பிதாமகன் - Page 10
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by sura
- Hits: 6258
நீ உயிர்தெழுத்திருக்கிறாய் என்றால் மரணத்திலிருந்து திரும்பி வரும் நீ எப்படி இருப்பாய்? நீ மீண்டும் அன்னியனாகவும், சிறிது கூட அறிமுகமில்லாதவனாகவும், தூரத்தில் இருப்பவனாகவும் ஆகியிருக்க வேண்டும். எனக்கு உன்னை இனிமேல் பார்ப்பதற்குக் கூட தயக்கமாகவே இருக்கிறது. நீ அன்பும் மூச்சும் மணமும் உஷ்ணமும் இல்லாத ஒரு உருவத்தைக் கொண்டிருந்தாய் என்றால் எப்படி இருக்கும்? உணர்ச்சி நரம்புகள் ஓடிக் கொண்டிருக்கும் உன்னுடைய கையை இனிமேலும் என்னால் தொட்டுப் பார்க்க முடியுமா? (ரூத் மீண்டும் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டவாறு தன்னுடைய முகத்தில் கையை வைத்துக் கொண்டு தலை குனிந்து அமர்ந்திருக்கிறாள். சிறிது நேரம் கழித்த பிறகு திடீரென்று தலையை உயர்த்திப் பார்க்கிறாள்.) ஓ! கடைசியில் இதோ வந்து விட்டார் யூதர்கள் வசிக்கும் நாட்டை ஆட்சி செய்து கொண்டிருக்கும் கவர்னர். இன்று தன்னுடன் அவர் யாரை அழைத்து வருகிறார்? கோவேறு கழுதை! சரியான நண்பன்தான்.
ரூத் அமர்ந்திருக்கும் ஆசனத்திற்குக் கீழே குனிந்து பார்த்தவாறு பூனையைத் தட்டியெழுப்பி; 'அடியே... எழுந்திரு. இதோ வருகிறார் உன்னுடைய உரிமையாளர். ஓடிப்போய் அந்த ஆளுடைய கால்களையே சுற்று. அதைப் பார்த்து அவர் ரொம்பவும் சந்தோஷப்படுவார்.
ரூத்(தனக்குள்): இன்று என்னுடைய கையெழுத்தைப் பார்ப்பதற்காக பீலாத்தோஸ் வரட்டும். முதலில் தன்னுடைய சொந்த கையெழுத்தையும் மொழியையும் அவர் சரிபண்ண முயற்சிக்க வேண்டும். அந்த அன்டோனியஸுக்கு எழுதிய கடிதத்தில்தான் எத்தனை எழுத்துப் பிழைகள். அதற்காக அவர் வெட்கப்பட வேண்டாமா? இன்று எனக்குப் பின்னால் மிகவும் நெருங்கி வந்து நின்றால், நான் அவரை நிச்சயமாக உதைப்பேன். இந்த அறையின் தரை எவ்வளவு இறுகியது என்பதை மரியம் இல்லாமலே அவர் உணரட்டும்.
இல்லாவிட்டால் வேண்டாம். போகட்டும். என்ன இருந்தாலும் இந்த மனிதர் பாவம்தானே. சாதாரண பெண்ணான என் முன்னால் வந்து நின்று வளைந்து குழைந்து இவர் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தால் எனக்கே பாவமாகத் தோன்றும்.
ரூத் எழுந்து நின்று வணங்கியவாறு (பீலாத்தோஸிடம்) 'இன்று ஏன் மிகவும் தாமதமாக வருகிறீர்கள், ஐயா? நன்றாகத் தூங்கி விட்டீர்களா என்ன? இந்தக் கோவேறு கழுதை உங்களுக்கு எங்கிருந்து கிடைத்தது? ஸிரியாவிலா? அவ்வளவு தூரத்திலிருந்து ஒரு கோவேறு கழுதையைக் கொண்டு வர வேண்டுமா, ஐயா? இது ஒரு சிறப்பு இனத்தைச் சேர்ந்ததா என்ன? எனக்கு கழுதைகளைப் பற்றி எதுவுமே தெரியாது. இன்று நீங்கள் என்ன எழுதுவதாக இருக்கிறீர்கள்? இல்லை, ஐயா. நான் உங்களுக்காகக் காத்திருந்து நொந்து போகவில்லை. இங்கு அமர்ந்திருப்பது என்பது ஒரு சுகமான அனுபவம்தானே, ஐயா? நான் இங்கு உட்கார்ந்து பல விஷயங்களைப் பற்றியும், மனதில் அசை போட்டுக் கொண்டிருந்தேன். ஓ... அப்படி குறிப்பாகச் சொல்லும்படி எதைப் பற்றியும் நினைக்கவில்லை ஐயா. சிலுவையில் அறையப்பட்டு இறந்த அந்த இயேசுவைப் பற்றி நான் நினைத்துப் பார்த்தேன். ஐயா, நீங்களும் அவனைப் பற்றி நினைத்தீர்களா என்ன? என்ன ஆச்சரியம், ஐயா? அவன் ஒரு அப்பிராணி மனிதன்... இல்லையா ஐயா உங்களால் ஒன்றுமே பண்ண முடியவில்லையா? கடிதம் யாருக்கு ஐயா எழுதியிருக்கறீர்கள்? அன்டோனியஸுக்கா இந்தப் பெயரை நான் இப்போதுதான் ஐயா கேள்விப்படுகிறேன். ஐயா அவர் உங்களின் பழைய நண்பரல்லவா? பரவாயில்லை, ஐயா பழைய நினைவுகளை மீண்டும் மனதிற்குள் கொண்டு வந்து புதுப்பித்துக் கொள்வதற்கு ஒரு வாய்ப்பு உங்களுக்கும் கிடைத்திருக்கிறதே. இந்தப் பூனை உங்களின் மடி மேல் ஏறுவதற்கு காத்திருந்தது. ஐயா, இப்போதுதான் இவளுக்கு நிம்மதியே. சரி... ஆரம்பிக்கலாமா ஐயா? கவனம் ஐயா. இதோ உங்களின் அங்கியின் ஓரத்தை அந்தக் கழுதைக் குட்டி கொஞ்சம் கொஞ்சமாகத் தின்று கொண்டிருக்கிறது.
3
பீலாத்தோஸ்
கடிதத்தைத் தொடர்கிறார்...
பீலாத்தோஸின் தனி அறை. அவர் ஒரு பெரிய சிம்மாசனத்தின் மீது சாய்ந்து படுத்திருக்கிறார். அவர் மடியில் பூனை சுருண்டு படுத்திருக்கிறது. அவரின் ஒரு கை பூனையைத் தடவிக் கொண்டிருக்கிறது. கோவேறு கழுதைக்குட்டி சற்று தள்ளி இருக்கும் பூச்செடிகளை நாசம் செய்து கொண்டிருப்பதை ரூத் பார்க்கிறாள். இருந்தாலும் தான் அதைப் பார்த்தது மாதிரி காட்டிக் கொள்ளவில்லை. அவள் எழுத்தாணியுடன் அமர்ந்திருக்கிறாள்.
பீலாத்தோஸ் (ஒரு நீண்ட பெருமூச்சு விட்டவாறு): சரி ஆரம்பிப்போம். (தனக்குள்) இவள் இங்கே இருக்க எதை எழுதுவது? சரி... எதையாவது எழுதுவோம். (ரூத்திடம்) ரோமில் இருக்கும் என்னுடைய நண்பன் டைட்டஸ் அண்டோனியஸ்ஸுக்கு நான் எழுதும் கடிதம் இது. முத்திரை எதுவும் வேண்டாம். நேராக கடிதத்தை ஆரம்பிக்க வேண்டியதுதான்.
ரூத் பீலாத்தோஸிடம்: ஏன் சார் அப்படி?
பீலாத்தோஸ் (ஒரு மாதிரியாக ஆகி): நான் சொல்வதைக் கேள். அவன் என் நண்பன்.
ரூத் (பீலாத்தோஸிடம்): சரி சார்.
பீலாத்தோஸ்: என் அன்பான அண்டோனியஸ், நான் முன்பு எழுதிய விஷயங்களின் தொடர்ச்சிதான் இது...
ரூத் (பீலாத்தோஸிடம்): எப்போ சார் அந்தக் கடிதத்தை எழுதுனீங்க?
பீலாத்தோஸ் (ஒரு மாதிரியாக ஆகி): அதை நானே எழுதினேன்.
ரூத் (பீலாத்தோஸிடம்): அந்தக் கடிதத்தை அனுப்பியாச்சா சார்? எனக்கு அனுப்பினதா ஞாபகத்துல இல்லியே!
பீலாத்தோஸ் (கோபத்தை அடக்கிக் கொண்டு): அன்னைக்கு நீ வராம இருந்தே. ஒரு தகவல் கொண்டு போற ஆள் போறப்போ, அவன்கிட்ட அந்தக் கடிதத்தைக் கொடுத்தனுப்பிட்டேன்.
ரூத்: அப்படியா சார்? (தனக்குள்) திருடுறதா இருந்தா அதை ஒழுங்கா திருடணும். பீலாத்தோஸே, தைரியமா ஒரு பொய்கூட உங்களுக்கு ஒழுங்கா சொல்லத் தெரியலியே!
(பீலாத்தோஸிடம்): இப்போ என்ன செய்யலாம் சார்? பிலாத்தோஸ் (ரூத்திடம்): ஆரம்பிப்போம். கொஞ்சம் கவனமாகவே இனிமேல் நான் இருக்கணும். சரி... நீ இடையில கேள்விகள் எதுவும் கேட்கக் கூடாது. என் சிந்தனை திசை மாறிடும்.
ரூத் (பீலாத்தோஸிடம்): சந்தேகம் ஏதாவது தோணினா கேட்கலாம்ல சார்?
பீலாத்தோஸ் (நீண்ட பெருமூச்சு விட்டவாறு): தாராளமா கேட்கலாம். (தனக்குள்) இந்தப் பெண் கால்களைச் சிறிது நீட்டியவாறு உட்காரக் கூடாதா? இவளின் கால்கள் எவ்வளவு அழகாக இருக்கின்றன. ஆனால், எல்லா யூதப் பெண்களையும் போல இவளும் அதை அடக்க ஒடுக்கமாக மூடி வைத்திருக்கிறாள். என்ன செய்வது? (ரூத்திடம்): சரி... எழுது...
ரூத் (தனக்குள்) இதோ வந்துர்றேன். பெரிய சிந்தனை...
பீலாத்தோஸ் நாம பேசிக்கிட்டு இருந்த விஷயத்தைத் தொடருவோம். (நீண்ட மவுனம்).
ரூத் (பீலாத்தோஸிடம்): சார்?
+Novels
Short Stories
July 31, 2017,
May 28, 2018,
June 3, 2016,
March 7, 2016,