Lekha Books

A+ A A-

மொட்டச்சி - Page 2

mottachi

அந்தப் பெண்ணின் முகத்தைப் பார்க்கும் ஒவ்வொரு சமயமும் இந்தக் கேள்விக்கணைகள் என் நெஞ்சின் அடித்தளத்தில் முகிழ்க்கும். என்ன காரணமோ தெரியவில்லை- அவற்றிற்கு விடை காணவேண்டும் என்ற ஆவல் எனக்கு.

இதற்காகவே சிதம்பரய்யருடன் நட்பு உண்டாக்கிக் கொண்டேன்.

கால நிலை குறித்தும், புகை வண்டி வரும் நேரங்கள் குறித்தும் தான் முதலில் பேசினேன். எடுத்தவுடன் அந்தப் பெண் சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பேசினால் எங்கே அவர் ஏதாவது தப்பாக நினைத்துக் கொள்வாரோ என்ற பயம் எனக்கு.

கடைசியாக-

மனதைக் குடைந்து கொண்டிருந்த அந்தக் கேள்வியைக் கேட்டும் விட்டேன். சிதம்பரய்யர் சிறிதும் ஆச்சரியப்படவில்லை. ‘இந்தா பார்’ என்று வெறி கொண்டு ருத்ர தாண்டவம் ஆடவுமில்லை. உளுந்து வடையின் விலை கூறுகின்ற தொனியில் மிகவும் அமைதியாகக் கூறினார்; “யார்... அலமேலுவைப் பத்தியா? கல்யாணம் செய்யிறப்போ, மாப்பிள்ளைக்கு வயது என்னன்றீங்க? அம்பத்தொம்பது வயசு... தங்கமான மனுஷன்... ஆனா, அறுபது வயசு ஆகுறதுக்கு முன்னாடியே போய்ச் சேர்ந்துட்டான்.”

என்னுள் ஏற்பட்ட அதிர்ச்சியை உணராத மாதிரி சிதம்பரய்யர் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார். “இனி லட்சுமியின் கல்யாணத்தையும் சீக்கிரம் நடத்தணும்.”

அதற்குமேல் அவரிடம் பேச வேண்டும் என்று தோன்றாததால், எழுந்துவிட்டேன்.

அப்பப்பா... மனதில் கொஞ்சம்கூட இரக்கமில்லாத அளவுக்கு கல் நெஞ்சம் படைத்தவரா சிதம்பரய்யர்? அலமேலுவின் மொட்டையடிக்கப்பட்ட, வெள்ளைப்புடவை அணிந்த கோலம் ஒரு கணம் மனக்கண்முன் வலம் வந்தது. அவளின் அழுகைக்குக் காரணம் எனக்கு இப்போது புரிந்துவிட்டது. வானை நோக்கிய அவளின் பார்வையின் பொருள் இப்போது விளங்கிவிட்டது எனக்கு.

மகளின் வாழ்க்கையை பெற்ற தந்தையே கெடுத்திருக்கும் அவலம், அப்பப்பா... எத்தனைக் கொடூரம்!

அடுத்த கணம் என் சிந்தனை இப்படிப் போனது. உண்மையிலேயே சிதம்பரய்யர் கொடுமையான மனிதரா? இரக்கமற்ற ஆளா? வீட்டில் மனைவியை வாய்க்கு வந்தபடி திட்டி அவரை ஒருமுறைகூட நான் பார்த்ததில்லை. கண்டபடி குழந்தைகளை மிரட்டி அடித்தும் கண்டதில்லை.

அலமேலுவின் துயரம் நிறைந்த வாழ்க்கையில் வறுமைக்கு மத்தியில் உழலக்கூடிய ஒரு குடும்பத்தின் உண்மை நிலை முற்றிலும் பிரதிபலிக்கக் கண்டேன்.

மாப்பிள்ளை வாலிபனாக இருக்க வேண்டுமானால், வரதட்சணை கொடுக்க வேண்டும். அதற்கும் பணத்திற்கு எங்கே போவது? பெண்ணைக் கல்யாணம் செய்து கொடுக்காவிட்டால் ஊரே சம்பந்தப்பட்ட குடும்பம் குறித்து கன்னாபின்னாவென்று பேசும். அவள் கன்னியாகவே காலமெல்லாம் இருந்துவிட்டாலோ ஏளனம் செய்யும். அதே நேரம்... வயதான மாப்பிள்ளையாக அமைந்து விட்டால் வரதட்சணை கொடுக்க வேண்டிய அவசியமில்லை. முதல் மனைவி மூலம் பிறந்த குழந்தைகளைப் பராமரிக்க அந்த முதிய மாப்பிள்ளைக்குத் தேவை ஒரு பெண்- அவ்வளவுதான்.

அந்த ஐம்பத்தொன்பது வயது கிழவனுடன் அலமேலு எப்படி வாழ்க்கை நடத்தியிருப்பாள்? அவளின் அந்தக் கணவன் அவளுக்கு அப்படியென்ன சுகத்தைத் தந்திருக்கப் போகிறான்? அதிகபட்சம் போனால் வெற்றிலை இடித்துத் தரச் சொல்லியிருப்பான். காலை பிடித்து விடும்படி கூறியிருப்பான்.

அவன் இறந்தபோது, அலமேலு அழுதிருப்பாளா?

‘இனி லட்சுமியின் கல்யாணத்தையும் சீக்கிரம் நடத்தணும்...’ சிதம்பரய்யரின் வாக்குகள் செவிப்பறையில் மோதிக் கொண்டிருந்தன.

அவளை யார் கல்யாணம் செய்ய முன்வருவார்கள்? அப்படி வருபவனுக்கு எத்தனை வயது இருக்கும்?

அழிந்துபோன அலமேலு! அழியப் போகும் லட்சுமி!

லட்சுமி அதிகபட்சம் போனால் இன்னும் எத்தனை நாட்கள் சிரித்துவிடப் போகிறாள்? நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன. ஜன்னலோரம் நின்று அலமேலு அழுவது மட்டும் நித்தமும் நிற்காமல் நடந்து கொண்டிருந்தது.

மூன்று நான்கு நாட்களாகவே சிதம்பரய்யரின் முகத்தையே காண முடியவில்லை. ஒரு நாள் மாலை தன்னைவிட வயதான ஒரு கிழவனுடன் தன் வீட்டிற்குள் நுழையும் சிதம்பரய்யர் இங்கிருந்து நன்றாகத் தெரிந்தார். குடுமியைக் கொண்டையாய் பின்பக்கம் முடிந்த, வெற்றிலைக் கறை படிந்த பொக்கை வாய்க் கிழவன்- அவனின் உதட்டுக்கு வெளியே கோரமாகப் பல்லொன்று துருத்திக்கொண்டிருந்தது.

அன்று இரவு சிதம்பரய்யர் வீட்டில் ஒரே அழுகை மயம். அலமேலுவும், லட்சுமியும் அழுகிறார்கள் என்பது நன்றாகத் தெரிந்தது. ஜன்னலோரம் நான் நின்றிருந்ததால் என் கண்களுக்கு அவர்கள் மிகவும் நன்றாகத் தெரிந்தார்கள். சிறு குழந்தைகள் இங்குமங்குமாய் ஓடி என்னவோ செய்து கொண்டிருந்தன.

தாய் லட்சுமியைத் திட்டுகிறாள். “நல்ல காரியம் நடக்கப் போற நேரத்துல செத்த வீட்டுல மாதிரி அழறியேடீ! மூதேவி!”

அலமேலு தாயிடம் கேட்கிறாள்; “என்னம்மா, எங்களுக்கு அழறதுக்கு கூடவா உரிமையில்லை...”

“என்ன சொன்னடி மொட்டச்சீ...? நீ செத்துத் தொலைஞ்சாத்தான் இந்த வீடே உருப்படும்”- இது அவளின் தாய்.

நான் படுக்கையில் படுத்த பின்னும்கூட வசையும், அழுகையும் அந்த வீட்டில் தொடர்ந்து கொண்டுதானிருந்தன.

பொழுது புலர்ந்தது. முதல் நாள் மாலை வீட்டுக்கு வந்த கிழவனைச் சுற்றிலும் குழந்தைகள் நின்று அவனைக் கேலி செய்து கொண்டிருந்தார்கள். “தாத்தா... தாத்தா... தாத்தா...”

பொக்கை வாய் திறந்து கிழவன் சிரிப்பது இங்கிருந்து நன்றாகத் தெரிகிறது.

ஜன்னலோரம் அலமேலுவும், லட்சுமியும் நின்று கொண்டிருக்கிறார்கள். ஒரு வேளை இரவு முழுவதும் இப்படியேதான் நின்று கொண்டிருக்கிறார்களோ?

லட்சுமி தேம்பித் தேம்பி அழுகிறாள். மொட்டையடிக்கப்பட்ட அக்காவின் தலையை அவள் கண்கள் வெறித்து நோக்குகின்றன. தங்கையின் கண்ணீரைத் தன் சேலைத் தலைப்பால் துடைத்த அலமேலு தன் அழுகையைக் கட்டுப்படுத்த முடியாமல் இருக்கிறாள்.

ஒன்று மட்டும் நன்றாகப் புரிந்துவிட்டது. லட்சுமி வாழ்க்கையில் இனியொரு முறை சிரிக்கப் போவதில்லை. நான் இங்கு நின்றிருப்பதைப் பார்த்துவிட்டாளோ என்னவோ, ஜன்னலை இழுத்துப் பூட்டிக்கொண்டு விட்டாள் லட்சுமி.

மறுநாள் காலை-

ஐந்தாறு பேர்கள் சிதம்பரய்யர் வீட்டு முன் இங்குமங்குமாய் துரித கதியில் இயங்கிக் கொண்டிருந்தார்கள். அதில் சில பெண்களின் தலைகளும் தென்பட்டன. நாதஸ்வரக்காரர் மிகவும் சுவாரஸ்யமாக ‘பிப்பீப்பி’ என்று முழங்கிக் கொண்டிருந்தார். புரோகிதர் மந்திரம் சொல்வதும் தெளிவாகக் கேட்டது.

லட்சுமியின் கல்யாணம் நடக்கிறது.

ஜன்னலின் வழியாக நான் பார்த்தேன். அலமேலு ஒரு மூலையில் நின்று கொண்டிருந்தாள்- அழுதவாறு. திருமணச் சடங்கில் பங்கு கொள்ளாது அவள் ஏன் ஒதுங்கி நிற்க வேண்டும்? ஓ... அவள்தான் விலக்கப்பட்ட கனி ஆயிற்றே...!

அன்று மாலையே லட்சுமியும் அவளின் கிழட்டு கணவனும் அவள் உறவினர்களும் கிளம்பிவிட்டார்கள். புகுந்த வீடு போகிறாள் லட்சுமி. கடைசி வரை அவளின் குனிந்த தலை நிமிரவே இல்லை.

வாசல் முன் நின்றிருந்த ஒரு மனிதரிடம் சிதம்பரய்யர் கூறுவது எனக்குத் தெளிவாகக் கேட்டது. “அப்பா... எப்பிடியோ இந்த காரியமும் நடந்திருச்சு...”

தொடர்ந்து அவர் மனைவி சொன்னாள். “லட்சுமியும் போய் சேர்ந்துட்டா...”

ஒரு பெரிய பாரத்தையே இறக்கி வைத்துவிட்ட தெம்பு அவர்களின் குரலில் தொனித்தது. இனி நிச்சயம் இந்தச் சமூகம் அவர்களை இகழப்போவதில்லை.

லட்சுமி போய் கிட்டத்தட்ட நான்கைந்து மாதங்கள் ஆகிவிட்டன. இனி அவள் எப்போது மீண்டும் வீட்டுக்கு வருவாள்? வரும்போது அவளின் தலையில் முடி இருக்குமோ என்னவோ?

“மாஆஆஆ... மாஆஆஆ...”- சிதம்பரய்யரின் வீட்டினுள்ளிருந்து குழந்தையின் குரல் உச்சஸ்தாயியில் கேட்கிறது. குழந்தை ஆணோ, பெண்ணோ தெரியவில்லை.

காலையில் எதிர்பாராதவிதமாக தெருவில் பார்த்தபோது சிதம்பரய்யர் கூறினார்; “சார்... குழந்தை பொறந்திருக்கு. பெண் குழந்தை...”

Page Divider

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel