Logo

உயிரின் வழி

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 6750
uyirin vali

ரு மாலை நேரத்தில்தான் முருங்கை மரம் சாய்ந்து கீழே விழுந்தது. அப்போது காற்றோ மழையோ எதுவும் இல்லை. நான் தைலத்தைத் தேய்த்தவாறு குளியலறையில் நின்றுகொண்டிருந்தேன். அப்போதுதான் "டே'' என்ற அந்த சத்தம் கேட்டது. முதலில் அந்த ஒரு சத்தம் மட்டும்தான் கேட்டது. பிறகு மழைக்காலத்தின் ஆரம்பத்தில் லேசாக இடி இடிப்பதைப்போல இரண்டு மூன்று முறை "டே, டே'' என்று கேட்டது. முதலில் எனக்கு எதுவும் புரியவில்லை. ஆனால், பிறகு சிரமப்பட்டு வெளியே வந்து பார்த்தபோதுதான் எனக்கே தெரிந்தது- என் முருங்கை மரம் சாய்ந்து கீழே விழுந்திருக்கிறது!

முற்றத்தில், வராந்தாவோடு சேர்ந்து வளர்ந்திருந்தது அந்த முருங்கை மரம். வயதுக்கு மீறிய வளர்ச்சி அதற்கு இருந்தது. அதனால்தான் ஆறடி உயரத்திலிருந்து அது கீழே சாய்ந்துவிட்டது. சாய்ந்த பகுதி கீழே விழாமல் கான்க்ரீட்டாலான மேற்கூரையின்மீது விழுந்திருந்தது.

முருங்கை மரம் முழுமையாக இரண்டு துண்டுகளாக ஆகவில்லை. மேற்கூரை தாங்கிக் கொண்டதால் மரத்தின் ஒரு சிறு பகுதி முறியாமல் அப்படியே இருந்தது. இருந்தாலும் ஒரு சிறு காற்று வீசினால் மேலே இருக்கும் பகுதி கீழே இருக்கும் அடி மரத்தை விட்டு முறிந்து கீழே விழப் போவது உறுதி என்று என்னுடைய மனம் கூறியது.

மரத்தின் முறிந்த பாகம் அப்படியே அசையாமல் கிடந்தது.

முதலில் அதைப் பார்த்து எனக்கு ஆச்சரியம்தான் உண்டானது. அந்த மரம் எப்படி முறிந்து விழுந்தது? அதுவும் காற்றோ மழையோ எதுவும் இல்லாமல்... எவ்வளவு பெரிய மரம் அது!

முருங்கை மரம் முறிந்த இடத்திலிருந்து நீர் வடிந்து கொண்டிருந்தது. நான் அந்த இடத்தில் கையை வைத்து, மனதில் வருத்தம் தோன்ற நின்றிருந்தேன்.

"முருங்கை மரம் சாதாரணமாகவே ஒடியக் கூடியதுதான். வீட்டுக்குப் பக்கத்துல அதை நடக்கூடாது'' என்று மனைவி முதலிலேயே என்னிடம் சொல்லியிருந்தாள். இருந்தாலும் அவள் சொன்னதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று, என்னுடைய இந்த பாறை போன்ற இறுகிப்போன நிலத்தில் முருங்கையை நடுவதற்கு ஏற்ற மண்ணுள்ள வேறு ஒரு இடம் இல்லை. பல இடங்களிலும் கொத்திப் பார்த்த பிறகுதான் வராந்தாவை ஒட்டியிருக்கும் அந்த இடத்தில் கொஞ்சம் மண் இருப்பதைப் பார்த்தேன். அதனால் அந்த இடத்தில் நான் முருங்கையை நட்டேன். பிறகு என்ன காரணத்தாலோ என்னுடைய முருங்கை எந்த நேரத்திலும் விழவே விழாது என்ற திடமான நம்பிக்கை எனக்கு இருந்தது.

அதுதான் இப்போது...

மனைவி என்னைத் தேடி வந்தபோது நான் ஒரு முட்டாளைப்போல அந்த இடத்திலேயே நின்றிருந்தேன். மனைவி என்னவோ சொன்னாள். அது எதுவுமே என் காதில் தெளிவாக விழவில்லை. அவளின் எல்லா கேள்விகளுக்கும் பதிலாக நான் சொன்னது இதுதான்.

"முருங்கை மரம் முறிஞ்சிடுச்சு...''

அப்போது மனைவி சொன்னாள்:

"அது எனக்கும் தெரியும். ஆனா, நான் தெரிஞ்சுக்க வேண்டியது நீங்க இங்கே என்ன பண்ணுறீங்கன்றதைப் பற்றித்தான்.''

அதற்கு நான் பதில் எதுவும் சொல்லவில்லை.

அப்போது மனைவி கடுகடுப்பான குரலில் சொன்னாள்: "இன்னைக்கு குளிக்கிறதா இல்லியா? இப்போ தண்ணியோட சூடு குறைஞ்சு போயிருக்கும். தைலம் தேய்ச்சு எவ்வளவு நேரமாச்சு?''

நான் மீண்டும் முருங்கை மரம் யாருமே எதிர்பார்க்காமல் முறிந்து விழுந்ததைப் பற்றி பேசத் தொடங்கியதை மனைவி கேட்கத் தயாராக இல்லை.

"வேண்டாம்... வேண்டாம்... அதைப் பற்றி பிறகு பேசலாம். போயி குளிச்சிட்டு வாங்க. இப்போ ஒரு கையிலதான் பிரச்சினை இருக்கு. இப்படியே இருந்தா ரெண்டு கைகளுக்கும் பிரச்சினை வந்திடும். அது தேவைதானா?''

நான் அதற்கு பதில் எதுவும் கூறவில்லை. முறிந்து விழுந்த இந்த மரத்தின்மீது பெரிய அளவிற்கு ஈடுபாடு முதலிலிருந்தே என் மனைவிக்கு இல்லையே!

குளியலறைக்குள் நுழைந்து பாதிக்கப்பட்ட வலது கையின் தோளில் நீரை எடுத்து ஊற்றிக் கொண்டிருந்தேன். மனைவி சொன்னதைப்போல நீரின் வெப்பம் குறைந்துதான் போயிருந்தது. இருந்தாலும் நான் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மீண்டும் மீண்டும் தொட்டியிலிருந்து நீரை எடுத்து தோள்மீது ஊற்றிக் கொண்டேயிருந்தேன். நான் எப்போதும் தனியாகத்தான் இந்த காரியத்தைச் செய்வேன். வலது கையின் தோள் முதல் முட்டி வரை கையால் அழுத்தித் தடவி விட்டு, வெந்நீரை மெதுவாக ஊற்றி... இதுதான் நான் ஒவ்வொரு நாளும் செய்வது. ஆனால், இன்று எல்லாமே சற்று தாளம் மாறிவிட்டது. மனைவி வாசலில் வந்து நின்று, "இன்னைக்கு குளிச்சு முடிச்சிருவீங்கள்ல?'' என்று கேட்ட பிறகுகூட நான் சூடே முற்றிலும் இல்லாமல் போயிருந்த நீரை ஒரு சடங்கைப்போல தோள்மீது ஊற்றிக் கொண்டேயிருந்தேன்.

கஞ்சி குடித்துவிட்டு நான் எப்போதும் படுப்பதைவிட சற்று முன்னதாகவே படுக்கச் சென்றேன். ஆனால், சீக்கிரம் படுத்துவிட்டேனே தவிர, என்னால் உறங்கவே முடியவில்லை. மனம் என்னவோபோல் இருந்தது. மனைவி இன்று அதைப் பற்றி அதிகமாக எதுவும் பேசவில்லையே! வழக்கமான குரலில் "இனி இதோட காய்களை பையில வச்சி ஊர் முழுக்க அலைஞ்சு ஆளுங்களுக்கு பரிசா தரவேண்டிய அவசியம் இல்லியே!'' என்றாவது அவள் கூறுவாள் என்று நான் நினைத்தேன். ஆனால், அவள் அப்படி எதுவும் சொல்லவில்லை. மொத்தத்தில் அவள் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள். அந்த அமைதிதான் என்னை மிகவும் கவலைக்குள்ளாக்கியது.

