Logo

விருந்தாளி

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 6523
virunthali-sakkariya

கொஞ்சமும் எதிர்பார்க்காமல் அவர்களின் பேச்சு தற்கொலை என்ற விஷயத்தைப் பற்றித் திரும்பியது. நண்பர்கள் பலரும் ஒன்று சேர்ந்து உட்கார்ந்துகொண்டு மது அருந்திக் கொண்டிருந்தார்கள். அந்த சிறிய அறைக்குள் மது என்ற விஷயம் ஒரு மாய உலகத்தை சிருஷ்டித்து விட்டிருந்தது. அங்கே நினைவுகளும், ஆலோசனைகளும், மவுனங்களும், பேச்சும் பரவலாக நிரம்பியிருந்தன. பொதுவாக எல்லாருமே எதைப்பற்றியும் அலட்டிக் கொள்ளாமல் வாழ்க்கையில் திருப்தியடைந்த மனிதர்கள் மாதிரி இருந்தனர். வலையை விரிக்க, கொஞ்சமும் எதிர்பாராமல் வலையில் மீன் சிக்கியது மாதிரி இந்த தற்கொலை என்ற விஷயம் பேசப்படும் ஒரு விஷயமாக ஆனது.

டாக்டர் சொன்னார்: "தற்கொலை பண்ணிக்கணும்னு நெனைச்சா, தண்ணீர்ல மூழ்கி சாகுறதுதான் பிரச்சினை இல்லாதது. அதைத் தேர்ந்தெடுக்குறதே நல்லது. சொல்லப் போனா, சாகுறதிலேயே அதுதான் சிறந்தவழி. தண்ணீர்ல மூழ்கி சாகுறப்போ, கனவு காணுறது மாதிரி தோணும். அவ்வளவுதான்...'' 

"நிமோனியா வந்து மூச்சுக்குழல் பெருசாகி மரணத்தைத் தழுவுறவங்களுக்கும் இதே அனுபவம்தான் உண்டாகும். நாம மறைஞ்சு போற குமிழ்போலவோ, உருமாறிப்போற சாம்பலாகவோ, வற்றிக் காய்ந்து போற கண்ணீர்போலவோ கடைசில ஆயிடுறோம்ன்றதுதான் உண்மை. மரணத்தோட இடத்துல கொஞ்ச நேரத்துக்கு கனவு தன்னோட முகத்தைக் காட்டிட்டு மறைஞ்சு போயிடும்.''

"அந்த சோடாவை இங்கே கொஞ்சம் எடு...'' ஒரு ஆள் சொன்னான்.

"தண்ணீர்ல முங்கி சாகுறதுன்னா, அப்போ உண்டாகுற மூச்சு முட்டலை இப்ப நினைச்சுப் பார்த்தாக்கூட பயமா இருக்கு!'' இன்னொரு ஆள் சொன்னான்.

டாக்டர் தொடர்ந்தார்: "அப்படின்னா நான் ஒண்ணு சொல்லட்டுமா? தன்னைத்தானே சுட்டுக்குறது- இதுதான் தற்கொலை பண்ணிக்கிறதுலயே உயர்ந்தது...''

"ஹா... ஹா... ஹா...'' ஒரு ஆள் உரத்த குரலில் சிரித்தான்: "நல்ல ஒரு துப்பாக்கி வாங்கணும்னா அம்பதாயிரம் ரூபா ஆகும். நம்ம கையில அம்பதாயிரம் ரூபா இருந்தா, எதுக்கு தற்கொலை பண்ணணும்?''

"உடம்புல எந்த உறுப்புல துப்பாக்கியால் சுட்டுக்கிட்டா நல்லது?'' கட்டிலில் படுத்திருந்த ஆள் கேட்டான். அவன் சாய்ந்து படுத்தவாறு டாக்டரைப் பார்த்தான்.

அப்போது சிரித்த ஆள் சொன்னான்: "சினிமாவுலதான் நாம பார்த்திருக்கமே! கண்ணோட ஒரு பக்கத்துல துப்பாக்கியை வச்சிக்கிட்டு தலைக்குள்ளே நுழையிற மாதிரி ஒரு அழுத்து...''

டாக்டர் சொன்னார்: "அது சரியான முறை இல்ல... அந்த இடத்துல இருக்கற எலும்பு ரொம்பவும் பெருசா இருக்கும். குண்டு வெடிக்கிறப்போ, சரியா எலும்பைத் துளைக்க முடியாமப் போகலாம். கடைசில என்ன நடக்கும்? சாகவும் செய்யாம உடம்புலயும் ஏதாவது காயங்களை உண்டாக்கிட்டு நடைப்பிணமா வாழ்ந்துக்கிட்டு இருக்கணும். உண்மையிலேயே எப்படிச் செய்தா சரியா இருக்கும் தெரியுமா? துப்பாக்கியை வாய்க்குள்ளே நுழைச்சு, அதோட முனையை வாயோட உள் மேல் பகுதியில் வச்சு சுடணும். அப்படிச் செஞ்சா, குண்டு நேரா எந்தவித தடங்கலும் இல்லாம மூளையில போய் அடிக்கும். நமக்கு ஒண்ணுமே தெரியாது. இந்த குப்பி தீர்ந்திடுச்சு. இன்னொரு குப்பி எங்கே?'' ஒரு ஆள் புதிய குப்பியை எடுக்க, பாட்டு ஒன்றை வாயில் முணுமுணுத்தவாறு சமையலறையைத் தேடிப் போனான்.

"அது எப்படி நடக்குது?''

"ட்டே... ஒரே சத்தம்! அதோட மூளை சிதறிடும்... மூளையே போன பிறகு சிந்தனைக்கும் அறிவுக்கும் அங்கே என்ன வேலை? எல்லாமே காலி. இந்த நிமிஷம் கையில துப்பாக்கியைப் பிடிச்சுக்கிட்டு நிற்கிற மனிதன் அடுத்த நிமிஷம் இல்ல... துப்பாக்கியோட ஒரு சத்தம்... அதோட எதிரொலி... துப்பாக்கி கீழே கிடக்கும். மனிதனோட செத்துப்போன உடலும்தான்... அவ்வளவு தான். ஒரே நிமிஷத்துல எல்லாமே முடிஞ்சிடும்.''

"நம்மோட முகத்துக்குக் கேடு வராதா?'' ஒரு ஆள் கேட்டான்.

"கொஞ்சம் கேடு வரத்தான் செய்யும்.'' டாக்டர் சொன்னார்: "அதனால என்ன?''

"எனக்கு அது சரியா ஒத்துவராது. என்னோட முகம் பாதிக்கப்படுறதை நான் விரும்பல...'' அவன் சொன்னான்.

"செத்துப்போன பிறகு, உன் முகம் எப்படி ஆனா உனக்கென்ன?'' அவன் நண்பன் கேட்டான்.

"செத்துப்போன பிணத்துக்கு முகம் அழகா எப்பவும் இருக்கணும்னு ஒரு ஆசை.'' மற்றொரு நண்பன் சிரித்தான்.

மது அருந்தும் பழக்கமில்லாத ஒரு இளைஞன் டாக்டரைப் பார்த்துக் கேட்டான்: "சார்... தூக்குப்போட்டு சாகுற அனுபவம் எப்படி இருக்கும்? அதைச் செய்றப்போ வலி அதிகமா இருக்குமா?''

அப்போது நான் சொன்னேன்: "வேதனையே இல்லாம ஒரு மரணத்தைப் பற்றி நான் கேள்விப்பட்டதைச் சொல்லட்டுமா? என்னோட சித்தப்பாவோட மரணம்தான் அது. அவர் மரணப் படுக்கையில் படுத்த படுக்கையா கிடந்தாரு. அப்போ தன் பிள்ளைகளையும், பேரப் பிள்ளைகளையும் பக்கத்துல வச்சுக்கிட்டு வாய் வலிக்க பேசிக்கிட்டு இருந்தாரு. ஒருநேரத்துல அவரே சொன்னாரு: "நான் கொஞ்சம் கண்ணை மூடட்டுமா? நீங்க யாரும் இப்போ போகக்கூடாது. இங்கேயே இருங்க'ன்னு சொல்லிட்டு சுவருக்கு நேரே திரும்பிப் படுத்து, கண்களை மூடினாரு. ஒரு நீண்ட பெருமூச்சு விட்டாரு. மகள் சந்தேகம் வந்து அவரைத் தொட்டு எழுப்பினா, "அப்பா... அப்பா...'ன்னு. அந்த நீண்ட பெருமூச்சோட சேர்ந்து அவர் இந்த உலகத்தைவிட்டே போயிட்டாரு. என்னோட சித்தப்பா மரணம் எப்படி?''

டாக்டர் சொன்னார்: "இதைத்தான் உடம்போட ஒரு டைமிங்னு சொல்றது. உண்மையிலேயே அது ஒரு அதிர்ஷ்டமான மரணம்தான்.''

அந்த இளைஞன் மீண்டும் கேட்டான்: "சார்... தூக்குல மாட்டி இறக்குற அனுபவம் எப்படி இருக்கும்?''

அப்போது இன்னொரு ஆள் சொன்னான்: "உடலைப் பற்றிய விஞ்ஞானமோ, வேறு எந்தவிதமான வித்தைகளையோ தெரியாமலே, சாதாரண வீட்டு அம்மாக்களும், வயசானவங்களும், மற்றவங்களும் சரியான முறையில் கயிறுல முடிச்சு போடுறதும், சரியான உயரத்துல கயிறைக் கட்டுறதும், கொஞ்சம்கூட தப்பாம குதிக்கிறதும்... எப்படி இவையெல்லாம் நடக்குது? ஹா... ஹா... ஹா... நான் ஒண்ணு சொல்லட்டுமா? எனக்குத் தோணுறது என்னன்னா, தூக்குல மாட்டி சாக முயற்சி பண்றவங்கள்ல பாதிப்பேர் அந்த முயற்சியில் தோல்வி அடைஞ்சவங்களாத்தான் இருக்கும்... ஹா.... ஹா... ஹா...''

"ஒரு குப்பி தண்ணி...'' ஒரு ஆள் கேட்டான்.

"சோடா இருக்கு...'' மற்றொருவன் சொன்னான்.

"சோடா வேண்டாம்.''

அந்த ஆள் சொன்னான்: "சோடால கேஸ் இருக்கும். எனக்கு தண்ணி போதும்!''

டாக்டர் சொன்னார்: "தூக்குல மாட்டி சாகுறதுக்கு பெரிய படிப்பறிவு ஒண்ணும் தேவையில்லை. உடம்போட கனத்தை வச்சுத்தான் போட்டிருக்கிற முடிச்சே இறுகும். அதை வச்சுத்தான் கழுத்துச் சங்கு ஒடியிறதே. தூக்குல கழுத்து இறுகின உடனே மூளைக்குள்ள தொடர்பு அறுந்துடும். பொதுவா தூக்குல தொங்குறதுக்கு நைலான் கயிறு நல்லது. பொதுவா மூளையோடு உள்ள தொடர்பை வச்சுத்தான் எல்லாமே.''


கட்டிலில் கிடந்த ஆள் எழுந்து உட்கார்ந்து கொண்டு சொன்னான்: "நான் நேத்து பார்த்த படத்தில கதாநாயகன், தற்கொலை செய்துகிட்ட தன் தம்பியோட போஸ்ட்மார்ட்டம் முடிஞ்சு, உடம்புல இருந்த தலையைச் சுத்தியிருந்த பேண்டேஜ் துணியை அவிழ்த்து, மூளையை மட்டும் கையில எடுத்துக்கிட்டு சவ அடக்கத்துக்கு வந்தவங்களுக்கு மத்தியில நடக்கிறான். தன்னோட ஒரு விரலை மூளையை நோக்கி சுட்டிக் காட்டியவாறு, அழுதுக்கிட்டே அவன் கேட்பான்: "கண்ணா, இது நீயாடா? இதுதானா நீ?” ''

"நீ பார்க்காத ஒரு படத்தோட பேரைச்சொல்லு...'' ஒருவன் சொன்னான்.

சினிமா பார்த்த ஆள் கட்டிலில் மீண்டும் சாய்ந்து கொண்டான். அவன் சொன்னான்: "உங்களுக்கு விருப்பமில்லைன்னா கேட்க வேண்டாம். அந்தக் காட்சியை நான் பார்த்தப்போ, என்னை மறந்து நான் அழுதுட்டேன். அந்தக் காட்சியில சிந்திக்க வேண்டிய ஒரு விஷயம் இருக்கு...''

"உனக்கு தெய்வம் அருள்புரியட்டும்...'' ஒரு ஆள் சொன்னான்.

"அவனுக்கு ஒரு ஸ்மால் ஊத்திக்கொடு...''

நான் சொன்னேன்: "நான் ஒரு முறை போஸ்ட்மார்ட்டம் செய்யிற அறையில, ஒரு நண்பனோட செத்துப்போன பிணத்துக்குப் பக்கத்துல...''

மது அருந்தாமல் அமர்ந்திருந்த இளைஞன் அறையின் மூலையில் இருந்தவாறு கேட்டான்: "சார்... தூக்குல தொங்கின ஆளோட நாக்கு வெளியே தொங்கும்ன்றது உண்மையா? நாக்கு வெளியே தொங்குறதை வச்சுத்தான் நடந்தது தற்கொலைன்ற முடிவுக்கே ஒருவர் வரமுடியுமா?''

கட்டிலில் இருந்த நண்பன் சொன்னான்: "இந்த உலகத்துல இருக்கிற எதைத்தான் உறுதியா நம்மால சொல்ல முடியுது? சரி... என் டம்ளரை யார் கொண்டு போனது?''

டாக்டர் சொன்னார்: "நாக்கு வெளியே தொங்குறதுன்றது அவ்வளவு முக்கியமான விஷயமில்ல...''

நான் சொன்னேன்: "ஒருமுறை விபத்துல சிக்கி செத்துப்போன என்னோட நண்பனின் போஸ்ட்மார்ட்டம் முடிஞ்ச உடலுக்குப் பக்கத்துல மத்த ஆளுங்க வர்ற வரைக்கும் நான்தான் காவலாளியா இருந்தேன். ஒரு பழைய அரசாங்க மருத்துவமனை இருக்குற இடத்துல கொஞ்சம் ஒதுக்குப்புறமா இருந்தது அந்த நாத்தம்பிடிச்ச அறை. நான் போனப்போ, பிணத்தை ரத்தம் படிஞ்ச ஒரு அழுக்காகிப் போயிருந்த வெள்ளைத் துணியால மூடியிருந்தாங்க. என் நண்பனோட முகம் ஒருபக்கம் கிழிஞ்சு போயிருந்துச்சு. அதை அங்கே தச்சிருந்தாங்க. ஒரு பழசாகிப்போன பொம்மை மாதிரி இருந்துச்சு பாக்குறதுக்கு. அப்போ பாதி ராத்திரி தாண்டியாச்சு. ஒரு அட்டெண்டர் வந்து என் நண்பனோட கால் பக்கத்திலும் தலைக்குப் பக்கத்திலும் ரெண்டு மெழுகுவர்த்தியை ஏத்தி வச்சான். ஒரு விதத்துல அது  நல்லதாப் போச்சு. காரணம்- கொஞ்ச நேரத்துல மின்சாரம் போயிடுச்சு. நான் என் நண்பனோட முகத்தை துணியை நல்லா இழுத்துவிட்டு மூடினேன். ஏன் அதைப் பண்ணினேன்னா, விபத்துல கிழிஞ்சு போயிருந்த அந்த முகம் என்கிட்ட என்னவோ பேசப் போகுதுன்னு நான் நினைச்சதுதான்!''

"நீ உண்மையிலேயே பயந்துட்டியா என்ன?''

"அப்படிச் சொல்ல முடியாது. கிடக்குறது என் நண்பனாச்சே!''

"ஆனா, உன் நண்பன் வாயைத் திறந்து பேசியிருந்தான்னா?''

"நான் நிச்சயமா பயந்திருப்பேன்.''

"அதெப்படி? உன் நண்பன்தானே பேசுறான்?''

"இருக்கலாம். ஆனா, செத்துப்போனவங்க எப்படி பேச முடியும்? செத்துப் போனவங்க, செத்துப்போனவங்கதான். இல்லாட்டி, அது இயற்கைக்கு விரோதமானதா இருக்கும்.''

"ஹா... ஹா... ஹா...'' ஒருவன் சொன்னான்: "நீ இயற்கைக்கு விரோதம் அப்படி இப்படின்னெல்லாம் பேச ஆரம்பிச்சிட்டியா? இது ஒண்ணுதான் பாக்கி!''

டாக்டர் சொன்னார்: "செத்துப்போனவங்க கொஞ்ச நேரம் கழிச்சு உயிரோட வாழத் தொடங்கினா, தேவையில்லாம பல பிரச்சினைகள் வரும். மரணம்ன்றதுக்கு ஒரு முடிவு எப்பவும் இருக்கணும்ல...''

நான் சொன்னேன்: "நான் சொல்ல வந்தது அது இல்ல. நான் என் நண்பனோட செத்துப்போன உடலுக்குப் பக்கத்துல உட்கார்ந்திருந்ததா சொன்னேன்ல... அப்படியே என்னை மறந்து நான் கண்ணயர்ந்துட்டேன். இடையில அப்பப்போ கண்ணைத் திறந்து என் நண்பனோட பிணத்தைப் பார்ப்பேன். அவனைப் பார்க்குறப்போ மனசில வித்தியாசமான ஒரு எண்ணம் தோணும். அவனை எழுப்பிப் பார்த்தா என்ன அப்படின்னு மனசுக்குள்ள ஒரு ஆவல் தலையை நீட்டிப் பார்க்கும். ஆனா அவனைக் கூப்பிடுறது அவன் காதுலயே விழலேன்னா? பயந்துக்கிட்டு பேசாம இருந்திடுவேன். கொஞ்ச நேரத்துல திரும்பவும் அயர்ந்து உறங்கிடுவேன். அவன் பக்கத்துல இருந்த ரெண்டு மெழுகுவர்த்தியும் முழுசா எரிஞ்சு அணைஞ்சு போச்சு. திரும்பவும் நான் கண்ணைத் திறந்து பார்க்குறப்போ, இருட்டுக்கு மத்தியில் என் நண்பன் மூச்சுவிடுற சத்தம் என் காதுகள்ல வந்துவிழற மாதிரி இருந்துச்சு. நான் மெதுவா அவன் பேரைச்சொல்லி கூப்பிட்டுப் பார்த்தேன். பிறகு என்ன நினைச்சேனோ, என் ரெண்டு காதுகளையும் நானே விரல்களை வச்சு அடைச்சுக்கிட்டேன்!''

"நீ எத்தனை ஸ்மால் சாப்பிட்ட?'' ஒருவன் கேட்டான்.

"அவன் சொல்லி முடிக்கட்டுமே!'' மற்றொருவன் சொன்னான்: "இல்லைன்னா அவனுக்கு இன்னைக்கு உறக்கமே வராது...''

நான் சொன்னேன்: "கொஞ்ச நேரத்துல மின்சாரம் வந்துடுச்சு. வெளியே ஒரு டாக்ஸி கார் வந்து நின்னுச்சு. நான் வெளியே போய் பார்த்தேன். காருக்கு மேலே ஒரு சவப்பெட்டி இருந்துச்சு. கார்ல இருந்து என் நண்பனோட வயசான அப்பா இறங்கி வந்தாரு. நான் பக்கத்துல போய் அவர் கையைப் பிடிச்சேன். அவர் என்கிட்ட கேட்டாரு: "எங்கே இருக்கான் அவன்?” நான் சொன்னேன்: "இந்த அறையிலதான் இருக்கான்.” அவர் வேதனை கலந்த முகத்தோட இருந்தாரு. என் கையை விட்டுட்டு இருட்டுல நடந்துபோனாரு. நான் பின்னால ஓடிக்கிட்டு சொன்னேன்: "அங்கேல்ல, இங்கே...” அவர் நான் சொன்னதைக் காதிலேயே வாங்காம, ஒரு மரத்துக்குக் கீழே போய் உட்கார்ந்து ஒண்ணுக்கு இருந்துக்கிட்டு இருந்தார். அவர் ஒண்ணுக்கு இருந்து முடிக்க ரொம்ப நேரம் ஆச்சு. எல்லாம் முடிஞ்சு எந்திரிச்சு நின்னப்போ, தேம்பித் தேம்பி அழ ஆரம்பிச்சாரு. கையில இருந்த கம்பை ஊனிக்கிட்டு யாரோட உதவியும் இல்லாம அவர் பிணம் இருந்த அறைக்குள்ள நுழைஞ்சாரு. என் நண்பன் முகத்தை மூடியிருந்த துணியை நீக்கினாரு. பக்கத்துல உட்கார்ந்து அவன் முகத்தைப் பார்த்துச் சொன்னாரு: "என் மகனே!” அப்போ அவனோட

கிழிஞ்சு போன முகம் ஏதாவது சொல்லும்னு நினைச்சேன். "அப்பா... நான் இங்கே இருக்கேன். நீங்க கவலைப்படாதீங்க...'ன்னு அவன் கட்டாயம் சொல்லுவான்னு நினைச்சேன்.'' அதற்குமேல் பேச முடியாமல் கதையை நிறுத்தி, என்னைச் சுற்றிப் பார்த்தேன்!

"கொஞ்சம் கொஞ்சமா சொல்லி போஸ்ட்மார்ட்டம் வரை கொண்டு வந்துட்டே?'' ஒருவன் சொன்னான்.


"ஏன்... ஒண்ணுக்கு இருந்ததைச் சொல்லலியா?'' இன்னொரு ஆள் பெருமூச்சு விட்டுக்கொண்டே சொன்னான்.

"அது இருக்கட்டும்... மூத்திரம் வருதுன்னா யாரால அதை நிறுத்தி வைக்க முடியும்?'' இன்னொரு ஆள் தன் கருத்தைச் சொன்னான்.

வெளியே இருந்து அவர்களைப் பார்ப்பதற்காக வந்திருந்த அந்த புதிய இளைஞன் கேட்டான்: "சார்... தூக்குல மாட்டி தொங்குறப்போ, கயிறோட முடிச்சு சரியா கழுத்தோட எந்தப் பக்கத்துல இருக்கணும்?''

டாக்டர் சொன்னார்: "சரியாச் சொன்னா, முடிச்சு கழுத்தோட வலது பக்கத்துலயோ இல்லாட்டி இடது பக்கத்துலயோதான் இருக்கணும். ஒரு சிகரெட்டை இங்கே எடு... இதைப் பிடிக்காம இருந்து என்ன செய்யப் போறோம்? என்னைக்கு இருந்தாலும், நாம சாகத்தான் போறோம். அது சிகரெட் பிடிச்சதுனாலதான்னு என்ன நிச்சயம்?''

"அந்தக் காலத்துல எந்த ராஜாவை ஒரு பழத்துக்குள்ளே புழுவாக வந்து எமன் பிடிச்சுக்கிட்டுப் போனான்?'' ஜன்னலைத் திறந்து விட்டவாறு ஒருவன் கேட்டான்: "என்னால இந்தப் புகையைத் தாங்க முடியல..''  அவன் சொன்னான்.

"எமன் இல்ல முட்டாள்... தட்சகன்...'' ஒருவன் சொன்னான்.

"ரெண்டும் ஒண்ணுதான்.'' ஜன்னலைத் திறந்த ஆள் சொன்னான்.

"இதுகூடத் தெரியலைன்னா நீ சரியான முட்டாள்தான்! நான் சொல்றேன்!''

புதிதாக வந்திருக்கும் இளைஞன் யாரிடம் கேட்பது என்றில்லாமல் பொதுவாகக் கேட்டான்: "என் அம்மாவோட கழுத்துல முடிச்சு இடது பக்கம் இருந்துச்சு. ஆனா நாக்கு வெளியே தொங்கல...''

அறையில் சில நிமிடங்களுக்கு ஒரே நிசப்தம். ஒருவன் தின்னும் பொருட்கள் இருந்த டப்பாவைத் தன் பக்கம் இழுத்தான்.

டாக்டர் லேசாகச் சிரிக்க முயன்றவாறு சொன்னார்: "சரியா புரியல... அதாவது...''

இளைஞன் சொன்னான்: "என்னோட அம்மா தூக்குல மாட்டித்தான் இறந்தாங்க. ஆனா, நாக்கு வெளியே வரல... இந்த விஷயத்தை யாரோ அன்னைக்கு சொன்னது இப்போ என் ஞாபகத்துல வருது...''

"ஸாரி...'' ஒரு ஆள் எங்கோ இருந்து சொன்னான்.

இளைஞன் அந்த ஆளைப் பார்த்து புன்சிரிப்பைத் தவழ விட்டான்.

"இது எப்போ நடந்துச்சு?'' டாக்டர் கேட்டார்.

"1984-ல...'' இளைஞன் சொன்னான்.

"அம்மாவுக்கு அப்போ என்ன வயது?'' டாக்டர் விசாரித்தார்.

"அம்பத்தொண்ணு.''  இளைஞன் சொன்னான்.

"என் வயது...'' டாக்டர் சொன்னார்.

நான் கேட்டேன்: "அம்மா எதுக்காக தற்கொலை பண்ணிக்கணும்?''

"அவங்க மனசில ஏகப்பட்ட குழப்பங்கள்...பிள்ளைங்க எல்லாம் பிரிஞ்சு தனித்தனியா போயிட்டோம். அவங்க மட்டும் தனியா இருந்தாங்க. அப்பா தற்கொலை பண்ணி மூணு வருஷம் கழிச்சு, அம்மாவும் தற்கொலை பண்ணிக்கிட்டாங்க...''

அறை மீண்டும் அமைதியில் மூழ்கியது. கட்டிலில் படுத்திருந்த ஆள் நீண்ட பெருமூச்சு விட்டாறு உறங்கிக் கொண்டிருந்தான். டாக்டர் எழுந்து போய் ஜன்னலுக்கு அருகில் நின்று வெளியே பார்த்தார். நான் வேஷ்டி நுனியால் என் கண்களில் இருந்த ஈரத்தைத் துடைத்தேன்.

ஒரு ஆள் குழையும் நாக்குடன் கேட்டான்: "அம்மா... அப்பா... ரெண்டு பேருமே தற்கொலையா பண்ணிக்கிட்டாங்க? இது உண்மைதானா? என்னால நம்பமுடியல...''

இளைஞன் அந்த ஆளைப் பார்த்து லேசாகச் சிரித்தான்.

பத்திரிகைச் சொந்தக்காரர் சொன்னார்: "இது உங்களுக்குத் தெரிய வாய்ப்பு இல்ல... ரவியோட அப்பாவும் அம்மாவும் தற்கொலைதான் பண்ணிக்கிட்டாங்க!''

குழைந்த நாக்குக்காரன் சொன்னான்: "ஸாரி...''

டாக்டர் கேட்டார்: "அப்பாவும் தூக்குல தொங்கித்தான் வாழ்க்கையை முடிச்சுக்கிட்டாரா?''

இளைஞன் சொன்னான்: "ஆமா... நான்தான் அப்பாவோட உடலைக் கிழே இறக்கிவிட்டதே! அவரோட நாக்கும் வெளியே தொங்கல... ஆனால் முகத்துல சாந்தம் தெரியல... அம்மாவோட முகம் ரொம்பவும் சாந்தமா இருந்துச்சு...''

"அப்படி இருக்குறது உண்டுதான்.'' டாக்டர் சொன்னார்: "அவங்களுக்கு நீங்க எத்தனை பிள்ளைங்க?''

"அஞ்சு பேர்.'' இளைஞன் சொன்னான்: "எங்க வீட்லயே நான்தான் கடைசி...''

சாய்வு நாற்காலியில் குழைந்த நாக்குடன் அமர்ந்திருந்த ஆள் சொன்னான்: "எங்க வீட்ல நான்தான் கடைசி. அதுதான் கஷ்டம்!''

இளைஞன் கேட்டான்: "சார்... தற்கொலைன்ற விஷயம் தலைமுறை தலைமுறையா தொடர்றதுக்கு வாய்ப்பு இருக்கா?''

கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த ஆள் எழுந்து சுற்றிலும் பார்த்தவாறு கேட்டான்: "என்ன விஷயம்? குப்பிகள் காலியாயிருச்சா என்ன... எல்லோரும் சீரியஸா உட்கார்ந்திருக்கீங்க?''

அவன் தன் வலதுகண் பக்கத்தில் சுண்டு விரலை வைத்து, கண்களை உருட்டியவாறு உரத்த குரலில் சத்தமிட்டான்: "ட்டே...!''

யாரும் சிரிக்கவில்லை.

"ஸாரி... தப்பு பண்ணிட்டேன்...'' அவன் சொன்னான். பிறகு சுண்டுவிரலை வாய்க்குள் நுழைத்து, உதடுகளை முழுமையாக மூடிக்கொண்டு "ட்டே...'' என்று சொல்ல முடியாமல் உட்கார்ந்திருந்தான் அவன்.

அப்போது வெளியே இருந்து வந்திருந்த அந்த புதிய இளைஞன், அந்த ஆளுக்கு நேராகத் தன் சுண்டுவிரலைத் துப்பாக்கிபோல நீட்டிக் கொண்டு புன்சிரிப்பு தவழ சொன்னான்: "ட்டே! ட்டே...''

இளைஞன் எல்லாரிடமும் விடைபெற்றான். பிறகு தன் பையை எடுத்துத் தோளில் தொங்கவிட்டவாறு, கதவைத் திறந்து அறையை விட்டு வெளியே போனான். அறை இப்போதும் அமைதியாகவே இருந்தது. விரலை வாயில் வைத்துக்கொண்டிருந்த நண்பன், அதை வெளியே எடுத்து தன் சட்டையில் துடைத்தான்:

"ஹா... ஹா... ஹா....'' அவன் சொன்னான்: "சரி... இப்போ நாம பூசணிக்காயைப் பத்திப் பேசலாமா?''

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.