்கும்படியான சூழநிலை அவளுக்கு உண்டாகவில்லை. ஒருவேளை, அதிக நேரம் அவள் எங்களுடன் இல்லாமல் இருந்தது காரணமாக இருக்கலாம்.

வானத்திலிருந்து உதிர்ந்து ஒரு நிமிடம் மட்டும் எங்களுக்கு முன்னால் பளிச்சிட்டு நின்று கொண்டிருக்கும் நட்சத்திரத்தைப் போல தோன்றிய அடுத்த நிமிடமே அவள் எங்களை விட்டு மறைந்து விடுவாள். ஒருவேளை, அவள் மிகவும் இளவயதைக் கொண்டவளாகவும், அழகிய பெண்ணாகவும் இருந்தது காரணமாக இருக்கலாம். அழகான பொருட்களெல்லாம் கரடுமுரடான குணங்களைக் கொண்டவர்களிடம் கூட ஒருவித ஈர்ப்பைப் பெற்றுவிடுகிறது. எல்லாவற்றையும் விட கடினமான வேலை எங்களைப் பேச முடியாத மாடுகளாக மாற்றிவிட்டிருந்தாலும், சிறிதளவிலாவது மனித குணம் எங்களிடம் மீதமிருக்கவே செய்தது.

யாரையும் ஆராதனை செய்யாமல் வாழ முடியாத ஒரு கூட்டம், மனிதப் பிறவிகள்! அவளை விட அழகானவளாக நாங்கள் வேறொரு பெண்ணைப் பார்க்கவில்லை.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel