Logo

நீலவானமும் சில நட்சத்திரங்களும்

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 6451
neela vaanamum sila natchathirangalum

ஜெயில் சூப்பிரெண்டு பிள்ளை தன் முன் மேஜையின் மேல் வைக்கப்பட்டிருந்த அந்தக் கடிதத்தையே வைத்தகண் எடுக்காது பார்த்துக் கொண்டிருந்தார். அதிலிருந்து ஏதோ விஷக்காற்று தன்னை நோக்கி வீசுவது போலிருந்தது அவருக்கு. நெடுநேரம் அதையே பார்த்துக் கொண்டிருக்கவும் அவரால் முடியவில்லை. தலையைச் சற்று உயர்த்திப் பார்த்தார். அப்போதுதான் அவருடைய கண்கள் அங்கு வந்து நின்று கொண்டிருந்த ஜெயிலர் தாமஸை சந்தித்தன. கருத்துப்போய் அச்சம் தரக்கூடிய வகையான கோலத்துடன் நின்று கொண்டிருந்த தாமஸை நோக்கிக் கேட்டார் பிள்ளை.

“அவனை உள்ளே அடைச்சாச்சி, இல்லையா?”

“ஆமாம் ஸார்.”

மீண்டும் தன்முன் இருந்த அந்தக் காகிகத் துண்டைப் பார்த்துக் கொண்டார் பிள்ளை. “பதினெட்டாம் தேதி அதிகாலை அஞ்சரை மணிக்கு முன்னாடியே...” ஒரு நிமிடம் என்ன காரணத்தாலோ தான் கூற வந்ததைப் பாதியிலேயே நிறுத்திக்கொண்ட பிள்ளை தாமஸிடம் கேட்டார்.

“தாமஸ், இந்த ஜெயில்ல இதுக்கு முன்னாடி யாரையாவது தூக்குல போட்டிருக்கா?”

“நெறைய போட்டிருக்கு.”

“நான் அதைக் கேட்கல. இப்போ சமீபத்துல போட்டிருக்கான்னு கேக்குறேன்...”

“சமீபத்துல இல்ல... ரெண்டு வருஷத்துக்கப்புறம் இதுதான்...”

“ம்...”- காகிதத்தை எடுத்து மடித்து பைக்குள் வைத்தவாறே கேட்டார் பிள்ளை, “ஆமா... இன்னைக்கு என்ன, தேதி?”

“பத்து”

“இன்னும் எட்டே எட்டு நாட்கள்தான் இருக்கு. இல்லியா? ம்... தாமஸ், நீ யாரையாவது தூக்குல போட்டிருக்கியா?”

“போட்டிருக்கேன் சார்.”

ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டார் பிள்ளை. ம்... இங்கு கயிறு இருக்கு இல்லியா?”

“இருக்கு சார்...” - அவனுடைய குரலில் ஒரு தயக்கம்.

“என்ன விஷயம் தாமஸ்?”

“ஒண்ணுமில்லை சார்... கயிறு கொஞ்சம் பழசாப் போயிருக்கு.”

“எங்கே பார்க்கலாம்...” எழுந்து முன்னே நடந்தார் பிள்ளை. தாமஸ் பிள்ளையின் அடிச்சுவட்டைப் பின்பற்றி நடந்தான். சாமான்கள் அ¬த்து வைக்கப்பட்டிருந்த அறையை அடைந்ததும் தாமஸ் அங்கிருந்த ஒருவனை அழைத்து அவ்வறையின் சாவியை வாங்கிக் கதவைத் திறந்தான். இருளடைந்து போய்க் காணப்பட்ட அந்த அறையினுள்ளிருந்து கெட்ட ஒரு நாற்றம் வெளி வந்தது. உள்ளே நுழைந்த தாமஸ் முறுக்கேறிப் போயிருந்த ஒரு கயிற்றுச் சுருளுடன் மூச்சை அடக்கிக் கொண்டே வெளியே வந்தான். சுருண்டு போயிருந்த அந்தத் தூக்குக் கயிற்றை நோக்கிய பிள்ளையின் கைகள் அவரையும் மீறி அவருடைய கழுத்துப் பகுதியைத் தடவிப் பார்த்துக் கொண்டன.

“இந்தக் கயிறு எத்தனை வருஷமா புழக்கத்துல இருக்கு?”

“அஞ்சு வருஷமா...” இதைக் கூறிய தாமஸ் என்ன காரணத்தாலோ மெல்ல சிரித்துக் கொண்டான். அவன் அவ்வாறு சிரித்தது ஏன் என்று பிள்ளைக்குப் பிடிபடவேயில்லை.

“இது எங்க தாங்கப்போகுது? தூக்குல போடும்போது அறுந்து போயிடும் போலிருக்கே! எங்கே... ஒரு தடவை டெஸ்ட் பண்ணிப் பார்த்துட்டா பரவாயில்லை.”

“நீங்க சொல்றதுதான் சரி...”

“அப்படின்னா தாமஸ், நீ போயி அதுக்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் செய். எல்லாம் உனக்குத் தெரியுமில்ல?”

“தெரியும் ஸார்! இது தெரியாமலா?”

தாமஸ் புறப்படத் தயாராக நின்றபோது பிள்ளை கூறினார். கல்லுக்கு அவனோட எடையை விட ஒன்றரை மடங்கு அதிகமா எடை இருக்கணும். அப்படின்னாத்தான், எவ்வளவு எடை இருந்தா கயிறு தாங்கிக் கொள்ளும்னு தெரிஞ்சுக்க முடியும். அவனோட எடை எவ்வளவுன்னு தெரியும்லே...?”

“தெரியும் ஸார். நூத்தி அஞ்சு ராத்தல்...”

“வெறும் நூத்தி அஞ்சு ராத்தலா? ஒரு கொலைகாரனோட எடையா இது? உயரம்...?”

“அஞ்சடி அஞ்சு அங்குலம்...”

“இருபத்து மூணு வயசு... இந்த இளம் வயசுல இவன் கொலை செஞ்சிருக்கான்...”

“பாவம் சின்னப் பையன் ஸார். ஆளப் பார்த்தா இவனா கொலை செஞ்சான்னு சொல்லத் தோணும்...”

பிள்ளை அதற்குப் பதிலொன்றும் கூறவில்லை. வளைந்து பாம்பு போல சுற்றிக் கிடந்த அந்தக் கயிற்றுச் சுருளையே அவருடைய கண்கள் திரும்பத் திரும்ப வட்டமிட்டுக் கொண்டிருந்தன. திடீரென்று என்ன நினைத்தாரோ, திரும்பி நின்று தாமஸிடம் கூறினார். “ஓ.கே. தாமஸ், நீ போயி செய்ய வேண்டிய ஏற்பாடுகளைச் செய்...”

