
“வேண்டாம்! அங்கே வீட்டுலே போய்க் குளிச்சிக்கிறேன்.”- தாம் அப்படிக் கூறியிருக்க வேண்டியது இல்லை என்று மறுபடியும் தோன்றியது கேசவனுக்கு. பேசாமல் குளித்து முடித்துவிட்டே போகலாம். அப்படியாவது சற்று அதிக நேரம் இங்கே தங்கலாமில்லையா?
கம்பளியையும், மஃப்ளரையும் மடித்துத் தகரப் பெட்டியினுள் வைத்தார் கேசவன். ‘இவையும் தங்கள் கடமைகளை ஒழுங்காகச் செய்து முடித்திருக்கின்றன’ என்று அப்போது அவருக்குத் தோன்றியது. இனி அவற்றுக்கும் நிலையான ஓய்வுதான்!
டீக்கடைக்காரனிடம் விடை பெற்றுக்கொள்ள வேண்டும். கடந்த ஆறு வருஷ காலமாகச் சாப்பாடு போட்டவன் அவன்.
டீக்கடைக்குப் போய் கேசவன் திரும்பி வரும்போது, நீலகண்ட பிள்ளை தயாராகப் படுக்கைகளை மடித்துக் கட்டி வைத்திருந்தார். பெட்டி, படுக்கைகளைச் சோதனைச் சாவடியின் முன் இருந்த திண்ணைமேல் எடுத்து வைத்ததும் அவர்தான்.
டப்பாவில் இருந்த பணத்தை ஒரு பொட்டலமாகக் கட்டிக் கேசவனிடம் நீட்டியபடி நீலகண்ட பிள்ளை சொன்னார். “வண்டிக் கூலிக்கு இதை வச்சுங்குங்க.”
மேஜையின் மேல் அந்தப் பொட்டலத்தைத் திரும்பவைத்தார் கேசவன்.
“வேண்டாம்! இன்னிக்குத்தான் டிக்கெட் எடுக்காமலே கோட்டயம்வரை போகலாமே!”
கேசவன் நீலகண்ட பிள்ளையின் கண்களை உற்று நோக்கினார். ஏதோ ஒரு வகையான சோகம் அங்கே நிழல் பரப்பிவிட்டிருந்தது.
சோதனைச் சாவடியின் முன் நின்றிருந்த கோட்டயம் பஸ் வளைவு திரும்பியபோது, பின் இருக்கையில் அமர்ந்திருந்த கேசவன் பின் பக்கமாய்த் திரும்பிப் பார்த்தார். சோதனைச் சாவடி தெரியவில்லை. பனிப் படலத்தில் அது மறைந்துவிட்டிருந்தது.
பனிப் படலத்தினூடே வழக்கமாகத் தெரியும் மங்கலான அரிக்கன் விளக்கொளிகூடத் தெரியவில்லை. ஓ... அதைத்தான் எப்போதோ கேசவன் எடுத்து உள்ளே வைத்துவிட்டாரே!
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook