
“மகளே...!”
“வேண்டாம்...” அவள் தடுத்தாள்: “இந்த அவமானத்தை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. அவருக்கு மூவாயிரம் ரூபாய் வேண்டுமென்றால், நீங்க கொடுங்க. ஆனால் என்னை அவரிடம் ஒப்படைத்து விடாதீர்கள்.”
“மகளே!”
“அப்பா...” அவள் பரிதாபமான குரலில் சொன்னாள்: “அவர் ஒரு ஓவியர். அழகான பெண்களையும் பிற அழகான பொருட்களையும் ஓவியமாக வரையக் கூடிய ஒரு கலைஞன். என்னுடைய அழகற்ற முகம் அவரை எப்போதும் தொந்தரவு செய்யும். அவர் என்னை வெறுப்பார். என்னை கிண்டல் பண்ணுவார். நான் கவலையில் மூழ்கிவிடுவேன். எங்களுடைய திருமண வாழ்க்கை நரகத்தைவிட கஷ்டம் நிறைந்ததாக இருக்கும். அப்பா, கவலையை விலை கொடுத்து வாங்க வேண்டுமா?”
“மகளே... நான் வாக்கு கொடுத்துவிட்டேன்.”
“அய்யோ! என் வாழ்க்கை நாசமாகி விட்டது. என் சந்தோஷம் இல்லாமல் போய் விட்டது.” அவள் அங்கிருந்து ஓடினாள்.
தேவாலயத்தில் திருமண நிகழ்ச்சி. தீனாம்மா மிகவும் அமைதியாக தாமஸுக்கு அருகில் நின்றுகொண்டிருந்தாள். பாதிரியார் வேத புத்தகத்திலிருந்து வசனங்களைக் கூறிக் கொண்டிருந்தார். தீனாம்மா தாமஸின் முகத்தை ஓரக் கண்களால் பார்த்தாள். அழகான அந்த முகத்தில் அலட்சியமான தன்மையையும் பொறுப்பற்ற போக்கையும் அவள் பார்த்தாள். திருமண நிகழ்ச்சியில் நின்று கொண்டிருக்கிறோம் என்ற உணர்ச்சியைக்கூட அவனுடைய முகத்தில் அவள் பார்க்கவில்லை. இலக்கே இல்லாமல் இங்குமங்குமாகப் பாய்ந்து கொண்டிருந்த அவனுடைய கண்கள் எதிர்பாராத வகையில் நொடி நேரம் அவளுடைய கண்களுடன் சந்தித்தன. அவனுடைய முகத்தில் ஒரு கிண்டலின் சாயல் நிழலாடியது. அவள் சற்று அதிர்ச்சியடைந்து விட்டாள்.
திருமணச் சடங்குகள் முடிவடைந்தன. உறவினர்கள் அவளை ஆசீர்வதித்தார்கள். சினேகிதிகள் அவளை வாழ்த்தினார்கள். அவள் யாருக்கும் தெரியாமல் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.
தீனாம்மா மனைவியாக ஆனாள். அவள் தன் கணவனின் இல்லத்தில் இல்லத்தரசியாகவும் ஆனாள்.
கவனிப்பே இல்லாமல் தாறுமாறாகக் கிடந்த ஒரு வீடாக அது இருந்தது. தீனாம்மாவும் வயதான ஒரு வேலைக்காரக் கிழவியும் மட்டுமே அந்த வீட்டில் இருந்தார்கள். தீனாம்மா மிகவும் சிரமப்பட்டு அந்த வீடு முழுவதையும் சுத்தம் செய்து சீர் செய்தாள். எல்லா அறைகளையும் அழகுபடுத்தினாள். திருமணத்திற்கு முன்னால் அவள் சேகரித்து வைத்திருந்த ஓவியங்கள் அனைத்தும் படுக்கையறையை அலங்கரித்துக் கொண்டிருந்தன. ரோஜா மலரைப் பறிப்பதற்கு முயலும் அழகான பெண்ணின் ஓவியத்திற்கு- அவள் மிகவும் அதிகமாக விரும்பக்கூடிய அந்த ஓவியத்திற்கு- அவள் மிகவும் அதிக முக்கியத்துவம் உள்ள ஒரு இடத்தைக் கொடுத்தாள். இப்போது அந்த ஓவியம் அவளுடைய வாழ்க்கையுடன் தொடர்பு கொண்டிருந்தது. வீட்டிலிருந்து சற்று தூரத்தில் இருந்த விசாலமான ஒரு குளத்தின் கரையில் அவள் ஒரு பூந்தோட்டத்தை உண்டாக்கினாள். குளத்தில் தாமரையை நட்டு வளரச் செய்தாள். அதை ஒரு தாமரைப் பொய்கையாக ஆக்கினாள். பொய்கைக்கு எதிரில் ஒரு கொடிகளாலான குடிலையும் உண்டாக்கினாள். அந்த வகையில் அவள் மீண்டும் ஓவியங்களிலும் பூந்தோட்டங்களிலும் தன்னுடைய கவனத்தை மையப்படுத்தினாள்.
தாமஸ் நாளில் ஒரு முறையோ, இரண்டு நாட்களுக்கு ஒரு முறையோ வீட்டுக்கு வருவான். வந்தால் அதிக நேரம் அங்கு இருக்காமல் போய் விடுவான். எங்கு போகிறான் என்றோ, எதற்காக போகிறான் என்றோ அவள் கேட்டதில்லை. அது மட்டுமல்ல-அவள் எதையுமே கேட்பதில்லை. அவளுடைய முகத்தைப் பார்க்காமலே அவன் வீட்டுக் காரியங்களைப் பற்றி அலட்சியமாக சில கேள்விகளைக் கேட்பான். அவனுடைய முகத்தைப் பார்க்காமலே அவள் வீட்டுக் காரியங்களைப் பற்றி பதில்களையும் கொடுப்பாள்.
வேலைக்காரி, தீனாம்மாவிடம் தாமஸைப் பற்றி பல விஷயங்களையும் கூறினாள். பல பெண்களையும் அவள் குற்றம் கூறினாள். தாமஸின் மோசமான நடவடிக்கைகளைப் பற்றி குறை சொன்னாள். “மகளே, இனி நீ நினைத்தால்தான் சரியாக இருக்கும்.” இப்படி அவள் கூறினாள்.
தீனாம்மா அவை எதையும் காதில் கேட்டதாகவே காட்டிக் கொள்ளவில்லை. தன் கணவனுடன் அறிமுகமாவதற்குக்கூட அவளால் முடியவில்லை. திருமண நாளன்று அவள் அவனுக்கு அருகில் நின்றிருக்கிறாள். அவளுடைய விரலில் மோதிரத்தை அணிவித்தபோதும் கழுத்தில் தாலியைக் கட்டியபோதும் அவன் அவளைத் தொட்டிருக்கிறான். அது மட்டும்தான். திருமணம் ஆகியும் அவள் கன்னியாகத்தான் வாழ்ந்து கொண்டிருந்தாள். பழைய மாதிரியே அவள் ஓவியங்களிலும் மலர்களிலும் சந்தோஷத்தைக் கண்டு கொண்டிருந்தாள். ஆனால், முன்பு இருந்ததைவிட தாங்கிக் கொள்ள முடியாத- இதயத்தை வேதனைப் படுத்தக்கூடிய ஒரு அமைதியற்ற தன்மை அவளை பாதித்து விட்டிருந்தது.
அந்த வீட்டிலிருந்த ஒரு அறையை மட்டும் அவள் பார்க்கவில்லை. அது எப்போதும் பூட்டப்பட்டே இருந்தது. கதவுக்கு மேலே, “ஸ்டூடியோ” என்று எழுதப்பட்டிருந்தது. அந்த அறையின் சாவி தாமஸின் கையில் இருந்தது. அறையைச் சற்று திறந்து பார்க்க வேண்டும் என்று தீனாம்மாவிற்கு மிகுந்த விருப்பம் இருந்தது. ஆனால், தாமஸிடம் சாவியைக் கேட்பதற்கான துணிச்சல் அவளுக்கு இல்லாமலிருந்து.
அழகான ஒரு மாலை நேரத்தில் தீனாம்மா பூந்தோட்டத்திலிருந்த கொடிகளால் ஆன குடிலில் பொய்கையைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். ஒரு மெல்லிய காற்று பொய்கையின் தெளிந்த நீரில் அலைகளை உண்டாக்கிக் கொண்டிருந்தது. மலர்ந்து நின்று கொண்டிருந்த தாமரைப் பூக்கள் மெதுவாக... மெதுவாக அசைந்து ஆடிக்கொண்டிருந்தன. வண்டுகள் பாடலை முணு முணுத்துக்கொண்டே ஒவ்வொரு பூக்களையும் தேடி பறந்து கொண்டிருந்தன. தீனாம்மா பொய்கையின் அழகில் தன்னையே மறந்து விட்டாள். அவள் தன்னுடைய மன அமைதியற்ற நிலையும் கவலையையும் அவளையுமேகூட மறந்து விட்டாள். அவளுடைய பாதியாக மூடப்பட்டிருந்த கண்கள் விரிந்தன. சப்பிப் போய் விட்டிருந்த மூக்கு உயர்ந்து நிற்பதைப்போல தோன்றியது. மேற்கு திசை வானத்தின் விளிம்பில் தெரிந்த சிவப்பு நிறம் அவளுடைய உதடுகளில் ஒரு மெல்லிய சிவப்பு நிறத்தைப் பரவச் செய்தது. அவளுடைய முகத்தில் இனம் புரியாத ஒரு பிரகாசம் தோன்றியது. அவள் அழகில் மூழ்கிப் போய்விட்டாள்... அவள் குதிக்க ஆரம்பித்தாள்.
பொய்கையின் மறுகரையில் யாரோ நின்று கொண்டிருந்தார்கள். தீனாம்மாவின் கண்கள் சிறிதும் எதிர்பாராமல் அந்த வழியில் பயணித்தன. அங்கிருந்து உற்சாகத்தை உண்டாக்கும் ஒரு புன்னகை. அவள் எழுந்தாள். அமைதியாக அவள் மீண்டும் பொய்கையின் எதிர்கரையைப் பார்த்தாள்- அவளுடைய கணவன் அன்று முதல் முறையாக அவளைப் பார்த்து புன்னகைக்கிறான். சில நிமிடங்கள்... அதற்குப் பிறகும் தீனாம்மா எதிர்கரையை மறைந்து கொண்டு பார்த்தாள். தாமஸ் மிகவும் வேகமாக நடந்து போய்க் கொண்டிருந்தான்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook