Logo

மர பொம்மைகள்

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 10723
Mara Pommaigal

வாசலில் சென்று நின்ற மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரி, “212 ஆசாரி பறம்பில்” என்று தனக்குத்தானே கூறியவாறு உரத்த குரலில் கேட்டான்: “இங்கே யாருமில்லையா?”

ஓலையால் மறைத்து உண்டாக்கப்பட்ட அறைக்குள்ளிருந்து ஒரு பெண் வாசலை நோக்கி வந்தாள்.

“உங்க பேரு உம்மிணியா?” கையிலிருந்த தாளைப் பார்த்தவாறு அந்த மனிதன் கேட்டான்.

அந்த இளம் பெண்ணின் அகலமான விழிகள் மேலும் பெரிதாக விரிந்தன. வழக்கோ, போலீஸோ என்று அவள் மனதிற்குள் பதைபதைத்தாள்.

“மக்கள் தொகை கணக்கு எடுக்குறேன்... இங்க யாரெல்லாம் இருக்காங்க?”

“இப்போ நான் மட்டும்தான் இருக்கேன். அம்மா இப்பத்தான் வெளியே போனாங்க. குளக்கரையில இலை வெட்டுறதுக்குப் போயிருக்காங்க. தம்பி வேலைக்குப் போயிருக்கான்.”

“உம்மிணின்றது...?”

“அம்மாவோட பேரு.”

“சரி... உம்மிணின்றது ஆணா பெண்ணா?”

அதைக் கேட்டு அவள் சிரித்தாள். கிண்டல் சிரிப்பு. எனினும், அழகான சிரிப்பு.

“அம்மாவும் நானும் பெண்கள். தம்பி ஆண்.”

“அப்பா இருக்காரா?”

“இறந்துட்டாரு.”

“இப்போ உம்மிணி விதவை. அப்படித்தானே?”

“இப்போ விதவைதான்.”

தொடர்ந்து அவள் சொன்னாள்: “மக்கள் தொகை கணக்கு எடுக்குறப்போ குடையை விரிச்சு பிடிக்கக் கூடாதுன்னு ஏதாவது இருக்கா என்ன? இந்த வேகாத வெயில்ல நின்னு மக்கள் தொகை கணக்கு எடுத்தா, ஆட்களோட எண்ணிக்கை கட்டாயம் குறைவாகத்தான் வரும். இந்த பெஞ்சுல வந்து உட்காரலாம்ல?”

சாணத்தால் மெழுகி சுத்தமாக இருந்த அந்த நீளம் குறைவான வராந்தாவில் போடப்பட்டிருந்த பெஞ்சில் அவன் போய் உட்கார்ந்தான்.

உம்மிணியைப் பற்றிய விவரங்களைக் கேட்டறிந்து எழுதினான்.

“உங்க பேரு?”

“என் பேரு நளினி.”

இதைச் சொன்னபோது அவள் சிறிது வெட்கப்பட்டதைப்போல் இருந்தாள்.

“வயசு?”

“பார்க்குறப்போ என்ன தோணுது?”

“எனக்கொண்ணும் தோணல.”

அவள் புன்னகைத்தாள்.

“இருபத்து மூணு...”

“கல்யாணம் ஆயிடுச்சா?”

“ம்...”

“இப்போ கணவன் இருக்காரா?” அவள் சிறிது தயங்கினாள்.

“இப்போ இங்கே இல்ல. பதிமூணாவது மைல்ல மக்கள் தொகை கணக்கு எடுத்தாச்சா?”

“அதை இன்னொரு ஆளு எடுக்குறாரு. கணவன் இருக்காரு. அப்படித்தானே?”

“இருக்குன்னோ இல்லைன்னோ எழுதிக்கோங்க.”

அவள் ஒருவகை அலட்சியத்துடன் சொன்னாள்.

“இருக்குன்னு எழுதினாலும் இல்லைன்னு எழுதினாலும் அர்த்தம் ஒண்ணு இல்லியே!”

“அப்படின்னா இருக்குன்னு மொட்டையா எழுதிக்கோங்க.”

“கல்யாண விஷயமா பேசியிருப்பாங்கன்னு நினைக்கிறேன். அப்படித்தானே? அப்படின்னா, கல்யாணம் ஆயிடுச்சுன்னு எழுத வேண்டியதில்லை... கல்யாணம் ஆகலன்னுதான் எழுதணும்...”

“அப்படியில்ல... எனக்குக் கல்யாணம் ஆயிடுச்சு.”

அவள் தலையின் பின் பகுதியைக் கையால் சொறித்தாள். அப்போது நீளமானதும் எண்ணெய் படாமலும் இருந்த கூந்தல் அவிழ்ந்து கீழே விழ, அது அவளின் அழகான தோற்றத்திற்கு மேலும் ஒரு அழகைத் தந்தது.

“கணவன்...?”

“கணவன் இருக்காரு. கணவன் இல்ல...”

“உங்களை விட்டுப் போயிட்டாரு. அப்படித்தானே? அப்படின்னா விவாகரத்து...”

“அப்படியொரு வார்த்தையை நானும் கேட்டிருக்கேன்னு நினைக்கிறேன். இன்னொரு முறை சொல்லுங்க. கேட்கிறேன். விவாகரத்து... அதைப்போல குழப்பமான ஒரு கேஸ்தான் இது. ஆனா, அவர் என்னைவிட்டு போகல. விட்டுட்டுப் போனா, பிறகு எதற்கு ஒவ்வொரு வாரமும் அந்த ஆளு ஒரு ஆளை என்கிட்ட தூது அனுப்பிக்கிட்டு இருக்கணும்?”

“அப்படின்னா நீங்க அவரை வேண்டாம்னு ஒதுக்கி இருப்பீங்க.”

“நான் அவரை வேணும்னும் சொல்லல. வேண்டாம்னும் சொல்லல. எதை எழுதணும்னு தோணுதோ எழுதிக்கோங்க. உங்களுக்குத்தானே அதெல்லாம் தெரியும்?”

“எனக்கு உங்க கணவனைப் பற்றி சரியா தெரிஞ்சிக்க முடியல. நீங்க சொல்றபடி எழுதுறேன். கணவன் இருக்காருன்னு.”

“அதுதான் நல்லது.”

“நல்லது, கெட்டது எழுதுற புத்தகமில்ல இது. உண்மையை எழுதணும்...”

“நான் சொன்னதுதான் உண்மை” என்று சொன்ன அவள் தன் கூந்தலை பின் பக்கம் முடிச்சுப் போட்டாள். தேவையில்லாமல் அவள் கூந்தல் முடிவதை அந்த மனிதன் பார்த்துக் கொண்டிருந்தான்.

“பிரசவம் ஆயிடுச்சா?”

“ஆணுக்கும் பிரசவம் ஆகல. பெண்ணுக்கும் பிரசவம் ஆகல...”

“சிதைவு உண்டாகியிருக்கா?”

“உண்டாகாம எப்படி? அவர் போயி ஆறு மாசம் ஆகுறதுக்குள்ளே சிதைவு உண்டாக ஆரம்பிச்சது. ஒருநாள் இல்லைன்னா இன்னொரு நாள் சிதைவு இல்லாம இருக்குறது இல்ல...”

“தினந்தோறும் சிதைவா?”

“அதனாலதான் நான் இங்கேயே இருக்கேன்.”

“என்ன சொல்றீங்க? கர்ப்பச் சிதைவுன்னா கர்ப்பம் கலைஞ்சு போறதுன்னு அர்த்தம். அதைத்தான் நான் கேக்குறேன்.”

“என்ன கேடு கெட்ட கேள்விகளையெல்லாம் கேக்குறீங்க? என் தம்பி இங்கே இல்லாம இருந்தது நல்லதாப் போச்சு!”

அதற்கு அந்த மனிதன் சற்று கோபித்துக் கொண்டான். “தம்பி இருந்தா மட்டும் என்ன! இது அரசாங்கம் சம்பந்தப்பட்ட விஷயம். தம்பி வீட்டுல இல்லாம போயி பெரிய மாமா இங்கே இருந்தாக்கூட கேட்க வேண்டியதை நாங்க கேட்கத்தான் செய்வோம். உண்மையை எங்கக்கிட்ட  சொல்லித்தான் ஆகணும். அப்படி உண்மையைச் சொல்லலைன்னா அது தப்பான காரியம். சொல்ற விஷயங்களை நாங்க ரகசியமா மனசுக்குள்ளே வச்சுக்குவோம்.”

“ரொம்பவும் உஷ்ணமா இருந்தா, இதை வச்சு வீசிக்கங்க” என்று சொல்லியவாறு நளினி ஒரு விசிறியை எடுத்து அந்த பெஞ்சின் ஒரு முனையில் வைத்தாள். “என் தம்பி கேக்குற மாதிரி இந்த மாதிரியான கேள்விகளைக் கேட்டால், எனக்கு வெட்கமா இருக்கும்னு சொல்ல வந்தேன்.”