பிள்ளை தன்னுடைய அறைக்குத் திரும்பி வந்தார். தான் எப்போதும் அமர்கின்ற சுழல் நாற்காலியில் அமர்ந்த அவர், சிகரெட் ஒன்றைப் பற்ற வைத்தார். கால்களை முன்னாலிருந்த மேஜை மேல் வைத்துக் கொண்டு, சிகரெட் புகையை வட்ட வட்ட வளையங்களாக சிந்தனையில் ஆழ்ந்தவாறு விட்டுக் கொண்டிருந்தார். ‘ஒரு பெண் சம்பந்தப்பட்ட பயங்கரமான கொலை வழக்கு’ என்று பலவிதமாக அந்த வழக்குப் பற்றி பத்திரிகைகளில் செய்தி வந்த செய்திகளை அவர் மனம் அசை போட்டுப் பார்த்துக் கொண்டிருந்தது. பத்மினி என்ற தன்னுடைய அண்ணன் மனைவி யாரோ அன்னியன் ஒருவனுடன் உடலுறவு கொள்வதைக் காண நேர்ந்த ராமதாஸ் என்ற தம்பி அரிவாள் கொண்டு அவனைக் கழுத்தில் வெட்டிக் கொலை செய்து விட்டானாம்- இதுதான் அந்தச் செய்தி. அது நம்பமுடியாத செய்தியாகத்தான் எல்லாருக்கும் தோன்றியது. ஆனால், ராமதாஸோ கொலை செய்த இரத்தம் தோய்ந்த அரிவாளுடன் “நான்தான் கொலை செய்தேன்” என்று கூறிக்கொண்டு போலீஸ் ஸ்டேஷனில் போய் நின்றபோது சந்தேகத்துக்கே இடமில்லாமல் போய்விட்டது. அதைத் தொடர்ந்து நிகழ்ந்த சம்பவங்கள் அதைக்காட்டிலும் வினோதமாயிருந்தன. ராமதாஸின் நண்பர்கள் சிலர் ஒன்றுசேர்ந்து வெளியிட்டிருந்த பத்திரிகைக் குறிப்புதான் அது. கொலை நடந்ததாகக் கூறப்படும் நேரத்தில் ராமதாஸ் தங்களுடன் ஒரு நாடகம் சம்பந்தமாக ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்ததாக இருந்தது அவர்களுடைய கூற்று. கொலை நடந்த சிறிது நேரத்தில் அங்கே போன ஒருவர் கூறியதோ, தான் போனபோது இரத்த வெள்ளத்தின் மேல் ராமதாஸ் புரண்டு கிடந்தான் என்றிருந்தது. இறுதியில் எல்லாமே ஒரு முடிவில் வந்து முற்றுப்புள்ளியாயின. நீதிமன்றத்தில் தான்தான் கொலையைச் செய்ததாக ராமதாஸே கூறினான். கொலை செய்ததற்கான காரணத்தைக் கேட்டபோது ராமதாஸ் அன்று கூறியதை ஒருமுறை ஞாபகப்படுத்திப் பார்த்துக்கொண்டார் பிள்ளை.

“தாய் தந்தை இல்லாத நான் என் அண்ணனின் சம்சாரத்தை என் தாய் மாதிரி இத்தனை வருடமும் நினைச்சுக்கிட்டிருந்தேன். அவுங்கதான் எனக்கு இந்தப் பெரிய உலகத்துலே எல்லாமேன்னு நெனச்சுக்கிட்டிருந்தேன். ஆனா... அப்படிப்பட்ட அவுங்களே... நான் கடவுளுக்குச் சமமா நினைச்ச அவுங்களே வார்த்தையாலே சொல்ல முடியாத ஒரு தப்பச் செய்யிறதப் பார்த்தப்போ, என்னாலே அந்த முடிவுக்குத்தான் வர முடிஞ்சது- அண்ணனைக் காப்பாத்துற ஒரே எண்ணத்தில்...”


பிள்ளையின் நினைவு வலை வார்டர் ஸ்ரீதரனால் பாதியிலேயே அறுந்து நின்றது. சற்று தடித்துக் காணப்பட்ட அவனையே பார்த்தார் பிள்ளை. “ஸ்ரீதரன், இன்னைக்கு வந்த அவனைப் பார்த்த இல்லையா?”

“பார்த்தேன் சார்...”

“நாம கொஞ்சம் அவனை அடைச்சு வச்சிருக்கிற அறை வரை போயிட்டு வருவோம். அந்தச் சாவியை எடு...”

“அந்த ஆளைப் பார்க்கவா சார்...?”

பதிலொன்றும் கூறாமல் பிள்ளை மெதுவாக நடந்தார். சாவியை எடுத்துக் கொண்டு ஸ்ரீதரனும் அவர் பின்னால் போனான். ராமதாஸை அடைத்து வைத்திருக்கின்ற அறை வந்ததும், அவருடைய கால்கள் திட்டமிட்ட மாதிரி நின்றன. வெளியே நின்றவாறு, இருளடைந்து போய்க் காணப்பட்ட அந்த அறையைக் கம்பியின் வழியே அவருடைய கண்கள் ஆராய்ந்தன. மூலையில் யாரோ அசைவது போலிருந்தது.

“டார்ச் இருக்கா...?”

“இல்லை சார்... தீப்பெட்டியும் மெழுகுவர்த்தியும் இருக்கு!”

“எங்கே கதவைத் திற.”

ஸ்ரீதரன் கதவைத் திறந்தான். அவனிடமிருந்த மெழுகு வர்த்தியை வாங்கிப் பற்ற வைத்தார் பிள்ளை. மெழுகுவர்த்தியின் ஒளி இருளடைந்து போய்க்கிடந்த அவ்வறையில் மங்கலான பிரகாசத்தைப் பரப்பியது. அவ்விளக்கொளியில் மூலையில் தலையைக் குனிந்தவாறு அமர்ந்திருந்த ராமதாஸைச் சந்தித்தன பிள்ளையின் கண்கள்... ஒரு வேளை ராமதாஸ் உறங்கிவிட்டானோ...?

“ராமதாஸ்... ராமதாஸ்...” தாழ்ந்த குரலில் அழைத்தார் பிள்ளை.

ராமதாஸ் தலையைத் தூக்கிப் பார்த்தான். பிள்ளை மேலும் இரண்டடி முன்னால் சென்று நின்றார். மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் அவனுடைய முகம் தெளிவாகத் தெரிந்தது பிள்ளைக்கு. குழந்தை முகம்; இப்போதுதான் வளர்ந்துவிட்டிருக்கின்ற அரும்பு மீசை; சுருண்டிருந்த தலைமுடி நெற்றியில் காட்டுப் புதராய்ப் பரவிக்கிடந்தது. கருத்த அந்த விழிகளில் கொலைவெறி சிறிதுமில்லை.

“ராமதாஸ்...” பிள்ளை அழைத்தது அவனுடைய செவிகளில் விழவில்லை. “நான்தான் ஜெயில் சூப்பிரெண்டு, உன்னை இங்கே எதுக்குக் கொண்டு வந்திருக்குன்னு தெரியுமில்ல...?”

ராமதாஸ் பதிலொன்றும் கூறாமல் அவருடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். பிள்ளை தொடர்ந்து பேசினார். “பதினெட்டாம் தேதி அதிகாலை அஞ்சரை மணிக்கு முன்னாடியே உன்னைத் தூக்குல போட்டுடுவோம்...” அவர் குரல் அத்தோடு நின்றது. ராமதாஸின் முகத்தில் ஒரு மாற்றமும் தெரியவில்லை. “உன்னை அன்னைக்குக் காலையில மூணு மணிக்கே இங்கேயிருந்து கொண்டு போயிடுவாங்க. அஞ்சரை மணிக்கு முன்னாடியே உனக்கு உயிர் போயிடும். அதுக்கு முன்னாலே ஏதாவது வேணும்னா தைரியமா எங்கிட்ட சொல்லு... தெரியுதா?”

பதிலொன்றும் கூறாமல் பிள்ளையையே பார்த்தான் ராமதாஸ். அவன் தன் பற்களை ‘நறநற’ வெனக் கடிப்பது போலிருந்தது பிள்ளைக்கு. அவனுடைய உதடுகளிலிருந்து இரத்தம் வழிந்து கொண்டிருந்தபோது, திரும்பி நடந்தார் பிள்ளை. ஜெயில் கதவை இழுத்துப் பூட்டினான் ஸ்ரீதரன். பிள்ளையின் கால்கள் தூக்கு மரத்தை நோக்கி நடந்தன. ஜெயிலர் தாமஸ் கயிற்றின் நுனியில் பெரியவொரு கல்லைக் கட்டி வைத்திருந்தான். இரும்புச் சக்கரங்களுக்கு உராய்தலைத் தடுக்கும் பொருட்டு எண்ணெய் போட்டுக் கொண்டிருந்தான். எல்லாம் சரியாக இருக்கிறதா என்று ஒருமுறை பரிசோதித்துப் பார்த்தார் பிள்ளை.

“இந்தக் கயிறு நிச்சயம் அறுந்திடும், தாமஸ்...”

“லிவரைத் தட்டட்டுமா?” ஸ்ரீதரன் கேட்டான்.

“ம்...”

ஸ்ரீதரன் லிவரைத் தட்டினான். பலகை இரண்டாகப் பிளந்தது. அதே சமயம் கயிற்றின் நுனியில் கட்டியிருந்த கல் அதல பாதாளத்தில் போய் விழுந்தது. கயிறு இரண்டு துண்டுகளாக அறுந்து தொங்கிக் கொண்டிருந்தது அந்தரத்தில்.

“எனக்கு அப்போதே சந்தேகம்தான்... ம்... இப்ப என்ன செய்யிறது? இனி வேற ஒரு கயிறுதான் பார்க்கணும். ஆமா... இங்க யாருக்குக் கயிறு உண்டாக்கத் தெரியும்?”

“எல்லாருக்கும் தெரியுமே...”- சிரித்தவாறு கூறினார் ஸ்ரீதரன்.

“ஆனா... தூக்குக் கயிறுல்ல இப்போ நமக்கு வேணும்?” -தாமஸ் கூறினான்.

“கொலைக் கயிறு செய்யத் தெரிஞ்ச யாரும் இங்கே இல்லியா?”

“...ஏன்... கிட்டாப்புள்ளி ராமன் இருக்கானே...!” தாமஸ் கூறினான். அவன்தான் முன்னால் பயன்படுத்திய கயிறையும் உண்டாக்கிக் கொடுத்திருந்தது போன்றொரு ஞாபகம்.

“அப்படின்னா தாமஸ், நீ ஒண்ணு செய். அவனைச் சீக்கிரம் ஒரு கயிறு உண்டாக்கித் தரச் சொல்லு. உதவிக்கு வேணும்னா இரண்டு ஆளுகளைக் கூட அனுப்பிவை. நாளை மறுநாளுக்குள் கயிறு கிடைக்கணும்... தெரியுதா?” - தன்னுடைய அறைக்குத் திரும்பினார் பிள்ளை. அங்கு சிறைப் பணியாள் ஒருவன் சிறைக் கைதிகளின் உணவிற்கான சாம்பிலுடன் நின்று கொண்டிருந்தான். அவன் கொண்டு வந்திருந்த உணவை ருசி பார்த்த பிள்ளை கூறினார். “ம்... போதும், நல்லாயிருக்கு கொண்டு போ...” அந்தப் பணியாள் போய் சில நிமிடங்களில், வேறு ஒரு ஆள் வந்து பிள்ளைக்கு ‘சலாம்’ செய்தவாறு நின்றான். சிகரெட் ஒன்றை எடுத்துப் பற்ற வைத்தவாறு பிள்ளை கேட்டார். “என்ன விஷயம்?”

“ஒரு பொம்பளையும் மூணு ஆளுங்களும் வந்திருக்காங்க சார்...”

“யாரு? அவனைப் பார்க்கத்தானே? திங்கட்கிழமை வரச் சொல்லு...”

பிறகு என்ன நினைத்தாரோ புறப்படத் தயாராயிருந்த அந்த மனிதனை நோக்கிக் கூறினார் பிள்ளை.

“சரி, அவுங்களை இங்க வரச்சொல்லு...”

மூன்று ஆண்களும், பெண்ணும் வாசலைக் கடந்து பிள்ளை அமர்ந்திருந்த அறையினுள் நுழைந்தார்கள். எல்லாருமே இளம் பிராயத்தைச் சேர்ந்தவர்களாகத்தான் இருந்தார்கள். அந்தப் பெண்ணுக்கு வேண்டுமானால் இருபது வயது இருக்கும்.

“உங்களுக்கு என்ன வேணும்?”

அவர்களில் சற்று உயரமான ஆள் கூறினான்.

“நாங்க ராமதாஸைப் பார்க்கணும்...”

“ராமதாஸுக்கு நீங்க எல்லாம் என்ன வேணும்?”

“நாங்க அவனோட நண்பர்கள்.”

“இந்தப் பெண்...”

“அவளும்தான்...”

அந்தப் பெண்ணின் முகத்தைப் பார்த்தார் பிள்ளை. அவளுடைய கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. அந்தப் பணியாளிடம் பிள்ளை கூறினார். “இவங்களை ராமதாஸிடம் அழைச்சிட்டுப் போயி காட்டு...”

“வாங்க” - படிகளைக் காட்டினான் பணியாள்.

அரை மணி நேரம் சென்றிருக்கும் முதலில் பேசிய அந்த உயரமான மனிதனும், அந்தப் பெண்ணும் திரும்பி வந்தார்கள்.

“ராமதாஸை பார்த்தீங்க இல்லியா?”

“பார்த்தோம் சார்.”

“பிறகு?”

“சார்... ஒரு விஷயம்... உண்மையிலேயே ராமதாஸ் இந்தக் கொலையைச் செய்யல. இந்தக் கொலை நடக்குறப்போ, ராமதாஸ் எங்களுடன் தான் இருந்தான். நாங்க எல்லாருமே ஒரு நாடகக் கம்பெனியைச் சேர்ந்தவங்க.”

பிள்ளை ஒன்றும் பதில் கூறவில்லை. அந்த மனிதனே மீண்டும் தொடர்ந்தான். “திடீர்னு என்ன நினைச்சானோ, ராமதாஸ் வீட்டுக்குப் போயிட்டான். அவன் ஏன் போனான்னு எங்களுக்கு ஒண்ணும் பிடிபடல. அது மட்டும் தெரிஞ்சிருந்தா, நாங்க இந்த விஷயத்தை இந்த அளவுக்குப் போகவே விட்டுருக்க மாட்டோம்.”


“அதுக்கு நான் என்ன செய்யணும்னுறீங்க?”

“சார் நினைச்சா ஏதாவது செய்ய முடியாதா?”

“இங்க பாருங்க... நான் இந்த விஷயத்துல ஒண்ணுமே செய்யிறதுக்கில்ல. தூக்குத் தண்டனை விதிச்சாச்சு இல்ல... தூக்குத் தண்டனையை நிறைவேத்தறதைத் தவிர வேற வழி இல்ல. அந்த ஆளு கொலை செஞ்சானா இல்லையான்றதப் பத்தித் தீர்மானிக்க வேண்டியது நானில்ல. பிறகு... நீங்க சொல்றதுதான் உண்மையின்னா, அந்த ஆளு ஏன் ‘நான்தான் கொலையைச் செஞ்சேன்’னு சம்மதிக்கணும்?”

இதைக் கேட்டதும் அந்தப்பெண் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்து விட்டாள். “ராமதாஸ் கொலை செய்யக்கூடிய ஒரு ஆள் இல்ல. அப்படிப்பட்ட தைரியம் ராமதாஸுக்கு நிச்சயம் வராது, ஸார். நீங்கதான் ராமதாஸைக் காப்பாத்தணும்...”  -அழதவாறே கூறினாள் அவள்.

“இந்தப் பெண் யார்?” - பிள்ளை கேட்டார்.

“ராமதாஸுக்கு இவளைத்தான் நிச்சயம் செஞ்சிருந்தாங்க. இவ ஒரு

நாடகக்காரி...”

“தங்கச்சி... நான் இந்த விஷயத்துல ஒண்ணுமே உதவி செய்ய முடியாத நிலையில இருக்கேன். தயவு செஞ்சு எல்லாரும் திரும்பிப் போங்க.

கண்ணீர் சிந்தியவாறே திரும்பி நடந்தாள் அந்தப் பெண். பிள்ளைக்கு ‘சலாம்’ போட்டுக்கொண்ட பின், அவளைப் பின்பற்றி நடந்து போனான் அந்த உயரமான மனிதன்.

நான்காவது நாள்... தூக்குக் கயிறு தயாராகிவிட்டது. தூக்குக் கயிறு உண்டாக்குவதில் கெட்டிக்காரன் என்று கிட்டாப்புள்ளி ராமன் மீண்டும் ஒரு முறை நிரூபித்துக் காட்டினான். இந்தத் தடவை சற்று பலமான கயிறுதான்...

“இன்னைக்கு தேதி என்ன? பதினேழா?” - அந்தச் சுழல் நாற்காலியில் அமர்ந்தவாறு முன்னால் நின்றிருந்த தாமஸைக் கேட்டார் பிள்ளை.

“நாளைக்கு அதிகாலை அஞ்சு மணிக்கு முன்னாடியே எல்லாம் முடிஞ்சிடணும்...”

“சரி, ஸார்!”

“ஆமாம்... லிவரைத் தட்டுறது யாரு? நீயே தட்டிர்றயா?”

“இல்லை, ஸார். அந்தப் பாவத்தை நான் செய்ய விரும்பல...”

“பிறகு?”

“இங்கே அதுக்குன்னே ஒரு ஆளு இருக்கான். பத்ரோஸ்னு பேரு. அவனை எல்லாரும் ‘லிவர் தட்டி பத்ரோஸ்’னுதான் கூப்பிடுவாங்க. காலம் காலமாகவே அவன்தான் லிவரைத் தட்டிக்கிட்டு வர்றான்.

“இப்போ அந்த ஆளு இருக்கான்ல?”

“விசாரிச்சுப் பார்க்கணும்... அனேகமா இருப்பான்.”

லிவர் தட்டுவது என்பது அத்தனை எளிய ஒரு காரியம் அல்ல. தூக்கில் கொல்லப்படப்போகிற கைதியைப் பாதாளத்தில் வீழ்த்தி சாக வைப்பதே அந்த லிவரில்தான் இருக்கிறது. கொலை செய்வதால் உண்டாகும் பாவம் கூட அந்த லிவரைத் தட்டுபவனைத்தான் சேரும் என்று சிறையில் பொதுவாகக் கூறிக் கொள்வதுண்டு.

“சரி... அதுக்கு அவனுக்கு எவ்வளவு கொடுக்கணும்?” - பிள்ளை விசாரித்தார்.

“ம்... அதப் பத்தி ஒண்ணுமில்ல. ஒரு பாட்டில் சாராயமும், கொஞ்சம் மாட்டுக்கறியும் வாங்கிக் கொடுத்தா போதும்...”

“அவன் கரெக்டா அந்த நேரத்துக்கு வந்துடுவான்ல?”

“ம்... அதப்பத்தி உறுதியா சொல்ல முடியாது சார்...”

“அப்படின்னா?!”

“இன்னைக்கே கொஞ்சம் சாராயத்தை ஏத்தி ஒரு அறைக்குள்ளே அவனைப் பூட்டி வச்சிட வேண்டியதுதான்.”

“இல்லைன்னா?”

“அவன் தப்பிச்சு ஓடிடுவான்ல. சுய உணர்வோட திட்டமிட்டுச் செய்யக்கூடிய ஒரு வேலையா இது?”

அப்படின்னா தாமஸ், நீ ஒண்ணு செய்... இன்னைக்குச் சாயங்காலமே அவனை இங்கக் கொண்டு வந்திடு. இந்தா பத்து ரூபாய் இருக்கு. இத வச்சு எல்லாத்தையும் முடிச்சுக்க...” -பாக்கெட்டிலிருந்து ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்துக் கொடுத்தார் பிள்ளை.

தாமஸ் போன சில நிமிடங்களில், நடுத்தர வயதுடைய ஒரு மனிதருடன் பிள்ளையின் அறைக்கு வந்தான் பணியாள் ஒருவன். அந்த மனிதர் சற்று பருத்து... உயர்ந்து... கருத்துப் போய்க் காணப்பட்டார். அவருடைய முகத்தில் ஒரு ஆட்டுக்கடா மீசை.

“ம்... உங்களுக்கு என்ன வேணும்?” - சிகரெட்டை எடுத்து உதட்டில் பொருத்தியவாறு கேட்டார் பிள்ளை.

“இவருக்கு தூக்குல போடப்போற அந்த ஆளை ஒரு தடவைப் பார்க்கணுமாம்...” - பணியாள் கூறினான்.

“திங்கள் கிழமையே வந்திருக்கலாமே? ஆமா... நீங்க யாரு?” என்றார் பிள்ளை.

அவரிடமிருந்து சற்று கனத்த குரலில் பதில் வந்தது.

“நான்தான் ராமதாஸோட அண்ணன். அவனைத் தூக்குல போடுறதுக்கு முன்னால, கண் குளிர ஒரு தடவைப் பார்க்கணும், ஸார். தாய்- தந்தையில்லாத அவனைச் சின்ன வயசுல இருந்து சொந்தப் பிள்ளையைப் போல நான்தான் வளர்த்தேன். தயவு செஞ்சு நீங்கதான் அவனைப் பார்க்க எனக்கு உதவி செய்யணும் ஸார்.”

“சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்த பிள்ளை கேட்டார். “அப்படின்னா, உங்க சம்சாரத்தைத்தான் அவன் கொலை செய்தானா?”

“ஆமாங்க. என்னோட ஒரே தம்பியின் இந்தத் துர்பாக்ய நிலைமைக்கும், என்னுடைய வாழ்க்கை நாசமானதுக்கும் அந்தத் தேவடியாதான் காரணம்.”

“அவன் கொலை செய்யறத நீங்களே நேரில் பார்த்தீங்களா?”

“இல்லை ஸார். வயல்ல இருந்து நான் திரும்பி வர்றப்பவே எல்லாம் முடிஞ்சு போயிருச்சி. நான் வீட்டு வாசல்ல கால் வச்சப்போ அவன் இந்தக் கோலத்துலநின்னுக்கிட்டிருக்கான். என்னன்னு சொல்றது?” இதைக் கூறிவிட்டு தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டார் அந்த மனிதர்.

“பரவாயில்ல. நடந்ததெல்லாம் நடந்திருச்சு. இனி கவலைப்பட்டு என்ன பிரயோஜனம்? போங்க... போயி உங்க தம்பியைப் பாருங்க.”

அந்த மனிதர் புறப்படத் திரும்பியபோது, பிள்ளை கூறினார். “ஒரு விஷயம்... நாளைக்குத்தான் ராமதாஸுக்கு தூக்குத் தண்டனை நிறைவேத்துற நாள். அவனுக்கு உங்களால முடிஞ்ச அளவுக்குத் தைரியம் சொல்லுங்க?”

“சரி ஸார்.”

“ஆமா... ராமதாஸோட சடலம் உங்களுக்கு வேணும் இல்லியா?”

“வேணும்... கட்டாயம் வேணும்...” அந்த மனிதரின் குரல் என்ன காரணத்தாலோ தடுமாறியது.

“அப்படின்னா சடலத்தை எடுக்க நீங்க சரியா வந்திடணும் தெரியுதா?”

“சரி ஸார்...”

“டேய், மூலையில் நின்று கொண்டிருந்த பணியாளை அழைத்தார் பிள்ளை- “இந்த ஆளைக் கூட்டிட்டுப் போயி ராமதாஸைக் காட்டு. பதினஞ்சு நிமிஷம்தான் டைம் தெரியுதா?”

பிள்ளையின் பார்வையிலிருந்து அவர்கள் இருவரும் மறைந்து போயினர். சில நிமிடங்கள் சென்ற பின், பணியாள் மட்டும் திரும்பி வந்தான்.

“என்ன பார்த்தாச்சா?”

“ஆமாம் ஸார்.”

“அவங்க ரெண்டு பேரும் பேசினாங்க இல்லியா?”

“இல்ல சார்.”

“இல்லியா? ஏன்?”

“இந்தக் ஆளைக் கண்டதும், ராமதாஸ் முகத்தைத் திருப்பிக்கிட்டான். ‘நீ போ. உன்னை நான் பார்க்க விரும்பலே’ன்னு திரும்பத் திரும்பச் சத்தம் போட்டான். பிறகு என்ன நெனைச்சானோ, அவன் பாட்டுக்கு அழ ஆரம்பிச்சிட்டான்.”

“பிறகு...?”


“இந்த ஆளு என்னவெல்லாமோ சொல்லிப் பார்த்தாரு. அவன் கேட்கிற மாதிரி இல்ல. அவன் பாட்டுக்கு சுவத்துல தலையை முட்டிக்கிட்டு அழுதுக்கிட்டே இருந்தான்...”

“அவனுக்கு ஏதாவது வேணுமான்னு கேட்டியா?”

“கேட்டேன் ஸார்! ஆனா, நான் சொல்றது அவன் காதுலயே விழல...”

“சரி... நீ போ.”

மாலையில் தேநீர் குடிப்பதற்காக வீட்டுக்கு வந்த பிள்ளை மனைவியிடம் கூறினார், “நான் இன்னைக்கு ராத்திரிச் சாப்பாட்டுக்கு வரமாட்டேன்.”

“ஏன்?”

“ம்... ஒண்ணுமில்ல... ஆமா... மினியை எங்கே காணோம்?”

“மினி...”- தாய் அழைத்தாள். அடுத்த நிமிடம் ஐந்து வயதே ஆன மினி, தந்தையை நோக்கி ஓடி வந்தாள். அவளை வாரி எடுத்து அணைத்துக் கொண்டார் பிள்ளை. “மகளே, இன்னைக்கு ராத்திரி சாப்பாட்டுக்கு அப்பா வரமாட்டேன் தெரியுதா? அதனால அம்மாகூடத்தான் இன்னைக்கு நீ சாப்பிடணும்.”

“அப்பா எங்க போறீங்க?”

“எங்கேயுமில்ல, மகளே!”

“பிறகு ஏன் ராத்திரி வர மாட்டீங்க?”

“கொஞ்சம் வேல இருக்கு. அதுனாலதான்.”

“இந்த அப்பா எப்பவும் இப்படித்தான். வேலை வேலைன்னு எப்போ பார்த்தாலும் சொல்லிக்கிட்டேயிருப்பாரு. ம்க்கும்... நான் உங்க கூட இனி பேசமாட்டேன்.”

மகளின் தலையை மெல்ல வருடியவாறு கூறினார் பிள்ளை, “மகளே, போ... போய் விளையாடு.”

“தேநீர் அருந்திவிட்டு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தவாறு வீட்டை விட்டிறங்கிய பிள்ளையிடம் கேட்டார் அவர் மனைவி. “நாளைக்குக் காலையிலதான அது...?”

“ம்.”

“அதுனாலதான் இன்னைக்கு ராத்திரி வரமாட்டேன்னு சொன்னீங்களா?”

“ம்...” மெல்ல நடந்தார் பிள்ளை. அவர் சிறையிலிருந்த தன் அறையை அடைந்தபோது, லிவர் தட்டுவதற்குப் பத்ரோஸ் சகிதமாய் நின்று கொண்டிருந்தான் தாமஸ். கருத்து மெலிந்து கூன் விழுந்து போய்க் காணப்பட்ட அந்த உருவத்தையே ஒரு கணம் பார்த்தார் பிள்ளை. “ம்... இவன்தான் பத்ரோஸா?”

“ஆமா ஸார்!”- பிள்ளையின் கால்களில் விழுந்து வணங்கினான் பத்ரோஸ்.

“இதுக்கு முன்னாடி லிவர் தட்டியிருக்க இல்ல?”

“பிறகு? முப்பது வருஷமா இந்த ஜெயிலில் லிவர் தட்டுறது யாருன்னு நெனைக்கிறீங்க? நான்தானே? இதுவரை நான் செஞ்ச கொலை மட்டும் இருநூறுக்கும் மேல இருக்குமே!”

“கொலையா?”

“ஆமா... கொலைதான். இதுவும் ஒரு கொலை செய்யிற மாதிரிதானே ஸார்?”

பிள்ளைக்கு என்ன பதில் கூறுவது என்றே தெரியவில்லை.

“சரி, தாமஸ்... இந்த ஆளைக் கொண்டு போ.”

என்ன நினைத்தானோ, பத்ரோஸ் திடீரென்று கெஞ்ச ஆரம்பித்து விட்டான். “ஸார், தயவு செஞ்சு என்னை அந்தப் பாழடைஞ்சு போன ரூம்ல போட்டுப் பூட்டிடாதீங்க. அந்த ரூம்ல நெறைய ஆவி சுத்திக்கிட்டிருக்கு. எல்லாம் அந்த ரூம்ல முன்னாடி அடைச்சு வச்சிருந்த கைதிகளோட ஆவிதான். தனியா என்னைப் போட்டுப் பூட்டிட்டீங்கன்னா, ஒரு வேளை அது எல்லாம் ஒண்ணு சேர்ந்து என்னையே காலி பண்ணினாலும் பண்ணிடும்.”

“பரவாயில்லை. வா... உனக்கு வேண்டியதெல்லாம் அங்க இருக்கு” -தாமஸ் கூறி அவனை இழுத்துக் கொண்டு போனான்.

நாற்காலியில் அமர்ந்த பிள்ளை கடிகாரத்தை நோக்கினார். மணி சரியாக ஏழு ஆகியிருந்தது. எட்டே எட்டு மணி நேரம்தான் இன்னும் எஞ்சி இருக்கிறது. அவருடைய மனம் அப்போது எது குறித்தோ ஆழமாக சிந்தித்துக் கொண்டிருந்தது. திடீரென்று என்ன நினைத்தாரோ, எழுந்து நடக்க ஆரம்பித்தார். வழியில் வார்டர் ஸ்ரீதரன் நின்று கொண்டிருந்தான். “டேய், ஸ்ரீதரா, அந்த அறைச் சாவியைக் கொண்டு வா.”

“அந்த ஆளைப் பார்க்கவா சார்?”

“ம்...”

ஸ்ரீதரன் சாவியை எடுப்பதற்காகப் போனான். பிள்ளை நடந்தார். ‘இதுதான் நல்ல நேரம்’- பிள்ளை ஆலோசித்தார். இப்படிப்பட்ட சமயத்தில்தான் எப்படிப்பட்ட மனிதனும் மனம் திறந்து பேசுவான். மரணத்தின் நுழைவாயிலில் - வாழ்க்கை முடியப்போகிற தருணத்தில் அழகான ஒரு வாழ்க்கை அத்தியாயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க இன்னும் ஒரு சில மணிகளே எஞ்சி நிற்கிற நேரத்தில் அங்கு நிச்சயம் உண்மையைத் தவிர வேறு எதற்கும் இடம் இருக்க முடியாது. பயங்கரமான கொலையைச் செய்துவிட்டு வந்தவர்கள்கூட அந்தக் கடைசி நிமிடம் வருகின்றபோது தாங்கள் செய்ததையெல்லாம் ஒன்று விடாமல்- எவ்வித மறைவுமின்றி திறந்த மனதுடன் கூறிக்கொள்ளத்தான் விரும்புவார்கள். சாகின்ற போது நிம்மதியாக- மனதில் எந்தவிதமான கனமும் இல்லாமல் சாகத்தான் ஒவ்வொரு மனிதனும் விரும்புவான். மனதில் ஆயிரம் பிரச்சினைகளை வைத்துக் கொண்டே சாகத் துணிவது சாதாரணமாக சாத்தியமாகக் கூடியதல்ல. மரணத்திற்கு ஒரு சில நிமிடங்களோ- வினாடிகளோ எஞ்சி இருக்கின்ற தருணத்திலாவது ஒவ்வொரு மனிதனும் மன சாந்திக்கு வழி தேடத்தான் முயல்வான்.

அந்தக் குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு எதிர்காலம் என்ற ஒன்று இருக்கவா போகிறது? பிறகு சிந்திக்க எஞ்சி இருப்பது என்னவோ கடந்து வந்த வாழ்க்கைப் பாதையில் அவன் சந்தித்த பலவகைப்பட்ட அனுபவங்கள்தான். அதைத்தான் கடைசி நிமிடம் வரை மீண்டும் மீண்டும் அசைபோட்டுப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். மீண்டும் மீண்டும் அவற்றையே சிந்திக்க வேண்டும் போல் இருக்கும் அப்போது. கடந்தவற்றை நினைத்துப் பார்ப்பதில் அப்படியொரு சுகம்! ஆனால் எதிலாவது ஒன்றில்தான் மனம் முற்றுப்புள்ளி வைத்து நிற்கும். அப்போதுதான்- மரணம் கண்ணுக்கு எதிரில் தோன்றிக் கொண்டிருக்கின்ற வேளையில்தான் மனதில் இருக்கின்ற ஒவ்வொன்றையுமே வெளியே கூறிவிட வேண்டும் போன்ற ஒரு உணர்வு தோன்றும். அதன்படி ஒவ்வொரு மனிதனும் அப்போதுதான் மனதை முழுமையாகத் திறந்து வைத்துப் பேசுவான். பல சமயங்களில், அவை வார்த்தைகளாக வெளிவராமல் போய்விடலாம். சில சமயங்களில் எதையாவது வாசிக்கச் சொல்லி கேட்க வேண்டும் போலிருக்கும். யாராவது வாசித்தாலோ, அதைச் செவி கேட்க மறுக்கும். அப்போது ஆசை... ஆசை... எத்தனை ஆயிரம் ஆசைகள் இருக்கும் மனதின் அடித்தளத்தில்! ஒவ்வொன்றுமே அசாத்தியமாகத் தான் தோன்றும் அப்போது. ஒவ்வொன்றும் மீண்டும் மீண்டும் மனவறையில் வலம் வந்து கொண்டேயிருக்கும். கடைசியில் எஞ்சி நிற்பது என்னவோ ஒன்றே ஒன்றுதான். நகர்வதற்கு மறுக்கும் கனமான மணித்துளிகள் அவை. எப்படியோ, அவையும் ஓடி இறுதியில் ஒரு சில மணித்துளிகளே எஞ்சி நிற்கும். ஒவ்வொரு வினாடியைக் கடத்துவதும் ஒரு யுகத்தைக் கடப்பது போலிருக்கும். அப்போது- அந்த ஒரு சில நிமிடங்களில் எந்த மனிதனும் உண்மையைத்தான் கூறுவான்- எல்லாம் மனசாந்தி என்ற ஒன்றிற்காக மட்டும். கயிற்றின் நுனியில் தொங்கும்போது நிம்மதியாக- உடலில் எந்த விதமான பாரமுமின்றி இருக்க வேண்டும் என்ற எண்ணம்தான் காரணம் - வேறென்ன?


பிள்ளை ராமதாஸ் இருக்கும் அறையின் முன்னால் வந்ததும் நின்றார். இருளடைந்து போய்க் காணப்பட்ட அவ்வறையை ஒரு முறை ஆராய்ந்து முடித்தன அவர் கண்கள். அதற்குள் ஸ்ரீதரனும் அங்கு வந்துவிட்டான். ஸ்ரீதரனின் கையிலிருந்த டார்ச் விளக்கை வாங்கி அடித்துப் பார்த்தார் பிள்ளை. ராமதாஸ் உள்ளே இங்கும் அங்குமாய் நடந்துகொண்டிருந்தான். மன சாந்தி வேண்டி அவன் கால்கள் வேகமாக அப்போது இயங்கிக் கொண்டிருந்தன.

“ராமதாஸ்...” - பிள்ளை அழைத்தார்.

அவர் அழைத்தது அவன் காதில் விழவில்லை போலிருக்கிறது.

“கதவைத் திற!” - ஸ்ரீதரனிடம் கூறினார் பிள்ளை.

“ஸார், நீங்க மட்டுமா? ஆபத்து ஸார் இது. வேணும்னா ரெண்டு ஆளுங்களை வரச் சொல்லுறேன்.”- ஸ்ரீதரனின் குரலில் பயத்தின் சாயல் படர்ந்திருந்தது.

“வேண்டாம். இவன் என்ன செய்யப்போகிறான்? பாவம்...” -பிள்ளையின் குரலில் திடமிருந்தது.

பயந்து கொண்டே கதவைத் திறந்தான் ஸ்ரீதரன். பிள்ளை வேகமாக உள்ளே நுழைந்தார். அவருக்குப் பின்னால் ஸ்ரீதரனும். ராமதாஸ் அவர்களைக் கண்டதும் நின்றான். பிள்ளையின் முகத்தை நோக்கியவாறு கேட்டான்; “என்ன நேரமாயிடுச்சா ஸார்?”

“இல்ல...” - பிள்ளையின் குரலில் ஆச்சரியத்தின் அறிகுறிகள் தெரிந்தன.

“பிறகு...?” -ராமதாஸ்.

மெதுவான குரலில் கூறினார் பிள்ளை. “இன்னும் எட்டே எட்டு மணி நேரம்தான் இருக்கு. அதுக்கு முன்னால ஏதாவது வேணும்னா...?”

“எனக்கு ஒண்ணும் வேண்டாம் ஸார்!”

“யாரையாவது பார்க்கணும் போல இருக்கா?”

“இல்ல...”

“சரி; ஏதாவது வேணும்னா எங்கிட்டே தயங்காமச் சொல்லு, தெரியுதா?” - வெளியே போக கால் எடுத்து வைத்த பிள்ளை கூறினார், “விடியறதுக்கு முன்னாடி மூணு மணி சுமாருக்கு நாங்க வருவோம். எல்லாம் ஒழுங்கா நடக்கணும்னா நிச்சயம் உன் ஒத்துழைப்பு எங்களுக்கு வேணும்.”

ஒன்றும் பதில் கூறாமல் மீண்டும் பழைய மாதிரியே அறையினுள் நடக்க ஆரம்பித்தான் ராமதாஸ்.

“ம்... கதவை அடைச்சிடு ஸ்ரீதரா.”

ஸ்ரீதரன் கதவை இழுத்துப் பூட்டினான்.

“இங்க ஒரு ஆளை நிறுத்தணும், உடனடியா தெரியுதா?” ஸ்ரீதரனிடம் கூறினார் பிள்ளை.

“சரி ஸார்.”

பிள்ளை மீண்டும் தன் அறையை நோக்கிப் போனார். அங்கே சிறைக்கைதிகளின் இரவு உணவுக்கான சாம்பிலுடன் காத்திருந்தான் பணியாள் ஒருவன். இலேசாக எடுத்து வாயில் வைத்து ருசி பார்த்த பிள்ளை “போதும்” என்று சைகை மூலம் கூறி அவனை அனுப்பி வைத்தார். நாற்காலியில் அமர்ந்த அவர் சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்தார். சிறிதுநேரத்தில் என்ன நினைத்தாரோ, எழுந்து அறைக்குள் உலாவ ஆரம்பித்தார். அப்போதுதான் சாப்பிட்டு முடித்து வந்திருந்தான் ஜெயிலர் தாமஸ்.

“ஸார், சாப்பிட்டாச்சா?”

“இல்ல. எனக்கு ஒண்ணும் வேண்டாம். நாம முறையா எல்லாத்தையும் ‘ரெடி’ பண்ணி வைக்கணும்ல?”

“ஆமாம் ஸார். எல்லாம் ரெடி பண்ணி வச்ச மாதிரிதான். ஸார் வேணும்னா ஒரு தடவை வந்து பாருங்க.”

தாமஸ் நடக்க பின்னால் நடந்து போனார் பிள்ளை. இரண்டு மூன்று பணியாட்கள் பெட்ரோமாக்ஸ் விளக்குகள் சகிதமாக அங்கு நின்று கொண்டிருந்தார்கள். வழியில் தாமஸ் கேட்டான், “டாக்டர் எத்தன மணிக்கு வருவார்?”

“ஓ... அதைச் சொல்ல மறந்துட்டேனே! ரெண்டு ரெண்டரை மணி சுமாருக்கு டாக்டரின் வீட்டுக்கு ஒரு ஆளை அனுப்பணும் மறந்துடாதே.”

தாமஸ் கயிற்றின் ஒரு நுனியில் கல்லைக் கட்டி இரும்புச் சக்கரத்தின் வழியே தொங்கவிட்டான். லிவர் ஒழுங்காக வேலை செய்கிறதா என்று கடைசியாக ஒரு முறை சரிபார்த்துக் கொண்டான். எல்லாம் சரியாகவே இருந்தன. திரும்பி வருகின்ற போது, பிள்ளை கேட்டார். “அவன் ஒழுங்கா நிற்பானா? அவன் பாட்டுக்குப் பலகையில் உருள ஆரம்பிச்சிட்டான்னா...?”

“அதெல்லாம் ஒழுங்கா நிற்பான் சார்”- தாமஸுக்கு இந்த விஷயத்தில் ஏனோ சந்தேகமில்லை.

“இருந்தாலும் எனக்கென்னவோ சந்தேகமாத்தானிருக்கு.”

“ஏன் சார்?”

“இன்னும் அவன் மனசைத் திறந்து பேசலியே!”

“மனம் திறந்துன்னா?”

“எதையும்தான்.”

அதற்குள் அறை வந்துவிடவே, “சரி, தாமஸ்... நீ போ. நான் நாற்காலியில் உட்கார்ந்து கொஞ்ச நேரமாவது தூங்கப் பார்க்குறேன்” என்று கூறி தாமஸை அனுப்பி வைத்தார் பிள்ளை. கால்களை மேஜை மேல் போட்டுக்கொண்டு கண்களை மூடிக் கொண்டார்.

அழகான ஒரு பூங்கா. அதில் பிள்ளை மெல்ல நடந்து போய்க் கொண்டிருக்கிறார். அவருடைய சுட்டு விரலைப் பிடித்துக் கொண்டு சிரித்தவாறு அழகாக அவருடன் நடக்கிறாள் அவருடைய அன்பு மகள் மினி. அவர்களைச் சுற்றிலும் பலப்பல வண்ணங்களில் நறுமண மலர்கள். செடிகளில் தாவித் தாவி விளையாடிக் கொண்டிருந்த கிளிகள் எழுப்பிய இனிய ஒலிகள்! அந்த இனிமையான மாலைப் பொழுது மஞ்சள் வண்ணத்தைச் சிதறவிட்டிருந்தது. செடிகளிலிருந்து மலர்களைக் கொய்ய வேண்டும் என்று எண்ணி ஆவலுடன் இளம் கைகளை நீட்டிக் கொண்டே நடந்து போகிறாள் மினி. திடீரென்று அவள் எதையோ கண்டு அரண்டது மாதிரி தலை தெறிக்க ஓடுகிறாள். அவளுக்குப் பின்னால் இரண்டு தலைகளுள்ள ஒரு பெரிய பாம்பு “அப்பா... அப்பா...” அவளுடைய குரல் விண்ணைப் பிளக்கிறது. அவளை விரட்டிக் கொண்டு பாம்பும் விடாமல் ஓடுகிறது. அவரால் பாம்பின் வேகத்திற்கு ஓட முடியவில்லை. கால்களை ஏதோவொன்றில் கட்டிப்போட்டது போல் இருக்கிறது. மினியோ எத்தனையோ மைல்களுக்கப்பால் இருக்கிறாள்... அவளுக்குப் பின்னால் அந்த ராட்சஷப் பாம்பு...!

இறுதியில் மூச்சிரைக்க நிற்கிறாள் மினி. அந்தப் பாம்பு தன் படத்தை விரித்துக்கொண்டு மினியின் உடலில் ஒரு கொத்து!

“மினி! மினி!” உறக்கத்திலிருந்து திடுக்கிட்டெழுந்த பிள்ளை தன்னை மறந்து கத்திக் கொண்டிருந்தார். உடம்பு முழுவதும் வியர்வைத் துளிகள். தான் கண்டது கனவுதான் என்று உணர்ந்து கொள்ளவே அவருக்குச் சில வினாடிகள் பிடித்தன. திடீரென்று என்ன நினைத்தாரோ, கடிகாரத்தைப் பார்த்தார். மணி சரியாக இரண்டரை ஆகி விட்டிருந்தது. அவ்வளவுதான்... ‘விசுக்’கென்று இருந்த இடத்தை விட்டு எழுந்தார். அதற்குள் ஸ்ரீதரனும் தாமஸும் அங்கு வந்து விட்டார்கள்.

“எப்படியோ என்னை மறந்து கண் அசந்துட்டேன். ம்... போவோமா? ஆமா... டாக்டர் வீட்டுக்கு ஆள் அனுப்பியாச்சா?”

“அனுப்பியாச்சு ஸார்!” - தாமஸ் கூறினான்.

“எல்லாம் வேகமா நடக்கணும். தாமஸ், நீ ஒண்ணு செய்யி, பத்ரோஸையும் கூட்டிக்கிட்டு அங்கே வந்திடு.”

“சரி, ஸார்!” -தாமஸ் நடந்து போனான்.

“டேய், ஸ்ரீதரா! நீ முன்னால் நட...”

ஸ்ரீதரன் முன்னால் நடக்க, பின்னால் நடந்து சென்றார் பிள்ளை. இருவரும் ராமதாஸ் இருக்கும் அறையை அடைந்ததும் நின்றனர்.


நான்கைந்து சிறைப் பணியாட்கள் பெட்ரோமாக்ஸ் விளக்குடன் அவர்களுக்காக அங்கு காத்து நின்றிருந்தனர்.

“ம்... ஸ்ரீதரா, கதவைத் திற.”

ஸ்ரீதரன் கதவைத் திறந்தான். இரண்டு பணியாட்கள் முதலில் அறையினுள் நுழைந்தனர். அவர்களுக்குப் பின்னால் பிள்ளையும் பெட்ரோமாக்ஸ் விளக்கொளியில் ராமதாஸின் முகத்தைப் பார்த்தார். சுவரோடு சேர்ந்து நின்றிருந்தான் ராமதாஸ்.

“ராமதாஸ்...”

ராமதாஸ் தலையைத் திருப்பினான். கனவிலிருந்து எழுவதைப் போல பிள்ளையையே வைத்த கண் எடுக்காது அவன் பார்த்தான். தன்னை ஏன் அவன் அவ்வாறு பார்க்கிறான் என்று பிள்ளை அப்போது நினைக்காமல் இல்லை.

“ராமதாஸ்... நேரமாயிடுச்சு. போவோமா?”

பணியாட்களில் இரண்டு பேர் அவனைப் பிடிக்கப் போக, ‘வேண்டாம்’ என்று தடுத்தார் பிள்ளை.

தந்தையின் முன் அஞ்சி நிற்கும் சிறு குழந்தையைப் போல தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு பிள்ளையின் முன் அமைதியாக நின்றிருந்தான் ராமதாஸ். இரண்டு வேலையாட்கள் பெட்ரோமாக்ஸ் விளக்குடன் முன்னால் நடந்து செல்ல மற்ற இரண்டு பேர்களும் ராமதாஸின் இரண்டு பக்கங்களிலும் வந்தார்கள். அவர்களுக்குப் பின்னால் பிள்ளையும், ஸ்ரீதரனும்.

தூக்கு மரத்திற்கருகில் டாக்டர் வந்து அவர்களுக்காகக் காத்து நின்றிருந்தார். டாக்டரின் கண்களில் இன்னும் உறக்கக் கலக்கம் முற்றிலும் நீங்கவில்லை. அவர் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்திருக்க வேண்டும். அருகே இப்படியும் அப்படியுமாக சாய்ந்தாடிக் கொண்டிருந்த பத்ரோஸ் என்னவோ முணுமுணுத்துக் கொண்டிருந்தான்.

“டெஸ்ட் பண்ணிப் பார்க்கட்டுமா?” -டாக்டர் கேட்டார்.

“ம்...” என்றார் பிள்ளை.

டாக்டர் சோதனை செய்து பார்த்தார். எப்போதும் வழக்கமாக செய்து பார்க்கின்ற ஒன்றுதான் இதுவும். அது முடிந்ததும் பிள்ளை கேட்டார். “என்ன... காரியத்தைப் பார்ப்போமா?”

“ம்...” என்று கூறிய டாக்டர் சிகரெட் ஒன்றை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டார்.

இரண்டு பணியாட்கள் ராமதாஸைக் கொண்டு வந்து பலகையின் மேல் நிறுத்தினார்கள். பிள்ளை ராமதாஸின் முன்னால் போய் நின்றார். ஒரு நிமிடம் இருவருடைய கண்களும் சந்தித்துக் கொண்டன. ராமதாஸின் முகத்தில் ஏதோ ஒரு மாற்றம் நிகழ்வதைப் போல உணர்ந்தார் பிள்ளை. “பத்மினிங்கற உன் அண்ணன் சம்சாரத்தைக் கொலை செய்த குற்றத்துக்காக இப்போ உன்னைத் தூக்குல போடப் போறோம்...” அதற்கு மேல் பிள்ளையால் பேச முடியவில்லை. அதற்குள் கேவிக் கேவி அழ ஆரம்பித்து விட்டான் ராமதாஸ். அவனுடைய இரண்டு கண்களிலிருந்தும் கண்ணீர் அருவியென வழிந்து கொண்டிருந்தது. ஆனால் உதட்டுக்கு வெளியே ஒலி வர மறுத்தது. மெதுவாக ‘ணொய் ணொய்’ என்று ஒரு சப்தம் மட்டும் தொண்டைக்குள்ளிருந்து புறப்பட்டு வந்தது. “நான்... நான் கொலை செய்யல. நான் வாழணும்...” இதைக் கூறிவிட்டு தரையில் விழுந்து புரள ஆரம்பித்தான் ராமதாஸ். அவனைப் பிடித்து நிறுத்தினர் பணியாட்கள். கதறிக் கொண்டிருந்த ராமதாஸின் கழுத்தில் சுருக்குக் கயிறு மாட்டப்பட்டது. கயிறு சரியாக மாட்டப்பட்டிருக்கிறதா என்று ராமதாஸின் கழுத்துப் பகுதியைச் சரி பார்த்தான் ஸ்ரீதரன்.

“ம் இழுக்கட்டுமா?” - தாமஸ் வினவினான்.

“ம்...” - பிள்ளை.

“லிவரைத் தட்டு... பத்ரோஸ்...” - தாமஸ் சத்தமிட்டான்.

பத்ரோஸ் லிவரைத் தட்டினான். ராமதாஸின் உடல் பள்ளத்தை நோக்கி விரைந்தது. அப்போது கீழேயிருந்து மேல் நோக்கி ஓலமாய் வந்தது ஒரு குரல்... “நான் இல்ல... என் அண்ணன்தான்...”

அந்தக் கயிறு பாம்பைப் போல முழுக்கேறிப்போய் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது.

பிள்ளை மெதுவாகத் திரும்பினார். எவ்வித சலனமுமின்றி கண்களால் மேல் நோக்கிப் பார்த்தார். கருநீல நிறத்தில் நிர்மலமாகக் காட்சியளித்தது வானம். அங்கு முல்லைப் பூக்களைச் சிதறவிட்டது போல் நட்சத்திரங்கள். என்னென்னவோ நினைத்துக் கொண்டார் பிள்ளை அப்போது. தான் ஏதோ கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருப்பது  போல உணர்ந்தார். மீண்டும் அவரை இந்த உலகத்திற்கு கொண்டு வந்தது தாமஸின் குரல்தான். “ஆள் அனேகமா செத்திருப்பான். மேலே தூக்கிடுவோமா?”

“ம்...”

பணியாட்கள் கயிற்றை மேல் நோக்கி இழுத்தனர். வளைந்து போய் ஒரு மனித உடல் கயிற்றின் நுனிப் பகுதியில் தொங்கிக் கொண்டிருந்தது. உடலைச் சுற்றியிருந்த ஆடை முழுவதும் ஒரே மலம், மூத்திரம். முகம் வீங்கிப்போயிருந்தது. கயிற்றிலிருந்த உடம்பைப் பரிசோதனை செய்து பார்த்த டாக்டர் மெதுவான குரலில் சொன்னார்: “உயிரு போயிடுச்சு...” இதைக் கூறி விட்டு சிகரெட்டை எடுத்து உதட்டில் பொருத்திக் கொண்டார். மற்றொரு சிகரெட்டை எடுத்து பிள்ளையிடம் நீட்டினார். அதை வாங்கிப் புகைத்தவாறு பிள்ளை கூறினார். “ம்... இந்த சர்ட்டிபிகேட்டில் ஒரு கையெழுத்துப் போடுங்க...”

பாக்கெட்டிலிருந்து டைப் அடிக்கப்பட்ட அந்த சர்ட்டிபிகேட்டை எடுத்து நீட்டினார் பிள்ளை. அதை வாங்கி கையெழுத்திட்டு பிள்ளையிடம் கொடுத்தார் டாக்டர்.

“ம்... அப்போ நான் வரட்டுமா?”

“ம்...” - பிள்ளை முனகுவது மட்டும் கேட்டது.

டார்ச்சை அடித்துக் கொண்டே நடந்தார் டாக்டர்.

“ஸ்ரீதரா... தாமஸ்...”

இருவரும் பிள்ளையின் முன் வந்து நின்றனர்.

“நான் வீட்டுக்குப் போறேன். காலையில விடிஞ்சவுடன் இந்த பொணத்தை இவனோட அண்ணன்கிட்டே ஒப்படைச்சிடுங்க... தெரியுதா?”

“சரி, ஸார். நீங்க போங்க... உங்க முகம் என்னமோ மாதிரியிருக்கே!”

பதிலொன்றும் கூறாமல் பிள்ளை நடக்க ஆரம்பித்தார். அவருடைய வீட்டின் முன்னால் விளக்கு பிரகாசமாக எரிந்து கொண்டிருந்தது. கதவைத் தட்டினார். அவருடைய மனைவிதான் வந்து கதவைத் திறந்தாள். எவ்வித சலனமுமின்றி உள்ளே நுழைந்த பிள்ளை மேஜையின் முன்னால் போய் அமர்ந்தார். டிராயரைத் திறந்து உள்ளேயிருந்த வெள்ளைக் காகிதமொன்றை உருவி எடுத்தார். அதில் எழுதும்போது, அவருடைய விரல்களில் ஒரு நடுக்கம். அந்த ராஜினாமா கடிதத்தை எழுதி முடித்ததும் கீழே கையெழுத்திட்டார். அப்போது காபி டம்ளருடன் முன்னால் வந்து நின்றாள் அவர் மனைவி. காபியை வாங்கிய அவர் ஜன்னலருகில் போய் நின்றார். காபியைப் பருகப்போன அவர் என்ன காரணத்தாலோ அதையே வெறித்துப் பார்த்தார். அதில் ஏதோ ஒரு நிழல் அசைவது போலிருந்தது. அது... அது... வேறு யாருமல்ல ராமதாஸின் சிதைந்துபோன உடல்தான். காபியைப் பருகாமல் அப்படியே ஜன்னல் வழியாக வெளியே கொட்டி விட்டார்.

“ஏன்... என்ன ஆச்சு?” -பதறிப்போய் கேட்டாள் அவரின் மனைவி.

“ஒண்ணுமில்ல... மினி எங்கே?”

“அவளுக்குக் கொஞ்சம் காய்ச்சலடிச்சது. தூங்கிக்கிட்டிருக்கா...”

“காய்ச்சலா?” - பிள்ளையின் குரலில் ஒரு பதற்றம்.

“ம்... ஆனா இப்போ பரவாயில்ல...”

“வா பார்க்கலாம்.”

படுக்கையறைக்குள் நுழைந்த பிள்ளை அங்கே உறங்கிக் கொண்டிருந்த மினியின் நெற்றியில் கையை வைத்துப் பார்த்தார். நெருப்பைப் போல சுட்டது நெற்றி.

“உஷ்ணம் அதிகமா இருக்கே. உடனே டாக்டரை கூப்பிடறது தான் நல்லது.”

படுக்கையறையை விட்டு வெளியே வந்தார் பிள்ளை. மேஜையின் மேலிருந்த டார்ச் விளக்கைக் கையில் எடுத்தார். அப்போது, அதனருகில் இருந்த அந்த ராஜினாமா கடிதத்தின் மேல் அவரின் பார்வை சென்றது. அதையும் கையில் எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே இறங்கினார். வீட்டை ஒட்டிப் போகின்ற ஒற்றையடிப்பாதையில் நடக்கும்போது, மினியின் வாடித் தளர்ந்துபோன முகம் அவருடைய மனதின் அடித்தளத்தில் வலம் வந்தது. பிறகு என்ன நினைத்தாரோ, கையிலிருந்த அந்த ராஜினாமா கடிதத்தைப் பல துண்டுகளாகக் கிழித்துப் பாதையோரத்தில் வீசினார்.

மேலே வானத்தின் கருமை மெல்ல மெல்ல நீங்கிக் கொண்டிருந்தது. நட்சத்திரங்கள் அப்போது ஒன்றுகூட இல்லாமல் மறைந்து விட்டிருந்தன.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.