
அவளை அப்படியே இறுகக் கட்டிப்பிடித்து அணைக்க வேண்டும் என்றும், ஆசை தீர முத்தங்களைக் கொடுக்க வேண்டும் என்றும் அவர் மனது துடித்தது. ஆனால், அவள்தான் அவரைக் காதலிக்கவில்லையே!
"சாரதா, நான் அச்சகத்திற்குப் போயிட்டு வர்றேன்.''
அவள் உரத்த குரலில் அழ ஆரம்பித்தாள்.
"நீங்க வர்றப்போ நான் இங்கே இருக்க மாட்டேன்!''
"எங்கே போறே?''
"நான் எங்கே போனா உங்களுக்கென்ன? ஒருவேளை நான் தூக்குப்போட்டு செத்தாலும் சாகலாம்.''
"அந்த அளவுக்கு உனக்கு என்ன பிரச்சினை?''
"பிரச்சினையா?'' அவள் மார்பு குலுங்க சொன்னாள்: "ஒண்ணுமில்ல...''
அவள் மீண்டும் நெஞ்சைக் கைகளால் அடித்தாள். கோபிநாதன் அருகில் சென்று அவளின் கைகளைப் பிடித்தார்.
சாரதா கோபத்துடன் உறுமினாள்:
"என்னைத் தொடாதீங்க. நான் கெட்டுப்போனவ. அசிங்கமானவ.''
"கெட்டுப்போனவளா? என்ன சொல்ற நீ?''
"ஒண்ணுமில்ல. நான் சாகப்போறேன்.''
"சாகப்போறயா? அந்த அளவுக்கு உனக்கு என்ன பிரச்சினை?''
"ம்.. ஒண்ணுமில்ல...'' சிறிது இடைவெளிக்குப் பிறகு அவளே தொடர்ந்தாள்: "எனக்குன்னு இந்த உலகத்துல யாரும் இல்ல. வெறுத்துப்போன இந்த வாழ்க்கை எனக்கு போரடிச்சுப்போச்சு.''
"யார் இந்த வாழ்க்கையை வெறுக்க வைச்சது?''
"நீங்கதான்.''
"அடக் கடவுளே!'' கோபிநாதன் உண்மையிலேயே அதிர்ச்சியில் உறைந்தே போனார். "நானா?'' வாயைப் பிளந்தவாறு அவர் நின்றார்.
"ஆமா...'' நீர் வழிந்த கண்களுடன் நின்றிருந்த சாரதா ஏக்கப் பெருமூச்சு விட்டவாறு சொன்னாள்: "என்னைப் பார்க்கவே உங்களுக்குப் பிடிக்கல...''
"எனக்கா? சாரதா, உனக்குத்தானே என்னைப் பிடிக்கவே இல்ல...!''
"எனக்கா?'' சாரதா கோபிநாதனின் அகன்ற மார்பில் சாய்ந்து தேம்பித் தேம்பி அழுதாள்:
"நான்... உங்களை... என்னோட... கடவுளைவிட...'' சாரதா சொன்னாள்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook