Logo

நிலவு

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 6450
nilavu

மேடம் ஜூலி ரூபெர் தன்னுடைய தங்கை ஹென் ரீட்டா லெத்தோரேயை எதிர்பார்த்து நின்றிருந்தாள். அவள் சமீபத்தில் தான் தன்னுடைய சுவிட்சர்லாண்ட் பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பி வந்தாள்.

சுமார் ஐந்து வாரங்களுக்கு முன்புதான் லெத்தோரேயின் குடும்பம் அங்கிருந்து கிளம்பியது. சிவாதோஸில் உள்ள தன்னுடைய எஸ்டேட் சம்பந்தப்பட்ட சில விஷயங்களுக்காகத் தன் கணவரை அங்கு தனியாக விட்டுவிட்டு, சில நாட்கள் தன் சகோதரியுடன் இருக்கலாம் என்பதற்காக ஹென் ரீட்டா பாரீஸுக்கு வந்திருந்தாள்.

மாலை நேர ஒளியின் நிழல்கள் இருட்டைப் பரவவிட்டிருக்கும் அந்த அறையின் வெளிச்சத்தில் அமர்ந்து எந்தவித ஈடுபாடும் இல்லாமல் ஒரு புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்த ரூபெர், ஏதோ சத்தம் கேட்கவே தலையை உயர்த்திப் பார்த்தாள்.

அதன் தொடர்ச்சியாக யாரோ வாசல் கதவைத் தட்டுவதை அவள் கேட்டாள். சிறிதும் தாமதிக்காமல் அவளுடைய தங்கை ஒரு பயணக்கோலத்துடன் அங்கு வந்து நின்றாள். மரியாதை நிமித்தமான எந்தவொரு அலங்கார வார்த்தைகளும் இல்லாமல் அவர்கள் ஒருவரையொருவர் கட்டிப் பிடித்துக்கொண்டார்கள். ஒரு நிமிட நேரம் அதிலிருந்து விடுபட்டிருந்த அவர்கள் மீண்டும் இறுகிய அணைப்பில் ஈடுபட்டனர். பிறகு அவர்கள் தங்களின் நலத்தைப் பற்றியும், வேறு விஷயங்களைப் பற்றியும் பேச முற்பட்டனர். குடும்பங்களைப் பற்றிய விசேஷங்களைப் பேசினார். நூற்றுக்கணக்கான சிறுசிறு விஷயங்களைப் பற்றியும் ஆராய்ந்தனர். பேச்சுக்கிடையே வார்த்தைகள் முனை மழுங்கிக் கீழே விழுந்து கொண்டிருந்தன. இதற்கிடையில் ஹென் ரீட்டா தன்னுடைய தொப்பியையும் தலையில் அணிந்திருந்த ஆடையையும் கழற்றி வைத்தாள்.

அப்போது நன்கு இருட்டிவிட்டிருந்தது. மேடம் ரூபெர் ஒரு விளக்கைக் கொண்டு வரும்படி வீட்டிற்குள் அழைத்துச் சொன்னாள். விளக்கு வந்து சேர்ந்தபோது, ரூபெர் தன் சகோதரியின் முகத்தையும் உடலையும் மீண்டும் ஒருமுறை தெளிவாக ஆராய்ந்துவிட்டு, அவளைத் திரும்பவும் இறுக அணைக்க முயன்றாள். ஆனால், ரூபெர் தன் சகோதரியின் உருவத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டாள். திகைப்படைந்து பின்வாங்கினாள். மேடம் லெத்தோரேயின் பின் கழுத்தின் இருபக்கங்களிலும் வெண்மையான தலைமுடிகள் தெரிந்தன. அவளின் எஞ்சியிருந்த தலைமுடிகள் அனைத்தும் அழகான கருப்பு நிறத்தில் இருந்தன. பின் கழுத்தின் இரண்டு பக்கங்களிலுமிருந்து கொத்தாக வெண்மை நிற முடிகள் வெள்ளி நீர்வீழ்ச்சியைப்போல, நீண்டு கருப்பு முடிகளுடன் சங்கமமாயின. அவள் சுவிட்சர்லாண்டிற்குச் சென்ற பிறகுதான், அவளிடம் இந்த மாறுதல் உண்டாகியிருந்தது.

கண்களை சிறிதும் அகற்றாமல் மேடம் ரூபென் தன் சகோதரியையே உற்றுப் பார்த்தாள். தன் சகோதரிக்கு ஏதோ பெரிய ஆபத்து நடந்திருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருப்பதற்கு இடையில், அவளின் கன்னங்கள் வழியாகக் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. அவள் கேட்டாள்:

“உனக்கு என்ன ஆச்சு ஹென் ரீட்டா?”

கவலை நிறைந்த புன்சிரிப்புடன், ஒரு இதய நோயாளியின் வெளிறிய புன்னகையுடன் அவள் சொன்னாள்:

ஒண்ணுமில்ல. நான் உறுதியா சொல்றேன். சரி.. ஏன் நீ என் வெண்மைநிறத் தலைமுடியையே வெறித்துப் பார்த்துக்கிட்டு இருக்கே?”

ஆனால், மேடம் ரூபெர் திடீரென்று அவளுடைய தோளைப் பிடித்து எதையோ தேடுவதைப்போல, அவளையே பார்த்துக் கொண்டு திரும்பவும் கேட்டாள்:

“உனக்கு என்ன ஆச்சு? சொல்லு... உனக்கு என்ன ஆச்சு? என்னிடம் பொய் சொன்னால், அந்த நிமிடமே நான் அதைக் கண்டுபிடிச்சிடுவேன்.”

அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு நின்றிருந்தார்கள். முகம் வெளிறிப்போய், தலை சுற்றிக் கீழேவிழ இருந்த ஹென் ரீட்டாவின் குழி விழுந்த கண்களின் ஓரங்களில் இரண்டு துளி கண்ணீர் நின்றிருந்தது.

அவளுடைய தங்கை அக்காவைக் கேட்டாள்:

“உனக்கு என்ன ஆச்சு? உன் பிரச்சினை என்ன? என்கிட்ட சொல்லு.”

அப்போது தாழ்ந்த குரலில் அக்கா சொன்னாள்:

“எனக்கு... எனக்கு ஒரு காதலர் இருக்கிறார்.”

தன் தங்கையின் தோளில் தலையை வைத்து அவள் தேம்பித் தேம்பி அழுதாள்.

சிறிது மன அமைதி கிடைத்தவுடன், அவளுடைய பெருமூச்சுகளுக்குத் தளர்ச்சி உண்டானபோது, தன் மனதில் இருந்த விஷயத்தை வெளியில் எடுத்து வீசி எறியலாம் என்பதைப்போல, தன் கவலையைத் தன்மீது அன்பு வைத்திருக்கும் இன்னொரு இதயத்திற்கு கை மாற்றிவிடலாம் என்பதைப்போல அவள் எல்லாவற்றையும் மனம் திறந்து கூற ஆரம்பித்தாள்.

தொடர்ந்து அக்காவும் தங்கையும் தங்கள் கைகளைக் கோர்த்துக்கொண்டு அந்த அறையின் இடது மூலையில் போடப்பட்டிருந்த ஸோஃபாவில் சாய்ந்தார்கள். தங்கை, அக்காவைத் தன்னுடைய இதயத்தின்மீது சேர்த்து வைத்தவாறு, அவள் கூறுவதை மிகவும் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தாள்.

“இந்த விஷயத்தில் யாருக்கும் எந்தவொரு வித்தியாசமும் இல்லை என்று எனக்குத் தெரியும். ஆனால், எனக்கு என்னையே புரிந்துகொள்ள முடியல. அன்னையில இருந்து எனக்குப் பைத்தியம் பிடிச்சிருக்குன்னு எனக்குத் தோணுது. தங்கச்சி, நீ மிகவும் கவனமா இருக்கணும். மிகவும் எச்சரிக்கையா இருக்கணும். சில நிமிடங்களில் நம்முடைய பலவீனங்களை நாம் அடையாளம் தெரிஞ்சிக்கணும். நாம் எவ்வளவு வேகமாக அவற்றுக்குக் கீழ்படிகிறோம்! நம்முடைய மனதிற்குள் சிந்தனைக் குழப்பங்களின் பாதிப்புகள் யாருக்கும் தெரியாமல் நுழைந்துவிடுகின்றன. கைகள் மலர ஏங்குகின்றன. காதல் உணர்வு தோன்றுகிறது. அணைக்கும் நிமிடங்கள் வருகின்றன.

என் கணவரை உனக்கு தெரியும். அவரை நான் எந்த அளவிற்குக் காதலித்தேன் என்பதும் உனக்கு தெரியும். அவர் மிகவும் மனப்பக்குவம் கொண்டவராகவும் விழிப்புணர்வுடன் இருப்பவராகவும் இருந்தார். ஆனால், ஒரு பெண் மனதின் ரகசியத்தை அவரால் புரிந்துகொள்ள முடியல. அவர் எப்போதும் நல்லவராகவே இருப்பவர். அவரின் முகத்தில் எப்போதும் புன்சிரிப்பு இருந்துகொண்டே இருக்கும். எல்லா நேரங்களிலும் இரக்க குணம் உள்ள மனிதராக அவர் இருந்தார். அவர் மிகவும் பலமாகத் தன் கைகளால் என்னை இறுக்கினால் என்ன, என்னை இறுக கட்டிப்பிடித்து அணைத்தால் என்ன, இரண்டு ஆன்மாக்களை ஒன்று சேர்க்கிற இனிய முத்தங்களை எனக்கு தந்தால் என்ன- என்றெல்லாம் நினைப்பேன். ஒரு வார காலம் என்னை விட்டு அவர் விலகி இருக்கும்போது என்மீது அவருக்கு ஈடுபாடு தோன்றாதா, என்னைக் கொஞ்ச வேண்டும் என்ற ஆசை அவருக்குள் உண்டாகாதா என்று நான் ஏங்கியிருக்கிறேன்.

இவையெல்லாம் சாதாரண விஷயங்கள் இல்லையா? ஆனால், நம்மைப்போன்ற பெண்கள் படைக்கப்பட்டிருப்பது அப்படித்தான். அதிலிருந்து நாம் எப்படி விடுதலை பெற முடியும்?

அப்போதும் அவரை ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணம் ஒருமுறைகூட என் மனதில் தோன்றியது இல்லை. ஆனால், காதலின் ஆரவாரம் இல்லாமல், எந்தவித காரணமும் இல்லாமல், எதுவுமே இல்லாமல் லூஸன் ஏரிக்கு மேலே, ஒரு இரவு நேரத்தில் நிலவு உதித்தது என்ற ஒரே ஒரு காரணத்தால் அது நடந்தது.


கணவரும் நானும் ஒன்று சேர்ந்து பயணித்துக் கொண்டிருந்த அந்த நேரத்தில் அவருடைய உணர்ச்சியற்ற தன்மை என்னுடைய ஆர்வத்தைக் குறைத்தது.

