Logo

தர்மசாலையில்

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 6511
dharmasalaiyil

னாரஸ் கண்டோன்மென்டில் வண்டியை விட்டு இறங்கியவுடன் சிவப்பு ஆடையணிந்த ஒரு ரெயில்வே போர்ட்டர் என்னுடைய சாமான்களை எடுப்பதற்கு முயற்சித்தவாறு கேட்டான்: "கிதர் சாஹேப்?"

நான் சிறிது நேரம் தலையைக் குனிந்தவாறு யோசித்தேன். அந்த தர்மசாலையின் பெயர் என்ன என்பதை ஞாபகப்படுத்திப் பார்த்தேன். அப்போது அந்தப் பெயர் ஞாபகத்தில் வந்தது... "கிருஷ்ண தர்மசாலை" நான் போர்ட்டரைப் பார்த்துச் சொன்னேன்.

"ஸ்ரீகிருஷ்ண தர்ம சாலை..."- அந்தப் போர்ட்டர் தர்ம சாலையின் பெயரை நான் சரியாகச் சொல்லவில்லை என்று திருத்தினான்.

"இங்கேயிருந்து அது எவ்வளவு தூரத்தில் இருக்கு?"

"அப்படியொண்ணும் அதிக தூரமில்ல..."

அவன் என்னுடைய படுக்கையையும் பெட்டியையும் பிரம்புக் கூடையையும் தலையில் வைத்தவாறு எனக்கு முன்னால் நடந்தான்.

ஐந்து நிமிடங்கள் இருவரும் நடந்திருப்போம். அதற்குள் தர்ம சாலையை அடைந்துவிட்டோம்.

வராந்தாவில் நீளமான பைண்ட் செய்யப்பட்ட புத்தகங்களை முன்னால் வைத்துக் கொண்டு ஒரு மேஜைக்குப் பின்னால் கண்ணாடி போட்ட, முதுகு வளைந்த ஒரு வயதான கிழவர் வெற்றிலையை வாயில் மென்றவாறு என்னவோ எழுதிக் கொண்டிருந்தார். போர்ட்டர் என்னுடைய பொருட்களை அவருக்கு முன்னால் இறக்கி வைத்தான். அந்த மனிதர் கண்ணாடி வழியாக என்னைப் பார்த்தார். என்னுடைய நாகரீகமான தோற்றத்தைப் பார்த்து அவரின் முகத்தில் ஒருவித புன்சிரிப்பு தவழ்ந்தது.

"நீங்க எங்கேயிருந்து வர்றீங்க, சாஹேப்?"- சிரிப்பு தாண்டவமாடிக் கொண்டிருந்த தன்னுடைய முகத்தை ஒரு பக்கம் சாய்த்து வைத்துக் கொண்டு அவர் கேட்டார்.

நான் சொன்னேன், "மதராஸ்."

"மதராஸ்!"- தெற்கு திசையை விரலால் சுட்டிக் காட்டியவாறு அவர் நான் சொன்னதையே திருப்பிச் சொன்னார்,  "ராமேஸ்வரத்துக்குப் பக்கத்துல... அப்படித்தானே?"

அந்த மனிதரிடம் எதற்குத் தேவையில்லாமல் பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்று நினைத்த நான் 'ஆமாம்' என்ற அர்த்தத்தில் தலையை ஆட்டினேன்.

"சீக்கிரம் சொல்லுங்க, அறை காலியாக இருக்கா?"- நான் பொறுமை இழந்து கேட்டேன்.

"மன்னிக்கணும், சாஹேப். அறை கிடைக்கிறது சந்தேகம்தான். நாளைக்கு சங்க்ராந்தியாச்சே! அதுனால இங்கே ஏகப்பட்ட கூட்டம் இருந்தாலும் பார்ப்போம். ரொம்ப தூரத்துலயிருந்து வர்ற உங்களைத் திருப்பி அனுப்புறது அவ்வளவு நல்ல விஷயம் இல்லையே!"

அந்த மனிதர் தன்னுடைய முகத்தில் மீண்டும் அந்தப் பழைய புன்சிரிப்பைத் தவழ விட்டார். மேஜை மீதிருந்த அந்த பைண்ட் செய்யப்பட்ட பெரிய புத்தகத்தை தனக்கு முன்னால் விரித்து வைத்து காதில் சொருகி வைத்திருந்த பேனாவை எடுத்து மையில் தோய்த்து புத்தகத்தில் என்னவோ எழுதினார். பிறகு என்னுடைய முழுபெயர், தந்தையின் பெயர், வயது, தொழில், மாநிலம், சொந்த கிராமம், தபால் அலுவலகம், இங்கு எப்போது வந்தேன், எதற்காக இங்கு வந்திருக்கிறேன், எங்கிருந்து வந்திருக்கிறேன், எத்தனை நாட்கள் இங்கு தங்கியிருப்பேன், எப்போது திரும்பப் போவேன், எங்கு போவேன் என்று பல கேள்விகளையும் அவர் அடுத்தடுத்து கேட்டார். நான் முடிந்தவரை அவர் திருப்திபடுகிற மாதிரி பதில்களைச் சொல்ல, அவற்றை அவர் புத்தகத்தில் எழுதிக் கொண்டிருந்தார். இடையில் மதராஸ்காரர்கள் மிகவும் நல்லவர்கள் என்றும் பக்திமனம் கொண்டவர்கள் என்றும், கருணைமனம் உள்ளவர்கள் என்றும், தானம் செய்யும் குணம் கொண்டவர்கள் என்றும் பல விஷயங்களை அவர் சொன்னார். கடைசியில் புத்தகத்தில் ஒரு இடத்தைச் சுட்டிக்காட்டி, அந்த இடத்தில் என்னைக் கையெழுத்து போடும்படி சொன்னார். எல்லாம் முடிந்தபிறகு அவர் "கங்காராம்..." என்று உரத்த குரலில் அழைத்தார்.

அந்தச் சிறிய உருவத்தைக் கொண்ட மனிதருக்கு இவ்வளவு பயங்கரமான குரலில் அழைக்க முடியும் என்பதை யாரும் பொதுவாக நம்பமாட்டார்கள்.

"மேஹ்தாஜி" என்று சொன்னவாறு ஒரு சிறுவன் அடுத்த நிமிடம் அங்கு வந்து நின்றான்.

"சாஹேப்பிற்கு முப்பத்திரெண்டாம் நம்பர் அறையைக் காட்டு". போர்ட்டர் சாமான்களைத் தூக்கிக் கொண்டு பின்னால் நடந்தான். மேஹ்தாஜி என்னைக் கையால் காட்டி தடுத்து நிறுத்தினார்.

"சாஹேப், நீங்க அறையில மூணு நாட்கள் தங்கிக்கலாம். கட்டில் வேணும்னா கங்காராம்கிட்ட சொன்னா போதும். வாடகையா நாலணா கொடுக்கணும். அதைக் கொடுத்துட்டா அவன் கட்டிலைக் கொண்டு வந்து போட்டுடுவான். அதற்குப் பிறகு ஏதாவது தேவைப்பட்டால், கங்காராம் கிட்ட சொல்லிட்டா போதும். மதராஸ்காரர்கள் ரொம்பவும் பெரிய மனசுள்ளவங்கன்னு சொல்வாங்க."

அந்த தர்ம சாலையில் பணியாற்றுபவர்கள் இப்படி அடிக்கடி மதராஸ்காரர்களின் பெருந்தன்மையைப் பற்றி பாராட்டிப் பேசுவதில் அர்த்தம் இல்லாமலில்லை.

போர்ட்டர் என்னுடைய பொருட்களை முப்பத்து இரண்டாம் எண் அறையில் கொண்டு வந்து வைத்தான். நான் அவனுக்குத் தந்த இரண்டு அணாக்களைப் பார்த்து அவன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். கங்காராம் அங்கேயே நின்றிருந்தான்.

முப்பத்திரெண்டாம் எண் அறை அவ்வளவு ஒன்றும் சுத்தமாக இல்லை. கடைசி கடைசியாக இந்த அறையில் தங்கியிருந்தவர்கள் பார்சல் கட்டுவதற்காகப் பயன்படுத்திய தாள்களும் இலையும் நாரும் மற்ற குப்பைகளும் ஆங்காங்கே தாறுமாறாகச் சிதறிக் கிடந்தன. ஒரு சன்லைட் சோப் சுற்றப்பட்ட பேப்பரும் சிவப்பு வண்ணத்தில் இருந்த ஒரு கண்ணாடி வளையல் துண்டும் அறையின் மூலையில் கிடந்தன. அறைக்கு ஒரே ஒரு கதவு இருந்ததைத் தவிர, வேறெந்த ஜன்னல்களோ, ஓட்டைகளோ அங்கு இல்லை. அறையின் இரு பக்கங்களிலும் சுவரில் உண்டாக்கப்பட்ட அலமாரிகளிலொன்றில் மிகவும் தோய்ந்துபோன ஒரு சோப்புத் துண்டும் ஒரு அங்குலம் நீளத்தில் இருந்த மெழுகுவர்த்தியும் இருந்தன.

"இந்த அறையை நல்லபடி பெருக்கி சுத்தமாக்கணும்"- நான் கங்காராமைப் பார்த்துச் சொன்னேன்.

"இப்பவே செஞ்சிட்டா போச்சு!"

கங்காராம் அடுத்த நிமிடம் தோட்டியை அழைத்து வந்து அறையிலிருந்த குப்பை, தூசு எல்லாவற்றையும் சுத்தம் செய்ய வைத்தான். பிறகு அவன் ஒரு மடக்குக் கட்டிலை கொண்டு வந்து அறையின் ஒரு பகுதியில் போட்டான். சாமான்களை ஒரு மூலையில் ஒழுங்காக இருக்கும்படி வைத்தான்.

"வெளியே போறப்போ அறையைப் பூட்டுறதுக்கு பூட்டும் சாவியும் கையுல இருக்கா?"- கங்காராம் கேட்டான்.

"இல்ல. நீ ஒரு புது பூட்டும் சாவியும் வாங்கிட்டு வா. ஒரு பெரிய மெழுகுவர்த்தியும் ஒரு தீப்பெட்டியும் கூட வேணும்..."- நான் கங்காராமின் கையில் ஒரு எட்டணா நாணயத்தைக் கொடுத்தேன்.

கங்காராம் வெளியே போனபிறகு நான் அந்த மடக்குக் கட்டிலில் அமர்ந்து வெளியே தெரியும் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.


இந்த உலகமே ஒரு தர்மசாலைதான் என்று யாரோ எத்தனையோ வருடங்களுக்கு முன்பு சொன்னது இப்போதும் என் ஞாபகத்தில் இருக்கிறது. முப்பத்தி இரண்டாம் எண் அறையில் உட்கார்ந்து கொண்டு ஜன்னல் வழியாக நான்கு பக்கமும் பார்த்தபோது இந்த வார்த்தைகளின் அர்த்தம் எந்த அளவிற்கு உண்மையானது என்பது புரிந்தது. மூன்று பக்கங்களிலும் வரிசை, வரிசையாக அறைகளைக் கொண்ட ஒரு பழைய கட்டிடம். முற்றத்தின் மத்தியில் சில மரங்களும் பூந்தோட்டமும் இருக்கின்றன. முன்னால் ஒரு ஸ்ரீகிருஷ்ணன் கோவில். வலது பக்கத்தில் ஒரு பெரிய குளம். எங்கிருந்தோ இங்கு மனிதர்கள் வருகிறார்கள், நடமாடுகிறார்கள், இந்த இடத்தை விட்டுப்போகிறார்கள். முன்னாலிருக்கும் மாமரக் கிளைகளில் அமர்ந்து சிலர் அடுப்பை மூட்டி கோதுமையால் ரொட்டி சுட்டு தின்று கொண்டிருக்கிறார்கள். தங்களின் பொருட்களை ஒரு கோணியில் கட்டி தலையில் வைத்து சுமந்தவாறு தீர்த்த யாத்திரைக்கு வந்த ஒரு கூட்டம் வராந்தாவில் நின்று கொண்டிருக்கிறது. என்னுடைய அறைக்குப் பக்கத்து அறையில் இருக்கும் ஒரு விதவையான சீனாக்காரப் பெண்ணும் அவளின் நான்கு பிள்ளைகளும் இரண்டு குச்சிகளைக் கையில் வைத்துக் கொண்டு வாய்க்குள் எறிந்து எறிந்து சோற்றைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவள் பிரம்புக் கூடைகள் தயார் பண்ணி, இங்கு வரும் மனிதர்களுக்கு விற்பனை செய்து, அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் அவர்கள் வயிறு வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். முகம் முழுவதும் சொறி பிடித்த ஒரு தடிமனான மனிதன் முன்னாலிருக்கும் தோட்டத்தின் உயரம் குறைவான சுவரின் மீது அமர்ந்தவாறு ஒரு பூச்செடிக் குச்சியால் பற்களைச் சுத்தம் செய்து கொண்டிருக்கிறான். அவனுடைய கழுத்தில் தங்கத்தால் ஆன ஒரு பெரிய ருத்ராட்ச மாலை தொங்கிக் கொண்டிருக்கிறது. பருமனான உடம்புகளைக் கொண்ட ஐந்து திபெத்தைச் சேர்ந்த மனிதர்கள் தெற்கு பக்கம் இருக்கும் வாசலில் கோணியைத் தரையில் விரித்து வைத்து உட்கார வைத்திருக்கிறார்கள். முழங்கால்வரை வரக்கூடிய கறுப்பு நிறத்தில் இருக்கும் தோலால் ஆன காலணிகளை அணிந்து, வினோதமான ஒருவகை வண்ணத்தில் அமைந்த திரைச்சீலை போன்ற ஆடையை அணிந்து வித்தியாசமான தொப்பியையும் அணிந்து, மொத்தத்தில் பனிக்கட்டியைப் போல் தோற்றமளிக்கும் அந்த மனிதச் சிலைகளைப் பார்க்கும்போது மனதில் பயம்தான் தோன்றும். அவர்கள் ஒரு சிறிய மரப்பாத்திரத்தில் என்னவோ ஒரு பொடியைத் தூவி அதை விரலால் தடவியபடி வாயில் போட்டு தின்பதும், பால் கலக்காத தேநீரை ஒரு சிறு குடுவையில் ஊற்றி ரசித்து ரசித்து குடிப்பதுமாய் இருக்கிறார்கள். அவர்களுக்கு நேராக இருக்கும் அறையில் பட்டு மெத்தை விரிக்கப்பட்ட கட்டிலின் மேல் மிகவும் குள்ளமாக இருக்கும் ஒரு திபெத்துக்காரர் சப்பணம் போட்டு அமர்ந்து ஒரு ஜெபமாலையைக் கையில் வைத்துக் கொண்டு தன்னுடைய விரல்களால் அவற்றைத் தடவியவாறு வாயில் என்னவோ முணுமுணுத்துக் கொண்டிருக்கிறார். அவர்தான் அவர்களின் தலைவரான லாமா. நான் அந்தப்பக்கமாய் எட்டிப் பார்த்தபோது அந்த மஞ்சள் நிறத்தில் இருந்த மனிதன் நட்புணர்வுடன் என்னைப் பார்த்து இலேசாகப் புன்னகை புரிந்தார்.

ஆனால், அவர்கள் சிரிப்பதைப் பார்க்கும்பொழுது அழுவது போலவே இருக்கும். அவர்கள் லாஸாவில் இருந்து வந்திருக்கிறார்கள். கௌஸாம்பிக்கு தற்போது போய்க் கொண்டிருக்கிறார்கள். ஏதோ ஒரு அறையிலிருந்து இசைத்தட்டு முழங்கிக் கொண்டிருந்தது. கங்காஸ்நானம் செய்வதற்காக வந்திருக்கும் அதிகாரியும், அவரின் குடும்பமும், பிள்ளைகளும் ஐந்தாறு அறையைச் சேர்ந்தாற்போல் எடுத்துக் கொண்டு விளையாட்டும் ஆடம்பரமும் ஆர்ப்பாட்டமுமாக இருக்கிறார்கள். கைகளில் இருபத்தைந்து வெள்ளி வளையல்களையும், காலில் தடிமனான வெள்ளிக் கொலுசுகளையும், கால் விரல்களில் வெள்ளி மோதிரங்களையும் கழுத்தில் வெள்ளி மாலைகளையும் அணிந்து கை, மார்பு, கழுத்து, நெற்றி என்று ஒரு இடம் பாக்கி இல்லாமல் பச்சை குத்தியிருக்கும் ஒரு பெண். மென்மையான ஒரு வெள்ளை நிறப் புடவையால் உடம்பையும் தலையையும் மறைத்து, ஒரு கையில் ஒரு கட்டு விறகையும் ஒரு வெள்ளிப் பாத்திரத்தையும் எடுத்துக் கொண்டு இன்னொரு கையால் கண்பார்வை தெரியாத ஒரு சிறுவனை இடுப்பில் சேர்த்து பிடித்தவாறு நடந்து போய்க் கொண்டிருந்தாள். பெரிய தலையும் சிறு உடம்பும் கொண்ட ஒரு இளைஞன் தனக்குத்தானே என்னவோ உரத்த குரலில் சொல்லியவாறு எனக்கு முன்னால் வந்து நின்றான். நான் யாராக இருந்தாலும் பரவாயில்லை- பஞ்சாபியாக மட்டும் இருக்கக்கூடாது என்றான் அவன். பஞ்சாபிகள் என்றாலே அவர்கள் நூறு சதவீதம் சுயநலம் உள்ளவர்களாகவும் துரோகம் செய்யக்கூடியவர்களாகவும் வஞ்சகர்களாகவும்தான் இருப்பார்கள் என்று பயங்கர சத்தத்துடன் அவன் பேசினான். கிருஷ்ணகுமார் பாலி- இதுதான் அந்த நண்பனின் பெயர். அவன் லாகூரில் இருக்கும் ஒரு துணி நிறுவனத்தில் ஏஜெண்டாக இருக்கிறான். பல ஆர்டர்களைப் பிடித்து கம்பெனிக்கு அனுப்பியும், இதுவரை அவனுக்கு அந்தக் கம்பெனி சம்பளமோ, கமிஷனோ எதுவும் அனுப்பவில்லை. இப்போது இந்த மனிதன் கையில் காசே இல்லாமல் பனாரஸ் வீதிகளில் வெறுமனே சுற்றிக் கொண்டிருக்கிறான். ஒவ்வொரு நாளும் பணம் வந்திருக்கிறதா என்று விசாரிப்பதற்காக அவன் தபால் நிலையத்தைத் தேடிப் போவான். திரும்பி வந்ததும் பஞ்சாபிகளை வாய்க்கு வந்தபடி திட்டியவாறு மறுநாள் காலை வரை காத்திருப்பான். பிறகு தபால் அலுவலகத்துப் போவான். இதுதான் அவனின் அன்றாட வேலை. மூன்று நாட்கள் ஆனதும், தர்மசாலையில் இருக்கும் மேத்தாஜிக்கு இரண்டணா கொடுத்துவிட்டு வேறொரு அறைக்குப் போய்விடுவான். இப்படி பீகாரைச் சேர்ந்த பாலி பதின்மூன்று நாட்களாக இதே சத்திரத்தில் தன்னுடைய நாட்களை ஓட்டிக் கொண்டிருக்கிறான்.

குளக்கரையில் மனிதர்கள் சடங்குகள் முடித்து விட்டெறிந்த மண் பாத்திரங்கள் ஆங்காங்கே உடைந்து கிடந்தன. அவற்றின் மீது ஒரு கமண்டலமும் ஒரு கழியும் கிடந்தன. நேற்று அங்கு கிடந்து இறந்துபோன பிச்சைக்காரன் தனக்கென்று வைத்திருந்த சொத்துக்கள் அவை மட்டுமே. 'புராணமயா கித்தாப்' - ஒரு புத்தக வியாபாரி இப்படிக் கூறியவாறு ஒவ்வொரு அறையாக எட்டி எட்டிப் பார்த்தவாறு போய்க் கொண்டிருந்தான். சுமைகளைக் கட்டி தலையில் வைத்தவாறு மக்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். அவற்றைச் சுமந்து கொண்டும் மனிதர்கள் போய்க் கொண்டுமிருக்கிறார்கள். இசைத்தட்டிலிருந்து கிளம்பி வரும் இசை மீண்டும் ஒலிக்கிறது. வாசல் பகுதியில் இப்போது அடுப்புகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கின்றன. எங்கு பார்த்தாலும் புகை மயமாகவே இருக்கிறது. பக்தர் ஒருவர் வாசலில் அமர்ந்து உரத்த குரலில் துளஸிதாச ராமாயணத்தைச் சொல்லிக் கொண்டிருக்கிறார். கோவிலில் மணியோசை ஒலித்துக் கொண்டிருக்கிறது.


பஜனைக்காரர்கள் 'ஹரே கிருஷ்ணா' என்று உரத்த குரலில் சத்தமிடுகிறார்கள். உடல்நலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணைத் தாங்கிப் பிடித்தவாறு சிலர் குளக்கரையை நோக்கி அவளைக் கொண்டு போகிறார்கள். "மூணு நாட்கள்ல அறையை விட்டு போயிடணும்" என்று மேத்தாஜி யாத்திரை வந்திருக்கும் ஒரு மனிதரிடம் கண்டிப்பான குரலில் சொல்லிக் கொண்டிருக்கிறார். இடுப்பில் வெள்ளியால் ஆன ஒரு கொடியும் கழுத்தில் ஒரு தங்கச் சங்கிலியும் அணிந்த, ஆடைகள் எதுவும் அணியாத ஒரு சிறுமி பூந்தோட்டத்திலிருந்த சில மலர்களைப் பறித்து தன்னுடைய வயிறோடு சேர்த்துப் பிடித்துக்கொண்டு வாசலைத் தாண்டி வேகமாகப் போய்க் கொண்டிருக்கிறாள்.

பூட்டும் சாவியும் தீப்பெட்டியும் மெழுகுவர்த்தியும் வாங்கிக் கொண்டு கங்காராம் திரும்பி வந்தான்.

பல்வேறு வகைப்பட்ட மனிதர்கள் பிறகும் வந்துகொண்டே இருக்கிறார்கள். நான் எல்லா காட்சிகளையும் பார்த்தவாறு மனதிற்குள் ரசித்தவாறு அங்கேயே அமர்ந்திருக்கிறேன்.

கண்பார்வை தெரியாத ஒரு குருடனும் வயதான மனிதனும் ஒரு இளம்பெண்ணும் அப்போது அங்கு வந்தனர். அறைகளுக்கு மேலே எழுதப்பட்டிருக்கும் எண்களை வரிசையாகப் பார்த்துக் கொண்டே வந்த அந்த இளம்பெண் நான் தங்கியிருக்கும் அறை வந்ததும், நிற்கிறாள். அவளின் தோள் மீது கை வைத்தபடி அந்தக் கிழவன் நின்றிருக்கிறான்.

முப்பத்தியிரண்டாம் எண்ணைக் கொண்ட அறை ஏற்கனவே இன்னொரு மனிதனுக்குக் கொடுக்கப்பட்டு விட்டது என்பது தெரிந்ததும், அவள் மெதுவான குரலில் கிழவனிடம் என்னவோ சொன்னாள். அவர்கள் இருவரும் அறைக்கு முன்னால் என்னவோ மனதில் சிந்தித்தவாறு நீண்டநேரம் நின்று கொண்டேயிருந்தார்கள்.

அவர்களையே நான் உற்றுப் பார்த்தேன். அவர்கள் இருவரும் பிச்சைக்காரர்களாகத் தெரியவில்லை. கிழவனின் முகம் சிவந்து போன பரங்கி மாம்பழம்போல இருந்தது. அதிகம் நீளமில்லாத நரைத்த தாடியும் மீசையும் அந்த முகத்திற்கு ஒருவித கம்பீரத்தையும் அழகையும் தந்து கொண்டிருந்தன. இலேசாக நரை விழுந்திருந்த சுருள் சுருளான தலைமுடியை பின்பக்கமாக அவன் போட்டிருக்க, அது கழுத்தைச் சுற்றிலும் பரவிக்கிடந்தது. அவன் காவி நிறத்தில் ஒரு ஆடையை அணிந்திருந்தான். கழுத்தில் ஒரு தடிமனான ருத்திராட்சமாலை தொங்கிக் கொண்டிருந்தது. ஒரு கையில் வெள்ளி பூண் போட்ட ஒரு தடி இருந்தது. தோளில் ஒரு பெரிய வீணை இருந்தது. சில நிமிடங்கள் அவர்கள் அதே இடத்தில் நகராமல் நின்றிருந்தார்கள்.

அந்தக் கிழவனின் மனம் பார்வை தெரியாத கண்கள் வழியாக அந்த அறைக்குள்ளேயே சுற்றிச்சுற்றி வந்து கொண்டிருப்பதைப் போல் நான் உணர்ந்தேன். அந்தப் பெண் ஒருவித பரபரப்புடன் நான்கு பக்கமும் கண்களால் பார்த்தபடி கவலை பரவிய முகத்துடன் அமைதியாக நின்றிருந்தது என் மனதில் பலவித கேள்விகளை எழச் செய்தது. அவள் பார்ப்பதற்கு அப்படியொன்றும் அழகியில்லை. பெண்களுக்கே உரிய பல தகுதிகள் அவளிடம் குடிகொண்டிருப்பதாகக் கூறுவதற்கில்லை. அவளுடைய இளமைக்கு உரிய உயிர்ப்பும் சற்று குறைவாகவே அவளிடம் இருப்பதாக எனக்குப் பட்டது.

அந்த மடக்குக் கட்டிலின்மேல் அமர்ந்து அவர்களையே பார்த்தவாறு அமர்ந்திருந்த என்னுடைய முகத்தையே சிறிது நேரம் வைத்த கண் எடுக்காது பார்த்த அந்தப்பெண் கிழவனிடம் மெதுவான குரலில் என்னவோ சொன்னாள். அவளின் உதவியுடன் இரண்டு, மூன்று அடிகள் முன்னால் வந்த கிழவன் நான் அமர்ந்திருந்த கட்டிலுக்கு அருகில் வந்ததும் நின்றான். பிறகு தலையை உயர்த்தி கெஞ்சலான ஒரு பார்வையுடன் என்னை நோக்கியவாறு அவன் தயங்கிய குரலில் கேட்டான்: "சாஹேப், இந்த அறையில நீங்க இப்போ தங்கி இருக்கீங்களா?"

வேறொரு வேளையாக இருந்தால் சிறிதும் அர்த்தமே இல்லாத இந்தக்கேள்வியைக் கேட்டு நான் கோபத்தின் உச்சிக்கே சென்றிருப்பேன். ஆனால், அந்தக் கிழவனின் பணிவான தோற்றமும், அந்த இளம்பெண்ணின் அப்பாவித்தனமும் என்னிடம் கோபம் வராமல் தடுத்துவிட்டன.

"ஆமா... நான் இந்த அறையிலதான் தங்கியிருக்கேன். ஏன்? என்ன விஷயம்?"

என்னுடைய குரல் மென்மையாக இல்லை என்பதை நான் அறிவேன். அதில் அதிகாரத்தின் சாயலும், இலேசான வெறுப்பின் அடையாளமும் கலந்திருப்பதென்னவோ உண்மை.

"மன்னிக்கணும் சாஹேப். மன்னிக்கணும்"- அந்தக் கிழவன் ஒரு பழைய துணியைப் போல சுருங்கி என் முன்னால் நின்றான். "நான் வருடத்துக்கு ஒருமுறை இந்த ஊருக்கு வருவேன். ஒவ்வொரு முறை வர்றப்பவும் இந்த அறையிலதான் நான் தங்குவேன். இந்த வருடம் இந்த அறையில நீங்க தங்கியிருக்கீங்க. தயவுசெய்து இந்த அறையை எனக்காக நீங்க விட்டுத்தரமுடியுமா? அப்படி விட்டுத் தந்தீங்கன்னா, கடவுளோட அருள் உங்களுக்கு முழுமையா கிடைக்கும். அடுத்த அறை காலியா கிடக்குதுன்னு இவள் சொல்றா. சாஹேப், என்னை உங்களோட தகப்பனா நினைச்சு, நான் சொல்றதை நிறைவேற்றித் தருவீங்களா?"

கிழவனின் வார்த்தைகள் ஆர்வத்தைத் தூண்டக்கூடிய பல சந்தேகங்களை என் மனதில் உண்டாக்கின. சிறிது நேரம் அந்த மனிதனையே நான் உற்றுப் பார்த்தேன். அவன் வருத்தம் கலந்த உயிர்ப்பில்லாத ஒரு புன்சிரிப்பைத் தவழவிட்டவாறு வாயை இலேசாகத் திறந்து கொண்டு கவலைகள் இழையோடிக் கொண்டிருந்த துடிப்பில்லாத கண்களால் பேந்தப்பேந்த விழித்தபடி நின்றிருந்த கோலம் என் மனதிற்குள் புகுந்து என்னவோ செய்தது. அந்தப் பெண் அப்போதும் ஒருவித பதைபதைப்புடன் கையையும் காலையும் விறைப்பாக வைத்துக் கொண்டு நின்றிருந்தாள்.

"நீங்க என்ன சொல்றீங்கன்னே எனக்குப் புரியல. இந்தத் தர்மசாலையில் எவ்வளவோ அறைகள் ஆள் இல்லாம காலியா இருக்கு. அதுல ஏதாவதொரு அறையில போய் தங்காம இந்த முப்பத்தி இரண்டாம் எண் அறைதான் வேணும்னு பிடிவாதம் பிடிக்கிறதுக்கு என்ன காரணம்?  இந்த அறையை நான் ஏற்கனவே எனக்குன்னு எடுத்துட்டேன். அதை உங்களுக்கு விட்டுத்தர்றதுன்னா, அதுல எனக்குப் பல பிரச்சினைகள் இருக்கு!"

நான் என்ன சொல்ல வேண்டும் என்று நினைத்தேனோ, அதைச் சுருக்கமாகச் சொல்லிவிட்டேன்.

அடுத்த சில நிமிடங்களுக்கு அந்தக் கிழவன் எதுவுமே பேசவில்லை. தேவையில்லாத தலைவலி நம்மை விட்டு நீங்கியது என்று நான் நினைத்தேன்.

"போனவருடம் இந்த அறையை எனக்குக் கிடைக்கச் செய்யிறதுக்காக, ஏற்கனவே இதுல தங்கியிருந்தவங்களுக்கு ஒரு ரூபா கொடுத்தேன்" கிழவன் என்னை சந்தோஷப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு புதிய வலையை வீசினான்.

"ஆனா, லஞ்சம் தந்து என்னை இந்த அறையை விட்டு வேறொரு அறைக்கு மாறிப்போகச் செய்யலாம்னு உங்க மனசுல ஒரு நினைப்பு இருந்தா, அதை உடனடியா மாத்திக்கங்க. இந்த அறைதான் உங்களுக்கு வேணும்னு ஒரேயடியா பிடிவாதம் பிடிச்சு நிக்கறதுக்கான காரணத்தைத்தான் என்னால புரிஞ்சுக்கவே முடியல."


நான் சொன்னதைக் கேட்டு கிழவனின் முகத்தில் ஒரு பிரகாசம் உண்டானது. "சாஹேப், உங்களுக்கு லஞ்சப் பணம் தந்து உங்களை இந்த அறையை விட்டு என்னால போக வைக்க முடியாது. நான் எனக்கு இந்த அறைதான் வேணும்னு பிடிவாதமா கேக்குறதுக்கான காரணம் என்னன்னு நீங்க கேக்குறீங்க. அதற்கு பதில் தெரிஞ்சுக்கணும்னா, நீங்க ஒரு காதல் கதையையே கேட்டு ஆகணும். நீங்க கேட்க தயாரா இருந்தா, அந்தக் கதையைச் சொல்றேன். அந்தக் கதையை முழுசா கேட்டா, நிச்சயம் நீங்க என்னோட விருப்பத்தை நிறைவேற்றுவீங்க..."

என் மனதில் இருந்த ஆர்வம் மேலும் அதிகாரித்தது. நான் அவன் சொல்லப்போகிற கதையைக் கேட்கத் தயாராக இருப்பதாகச் சொன்னேன்.

அவன் அடுத்த நிமிடம் தன் கையிலிருந்த சுமையைக் கீழே இறக்கி, அதன் மேல் உட்கார்ந்து தோளில் வைத்திருந்த பிடிலை எடுத்து அதற்கு அருகில் வைத்தான். பிறகு ஒரு பெரிய புராண இதிகாசத்தைப் பற்றி சொற்பொழிவு நடத்துவதற்குத் தயாராவதைப்போல சிறிது நேரம் தியானத்தில் இருப்பதைப் போல் இருந்தான். சில நிமிடங்கள் கழித்து மெதுவான குரலில் சொன்னான்.

"என் பேரு மோகன்பாக். சொந்த ஊர் பாட்னா. நல்ல வசதியான குடும்பத்துல நான் பிறந்தேன். நான் வளர்ந்து வந்தப்போ, வயதான என்னோட தாய் மட்டும்தான் என் கூட இருந்தாங்க. எனக்கு இருபத்தஞ்சு வயசு நடக்குறப்போ பயங்கரமான அம்மை நோய் என்னை வந்து தாக்கினதுல, என் கண்கள் இரண்டும் பாதிச்சிடுச்சு. பார்வை முழுசா என்னைவிட்டுப் போன பிறகு, என்னோட முழு நேரத்தையும் நான் சங்கீதத்தை கத்துக்குறதுக்காகவே செலவழிச்சேன். பிடில் வாசிக்குறதுல தனிப்பட்ட கவனம் செலுத்தினேன். என்னோட தொடர் முயற்சியின் பலனா, ஒரு புகழ்பெற்ற பிடில் வாசிக்கிற மனிதனா என்னால ஆக முடிஞ்சது.

என் வீட்டுக்குப் பக்கத்துல புதுசா ஒரு குடும்பம் வந்து தங்க ஆரம்பிச்சது. ராமகோபால் வர்மான்ற தையல்காரனும் அவனோட ஏழு பெண் பிள்ளைகளும்தான் அது.

"தயவு செய்து இங்கேயிருந்து நான் சங்கீதத்தைக் கேட்கலாமா?"- பிடிலைக் கையிலெடுத்து பாடத் தொடங்கினப்போ ஒரு நாள் காலையில இப்படியொரு கேள்வி எனக்குப் பக்கத்துல கேட்டது.

"தாராளமா..."- நான் எனக்குப் பக்கத்துல வந்து நின்ன இளம் பெண்ணை அன்போட வரவேற்றேன். "ஆமா... நீ யாரும்மா?"

"நான் பக்கத்து வீட்டுல இருக்குற தையல்காரன் ராமகோபாலனோட நாலாவது பொண்ணு. என் பேரு பிரபாவதி."

எல்லா காலை வேளைகளிலேயும் நான் பிடில் வாசிப்பதைக் கேட்கிறதுக்காக என்னைத் தேடி வந்திடுவா. அவள் ரொம்பவும் அழகான பொண்ணுன்னு என் தாய் ஒரு நாள் ஏதேச்சையா என்கிட்ட சொன்னாங்க. ஆனா, அவளோட இனிமையான குரல்தான் என்னை ரொம்பவும் பாதிச்சது. அவளோட உடலழகைப் பார்த்து சந்தோஷப்படுற வாய்ப்பு எனக்குக் கிடைக்காமற் போனாலும், அவளோட குரலை நான் ரொம்பவும் ஈடுபாட்டோட ரசிச்சேன். நான் பிடில் வாசிக்கிறதை அவள் கவனமா கேக்குறான்ற எண்ணம் என்னோட பாட்டுக்கு ஒரு உயிர்ப்பையும் பலத்தையும் தந்துச்சு. அவ எதுவுமே பேசாம அமைதியா இருந்தாலும், அதுல ஒரு சங்கீதம் இழையோடி இருப்பதை நான் மனப்பூர்வமா உணர்ந்தேன்.

கொஞ்ச நாள் கழிச்சு பிரபாவதி தேவி என்னோட சிஷ்யையா மாறிட்டா. அவளுக்கு நான் படிப்படியா சங்கீதப் பாடங்களைச் சொல்லித்தர ஆரம்பிச்சேன்.

தன்னுடைய சுமையை அவிழ்த்து அதிலிருந்த தாம்பூலத்தைத் தடவி கண்டுபிடித்து கிழவன் போட ஆரம்பித்தான். கூடை நிறைய முட்டைக்கோஸ்களையும் வேறு சில காய்கறிகளையும் சுமந்துகொண்டு ஒரு கிழவி அப்போது வராந்தாவில் வந்து நின்றாள். அவள் என்னுடைய அறையைப் பார்த்து நின்றாள். நான் அவளைப் பார்த்து போகும்படி சொன்னேன்.

வெற்றிலையைப் போட்டவாறு கிழவன் பேசத் தொடங்கினான்.

"என்னோட வயதான தாய் ஒரு நாள் இறந்துட்டாங்க. என்னோட மூத்த அக்காவை ராஜகிரியில கல்யாணம் பண்ணிக் கொடுத்திருந்தோம். அம்மா செத்துப்போன பிறகு எந்தவித ஆதரவும் இல்லாத ஒரு மனிதனா நான் ஆன பிறகு, என்னை ராஜகிரிக்கு வரும்படி என்னோட அக்கா பலதடவை கூப்பிட்டாங்க. ஆனா, நான் தான் போகல. பிரபாவைவிட்டு ஒரு அங்குலம்கூட அப்பால நகர்ந்து போறதுக்கு என் மனசு இடம் கொடுக்கல. கண் பார்வை தெரியாமல் இருள்ல இருந்த இந்த குருட்டு பாடகனோட மனசுக்குள்ளே ஒரு தீப ஒளியா இருந்தா அந்த பிராமண இளம் பெண். பிரபாவைத்தான் சொல்றேன். ஆமா... அவ ஒரு பிராமண குடும்பத்துல பிறந்த பெண்தான். நானோ வைசியன். என் வாழ்க்கையை முழுசா பிரபா பாதிச்சிருந்தா.

இருட்டுல மலர்ற முல்லைப் பூவைப் போல என்னோட இதயத்துல காதல்ன்ற ஒரு உணர்வு மலர ஆரம்பிச்சது. ஒரு நிலாவைப் போல அவள் என் வாழ்க்கையில கலந்துட்டா. எங்களையும் அறியாமலே நாங்க ரெண்டு பேரும் இரண்டறக் கலந்தோம். ஆனால், எங்களைச் சுற்றியிருந்த சூழ்நிலை எங்களோட காதலுக்கு ஆதரவா இல்ல.