இரவில் எப்போதோ மனைவியின் விரல்கள் என்னைத் தொட்டன.

"தூங்கல... அப்படித்தானே?''

சிறிது நேரம் எதுவும் பேசாமல் இருந்துவிட்டு நான் கேட்டேன்.

"உனக்கு சந்தோஷம்தானே.''

மனைவி கேட்டாள்:

"எதுக்கு?''

நான் சொன்னேன்:

"நீ எப்பவும் விரும்பாத அந்த மரம் முறிஞ்சி விழுந்திருச்சுல்ல?''

மனைவி அப்போது என்னவோ மனதில் நினைத்துக் கொண்டு சொன்னாள்.

"அப்படிச் சொல்றது சரியில்ல. எனக்குப் பிடிக்கலைன்னா, அதுக்கு நான் தண்ணி ஊற்றியிருப்பேனா? நான் அதுக்கு உரம் போட்டிருப்பேனா? நான்தானே இதையெல்லாம் செஞ்சேன்? முதல்ல அதுல இருந்து இலையைப் பறிக்க முயற்சி பண்ணினப்போ, அதைத் தடுத்தது நான்தானே? இது சின்ன பிள்ளை... இன்னும் கொஞ்சம் வளரட்டும்... அதுக்குப் பிறகு இதுல இருந்து இலையைப் பறிச்சு கூட்டு வைக்கலாம்னு சொல்லித்தானே உங்களை நான் தடுத்தேன்?''

நான் எதுவும் பேசாமல் படுத்திருந்ததைப் பார்த்துவிட்டு மனைவி கேட்டாள்:

"நான் சொன்னது ஞாபகத்துல இல்லியா?''

ஞாபகத்தில் இருந்தது.

மனைவி மீண்டும் சொன்னாள்:


"பிறகு... எதிர்ப்பு... வேற பல விஷயங்களையும் நான் எதிர்த்திருக்கேன்...” நான் என்னைக்கும் அதை மறைச்சு வச்சது இல்ல. உங்க குடும்ப நிலத்தை பாகம் பிரிக்கிறப்போ, இந்தப் பாறை நிலத்தை உங்க பங்கா நீங்க வாங்கக் கூடாதுன்னு நான் சொன்னேன். ஒரு முருங்கையை நடுறதுக்கான மண்ணுகூட இங்கே இல்லியே! ஆனா, நான் சொன்ன கருத்தை நீங்க ஒரு பொருட்டாகவே நினைக்கல. "நான் இந்த பாகத்தை எடுத்துக்கலைன்னா பிறகு வேற யார் இதை எடுப்பாங்க? யாராவதொருத்தர் இதை எடுத்துத் தானே ஆகணும்?”னு என்னைப் பார்த்து நீங்க சொன்னீங்க. பிறகு... இங்கே வீடு கட்டுறப்பவும் நான் எதிர்த்தேன். "வேண்டாம்... நமக்கு இந்த இடத்தில் வீடு வேண்டாம். இந்த பாறைமேல... இங்கே மண் இல்ல...  இங்கே தண்ணி இல்ல'ன்னு” எவ்வளவோ சொன்னேன். அப்ப நீங்க சொன்னீங்க- இந்தப் பாறை மேல உங்களுக்கு ஒரு மானசீக உறவு இருக்குன்னு. அப்படின்னா சரின்னு நானும் பேசாம இருந்துட்டேன். நான் சொன்னது உண்மையா இல்லியா?''

நான் அவள் சொன்னவை எல்லாவற்றையும் கேட்டவாறு எதுவும் பேசாமல் படுத்திருந்தேன்.

அப்போது மனûவி மீண்டும் சொன்னாள்:

"என்னால உங்க மனசுல இருக்குற கவலையைப் புரிஞ்சிக்க முடியாம இல்ல. ஆனா, நாம என்ன செய்ய முடியும்? மரம் ஏதோ விழுந்திருச்சுன்னு மனசை சமாதானப்படுத்திக்க வேண்டியதுதான்....''

நான் எதுவும் பேசாமல் படுத்திருந்ததைப் பார்த்துவிட்டு மனைவி தனக்குத்தானே கூறிக்கொள்வதைப் போல் சொன்னாள்:

"நம்ம பிள்ளைங்க நம்மளை விட்டுப் போகலியா? அதைவிட ஒரு மரம் போனது பெருசா என்ன?''