என்னுடைய காவிய உணர்ச்சியை அது ஊதி அணைத்தது. சூரியன் உதயமாகும்போது, மலைப்பாதைகள் வழியாக நாங்கள் கீழ்நோக்கி இறங்கினப்போ, அந்த நான்கு குதிரைகளும் மிகவும் சுறுசுறுப்புடன் எங்களைக் கடந்துபோனபோது, காலை நேரத்திற்கென்றே இயல்பாக இருக்கும் மஞ்சள் நிறத்துடன் கிராமப்புறமும் மரங்களும் அருவிகளும் எங்களின் கண்களுக்கு முன்னால் கண்விழித்தன. சந்தோஷத்துடன் என் கைகளைச் சேர்த்தவாறு நான் அவரிடம் சொன்னேன், ‘அன்பானவரே, என்ன அழகான காட்சி! நீங்கள் இப்போ என்னை ஒருமுறை முத்தமிடுங்கள்’ என்று. மெல்லிய ஒரு புன்சிரிப்புடன் அவர் சொன்னார்: ‘உனக்கு இயற்கை பிடித்திருக்கிறது என்பதற்காக நாம் ஒருவரையொருவர் முத்தமிட்டுக் கொள்ள வேண்டும் என்று இல்லை.’

அந்த வார்த்தைகள் என் இதயத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டன. அழகான காட்சிகளைப் பார்க்குறப்போ, காதலர்கள் அசாதாரணமான வகையில் காதல் வயப்படுகிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.

உண்மையாக சொல்லப்போனால், எனக்குள் நுரைத்துக்கொண்டு எழுந்த கவிதையை வெளியே வராமல் அவர் தடுத்தார். நான் அதை எப்படி விளக்கிக் கூறுவேன்? நிறைந்திருக்கும் காற்று மேலே ஏறாதபடி அடைக்கப்பட்டிருக்கும் ஒரு கொதிகலைனைப்போல ஆகிவிட்டேன் நான்.

ஒரு மாலை நேரத்தில் (ஹோட்டல் தெ ஃப்ளூலனில் நாங்கள் நான்கு நாட்கள் தங்கியிருந்தோம்) ராபர்ட்டிற்கு எப்போதும் வரக்கூடிய அந்த கடுமையான தலைவலி வந்தது. அவர் அன்று சீக்கிரமே படுத்துவிட்டார். நான் மட்டும் தனியாக ஏரியின் கரைவழியே நடந்தேன்.

நாம் மோகினிக் கதைகளில் படித்திருக்கக்கூடிய ஒரு இரவாக இருந்தது அது. வானத்தில் பவுர்ணமி நிலவு... மஞ்சள் நிறத்தில் தலையை உயர்த்திக் கொண்டு நின்றிருக்கும் மலைகள் வெள்ளிக் கிரீடங்களைப்போல இருந்தன. ஏரியில் ஒளிர்ந்து கொண்டிருந்த ஏராளமான அலைகள் முன்னோக்கி வந்து திரும்பிக் கொண்டிருந்தன. நம்முடைய மனதிற்குள் ஒரு புதிய அனுபவம். அந்த நிமிடங்கள் நம்முடையத் துடிப்பிற்கு வேகத்தை அதிகரிக்கின்றன. எவ்வளவு விரைவாக அது அடிக்கிறது! அந்த உணர்ச்சிகளுக்குத்தான் எத்தனை சக்தி!

நான் அந்தப் புல்வெளியில் உட்கார்ந்து ஏரியைப் பார்த்தேன். என்ன பிரகாசம்! என்ன அழகு! அசாதாரணமான ஏதோ ஒன்று எனக்குள் நுழைந்தது. புரிந்துகொள்ள முடியாத காதலின், காமத்தின் ஆசை எனக்குள் மலர்ந்தது. வெறுப்பைத் தரும் என்னுடைய வாழ்க்கைமீது உண்டான கவலை என் மனமெங்கும் நிறைந்தது. என்ன! அந்த நிலவின் வெளிச்சத்தில், அந்த ஏரியின் கரையில் ஒரு ஆணின் கைகளுக்குள் அடங்கி இருக்க சிறிதும் முடியாத விதியா எனக்கு? உணர்ச்சிமயமான அணைப்பின் நிமிடங்களுக்காக கடவுள் படைத்தார். அந்த பனி விழுந்துகொண்டிருந்த அழகான இரவுகளில், ஒருமுறைகூட

என்னுடைய உதடுகள் ஒரு ஆணுடைய உதடுகளின் உஷ்ணத்தை அனுபவிக்க முடியாதா என்ன? நிலவு ஒளி உண்டாக்கிய நிழல்கள் நிறைந்த அந்த கோடைகால இரவில் தகித்துக்கொண்டிருந்த காதலை அனுபவிக்க எனக்கு அதிர்ஷ்டம் இல்லையா என்ன?

சிந்திக்கும் ஆற்றலை முற்றிலுமாக இழந்துவிட்டதைப் போல நான் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தேன். ஏதோ ஒரு ஆணின் அசைவு எனக்குப் பின்னால் கேட்டது. ஒரு ஆண் என்னையே உற்று பார்த்துக்கொண்டிருந்தார். நான் திரும்பிப் பார்த்தப்போ, என்னை அடையாளம் கண்டுகொண்ட அவர், எனக்கு நேராகவே நடந்து வந்தார்.

“மேடம், நீங்க அழறீங்களா?”

தன் தாயுடன் பயணம் செய்து கொண்டிருந்த ஒரு இளம் வக்கீல்தான் அவர். முன்பு பல நேரங்களில் நாங்கள் ஒருவரையொருவர் பார்த்திருக்கிறோம். அவருடைய கண்களை பல நேரங்களில் என்னைப் பின் தொடர்ந்திருக்கின்றன.

என்ன பதில் சொல்வது என்றோ, அந்த சூழ்நிலையை எப்படிப் பயன்படுத்திக் கொள்வது என்றோ தெரியாமல் நான் குழப்பத்தில் இருந்தேன். நான் நல்ல உடல்நலத்துடன் இல்லை என்பதை நான் அவரிடம் சொன்னேன்.

அவர் என்னுடன் சேர்ந்து நடந்தார். மிகவும் இயல்பாகவும் ஈடுபாட்டுடனும் நாங்கள் பார்த்த காட்சிகளைப் பற்றி அவர் பேச ஆரம்பித்தார். நான் அனுபவித்த அந்தக் காட்சிகள் ஒவ்வொன்றையும் அவர் தன் வார்த்தைகள் மூலம் வெளிப்படுத்தினார். நான் புரிந்து கொண்டிருந்ததைவிட மிகவும் அழகாக அவர் அவற்றைப் புரிந்து கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்தப்போ, எனக்குள் ஒரு ஆவேசமே உண்டாகிவிட்டது. திடீரென்று அவர் ஆல்ஃப்ரட் தெ முஷெயின் சில கவிதைகளைக் கூறினார். இனம் புரியாத உணர்ச்சிகளால் நெஞ்சு அடைப்பதைப்போல் எனக்கு இருந்தது. அந்த அழகான மலைகளும் ஏரியும் நிலவும் வார்த்தைகளால் கூற முடியாத அளவிற்கு அழகான விஷயங்களைப் பற்றி என் செவிகளுக்குள் பாடுவதைப் போல நான் உணர்ந்தேன்.

என்ன காரணம் என்று எனக்குத் தெரியவில்லை. எப்படி என்பதும் எனக்குத் தெரியவில்லை. ஒரு காம வேள்வியில் என்பதைப்போல அது நடந்துவிட்டது.

மறுநாள் காலையில் அவர் புறப்படும் வரையில் நான் அவரைப் பார்க்கவேயில்லை.

அவர் தன் அடையாள அட்டையை என்னிடம் தந்தார்.”

தன்னுடைய தங்கையின் கைகளில் விழுந்து அக்கா தேம்பித் தேம்பி அழுதாள். பிறகு அது பெரிய அழுகையாக மாறியது. தங்கை ஆறுதல் கூறும் மனமுதிர்ச்சியுடன் இப்படிச் சொன்னாள்:

“இங்க பாரு அக்கா. பல நேரங்களில் நாம காதலிக்கிறது ஆணை அல்ல; காதலைத்தான். அந்த இரவு நேரத்தில் உன்னுடைய உண்மையான காதலன் - அந்த நிலவுதான்.”

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.