பிரபா சொன்னபடி நாங்க ரெண்டு பேரும் அந்த ஊரை விட்டு ஓடிவிடுறதா தீர்மானிச்சோம். நான் பாட்னாவுல இருந்த எங்களோட சொத்துக்களையெல்லாம் விற்றேன். ஒரு நாள் சாயங்காலம் யார்கிட்டயும் ஒருவார்த்தை கூட சொல்லாம நானும் பிரபாவும் ஊரைவிட்டு கிளம்பிட்டோம். மீர்காபூருக்குப் பக்கத்துல இருக்குற பிந்தாசலம்ன்ற ஊர்ல கங்கை நதியோட வலது பக்கம் இருக்குற கரையில சின்ன ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து நாங்க வாழ்க்கையைத் தொடங்கினோம். எங்களோட திருமணம் அங்கேதான் நடந்தது.

ஒரு குருடனோட திருமணம்! நல்ல கண் பார்வையோட இருக்குற உங்களுக்கு அதை மனசுல கற்பனை பண்ணிக்கூட பார்க்க முடியாது. சங்கீதத்துல ஓசையைப் போல பிரபா என்னோட ஒவ்வொரு துடிப்புலேயும் கலந்திருந்தா. சொத்தை விற்று என் கையில இருந்த பணத்துல கொஞ்சம் எடுத்து அவளுக்கு நான் நகைகள் செய்து போட்டேன். அவளோட கழுத்துல நிறைய தங்க மாலைகளும், கைகள்ல நாலஞ்சு வகைப்பட்ட தங்க வளையல்களும் செய்து போட்டேன். எல்லா நகைகளையும் போட்டு எனக்கு முன்னாடி அவளை நிற்க வைத்து, அந்த தங்கச் சிலையை என் மனக்கண்ணால நான் பார்த்தேன். கொஞ்ச நாட்கள் ஆன பிறகு நான் பணம் போட்டு வைச்சிருந்த வங்கி திவாலாயிடுச்சு. பிரபாவோட நகைகள் மட்டும்தான் கடைசியில மீதமா இருந்தது.


கையில இருந்த கொஞ்ச பணத்தை எடுத்துக்கிட்டு நானும் பிரபாவும் வட இந்தியாவுல இருக்கிற புண்ணிய இடங்களைப் பார்க்கிறதுக்காக கிளம்பினோம். அப்படித்தான் நாங்க பனாரஸுக்கு வந்தோம். இந்த தர்மசாலையிலதான் நாங்க ரெண்டு பேரும் தங்கினோம். இந்த முப்பத்திரெண்டாம் எண் அறையிலதான். மனசுல ஏகப்பட்ட கவலைகள் அலைக்கழிச்சுட்டு இருக்க நான் அந்த சாயங்கால வேளையில பிரபாவைப் பார்த்து சொன்னேன், "கண்ணு... என் கையில இருந்த கடைசி காசு கூட செலவாயிடுச்சு. இனி உன் நகைகள்ல ஏதாவது ஒண்ணை விற்கிறதைத் தவிர நமக்கு வேற வழியே இல்ல..."

"இப்பவே வேணுமா?"

அவளோட குரல்ல இலேசான ஒரு தடுமாற்றம் தெரிஞ்சது.

"வேண்டாம். நாளைக்குக் காலையில கொடுத்தா போதும்" - என்னோட மனசுல இருந்த வேதனையை ஒரு பக்கம் அடக்கிக்கிட்டு நான் சொன்னேன்.

அடுத்த சில நிமிடங்களுக்கு கிழவன் எதுவுமே பேசாமல் மிகவும் அமைதியாக உட்கார்ந்திருந்தான். பிறகு கவலை தோய்ந்த குரலில் அவன் சொன்னான். 

"அன்னைக்கு ராத்திரி அவள் இறந்துட்டா..."

அதைக்கேட்டு நான் உண்மையிலேயே அதிர்ந்துபோய்விட்டேன். அவன் சொல்லிக் கொண்டிருந்த கதையில் திடீரென்று எதிர்பாராத ஒரு திருப்பம் உண்டானதுபோல் இருந்தது. அவனுடன் இருந்த பெண்தான் பிரபா என்று இவ்வளவு நேரமும் நினைத்துக் கொண்டிருந்தேன்.

"இறந்துட்டாளா? எப்படி?"

"எப்படி அவ இறந்தான்னு நான் சொல்றது? மறுநாள் காலையில பொழுது விடியிற நேரத்துல அவளை நான் எழுப்பினேன். அவள் எழுந்திரிக்கல. நான் அவளை உலுக்கினேன். அவளோட உடம்பு ரொம்பவும் குளிர்ந்து போய் இருந்துச்சு. கொஞ்சம்கூட அதுல அசைவு இல்ல. இருந்தாலும் என்னால நம்ப முடியல. நான் உரக்க வாய்விட்டு அழுதேன். பக்கத்து அறைகள்ல இருந்து ஆளுங்க அழுகைச் சத்தம் கேட்டு ஓடிவந்தாங்க. அவங்க அமைதியாக நின்னுக்கிட்டு இருந்ததை வச்சு நானே ஒரு முடிவுக்கு வந்துட்டேன். பிரபா இனிமேல் எந்தக் காலத்திலேயும் நான் கூப்பிடுறதைக் கேக்கப்போறதில்லேன்னு."

அந்தக் கிழவனின் சாம்பல் நிறக் கண்களிலிருந்து இரண்டு சொட்டு தண்ணீர் கீழே விழுந்தது. "இன்னைக்குத்தான் அவள் இறந்தநாள். ஒவ்வொரு வருடமும் நானும் வாசந்தியும் இந்த தர்மசாலைக்கு வருவோம். இந்த முப்பத்திரெண்டாம் எண் அறையிலதான் எப்பவும் நாங்க தங்குவோம். ராத்திரி முழுக்க நான் பழைய பாடல்களைப் பிரபா கேட்கணும்ங்கறதுக்காக பாடிக்கிட்டு இருப்பேன்..."

அந்தக் கிழவன் கெஞ்சலான ஒரு கோரிக்கையுடன் முகத்தை வைத்துக் கொண்டு எனக்கு நேராக தன் பார்வை தெரியாத கண்களை உயர்த்தினான்.

அவன் சொன்னது அப்படி ஒன்றும் ஆச்சர்யப்படக்கூடிய காதல் கதை இல்லைதான். இருந்தாலும் ஒவ்வொரு ஆண் மகனுக்கும் தன்னுடைய காதல் கதைதான் உலகத்திலேயே மிகவும் ஆச்சர்யப்படத்தக்க, ஆனந்தமயமான ஒன்று என்று தோன்றுவதுதான் உண்மையிலேயே வினோதமானது.

முப்பத்தியிரண்டாம் எண் அறையை அந்தக் கிழவனுக்காக நான் விட்டுக் கொடுக்கத் தீர்மானித்தேன். ஆனால், அதற்கு முன்னால் அந்த ஆளைப் பார்த்து நான் ஒரு கேள்வி கேட்டேன்.

"ஆமா... இந்த வாசந்தி யார்?"

இந்தக் கேள்வியைக் கேட்டதும் கிழவனின் முகம் மிகவும் பிரகாசமானது. "இவள் என்னோட மகள். கடவுளா பார்த்து எனக்காக அனுப்பி வைச்ச மகள். இந்த தர்மசாலையில தான் இவ எனக்குக் கிடைச்சா. பிரபா என்னை விட்டுப்போன இரண்டு நாட்கள் கழிச்சு உலகத்துல இருக்குற தனிமை எல்லாம் ஒண்ணு சேர்ந்து எனக்குள்ள நுழைஞ்சு என்னைப் பாடாய்ப்படுத்திக்கிட்டு இருந்த நிமிடத்துல மனதுக்கு நிம்மதி தர்ற ஒரு குரல் என் பக்கத்துல கேட்டது. "பாபுஜி, நான் உங்களோட ஆதரவில்லாத நிலையை நல்லா அறிவேன். நானும் ஒரு ஆதரவில்லாத அனாதைதான். நீங்க என்னை ஒரு மகளா ஏத்துக்குவீங்களா?"

நான் அதற்கு மேலே அவள்கிட்டே எந்தக் கேள்வியும் கேட்கல. தெய்வமா பார்த்து அனுப்பின அந்தப் பெண்ணை நான் மார்போடு சேர்த்து இறுக அணைச்சு கண்ணீர் விட்டேன். பிரபாவோட இழப்புக்கு கடவுள் எனக்கு ஈடுகட்டி விடுறார்னு நான் நினைச்சேன். இந்தச் சம்பவம் நடந்து ஏழு வருடங்கள் கடந்தோடியாச்சு. இன்னைக்கும் வாசந்தி எனக்கு ஒரு ஊன்றுகோலாகவும் துணையாகவும் இருந்து என்னை வழிநடத்திக்கிட்டு இருக்கா. இங்க பாருங்க... பிரபாவோட தங்க நகைகளை அதற்குப் பிறகு நான் தொட்டுக் கூட பார்க்கல. அவளோட எல்லா நகைகளையும் நான் வாசந்திக்கே கொடுத்துட்டேன். நாங்க நினைச்ச இடத்துல பாட்டு கச்சேரிகள் நடத்தி வயிறை வளர்த்துக்கிட்டு இருக்கோம். நீங்களே சொல்லுங்க தங்க நகைகள் அணிஞ்சிருக்கிற இந்தப் பெண்ணைப் பார்த்தால் பாட்டு பாடி வாழுற பிச்சைக்காரனோட மகள்னு யாராவது நினைப்பாங்களா?"

கிழவன் இதைச் சொல்லிவிட்டு புன்னகைத்தான்.

அப்போது என் மனதில் ஒரு சந்தேகம் உதித்தது. வாசந்தியின் உடலில் நான் பார்த்த நகைகள் தங்கத்தால் ஆனவைதானா என்பதே என் சந்தேகம். நிறம் மங்கி கறுத்துப் போய் காணப்பட்ட அந்த கவரிங் நகைகளை சுத்த தங்கத்தால் செய்யப்பட்ட நகைகள் என்று இந்தக் கிழவன் கூறுவதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்பதைப் பற்றி நான் யோசிக்க ஆரம்பித்துவிட்டேன்.

இருந்தாலும், நான் இந்த விஷயத்தைப் பற்றி பெரிதாக மேலும் சிந்தித்துக் கொண்டிராமல், கங்காராமை அழைத்தேன். என்னுடைய எல்லா பொருட்களையும் அடுத்த அறையில் கொண்டு போய் வைக்கும்படி சொன்னேன்.

கிழவன் அளவுக்கு அதிகமான நன்றியை என் மீது வெளிப்படுத்தினான். என் கால்களில் விழக்கூட அவன் தயாராகிவிட்டான்.

அன்று சாயங்காலம் நான் குளக்கரையில் வாசந்தியைப் பார்க்க நேரிட்டது. அவள் பார்த்திரங்களைக் கழுவுவதற்காக வந்திருந்தாள். நான் பார்த்த சமயத்தில் அவள் புடவையால் முகத்தை மூடிக் கொள்ளவோ, ஆண்களின் பார்வையிலிருந்து தான் முற்றிலும் விலகி இருக்க வேண்டும் என்ற முயற்சியோ செய்யவில்லை. என்னைப் பார்த்ததும் நன்றிப் பெருக்குடன் அவள் ஒரு மென்மையான புன்சிரிப்பைத் தவழவிட்டாள். அப்போதும் நான் அவள் உடம்பில் இருந்த நகைகளைப் பார்த்தேன். அவை நிச்சயம் அசல் கவரிங் நகைகள் என்பதை மட்டும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

"வாசந்தி பாய், நீங்க போட்டிருக்கிற இந்த நகைகள் உண்மையிலேயே தங்கத்தால் ஆனவையா?"- நான் இலேசாகப் புன்னகைத்தவாறு கேட்டேன்.

அதைக்கேட்டு அவளின் முகம் மாதுளம் பூவைப் போல சிவந்துவிட்டது.

"அவர் அந்தக் கதையெல்லாத்தையும் உங்ககிட்ட சொல்லிட்டாரா?"- நிராசையும் ஏதோவொரு மனக்குறையும் கலந்த குரலில் அவள் கேட்டாள்.


"ஆமா... எல்லா கதையும் எனக்குத் தெரியும். ஆனா, ஒரே ஒரு விஷயத்தைத்தான் என்னால புரிஞ்சுக்கவே முடியல. அவர் தங்க நகைகள்னு சொன்னது எப்படி கவரிங் நகைகளா மாறினதுன்ற விஷயம்தான் புரியவே மாட்டேங்குது...

அவள் ஒருவித குற்ற உணர்வு மேலோங்க எழுந்தாள். "சாஹேப், நான் சொல்லப்போற இந்த விஷயத்தை நீங்க அவர்கிட்ட கேட்கக்கூடாது. வேற வழியில்லாததுனாலதான் அவர் தன்னோட வாழ்க்கை கதையை உங்ககிட்ட சொல்லியிருக்காரு. இதுவரை வேற யார்கிட்டயும் அந்தக் காதல் கதையை அவர் சொன்னதா நான் வேள்விப்பட்டதேயில்லை..."

"வாசந்தி பாய், அந்தக் கதையில கூட ஏதோ ரகசியம் மறைஞ்சிருக்குன்னு நான் நினைக்கிறேன்..."

"நீங்க நினைக்கிறது சரிதான். அந்தக் கதையிலே அவருக்கே தெரியாத எவ்வளவோ ரகசியங்கள் மறைஞ்சிருக்கத்தான் செய்யுது. கடவுளே! சாகுறது வரைக்கும் அந்த ரகசியங்கள் எதுவும் அவருக்குத் தெரியாமலே இருக்கணும். அது ஒண்ணுதான் நான் கடவுள்கிட்ட வேண்டிக்கிறது..."

நான் யாருக்கும் கேடு நினைக்காத ஒரு பரதேசி என்ற உண்மையைப் புரிந்து கொண்டதாலும், என்னுடைய அன்பான வேண்டுகோளை நிராகரிக்க முடியாத காரணத்தாலும்தான் வாசந்தி அந்தக் கதையை சுருக்கமாக என்னிடம் சொல்ல முன்வந்தாள்.

அவள் சொன்னாள்:

"முதலாவது இறந்து போன பிரபாவதிதேவியோட வீட்டுல நான் வேலைக்காரியா இருந்தேன்ற விஷயம் அவருக்குத் தெரியாது. பிரபாவதிதேவியோட வாழ்க்கையிலேயும் யாருக்கும் தெரியாத ஒரு ரகசியம் இருந்தது. அவங்களுக்கு குஷ்டரோகத்திற்கான அறிகுறிகள் இருந்துச்சு. அவங்களோட குடும்பத்துல இருந்தவங்களுக்கும் எனக்கும் மட்டும்தான் அந்த உண்மை தெரியும். மோகன் பாக்கோட சேர்ந்து அவங்க பாட்னாவைவிட்டு ஓடணும்ன்ற எண்ணம் உண்டானதுக்குக் காரணமே அதுதான். அவங்க ரொம்பவும் அழகா இருப்பாங்க. ஆனா, அதே நேரத்துல அவங்க ஒரு குஷ்டரோகியாகவும் இருந்தாங்க. ஆனால், வெளியே பார்க்கிறப்போ யாராலயும் இதைக் கண்டுபிடிக்க முடியாது. பிரபாவதிதேவி அவர்கூட ஓடிப்போனப்போ எனக்கு பதினைஞ்சு வயசு. நானும் ஒரு காதல் வலையில சிக்கி அப்போ என்னை நானே மறந்து திரிஞ்ச காலம் அது. கிருஷ்ணசஹான்ற பாட்டு பாடுற ஆளுதான் என்னோட காதலன். ஒரு நாடகக்குழுவை சொந்தத்துல அமைக்கணும்ன்ற ஆசை அவனுக்கு.

என்னோட நகைகள் எல்லாத்தையும் நான் அவன்கிட்ட கழற்றிக் கொடுத்தேன். அப்பவும் பணம் போதாதுன்னு தெரிய வந்ததும், எனக்கு ஒரு எண்ணம் வந்துச்சு. பிரபாவதி தேவியும் அவங்களோட குருட்டு புருஷனும் பிந்தாசலம்ன்ற ஊர்ல இருக்காங்கன்ற விஷயம் எங்களுக்குத் தெரியவந்தது. நான் தேவிக்கு தனிப்பட்ட முறையில ஒரு மிரட்டல் கடிதம் எழுதினேன். அவங்களுக்கு குஷ்டரோகம் இருக்குன்ற விஷயத்தை அவங்களோட புருஷனுக்கு நான் தெரிய வைக்கப் போறேன்னும், அந்த ரகசியம் அவருக்குத் தெரியக் கூடாதுன்னு தேவி விரும்பினா, அவங்க உடனடியா எனக்கு 100 ரூபா அனுப்பி வைக்கணும்னும் நான் எழுதியிருந்தேன். கடிதம் எழுதின மூணாவது நாள் எனக்கு ஒரு பார்சல் வந்தது. அதுல பிரபாவதிதேவியோட ஒரு தங்கநகை இருந்தது. பாட்னாவுல இருந்து அதே மாதிரி இருக்குற ஒரு கவரிங் நகையை உடனடியா நான் வாங்கி அனுப்பணும்னு ஒரு கடிதத்தையும் தேவி எழுதியிருந்தாங்க. அவ்வளவுதான்- என் காதலனோட ஆசை அதிகமாயிடுச்சு. பணம் சம்பாதிக்கிறதுக்கு இது ஒரு எளிமையான வழின்னு அவன் என்கிட்ட சொல்ல ஆரம்பிச்சான். நான் திரும்பவும் பிரபாவதி தேவிக்கு மிரட்டல் கடிதம் எழுதினேன். திரும்பவும் அவங்க எனக்கு தன்னோட தங்க நகையை அனுப்பி வைச்சாங்க. அதற்கு பதிலாக நான் அதே மாதிரி இருக்குற கவரிங் நகையை வாங்கி அனுப்பினேன். இப்படி அஞ்சு வருடங்கள்ல பிரபாவதி தேவியோட நகைகள் முழுவதுமே என் மூலமா என் காதலன் கைக்கு வந்திடச்சு.

என் காதலன் பனாரஸுக்கு வந்திருக்கிற ஜ்ரு வங்காள பாடகர்கள் குழுவுல சேர்ந்திருக்கிறதா எனக்குத் தகவல் கிடைச்சது. நான் அப்பவே பனாரஸுக்குப் புறப்பட்டேன். கொஞ்சமும் எதிர்பார்க்காம நான் அங்கே வந்தது அவனுக்குப் பிடிக்கல. பிரபாவதி தேவியும் அவங்களோட புருஷனும் பனாரஸுக்கு வந்திருக்கிறதாகவும், அவங்ககிட்ட மீதி இருக்குற நகையையும் வாங்கிட்டு வரணும்னு என்னைப் பார்த்து அவன் சொன்னான். இந்த தர்மசாலைக்கு வந்து நான் அவங்களைப் பார்த்தேன். பிரபாவதி தேவியோட நோய் ரொம்பவும் முற்றிப் போயிருந்திச்சு. கண்கள்ல நீர் வழிய அவங்க தன்கிட்ட இருந்த கடைசி நகையையும் கழற்றி என் கையில தந்தாங்க. அன்னைக்கு ராத்திரி என் காதலனை பாட்டு பாடுற ஒரு பெண்ணோட அறையில நான் பார்த்தேன். நான் பிரபாவதிதேவியை மிரட்டி வாங்கின நகைகள் எல்லாமே அந்தப் பெண் உடம்புல மின்னிக்கிட்டு இருந்துச்சு. என்னை அவன் எப்படியெல்லாம் ஏமாற்றியிருக்கிறான்றதையே அப்பத்தான் நான் புரிஞ்சுக்கிட்டேன். என் காதலனுக்கும் அந்தப் பெண்ணுக்கும் ஆறு மாசத்துக்கு முன்னாடியே திருமணம் முடிஞ்சிருச்சுன்ற விஷயமே அப்பத்தான் எனக்குத் தெரிய வந்தது. பயங்கரமான ஏமாற்றத்தோடும், மனக்கவலையோடும் மறுநாள் பிரபாவதிதேவி தங்கியிருந்த இந்த தர்மசாலைக்கு வந்தேன். என்னை வரவேற்றது பிரபாவதிதேவியோட செத்துப்போன உடல்தான். அவங்க இறக்கல, தற்கொலை பண்ணிக்கிட்டாங்கன்ற உண்மையைக் கண்டுபிடிக்க எனக்கு அதிக நேரம் ஆகல. அந்தக் கிழவனோட நிலைமையைப் பார்த்து எனக்கு ரொம்பவும் கவலையாயிடுச்சு. உடம்புல கவரிங் நகைகள் அணிஞ்ச ஒரு குஷ்டரோகம் பாதிச்ச பெண்ணோட செத்துப் போன உடம்பைக் கட்டிப்பிடிச்சுக்கிட்டு அவரு தாங்க முடியாம அழுதுக்கிட்டு இருந்தாரு.

பிரபாவதிதேவியோட செத்துப் போன உடலை காசியில கங்கை நதிக்கரைக்கு கொண்டுபோயி நாங்க எரிச்சோம். அதற்குப் பின்னாடி நான் அவரை ஒரு மகனைப் போல பார்த்துக்கிட்டு வர்றேன். இதுதான் உண்மையான கதை!"

அப்போது மாலை நேரம் முடிந்து, இரவு தொடங்கியிருந்தது. தோட்டத்தில் மின்சார விளக்குகள் எரிய ஆரம்பித்திருந்தன. சில அறைகளிலிருந்து கீர்த்தனைகள் புறப்பட்டு காற்றில் தவழ்ந்து வந்து கொண்டிருந்தன. ஸ்ரீகிருஷ்ணா ஆலயத்தில் தொடர்ந்து மணியோசை முழங்கிக் கொண்டிருந்தது. ஒரு வெள்ளிக் குடத்தில் நீரை எடுத்துக் கொண்டு, புடவைத் தலைப்பை தலையில் போட்டுக் கொண்டு வாசந்திதேவி முப்பத்தியிரண்டாம் எண் அறையை நோக்கி நடந்தாள்.

அன்று இரவு முழுவதும் அந்தக் கிழவன் பிடில் வாசித்துக் கொண்டு பாடிய காதல் பாட்டுக்கள் அந்த அறையில் கேட்டுக் கொண்டே இருந்தன. கவலைகள் தோய்ந்த அந்தப் பாட்டுக்களில் வாழ்க்கையின் சில புரியாத மூலை, முடுக்களிலிருந்து புறப்பட்டு வரும் மணியோசையை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

மறுநாள் காலையில் நான் தர்மசாலையை விட்டுப் புறப்பட்டேன். கிளம்பும்போது முப்பத்தியிரண்டாம் எண் அறையை நோக்கி பார்வையைச் செலுத்தினேன். கிழவன் சுகமாகத் தூங்கிக் கொண்டிருந்தான். வாசந்திதேவி காலை உணவு தயாரித்துக் கொண்டிருந்தாள். எப்படிப்பட்ட நாடகங்களெல்லாம் இந்த தர்மசாலையில் நடக்கின்றன என்பதை மனதிற்குள் அசைபோட்டவாறு நான் வாசலில் இருந்த அசோக மரத்தின் நிழலில் நின்றபோது "சாஹேப், வண்டி தயாரா இருக்குது" என்று சொன்னவாறு கங்காராம் என்னை நோக்கி வேகமாக ஓடி வந்து கொண்டிருந்தான்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.