
திருமணத்திற்குப் பிறகுதான் நான் மருத்துவம் படிக்கச் சேர்ந்தேன். கல்யாணிக்குட்டியும் வேறொரு நகரத்தில் இருந்த மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தாள். அவளுடைய குடும்பத்திற்குத் தேவைப்பட்ட உதவிகளைத் தொடர்ந்து செய்ய என்னுடைய தாய் தயாராக இருந்தாள். நான் அதைப் பற்றி ஒருமுறை கேட்டதற்கு என் தாய் சொன்னாள்:
"உன் அப்பாதான் அவர்களைப் பார்த்துக் கொண்டார். என்னுடைய இறுதி நாள் வரை நான் அதைத் தொடாந்து நிறைவேற்றுவேன். நீ டாக்டராக ஆக வேண்டும் என்று தீர்மானித்து விட்டாய். கல்யாணிக் குட்டிக்கும் டாக்டராக வரவேண்டும் என்ற ஆசை உண்டாகும். அவளும் படித்து ஒரு டாக்டராக வரட்டுமே!"
பிறகு அந்த விஷயத்தைப் பற்றி நான் என் தாயிடம் பேசவில்லை. என் தாயின் முடிவுகளில் மாறுதலை உண்டாக்க யார் முயற்சித்தாலும், அதை அவள் வெறுக்கவே செய்வாள். என் தந்தை செய்து கொண்டிருந்த கடமைகளைத் தொடர்ந்து செய்வதற்கு அவள் விரும்பினாள். கர்க்கடக மாதத்தில் சாதுக்களுக்கு கஞ்சி தயார் பண்ணித் தருவது, வறுமையின் பிடியில் சிக்கிக் கிடக்கும் சிறுவர்களுக்கு பள்ளிக்கூட நூல்கள் வாங்கிக் கொடுப்பது, திருவாதிரைக்கு வயதான ஆண்களுக்கம் பெண்களுக்கும் போர்வைகள் வாங்கிக் தருவது போன்ற செயல்களை என் தாயும் தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருந்தாள். ஒருமுறை கல்யாணிக்குட்டி சொன்னாள்:
"ஷீலா, உன் அப்பா என்னுடைய அப்பாவாகவும் இருந்திருப்பாரோன்னு என் மனசுல ஒரு தோணல்... அவருடைய முகச் சாயல் எனக்கும் இருக்குல்ல? அதே நிறம்... அதே கன்னக் குழிகள்..."
"ச்சே... முட்டாள்தனமா பேசாதே. என் அப்பா எந்தச் சமயத்திலும் வேறொரு மனிதரின் மனைவியைத் தொட்டது கூட இல்லை. என் அப்பா மிகவும் அமைதியான குணத்தைக் கொண்டவர். கடவுள் பக்தி உள்ளவர்"- நான் சொன்னேன்.
"நான் அவரை அவமானப்படுத்தவில்லை ஷீலா. அவர் எனக்காக இவ்வளவு பணம் செலவழிச்சதற்கான உண்மையான காரணம் என்னவாக இருக்கும் என்று ஆராய்ச்சி பண்ணிப் பார்க்குறேன். பல நேரங்களில் எனக்குள் தோன்றிய ஒரு சந்தேகத்தை உன்கிட்ட சொல்றேன். அவ்வளவுதான்..."
பிறகு நாங்கள் வருடத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ மட்டுமே ஒருவரையொருவர் சந்திப்போம். அவள் சுதாகரனைத் திருமணம் செய்து கொண்டு, நாங்கள் இருந்த நகரத்தில் வந்து தங்கியபோது, மீண்டும் அவள் என்னுடைய நட்பு வட்டத்திற்குள் நுழைந்தாள். சுதாகரன் அவளைப் போலவே ஒரு டாக்டராக இருந்தார். அழகான தோற்றத்தைக் கொண்டவரும் நல்ல உடலமைப்பைக் கொண்ட இளைஞருமான ஒரு கணவன் கிடைத்ததற்காக கல்யாணிக்குட்டி பெருமைப்பட்டுக் கொள்ளவில்லை. ஒருநாள் திருமண வாழ்க்கையைப் பற்றிய அவளுடைய கருத்தைத் தெரிந்து கொள்வதற்காகக் கேட்டபோது அவள் சொன்னாள்:
"இரவுகளைத்தான் என்னால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை. அந்த மனிதர் என்னுடைய உடல் நலத்தைக் கெடுக்கிறார்."
"உனக்கு சுதாகரனிடம் கொஞ்சம் கூட பிரியம் இல்லை என்று நான் நினைக்கிறேன். உண்மையிலேயே நீ அந்த மனிதரைத் திருமணம் செய்து கொண்டது, உனக்கு ஒரு பொருளாதாரப் பாதுகாப்பு உண்டாக்கிக் கொள்ள வேண்டும் என்ற காரணத்திற்காக மட்டுமா?"
