Logo

மரணம்

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 6423
maranam

முப்பத்தொன்றாவது வயதில்தான் அவன் பிறந்தான். பிறந்தபோது அவனுக்கு ஆங்காங்கே நரைத்து வளர்ந்திருந்த முடிகளும், மங்கலான இரண்டு கண்களும், சரியான வடிவத்தில் இல்லாத மூக்கும், தடிமனான உதடுகளும், பெரிய மேல் மீசையும், மிகவும் மெலிந்து போய் காணப்படும் ஒரு உடலும், ஒல்லியான கைகளும் கால்களும், வெப்பத்தாலான புண்ணும், முப்பது வருடங்களும் அவனுடைய சொத்துக்களாக இருந்தன.

ஆனால், அவனுக்கு சொந்த சொத்துக்கள் மீது நம்பிக்கை கிடையாது. குறிப்பாக வருடங்களுடைய விஷயத்தில். வருடங்கள் மட்டுமல்ல... மணிகளின்... நிமிடங்களின்... வினாடிகளின் விஷயத்தில் பொதுவாகவே காலத்தின் விஷயத்தில்...

அதற்குத் தெளிவான ஒரு காரணம் இருக்கிறது. காலம் என்பது பொதுச் சொத்து. காற்றைப் போல... மழையைப் போல... வெப்பப் புண்ணைப் போல...

யார் என்ன முயற்சி பண்ணினாலும், ஒரு வினாடியை ஒரு வினாடிக்கும் அதிகமாக நீடிக்கச் செய்ய முடியாது. ஒரு நிமிடத்தை ஒரு நிமிடத்திற்கம் குறைவாக வெட்டிச் சிறியதாக ஆக்கவும் முடியாது. காலம் மாற்ற முடியாதது. நிரந்தரமானது. அது இழுத்தால் நீளமாகக் கூடியதோ, விட்டால் சுருங்கக் கூடியதோ இல்லை.

அவனுக்கு வேறு சில சொத்துக்களும் இருந்தன. நகரத்தில் அழுக்குகள் சேர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் கருப்புநிற ஆற்றின் கரையில் இருக்கும் ஒரு வாடகை அறை, செருப்புகள், சட்டைகள், கால் சட்டைகள், பீடிகள், சிகரெட்டுகள், சாராயப் புட்டிகள், நண்பர்கள்... இவற்றில் பெரும்பாலானவை சொத்துக்கள் என்பதைவிட சுமைகளாக இருந்தன என்று கூறுவதுதான் சரியானது.

பிறந்தவுடன் அவன் அழவில்லை. சிரித்தான். பிறகு எழுந்து நின்றான். கண்களைக் கசக்கித் துடைத்தான். திரும்பிப் பார்த்தான்.

அப்போது...

கடந்த வருடம் வெறுமனே கிடக்கிறது. காலியான சாராய புட்டிகள், சிகரெட் சாம்பல், கிழிந்த தாள் துண்டுகள், வெயில் விழுந்து கொண்டிருக்கும் தெருக்கள், சொறி பிடித்த சிறிய அறைகள்... இவையெல்லாம் இருந்தும் அனைத்தும் சோர்வைத் தருவனவாக இருந்தன. எல்லாவற்றிலும் வெறுமை படர்ந்திருந்தது. மிகுந்த வெறுமை.

அவன் மேலும் கொஞ்சம் பின்னால் எட்டிப் பார்த்தான்.

அதற்கு முந்தைய வருடமும் அதே மாதிரிதான் இருந்தது.

இப்படிக் கண்கள் பின்னோக்கிச் செல்லும்போது, முதலில் வெறுமையில் தெளிவில்லாமல் இருந்தாலும் ஓசை எழுப்பியவாறு நகர்ந்து கொண்டிருந்த உருவங்களும் பொருட்களும் கூட மறைந்து கொண்டிருந்தன.

தொடர்ந்து காலி சாராய புட்டிகளோ வெப்பப் புண்களோ கூட இல்லாத வெறுமை.

முப்பது வருடங்களுக்குப் பின்னால் ஒரு வடிவம் இருக்கிறது. வடிவத்தின் பழமையான ஒரு நினைவாவது இருக்கிறது.

ஒரு கோணிப் பையிலோ ஒரு தோலாலான உறையிலோ நெளிந்து கொண்டிருக்கும் அவன்!

அதுதான் உண்மையான வடிவம். முதல் வடிவம். பிறவிக்கு முன்னால் இருந்த வடிவம் அதுதான்.

பிறகும் காலத்தைப் பிடித்து நிறுத்தி, பின்னோக்கி நடக்கும் போது, அடர்த்தி குறைந்த, வெள்ளை நிற திரவத்திற்குள் ஒரு புழுவாக, அணுவாக, இருளாக, சக்தியாக அவன் நீந்திக் கொண்டிருக்கிறான்.

எதுவுமே தெரியாத, தனக்கென்று சொத்து எதுவும் இல்லாத, முழுமையான விடுதலை கொண்டவனாக, படைப்பு- இருப்பு- இறப்பு கொண்டவனாக, பலம் படைத்தவனாக, கடந்த ஆசைகளின் உறைவிடமாக அவன் சத்தம் உண்டாக்கியவாறு அலைந்து திரிகிறான்.

எதிர்ப்பு எதுவும் இல்லாத சக்தி அவன். தடுத்து நிறுத்த முயற்சிப்பவற்றைத் தகர்த்து சாம்பலாக்கும் சக்தி.

அதற்கும் முன்னால்...?

மீண்டும் வெறுமையா?

இல்லை. சுற்றிலும் இருட்டு இருப்பதென்னவோ உண்மை. இருட்டில் ஆங்காங்கே நண்பர்கள் இருக்கிறார்கள். ஒளிரும், பிரகாசிக்கும் நண்பர்கள்.

அவன் ஒரு நட்சத்திரம். மிகப்பெரிய, பிரகாசித்துக் கொண்டிருக்கும் ஒரு நட்சத்திரம்.

மற்ற நட்சத்திரங்களுக்கு மத்தியில், நட்சத்திரங்களின் கூட்டத்தில், பிரபஞ்சத்தின் இருள் பரப்பில் ஒரு நட்சத்திரமாக அவன் பயணிக்கிறான்.

பெயரில்லை. வயதில்லை. காமம் இல்லை. காலத்தின் சங்கிலிகள் இல்லை.

சுதந்திரமான நட்சத்திரம்.

அதற்கு அப்பால் கண்கள் செல்லவில்லை.

அருகில் கிழிந்து கிடக்கும் பத்திரிகைத் தாளின் துண்டில் சந்திரனின் முகம். பழைய அழகான- அரசனுக்கு நிகரான சந்திரனின் முகமல்ல.

சந்திரனின் புதிய முகம். அப்போலோ படமெடுத்த முகம். கடலும் கரையும் நெருப்பு மலைகளும் உள்ள முகம். சிரங்கு பிடித்த சதையைப் போல இருக்கிறது. சுட வைத்த அப்பளம் போல இருக்கிறது. அசிங்கமான - அவலட்சணமான முகம்.

மனிதனின் வளர்ச்சிக்கு ஆதாரம் அது. வளர்ச்சி அழகை ஒரு ஓரத்தில் ஒதுக்கியது. அந்த இடத்தில் உண்மையை இடம் பெறச் செய்தது. அழகற்ற, மிகப்பெரிய உண்மையை.

சந்திரன் என்ற உண்மையின் முகத்தை உற்றுப் பார்த்தபோது அவனுக்கு சோர்வும் வெறுப்பும் உண்டானது.

சிரங்கு பிடித்த இந்தக் கரை, பிரகாசித்துக் கொண்டிருக்கும் கடலின் அழகே இல்லாத இந்தக் கரை, இந்த உண்மை- இது யாருக்கு வேண்டும்?

அவன் மீண்டும் கண்களைத் தடவித் துடைத்துவிட்டு, முன்னால் பார்த்தான்.

இனி உலகத்தைப் பார்க்க வேண்டும். பிறந்து விட்டால் உலகத்தைப் பார்க்க வேண்டாமா ? புதிய உலகம். புதிய வண்ணங்களின், புதிய வாசனைகளின், புதிய சத்தங்களின் உலகம்.

இதுதானா அந்த உலகம்?

சிலந்தி வலை பிடித்த அறை. கரையான் அரித்த மரக்கதவு. சொறி பிடித்த சுவர்கள். துரும்பு பிடித்த சாளரக் கம்பிகள்.

அந்தக் கம்பிகளுக்கு அப்பால் அசுத்த நீர் ஓடிக் கொண்டிருக்கும் துரும்பு பிடித்த ஆறு. ஆற்றுக்கு அக்கரையில் மிகவும் சிறிய ஒற்றையடிப் பாதை. பாதையின் ஓரத்தில் கடைகள்... வீடுகள்... மரங்கள்...

மரக்கிளைகளின் வழியாகப் பார்க்கும்போது தூரத்தில் தெரியும் அலைகள் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும் கடல்.

இதுதான் உலகம் என்ற பொருளா?

அவனுக்கு வெறுப்பு தோன்றியது.

இதுதான் காட்சிப் பொருளா? இதைப் பார்ப்பதற்காகவா பிறந்தான்?

அவன் பற்களைத் தேய்த்தான். குளித்தான். தலை வாரினான். தாடியைத் தடவிப் பார்த்துக் கொண்டான். சிறு சிறு ரோமங்கள் இருந்தன. ஆனால், அதை அகற்ற வேண்டும் என்று நினைக்கவில்லை. ஆடைகளை அணிந்தான். காசுகளைப் பைக்குள் போட்டான்.

புறப்பட்டான்.  

வெளியே போய்ப் பார்ப்போம். வெளியே இன்னொரு உலகம் இருக்கும்.

அகலம் குறைவான, மெலிந்த மாடியை விட்டு இறங்கி, பழைய சிதிலமடைந்த மரத்தாலான படிகளில் இறங்கி, கற்கள் வெளியே வந்து சிதறிக் கிடக்கும் தெருவை அடைந்தான்.

தெருவின் ஓரத்திலிருந்த தண்ணீர்க் குழாயைச் சுற்றி ஆட்கள் நின்றிருந்தார்கள். ஒரு ஆண் குளித்துக் கொண்டிருந்தான். மெலிந்து போன உடலை மூடிக் கொண்டிருந்த சுருக்கங்கள் விழுந்த கருப்புநிறத் தோல் மீது அவன் விலை குறைந்த ஒரு சோப்புத் துண்டைத் தேய்த்து நுரை வரச் செய்ய பாடுபட்டுக் கொண்டிருந்தபோது, ஒரு இளம்பெண் செம்புக் குடத்தைக் குழாய்க்கு அடியில் வைத்து நீர் நிறைத்துக் கொண்டிருந்தாள்.


மற்ற இளம்பெண்கள் உடலில் சோப்பு தேய்த்துக் கொண்டிருக்கும் கருப்பு ஆளை வெட்கமே இல்லாமல் பார்த்தவாறு நின்றிருந்தார்கள்.

அவனைப் பார்த்ததும் அவர்களுடைய கண்கள் கருப்புநிற மனிதனை விட்டு விலகின. கருப்பு நிறத்தில் இருக்கும், பார்க்க சகிக்காத உண்மை அவர்களுக்குத் தேவையில்லை. அவர்களுக்கு டெரிலின் ஆடை போதும்... செருப்பு போதும்.

வாடிய முல்லைப் பூக்களாலான மாலைகள் அவிழ்ந்து, அவர்களுடைய கூந்தலை விட்டு விலகித் தொங்கிக் கொண்டிருந்தன.

அவர்களில் பலரையும் அவனுக்குத் தெரியும். அவர்களுக்கு அவனையும், அவனுடைய அறையின் வாசனை அவர்களுக்கு நன்கு அறிமுகமான ஒன்று. அவர்களுடைய வியர்வை வாசனை அவனுக்கும்.

எனினும், புதிய கண்களால் முதல் தடவையாகப் பார்ப்பதைப் போன்று அவன் அவர்களைப் பார்த்தான்.

இல்லை. அவர்களிடம் எந்த மாற்றமும் இல்லை. நேற்றைய கொஞ்சல்கள்தான். நேற்றைய உதட்டைக் கடிக்கும் திருட்டுச் சிரிப்புதான். கறுத்த இருள் நிறைந்த சேற்றுக் குவியலில் இரண்டறக் கலந்து விழுந்து கிடக்கும் பழைய, சேறு அப்பிய முகங்கள்தான் அவை அனைத்தும்.

அவன் முகத்தைத் திருப்பிக் கொண்டான். மேலே வந்து கிடக்கும் கல் துண்டுகளைத் தட்டிச் சிதற விட்டவாறு அவன் முன்னோக்கி நடந்தான்.

எண்ணெய் மில்லின் தகர கேட்டையும் நீளமான சுவரையும் கடந்தான். சகிக்க முடியாத சத்தத்தையும் ‘பளிச்’ என்ற வெளிச்சத்தைத் துப்பிக் கொண்டிருக்கும் வெல்டிங் கூடாரத்தையும் தாண்டினான். செய்தாலியின் கடைக்கு முன்னால் வந்தான்.

நடந்து கொண்டே கடையைப் பார்த்தான். ஏதாவது புதிதாக அங்கு இருக்கிறதா ?

எதுவும் இல்லை. பழைய மரக்கால்களில் நின்று கொண்டிருக்கும் கடை. எலுமிச்சம்பழம் தொங்கிக் கொண்டிருக்கும் கம்பியாலான கூடு. பழைய கண்ணாடிப் பெட்டிக்கு மேலே பீடி, சீட்டு மார்க் தீப்பெட்டி, பாசிங் ஷோ சிகரெட்… தமிழ்த் திரைப்படக்காரர்களின் படங்கள் இருக்கும் பலகையாலான சுவர்... மடியில் முறத்தை வைத்துக் கொண்டு, முறத்தில் கத்திரியை வைத்து பீடி சுற்றிக் கொண்டு உட்கார்ந்திருக்கும் கூர்மையான நகத்தைக் கொண்ட பழைய... பழைய... செய்தாலி... முழுமையாக வெட்டப்பட்ட பழைய தலைமுடி... நரைத்த, பழைய தாடியும் மீசையும். பழைய வளைந்த பற்கள்.

‘‘சிகரெட் வேணுமா சார்?” - கேட்டுப் பழகிப்போன குரல்.

‘‘வேண்டாம்.”   

அவன் தலையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு நடந்தான். உலகம் எங்கே இருக்கிறது?

பிரதான சாலைக்கு வந்தான்.

இங்கு ஒரு வேளை புதிய உலகம் ஆரம்பிக்கலாம். பழைய சுவர்களைப் பார்த்தான். சந்திப்பிற்குச் சற்று தெற்குப் பக்கத்தில் அமர்ந்திருக்கும் குஷ்ட நோயாளியின் மிகவும் பழமையான- பலவீனமான குரல் காதில் விழுந்தது.

‘‘சார்... ஏதாவது தாங்க சார்...”

அவன் வேகமாக நடந்தான்.

எப்போதும் தேநீர் அருந்தக் கூடிய கடையைத் தெரிந்தே வேண்டாம் என்று ஒதுங்கி நடந்தான். அங்கு நுழைய அவனுக்கு மனம் வரவில்லை. தேநீர் வியாபாரம் செய்யும் குட்டன் நாயர் அழைத்துக் கேட்டான்: ‘‘என்ன சார், வழியை மறந்துட்டீங்களா ?”

‘‘இல்ல... அவசர வேலை...”-அவன் பொய் சொன்னான்.

இன்னொரு தேநீர்க் கடைக்குள் நுழைந்தான். என்ன வேறுபாடு? மேஜைக்கு அருகில் இன்னொரு குட்டன் நாயர்.

‘‘என்ன சார்”வழக்கமா இல்லாமல் இந்தப் பக்கம்?”

‘வேண்டுமென்றுதான் ‘ என்று கூற வேண்டும்போல இருந்தது.

இந்த மனிதனும் குட்டன் நாயர்தான். அதே பார்வை. அதே குருல்.

ஒரு வேறுபாடும் இல்லை. தொடர்ந்து மிகவும் பழைய, சொறி பிடித்த அலுமினியக் கிண்ணத்தில் பழைய இட்லிகள் வந்தன. வழக்கமான சாம்பார் மலை நீரைப்போல வழிந்தது. கருகல் வாடை அடித்த பால் கலந்து உண்டாக்கிய தேநீர் என்ற திரவம் வந்தது.

தேநீரைக் குடித்து முடித்து வெளியேறினான். பத்திரிகை அலுவலகத்தை நோக்கி நடந்தான். நடந்து சென்ற பாதையெங்கும் புதியவற்றைத் தேடினான். படவில்லை. எதுவும் கண்ணில் படவில்லை. பழைய, விழுந்து கிடக்கும் பாலத்தைப் பார்த்தான். மர வியாபாரிக** ஷோ ரூம்களைப் பார்த்தான். பேக்கரியைப் பார்த்தான். இறுதியில் பத்திரிகை அலுவலகத்தை அடைவதற்கு முன்னால் பாதையோரத்தில் ஆலமரத்திற்குக் கீழே இருந்த பீடத்தைப் பார்த்தான். கல்விளக்கைப் பார்த்தான்.

பீடத்தில் இருந்த கல்விளக்கிற்கு அருகில் சிலையாக தெய்வம் நின்று கொண்டிருந்தது.

அவன் தெய்வத்தைப் பார்த்துச் சிரித்தான். அதுவும் பழையதுதான். கல்லால் செய்யப்பட்ட பழைய தெய்வம்.

‘நீங்கள் என்ன அவதாரம்? தசாவதாரங்களில் கல் என்ற ஒன்று இல்லையே!’

அவனுக்கு வெறுப்பு உண்டானது. தெய்வமும் புதியது அல்ல; பழையதுதான்.

தெய்வங்களும் பழையவை தான் என்றால் பிறகு எதற்குத் தெய்வங்கள்? சிலைகள் பழையவை என்றால், பிறகு எதற்கு சிலைகள்?

‘நான் எல்லாவற்றையும் அடிச்சு உடைக்கப் போறேன்’- அவன் பற்களைக் கடித்துக் கொண்டு தனக்குத்தானே சொல்லிக் கொண்டான்.

ஆனால், அதற்கான சக்திக்கு எங்கே போவது? இன்று... இன்று தான் அவன் பிறந்திருக்கிறான். இதுவரை மிதித்து நகர்த்திவிட்ட வருடங்கள் வீணானவை என்று, அர்த்தமே இல்லாதவை என்று, முட்டாள்தனமானவை என்று அவன் இன்றுதான் கண்டுபிடித்தான். அப்போது கண்களைத் திறந்தான். அவன் பிறந்தான். புதியவற்றை மட்டும் பார்க்க விரும்பினான். ஆனால், பார்த்தவையோ எல்லாம் பழையவை தான். தெய்வங்கள் உட்பட... சிலைகள் உட்பட...

இந்தப் பழைய சிலைகளைப் பார்ப்பதற்கா புதிய கண்களுடன் அவன் அலைந்தான்?

இதற்கு முன்பு தெரிந்தவர்களைப் பார்க்காமல் இருக்க, அவர்களுடன் சிரிக்காமல் இருக்க இயன்ற வரையில் முயற்சித்தவாறு அவன் நடந்தான்.

பத்திரிகை அலுவலகத்தின் பச்சை நிறத்தைக் கொண்ட கேட்டை அடைந்தபோது, மேனேஜரின் நீல நிறத்தில் இருக்கும் ஃபியட் அருகில் வந்து நின்றது. அழகிய தோற்றத்தைக் கொண்டவனும் இளைஞனுமான மேனேஜர் தலையை நீட்டினான்.

‘‘குட் மார்னிங்.”

‘‘குட் மார்னிங்.”

மேனேஜர் காரிலிருந்து இறங்கினான். அவர்கள் ஒன்று சேர்ந்து உள்ளே நடந்தார்கள். பச்சை நிறக் கண்களையும் இறுகிப் போன முகத்தையும் கொண்ட காவலாளி சலாம் வைத்தான்.

‘‘என்ன சார் நடந்து போறீங்க? நான் வந்த உடனே காரை அனுப்புறதா இருந்தேனே!”

‘‘அப்படியா?” - அவன் சிரித்தான்: ‘‘காலையில் நடக்குறது ஒரு சுகமான அனுபவமாச்சே!”

மேனேஜர் பழைய ஆள்தான். டெரிலின் மனிதன். குட்டிக்குரா பவுடரின் வாசனை. ப்ளேயர்ஸ் சிகரெட்டின் புகைக்குள் தெரியும் சிரிப்பு.

‘‘சிகரெட்?”- மேனேஜர் நீட்டினான்.

‘‘நன்றி!”

மேனேஜர் தினமும் சிகரெட்டை நீட்டுகிறான். அவன் வேண்டாம் என்று மறுக்கிறான். கென்னடி முனையில் விண்வெளி ஆய்வு நடக்கிறது. சம்பவங்கள் திரும்பத் திரும்ப நடந்து கொண்டேயிருக்கின்றன.


இதென்ன சோர்வு தரும் விஷயங்கள்!

புதிய உலகம் எங்கே?

மேனேஜர் தன்னுடைய அறைக்குள் நுழைந்தான். அவன் பத்திரிகை ஆசிரியருடைய அறைக்குள்...

மற்ற பத்திரிகை ஆசிரியர்கள் வழக்கம்போல வெறுப்பு உண்டாகும் அளவிற்கு நலம் விசாரித்துக் கொண்டார்கள்.

வெறுப்புடன் அவன் மேஜைக்கு அருகில் சென்றான்.

கடிதங்கள்... ரிப்போர்ட்டுகள்... கட்டுரைகள்... கதைகள்... கவிதைகள்... வாசித்தான்.

எல்லாமே பழையவைதான். எதிலும் புதுமை இல்லை.

புஷ்பாங்கதன் அவ்வப்போது தேநீர் கொண்டு வருகிறான். எப்போதும் வரக்கூடிய வெளிஆட்கள் உள்ளே வருகிறார்கள். அமர்கிறார்கள். வாய்ச்சவடால் அடிக்கிறார்கள். போகிறார்கள். கம்பாசிட்டர்கள் அவ்வப்போது வந்து தொல்லை தருகிறார்கள்.    

வாசித்தான். எழுதினான். என்னென்னவோ செய்தான்.

மதியம் ஒரு சாப்பாட்டை வரவழைத்தான்.

எதைச் செய்யும்போதும், புதியதைத் தேடினான். 

கிடைக்கவில்லை. பார்க்க வில்லை.

வழக்கம்போல பத்திரிகை உரிமையாளர் மாலை நேர வருகை புரிந்தார்.

‘‘என்ன சார், விசேஷம்?”

‘‘ஒண்ணுமில்ல.”

‘‘சுகம்தானே?”

‘‘ஆமா...”

பிறகு விவாதம். புதிய வளர்ச்சி திட்டங்கள். அதுவும் வழக்கமான சடங்குதான்.

தலையைத் தடவியவாறு, வீங்கிய கன்னங்கள் குலுங்குகிற மாதிரி, பத்திரிகை உரிமையாளர் சிரித்தார்.

தொடர்ந்து மது அருந்தும் இடம் இணைந்திருக்கும் ஹோட்டலில் எப்போதும் இருக்கக்கூடிய நிகழ்ச்சி. ஹெய்க் என்ற விஸ்கி. நெப்போலியன் என்ற ப்ராண்டி. ரோத்மன் என்ற சிகரெட். போலியான சிரிப்புகள் போலித்தனமான, உரத்த பேச்சு.

இறுதியில், வழக்கம்போல பத்திரிகை உரிமையாளரின் ஓட்டுநர் காரின் கதவைத் திறந்து கொண்டு நிற்கும்போது, அவனுக்குள் இருக்கும் புரட்சிக்காரன் விழிப்படைந்து கத்துகிறான்:

‘‘நான் நடந்து போய்க் கொள்கிறேன்.”

மேனேஜர் வற்புறுத்தினான். பத்திரிகை உரிமையாளர் கட்டாயப்படுத்தினார். அதைக் காதுகளிலேயே அவன் போட்டுக் கொள்ளவில்லை. நடக்கலாம். வழக்கமான ஒரு செயலை மாற்றினது மாதிரி இருக்கும்.

நடந்தான். தெருவின் ஓரம் வழியாக மூச்சு இரைக்க நடந்தான்.

மருத்துவமனை திருப்பத்தில் நோயாளிகளும், கூட்டிக் கொடுப்பவர்களும், விலை மகளிர்களும், பிக்-பாக்கெட் அடிப்பவர்களும் அலைந்து கொண்டிருப்பதை அவன் பார்த்தான்.

பழைய விஷயங்கள்தான்.

வீணாக ஒரு பகல் கழிந்திருக்கிறது. வீணான ஒரு இரவு கொடி கட்டி வாழ்ந்து கொண்டிருக்கிறது.

தெருவில் விழுந்து கிடந்த வீணான இரவை மிதித்துச் சிதற விட்டவாறு அவன் நடந்தான்.

இறுதியில், பழைய பாதைகளைக் கடந்து, பழைய காலடிச் சுவடுகளுக்கு மேலே காலடிகளைப் பதித்து, அசுத்த நீர் ஓடிக் கொண்டிருக்கும் ஆற்றின் கரையில் இருக்கும் பர்ணசாலையை அடைகிறான். சாராய புட்டிகளின், பீடிகளின், கொசுக்களின் உலகத்திற்குத் திரும்பவும் வந்திருக்கிறான்.

புதிதாக எதைப் பார்த்தான்? எதையும் பார்க்கவில்லை.

பழைய, சிதிலமடைந்த, பொய்யான நாட்களைப்போல, மேலும் ஒருநாள் முடிந்தது. பழைய நாட்களின் ஒன்றுமில்லாததை நோக்கித் திறந்த கண்கள் - புதியவற்றை, வீண் இல்லாதவற்றைப் பார்ப்பதற்கு ஆர்வத்துடன் திறந்த கண்கள் - பழைய சிலந்திவலை படர்ந்திருக்கும் அறையில் சொறி பிடித்த சுவர்களையும், கரையான் அரித்த மரக்கதவுகளையும், துரும்பு பிடித்திருக்கும் ஜன்னல் கம்பிகளையும் மட்டுமே பார்க்கின்றன.

மாடியில் காலடிச் சத்தம் கேட்கிறது.

கீழேயிருக்கும் தெருவிலிருந்து வந்திருந்த விலைமாதர்களாக இருக்குமோ? இல்லாவிட்டால், அவர்களைக் கூட்டிக் கொடுக்கும் சக்ரபாணியா?

யாராக இருந்தாலும் ஒன்று தான். பழைய உலகத்தின் காவல்காரர்கள். அவர்களைக் குறைகூற வேண்டியதில்லை. தெய்வங்களும் சிலைகளும் பழையவைதானே!

புதிய கடவுள்கள் எங்கே? புதிய சிலைகள் எங்கே?

பார்க்க முடியவில்லை.

பிறந்தது முட்டாள்தனமான ஒன்றாகி விட்டது. கடந்து போன எத்தனையோ எத்தனையோ வருடங்கள் பாழ் நிலங்களாக இருந்தன என்ற புரிதல் உதயமானபோதுதான் கண்கள் திறந்தன. அப்போதுதான் அவன் பிறந்தான். ஒரு பகல் முடிந்தவுடன், அவனுக்குப் புரிய வருகிறது, இன்றும் பாழ்நிலம்தான். இனி இருக்கும் பாதையும் பாழ் நிலங்கள் வழியாகத்தான்.

பிறந்திருக்கக் கூடாது. கண்களைத் திறந்திருக்கக் கூடாது.

அவன் படுத்துக் கண்களை மூடினான். கைகளையும் கால்களையும் நீட்டிப் படுத்தான். அறைக்கு வெளியே, நாற்றமெடுத்துக் கொண்டிருந்த ஆற்றின் கரையில், இரவின் கறுத்த சிறகுகளுக்கு மத்தியில், கொசுக்களைப்போல அவனுடைய மரணம் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துப் பதுங்கிக் கொண்டிருந்தது.

அன்று இரவு அவன் இறந்து விட்டான்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.