“சரி... சொல்லுங்க.”

“இல்ல...”

“என்ன இல்ல? சொல்ல மாட்டேன்றீங்களா?”

“அதைச் சொல்லல. முன்னாடி கேட்டீங்கள்ல, சிதைவு உண்டாகியிருக்கான்னு. அதுக்கு பதில் சொல்றேன். இல்ல...”

“உங்களுக்கு ஒவ்வொரு மாசமும் எவ்வளவு வருமானம் வருது?”

“தம்பிக்கு மூணு ரூபா சம்பளம்.”

“தம்பி சம்பளத்தை கேட்கல. உங்க வருமானம்?”

“நான் வேலைக்கொண்ணும் போகலியே!”

“அப்போ வருமானம்னு எதுவும் இல்ல. இன்னொருத்தரைச் சார்ந்து இருக்குற ஆள்...”

“நானா? அப்படி யார் சொன்னது? அந்த படகுத் துறையில் இருக்குற  காத்த சொல்லியிருப்பா. அவளைப் பற்றி எனக்கும் சொல்றதுக்கு எவ்வளவோ இருக்கு.”

அவன் அவள் சொன்னதை ரசித்தவாறு சிரித்தான்.

“காத்தயா? என்ன சொல்றீங்க! நான் சொன்னதை நீங்க சரியா காதுல வாங்கல. ஒரு ஆளுக்கு சரியா வருமானம் இல்லைன்னா இன்னொரு ஆளோட வருமானத்துலதான் வாழ்க்கையை நடத்தணும். உங்களுக்கு வருமானம் இல்ல. சாப்பிடுறதுக்கும் ஆடைகளுக்கும் மற்ற விஷயங்களுக்கும் கட்டாயம் பணம் வேணும். அதைத் தர்ற ஆளை, அது பெற்ற தாயா இருக்கலாம். இல்லாட்டி தம்பியா இருக்கலாம். அவங்களை நம்பித்தான் நீங்க வாழ்றீங்க. நான் சொல்றது சரியா?”


“கச்சேரியில கேள்வி கேக்குற மாதிரி இருக்கு இது.”

“கச்சேரியில உங்கக்கிட்ட கேள்வி கேட்டிருக்காங்களா?”

“எல்லாம் அந்த துரோகியால வந்தது...”

“யாரு? உங்க கணவனைச் சொல்றீங்களா?”

“அவனா கணவன்? கணவன்னு ஒருத்தன் இல்லைன்னே எழுதுங்க. அப்படி எழுதுறதுக்கு நான் வேணும்னா ஏதாவது தர்றேன். தங்கமே...”

“அது இருக்கட்டும். உங்களுக்கு வருமானம்னு எதுவும் இல்லியா?”

“வருமானமெல்லாம் இருக்கு. நான் யாரையும் நம்பி இல்ல. மாசம் பதினஞ்சு ரூபா வரை வருமானம் வருது.”

“சரி... தொழில் என்ன?”

“இந்த அரசாங்கம் எதையெல்லாம் தெரிஞ்சிக்க விரும்புது? தொழில் ஒண்ணு இல்ல... நிறைய தொழில்...”

“அதையெல்லாம் என்னன்னு விளக்கமா சொல்லுங்க... எழுதுறதுக்கு தாள்ல இடம் நிறைய இருக்கு.”

“நான்தான் இந்த வீட்டுல கஞ்சி காய்ச்சுறேன். இந்தத் திண்ணையை மெழுகியது நான்தான்...”

“மெழுகியது நல்லா இருக்கு. கண்ணாடிபோல மின்னுதே!”

“என் கன்னம் கண்ணாடிபோல பளபளப்பா இருக்குன்னு என் ஆளு ஹா... என் யாருமில்ல. அந்த ஆளு சொல்வாரு. அப்போ இந்தத் திண்ணை என் கன்னத்தைப்போலன்னு சொல்லுங்க...” அவள் ஏதோ தமாஷ் சொன்ன மாதிரி சிரித்தாள்.

அவனும் சிரித்தான்.

பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒரு சிறு பெண் வாசலுக்கு வந்து கணக்கெடுப்பு அதிகாரியையே பார்த்தவாறு நின்றிருந்தாள்.

“இந்தப் பொண்ணுக்கு வயசு பத்துதான் ஆகுது. பார்வையைப் பார்த்தீங்களா? ரெண்டு வருடங்கள் கழிஞ்சா, இந்த வழியில் ஆம்பளைங்க நடக்க முடியாது.”

அதைக் கேட்டு அந்தச் சிறு பெண்ணுக்கு கோபம் வந்துவிட்டது. “நான் பார்த்ததுனால உனக்கு பெரிய நஷ்டம் வந்திருச்சாக்கும்... எதுக்கு வீண் வம்பு? நான் போறேன்...” என்று சொல்லியவாறு அவள் வந்த வழியே திருப்பிச் சென்றாள். போகும்போது அவள் என்னவோ முணுமுணுத்துக் கொண்டே போனாள்.

நளினி சொன்னாள்: “அவளுக்கு எப்படி கோபம் வருது பார்த்தீங்களா? யார் தலையையாவது பார்த்துவிட்டால் போதும். எங்கேயிருந்துதான் வருவான்னு தெரியாது- வாசல்ல வந்து நிப்பா பொண்ணு...”

மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிக்கு அங்கு உட்கார்ந்திருக் கவே பயமாகிவிட்டது.

“பிறகு... தொழில் என்னன்னு சொல்லல.”

“அதுதான் சொன்னேனே, ஒரு வீட்டுல என்ன வேலையெல்லாம் இருக்கோ அது எல்லாத்தையும் நான்தான் செய்யிறேன்!”

“இது வருமானம் வர்ற தொழில் இல்லையே?”

“வருமானம் வர்ற தொழில் இல்லைன்னா நீங்க ஏதாவது தருவீங்களா?”

“தருவீங்களான்னு கேட்டா...” அவனுக்கு அதற்குமேல் பேச்சைத் தொடர்வதற்கு தயக்கமாக இருந்தது.

“கேட்டா தருவீங்க. அப்படித்தானே?”

அவன் சுற்றிலும் பார்த்தான்.

அவள் சொன்னாள்: “வீட்டுக்கு யாராவது வந்தா மரியாதையா நடக்கணுமா இல்லியா?”

அவன் அடுத்த நிமிடம் சொன்னான். “நான் மரியாதைக் குறைவா ஏதாவது சொல்லிட்டேனா என்ன?”

“சொல்லல. நான் உங்களை மரியாதையா நடத்தல. வெற்றிலை, பாக்கு போடுவீங்கன்னு தோணுது...” என்று சொல்லியவாறு அவள் அறைக்குள் சென்றாள். ஏதோ தேடி எடுக்கும் சத்தம் அவனுக்குக் கேட்டது.

சிறிது நேரம் கழித்து அவள் வெற்றிலையுடன் திரும்பி வந்தாள். அவன் வெற்றிலை போடத் தொடங்கினான். அவள் மீண்டும் அறைக்குள் சென்றாள். மூன்று மர பொம்மைகளைக் கொண்டு வந்தாள். பிறகு அவள் சொன்னாள்:

“என் தொழில் இதுதான். ஒரு பொம்மை செய்ய  எனக்கு ஒருநாள் போதும்.”

அவன் பொம்மைகளை வாங்கிப் பார்த்தான். ஒரு சாண் உயரத்தில் உருவாக்கப்பட்ட பெண் உருவங்கள். எல்லாம் மிகவும் சிறப்பாக இருந்தன. பிரகாசமான வண்ணங்கள் கொண்டு செய்யப்பட்டிருந்தன அந்த பொம்மைகள். பளபளப்புடன் அவை இருந்தன. ஒவ்வொரு உறுப்பும் மிகவும் அழகாக அமைந்திருந்தன. பெரிய மார்புகள், தடித்த பின்பகுதி, அளவான வயிற்றுப் பகுதி, அடர்த்தியான கூந்தல் பகுதி, கவர்ச்சியான சிரிப்பு- மொத்தத்தில் பெண்மைத்தனம் குடி கொண்டிருக்கும் அழகான சிலைகள். அவன் கண்களை இமைக்காமல் அந்த பொம்மைகளையே பார்த்துக் கொண்டிருந்தான். பிறகு அவளைப் பார்த்தான்.

“நாலும் ஒரே மாதிரி இருக்கே! ஆச்சரியம்தான்...”

“மூணு பொம்மைகளைப் பார்த்துட்டு அதை நாலுன்னு சொல்றதுதான் ஆச்சரியம்.” அவள் சொன்னாள். அதற்கு அவன் பதிலெதுவும் சொல்லவில்லை.

“இது அச்சுல வார்த்ததா?”

“நாங்க வார்ப்பு வேலை செய்றவங்க இல்ல...”

“கடைஞ்சு எடுத்து செஞ்சிருப்பீங்கன்னு நினைக்கிறேன். பாற்கடலைக் கடைஞ்சப்போ கிடைச்ச லட்சுமியைப்போல இருக்கு!”

“எனக்கு பாற்கடலைக் கடையத் தெரியாது. அதனால லட்சுமியை நான் பார்க்கல. என் தொழில் என்னன்னு உங்களுக்கு நான் காட்டினேன். நாலுன்னு எப்படி சொன்னீங்க?”

“இந்த உயிரில்லாத மூணும், இவற்றை உருவாக்கிய உயிருள்ள ஒண்ணும்- அப்ப நாலு வருதுல்ல! எல்லாம் ஒரே மாதிரி இருக்குறதுதான் அதிசயம்!”

“அப்படின்னா உயிரில்லாததைப்போல உயிருள்ளதும் இருக்குன்னு சொல்ல வர்றீங்களா? அதுல ஆச்சரியப்படுறதுக்கு எதுவுமே இல்ல. எல்லாம் என் தலையெழுத்து...”

அவளின் கண்கள் பனித்தன. மீண்டும் அறைக்குள் சென்று அவள்  திரும்பி வந்தபோது அவளுடைய முகம் சற்று துடைத்தெடுத்ததைப் போல் இருந்தது. அவள் கையில் ஒரு பொம்மை இருந்தது. அதை அவள் அவனுக்குப் பக்கத்தில் வைத்தாள். அவன் அதை எடுத்துப் பார்த்தான்.

“கம்ஸ வதம் செய்யிற கிருஷ்ணனா இது? இல்லாட்டி முந்தியரப்பனுக்கு கிருஷ்ணன் வேடம் கட்டியிருக்கா? இது கொஞ்சம் பெருசா இருந்தா வெள்ளரி வேலிக்குள்ளே கொண்டு போய் வைக்கலாம்- கண் திருஷ்டி படாம இருக்குறதுக்கு. இல்லாட்டி ரொம்பவும் சின்னதா இருந்திருந்தா...”

அவள் இடையில் புகுந்து சொன்னாள்: “இந்த பொம்மை இப்படி ஆயிருச்சு. ஐம்பது பொம்மைகள் வரை செஞ்சதுல இந்த பொம்மை இப்படி வந்திருச்சு. கிருஷ்ணன் உருவம் உண்டாக்கி பார்த்தவங்க எல்லாம் வாங்கிட்டுப் போனாங்க. மூணோ நாலோ அணாக்கள் அதுக்கு விலையா கிடைக்கும். படிப்படியா அணிகலன்கள் ஸ்ரீ கிருஷ்ணனைப்போலவும் வடிவம் இன்னொரு கிருஷ்ணனைப்போலவும் வர ஆரம்பிச்சுடுச்சு. இன்னொரு கிருஷ்ணன்னா ஒரு காலத்துல நான் கிருஷ்ணனைப்போல மனசுல நினைச்சிருந்த அந்த ஆளைச் சொல்றேன். அந்த ஆளைப் பற்றி நினைக்கிறப்போ எனக்கு பயங்கர கோபம் வரும். பொம்மையை செஞ்சு முடிக்கிறப்போ அது அந்த ஆளைப்போலவே இருக்கும். என் கோபம் முழுவதும் பொம்மையோட முகத்துல பிரதிபலிக்கும். கடைசியில் என்ன நடந்ததுன்னா, ஆளுங்க இந்த பொம்மையை வாங்குறதே இல்ல. அதுக்குப் பிறகுதான் கிருஷ்ணன் பொம்மை செய்யிறதையே நிறுத்திட்டேன். ஆண் உருவத்தை உருவாக்குறதே இல்லைன்ற முடிவுக்கு வந்தேன்.


ஸ்ரீ பார்வதியோட உருவத்தை உண்டாக்கிப் பார்த்தேன். அதாவது- ஒரு பெண் உருவத்தைப் படைச்சேன். அதுக்கு ஸ்ரீ பார்வதின்னு பேர் வச்சேன். நான் பார்வதியைப் பார்த்திருக்கிறேனா என்ன? பார்வதி தவம் செய்வாங்கன்னும் சிவன்கூட சேர்ந்து நடனம் ஆடுவாங்கன்னும் நான் கேள்விப்பட்டிருக்கேன். சினிமாவுலயும் அதைப் பார்த்திருக்கேன். பிறகு பார்வதி பரமேஸ்வரன்கூட சில நேரங்கள்ல சண்டை போடுவாங்கன்னும் கேள்விப்பட்டிருக்கேன். அதையெல்லாம் மனசுல வச்சுக்கிட்டு நான் பொம்மையை உருவாக்கினேன். சில நேரங்கள்ல கண்ணாடியைப் பார்த்து பார்வதியைப்போல நான் ஒவ்வொரு விதத்துல முக பாவனையைக் காட்டி, அதைப்போல பொம்மையைச் செய்வேன். என்னை பார்வதியா நினைச்சுக்கிட்டு நான் பொம்மையைப் படைப்பேன். அதுனால பாருங்க... எல்லா பார்வதியும் ஒரே மாதிரி இருக்கும்...”

அவள் தொடர்ந்து கூறுவதற்கு முன்பு அவன் சொன்னான்: “நீங்களும் பார்வதியும் ஒரே மாதிரி இருக்கீங்க.”

“நானும் பார்வதியும் எப்படி ஒரே மாதிரி இருக்க முடியும்? பார்வதிக்கு என் வடிவத்தை  நான் படைச்சிட்டேன். எனக்கே அது ஒரு மாதிரியா இருந்துச்சு. என் உருவத்தையே பொம்மையா செஞ்சு விலைக்கு  விக்கிறதுன்னா...”

அவன் வேகமாகச் சொன்னான்: “நிறைய ஆளுங்க வாங்கியிருப் பாங்களே!”

“நிறைய பேர் வாங்கினாங்கன்றது உண்மைதான். அப்படி அந்த பொம்மைகளை நிறைய பேர் வாங்க வாங்க படகுத் துறையில இருக்குற காத்த என்னை ஒரு மாதிரி பேச ஆரம்பிச்சிட்டா. “பொம்மை அழகா இருக்கலாம். இவ ஏன் பொம்மை விக்கிறா தெரியுமா? தன் உருவத்தை பொம்மையா செஞ்சு ஆம்பளைகளைக் கவர்றதுக்குத்தான்”னு என் முகத்துக்கு நேராவே அவ சொல்ல ஆரம்பிச்சா. அவ்வளவுதான் நான் ஒரு பேயாட்டம் ஆடினேன். அதுல அவ கதிகலங்கிப் போயிட்டா. பிறகு யோசிச்சுப் பார்த்தேன். நான் இல்லாத நேரத்துல என்னைப் பற்றி அவ ஏதாவது சொல்ல மாட்டான்னு என்ன நிச்சயம்? அதே நேரத்துல இன்னொன்னையும் நான் யோசிச்சேன். இதே காரியத்தை வேற யாராவது ஒருத்தி செஞ்சிருந்தா நான் சும்மாவா இருப்பேன்? நான்கூட அப்படி சொல்லத்தான் செய்வேன்!”

“நீங்க சொல்றது சரியா இருக்கலாம். இருந்தாலும் அவங்கவங்களோட உருவத்தை இந்த அளவுக்கு கனகச்சிதமா உருவாக்குறதுன்னா சாதாரண விஷயமா?”

அதற்கு அவள் சொன்னாள். “நீங்க வேணும்னே என்னை அளவுக்கு அதிகமா புகழ்றீங்க. ஒரு பொம்மையை உருவாக்கிட்டா, பிறகு அதைப் பார்த்து எத்தனை பொம்மைகள் வேணும்னாலும் உருவாக்கலாம். கண்ணாடியில பார்த்து கண்டதைப்போல முதல்ல ஒண்ணு உண்டாக்கணும். அது ஒரு பெரிய பிரச்சினையில்ல.”

“நீங்க சொல்றது சரிதான்.”

“நான் என்ன சொன்னாலும் சரியாகத்தான் இருக்கும்னு இந்த பக்கத்து வீட்டுக்காரங்க எல்லாரும் சொல்லிக்கிட்டு இருப்பாங்க. அதுனாலயே அவங்களைப் பார்த்து நான் பயந்தேன்!”

“இப்போ என்னைப் பார்த்து பயமொண்ணுமில்லியே?”

“இப்போ யாரைப் பார்த்தும் எனக்கு பயம் கிடையாது. என்னைத் தவிர, வேற யாரும் இருக்குறதாகவே நான் நினைக்கிறது இல்ல.”

“கலைகள்ல ஈடுபடுறவங்கள்ல பெரும்பாலானவங்க அப்படித்தான் இருப்பாங்க.”

அவள் அறைக்குள் போய் திரும்பி வருவதற்கிடையில், “அதுக்குப் பேர்தான் ஆணவம்” என்று அவன் மெதுவான குரலில் சொன்னான்.

அவள் மேலும் நான்கு உருவங்களைக் கொண்டு வந்து அவனுக்கு முன்னால் வைத்தாள். கருணை, கோபம், வியப்பு, காதல்- இந்த உணர்வுகளின் உச்ச நிலையைக் காட்டும் அவளின் உருவங்கள்தான்.

“இந்த பொம்மைகள் ரொம்பவும் சிறப்பா இருக்குன்னு சொன்னா, நான் அளவுக்கதிகமா புகழ்றேன்னு என்னைப் பார்த்து நீங்க சொல்வீங்களா?”

“அப்படி நான் சொல்லாம இருக்கேன். இந்த பொம்மைங்க ரொம்பவும் சிறப்பா இருக்குன்னு எதை வச்சு சொல்றீங்க? இந்த பொம்மைகளை நான் இப்போ விக்கிறது இல்ல. பகல்ல தூங்காம இருக்குறதுக்காக செய்யிற வேலை இது. என்னைக்காவது ஒருநாள் இந்த பொம்மைகள் தேவைப்படும். என்னைப் பார்க்காதவங்க கையில இந்த பொம்மைகள் போய் சேர்றப்போ, இது தேவிடியா தனக்கு செஞ்சிக்கிற விளம்பரம்னு அவங்க சொல்ல மாட்டாங்கன்னு எனக்குத் தெரியும்.”

“ஒரு தொழில் தெரியும். நல்லாவே தெரியும். அதுல வருமானம் கிடைக்க வழியில்லைன்றது மிகவும் கஷ்டமான ஒரு விஷயம்தான். நீங்க ஏன் மத்தவங்க உங்களைப் பத்தி அப்படிச் சொல்றாங்க, இப்படிச் சொல்றாங்கன்றன்னு கவலைப்படுறீங்க! ஆளுங்க உங்களைப் பத்தி எது வேணும்னாலும் சொல்லிட்டுப் போகட்டும். இந்த பொம்மைக்கு ஒரு ரூபாவை எந்தக் குருடன் வேணும்னாலும் கொடுப்பான். உங்க வாழ்க்கையும் பிரச்சினை இல்லாம நடக்கும். தொழில்- பொம்மைகள் செய்வதுன்னு நான் எழுதப் போறேன்.”

அவன் எழுதினான். தொடர்ந்து மேலும் என்னென்னவோ எழுதினான். அவளுடைய தம்பியைப் பற்றிய விவரங்களைக் கேட்டு எழுதினான். இதற்கிடையில் அவள் ஒரு பொம்மையைத் தவிர, மீதி எல்லா பொம்மைகளையும் வீட்டுக்குள் கொண்டு சென்றாள். அந்த ஒரு பொம்மையை அவள் தன் கையில் வைத்திருந்தாள்.

அவன் மேலும் ஒருமுறை வெற்றிலை போட்டான்: “பொம்மை விக்கிறதே இல்லைன்னா சொன்னீங்க?”

“நான் இதைத் தின்றது இல்ல. அடுப்புலயும் போடுறது இல்ல.”

“நிறைய பொம்மைகள் உங்க கையில இருக்கா?”

“மக்கள் தொகையில சேர்ந்ததா இந்தக் கேள்வி?”

“சரி... கணவனைப் பற்றி...”