கல்யாணிக்குட்டி தன்னுடைய இடது கையால் என்னுடைய முகத்தை உயர்த்தினாள். கோபத்துடன் அவள் என்னையே உற்றுப் பார்த்தாள்.
"உன் மீது நான் அன்பு வைத்திருக்கிறேன் என்ற காரணத்தால் நீ அளவுக்கு மேல் சுதந்திரம் எடுத்துக் கொண்டு பேசுகிறாய். இப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்க உனக்கு எப்படி தைரியம் வந்தது?"- அவள் கேட்டாள்.
"மன்னிக்கணும். உன்னுடன் மட்டுமே நான் என்னுடைய மனதைத் திறந்து பேச முடியும்"- நான் சொன்னேன்.
அவளுடைய கை விரல்கள் என்னுடைய கன்னங்களை இறுகத் தடவி வேதனையை உண்டாக்கின.
"ஒரு ஆணின் உடலைப் பார்த்ததும், உணர்ச்சிவசப்பட்டு அடிபணியக்கூடியவள் இல்லை நான்"- அவள் சொன்னாள்.
"உடலைப் பற்றி நான் எதுவும் பேசவில்லை. பிரியத்தைப் பற்றித்தான் நான் கேட்டேன். நீ சுதாகரன் மீது பிரியம் வைத்திருக்கிறாயா?"- நான் கேட்டேன்.
"நீ உன்னுடைய கணவன் மீது அன்பு வச்சிருக்கியா?"
"நிச்சயமா... நான் அவர் மீது பிரியம் வச்சிருக்கேன்."
"உனக்கு பத்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டையும் அழகான ஒரு இளைஞனையும் நான் தர்றதா சொன்னால், அதற்கு பதிலாக நீ அந்த ஆளை உதறிவிட்டு வரத் தயாரா இருப்பேல்ல?"- கல்யாணிக்குட்டி கேட்டாள்.
"நீ உண்மையாகவே ஒரு மோசமான பிறவி..."- நான் சொன்னேன்.
"உன் மனதிற்குள் நுழைந்து உன்னுடைய ரகசிய எண்ணங்களைத் தேடிக் கண்டுபிடித்துச் சொல்வதால், உன் கண்களில் நான் ஒரு கெட்ட பெண்ணாகத தெரிகிறேனா என்ன? நீ யார் என்று எனக்குத் தெரியும். எனக்குத் தெரியும் என்பது உனக்குத் தெரியும். எனக்குத் தெரியும் என்று உனக்குத் தெரியும் என்பது எனக்குத் தெரியும்"- அவள் சிரித்துக் கொண்டே சொன்னாள்.
பிறகு நான் அவளை என்னுடைய டிஸ்பென்ஸரியில்தான் பார்த்தேன். அவள் வெளிறி மெலிந்துபோய்க் காணப்பட்டாள். என்னைப் பார்கக வந்த நோயாளிகளை மறந்து நான் அவளைப் பிடித்து இழுத்துக் கொண்டு என் அறைக்குள் சென்றேன்.
"நீ வந்த விஷயத்தை எனக்கு ஏன் முன்கூட்டியே சொல்லல? நான் எல்லா வேலைகளையும் விட்டுட்டு ஸ்டேஷனுக்கு வந்திருப்பேனே!"- நான் குறைப்பட்டேன்.
தான் கர்ப்பமாக இருப்பதாகவும், அந்தக் கர்ப்பதைக் கலைக்க வேண்டும் என்றும் அவள் சொன்னாள். தான் வசிக்கும் நகரத்தில் அதைச் செய்தால் சுதாகரனும் உறவினர்களும் நண்பர்களும் எல்லா வகைகளிலும் அந்த ரகசியத்தைத் தெரிந்து கொண்ட தன்னைத் தண்டிக்கத்தான் செய்வார்கள் என்றாள் கல்யாணிக்குட்டி. அவளுக்கு ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் விஷயத்தில் எந்தவொரு பிரச்சினையும் இருக்காது என்று நான் சொன்னேன். "அப்படியே பிரச்சினைகள் இருந்தால், நான் ஒரு சிசேரியன் செய்து அந்தக் குழந்தையை எந்தவித சிரமமும் இல்லாமல் வெளியில் எடுத்துவிடுவேன்"- என்றேன் நான்.
"நான் சுதாகரனுக்குச் சொந்தமான குழந்தையைப் பெற்றெடுக்க விரும்பவில்லை"- அவள் சொன்னாள்.
"பிறகு எதற்காக நீ இந்தக் குடும்ப வாழ்க்கை வாழ்கிறாய்? சுதாகரனின் குழந்தையை வாழ விடாமல் செய்வது என்பது அந்த மனிதருக்கு நீ செய்யும் துரோகம் என்று உனக்குப் புரியவில்லையா?"- நான் கேட்டேன்.
அவளை மேஜைக்குக் கீழே படுக்க வைத்து நான் சோதனை செய்து பார்த்தேன். இடது பக்கம் சாய்ந்து படுத்திருந்த அந்த முகம் நடுங்குவதை நான் பார்த்தேன்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook