Logo

உலகப் புகழ் பெற்ற மூக்கு

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 7039
ullaga pugal petra mooku

ச்சரியத்தை உண்டாக்கும் ஒரு வினோதமான செய்தி அது. ஒரு மூக்கு அறிவாளிகள் மத்தியிலும் தத்துவவாதிகள் மத்தியிலும் பெரியவொரு விவாதத்திற்குரிய விஷயமாக ஆகியிருக்கிறது. உலகப் புகழ்பெற்ற மூக்கு.

அந்த மூக்கைப் பற்றிய உண்மையான வரலாறு இங்கு பதிவு செய்யப்படுகிறது.

வரலாறு ஆரம்பமாகும்போது அவனுக்கு இருபத்து நான்கு வயது. அதுவரை அவனை யாருக்கும் தெரியாது. இந்த இருபத்து நான்கு வயதுக்கு ஏதாவது சிறப்பு இருக்கிறதோ என்னவோ! ஒன்று மட்டும் உண்மை. உலக சரித்திரத்தின் பக்கங்களைப் புரட்டினால் பெரும்பாலான மேதைகளின் இருபத்து நான்காவது வயதில் சில முக்கிய விஷயங்கள் நடந்திருப்பதை நாம் பார்க்கலாம். வரலாற்று மாணவர்களிடம் இதைப் பற்றிக் கூறவேண்டிய தேவை இல்லையே!

நம்முடைய வரலாற்று நாயகன் ஒரு சமையல்காரனாக இருந்தான். அதாவது... குக். குறிப்பிட்டுக் கூறும் அளவிற்கு அவன் ஒன்றும் அறிவாளியல்ல. எழுதவும் படிக்கவும் தெரியாது. சமையலறைதானே அவனுடைய உலகம்! அதற்கு வெளியே உள்ள விஷயங்களைப் பற்றி அவனுக்குச் சிறிதுகூட தெரியாது. அவற்றைத் தெரிந்து அவனுக்கு என்ன ஆகப்போகிறது?

மூக்குமுட்டச் சாப்பிடுவது, சுகம் கிடைக்கிற பொடி போடுவது, தூங்குவது, மீண்டும் எழுவது, சமையல் வேலைகளை மீண்டும் தொடங்குவது - இவைதான் அவனுடைய தினசரிச் செயல்கள்.

மாதங்களின் பெயர் அவனுக்குத் தெரியாது. சம்பளம் வாங்க வேண்டிய நாள் வரும்போது அவனுடைய தாய் வந்து சம்பளத்தை வாங்கிக் கொண்டு போவாள். பொடி தேவைப்படும் பட்சம், அவனின் தாயே அதை வாங்கியும் கொடுப்பாள். இப்படி சந்தோஷத்துடனும் முழுமையான திருப்தியுடனும் தன் வாழ்க்கையை அவன் நடத்திக் கொண்டிருந்தபோது அவனுக்கு இருபத்து நான்கு வயது ஆகிறது. அப்போதுதான் அந்த ஆச்சரியம் நடக்கிறது.

வேறொன்றும் விசேஷமாக நடந்துவிடவில்லை. மூக்கிற்கு மிகவும் நீளம் கூடி விட்டது. வாயைத் தாண்டி தாடி வரை அது நீளமாக வளர்ந்திருக்கிறது.

அந்த வகையில் அந்த மூக்கு தினமும் வளர்ந்து கொண்டிருந்தது. அது மறைத்து வைக்கக் கூடிய ஒரு விஷயமா என்ன? ஒரே மாதத்தில் அது தொப்புள் வரை வளர்ந்துவிட்டது. அதே நேரத்தில், அதனால் ஏதாவது கேடு உண்டாகிவிட்டதா என்ன? அது எதுவுமே இல்லை. சுவாசிக்கலாம். பொடி போடலாம். எல்லாவித வாசனைகளையும் அடையாளம் கண்டுபிடிக்கலாம். குறிப்பிட்டுக் கூறுகிற மாதிரி எந்தவொரு பிரச்சினையுமில்லை.

ஆனால், இப்படிப்பட்ட மூக்குகள் வரலாற்றின் பக்கங்களில் இருக்கலாம்- இங்கு மங்குமாக. அதே நேரத்தில் அப்படிப்பட்ட புகழ்பெற்ற ஒன்றா இந்த மூக்கு? இந்த மூக்கு காரணமாக அந்த அப்பிராணிச் சமையல்காரனை வேலையை விட்டு அனுப்பி விட்டார்கள்.

என்ன காரணம்?

வேலையை விட்டு விலக்கப்பட்ட தொழிலாளியை மீண்டும் வேலையில் சேர்க்க வேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்டம் செய்ய ஒரு சங்கத்தைச் சேர்ந்தவர்களும் முன்னால் வரவில்லை. அரசியல் கட்சிகள் அனைத்தும் இந்தக் கொடுமையான அநீதிக்கு முன்னால் கண்களை மூடிக்கொண்டிருந்தன.

‘எதற்கு அந்த ஆளை வேலையிலிருந்து போகச் சொன்னாங்க?’ - மனிதாபிமானம் கொண்டவர்கள் என்று கூறப்படும் யாரும் இந்தக் கேள்வியைக் கேட்கவில்லை. எங்கு சென்றார்கள் அப்போது அறிவாளிகளும் தத்துவவாதிகளும்?

பாவம் தொழிலாளி! பாவம் சமையல்காரன்!

வேலை எதனால் இல்லாமற் போனது என்பதற்கான காரணத்தை யாரும் அவனிடம் கூற வேண்டியதில்லை. வேலைக்கு வைத்திருந்த இல்லத்தைச் சேர்ந்தவர்களுக்கு நிம்மதி இல்லாமல் போனது தான் காரணம். மூக்கனைப் பார்ப்பதற்காக, மூக்கைப் பார்ப்பதற்காக, இரவு-பகல் எந்நேரமும் மக்கள் கூட்டம்! புகைப்படம் எடுப்பவர்கள், நேர்முக உரையாடல்கள், வானொலி, திரைப்படம், தொலைக்காட்சி, பத்திரிகையாளர்கள்... எந்நேரமும் சத்தங்களை உண்டாக்கிக் கொண்டிருந்த மானிடர்களின் கடல்!

அந்த வீட்டிலிருந்து பல பொருட்கள் காணாமல் போய் விட்டன. பதினெட்டு வயது கொண்ட அழகான இளம் பெண்ணைத் தள்ளிக் கொண்டு போவதற்கும் முயற்சி நடந்தது.

அந்த வகையில் வேலையை இழந்த அந்தச் சமையல்காரன் தன்னுடைய எளிமையான குடிசைக்குள் பட்டினி கிடந்த போது, ஒரு விஷயம் அவனுக்கு நன்றாகப் புரிந்தது. அவனும் அவனுடைய மூக்கும் மிகப் பெரிய புகழைப் பெற்றிருக்கிறார்கள்!

தூர இடங்களிலிருந்துகூட மனிதர்கள் அவனைப் பார்ப்பதற்காக வந்தார்கள். நீளமான மூக்கைப் பார்ததவாறு ஆச்சரியப்பட்டு அவர்கள் நின்றார்கள். சிலர் அதைத் தொட்டுப் பார்த்தார்கள். ஆனால் ஒருவர்... ஒருவர்கூட “நீங்க எதுவும் சாப்பிடலையா? ஏன் இப்படி சோர்வடைஞ்சி போயிருக்கீங்க?” என்று கேட்கவேயில்லை. ஒருமுறை பொடி போடுவதற்குக்கூட அந்த வீட்டில் ஒரு பைசா இல்லை. பட்டினி கிடக்கும் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் மிருகமா அவன்? முட்டாளாக இருந்தாலும் அவனும் மனிதன்தானே? அவன் தன்னுடைய வயதான தாயை அழைத்து மெதுவான குரலில் சொன்னான்:

“இவங்க எல்லோரையும் வெளியே அடிச்சி விரட்டிக் கதவை மூடுங்க”

அவனுடைய தாய் தந்திரமாக அவர்கள் எல்லோரையும் வெளியே அனுப்பி, கதவை மூடினாள்.

அன்றிலிருந்து அவர்களுக்கு நல்ல காலம் பிறந்துவிட்டது. அவனுடைய தாய்க்கு லஞ்சம் தந்து சிலர் மகனின் மூக்கைப் பார்க்க ஆரம்பித்தார்கள். மக்கள் என்பது முட்டாள்களின் கூட்டம்தானே! இந்த லஞ்சம் கொடுக்கும் செயலுக்கு எதிராக சில நீதிமான்களான அறிவு ஜீவிகளும் தத்துவவாதிகளும் சத்தமாகக் குரலை உயர்த்தினார்கள். ஆனால், அரசாங்கம் இந்த விஷயத்தில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதைக் காதில் போட்டுக் கொண்டதாகவும் காட்டிக் கொள்ளவில்லை. அரசாங்கத்தின் இந்தக் கண்டு கொள்ளாத போக்கைக் கண்டித்து குற்றம் சுமத்திய பலரும், அரசாங்கத்திற்கு எதிராகப் பல ஆர்ப்பாட்டங்கள் செய்யும் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் ஒன்று சேர்ந்தனர்.

மூக்கனின் வருமானம் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டேயிருந்தது. அதற்கு மேல் என்ன சொல்ல இருக்கிறது? எழுத்து என்றால் என்னவென்று தெரியாத அந்தச் சமையல்காரன் ஆறே வருடங்களில் பல லட்சங்களுக்குச் சொந்தக்காரனாக ஆகிவிட்டான்.

அவன் மூன்று திரைப்படங்களில் நடித்தான். ‘தி ஹ்யூமன் சப்மரைன்’ என்ற டெக்னிக் கலரில் எடுக்கப்பட்ட திரைப்படம் எத்தனைக் கோடி பார்வையாளர்களின் மனதை ஈர்த்தது! வானுலகத்தைச் சேர்ந்த அபூர்வ மனிதன்! ஆறு மிகப்பெரிய கவிஞர்கள் மூக்கனின் பெருமைகளைப் புகழ்ந்து பாடி மகா காவியங்களை உருவாக்கினார்கள். ஒன்பது புகழ்பெற்ற இலக்கியவாதிகள் மூக்கனின் வாழ்க்கை வரலாற்றை எழுதி பணத்தையும் புகழையும் அடைந்தார்கள்.

மூக்கனின் இல்லம் விருந்தினர்கள் வரக்கூடிய ஒரு இடமாகவும் ஆகிவிட்டது. யாராக இருந்தாலும், அவர்களுக்கு எப்போதும் அங்கு உணவு உண்டு. சிறிது பொடியும் போட்டுக் கொள்ளலாம்.

அந்தச் சமயத்தில் அவனுக்கு இரண்டு செக்ரட்டரிகள் வேறு இருந்தார்கள். இரண்டு அழகிய இளம்பெண்கள். நன்கு படித்தவர்கள்.


இரண்டு இளம்பெண்களும் மூக்கனை ஆழமாக காதலித்தார்கள். இரண்டு பேரும் மூக்கன்மீது பக்தி கொண்டிருந்தார்கள். எப்படிப்பட்ட முட்டாளையும், எப்படிப்பட்ட இரவுக் கொள்ளைக்காரனையும், எப்படிப்பட்ட முடிச்சு அவிழ்க்கும் மனிதனையும் காதலிப்பதற்கு அழகான இளம்பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்!

உலக வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால் இரண்டு அழகிய இளம்பெண்கள் ஒரு ஆணை, ஒரே நேரத்தில் காதலிக்கும் போது சின்னச் சின்ன பிரச்சினைகள் உண்டானதாக நமக்குத் தெரியவரும். மூக்கனின் வாழ்க்கையிலும் அது நடந்தது.

அந்த இரண்டு அழகிய இளம்பெண்களைப்போலவே மக்களும் மூக்கன்மீது அளப்பரிய அன்பு வைத்திருந்தார்கள். தொப்புள்வரை நீண்டு தொங்கிக் கொண்டிருந்த, அண்டங்களைத் தாண்டி புகழ்பெற்ற அழகான மூக்கு மகத்துவத்தின் சின்னமாயிற்றே! அது உண்மையிலும் உண்மை!

உலகத்தில் நடைபெறும் முக்கியமான சம்பவங்களைப் பற்றி மூக்கன் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்துவான். பத்திரிக்கைகளைச் சேர்ந்தவர்கள் அதை வெளியிடுவார்கள்.

‘மணிக்கு 10,000 மைல் வேகம் கொண்ட விமானம் உண்டாக்கப்பட்டிருக்கிறது. அதைப்பற்றி மூக்கன் கீழே சொல்லப்பட்டிருக்கும் வண்ணம் தன் கருத்தைக் கூறினார்!’

‘இறந்து போன மனிதனை டாக்டர் புந்த்ரோஸ் ஃபுராஸிபுரோஸ் உயிருடன் கொண்டு வந்தார். அதைப்பற்றி மூக்கன் கீழே கூறப்பட்டிருக்கிற மாதிரி கூறினார்!’

உலகத்திலேயே மிகவும் உயரமான மலைச்சிகரத்தில் சிலர் ஏறினார்கள் என்ற செய்தி வந்தபோது மக்கள் கேட்டார்கள்:

“அதைப்பற்றி மூக்கன் என்ன சொன்னார்?”

மூக்கன் எதுவும் சொல்ல வில்லை என்றால்... ப்பூ... அந்தச் சம்பவம் சாதாரண சம்பவம். இப்படி உலகப் பயணம், பிபஞ்சங்களின் தோற்றம், ஓவிய எழுத்துக்கள், கடிகார வியாபாரம், மெஸ்மெரிஸம், ஃபோட்டோக்கிராஃபி, ஆன்மா, பதிப்பகம், நாவல் எழுதுவது, மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கை, பத்திரிகை வேலை, வேட்டை - என்று எல்லா விஷயங்களைப் பற்றியும் மூக்கன் தன்னுடைய கருத்தைச் சொல்ல வேண்டும். அவன்தான் சொல்வானே! மூக்கனுக்குத் தெரியாதது இவ்வளவு பெரிய உலகில் ஏதாவது இருக்கிறதா என்ன? சொல்லுங்கள்...

அந்தக் காலகட்டத்தில்தான் மூக்கனைக் கைப்பற்றிக் கொண்டு வரும் பெரிய திட்டங்கள் அரங்கேறிக் கொண்டிருந்தன. பிடித்துக் கொண்டு வருவது என்பது புதிதாகக் கேள்விப்படும் விஷயம் ஒன்றும் இல்லையே! கைப்பற்றித் தூக்கிக் கொண்டு வரும் கதைதான் உலக வரலாற்றில் பெரும்பாலும் நடந்திருக்கிறது.

பிடித்துக் கொண்டு வருவது என்றால் என்ன?

நீங்கள் தரிசு நிலத்தில் கொஞ்சம் நாற்றுகளை நடுகிறீர்கள். நீர் ஊற்றுகிறீர்கள். உரம் போடுகிறீர்கள். வேலி கட்டுகிறீர்கள். எதிர்பார்க்கப்படும் வருடங்களைத் தாண்டி செடிகள் மரங்களாக மாறி குலை குலையாகத் தேங்காய்கள் ஜோராகத் தொங்கிக் கொண்டிருக்கும். அப்போது உங்களிடமிருந்து அந்தத் தென்னந்தோப்பைக் கைப்பற்ற யாருக்கும் ஆசை வரும். அந்த மாதிரி மூக்கனைக் கைப்பற்றுவது!

முதன் முறையாக மூக்கனைக் கைப்பற்றிக் கொண்டு வரும் மகத்தான புரட்சி முயற்சியைச் செய்தது அரசாங்கம்தான். அரசாங்கம் செய்த மிகப்பெரிய ‘டாவ்’. ‘நாட்டின் முக்கிய மனிதர்’ என்றொரு பாராட்டிற்கும் மேலாக மூக்கனுக்கு அரசாங்கம் மெடல் ஒன்றையும் கொடுத்தது. ஜனாதிபதியே வைரம் பதிக்கப்பட்ட அந்தத் தங்க மெடலை மூக்கனின் கழுத்தில் அணிவித்தார். தொடர்ந்து கை குலுக்குவதற்குப் பதிலாக ஜனாதிபதி மூக்கனின் மூக்கின் நுனியைப் பிடித்து ஆட்டினார். அந்த நிகழ்ச்சி அடங்கிய செய்திப்படம் நாடு முழுவதிலுமிருந்த திரையரங்குகளிலும் தொலைக்காட்சிப் பெட்டிகளிலும் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

அப்போது அரசியல் கட்சிகள் பலமான திட்டத்துடன் முன்னோக்கி வந்தன. மக்களின் மகத்தான போராட்டத்திற்கு தோழர் மூக்கன் தலைமை தாங்க வேண்டும்! தோழர் மூக்கனா? யாருடைய, எதனுடைய தோழர்? கடவுளே! பாவம் மூக்கன்... மூக்கன் அரசியல் கட்சியில் சேரவேண்டும்!

எந்த அரசியல் கட்சியில்?

பல கட்சிகள் இருக்கின்றன. நோக்கம் புரட்சிதான். மக்கள் புரட்சி. அனைத்து மக்கள் புரட்சிக் கட்சிகளிலும் ஒரே நேரத்தில் மூக்கன் எப்படிச் சேரமுடியும்?

மூக்கன் சொன்னான்:

“நான் ஏன் அரசியல் கட்சியில் சேரணும்? என்னால முடியாது.”

நிலைமை இப்படி இருக்கும்போது மூக்கனின் செக்ரட்டரிகளில் ஒருத்தி சொன்னாள்:

“என்மேல விருப்பம்னு ஒண்ணு இருந்தா, தோழர் மூக்கன் என் கட்சியில சேரணும்!”

மூக்கன் பேசவேயில்லை.

“நான் ஏதாவது அரசியல் கட்சியில சேரணுமா என்ன?” - மூக்கன் இன்னொரு செக்ரட்டரி பெண்ணிடம் கேட்டான். அவளுக்கு விஷயம் புரிந்துவிட்டது. அவள் சொன்னாள்:

“ஓ... எதற்கு?”

அப்போது ஒரு புரட்சிக் கட்சியைச் சேர்ந்தவர்கள் கோஷம் போட்டார்கள்.

“நம்ம கட்சி மூக்கனின் கட்சி! மூக்கனின் கட்சி மக்கள் புரட்சிக் கட்சி!”

அதைக் கேட்டதும் மற்ற மக்கள் புரட்சிக் கட்சிக்காரர்களுக்குக் கோபம் வந்தது. அவர்கள் மூக்கனின் செக்ரட்டரிகளான அழகிய இளம்பெண்களில் ஒருத்தியை வைத்து மூக்கனுக்கு எதிராக ஒரு பயங்கரமான குற்றச்சாட்டை வெளியிட்டார்கள்.

“மூக்கன் மக்களை ஏமாற்றி விட்டார். சரியான பிற்போக்கு வாதி மூக்கன். இவ்வளவு காலமாக மூக்கன் மக்களை ஏமாற்றிக் கொண்டிருந்தார். இந்தக் கொடிய செயலில் என்னையும் அவர் பங்குபெறச் செய்தார். அதற்காக நான் வருத்தப்படுகிறேன். நான் மக்கள் முன் சத்தியம் பண்ணிக் கூறுகிறேன். மூக்கனின் மூக்கு வெறும் ரப்பர் மூக்கு.”

ஹூ! அந்த இளம்பெண் சொன்ன வார்த்தைகளை உலகத்திலுள்ள எல்லாப் பத்திரிகைகளும் பெரிய அளவில் பிரசுரித்தன. மூக்கனின் மூக்கு ரப்பர் மூக்கு! மிகப் பெரிய மோசடிப் பேர்வழி மூக்கன். திருடன், ஏமாற்றுப் பேர்வழி, முழுமையான பிற்போக்குவாதி... அது ஒரிஜினல் மூக்கு அல்ல!

அதைக் கேட்டு கோடிக்கணக்கான மக்கள் அதிர்ச்சியடையாமல் இருப்பார்களா? கோபப்படாமல் இருப்பார்களா? ஒரிஜினல் மூக்குதானே? இல்லை! உலகத்தின் பல பகுதிகளிலிருந்தும் தந்திகள், தொலைபேசி அழைப்புகள், கடிதங்கள்! ஜனாதிபதியால் நிம்மதியாக இருக்க முடியவில்லை.

“மக்களை ஏமாற்றிய ரப்பர் மூக்கன் ஒழிக! ரப்பர் மூக்கனின் பிற்போக்கு கொள்கை கொண்ட கட்சி ஒழிக! ‘இன்குலாப் ஜிந்தாபாத்’” - இந்த முழக்கத்தை மூக்கனின் எதிர்க் கட்சியைச் சேர்ந்தவர்கள் கூறிய போது, இன்னொரு புரட்சிக் கட்சியைச் சேர்ந்தவர்கள் இன்னொரு செக்ரட்டரியாக இருந்த இளம்பெண்ணை வைத்து வேறொரு பலமான புரட்சி முழக்கத்தை வெளியே விட்டார்கள்.

“அன்புள்ள நாட்டு மக்களே! உலக மக்களே! அவள் கூறியது அத்தனையும் பொய். அவளைத் தோழர் சிறிதும் காதலித்ததில்லை. அதனால் உண்டான செயலே இது. தோழர் மூக்கனின் பணத்தையும் புகழையும் தட்டிப் பறிக்க வேண்டும் என்று அவள் முயற்சி செய்தாள். அவளுடைய சகோதர்களில் ஒருவன் இன்னொரு கட்சியில் இருக்கிறான். திருடர்கள் நிறைந்திருக்கும் அந்தக் கட்சியின் தோலை உரித்துக் காட்ட நான் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.


நான் தோழர் மூக்கனின் நம்பிக்கைக்குரிய செக்ரட்டரி. எனக்கு நெரடியாகவே தெரியும். தோழரின் மூக்கு ரப்பரால் ஆனதல்ல. என்னுடைய இதயத்தைப் போல தனி ஒரிஜினல். மாயமில்லை. மந்திரமில்லை. போலி இல்லை. தனி... என்னுடைய இதயத்தைப் போல. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்த இக்கட்டான நேரத்தில் தோழர் மூக்கனின் பின்னால் அணி திரண்டு நின்றிருக்கும் மக்கள் முன்னேற்ற புரட்சிக் கட்சி ஜிந்தாபாத்! தோழர் மூக்கன் ஜிந்தாபாத்! தோழர் மூக்கனின் கட்சி மக்கள் முன்னேற்ற புரட்சிக் கட்சி! இன்குலாப் ஜிந்தாபாத்!”

என்ன செய்வது? மக்களுக்கு ஒரே குழப்பம். அப்போது மூக்கனின் புரட்சிக் கட்சிக்கு எதிரான புரட்சிக் கட்சியைச் சேர்ந்தவர்கள் அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் பிரதம அமைச்சரையும் பற்றி வாய்க்கு வந்தபடி மோசமாகப் பேசினார்கள்.

“முட்டாள்தனமான அரசாங்கம்! ரப்பர் மூக்குக்காரனும் மக்களை ஏமாற்றியவனுமான ஒருவனுக்கு ‘நாட்டின் முக்கிய மனிதர்’ என்று பாராட்டி வைரம் பதித்தத் தங்க மெடல் கொடுத்தார்கள். இந்த மக்கள் விரோதச் செயலில் ஜனாதிபதிக்கும் பிரதம அமைச்சருக்கும் பங்கு இருக்கிறது. இந்தப் பயங்கரமான சதிச் செயலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஜனாதிபதியும் பிரதம அமைச்சரும் ராஜினாமா செய்யவேண்டும்! அமைச்சரவையும் ராஜினாமா செய்ய வேண்டும். ரப்பர் மூக்கனைக் கொல்ல வேண்டும்!”

அதைக் கேட்டு ஜனாதிபதி கோபப்பட்டார். பிரதம அமைச்சரும் கோபப்பட்டார். ஒரு அதிகாலை வேளையில் ராணுவமும் டாங்கிகளும் அப்பிராணி மூக்கனின் வீட்டை வளைத்து, மூக்கனைக் கைது செய்துகொண்டு போயின.

அதற்குப் பிறகு சில நாட்களுக்கு மூக்கனைப் பற்றிய எந்தவொரு செய்தியும் இல்லாமலிருந்தது. மக்கள் மூக்கனை அப்படியே மறந்து விட்டார்கள். எல்லாம் அமைதியாகப் போய்க் கொண்டிருந்தது. அப்படியிருந்த சூழ்நிலையில் சாட்சாத் ஹைட்ரஜனும், அணுவும், நியூக்லியரும் வந்தன! மக்கள் மறந்து போயிருந்தபோது, ஜனாதிபதியின் சிறிய ஒரு அறிவிப்பு வந்தது.

‘மார்ச் 9-ஆம் தேரி ‘நாட்டின் முக்கிய மனிதரை’ப் பற்றி பகிரங்கமான விசாரணை நடக்கப் போகிறது. மூக்கு ஒரிஜினலா? 48 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் வந்து சேரும் விற்பன்னர்களான டாக்டர்கள் மூக்கனைப் பரிசோதனை செய்கிறார்கள். உலகத்திலுள்ள அனைத்துப் பத்திரிகைகளிலிருந்தும் செய்தியாளர்கள் வந்து சேர்கிறார்கள். வானொலி, திரைப்படம், தொலைக்காட்சி என்று எல்லாவித ஊடகங்களும்... இந்த விசாரணையை எல்லா நாடுகளைச் சேர்ந்தவர்களும் செய்திப்படங்கள் மூலம் காணலாம். மக்கள் அமைதியாக வந்து கூடும்படி கேட்டுக் கெள்கிறேன்!”

மக்கள் என்பது முட்டாள்களின் கூட்டம்தானே! எங்குமே பார்க்க முடியாத படுக்கூஸுகள்... புரட்சியாளர்கள்... அவர்கள் அமைதியாக வந்து சேரவில்லை. தலைநகரமான பெரிய நகரத்தில் வந்து கூடினார்கள். ஹோட்டல்கள் மீது கல்லெறிந்தார்கள். பத்திரிகைகளின் அலுவலகங்களுக்கு பாதிப்பு உண்டாக்கினார்கள். திரைப்பட அரங்கங்களுக்கு நெருப்பு வைத்தார்கள். மதுக் கடைகளை ஆக்கிரமித்தார்கள். வாகனங்கள்மீது கற்களை எறிந்தார்கள்.  காவல் நிலையங்களுக்கு நெருப்பு வைத்தார்கள். அரசாங்கத்திற்குச் சொந்தமான கட்டிடங்களுக்குப் பாதிப்பு உண்டாக்கினார்கள். பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. பலர் இந்த மூக்கன் போராட்டத்தில் இரத்தத்தைச் சிந்தினர். மங்களம்... அமைதி...

மார்ச், 9-ஆம் தேதி பதினொரு மணி ஆனபோது ஜனாதிபதியின் இல்லத்திற்கு முன்னால் மனிதப் பெருங்கடல் கூடியிருந்தது. அப்போது ஒலிப் பெருக்கிகள் உலக மக்களிடம் கூறிக் கொண்டிருந்தது. ‘மக்கள் அமைதியாக இருக்க வேண்டும். வாய்களை மூடி வைத்திருக்க வேண்டும். பரிசோதனை ஆரம்பமாகி விட்டது!’

ஜனாதிபதி, பிரதம அமைச்சர், மற்ற அமைச்சர்கள் ஆகியோரின் முன்னிலையில் டாக்டர்கள் உயர்திரு மூக்கனைச் சுற்றி வளைத்து நின்றிருந்தார்கள். ஆர்வத்துடன் கோடிக்கணக்கான மக்கள்! மூச்சை அடக்கிக் கொண்டிருந்த சூழ்நிலை!

ஒரு பெரிய டாக்டர் மூக்கன் ஜியின் மூக்கின் நுனிப்பகுதியை அடைந்தார். அப்போது மூக்கன்ஜி வாயைத் திறந்தான்.

“மூக்கு ரப்பரால் ஆனது இல்ல... போலி இல்ல... தனி ஒரிஜினல்!”... டாக்டர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து கூறிய தீர்ப்பு!

மூக்கன் சாஹிப்பின் அழகான செக்ரட்டரிப் பெண் மூக்கன்ஜியின் திருமூக்கின் நுனியை அழுத்தி முத்தமிட்டாள்.

“தோழர் மூக்கன் ஜிந்தாபாத்!” ‘நாட்டின் முக்கிய மனிதர்’ ஜிந்தாபாத்! தோழர் மூக்கனின் மக்கள் முன்னேற்றக் கட்சி ஜந்தாபாத்! ஜனாப் மூக்கனின் மூக்கு - ஒரிஜினல் மூக்கு! ஒரிஜினல்!! ஒரிஜினல்!!!

அண்ட சராசரமே இடிந்து போகும் அளவிற்கு முழக்கம்... ஒரிஜினல்! தனி ஒரிஜினல்!!

அந்த ஆரவாரம் அடங்கிய தும் ராஷ்ட்ரபதி என்ற பிரஸிடெண்ட் இன்னொரு புதுமையான ‘டாவ்’ செயலைச் செய்தார். தோழர் மூக்கனை ‘மூக்கஸ்ரீ’ என்று அசத்தும் பட்டத்தை அளித்து பாராளுமன்றத்திற்கு நியமனம் செய்தார்.

மூக்கஸ்ரீ மூக்கன் எம்.பி.!

இரண்டு மூன்று பல்கலைக் கழகங்கள் மூக்கஸ்ரீ மூக்கன் சாஹிப்பிற்கு எம்.லிட்டும், டி.லிட்டும் அளித்து கவுரவித்தன.

மூக்கஸ்ரீ மூக்கன் - மாஸ்டர் ஆஃப் லிட்ரேச்சர்!

மூக்கஸ்ரீ மூக்கன் - டாக்டர் ஆஃப் லிட்ரேச்சர்!

என்ன இருந்தாலும் மக்கள் என்பது முட்டாள் கூட்டம் தானே! தனி படுக்கூஸுகள்! முட்டாள் கூட்டத்தை ஆண்டு கொண்டிருக்கும் அரசாங்கம்!

மூக்கஸ்ரீ மூக்கனை அடைய முடியாமற்போன அழகி இருந்த கட்சியைச் சேர்ந்தவர்கள் ஒரு கூட்டணி அமைத்து பேசிக் கொண்டும், எழுதிக் கொண்டும், சொற்பொழிவு நடத்திக் கொண்டும் இருந்தார்கள். ஜனாதிபதி ராஜினாமா செய்ய வேண்டும்! பிரதம அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்! அமைச்சரவையையும் ராஜினாமா செய்ய வேண்டும்! மக்களை ஏமாற்றும் செயல்! மூக்கனின் மூக்கு ரப்பர் மூக்கு! ஒரிஜினல் அல்லவே அல்ல!

புரட்சி போகும் போக்கைப் பார்க்க வேண்டுமே!

அறிவாளிகள், தத்துவவாதிகள் - என்ன செய்வார்கள்?

அவர்களுக்கிடையே ‘உலகப் புகழ்பெற்ற மூக்கு’ விஷயத்தைப் பற்றி கருத்து வேறுபாடு உண்டாகாமல் இருக்குமா?

மங்களம் சுபம்!

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.