அதைக் கேட்டதும் நான் அதிர்ந்து போனேன்.

பாதிக்கப்பட்ட அந்தக் கையை திடீரென்று பிடித்தவாறு நான் சொன்னேன்:

"அப்படியெல்லாம் பேசாதே...''

அவளும் என் கையைப் பிடித்து அழுத்தினாள்.

என் மனைவி அழுவதைப்போல் எனக்குத் தோன்றியது. அழும் சத்தம் எதுவும் காதில் விழவில்லை. இருட்டில் மனைவியின் முகமும் தெரியவில்லை. இருந்தாலும் எனக்கு அப்படி தோன்றியது.

இரண்டு பேரும் அதற்குப் பிறகு எதுவும் பேசாமல் படுத்திருந்தோம்.

காலையில் சூரியன் உதித்தபோது, நான் முருங்கைக்குக் கீழே இருந்தேன். முறிந்த இடத்தில் வழிந்த நீர் ரத்தத்தைப்போல கட்டியாக திரண்டு காட்சியளித்தது. முற்றத்தில் இருந்தவாறு மரத்தின் கிளைகளையோ தலைப் பகுதியையோ தெளிவாக என்னால் பார்க்க முடியவில்லை. அவையெல்லாம் கான்கிரீட் மேற்கூரையின்மீது இருக்கின்றன என்று நான்தான் ஏற்கெனவே சொன்னேனே! மேற்கூரை மட்டும் தாங்காமல் இருந்திருந்தால் மரம் முழுமையாக சாய்ந்து தரையில் விழுந்திருக்கும். இப்போதோ அது மரணத்தை எதிர்பார்த்து படுக்கையில் சாய்ந்து படுத்திருக்கும் தளர்ந்து போன, காயம்பட்ட உடம்பைக் கொண்டிருக்கும் ஒரு வழிப்போக்கனின் நிலையில் இருந்தது.

நான் வீட்டின் முன்னால் கேட் வரை போய் பார்த்தேன். பக்கவாட்டிலும் பின்பக்கத்திலும்கூட போய் பார்த்தேன். ஆனால், எந்த இடத்தில் நின்றாலும் மேற்கூரையில் கிடக்கும் கிளைகளின் முழுமையான ஒரு வடிவம் எனக்குக் கிடைக்கவேயில்லை.

அன்று பெரும்பாலும் நான் இருந்தது வராந்தாவிலும் முற்றத்திலும்தான். பல மாதங்களாக என்னை பாடாய்படுத்திக் கொண்டிருந்த வலது கை வலியைப் பற்றிக்கூட நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. மதிய நேரம் வந்ததும் "சாப்பிடலியா?'' என்று மனைவி கேட்டபோதுதான் நேரத்தைப் பற்றிய நினைவே எனக்கு வந்தது. அப்போது மற்றொரு விஷயத்தையும் நான் நினைத்துப் பார்த்தேன். சாதாரணமாக வெயில் வந்து விட்டாலே பறவைகளின் சத்தம் அந்த இடமெங்கும் கேட்டுக் கொண்டிருக்கும். சிலர் எந்தச் சத்தமும் உண்டாக்காமல் மரத்தின் இலைகள்மீது நாட்டியம் ஆடிக் கொண்டிருப்பார்கள். சிலர் உரத்த குரலில் விதவிதமான சத்தங்களை உண்டாக்கிக் கொண்டிருப்பார்கள். வேறு சிலர் வானத்தைப் பார்த்து உரத்த குரலில் பாடுவார்கள். ஓலேஞ்சாலி, புல்புல்,  வண்ணாத்திப் பறவை- எப்போதாவது வரக்கூடிய மஞ்சள் கிளிகள். பிறகு... பல நிறங்களில், இரத்தினக் கற்களைக் கொண்டு உருவாக்கியதைப் போல இருக்கும் தேன் கிளிகள், ஊசி மூக்கைக் கொண்டிருக்கும் பறவைகள், அயோராக்கள்- மரத்தின் நிழலில் எப்போதும் ஓசை எழுப்பியவாறு கொத்திப் பொறுக்கி நடந்து கொண்டிருக்கும் கிளிகள்- யாரையுமே காணோம். வெளிச்ச அலைகளினூடே நடனமாடியவாறு போய்க் கொண்டிருக்கும் வண்ணத்துப் பூச்சிகளையும் ஓசையெழுப்பியவாறு பறந்து கொண்டிருக்கும் கருநீல வண்டுகளையும் தேனீக்களையும் காணவில்லை. தலைபோன முருங்கை மரத்தின் முன்னால் நான் மட்டும்...

மனைவி சொன்னாள்:

"இது காய்ஞ்சு போறதுக்கு முன்னாடி ரெண்டு மூணு கம்புகளை வெட்டியெடுத்து...''

மனைவி சொல்லி முடிப்பதற்கு முன்பே நான் சொன்னேன்:

"வேண்டாம்.''

மனைவி ஆச்சரியம் மேலோங்கக் கேட்டாள்:

"ஏன்?''

நான் இப்படியும் அப்படியுமாக தலையை ஆட்டினேன்... "வேண்டாம்.... வேண்டாம்...''

பிறகு மனைவி எதுவும் கேட்கவில்லை.

அதற்குப் பிறகு தொடர்ந்து காற்றின் நாட்கள்தான். காற்றோடு சேர்ந்து கடுமையான வெப்பமும் இருந்தது. மேற்கூரையிலிருந்து பழுத்த மஞ்சள் நிறத்தில் இருந்த முருங்கை இலைகள் முற்றத்தில் விழுந்த வண்ணம் இருந்தன. எத்தனை முறை பெருக்கினாலும் முற்றத்தில் முருங்கை இலைகள் விழுந்து கொண்டேதான் இருந்தன.

கடைசியில்-இலைகள் விழுவது முழுமையாக நின்றது.

நான் பெரும்பாலும் என்னுடைய அறையிலேயேதான் இருப்பேன். வலது கையிலிருந்த வலி எதிர்பாராத வகையில் அதிகமாக இருந்ததுதான் காரணம். கையைத் தூக்குவதற்கே மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது. அதனால் சட்டையை மாட்டிக்கொண்டு வெளியே செல்ல முடியவில்லை. அறைக்குள் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட கைதியைப்போல நேரத்தைச் செலவிட்டுக் கொண்டிருக்கும் பொழுதுகூட மனம் முழுக்க மரமும் கிளிகளும்தான் நிறைந்திருந்தன. ஒருசிறு குழந்தையைப்போல நீண்ட தூரத்திலிருந்து ஒரு முருங்கைக் கம்பை இங்கு கொண்டு வந்தது, மனைவியின் எதிர்ப்பை சட்டையே செய்யாமல் வீட்டிற்கு மிகவும் அருகிலேயே அதை நட்டது, மிகவும் வேகமாக அது ஒரு பெரிய மரமாக வளர்ந்தது, அதில் காய்களைப் பறித்து பைக்குள் வைத்து நான் பக்கத்திலும் தூரத்திலுமிருக்கும் தெரிந்தவர்களுக்கும் நண்பர்களுக்கும் மகிழ்ச்சியுடன் அவற்றைக் கொண்டு போய்க் கொடுத்தது, மரத்தின் உச்சியில் வந்து உட்கார்ந்து எனக்காக எப்போதும் பாடிக் கொண்டிருக்கும் கிளிகளுடன் நெருக்கமான ஒரு நட்பு உண்டானது- எல்லாம் என் மனதில் பசுமையாக இருந்தன.

"ஏன் இப்படி ஒவ்வொண்ணையும் நினைச்சிக்கிட்டு இருக்கீங்க?'' என்று மனைவி பல முறை என்னைப் பார்த்துக் கேட்டுவிட்டாள். ஆனால், தெளிவாக ஒரு பதிலும் கூறாமல் நான் வெறுமனே முணுமுணுக்க மட்டுமே செய்தேன். ஏதாவது நான் சொன்னால், "ஒரு குழந்தை போறதைவிட இது என்ன பெருசா?'' என்று எங்கே அவள் கேட்டுவிடப் போகிறாளோ என்ற பயம் எனக்குள் இருந்ததே காரணம்.


நேற்று காலையில் நான் வராந்தாவில் வெறுமனே நின்றிருந்தேன். வெறுமனே என்று சொன்னாலும் உண்மையில் என் கண்கள் முறிந்து கிடந்த மரத்தின் கீழ்ப்பகுதியைப் பார்த்துக் கொண்டிருந்தன என்று கூறுவதே சரியானது. அப்போது திடீரென்று எனக்குத் தோன்றியது- மரத்தின் அடிப்பகுதியிலிருந்து சில கிளைகள் புதிதாக முளைக்கின்றனவோ? நான் மரத்தினருகில் சென்று கூர்ந்து கவனிக்க மட்டுமல்ல- ஒன்றிரண்டு முறை மெதுவாக கையால் தடவிக்கூட பார்த்தேன். தெளிவாக எதுவும் தெரியவில்லை. இருந்தாலும் இரண்டு மூன்று இடங்களில் ஒரு சிறிய...

என் மனதில் இனம்புரியாத மகிழ்ச்சி உண்டானது.

அப்போது மனைவி சொன்னாள்:

"இதை வெட்டி நீக்க வேண்டாமா?''

நான் மனைவியை அதிர்ச்சி நிறைய பார்த்தேன்.

மனைவி சொன்னாள்:

"இந்த அடிப்பகுதியைச் சொல்லல. நான் சொல்றது மேலே முறிஞ்ச பகுதியை. அது இப்போது காய்ஞ்சு போயிருக்கும். காற்று வீசுறப்போ அது சாய்ஞ்சு கீழே விழுந்திடுதுன்னு வச்சுக்கங்க... அப்போ எலெக்ட்ரிக் வயர், டெலிஃபோன் கம்பி எல்லாமே அறுந்து விழுறதைத் தவிர வேற வழியில்ல. அதுக்கு முன்னாடி யாரையாவது அழைச்சு...''

நான் எனக்குள் முணுமுணுத்தேன். பிறகு மெதுவான குரலில் சொன்னேன்:

"பார்ப்போம்...''

உண்மையாகச் சொல்லப் போனால் மனைவி சொன்ன விஷயம் சில நாட்களாகவே என்னுடைய மனதிலும் இருந்ததுதான். முறிந்த மரம் கீழே விழுந்தால் டெலிஃபோன் கம்பியும் எலெக்ட்ரிக் கேபிளும் அறுந்துவிடும் என்பது உண்மைதான். எப்படி விழுந்தாலும் கட்டாயம் அது நடக்கும். அப்படி இல்லாமல் யாராவது மேலே ஏறி மரத்தைத் துண்டு துண்டாக வெட்டி கம்பிக்கு எந்தவொரு பிரச்சினையும் வராமல்...

வராந்தாவிலும் முற்றத்திலும் நின்று நேரத்தைச் செலவிட்டுக் கொண்டிருக்கும்பொழுது சாலையில் நடந்து போய்க் கொண்டிருந்த சிலரிடம்- அவர்கள் இத்தகைய வேலைகளைச் செய்பவர்கள்- நான் இந்த விஷயத்தைப் பற்றி கூறியிருந்தேன். ஆனால், அவர்கள்

வருவதாகச் சொன்னார்களே தவிர யாரும் வரவில்லை. இனியும் தாமதிக்காமல் இந்த விஷயத்தைச் செய்து முடித்தே ஆகவேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில்தான் மனைவியும் அதைச் சொன்னாள்.

பல நாட்களுக்குப் பிறகு நான் அன்று சாயங்காலம் சட்டையை எடுத்து அணிந்தேன். அதைப் பார்த்துவிட்டு மனைவி கேட்டாள்.

"இது என்ன?''

நான் சொன்னேன்:

"பள்ளிக்கூட சந்திப்பு வரை போயி இந்த மரத்தை வெட்டி எடுக்குறதுக்கு யாராவது ஆள் கிடைப்பாங்களான்னு பார்த்துட்டு வர்றேன்.''

அப்போது மனைவி சொன்னாள்:

"வேண்டாம்... இந்தக் கையை வச்சுக்கிட்டு நீங்க... நான் அப்புக்கிட்ட சொல்றேன்.''

அப்பு பக்கத்து வீட்டில் இருக்கும் சிறுவன்.

நான் சொன்னேன்:

"அப்பு சொன்னா யாரும் வர மாட்டாங்க. நானே போயி பார்க்குறேன். சீக்கிரமா வந்திடுறேன்.''

மனைவி பார்த்துக் கொண்டிருக்க, நான் இறங்கி நடந்தேன்.

பள்ளிக்கூடத்திற்கு  முன்னாலிருக்கும் தேநீர் கடைக்கு அருகில் யாராவது இருப்பார்கள் என்பது என் நம்பிக்கை. ஆனால், அங்கு சென்றபோது யாரும் இல்லை. தேநீர் கடைக்காரனிடம் விசாரித்ததற்கு சைக்கிள் கடைக்கு முன்னால் யாராவது கட்டாயம் இருப்பார்கள் என்று

சொன்னான். ஆனால், அங்கு சென்றபோதும் யாரும் இல்லை. என்னுடைய முகத்தில் இருந்த வெறுப்பைப் பார்த்ததும் சைக்கிள் கடைக்காரன் கேட்டான்: "என்ன?''

நான் விஷயத்தைச் சொன்னதும் அவன் சொன்னான்:

"நீங்க அந்த நாராயணனோட வீட்டுல போய் விசாரிங்க. அவன் அங்கே இருக்குறதுக்கு வாய்ப்பு இருக்கு.''

என் முகத்தில் தெரிந்த அவநம்பிக்கையைப் பார்த்துவிட்டு சைக்கிள் கடைக்காரன் மீண்டும் சொன்னான்:

"அவன் கொஞ்ச நாட்களாகவே வேலைக்குப் போறது இல்ல. ஏன்னு விஷயம் தெரியல. எதுக்கும் போய் பாருங்களேன்...''

நாராயணனின் வீட்டிற்குப் போகக்கூடிய வழியை அவனே சொன்னான்.

அங்கு சென்றபோது நாராயணன் இருந்தான்.

நாராயணன் எனக்காக சிறுசிறு வேலைகளை இதற்கு முன்பு செய்திருக்கிறான். அந்த அறிமுகத்தை வைத்துக்கொண்டு நான் வந்திருக்கும் விஷயத்தை அவனிடம் சொன்னேன்.

எல்லாவற்றையும் கேட்ட நாராயணன் சர்வ சாதாரணமான குரலில் கேட்டான்:

"பெரிய மரமா?''

நான் சொன்னேன்:

"அப்படிச் சொல்ல முடியாது. ஒரு முருங்கை மரம். இப்போ அது நல்லா காய்ஞ்சு போயிருக்கும்.''

நாராயணன் அப்போது சொன்னான்:

"இருந்தாலும் உதவிக்கு யாராவது தேவைப்படும். எதுக்கும் நான் வந்து பார்க்குறேன்.''

நான் அப்போது ஆர்வத்துடன் கேட்டேன்:

"இன்னைக்குத்தானே?''

எதிர்பார்க்காத ஒன்றை நான் சொல்லிவிட்டதைப்போல நாராயணன் சொன்னான்:

"இன்னைக்கா? இன்னைக்கும் நாளைக்கும் முடியாது. எனக்கு ஏராளமான வேலைகள் இருக்கு. எதுக்கும் வர்றதுக்கு முன்னாடி நான் உங்களுக்குச் சொல்லுறேன்!''

அதற்குமேல் நான் எதுவும் பேசவில்லை.

ஏமாற்றத்துடன் நான் வேறொரு வழியில் திரும்பி வந்தேன். வேறு யாரையாவது பார்த்தால் அந்த ஆளிடம் சொல்லிப் பார்க்கலாமே என்ற எண்ணம் மனதில் இருந்தது.

ஆனால், யாரையும் பார்க்கவில்லை.

வீட்டை அடைந்தபோது, மிகவும் களைப்பாக இருந்தது. பல நாட்களுக்குப் பிறகு முதல் முறையாக நான் வீட்டை விட்டு அன்றுதான் வெளியே போயிருந்தேன்.

வராந்தாவிலோ நடுவிலிருக்கும் அறையிலோ மனைவியைக் காணவில்லை. முற்றத்தில் காலை நீட்டிக் கொண்டு வராந்தாவில் சிறிது நேரம் அமர்ந்திருந்த நான் வீட்டின் பின்பக்கம் போனேன். குறிப்பாகக் கூறும்படி எந்தவித நோக்கமும் இல்லை. வெறுமனே அங்கு போனேன்.

வீட்டின் சரிவான மேற்கூரைமீது ஏறுவதற்கான வழி பின்னால்தான் இருந்தது. வழி என்று சொன்னால் அலுமினியத் தாலான எடுத்து நீக்கக்கூடிய ஒரு ஏணிதான். அது மண்ணில் ஊன்றப்பட்டிருக்கவில்லை. வெறுமனே மேற்கூரைமீது அது சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. அவ்வளவுதான்.

அந்த ஏணி வழியாக ஏறித்தான் நான் தண்ணீர்  தொட்டியில் நீர் இருக்கிறதா என்று பார்ப்பேன். முருங்கைக் காய்களைப் பறிப்பதுகூட அதில் ஏறிச் சென்றுதான். அப்போது ஏணியை பலமாகப் பிடித்துக் கொண்டு மனைவி கீழே நின்றிருப்பாள்.

ஏணியின் அருகில் சென்றதும் நான் நின்றேன். நீண்ட நேரம் அங்கேயே நின்றிருந்தேன். மனதில் குறிப்பிட்டுக் கூறும்படி ஒன்றும் தோன்றவில்லை. வெறுமனே மேல் நோக்கிப் பார்த்தவாறு...

இடது கையால் ஏணியைத் தொட்டேன். முதலில் மெதுவாகத்தான். அலுமினியத்தாலான தண்டுப் பகுதியை பிரியத்துடன் தடவினேன். என் பிடி தண்டின்மீது படிப்படியாக இறுகியது.

இப்போது வலது கையையும் மெதுவாக இன்னொரு தண்டின் மீது வைத்தேன். மேலே பார்த்தவாறு சிறிது நேரம் நின்றிருந்தபோது ஆகாயம் அழைப்பதைப்போல் இருந்தது.

நான் மேல் நோக்கி ஏற ஆரம்பித்தேன்.

வலது கையில் உண்டான வலியைப் பற்றி அப்போது நான் பொருட்படுத்தவேயில்லை.

மேற்கூரை சரிவான இரண்டு அடுக்குகளாக இருந்தது.


முதல் அடுக்கில் கால் வைத்து இரண்டாவது அடுக்கின்மீது ஏறினேன்.

முறிந்து போயிருந்த என்னுடைய முருங்கை... அப்போதுதான் பிறந்த ஒரு பச்சிளம் குழந்தையை மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டு வந்ததைப்போல எங்கோ தூரத்திலிருந்த என் நண்பரின் வீட்டிலிருந்து

ஈரமுள்ள செய்தித்தாளிலும் துணியிலும் சுற்றிக்கொண்டு வந்து அன்புடன் நான் நட்டு நீர் ஊற்றி வளர்த்த என்னுடைய முருங்கை.....

அது அங்கே சாய்ந்து கிடந்தது.

ஆனால்...

என்னால் என் கண்களையே நம்ப முடியவில்லை.

முருங்கை பட்டுப் போகவில்லை.

பட்டுப் போகாமல் இருந்தது மட்டுமல்ல- கிளைகள் முழுவதும் பச்சை தெரிந்தது.

உயிரின் ஓட்டமுள்ள தளிர்கள்!

முறியாமல் கொஞ்சம் மட்டும் எஞ்சியிருந்த தடியில்...

எனக்கு அழுகை வருவதைப்போல் இருந்தது.

"நம்ம முருங்கை பட்டுப் போகல... பட்டுப் போகல...'' என்று உரக்க கத்திச் சொல்ல வேண்டும்போல் இருந்தது.

ஆனால் நான் அப்போது மவுனத்தின் உலகத்தில் இருந்தேன்.

நீண்ட நேரம் கழித்துத்தான் நான் கீழே இறங்கி வந்தேன்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.