அவள் சொன்னாள்: “அதைத்தான் நான் ஏற்கெனவே சொல்லிட்டேனே! வழியில பார்க்குறவங்க எல்லார்கிட்டயும் கணவனைப் பற்றி இதுக்குமேல சொல்லிக்கிட்டு இருக்க முடியுமா? அந்த ஆளு ஒரு மிருகம். கள்ளு குடிப்பாரு. பிறகு... ஒரு வெறி பிடிச்ச நாயைப்போல நடப்பாரு. வழியில யாரைப் பார்த்தாலும் தேவையில்லாம அவங்கக்கிட்ட போய் வம்புச்சண்டை இழுப்பாரு. நல்லா உதை வாங்குவாரு. கள்ளு போதை இறங்குறது வரை இந்த நிலைமைதான். அதாவது- காலையில பொழுது விடியிறதுவரை அந்த ஆளு இருக்குறது போலீஸ் ஸ்டேஷன்ல தான். ஒருநாளு ராத்திரி நேரத்துல ஒரு போலீஸ்காரனை இங்கே ஸ்டேஷன்ல இருந்து அனுப்பியிருந்தாங்க. நான் வந்து அந்த ஆளை ஜாமீன்ல எடுக்கணும்னு. பொழுது விடிஞ்ச பிறகு பார்த்துக்கலாம்னு சொன்னேன் நான். வீட்டுல ஆம்பளை இல்லாத நேரத்துல யாராவது உள்ளே புகுந்து வம்பு பண்ணினா என்ன செய்வேன்னு அந்த ஆளு கேட்டான். அதுக்கு நான் சொன்னேன்: “அப்படி யாராவது வந்தா, தலையணைக்குக் கீழே உளியை மறைச்சு வச்சிருக்கேன்”னு. அவ்வளவுதான்- அந்த போலீஸ்காரன் போயிட்டான். ரெண்டு மணி நேரம் கழிச்சு என் கணவன் ஆடிக்கிட்டே வீட்டுக்குள்ளே வந்தாரு. நான் எதுவும் கேட்கவோ, பேசவோ இல்ல.


பொழுது விடிஞ்சப்போ நான் வீட்டை விட்டுப் போறதா சொன்னேன். “ஏன் பெண்ணே போறே?”ன்னு அந்த ஆள் கேட்டாரு. “இங்கே இனிமேல் இருந்தா நான் யாரையாவது உளியை வச்சு கொன்னுடுவேன். அதனால நான் போயிடுறதுதான் நல்லது”ன்னு நான் சொன்னேன். “அப்ப என் கை பூப்பறிக்கப் போயிருக் காது”ன்னு அந்த மிருகம் சொல்லிச்சு. அந்த மிருகத்தோட வாழ முடியாதுன்னு சொல்லிவிட்டு நான் ரோட்டுக்கு வந்து பஸ் ஏறி இங்கே வந்துட்டேன். அதுக்குப் பிறகும் இருக்கு எத்தனையோ கசப்பான கதைகள்...”

அவள் சொல்லியதை நிறுத்தியதும், அந்த மனிதன் எழுந்தான்.

“இதை வேணும்னா வச்சுக்கோங்க” என்று சொல்லியவாறு அவள் தன் கையிலிருந்த பொம்மையை அவனிடம் நீட்டினாள்.

அவன் மகிழ்ச்சியுடன் அந்த பொம்மையை வாங்கிப் பார்த்தான். கோபம் பொங்க பொம்மை வடிவத்தில் அவள் இருந்தாள். அதைப் பார்த்ததும் அவன் முகத்தில் இருந்த பிரகாசம் சற்று குறைந்தது. எனினும், நன்றி கூறிவிட்டு அவன் ஒரு துண்டுத் தாளை அங்கே வைத்துவிட்டு சொன்னான். “இதைப் பாருங்க.”

அவள் பார்த்தாள். அவளின் உருவத்தை அவன் படமாக அந்தத் தாளில் வரைந்திருந்தான். அவள் அதையே பார்த்தாள்.

“நாம பேசிக்கிட்டே இருந்த நேரத்துல இதை வரைஞ்சது ஆச்சரிய மான ஒரு விஷயம்தான். அந்த பொம்மையை கொஞ்சம் இங்கே தாங்க” என்று சொன்ன அவள் உள்ளே போய் பார்வதி தவம் செய்யும் சற்று பெரிதாக இருக்கும் ஒரு பொம்மையைக் கொண்டு வந்து அந்த ஓவியனுக்குப் பரிசாகத் தந்தாள். அவன் அதை மகிழ்ச்சியும் நன்றியும் குடிகொள்ள அவளிடமிருந்து வாங்கினான்.

“சரி... புறப்படுங்க...” என்று சொல்லியவாறு அவள் வாசலுக்கு வந்தாள். அவன் அடுத்த வீட்டை நோக்கி நடந்தான். அவனுடைய இதயத்தில்  வீணையின் கம்பியை மீட்டும் போது உண்டாகக் கூடிய இசை எதிரொலித்துக் கொண்டிருந்தது.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.